அனுராதா ரமணன்

 

எழுத்துக்கலைபற்றி இவர்கள்…அனுராதா ரமணன்.

1. சிறுகதை என்பது சின்னப் போர்ஷனில், சாமர்த்தியமாய்க் குடியிருப்பதற்குச் சமம். நாவல் என்பது பெரிய பங்களாவில் வசிப்பதற்கு ஒப்பாகும்.

2. முதலில், எழுதவேண்டும் என்று ஆசையுள்ளவர் தினமும் இரவு படுக்கப் போகும்முன் டயரியில் அன்றையச் சம்பவங்களைச் சுவைபட எழுத முயலுங்கள். தவிர கதைக் கருக்களைக் குறித்து வைத்துக்கொள்ள ஒரு நோட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

3. கதையைப் பொறுத்தவரை நல்ல கருதான் அதன் ஜீவநாடி. ஒரு தொழிலுக்கு மூலப்பொருள் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கதைக்குக் கரு.

4. கதையின் கரு, ஏதோ ஒரு கால கட்டத்தில் நடந்த அல்லது நடக்கிற ஒரு சம்பவமாக இருக்க வேண்டும். சொல்ல வந்ததை சுவைகுன்றாமல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். முடிவு படீரென்று பொட்டிலடித்தாற்போல இருக்க வேண்டும்.

5. ஒரு நாளைக்குப் பத்துப் பக்கங்கள் நாம் எழுதுகிறோம் என்றால், ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு பக்கங்களாவது படிக்க வேண்டும். கையில் கிடைக்கிற புத்தகங்களை எல்லாம் படியுங்கள். நம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்த எழுத்தாளர்கள் படைப்புகளைப் படிப்பதனால், அவர்களது அனுபவங்களை மட்டுமின்றி உழைப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.

6. ஒரு நல்ல சிறுகதையைப் படித்தால், படிப்பவரின் நெஞ்சில் சுமார் இரண்டு நாட்களுக்காவது அதன் பாதிப்பு இருக்க வேண்டும்.

7. ஆரம்ப வரி – வாசகரைப் படிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தால்தான் முழுக்கதையையும் படிக்க வேண்டும் என்கிற உற்சாகம் கிளம்பும்.

8. முகத்துக்குப் பவுடர் பூசுவதும், பொட்டு வைப்பதும் ஓரளவுக்குப் புத்துணர்ச்சியையும், இயல்பான களையையும் தோற்றுவிக்கும். அது போலத்தான் வருணனையும்.

9. சிறுகதைக்கு வருணனை அவசியம்தான். அதைவிடவும் சம்பவத்துக்கு நாம் தரும் முக்கியத்துவம் அவசியம்.

10. சிறுகதை தரம் மிகுந்ததாக இருக்கிறதா, எழுத்தில் இலக்கண இலக்கியம் உண்டா என்று துருவித் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் எழுதவே முடியாது.

தொகுத்தவர்: வே.சபாநாயகம்.
நன்றி: http://ninaivu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *