வடக்கத்திப் பையன்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 19, 2014
பார்வையிட்டோர்: 14,033 
 

ஓங்கி வளரும் பல அடுக்கு கட்டிடம் அதன் அருகில் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத கூரை வேய்ந்த குடிசை. சென்னையின் புற நகர் பகுதிகளில் பரவலாக காணக் கிடைக்கும் காட்சி முரண் இது. சோமாவுக்கும் அவன் நண்பர்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு குடிசை தான் வசிப்பிடம். பூர்வீகமான, பீகாரின் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் இருந்து கட்டிட வேலைக்காக இங்கு வந்தவர்கள் அவர்கள்.

அவர்கள் என்னிடம் வந்து வேலைக்கு சேர்ந்த அந்த நாள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஏஜென்ட் ஆறுமுகம் அவர்களை அழைத்து வந்த போது, அவர்கள் முகத்தில் பெருமிதமும் சந்தோஷமும் பொங்கி வழிந்தது. தங்கள் சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து வந்தாலும் நல்லதொரு இடத்திற்குத் தான் வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற நிம்மதி அவர்கள் கண்களில் தெரிந்தது. எதை வைத்து இவர்கள் எல்லாம் நம் ஊரை இப்படி விரும்புகிறார்கள் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஒரு முறை ஆறுமுகத்திடம் பேசிய போது, அவர் சொன்னார்;.

‘இவங்கல்லாம்; இப்படி வாயைப் பொளக்கிற அளவுக்கா நம்ம ஊரு இருக்குது? சென்னை வாழத் தகுதியில்லாத ஊருன்னு நம்ம ஆளுங்க சொல்லிகிட்டிருக்கோம்”

‘இல்ல சார் அவங்க ஊருக்குப் போய் பார்த்தால் தான் தெரியுமாம் இங்க நம்ம ஜனங்களுக்கு எல்லாமே இலவசமாய் கிடைச்சிடுது. மழை அளவாப் பெய்யுது. அங்கல்லாம் புயலு வெள்ளமுன்னு வருஷம் முச்சூடும் வதையறாங்களாம். பஞ்சம், கொலை, கொள்ளை இதெலெ;லாம் இங்க விட அங்க ரொம்ப அதிகம். அஞ்சு ரூபா கூட அங்க ஓசத்தி சார். நான் ரயில்வே ஸ்டேஷனலயிருந்து பஸ்ல கூட்டிட்டு வந்தேன் பார்த்திங்களா அப்ப இவனுங்க முகத்த பார்த்திருக்கணுமே, காணாதத கண்டமாதிரி அப்படியும் இப்படியும் வேடிக்கை பார்த்துட்டே வந்தானுங்க”

‘அப்படியா நம்ம ஊரு அருமை இவங்கல்லாம் சொல்லித்தான் நமக்கு தெரியுது”

மொத்தம் ஆறு பீகாரிகள் எங்கள் இடத்தில் வேலை பார்க்கிறார்கள். எல்லோருக்கும் வயது பதினெட்டிலிருந்து இருபத்திமூன்று வயதுக்குள் இருக்கும். எல்லாருமே நல்ல பசங்கதான். இன்ஜீனியர் சார் என்று என்னிடத்தில் மரியாதையாக நடந்து கொள்வார்கள். என்னோடு வேலை பார்க்கும் சக பொறியாளர்களை விட என்னிடம் அவர்கள் கொஞ்சம் நெருங்கிப் பழக காரணம் நான் தெரிந்து வைத்திருந்த இந்திமொழி தான்.

வேலையின்போது அவர்கள் தவறு செய்யும் சந்தர்ப்பங்களில் என் சக பொறியாளர் ராமநாதன் நிர்வாக அதிகாரியிடம் அந்த பையன்களைப் பற்றி சற்று அதிகமாகவே போட்டுக் கொடுத்து விடுவார். அவருக்கு அவரை விட இந்த வடகத்திக் பையன்கள் எனக்கு கொடுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் உறுத்தியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் நான் தான் அவர்களுக்காக பரிந்து பேசுவேன். குறிப்பாக சோமாவைக் கண்டால் ராமநாதனுக்கு ஏனோ ஆகவே ஆகாது. அந்த இளைஞர்கள் அவன் தான் வேலையில் விவரமுள்ளவன். நல்ல களையான முகம். முகத்தில் எப்போதும் புன்னகை. எல்லோரிடத்திலுமே மரியாதையாக நடந்து கொள்பவன்.

ஆனால் ராமநாதன் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனை திட்டி வந்தார். என்னிடம் வந்து வருத்தப்படுவான். நான் சமாதானப் படுத்துவேன்.

‘ வேலையில் ஏதாவது குறையிருந்தா சொல்லட்டும். சாயங்காலம் வேலை நேரம் முடிஞ்சப்புறம்தான் போன் பேசறேன். அதுக்குப்போய் இப்படி திட்டுறாரு சார்”. புலம்பித்; தீர்ப்பான்.

இங்கே எழும்பிக் கொண்டிருக்கும் புதிய கட்டிடம் பக்கத்தில் இருக்கும் இரண்டு குடிசைகள் இவற்றிலிருந்து ஒரு நூறுஅடி தொலைவில் தான் எங்களுடைய இன்ஜீனியர் குடியிருப்பு. இரவு நேரங்களில் மனைவி பிள்ளைகளோடு மொட்டை மாடிக்கு வருவேன். சோமா அலைபேசியில் பேசுவது எங்கள் வீடு வரைக்கும் கேட்கும். குடிசைக்கு வெளியே தரையில் குத்த வைத்து உட்காhந்து கொண்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டுயிருப்பான். அதுவும் சத்தமாக புரியாத வேகமான பாஷை ஒன்றை உற்று உற்று கேட்டுப்பார்ப்பேன். ஒன்றும் புர்pயாது. யாருடனோ உற்சாகமாக பேசுகிறான் என்பது மட்டும் விளங்கும்.

என் குடியிருப்புக்கு எதிரில் ராமநாதன் வீடு. அவரும் இவன் பேசுவதைக் கவனிப்பார். அடுத்த நாள் வேலை நடக்கும் போது அவர் சொன்னதை இவன் சற்றுத் தாமதமாக செய்து முடித்தால், ‘பெரிய லார்டு லபக்தாஸ் மாதிரி விடிய விடிய போன் பேச வேண்டியது இங்க வந்து வேலைய பார்க்காம என் உசிர வாங்க வேண்டியது” முணுமுணுத்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் கேட்டே விட்டேன்.

‘ ஏன் ராமநாதன் அந்தப் பையனை இப்படி கரிச்சுக்; கொட்டறிங்க அவன் ஏதோ பிழைப்புக்காக இங்கே வந்திருக்கிறான். வேலையெல்லாம் ஒழுங்காத்தானே நடக்குது?”

‘உங்களுக்கு தெரியாது இவங்கலெல்லாம் ரொம்ப டேஞ்ஜரானவங்க கொஞ்சம் இடம் கொடுத்தா நமக்கே ஆப்பு வச்சிடுனுவாங்க பொழைக்கிறதுக்குன்னு இப்படி வெளியூரு வந்துட வேண்டியது. ஒரு வருடம் நல்லா எல்லாத்தையும் நோட்டம் போட்டுட்டு அப்புறம் வேலை முடிஞ்சுப் போகும் போது கைவரிசையைக் காட்டிட்டு போயிடவேண்டியது. எவ்வளவு படிக்கிறோம் பேப்பர்ல?”

‘ச்சே! இந்த பசங்க அந்த மாதிரியெல்லாம் இல்ல”

‘எப்படி சார் தெரியும் என்னயிருந்தாலும் அசலுர்;காரங்க. நம்ம ஆளுங்க கூலி கம்மியா கொடுத்தா போதும்ன்னு இப்படி வடக்கத்திக்காரங்கள வேலைக்கு வக்கிறாங்க. சோமா யார்கிட்ட போனுல பேசிக்கிட்டே இருக்கான்னு நினைக்கிறீங்க? ஊர்ல இவனுகளோட கும்பல் ஒன்னு இருக்கும். அதுக்கிட்ட இங்கு உள்ள நிலைமை சொல்லி சுருட்டிகிட்டு போக ஐடியா கேக்குறான். இந்நேரம் நம்ம ஊர்ல எங்கேயாச்சும் கன்னம் வச்சிருப்பான். ஒருநாள் இல்ல ஒரு நாள் நான் சொல்லறது உண்மையா இல்லையான்னு தெரிஞ்சுப்பீங்க”.

இந்த காலத்தில் யாரையும் நம்ம முடியாதுதான். ஆனாலும் முகாந்திரமே இல்லாமல் இந்த இளைஞர்களை ஒரு கொள்ளைக் கூட்டம் என்ற அளவில் சந்தேகப்படுவது சரிதானா?.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரம் நானும், மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தோம் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த மகன்கள் இருவரும் அப்பா அப்பா என்று அலறியபடி வீட்டுக்குள் ஓடி வந்து என்னை எழுப்பினார்கள். !பாம்பு பாம்பு! அதற்கு மேல் அவர்களுக்கு வார்த்தை வரவில்லை. வாரி சுருட்டிக் கொண்டு வெளியே வந்து பார்த்தேன். அவர்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் என் இரு சக்கர வாகனத்திற்கு அடியில் பாம்பின் வால் தெரிந்தது. அருகில் செல்லத் தயக்கம். ‘ரொம்ப பெரிசுப்பா அதோட தலையைப் பாருங்க பூந்தொட்டிக்கிட்டே இருக்கு. பெரியவன் சொன்னதும் தான் கவனித்N;தன். கிட்டத்தட்ட ஐந்துஅடி நீளம் இருக்கும். என்ன பாம்பு என்று தெரியவில்லை;. கருகரு என்று இருந்தது. என்ன செய்வது? அலைபேசியில் சோமாவின் பெயரை அழுத்தினேன்.

‘சொல்லுங்க சார்”;

‘சோமா! இங்க வீட்டுல ஒரு பாம்பு வந்துருச்சு” நான் சொல்லவும் அடுத்த நிமிடம் அழைப்பைத் துண்டித்தான்.

என்ன இவன்? வரச் சொல்லலாம்னு பார்த்தா, குடிச்சிட்டு படுத்திருப்பானோ. இப்படி நினைத்த அடுத்த மூன்றாவது நிமிடத்தில் மூச்சு வாங்க சோமாவும் அவன் நண்பன் ஒருவனும் கையில் பெரிய இரும்புத் தடியோடு வந்தார்கள்.

‘ எங்க சார் பாம்பு”

‘ அதோ அங்க வண்டிக்குக் கீழே பாரு”

‘நீங்க குழந்தைகள கூட்டிட்டு உள்ள போங்க. கதவ சாத்திக்குங்க சார்”

பிள்ளைகளை உள்N;ள அழைத்துக் கதவைத் தாளிட்;டேன். ஜன்னல் வழியாக பார்த்தோம். பூந்தொட்டியை தடியால் சற்று நெம்பி நகர்த்தினார்கள். பாம்பு சட்டென்று நகர்ந்து சுவரை ஒட்டிச் சென்று அடுத்த நகர்வுக்கு தயாரானது. சோமா குறி பார்த்து ஒரே அடியாக அதன் தலையில் போட்டான். கொஞ்ச நேரம் கையை நகர்த்தவே இல்லை. பாம்பின் வால் துடித்து அடங்கியது. பின் அதை அந்த இரும்புக்கம்பியில் தொங்க விட்டான்.

“ சார் வெளில வாங்க அடிச்சாச்சு” கதவை திறந்து பாhத்தோம்.

‘ரொம்ப விஷமுள்ள கருநாகம் இது. நல்லவேளை எங்கள கூப்பிட்டீங்க குழந்தைங்க ரொம்ப பயந்துட்டாங்க போல” பிள்ளைகளைப் பார்த்து சிநேகமாக சிரித்தான்.

‘இதை அந்த புதர்;கிட்டே கொண்டு போய் புதைச்சிடுறோம் சார்” அவனிடமிருந்து பாம்பை வாங்கிக் கொண்டு அவன் நண்பன் போனான்.

‘சோமா கொஞ்சம் நில்லு வந்துடறேன்” என்றபடி உள்ளே சென்றேன். பிள்ளைகள் அவனோடு பாம்புபற்றி புரியாத பாஷையில் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்

‘இந்தா வச்சுக்க” ஒரு நூறு ரூபாய் நோட்டை அவனிடம் நீட்டினேன்.

‘அட போங்க சார் இதுக்குக் கூட கூலி குடுப்பீங்களா”? வாங்க மறுத்து விட்டு கிளம்பினான். மாலை என்னோடு நடைபயிற்சிக்கு வந்திருந்த ராமநாதனிடம் இதைச் சொன்னேன்.

‘ஏன் என்னை நீங்க உதவிக்கு கூப்பிட்டுருகலாமே! எனக்கு இந்த பாம்பு கீம்பெல்லாம் பயமே கிடையாது நானே அடிச்சிருப்பேன்”. விடாக் கண்டனாகப் பேசினார். வீட்டுக்குள்ள எல்லாம் அவங்களை அடிக்கடி சேர்க்குறிங்க! சாப்பாடு கொடுக்கறீங்க அது அவ்வளவு நல்லதில்ல கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க நான் சொல்லறதை சொல்லிட்டேன்” என்றார்.

ஒரு நாள், வேலை நேரத்தில் வெளிப்பூச்சு பூசிக் கொண்டிருக்கும் போது, சாரம் முறிந்து முதல் தளத்திலிருந்து சோமா கீழே விழுந்து விட்டான். கீழே சிமெண்ட் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்ததின் மேல் விழுந்ததால்; தப்பிவிட்டான். ஆனாலும் கை பிசகிக் கொண்டது. வலியால் துடித்தவனை அரைநாள் லீவு கொடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.

‘இதெல்லாம் இந்த வேலையில சகஜம் சார் தைலம் பூசி உருவி விட்டா சரியா போகப் போகுது. இதுக்கு போய் அந்த பையனுக்கு லீவு கொடுத்து அனுப்பி வச்சிருக்கீங்க” என்று உள்@ர் தொழிலாளி ஒருவர் சலிப்போடு கேட்டார்.

‘இருக்கட்டும்பா உங்க பொழப்புக்குக் கையும் காலுந்தான் முக்கியம். ஏதாவது எலும்பு முறிவு அது இதுன்னு இருந்துதுன்னா என்ன செய்யறது”. நான் சோமா மேல் அக்கறை காட்டியது ராமநாதனைப்; போல் உள்@ர் தொழிலாளர்களுக்கும் கடுப்பாக இருக்கிறதோ?

சோமா இல்லாத இந்த நேரம் தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தேன். அவனோடு எப்போதும் ஒன்றாக சுற்றும் கிருஷ்ணாவை தனியாக அழைத்தேன்.

‘ அவன் யார்கிட்ட இப்படி ராத்திரியும் பகலுமா போனுல பேசறான்.அவங்க அப்பா அம்மாகிட்டேயா”

‘அவனுக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் கிடையாது சார். சின்ன வயசிலயே செத்துப் போயிட்டாங்க, ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். அவனும் கல்யாணம் முடிஞ்ச கையோடு பொண்டாட்டி ஊரிலேயே தங்கிட்டான். அவன் கூடயெல்லாம் எப்பவாச்சம் தான் பேசுவான்.

‘அப்ப இது யாரு”

‘இது எங்க ஊரு பொண்ணு ஒருத்தி, ரெண்டு பேரும் விரும்புறாங்க” தயங்கியபடி கூறினான். ‘அடடே! கதை அப்படி போகுதா!’.

‘ஏன் சார் கேட்குறீங்க”

‘சும்மாதான் நீ போ வேலைய பாரு”

இரவு எட்டு மணியிருக்கும். நாய்க்கு சாப்பாடு வைக்க வாசலுக்கு வந்தேன். குடிசைக்கு சற்று தள்ளி மணல் குவியல் மேல் உட்கார்ந்திருப்பது சோமாவைப் போல் தெரிந்தது. அவனேதான். கவசகுண்டலம் போல் அவன் காதோடு ஒட்டியிருந்த கைபேசியின் பின்புறமாக சிக்னல் வாங்கும் ஸ்டிக்கர் மினுக் மினுக்கென ஒளிர்ந்து கொண்டிருந்தது. பேச்சுவாக்கில் நான் வாசலில் நின்று கொண்டிருப்பதை கவனித்தான் போலும். எழுந்து நின்றபடி பேசத் தொடங்கினான். நான் அவனை கவனித்துக் கொண்டிருப்பதை, உணர்ந்ததும் கைபேசியை அணைப்பது தெரிந்தது. என்னை நோக்கி நடந்து வந்தான்.

‘என்ன சார் வாசல்ல நிக்கிறீங்க”

‘சாப்பாடு மீந்திருச்சு அதான் நாய்க்குப் போட வந்தேன். நீ என்ன டாக்டர்கிட்ட போய் வந்தியா. கை எப்படியிருக்குது”.

‘ஒண்ணுமில்ல சார் எலும்புல எதுவும் அடியில்லேன்னு சொல்லிட்டாங்க. தடவுறதற்கு மருந்து கொடுத்திருக்காங்க. இப்ப வலி பரவாயில்ல”.

‘காலைல ஏழு மணிக்கெல்லாம் கம்பி லோடு வந்திடும். கொஞ்சம் கிட்ட நின்னு இறக்குங்கப்பா போன தடவ மாதிரி ஆயிடக் கூடாது”.

‘பார்த்துக்கறோம் சார்” விடைபெற முயன்றவனை நிறுத்தினேன்.

‘நீ வாங்கற சம்பளம் மொத்தமும் செல்லுக்கே சரியாப் போயிடும் போல”

அவனுடைய தனிப்பட்ட விஷயத்தை நான் கேட்டுத் தெரிந்து கொண்டதை பற்றி கிருஷ்ணா சொல்லியிருக்க வேண்டும். அவன் முகத்தில் வெட்கம் படர்வது இருட்டிலும் நன்றாகத் தெரிந்தது.

‘இல்ல சார் அது நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு தான். என்னை மாதிரியே அதுக்கும் யாருங்கிடையாது. வயசான பாட்டி மட்டும்தான். அன்னன்னிக்கு இங்கு நடக்கறத அதுக்கிட்டே சொல்லிடுவேன். இப்ப கையில அடிப்பட்டுருக்குன்னு சொன்னதும் அழுகுது. அதுதான் சமாதானப் படுத்திக்கிட்டிருந்தேன்”.

‘கல்யாணம் எப்போ”

பதில் சொல்வதற்கு பதிலாக புன்னகைத்தான்.

‘பேசாம இங்கே கூட்டீட்டு வந்திருய்யா பாரு. நாங்க எல்லாம் சேர்ந்து உனக்கு ஜம்முன்னு நடத்தி வைக்கிறோம்”.

நான் கிண்டல் செய்வதாக அவன் நினைத்திருக்கக் கூடும். மீண்டும் புன்சிரிப்பு உதிர்த்தான்.

‘சரி காலைல பார்க்கலாம். போய் படுப்பா” அனுப்பி வைத்தேன். பாதி தொலைவு சென்றவன், மீண்டும் கைபேசியை காதில் வைத்துக் கொண்டான்.

‘ஓ! எனக்காகத்தான் கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறான் போலும்’. தூங்கும் வரைக்கும் மனைவியிடம் அந்த பையனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

‘கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திடச் சொல்லுங்க. நம்ம வீட்ல பின்னாடி ஒரு ஷெட் மாதிரி போட்டுக் கொடுத்திடலாம். அந்த பெண்ணை நான் கூடமாட ஒத்தாசைக்கு வச்சுக்கிறேன்”. மனைவி தன் யோசனையை சொன்னாள். கட்டிட வேலை செய்பவர்களின் மனைவிகள், வீட்டுவேலை செய்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற பொதுபுத்தி!

‘சோமா இதுக்கு சம்மதிக்க வேணாமா அட அவன விடு! ராமநாதன்? நாம சோமாவையும், அவன் சம்சாரத்தையும் வீட்டுக்குள்ள சேர்த்தோம்னு வை, அந்த மனுஷன் கடுப்புல வீட்டைக் காலி பண்ணிட்டு போனாலும் போயிடுவார்”.

‘ஏன்; அப்படி”

‘அது என்னவோ? அவருக்கு இந்தப் பையனைப் பார்த்தா ஆகவே ஆகாது”

சிலருக்கு சிலரை காரணமில்லாமல் பிடிக்கும். சிலருக்கு சிலரைக் கண்டால் காரணமில்லாமல் பிடிக்காமல் போய்விடும். ராமநாதனுக்கு பொதுவாகவே, வடமாநில ஆட்களைப் பிடிக்காது. ‘சப்பாத்திக்கும், சாம்பாருக்கும் காம்பினேஷன் ஒத்தே வராது’ என்று ஆணித்தரமாக விவாதம் செய்பவர், அவர்.

அடுத்த சில நாட்களில் ஆயுத பூஜை வந்தது. எங்கள் கம்பெனி களை கட்டியது. அன்று அலுவலகத்தை சுத்தம் செய்வது, அலங்கரிப்பது என வேலை பார்க்கும் பையன்கள் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். காலையிலேயே பூஜைகள் முடித்து எல்லோருக்கும் புதுத்துணியும், இனிப்பும் கொடுத்து அனுப்பி வைத்தோம்.

எல்லோரும் ஏக மகிழ்ச்சியில் கிளம்பி போனர்கள். வீட்டில் மதிய விருந்து முடித்து விட்டு குழந்தைகள் வெளியே பூப்பந்து விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தேன். குடிசைகளின் ஓலை கதவுகள் மூடியிருப்பது தெரிந்தது. அந்த பையன்கள் ஏதாச்சும் சினிமாவிற்கு போயிருப்பார்கள். பொதுவாக விடுமுறை நாட்களில் குடிசையை விட்டு வெளியே வரமாட்டார்கள்.வானொலியில் இந்திப் பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டபடி ஒய்வெடுப்பார்கள். இன்று ஆயுத பூஜையை கொண்டாட கிளம்பிவிட்டார்கள் போலும்.

சாயங்காலம் மகன்கள் வெளியே அழைத்துப் போகும்படி கேட்க, குடும்பத்தோடு அருகிலிருக்கும் பூங்காவிற்கு சென்றோம். இரவு உணவும் சாப்பிட்டு விட்டு வீடு திரும்ப பத்து மணி ஆகிவிட்டது. ‘அதென்ன வாசலில் கூட்டம்?’ காரை சற்று வேகப்படுத்தினேன். வீட்டு வாசலில் அந்த குடிசை இளைஞர்கள் தான் இந்த நேரத்தில் ஏன் இங்கு நிற்கிறார்கள். அருகில் சென்றேன்.

‘என்ன கிருஷ்ணா இந்த நேரம்?” அவர்கள் எல்லோர் கண்ணிலும் கலவரம் தெரிந்தது. கிருஷ்ணா பதற்றதோடுப் பேசினான்.

‘ சார் சாயங்காலம் எல்லோரும் பக்கத்தில இருக்கிற ஏரிக்கு குளிக்கப்போனோம். சோமாவும், நவ்னீத்தும் கொஞ்சம் உள்ள இறங்கி குளிச்சிட்டு இருந்தாங்க. நாங்க பாக்கும்போது அவங்கள காணோம். என்ன ஆனாங்க தெரியல. நல்லா தேடிப்பார்த்துட்டோம்”.

அப்போதுதான் கவனித்N;தன்.அவர்கள் ஆறு பேரில் நான்கு பேர் மட்டும் தான் அங்கிருப்பதை. எனக்கு பகீர் என்றது. இரவு நேரம் வேறு என்ன செய்வது. ராமநாதன் வீட்டில் விளக்கு எரிவது தெரிந்தது. அலைபேசியில் அவரை கூப்பிட்டேன். வெளியே வந்தார். நடந்ததை சொன்னேன்.

‘போலீஸ்ல கம்ளயிண்ட் குடுப்போம். இப்ப வேற என்ன செய்ய முடியும்?” அவர் குரலில் எந்த உணர்ச்சியுமில்லை. எனக்கு நெஞ்சு படபடத்தது. தாமதிக்க, தாமதிக்க அந்த பையன்களை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ? தீயணைப்புப்படைக்கு தகவல் தெரிவித்தேன். மனைவியிடம் விவரங்களை சொல்லிவிட்டு அந்த பையன்களை என் காரிலேயே ஏற்றிக் கொண்டு கிளம்பினேன். என்ன நினைத்தாரோ ராமநாதன் “நானும் வரேன் விவேக்” என்றபடி ஏறிக்கொண்டார்.

‘எத்தனை மணிக்கு இப்படி ஆச்சு கிருஷ்ணா”

‘ஆறு மணியிருக்கும்”

‘ இப்ப மணி பத்தேகால் கிட்டத்தட்ட நாலு மணி நேரமாச்சு ஒரு வேளை வேற எங்கேயாவது நீந்திக் கரையேறி இருப்பாங்களோ”

அரை மணி நேர பதற்ற பயணத்திற்கு பின் அந்த ஏரிக்கரையை அடைந்தோம். வேகமாக இறங்கி ஓடிய கிருஷ்ணா அவர்கள் குளித்த இடத்தை சுட்டிக்காட்டினான். கையில் இருந்த டார்ச்சை அடித்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தேடிப்பார்த்தேன். அந்த இருட்டும,; நிசப்தத்தை கிழிக்கும் தவளைகளின் சப்தமும் ஏதோ அகால அறிவிப்பாக மனதைப் பிசைந்தது. செய்வது அறியாது நின்றிருந்தோம். பதினோறு மணியிருக்கும் தீயணைப்பு வண்டி வந்து சேர்ந்தது. அந்த பையன்கள் எல்லா விவரமும் கூறினார்கள்.

‘நாலு மணி நேரமாச்சுன்னு சொல்றீங்க உயிரோடு இருக்கதற்கான வாய்ப்பு குறைவுதான். பார்க்கிறோம்”

பெரிய பெரிய மின்விளக்குகளை ஒளிர விட்டு தேடும் பணியை தொடங்கினார்கள். சோமாவும், நவ்னீத்தும் தீயணைப்புப் படைக்கு ரொம்ப நேரம் வேலை கொடுக்கவில்லை. ஒரு மணி அளவில் இரண்டு பேரையும் கரையில் தூக்கி வந்து கிடத்தினார்கள், சடலமாக. மற்ற யைன்கள் ஒடிச் சென்று ஆளுக்கொருவராக மடியில் வைத்துக் கொண்டு அழுது அரற்ற தொடங்கினார்கள். எனக்கு துக்கம் தொண்டையை நெரித்தது. கண்களில் நீர் கட்டியது. ‘சே!’ இப்படி ஆகியிருக்கக் கூடாது. வாழ்க்கையின் மீது ஏராளமான ஆசையோடு ஊர் விட்டு ஊர் வந்தாலும் உற்சாகமாக உழைத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஏன் இப்படியொரு கோர முடிவு. ராமநாதனும் கலங்கி போய் மோவாயில் கை வைத்தபடி தலை குனிந்து நின்றிருந்தார்.

காவல்துறைக்குப் புகார் சென்றது. நிலைமையை சமாளித்து இருப்பிடம் வருவதற்குள் விடிந்தே விட்டிருந்தது. மனம் இரும்பாய்க்; கனத்தது. சோமாவின் சிரித்த முகமும், சுறுசுறுப்பும் அவன் எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்து கொடுத்த உதவிகள் எல்லாமும் கண்களில் ஓடியது. செய்தி கேள்விபட்டதிலிருந்து மனைவியும், பிள்ளைகளும் கூட சோகமாய் இருந்தார்கள். காவல்துறை நடைமுறைகளை எல்லாம் நானும், ராமநாதனும் முன்னின்று முடித்தோம். எங்கள் உயர் அதிகாரியும், மற்ற அலுவலர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கிருஷ்ணாவிடம் விசாரித்தேன்.

‘ஊருக்கு சொன்னீங்களாப்பா”

‘காலையிலேயே சொல்லிட்டோம் சார்”

‘எப்ப வர்றாங்களாம்”

‘நவ்னீத்தோட அப்பா மட்டும் நாளைக்கு வந்திடுவாரு” கம்மிய குரலில் சொன்னான்.

‘சோமா”?

‘ப்ச்! அவங்க அண்ணங்கிட்ட பேசினோம், அந்த ஆளு இவ்வளவு தூரம் வரமுடியாது பணம் இல்லை அங்கேயே எல்லாம் முடிச்சிடுங்கன்னு சொல்லிட்டான் சார்.”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உறவுகளின் மதிப்பு அவ்வளவுதானா, பாழும் பணம் தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது போலும்.

‘சரி அந்தப் பொண்ணு?”

‘அது என்ன சார் செய்யும் கிராமத்தை விட்டு வெளியூருக்குக் கூட போகாத பொண்ணு, தகவல் சொன்னதும் கதறி அழுதது போனில் கேட்டுச்சு. அவ்வளவுதான். நாம பார்த்துக்க வேண்டியதுதான் சார்”.

அடுத்த நாள் காலை பதினோரு மணியளவில் நவ்னீத்தின் தந்தை வந்து சேர்ந்தார். ஒரு மணிக்கெல்லாம் அரசு மருத்துவ மனையிலிருந்து உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நவ்னீத்தின் தந்தையும், மகனின் உடலை ஊருக்கு எடுத்துச் செல்ல மறுத்து விட்டார்.

‘அங்க எடுத்துட்டு போய் என்ன செய்யப்போறேன் அவங்க அம்மா கூட கிடையாது. அவ்வளவு பணமும் எங்கிட்ட இல்ல. சோமா கூடவே இவனையும் இங்கேயே புதைச்சிடுங்க”

உடைந்த குரலில் சொன்னார். இரண்டு பேருக்கும் ஏரிக்கரை அருகிலிருந்த இடுகாட்டில் இறுதிச்சடங்குகள் ஏற்பாடு செய்தோம். நவ்னீத்துக்கு அவன் அப்பாவும், சோமாவுக்கு கிருஷ்ணாவும் எல்லாம் செய்தார்கள். கிருஷ்ணா என்னை அருகில் கூப்பிட்டான்.

‘நீங்களும் வாங்க சார் அவன் உங்கள தங் கூட பிறந்த அண்ணனாத்தான் நினைச்சிருந்தான்.”

அவன் அப்படி சொல்லியதும் எனக்கு உடல் நடுங்கியது. குரலெடுத்து அழத் தொடங்கினேன்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “வடக்கத்திப் பையன்

  1. Good Story. We have to buy north indian peoples for lesser wages to complete our jobs but we always in an opinion that they were thieves or wrong behavious persons.

    They have to come for a work with other states for their foods and basis needs.
    If we feel our persons( tamil peoples ) life style in gulf or other african countries, they reliase and give proper respects to them also.

    Nanja thotta kathi.

    Best regards to sirukathigam.com

    regards

    Ramasubramaniam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *