எப்படி எழுதினேன்? – மாக்சிம் கார்க்கி

 

Maxim Gorky (மாக்சிம் கார்க்கி)

உயிர்வாழும் போராட்டத்தில் மனித உள்ளத் தின் தற்காப்பு உணர்ச்சி இரு மாபெரும் சிருஷ்டி சக்திகளை வளர்த்துவிட்டது , அறிவும் கற்பனையுமே இவ்விரு சக்திகள். முதலாவது சக்தியான அறிவு என்பது இயற்கை நியதியை, சமுதாய நியதியைக் கவனித்து, பொருத்தம் பார்த்து, தள்ளுவன் தள்ளிக் கொள்ளுவன் கொள்ளும் திறமையேயாகும். அதா வது அறிவு என்பது சிந்திக்கும் திறனாகும். சாராம்சத்தில் கற்பனையும் சிந்தனை வழிப்பட்டதே. எனினும் கற்பிதமான உருவங்களை கலாரூபத்தில் சிந்திப்பதே கற்பனைக்குப் பிரதானம். கற்பனை என்பது மனித குணா குண உணர்ச்சிகளை, ஆசா பாசங்களை முன்னிலைப் பொருள்களோடும், இடையறாத இயற்கை நியதியோடும் ஒட்டுறவாக்கிக் காணும் திறன் என்று சிலர் சொல்லலாம்.

காற்றின் முன்கலையும், பழங்கதை சொல்லும் படித்துறையையும், வியர்வை அரும்பும் ஜன்னல் கண்ணாடிகளையும் நாம் கண்டிருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். இந்த மாதிரியான கற்பிதத்தால் நமக்கு இயற்கை நியதியை லகுவில் உணர்ந்து கொள்ள முடிகிறது.

இலக்கியப் பாணி, அதன் பாதையின் அடிப் படைத் தன்மைகள், கற்பனார்த்தமும் எதார்த்த முமே யாகும். எதார்த்தம் என்பது வாழ்க்கைத் தரத்தின் நிலையை வெளிப்பூச்சின்றி, ஒளிவு மறை வின்றி வெளியிடுவதாகும். கற்பனார்த்தத்தைப் பற் றித் திட்டவட்டமான திருப்தி தரும் பதில் இன்னும் அளிக்கப் பெறவில்லை. ஆகவே, பால்ஸாக் , டால்ஸ் டாய், கோகோல், செஹாவ் முதலிய எழுத்தாளர்கள் கற்பனார்த்தவாதிகளா, எதார்த்தவாதிகளா என்று சொல்ல முடியவில்லை. அநேக எழுத்தாளர்களிடம் கற்பனார்த்தமும் எதார்த்தமும் இணைந்தே இருக்கின்றன.

கற்பனார்த்தத்துக்கும் எதார்த்தத்துக்குமுள்ள தொடர்பை உணர எழுதும் ஆர்வம் ஏன் வர வேண்டும்? என்ற கேள்வியைப் புரட்ட வேண்டி யதுதான். இதற்கு இரண்டு விடைகள் உண்டு. ஒன்று : பதினைந்து வயதுள்ள தொழிலாளி வர்க்கப் பெண் ஒருத்தி எனக்கு எழுதினாள்: ”எனக்குப் பதினைந்து வயது தான். இந்த வயதிலேயே எனக்கு எழுதும் சக்தி வந்துவிட்டது. காரணம் எனது பஞ்சை நிலையும் சலித்துப் போன உயிர் வாழ்க்கை யும்தான்.” இன்னொரு எழுபது வயதுக் கிழத் தொழிலாளி எழுதுகிறான்: ‘எனக்குள்ள அனந்த கோடி அனுபவங்களை எழுதாமலிருக்க முடியவில்லை!”

என்னோடு கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்பவர்கள் எழுத்தாளனாக ஆசைப்படுவதன் காரணம் அவர்கள் மனத்தில் புகைமுட்டித் தவிக் கும் அனந்தகோடி அனுபவங்கள் இருப்பதனால் தான் தாங்கள் கண்டும் கேட்டும் அனுபவித்தும் வந்த இன்ப துன்பங்களை அவர்களால் எழுதாம லிருக்க முடியவில்லை. ஆகவே எப்படி எழுதினேன் என்ற எனது கேள்விக்கு நானும் ‘வறுமையில் வாடினேன்; எனக்கும் பல்வேறு அநுபவங்கள் இருக்கின்றன. அந்த உணர்ச்சிப் படங்களை என்னால் தீட்டாமல் இருக்க முடியவில்லை’ என்றே சொல்வேன்.

வாழ்வின் பயங்கரத்தைப் பற்றி எனக்கு அநேக அனுபவங்கள் உண்டு. இப்போது நான் அதைக் குருட்டுப் பயம் என்கிறேன். இளமை அனுபவத்தில் நான் கண்ட அனுபவங்களைச் சொல்லப் போனால், நீங்கள் பார்த்திராத கீழ்த்தரமான அனுபவங்களாகவே இருக்கும். சில வேளைகளில் இந்தக் கைப்பான வாழ்க்கை எனது உணர்ச்சிகளை மழுங்க அடித்து என்னை ஒரு தூங்கிணியாக்க முயன்ற துண்டு. சில சமயங்களில் அவை என்னைக் கிண்டி விட்டு எனது மான உணர்ச்சியைத் தூண்டியது முண்டு. ஆகவே இதற்கு ஒரு மார்க்கம் தெரியாமல், இரவில் கூரையேறித் திரிவதும், தாத்தா செய்யும் வேலையில் கரியை அள்ளித் தூவுவதுமாக இருந்தேன். இதையெல்லாம் நான் ஏன் செய்தேன் என்றால் நான் உயிருள்ள பிராணி என்று காட்டிக்கொள்வதற்குத்தான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்த இந்த வாழ்வை மாற்றவேண்டு மென்று நினைத்தேன்.

சரி. இனி நான் எப்படி எழுதப் படித்தேன் என்பதற்கு வரலாம். எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் புத்தகங்கள் மூலமாகவும் வாழ்க்கையின் மூலமாகவுமே கிடைத்தன. நான் வெளிநாட்டு இலக்கியங்களுக்கு – முக்கியமாக பிரெஞ்சு இலக்கியத்துக்கு – மிகவும் கடமைப்பட்டவன். என் தாத்தா ஒரு கஞ்சன் ஆனால் நான் அவரை பால்ஸாக்கின் ‘கிராண் டெட’ என்ற கதாபாத்திரத்தின் மூலமே புரிந்து கொண்டேன். அதே மாதிரி என் தாத்தாவின் நண்பர்கள் தாக்கரேயின் வானிட்டி பேரில் (Vanity Fair) பேசுவது போலவே பேசினார்கள். இப்படித் தான் பல அனுபவமும்.

எனது படிப்பு ஒழுங்குமுறையற்றது; கிடைத்த போது சமயம் வாய்த்தபோது படித்தேன். வெளி நாட்டு இலக்கியம் எனக்கு ஒப்புவமை நோக்குவ தற்கு ஏராளமான விஷயங்களையும், விஷயத்தை எடுத்துச் சொல்வதையும், கதா பாத்திரத்தைத் தொட்டுப் பழகும் பாணிகளையும் சொல்லிக் கொடுத் தது. ஒரு தடவை பிளாபேரின் சாதாரண இதயம்’ {A Simple Heart) என்ற நூலைப் படித்தேன். அதைப் படித்துக் கண் மூக்குத் தெரியாமல் ஆடி னேன். சர்வசாதாரணமான, நாமறிந்த வார்த் தைகளை வைத்துக்கொண்டு எப்படி ஒரு சாதாரண விஷயத்தை சமாகச் சொல்ல முடிகிறது என்று அதி சயித்தேன். எனக்கு அது ஒரு புதிராக இருந்தது.

நான் படித்த பிற இலக்கியங்கள் இருக்க, பிரெஞ்சு இலக்கியத்திலிருந்து தான் எழுதக் கற்றுக் கொண்டேன். இது தற்செயலாக நடந்த போதிலும், இளம் எழுத்தாளர்கள் கட்டாயம் பிரெஞ்சு இலக்கிய மேதைகளின் நூல்களைப் படித்து அவர்களின் சொல்லாட்சிக் கலையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றே சொல்வேன்.

எனக்கு இருபது வயது ஆனபோது. நான் கண்ட, கேட்ட அனுபவித்த பல விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்லித்தானாக வேண்டும் என்று கருதினேன். ஏனெனில் மற்றவர்களின் மனப் போக்குக்கு மாறாக நான் புது வழியில் சில விஷயங் களைக் கண்ணோக்குகிறேன் என்று எனக்குப் பட்டது. இதற்கிடையில் நான் வசித்த இடத்தில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினர் நான் கதை சொன்னால் கூர்ந்து ஆர்வத்தோடு கேட்க ஆரம்பித்தனர். புத்தகங்களைப் பற்றியும் சொல்வேன். எனது கதைகளைக் கேட்ட அறிவாளிகள் எழுது ! எழுதப்பா எழுது என்று தூண்டினார்கள்.

அடிக்கடி எனக்குக் குடி மயக்கம் போல். நான் அனுபவித்த இன்ப துன்பங்களை வெளியிட்டுத் தீர்க்க எண்ணும் ஆர்வம் மனத்தைப் பிய்த்துப் பிடுங்கும். இந்த அவஸ்தையைச் சொல்லித்தான் தீர்க்க விரும்பினேன். ஆகவே தான் என் மனத்தில் உறைந்து போன சித்திரங்களான என் நண்பன் அனடோலி , சந்துமுனைத் தாசி மகளான தெரஸா முதலியவர்களைப் பற்றி எழுத விரும்பினேன். அவர்களைப் பற்றிச் சில பாடல்கள் எழுதினேன்.

பாடல் எழுதுவது எனக்குச் சுலபமாகக் கை வந்தது. எனினும் அவை மோசமானவை. என்னுனுடைய சக்தியின்மையை, திறமை இன்மையை நானே உணர்ந்தேன். புஷ்கின், லொமெண்டோவ், குரோச்கின் முதலிய கவிஞர்களைப் படித்தபோது நான் ஒரு உதவாக்கரை என்றே பட்டது. நானோ வசனம் எழுதுவதற்கே பயந்தேன்; பாடலைவிட வசனம் எழுதுவது சிரமம் எனக் கருதினேன். இதன் விளைவு நான் வசனகதி படைத்த பாடலாய் எழுதியது தான் அந்த சிருஷ்டியை கோரோலெங்கோ நொறுக்கித் தள்ளிவிட்டார்.

இங்கு, மொழி என்பது மக்களால் ஆக்கப்பட்டது என்பதைச் சொல்வது பிரயோஜனகரமாயிருக்கும். இலக்கிய மொழி யென்றும் கொச்சை மொழி யென்றும் பாகுபடுத்துவ தென்பது, இலக்கிய மேதைகளின் கைவண்ணத்தால் மெருகு பெற்ற மொழியையும் பேச்சு மொழியையுமே குறிக்கும். இதை முதன் முதலில் உணர்ந்தவர் கவிஞர் புஷ் கினே ; அவர் தான் மக்கள் பேசும் மொழியையும் மெருகிட்டுப் புதுமை பெறச் செய்ய முடியும் என்பதைக் காட்டினார்.

எழுத்தாளன் என்பவன் அவனுடைய நாட்டின் வர்க்கத்தின் உணர்ச்சி மயமான ஊது குழல்; அதன் செவி, கண், இதயம் எல்லாம் அவன் தான். அவன்தான் அவனது சகாப்தத்தின் குரல்! – அவன் பழமையைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டுமோ அவ்வளவு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் நிகழ் காலத்தில் தனது சமுதாயத்தின் முன்னுள்ள கடமைகளை வரையறுக்கவும், நிறைவேற்றவும் முடியும். அவனுக்கு மனித சரித்திரம் தெரிய வேண்டும். மக்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதை உணர அவர்களது பழமொழிகளையும், கதைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் அதைத்தான் செய்தேன்.

இளைஞர்களாகிய நீங்கள், நான் ஏன் பஞ்சைப் படையினங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று கேட்பீர்கள். கீழ்த்தர மத்தியதர வர்க்கத்தினரோடு பழகிய தோஷத்தால் அந்த வர்க்கத்தைச் சூழ்ந்துள்ளவர்கள்; அவர்களை எப்படிக் கொக்கியிட்டு வதைக்கிறார்கள், அவர்களது வியர்வையையும் குருதியையும் எப்படி காபெக்குகளாகவும், ரூபிள்களாகவும் (காபெக், ரூபிள் – ருஷ்ய நாணயங்கள்) மாற்றுகிறார்கள் என்பதையும் எனது பதினைந்தாவது வயதிலேயே நேரில் அனுபவித்தேன். ஆகவே, இந்தப் புல்லுருவிகள் வாழ்க்கையைக் கண்டு மனம் புழுங்கினேன்.

பஞ்சைப் பரதேசிகள் என்பவர்கள் என்னைப் பொறுத்த வரை சாதாரண மனிதர்கள், ஏனீெனில் அவர்கள் வர்க்கம் இழந்தவர்கள்; அவர்கள் வர்க்கத் தின் தன்மையை இழந்தவர்கள் இப்படிப் பட்ட பலரை நான் வழியில் சந்தித்திருக்கிறேன். நானும் இன்னொரு மனிதனும் ஆஸ்பத்திரியில் சீக்காகக் கிடந்தபோது அவன் சொன்ன கதையைத்தான் நான் எனது செல்காஷ்’ (Chelkasil) என்ற கதைக்குப் பயன்படுத்தினேன். அவன் அலெக்ஸாண்டர் டூமாஸின் “மகா வீரக்” கதா நாயகர்களை நினைவூட்டி னான். ஆகவே தான் இந்தப் பஞ்சைப் பரதேசிகளின் சாதாரண வாழ்வைப் பிரதிபலிப்பதில் என் மனம் நாடியது. இவர்களை விட, குட்டி பூர்ஷ்வா மனப்பான்மை கொண்ட மக்கள் என்னை அதிகம் கவரவில்லை.

என்னைப் பொறுத்த வரையில், மனிதனை மிஞ்சிய கருத்துக் கிடையாது. மனிதன் தான் – மனிதன் மட்டும் தான் சகல பொருள்களுக்கும் கருத்துக்கும் சிருஷ்டிகர்த்தா. அவனே மாயாஜாலன்.

அவனே இயற்கையின் சகல சக்திகளுக்கும் எதிர்கால எஜமான். நமது உலகில் உள்ள அழகிய பொருள்களெல்லாம் நமது உழைப்பின் சிருஷ்டி; மனிதக்கரங்களின் படைப்பு. நமது கருத்துக்கள் எண்ணங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சிப் போக்கி விருந்து உற்பத்தியானவை. பிரத்தியக்ஷ உண்மைகளிலிருந்து தான் எண்ணங்கள் பிறக்கின்றன. நான் மனிதனுக்குத் தலை வணங்குகிறேன். ஏனெனில் அவனுடைய அறிவுக்கும் கற்பனைக்கும் அமைந்துவிடாத எந்தப் பொருளையும் நான் காணவில்லை.

– சந்திப்பு – ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை – தமிழில்: ரகுநாதன் – முதற் பதிப்பு – டிசம்பர் 1951

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *