அயல்நாடுகளில் சிறுகதை வளர்ச்சி

 

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன்
வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

இலங்கை
இலங்கையில் மு. தளைய சிங்கம் (1935 – 1973) மிகச் சிறந்தசிறுகதை எழுத்தாளராக விளங்கியுள்ளார். 1960 முதல் 1965 வரையிலான காலக் கட்டத்தில் பல சோதனைக் கதைகளை எழுதியுள்ளார். புதுயுகம் பிறக்கிறது என்ற தலைப்பில் இவருடைய கதைகள்     தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் பெரும்பாலும் மேனாட்டுப்     புதிய  இலக்கியப் படைப்புகளை ஒத்துக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் கிராமிய மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதியவர்களில் செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்     இருவரும் குறிப்பிடத் தக்கவர்கள்.
செ.கணேசலிங்கன், செ.கதிர்காம நாதன்,    எம்.ஏ.ரஹ்மான், கே.டானியல், க.குணராசா, இளங்கீரன், அ.செ.முருகானந்தன், அ.பாலமனோகரன், எஸ்.பொன்னுதுரை
ஆகிய சிறுகதை எழுத்தாளர்கள் இலங்கையில் குறிப்பிடத் தக்கவர்கள். இயேசு ராஜா, குப்ளான் சண்முகம் போன்ற சிறுகதை ஆசிரியர்களும் சிறந்த கதைகளை எழுதி வருகின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதிய பெனடிக்டு பாலன், தென்னிலங்கை இசுலாமிய மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் எழுதிய     திக்குவல்லை    கமால் போன்றவர்களும் குறிப்பிடத் தக்கவர்கள். தற்போது பல பெண் எழுத்தாளர்களும் புலம்     பெயர்ந்த எழுத்தாளர்களும் பெருகி வருகின்றனர். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், சுதா ரூபன் போன்றவர்கள் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர்
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மலோக மலேசியா, சிங்கப்பூர் என்ற இரு நாடுகளிலும் தமிழ்ப் பத்திரிகைகள் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. 1966இல் முதலாவது உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூரில் நடத்தப்பட்டதற்குக் காரணம் அங்குத் தமிழ்மொழி பேசுபவர்களும், தமிழ்ப் பற்றாளர்களும் அதிகம் என்பதுதான்.
1924இல், கோலாலம்பூரில் தமிழ் நேசன் என்ற நாளிதழும், 1931இல் சிங்கப்பூரில் தமிழ் முரசு என்ற நாளிதழும் தோற்றம் பெற்றன. இவ்விரு நாளிதழ்களும் மலேசியா, சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கியக் களங்களாகத் திகழ்கின்றன. இந்நாடுகளில் வெளியாகும் பாரத மித்திரன், திராவிட கேசரி என்ற இதழ்கள்
மணிக்கொடி, விகடன், கலைமகள் ஆகிய இதழ்களிலிருந்து நல்ல சிறுகதைகளை எடுத்து வெளியிட்டுள்ளன. கல்கி, கு.ப.ரா., சங்கு சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் சிறுகதைகள் மலேசியா வாழ் தமிழ் மக்களின் மத்தியில் புகழ் பெற்றிருந்தன. 1933இல், விகடன் சிறுகதைப் போட்டி நடத்தியதைப் பார்த்து, 1934இல் பாரத மித்திரன் சிறுகதைப் போட்டி நடத்தியது. ந.பழனிவேலு மலேசியாவின் மூத்த தலைமுறை எழுத்தாளராவார். 1936 – 1942 காலக் கட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். மா.இராமையா, அ.ர.வீர, ஆ.மு.சி., மா.செ. மாயதேவன், சி.வடிவேலு,    எம்.ஏ.இளஞ்செல்வன், எம்.குமரன், சாமி மூர்த்தி போன்றோர் மலேசியாவில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களுள் சிலராவர்.

நன்றி: http://www.tamilvu.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *