அ.ச.ஞானசம்பந்தன்

 

எழுத்துக்கலைபற்றி இவர்கள்….அ.ச.ஞானசம்பந்தன்

1. ஒரு சிறுகதை நம் மனதில் தங்க வேண்டுமானால் இரண்டே வழிகள்தான் உண்டு. அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இன்றேல் அதில் வரும் பாத்திரங்கள் நாம் மதித்து விரும்பும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

2. ஆழமான உணர்ச்சியை வெளியிடுவதிலும் அதையும் சுருங்கச் சொல்லிப் பதிய வைப்பதிலும் சிறுகதை கவிதையை அடுத்து நிற்கிறது.

3. கதை உயிர் பெறுவது நிகழ்ச்சிகளால் அன்று ! அவற்றைக் கூறும் ஆசிரியன் பயன்படுத்தும் கற்பனைத் திறமும் கூறும் திறமுமே கதைக்கு உயிர் தருகின்றன. அவன் பொறுக்கிய நிகழ்ச்சிகள் கூறப்படும் முறையில் இருந்தே கதையின் உயர்வும் தாழ்வும் விளங்கும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சி சிறுகதையில் இருக்கக் கூடாது என்பதன்று. ஆனால், இரண்டு நிகழ்ச்சிகள் இருப்பின் அவற்றின் தொடர்பு நன்கு அமைக்கப் படல் வேண்டும். படிப்பவர் கவனம் இரண்டிலும் பட்டுத் தெறித்து விடாதபடி நிகழ்ச்சிகள் அமைக்கப்படல் சிறந்தமுறை. நிகழ்ச்சிகள அதிகப்படினும் ஒரு நடு நிகழ்ச்சி இருக்க, அதன் கிளைகளாக ஏனையவை அமைதல் நன்று.

5. சிறுகதைகளில் காணப்பெறும் நிகழ்ச்சி அன்றாடம் நாம் காணும் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் சூழலில் பட்டுக் ‘கருமமே கண்ணாயினார்’ என்று திரியும் நமக்கு அது பெரிதாகப் படுவதில்லை. ஆனால், தக்க சூழ்நிலையில் அதே நிகழ்ச்சி சிறுகதையில் இடம் பெறின் நம்மைக் கவர்ந்து விடுகிறது.

6. சிறுகதை எல்லைக்குள் அடங்கும் நிகழ்ச்சி வேண்டும். அந்நிகழ்ச்சியும் பூரணமாக அமைய வேண்டும். இனி அது வளர்க்கப்பட இயலாது; மேலும் வளர்த்துச் சென்றால் பயன் ஒன்றுமில்லை என்று கூறத் தக்க நிலையில் அது முழுவதாக அமைந்திருத்தல் வேண்டும். இம் முழுத்தன்மை கதையின் எல்லைக்குள் அமைந்து விட்டால் அன்றிச் சிறப்பில்லை.

7. சிறுகதை எந்த ஒன்றைப் பற்றி விவரிக்க எழுந்ததோ அது தவிர ஏனையவற்றில் நம் கவனத்தை ஈர்த்தல் கூடாது. குறிக்கோளிலும் அடைவிக்கும் பயனிலும் ஒருமைத் தன்மை இருப்பதே சிறுகதையின் சிறப்புக்கு அடையாளம்.

8. எங்கே ஒரு சொல்லானது கற்பனையைத் தூண்டும் சக்தியோடு காணப்படு கிறதோ, எங்கே ஒரு சொல் ஒரு சம்பவத்தை அல்லது படத்தை அப்படியே நினைவிற்குக் கொண்டு வருகிறதோ, எங்கே ஒரு சொல் கற்பனைச் சக்திக்கு விருந்தளிக்கிறதோ, அங்கே, அந்தச் சொல் தோன்றும் இடத்திலே, நாம் கவிதையைக் காண்கிறோம்.

தொகுத்தவர்: வே.சபாநாயகம்.
நன்றி: http://ninaivu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *