கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 72,532 
 

அந்த ரோட்டுக்கு பெயர் ‘மார்ஷல் ரோடு’

எக்மோரில் உள்ளது. இப்பொழுது அந்த ரோட்டுக்கு பெயர் வேறு. ராஜரத்தினம் ஸ்டேடியம் வந்தபின் அந்த ரோட்டுக்கும், அந்த பெயரே நிலைத்துவிட்டது.

வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அந்த ரோட்டில் இருந்தது என நண்பன் ரவி கூற கேட்டு அங்கு சென்றேன். அவன் அந்த தகவலை என்னிடன் கூறியதற்கு காரணம் உள்ளது. நான் வானொலித் தொடர்பான எதைப் பார்த்தாலும் என்னிடம் கூறு என்று கூறியிருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் அவனிடம் கூறியது பத்திரிகைகளில் வானொலித் தொடர்பான தகவல்களை பார்த்தால் கூறு என்று கூறியிருந்தேன். ஆனால் அவன் அந்த கட்டடத்தை பற்றியும் கூறியது ஒரு விதத்தில் மகிழ்ச்சி தான்.

பத்திரிகைகளில், வானொலித் தொடர்பான தகவல்கள் சமீபகாலமாக அவ்வளவாக வெளிவருவதில்லை. நாங்கள் நடத்திய ‘சர்வதேச வானொலி’ மாத இதழில் ‘பத்திரிகைகளில் வானொலி’ என்று ஒரு பகுதியை எழுதி வந்தோம். அந்த பகுதிக்காக ஒருவரே அனைத்து நாளிதழ், வார மற்றும் மாத இதழ்களை பார்க்க முடியாது என்பதால் ரவி போன்ற நண்பர்களிடம் வானொலித் தொடர்பான தகவல்களை திரட்டி தருமாறு கூறுவதுண்டு.

ஆனால் இப்பொழுதெல்லாம் வானொலித் தொடர்பான செய்தி என்றால், அது தனியார் பண்பலை வானொலிகளைப் பற்றிய செய்திகளை மட்டுமே. பொது துறை வானொலிகள் பற்றிய தகவல்கள் வெளிவருவது அறிதாகிவிட்டது. சமீப காலமாக நமது பிரதமர் வானொலியில் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றத் தொடங்கிய பிறகு, பத்திரிகைகளில் தொடர்ந்து ‘மான் கி பாத்’ செய்திகள் வந்தபடி உள்ளது.

தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் வானொலி தான் மிக முக்கியமான தொடர்பு சாதனமாக இருந்தது. ‘அகில இந்திய வானொலி’ இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட போதே சென்னையிலும் திருச்சியிலும் ஒரு சேர தொடங்கப்பட்டது என்றான் ரவி. ரவி ஒரு வானொலி பைத்தியம். எப்போழுது பார்த்தாலும் அதனை என்னோடு பகிர்ந்து கொள்வான். அப்படித்தான் இந்தத் தகவலும் அவனுக்கு கிடைத்திருந்தது.

நீண்ட நாட்களாக மார்ஷல் ரோட்டில் சுதந்திரத்தின் போது கட்டப்பட்ட அகில இந்திய வானொலியின் கட்டடம் இடிக்கப்படவில்லை. அது இன்னும் அப்படியே இருக்கிறது என்றான். ஆனால் என்னால் அதனை நம்ப முடியவில்லை. காரணம், அந்த கட்டடத்தின் பெயரே ‘நேநூக் பில்டிங்’. அது இடிக்கப்பட்டுவிட்டதைப் பற்றி பல்வேறு செய்திகள், பத்திரிகைகளில் வந்ததை நானே படித்திருக்கிறேன். ஆனால் நெருப்பில்லாமல் புகையாதே, வேறு ஏதேனும் ஒரு வரலாற்று கதை அதனைத் தேடிப் போகும் போது கிடைக்கலாம் என்ற கோணத்தில் இறங்கினேன்.

ரவி அப்படிச் சொன்னாலும் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆதனால், நான் அந்த கட்டடத்தினை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க திட்டமிட்டேன். அதனால் ரவியிடம் அது பற்றிய விபரங்களை திரட்டச் சொன்னேன். அவனும் மிக ஆர்வமாக களத்தில் இறங்கினான். எனக்கும் இருப்பு கொள்ளவில்லை.

அவனை மீண்டும் மொபைலில் தொடர்புகொண்டு ‘நீ சொல்ற அந்த கட்டட எங்க இருக்கு?’ என்று கேட்டேன். அவன் ‘அது எக்மோர் மியூசியத்திற்கு பின்னாள இருக்கு’ என்றான்.

எக்மோரில் உள்ள மியூசியத்திற்கு செல்பவர்கள், பின்புறம் உள்ள வௌவால் மரத்தினை பார்த்துவிட்டு அப்படியே திரும்பியிருப்போம். அங்குள்ள வௌவால்கள் அனைத்தும் மிகப்பெரியவை. சென்னையில் இவ்வளவு வௌவால்களை ஒரு சேர பார்ப்பது இயலாத காரியம். அவைகள் அனைத்தும் பல நூறு கிலோ மீட்டர்கள் சென்று உணவு சேகரித்து வரும். இந்த வௌவால்களை பார்த்த போது எனக்கு ஸ்ரீவைகுண்டம் அருகில் தாமிரபரணி ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஒரு பெரிய ஆலமரத்தில் பல நூறு வௌவால்கள் தொங்கிக் கொண்டு இருக்கும். அவை உணவுக்காக இலங்கைக்கு சென்று வருகிறது என்று அந்த பகுதி மக்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அது தான் இங்கு வௌவால்களைப் பார்த்த போதும் ஞாபகம் வந்தது.

வௌவால்களுக்கும் ஒலி அலைகளுக்கும் ஒரு தொடர்புள்ளது. அவை மீயொலி எழுப்புபவை. “மீயொலி என்றால் என்ன?” வானொலி அலைகளில் ஆர்வம் கொண்ட ரவிக்கும் அதனை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தபடியால் இதே கேள்வியை ஒரு முறை கேட்டான். நானும் சற்று விரிவாக அறிந்தகொள்ள வேண்டி ஒரு வானொலி நிலையத்தின் அறிவியல் நிகழ்ச்சிக்கு எழுதிக் கேட்டோம்.

நாங்கள் எப்பொழுது இது போன்ற சந்தேகங்கள் வந்தாலும் நாடும் வானொலி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சிற்றலையில் ஒலிபரப்பி வந்த ‘வெரித்தாஸ் தமிழ்’ வானொலி தான். இந்த வானொலியில் நேயர்களுக்காக ‘கேள்வியும் பதிலும்’ என்று ஒரு நிகழ்ச்சி, அதில் நேயர்களுக்கு எழும் சந்தேகங்களை எழுதி அனுப்பினால், அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பதில் தருவர். அப்படித்தான், இந்த மீயொலி கேள்வியையும் எழுதி அனுப்பி கேட்டேன். அவர்கள் கூறிய பதிலை தான் ரவியிடம் கூறினேன்.

“‘மீயொலி’ என்பதை ஆங்கிலத்தில் கூறினால், அட இது தானா அது என்று ஆச்சரியமாக இருக்கும். ‘அல்ட்ரா’ சவுண்ட் என்று இதனை கூறுவர். பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கர்பம் தரித்திருக்கும் தாய்மார்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிந்துகொள்வதற்கு இது பயன்படுகிறது”. இதனை கூறிய போது, அட என்று ஆச்சர்யம் கொண்டான் ரவி.

“மீயொலி என்பது ஒலியின் அதிர்வெண் 20,000 டெசிபில்க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் கூறலாம். நம்மைப் போன்ற மனிதர்களால் 20 முதல் 20,000 டெசிபில் திறன் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்க முடியும். ஆனால் நாய்கள், டால்பின்கள், வௌவால்கள் ஆகியவற்றால் மீயொலியை எழுப்பவும், கேட்கவும் முடியும்” என்றேன்.

ஆச்சரியமாக பார்த்த ரவியிடம் தொடர்ந்தேன், “பெரியவங்கள விட குழந்தைகளுக்கு உயர் அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளைக் கேட்க முடியும். வௌவால்கள் இரவு நேரங்கள்ல பறந்து பயணம் செய்யும் போது அது உண்டாக்குற மீயொலிகள் பிற பொருட்கள்ல பட்டு எதிரொலிக்கும் அளவை உணர்ந்துக்கிட்டே தன் திசையை நிர்ணயிக்குது” என்றது தான் தாமதம், உடனே ரவி கேட்ட முதல் கேள்வி, “ வானொலி அலைகள் எந்த வகையானது?” என்பது தான். “வானொலி அலைகள் மின் காந்த அலைகளாக வான்வெளியில் பயணிக்குது” என்றேன்.

“எக்மோர் அருங்காட்சியகத்திற்கு பின்னாள ஒரு வௌவால் தங்குர மரம் இருக்குது. அந்த மரத்திற்கு பின்னாள ஒரு பழைய கட்டடம் இருக்குது. இப்ப அந்த கட்டடம் ஒரு அரசு ஆபீசா செயல்பட்டுட்டு இருக்குது. அந்த கட்டடம் தா ஒரு காலகட்டத்துல அகில இந்திய வானொலியாக செயல்பட்டது” என்றான் ரவி. என்னால் அதனை நம்பமுடியவில்லை. காரணம், அந்த கட்டடடம் இப்பொழுதும் இருக்கும் பட்சத்தில், அது தான் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இருந்த வானொலி கட்டடங்களிலேயே பழமையான இன்றைக்கும் இருக்குற வானொலி கட்டடம் ஆகும்.

அந்த கட்டடத்தினை பார்க்க செல்லும் முன் அது தொடர்பா வந்த செய்திகளை எல்லால் தேடிப்பிடித்து பார்க்க தொடங்கினேன். அந்த கட்டடத்தின் புகைப்படங்கள் இன்றுள்ள அகில இந்திய வானொலியின் வரவேற்பறையில் நீண்ட நாட்களாக வைத்திருந்தனர். ஆங்கில தி இந்து நாளிதழில் திரு. முத்தையா அவர்கள் இது பற்றி எழுதியுள்ளார். ‘மெட்ராஸ் மியூசிங்ஸில்’ ஒரு கட்டுரையும் வந்திருந்ததைப் பார்த்துள்ளேன். அவைகளை எல்லாம் எனது சேகரிப்பில் இருந்து எடுத்துப் பார்த்து மீண்டும் உறுதி செய்து கொண்டேன்.

“யார் உனக்கு அந்த கட்டடந்தா பழைய வானொலி இருந்த இடம்னு சொன்னது” என்று மொபைல் வழியாக அழைத்து கேட்டேன். அதே வானொலியில் பணியாற்றிய முன்னாள் வானொலிப் பணியாளர் ஒருவர் தான் தனக்கு கூறியதாக கூறினான். அப்படியானால் அதிலும் ஒரு நம்பகத்தன்மை இருக்கத் தான் செய்கிறது. எனவே எனது ஆர்வம் இன்னும் இரட்டிப்பானது.

ஒரு நாள் எக்மோர் சென்று பார்ப்பது என்று தீர்மானித்தோம். அந்த நாளும் வந்தது. கேமரா சகிதமாக சென்று பார்த்த போது, அது பிரம்மிப்பாகவே இருந்தது. அகில இந்திய வானொலியின் நாநூக் பில்டிங் எப்படி இருந்ததோ, அதே போன்ற ஒரு லுக்கை அது கொடுத்தது. காரணம், அதே வண்ணம், அதே போன்ற தூண்கள். அதனால் தான் அந்த கட்டடம் தான் வானொலி இருந்த இடமாக இருந்திருக்க வேண்டும் என்ற ஐயம் உருவானது.

வெளியில் நுழைவாயிலின் எதிர் புறம் ஒரு மார்பளவு சிலை, வராந்தாவில் இரண்டு பெரிய தூண்கள். மேலே ஒரு சில பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டது. சுண்ணாம்பு பூச்சு ஆங்காங்கே செதில் செதிலாக பிய்ந்து விழுந்திருந்தது. அவ்வளவாக பராமரிப்பு இல்லை என்று தான் தோன்றியது.

ரவியைப் பார்த்தேன், “என்ன செய்யலாம்?” என்றேன்.

“உள்ள போலாம்”

“யாராவது கேட்டா, என்ன சொல்ரது?”

“பழைய வானொலி நிலையம் செயல்பட்ட இடம்னு தெரிஞ்சு, பார்க்க வந்தோம்னு சொல்லலா” என்று திட்டமிட்டு உள்ளே நுழைந்தோம்.

புதியவர்களை பார்த்த அலுவலர்கள் சந்தேகப் பார்வையை வீசினர். நாங்களும் புதிய இடத்திற்கே உரிய நடையில் உள்ளே நுழைந்து, அங்கு பொறுப்பாளராக இருந்தவரிடம், விபரத்தினை கூறினோம். அவருக்கும் ஆச்சரியம். யாரோ சொல்ல தானும் இதனை கேட்டுள்ளதாக கூறினார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து ஒரு குடும்பம் அங்கு வந்ததாகவும். இந்த பங்களாவில் தான் தனது கொள்ளுத்தாத்தா பணியாற்றியதாகவும் கூறினார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இது பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டி பேச்சு கொடுத்தேன்.

“ஒரு காலத்தில் இந்த அருங்காட்சியகத்தின் கியூரேட்டர் தங்கியிருந்த பங்களாவாக இருந்துச்சு இது” என்றார் பொறுப்பாளர். இப்பொழுது எனக்கு மற்றும் ஒரு சந்தேகம் எழுந்தது. அப்படியெனில் இது தங்கும் இடமாகவும் இருந்திருக்கிறது. கியூரேட்டர் தங்கியது வானொலி செயல்பட்டதற்கு முன்பா? அல்லது பின்பா?. அதை அறிந்து கொள்ளது ஒன்றும் சிரமம் இல்லை தான். அதற்கு முன் அந்த பங்களாவை ஒரு சுற்று பார்த்துவிடத் தீர்மானித்ததேன்.

கீழ் தளம் ஒரு பெரிய ஹாலாக இருந்தது. இப்பொழுது அதனை அலுவலகத்திற்கு தகுந்தவாறு மாற்றி அமைத்திருந்தனர். ஒரு அரசு அலுவலகத்தின் லுக்கை அது கொடுத்தது. முதல் தளத்திற்கு செல்ல வேண்டுமாயின் அந்த ஹாலுக்கு பின்புறம் உள்ள மாடிப்படிகளைத் தான் பயன்படுத்த வேண்டும்.

மரத்தாலான படிகள். அந்த படிகளில் ஏறும் போது டொக், டொக் என சத்தம் வரும். அந்த மரத்துப்படிகள் மேல் சணலால் ஆன சிகப்பு கம்பளத்தினை விரித்திருந்தனர். அதனால் கொஞ்சம் சத்தம் குறைவாகவே வந்தது. அந்தப் படிகளில் யார் ஏறினாலும், ஏதோ பழைய பங்களாவில் நுழைந்த ஒரு உணர்வைக் கொடுக்கும்.

மாடிப்படிகளில் ஏறிய போது, அங்கு பணியாற்றிக் கொண்டு இருக்கும் ப்யூன் என் கையில் இருக்கும் கேமராவைப் பார்த்துவிட்டார். “எதற்கு வீடியோ எடுக்கிறீர்கள்” என்று கேட்டார். காரணத்தை சொன்னேன். அவருக்கு நான் சொன்னதில் திருப்பி ஏற்படவில்லை போலும். சந்தேக பார்வையோடே சென்றார். ஆனாலும் நான் கேமராவை நிறுத்தவில்லை. காரணம், அடுத்த முறை இது போன்று உள்ளே வந்து வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை என்றால், எல்லாம் வீணாகிவிடும் என்று நினைத்திருந்தேன்.

மேலும், இது வானொலியாக செயல்பட்ட கட்டடம் தான் என்ற தீர்மானத்திற்கும் வந்திருந்தபடியால், மூலை முடுக்குகள் அனைத்தினையும் முடிந்தவரையில் காட்சியாக பதிவு செய்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

மேல்தளத்தில் பார்த்த காட்சி இன்னும் ஆர்வத்தினைத் தூண்டியது. அதற்கு காரணம் அங்கு சிறிய அறைகள் பல இருந்தன. அவைகள் ஒவ்வொன்னும் ஒரு ஸ்டுடியோவாக இருந்திருக்கலாம் என முடிவு செய்து கொண்டேன். நடுவில் ஒரு பெரிய ஹால், அதனை சுற்றிலும் இரண்டு புறமும் சிறிய அறைகள். அவை அனைத்தும், இப்பொழுது அலுலக அதிகாரிகள் அமரும் இடங்களாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தன.

மேல் தளத்தில் ஒரு அறையில் இருந்த ஒரு பெண் அதிகாரி கேட்டார், “எதற்காக இங்கு வந்துதிருக்கீங்க?” என்று.

“சுதந்திர போராட்ட காலத்துல இங்க தா வானொலி நிலைய செயல்பட்டுச்சு”

“அது எப்படி உங்களுக்கு தெரியும்?”

“சொன்னாங்க”

“யார் சொன்னாங்க?”

என்னிடம் இந்த கேள்விக்கு பதில் இல்லை. சற்று யோசித்தேன். ஆது தானே? யார் சொன்னார்கள்? சொன்னவருக்கு எப்படித் தெரியும்? அவருக்கு சொன்னவர் எதன் அடிப்படையில் சொன்னார்! என இப்படி பல கேள்விகள். இப்படி யோசித்து கொண்டு இருக்கும் போதே,

“உங்களைத் தா கேட்கிறே” என்றார்.

“வானொலி நிலையத்தில சொன்னாங்க” என்று கூறி, அவர் கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன். அதன் பின் அவர் கூறியது தான் எனக்கும் ரவிக்கும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

நாங்கள் தேடி சென்ற இடம் சரியானதாக இருக்க வாய்ப்புள்ளதாக தீர்மானித்தோம். அவர் சொன்னார், “இங்க நான் சொல்ரத யாரும் நம்ப மாட்டேன்றாங்க” என்றார்.

“ஏன்?”

“முதல்ல உட்காருங்க, இத விரிவாக சொல்லனு” அமர்ந்தோம்.

“கொஞ்ச நாளாவே எனக்கு ரேடியோ பாடராப்ல சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. ரேடியோவுல அறிவிப்பு சொல்ராப்பிடியும் அப்பப்ப கேட்குது. நானும் மொதல்ல அத பெருசா எடுத்துக்கில. கொஞ்ச நாள்ல அதுவே சுவாரஷ்யமா இருந்ததால நானும் தொடர்ந்து அந்த ரேடியோவ கேட்க ஆரம்பிச்சுட்டே.”

“கொஞ்ச நாள்ல இந்த ஆபிசுல இருக்கரவங்க, என்ன ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அது ஏன்னு எனக்கு மொதல்ல தெரியல, அப்புறந்தா தெரிஞ்சுது, நா யாராச்சும் வந்து கதவ தட்டுணா கூட ஒரு ரெஸ்பான்சும் பன்னமா இருந்திருக்கிறே, கத தொறந்து பாத்தவங்களுக்கு ஒரே அதிர்ச்சி. நா பாட்டுல கண்ண மூடிட்டு தலைய அசச்சு, எனக்கு மட்டு கேட்ட பாட்ட ரசிச்சிட்டு இருந்திருக்க.”

“இந்த விசயத்த மேலதிகாரிங்க கிட்ட கொண்டு போயிட்டாங்க. அவரும் என்ன விசாரிச்சார், எனக்கு ஏற்பட்ட எக்ஸ்பீரியன்ச சொன்னே. அவருக்கு நா என்ன சொல்ல வர்ரேன்னு புரியல. கொஞ்ச நாள்ல என்ன, இந்த ஆபீ்ஸ்ல யாரும் கண்டுக்கல. நானும் அத ஒரு பெரிசா எடுத்துக்கல. இதோ, இப்ப நீங்க ரேடியோன்னு சொல்லி வந்திருக்கீங்க.”

எனக்கு என்ன சொல்வது என்று ஒன்றும் புரியலவில்லை. உடனே ரவி ஆர்வ கோளாற்றில், அவரது பிரச்சனையை உள்வாங்கிக் கொள்ளாமல், “நீங்க கேட்ட ரேடியோல எந்த அறிவிப்பாளர் பேசுனாறு?’’ என்றான். நான் அவனைப் பார்த்து முறைத்தேன்.

“உங்களுக்கு இப்பவும் ரேடியோ கேட்குதா?”

“நீங்க வர்ரதுக்கு முன்னாடி கூட, கேட்டுட்டுதா இருந்தே”

“என்ன கேட்டீங்க?”

“வவ்வால்கள் எழுப்புற மீயொலி பற்றி ‘கேள்வியும் பதிலும்’ நிகழ்ச்சியில யாரே ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருந்தாங்க”

ரவியும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட, பேசாமல் அவரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் அந்த பங்களாவை விட்டு வெளியேறினோம்.

– சென்னை தினம் – கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ரூ 750 பரிசு பெற்ற கதை, 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *