கி.சந்திரசேகரன்

 

எழுத்துக்கலை பற்றி இவர்கள்….கி.சந்திரசேகரன்

1. சொற்செட்டு கலைக்கு மிக முக்கியம். அனுபவம் விரிய விரிய, சொல்லலங்காரங் களின் குறைவும் சித்திக்க வேண்டும்.

2. நன்றாக எழுதக்கூடியவர்கள் கூட ஜனரஞ்சகமாக எழுதவேண்டும் என்பதைத் தான் மிக முக்கியமாக வைத்துக் கொண்டு எழுதுகிறார்கள். இதன் விளைவு உள்ளத்தைக் கிளர்ச்சி செய்யும் எழுத்து வருகிறதே தவிர உள்ளத்தை உருக்கும் இலக்கியம் வருவதில்லை.

3. எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாகச் சொல்லித்தான் உண்மை தெரிய வேண்டும் என்பதில்லை. எதற்கும் ஒரு கோடி காண்பித்து வாசகனின் கற்பனைச் சிந்தனையைத் தூண்டுவதில்தான் அழகான இலக்கியம் இருக்கிறது.

4. ‘வாழ்க்கையில் கீழ்த்தரமானவை இல்லையா? நான் இருப்பதை அப்படியே எழுதுகிறேன்’ என்று ஒரு கரட்டு வாதம் செய்கிறார்கள். இலக்கியம் ஒரு சத்தியத்தைக் கூறுவதுதான்; வாழ்க்கையைப் பிரதி பலிப்பதுதான். ஆனால் வாழ்க்கையில் காண்பதைத் திறனோடு பொறுக்கி எடுப்பதுதான் இலக்கியம். Literature is selction of life.

5. இலக்கியம் என்பது – கீழ்ப்பட்டது, தாழ்ந்திருப்பது என்பதிலும் ஓர் உன்னத அம்சத்தைக் கண்டெடுப்பது.

6. சிறுகதைகள் பலவிதம். இன்ன மாதிரிதான் சிறுகதைகள் உருவாகவேண்டும் என்று வரையறை செய்வது எளிதல்ல; அவசியமும் அல்ல. ஏனெனில் சிறுகதையின் லட்சணம் எதுவாகிலும் எல்லா இலக்கியப் பிறப்பிலும் உள்ள சிருஷ்டித் தத்துவம் அதற்கும் பொதுவானதுதான். முதலில் இதை உணர்ந்தால் இலக்கியத்துக்கும் இலக்கியம் அல்லாததற்கும் உள்ள வேறுபாடு புரியும். உண்மையில் கலைஞனிடம் இலக்கியமாவது அவனுடைய திருஷ்டி தேர்ந்தெடுக்கும் பொருளின் விசேஷம் என்றாலும் தவறில்லை. கலை பிறப்பது கருத்தின் செழுமையும் தெளிவும் பூரணமான நிலையை எய்தும்பொழுதுதான். ஓரளவு அவனுடைய எழுத்துத் திறமை கூட அப்பியாசத்தின் விளைவு என்று கருதுவதும் நியாயம்.

தொகுத்தவர்: வே.சபாநாயகம்.
நன்றி: http://ninaivu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *