வார்த்தைகள்

 

வார்த்தைகள் என்னை மொய்த்தபடியிருந்தன. கூர்மையாய், மொன்னையாய், தட்டையாய், குறுகலாய், நெட்டையாய், தடிமனாய் பல வடிவங்களில் பல்வேறு திசைகளிலிருந்து தொடர்ந்து வந்துக் கொண்டேயிருந்தன.

கணவரிடமிருந்தும், பிள்ளைகளிடமிருந்தும், கடைக்காரனிடம் பேரம் பேசும் போதும் வெளிப்பட்ட வார்த்தைகள், தொலைக்காட்சி நாடகத்திலிருந்து புறப்பட்ட வார்த்தைகள், தெருவில் மீன் விற்றுக் கொண்டிருந்தவனின் கத்தலிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் . . . எழுத்துகளாகவும் ஒலி வடிவமாகவும் என் உடலை சுற்றி வந்து படர்ந்துக் கொண்டிருந்தன. காது ஓட்டைக்குள்ளும் மூச்சு துவாரத்தின் உள்ளும் நுழைந்தபடி என் உடலினுள் அடையடையாகப் படிந்து ரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் சுழித்துக் கொண்டு ஓடின.

முதன் முதலில் வந்த வார்த்தைகள் தனித் தனி எழுத்துகளாய் பிரிந்து என்னை நோக்கி அலை போல மிதந்து வந்தன. கைகளை வீசியதும் கலைவது போல கலைந்து மறுபடி கொசுக் கூட்டம் போல அப்பிக் கொண்டன.
பள்ளியில் பிள்ளைகளுக்கு முந்தைய தினம் சொல்லிக் கொடுத்த ‘ஈ’ வரிசை கண் முன் வந்து இளித்தபடி கேலி செய்ய, வந்த கோபத்தை பிள்ளைகளிடம் தான் காட்ட முடிந்தது. ஒன்றுமே இல்லாததற்கெல்லாம் கத்துவதாய் அப்பாவிடம் குற்றம் சாட்டினாள் பெண். பிள்ளை எதுவுமே பேசாமல் கண்கலங்கிச் சென்றது மனதைப் பிசைந்தது.

வார்த்தைகள் காதிற்குள் ஏற்படுத்திய ரீங்காரம் பொறுக்க முடியாததாக இருந்தது. குளிக்கும் போது மட்டும் அந்த சத்தம் சற்றே நமுத்துப் போனது. நமுத்துப் போன இந்த ஓசை சற்றே சகிக்கக் கூடியதாய் இருந்தது. அதனால் அடிக்கடி தலைக்கு குளிப்பதை விரும்பினேன்.

ஒருமுறை இரவு விளக்கின் நீல ஒளியில் பட்பட்டென்று வார்த்தைகளை அடித்துக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த கணவர், கொசுவர்த்திச் சுருளை ஏற்றிக் கொள்வது தானே என்று கேட்க, நான் பதிலேதும் பேசாமல் போர்வையை இழுத்து தலைவரை போர்த்திக் கொண்டேன். அப்படியும் பொடிப் பொடியான வார்த்தைகள் போர்வையின் நூலிழைகளுக்கிடையே இருந்த ஓட்டைகள் வழியாக உள்ளே நுழைந்து உடலைத் தழுவியபடி, எறும்புகளைப் போல மேலே ஊர்ந்தன.

கைகளால் தட்டிவிட்டபடியே களைத்து தூங்கிய போது ‘க’ வரிசை தன் கனத்த இடுப்பை ஆட்டியபடி என் முன் நடனமாடியது. அதைத் தொடர்ந்து வந்த ‘த’ வரிசை ஒற்றைக் காலால் குதியாட்டம் போட்டது. அது வரிசை முறையின்றி உள்ளே நுழைந்ததாய் பின்னால் வந்த ‘ங’ வரிசையும் ‘ச’வரிசையும் கண்டித்தன.

இதனிடையே நடனமாடிக் கொண்டிருந்த ‘கு’ தடுமாறி கீழே விழ, பொட்டென்று சப்தத்துடன் அது உடைந்ததில், அதிலிருந்து எழுத்துகள் தெறித்து என்னை நோக்கி தாளமிட்டபடி வந்தன. இவற்றின் இரைச்சல் பொறுக்க முடியாமல் நடுஇரவில் எழுந்து குளியலறை சென்று தலைக்கு குளிக்க, சப்தம் நமுத்துப் போய் சற்று நிம்மதியாய் இருந்தது. ஈரத் தலையுடன் படுத்த என்னை விசித்திரமாய் பார்த்தார் கணவர்.

நாட்கள் செல்லச் செல்ல ஒரு முன்னேற்றம் தெரிந்தது. முதலில் எழுத்துகளாய் சிதறி உள்ளே நுழைந்த வார்த்தைகள் பின் கோர்வையாய் நுழைந்தன. வார்த்தைகளுக்குள் நிறபேதம் கூட இருந்தது. கணவரிடமிருந்து வந்த வார்த்தைகள் சிவப்பு நிறத்தில் சீறிப் பாய்ந்து முகத்தில் குத்தின. மகளிடமிருந்து வந்தவை ஆரஞ்சு நிறத்தில் வேகமாய் வந்து முட்டின. மகனிடமிருந்து தயக்கத்தோடு, இடைவெளி அதிகம் விட்டு வந்த வார்த்தைகள் பச்சை நிறத்தில் இருந்தன.

பின்னாட்களில் வார்த்தைகள் ஒன்றையொன்று பிணைத்த படி ரயில் தொடராய் உள்ளே நுழைந்து இதயம், கல்லீரல் என்று சுற்றிவர ஆரம்பித்தன. அப்போது தான் உண்மையான பிரச்சனை தொடங்கியது.

சிவப்பு நிற வார்த்தைத் தொடர்கள், முழுப்புள்ளி, முக்காற்புள்ளி, காற்புள்ளியுடன் சேர்ந்து இதயத்தையும், கல்லீரலையும் இறுக்க, மூச்சு விடமுடியாமல் போனது. சிறுநீரகத்தை இறுக்கிய போது ஒன்றுக்கிருக்க முடியாமல் வலித்தது. மருத்துவரிடம் இவற்றைச் சொன்ன போது பிரமை என்றார்.

இந்த நேரம் வார்த்தைகளைப் பார்த்து பயப்பட ஆரம்பித்திருந்தேன். அதிலும் சிவப்பு நிறம் சுமந்த வார்த்தைத் தொடர்கள் அதிக அச்சத்தை ஏற்படுத்தின. தடிமனாக இருந்த ஆடைகளைப் போட்டுக் கொண்டேன் வெளியே தெரிந்த உடற்பாகங்களை கறுப்பு நிற துணிகளைக் கிழித்து சுற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். இப்போது சிவப்பு நிற வார்த்தைகள் உடலைத் தீண்டுவதை சற்று தவிர்க்க முடிந்தது. ஆனாலும் முகத்தைக் கட்டிக் கொள்ள முடியாமற் போனது.

வெயிற் காலத்தின் போது உடல் தகித்தாலும் வார்த்தைகளுக்கு பயந்து அவற்றை கழட்டவில்லை. வியர்வை பெருகி ஆறாய் வழிந்து ஒருவித முடை நாற்றம் ஏற்பட்ட போதும் அதைப் பற்றி கவலைப் படவில்லை. ஊரிலிருந்த வந்த அம்மாவும் அப்பாவும் நீல நிற வார்த்தைகளுடன் என்னைப் பார்த்து அழுத போது, வார்த்தைகள் அவர்களுக்குள் புக முயற்சித்து தோல்வியுற்றதைப் பார்க்க சிரிப்பாய் வந்தது.

அதன் பிறகு தான் நான் இங்கே வந்தது. வந்ததிலிருந்து சற்று நிம்மதியாய் இருக்கிறது. ஊசி குத்தும் போது வெடித்துச் சிதறும் வார்த்தைகளைப் பார்த்து அவற்றைப் பழி தீர்த்துக் கொண்ட ஓர் உணர்வு ஏற்படுகிறது. இங்கிருப்பவர்களிடமிருந்து வரும் வார்த்தைகள் தொல்லை ஏற்படுத்தாதவையாக இருக்கின்றன.

அதிகம் முடியாமல் போகும் போது வார்த்தைகளை அடுத்தவரிடம் தள்ளிவிட்டு சற்று நேரம் இளைப்பாற முடிகிறது. வார்த்தைகளில்லாத சில நொடிகள் இன்பமாய் இருந்தாலும் சற்று நேரத்தில் அலுப்பை ஏற்படுத்துகிறது. அந்த நேரம் சில வார்த்தைகளை அடுத்தவரிடம் கடன் வாங்கிக் கொள்ளவும்முடிகிறது.

இப்போதெல்லாம் சிவப்பு நிற வார்த்தைகளைக் கண்டு பயமேற்படுவது இல்லை. வார்த்தைகள் முன்பு போல என்னை துன்புறுத்துவதும் இல்லை. அம்மாவுடன் வரும் மகள் தள்ளியே நிற்பதும், மகன் பயத்துடன் என் கையை தொட்டுப் பார்ப்பதும், கணவர் என்னைப் பார்க்க வராததும் தான் வலியை ஏற்படுத்துகிறது.

- இந்த கதை வம்சி சிறுகதைப் போட்டியில் (2011) பிரசுரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தகத்தில் வெளியானது. 

தொடர்புடைய சிறுகதைகள்
சுரேஷ் கூடத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். அவன் கைகள் வாரப் பத்திரிக்கையுடைய முன்னட்டையின் ஓரத்தை சுருட்டி விரித்தபடி இருந்தன. கூடத்து மின்விசிறி கடகட வென்று சத்தம் எழுப்பியபடி ஓடிக் கொண்டிருந்தது. செல்வியக்கா கல்யாணத்திற்கு முன்பு செய்த சம்க்கி குத்திய பந்தும், மணி பொம்மைகளும் ...
மேலும் கதையை படிக்க...
சாம்பல் நிறத்தில் கறுப்பு கரை வைத்த பட்டுப் பாவாடையைக் கட்டிக் கொண்டு சுற்றினால் குடையாய் விரியுமே, அது போல பென்சிலின் சீவல் ஷார்ப்னரிலிருந்து வெளி வந்துக்கொண்டிருந்தது. சிறுமியாய் இருந்த போது இதை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து, காய வைத்தால் ரப்பர் ...
மேலும் கதையை படிக்க...
ரவி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, வீட்டு வாசலுக்கு எதிராக அது பளபள வென்று நின்றுக் கொண்டிருந்தது. கம்பித் தடுப்புகளுடன் , சுமார் ஐந்தடி உயரத்தில், ஒரு பெட்டி போல, சுருக்கமாக சொல்வதென்றால் சற்றே பெரிய வெள்ளிக் கூண்டு போல ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சுளாவிற்கு சாப்பிடுவதில் அதிக விருப்பம் இருந்தது. எதையாவது சாப்பிட்டபடியே இருந்ததால் அவள் பூசின உடல்வாகைக் கொண்டிருந்தாள். சிறுவயதில் அப்பாவோ அல்லது உறவினர்களோ வாங்கி வரும் பொட்டலங்களில் மற்றவர்களை விட தனக்கு கொஞ்சமாவது அதிகம் கிடைக்கும் படி பார்த்துக் கொள்வாள். வீட்டின் கடைசி ...
மேலும் கதையை படிக்க...
ஒன்று அம்மாவைப் போல கோதுமை நிறத்தில் இருந்திருக்கலாம் இல்லையென்றால் நூடுல்ஸ் போல சுருண்டு கிடக்கும் இந்த முடியாவது, நீளமாய், தொடுவதற்கு தேங்காய் நார் போல இல்லாமல், மெத்தென்று இருந்திருக்கலாம். இதையெல்லாம் தான் மாற்ற முடியாது. சரி! உடம்பையாவது குறைக்கலாமென்றால் அதுவும் முடியவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும் எழுபது ...
மேலும் கதையை படிக்க...
அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருந்தாள். முகம் உணர்ச்சிகளைத் தொலைத்த பாறையைப் போல இறுகிக் கிடந்தது. சமையலறையை ஒட்டி ஒதுக்குப் புறமாய் இருந்த அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அவள் படுத்திருந்த பாய் ஓரத்தின் சிவப்புத் துணி தேய்ந்து, நைந்து போயிருந்தது. அவளுடைய ...
மேலும் கதையை படிக்க...
‘எங்க தான் போச்சு அது!’ கை வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருந்த போதிலும், மனம் மும்மரமாய் தேடிக் கொண்டிருந்தது. “என் பனியன எங்க வச்ச? அலமாரில தேடிப்பார்த்தா காணோமே?” பதில் சொல்வதற்கு முன், “அம்மா என் பென்சிலைக் காணோம், பார்த்தியா?” “ஏண்டா, எழுதினதும் பத்திரமா எடுத்து வையின்னு எத்தன முறை ...
மேலும் கதையை படிக்க...
கானல் நீர்
சினேகிதியே…
கி.பி.4142
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
ஒளி தேடும் விட்டில் பூச்சி
கொள்ளெனக் கொடுத்தல்
அம்மா என்றொரு பெண்
நடுத்தர மனசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)