கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 2,926 
 

(2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா ..! அம்மா ….!”

சின்ன மகன் கூப்பிடுவது கேட்டாலும் எதற்காகக் கூப்பிடுகிறான் என்பது புரிந்ததால் அம்மா அலட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

சின்ன மகன் தேடிக்கொண்டு வந்தான்.

“என்னம்மா…! கூப்பிடுறேன் தானே…. கேட்காத மாதிரி இருக்கீங்க….?”

“ஏம்பா …!”

அம்மா குரலில் எரிச்சல்.

“அங்க அப்பா அரைமணி நேரமாக் கத்திக்கிட்டு இருக்காரு…!”

“கத்தட்டும்……! எனக்கும் வேணாம்னு போவுது…… ஒரேயடியா செத்துட்டா தொல்லையே இல்ல. ஓயாம முக்கி மொணங்கி….. செத்தும் சாவாம்….. என்ன வாழ்க்கை …… வாழ்க்கையே வேணாம்னு போச்சு……. ஏன்தான் இப்பிடி உயிர வாங்குறாரோ தெரியல….!” மகன் அம்மாவைப் பார்த்தான்.

அம்மா பக்கம் நியாயம் இருப்பதாகப் பட்டது. அப்பாவுக்கு கை பிடித்து, கால் பிடித்து, ஒண்ணுக்கு, ரெண்டுக்கு கூட்டிச் சென்று குளிப்பாட்டி, உடைமாற்றி, உணவூட்டி…. “பாவம்….. அம்மா” என்று எண்ணிக் கொண்டான் சின்னவன்.

கணவன், மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்பதெல்லாம் சங்கடங்களின் சங்கிலித் தொடர் போல ஒரு சிக்கலா!

துன்பப்படும் கன்றுக் குட்டியைக் கொன்று போடச் சொன்னாராம் காந்தி. இதனைக் ‘கருணைக் கொலை’ என்கிறார்கள். மனிதர்களை அப்படி ‘கருணைக் கொலை’ செய்ய முடியுமா?

முடிந்தால் எத்தனை அம்மாமார்கள், அப்பாமார்கள், பிள்ளை கள் நிம்மதியாக இருக்கலாம்!

அம்மா வார்த்தைகளால் மட்டும்தான் அப்பாவைச் சலித்துக் கொள்கிறாள் என்பது பிள்ளைகளுக்குத் தெரியும்.

ஆற்றாமை எல்லோருக்கும் வருவதுண்டு.

எதிர்பார்க்கும் நேரத்தில் மரணம் வருமாயின் அதில்கூட சந்தோஷம் இருக்கவே செய்யும்.

சிவராம் மரணத்துக்காகக் காத்திருப்பவர்… எதிர்பார்த்திருப்பவர்.

அவரால் மனைவி படும் சிரமங்கள் அவர் அறிந்ததுதான். ஆனால்… அவரால் இன்னும் கொஞ்சம்…. கொஞ்ச நாள் வாழ வேண்டிய தேவை இருக்கிறது.

அம்மாவுக்கும் அது புரியும். பிள்ளைகளுக்கும் அது தெரியும். “அம்மா! அப்பா ஏன் இப்பிடி உயிர கையில பிடிச்சுக்கிட்டு இருக்கார்னு தெரியுமா?”

பிள்ளைகளின் புறுபுறுப்பு இது.

அம்மா மௌனியாகி நிற்பாள்! மௌனம் சம்மதத்துக்கு மட்டும் அறிகுறியல்ல… புரிதலுக்கும் கூட அது அடையாளம்.

சிவராம் சின்ன அறையொன்றுக்குள் முடங்கிப் போய்க் கிடந்தார்.

வீட்டின் அலுவல்கள் எல்லாம் வழமைபோல நடந்து கொண்டு தான் இருந்தன.

‘டீ.வி’, ‘சீடி’ களோடு இரண்டு பையன்கள். மணமுடித்துப் போன அக்கா. அப்பாவுக்கு இறுதிப் போக்குக்கான அனுமதி

கிடைத்து விடும் என்ற அவசரத்தில் அக்கா வந்திருந்தாள். சதா அப்பாவின் பக்கம் எட்டிப் பார்ப்பதும் அடிக்கடி கைத்தொலைபேசி இலக்கங்களை அழுத்துவதும் எந்த அவசரத்துக்காக என்பது புரியவில்லை.

அப்பாவின் கடைசி நிமிடம் வீட்டாருக்கு சந்தோஷமான சங்கதி அல்ல. அதேநேரம் சங்கடமான சமாச்சாரமும் அல்ல. சாவு சராசரி நிகழ்வு என்ற தத்துவப் புரிதலோ அல்லது. அவரவர் நிலையில் வாழ்வின் நிதர்சனத்தை அனுபவிக்கும் பாங்கோ தெரியாது.

குடும்பப் பாசம் என்பது எந்த வகையிலும் அடையாளப்படுத்த முடியாத அனுபவங்களின் சுவாசம்! அவ்வளவுதான்.

சிவராம் தொய்வடைந்து போய்விட்டார். ‘மெய்’, ‘பொய்’ ஆகும் முத்தி நிலையின் அழைப்பாணை எந்த நிமிடத்திலும் வரலாம்.

அவரது முகத்துக்குள் தேங்கிக் கிடக்கும் ஏக்கங்களை எச்சமாக விட்டுவிட்டுப் போக அவர் விரும்பவில்லைப் போலும். முழு மனசும் இப்பொழுது முகத்துக்குள்….

உடம்பும் மனசும் விரோதிகளாகிவிட்ட நிலையில் எதற்காக உமிழ் நீரை ஈரமாக்க முனைகிறார்.

சின்ன சலனத்தில்கூட அவர் எதையோ அடையப்போகும் உற்சாகம் தெரிகிறது. பீளையால் வலை பின்னப்பட்ட விழி இரண்டி லும் இன்னும் மங்கலான ஒளிப் புள்ளி எதற்காக மினுங்குகிறது.

“எங்கப்பா! பெரியவன இன்னும் காணோம்!”

வீட்டுக் கூடத்தில் ஒலித்த அக்காவின் குரல் உச்சரிப்பில் பெரியவன’ மட்டும் பிரித்து உள்வாங்கியதில் நெஞ்சுக்குள் சிலுவை இறங்கியது. உதடு பிரித்து மூடும்போது….. மொழியியலாளர்கள் அவசியமில்லை. வீட்டார் அனைவருக்கும் புரியும் அசைவீடு அது.

சிவராம் பாஸ்’ என்றால் உள்ளூர், வெளியூரில் எல்லாம் பிரசித்தம். நாணயமான மனுஷன். தொழில் பக்தி மிக்கவர். நான்கு பிள்ளைகளோடு மனைவி சகிதம் வாழ்க்கைப் பரிணாமத்தில் விழுதல், எழும்புதலின் அடையாளமாகவும் முயலுதல் முன்னேற்றத் தின் வெளிச்சமாகவும் கொண்டு முன்னுக்கு வந்தவர்.

கட்டிட நிர்மாணப் பணியில் தன்னைச் சாதாரண தொழிலாளி யாக இணைத்துக்கொண்ட சிவராம் தன்னை நம்பிக்கைக்குரிய வனாக ஆக்கிக் கொண்டவர். தானே தொழில் தருநராக மாறி பலருக்கு வேலை வாய்ப்பு அளித்ததோடு பயிற்சிகளையும் வழங்கினார். பொறுப் பெடுக்கும் தொழில் வாய்ப்புக்களை உரிய காலத்தில் நிறைவேற்றிக் கொடுத்ததால் தொழிலுக்கான கட்டளைகள் அதிகரித்தன. பலர் இவருக்காகக் காத்தும் கிடந்தார்கள்.

சிவராம் மூத்த மகன் பெயரில் ‘முரளி கன்ட்ர க்ஷன்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இதனால் அரசுத் துறை சார்ந்த நிர்மாணப் பணிகளையும் அவர் பொறுப்பேற்று நடத்த முடிந்தது. நம்பிக்கையான தன் சகாக்களுக்கு ‘சப் கன்ட்ராக்ட்’ என்ற அடிப்படை யில் வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தார்.

ஆரம்பத்தில் எல்லாமே நல்லபடியாகவே நடந்தன. மூத்தவன் வளர்ந்தான். படிப்பிலும் உயர்ந்தான். நன்கு தேர்ச்சி பெற்ற கட்டிடக் கலைஞன் ஆனான். தனக்கு ஒரு வாரிசாகவும் குடும்பத்துக்கு வருங்கால தலைவனாகவும் அவனை வரித்துக் கொண்டார் சிவராம்.

இந்த நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. அது வெறும் சம்பவம் மட்டுமல்ல. பெரும் சறுக்கல். தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவருக்கு ‘சப் கன்ட்ராக்ட்’ அடிப்படையில் பெரும் செலவிலான கட்டிட நிர்மாணப் பொறுப்பை ஒப்படைத்தார்.

நான்கு மாடிக் கட்டிடம். வேலை முற்றுப் பெறும் தறுவாயில் நிர்மாணப் பணியில் மோசடியும் தில்லுமுல்லும் நடைபெற்றுள்ளதை கட்டிடப் பொறியியலாளர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். அதுவும் அரசுக்குச் சொந்தமான கட்டிடம். முற்று முழுதாக இடித்துக் கட்டும் படி உத்தரவு வந்தது.

வீடு, வாகனம், நில புலம், குடும்ப சந்தோஷம் எல்லாவற்றை யும் விற்றுக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தார். கட்டிடம் பூர்தியான போது அவரது இருப்பிடம் ஆட்டம் கண்டது.

உல்லாசமாய் வாழ்ந்த பிள்ளைகள் சிக்கன வாழ்வில் சிரமப் பட்டார்கள். மாளிகை வீட்டில் மல்லுக் கட்டியவர்கள் சின்ன அறைகளில் சிறையானார்கள். கலகலத்துப் போயிருந்த அம்மாவின் முகம் கரிசல் பூமியானது. எதிர்பார்ப்புக்கள் அதிகமாக, இழந்தவை கள் எல்லாம் இனிக் கிடைக்குமா என்ற ஏக்கம் வீட்டுக்குள் இருட்டாய் ஒட்டிக் கொண்டது. நிஜத்தை ஜீரணித்துக் கொள்ள விரும்பாத வீட்டினுள் வெறும் பூஜ்ஜியமாய் ஆகிப்போனார் சிவராம். மனசுக்குள் நெருடல். சறுக்கி விழுந்ததன் தாக்கம் என குழப்பமான மனநிலையோடு தொழில் செய்துகொண்டு இருந்தவர் ஒருநாள் இருமாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்தார். மணல் குவியலின் மேல் விழுந்ததால் உயிராபத்து இல்லை . ஆனால்… உடம்பின் வலது பக்கம் இயக்கம் நின்றது. பாரிசவாயு’ என்றார்கள்.

மரண அவஸ்தை என்பது சாகும் போது வந்தால் அது சகஜம். வாழும்போது வந்தால் அது வதை…. சிவராம் இருமுறை அந்த அனுபவத்திற்கு ஆளாகிப் போனார். முதலாவது அனுபவம் தொழில் சரிவின்போது வந்தது. அடுத்தது நோயில் விழுந்த போது ஏற்பட்டது.

ஒன்று உள்ளத்தில் விழுந்த அடி. மற்றையது உடம்பில் விழுந்த அடி.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல மூத்த மகன் ‘பெரியவன்’ ஒரு புரட்சி செய்து செமசாத்து சாத்திவிட்டான்.

காதல் வர வேண்டிய வயதுதான் அவனுக்கு. ஆனால், வரக்கூடாத நேரத்தில் வந்துவிட்டது. தந்தைக்குப் பின் தனயன் தாங்குவான் என்ற நம்பிக்கையைச் சிதறடித்துவிட்டு ‘தான் காதலித்தவளே தனக்கு எல்லாம்’ என்ற நிலையில் அவளை இணைத்துக் கொண்டான். மனைவியோடு தனியாகி, பின் தூரமாகிப் போய் விட்டான் ‘பெரியவன்.’

இந்தச் சம்பவம் சிவராமை ரொம்பவும் சரித்து விட்டது. உடம்பும் மனமும் ஊனமாகியவராய் விக்கித்துப்போய் அவர் நின்ற போது அவரைப் பார்ப்பதற்காக அவரது நண்பர் சோதிலிங்கம் மாஸ்டர் வந்தார்.

அவரைப் பார்த்ததும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் சிவராம்.

துடைப்பதற்கு ஒரு கரம் இருக்குமானால் அழுவதில்கூட ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கரம் அந்நியக் கரமாக இருந்திருந்தால் இன்னும் ஆறுதல்….

அழுத அவருக்கு அந்நியக் கரமாகவே சோதிலிங்கம் மாஸ்டர் திகழ்ந்தார்.

“சே! என்ன மிஸ்டர் சிவராம். சின்னப் பிள்ளையாட்டம் விடுங்க….”

சோதிலிங்கம் மாஸ்டர் தேற்றினார்.

“விட முடியலை சேர்! நம்பிக்கையோட படிக்க வச்சன்… தொழில் சொல்லிக் குடுத்தேன்.. பொறுத்திருக்கலாமே சேர்…..! தங்கச்சி இருக்கா. தம்பிமார்…. பொம்பளை எடுத்ததே எடுத்தான்…. இங்கயே இருந்திருக்கலாமே….. ஏமாத்திட்டானே சேர்…!”

“மிஸ்டர் சிவராம்! நாங்கள் சில விசயங்களப் புரிஞ்சிக்கணும்…. பிள்ளைங்க உலகத்தைப் புரிஞ்சிக்க ஆரம்பிக்கிறதே வீட்டை விட்டு வெளியேறும்போதுதான் …. வீட்டுக்கு வெளியே கிடைக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வீட்ட அந்நியப்படுத்துது….. அது வரைக்கும் எல்லாமாகித் தெரிஞ்ச அம்மாவையும் அப்பாவையும் வித்தியாசப் படுத்திப் பார்க்கிற நிலைக்குத் தள்ளப்படுறாங்க…..”

“சேர்! அப்ப பாசம்… பந்தம்….. எல்லாமே வெறும் சந்தர்ப்ப வாதமா?….”

“இல்ல…. நிஜம். அதுவும் நிஜம். இதுவும் நிஜம்…. பொதுவாக இளைஞர்கள் பெற்றவங்க மேல ரெண்டு குற்றச்சாட்டுக்களை அடிக்கடி சுமத்துவாங்க….. ‘இந்த அப்பா எப்பப் பார்த்தாலும் அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு….’ ‘சே! அம்மா! சுத்த மோசம் எந்த நேரமும் தொணதொணப்புத்தான்….’ இதுதான் சிவராம் அந்தக் குற்றச்சாட்டுங்க…. வெளியில் கிடைக்கிற இந்தச் சுதந்திர வேட்கையால் ஏற்படுற வெறுப்புணர்வு எதிர்ப்பலையா உருவாகிற நேரம்தான் பிள்ளைங்க பெற்றவங்க பேச்சை அலட்சியப்படுத்த ஆரம்பிக்கிறாங்க….. வெளியுலக தேடுதல்ல காதல் வந்திடுச்சோ அவ்வளவுதான் …… மனசுக்குள்ள ஒரு கற்பனை உலகத்த படைச்சுக்குவாங்க…. அந்த உலகத்துல இருந்து அம்மா, அப்பா ரெண்டு பேருமே அப்புறப் படுத்தப்படுறாங்க…”

“அப்ப சேர்… பொறுப்பு, பெற்றவங்களக் கவனிக்க வேண்டிய கடம்… இதெல்லாம் வேணாமா?”

“நான் முதல்ல சொன்னது அவங்கட அணுகுமுறைய…. இது ஒரு பலவீனம் மட்டுந்தான். இதில் திட்டமிடுறதோ , தந்திரமோ கிடையாது சிவராம் ! நம்ம அனுபவங்களையே எடுத்துக்குவோமே! பொதுவாக குடும்பங்கள்ல கணவன் மனைவியயோ மனைவி கணவனயோ விட்டுக் குடுத்துப் பேச மாட்டாங்க….. இத பிள்ளைங்க நல்லா அவதானிக்கிறாங்க….. அது மட்டுமில்ல தங்கட வாழ்க்கைப் பயணத்துல எதிர்ப்படுற எதிர்பால் உறவுகள் கிட்ட இதயே பின பற்றுறாங்க….. சுருக்கமா சொன்னா வீட்ல படிக்கிறாங்க…… வெளியில் நடத்திக் காட்டுறாங்க…..”

சோதிலிங்கம் மாஸ்டர் இப்படிச் சொன்னபோது சிவராம் தன்னை அறியாமலேயே சிரித்து விட்டார்.

“என்ன சிரிக்கிறீங்க……?” மாஸ்டர் கேட்டார். சிவராம் பதில் சொல்லவில்லை.

ஆனால், மனசு இலேசாகியது போலத் தெரிந்தது.

‘பெரியவன்’ மேலிருந்த ஆத்திரம், வெறுப்பு எல்லாமே இடம் மாறியது போலப் பட்டது.

ஒரு மாதிரியாக மகள் கரை சேர்க்கப்பட்டாள். சிவராம் எந்த நிமிடமும் செத்துப் போகலாம். ஆனால், அவருக்குள் ஓர் எதிர்பார்ப்பு இருப்பது என்னவோ நிஜம். உள்ளும் புறமுமான தேடுதலின் அரிப்பு. கடைசி நிமிடம் எட்டிப் பார்த்தாலும் கவலைக்குரியதுதான். சந்தோஷமாக உயிர்விட்ட எந்த சம்சாரியை யாவது பார்த்ததுண்டா?

சிவராம் சாவுக்குப் பின்னடிக்கவில்லை . அது முடியாததும் கூட…..

பெரியவனுக்குச் செய்தி அனுப்பியாகிவிட்டது. அப்பாவைப் போலவே அவனும் கட்டிடக்கலை நிபுணனாகவிருந்தான். வசதியும் இருந்தது….

வீட்டுக்குள் பெரியவன் மீது யாருக்கும் ஒட்டுதல் இல்லை. சும்மா சரி வந்து பார்க்காத பெரியவன் மீது அப்பா இவ்வளவு பிரியம் வைத்திருப்பது சரியாகப் படவில்லை . மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தாள் அம்மா.

‘பெரியவன்’ நல்லவன்தான். அவனது மனைவிகூட பொல்லாத வள் என்றில்லை . ஆனால், குடும்பப் பாசம் இல்லாதவள். தான், தன் குடும்பம் என்று ஒதுங்கிப் போய் வாழ்வதால் ஒட்டுதல் இல்லை. புரிதல் இல்லாத இடத்தில் பிரிதலுக்குத்தானே முன்னுரிமை.’

இதுதான் அம்மாவின் நிலைப்பாடு.

அப்பாவின் இறுதி மூச்சின் நுகத்தடி பெரியவன் கையிலிருப்பது வீட்டாருக்குப் புரியும்.

‘பெரியவன்’ வரமாட்டானா? என்ற கேள்வி எழும்போதெல்லாம் – ‘ம்…. அவனுக்கு அங்க என்ன பிரச்சினையோ?’ என்பது அம்மாவின் சமாதானம்.

பொதுவாக புருஷன்மார்களைக்கூட விநாடிப் பொழுதில் நிராகரித்துத் தூக்கியெறியும் அம்மாமார்கள் பிள்ளைகளை அப்பிடி ஒதுக்குவதில்லை. எப்பவாவது திட்டினாலும் அது உதட்டளவில்தான். காலாண்டு அரையாண்டு இணைந்து வாழ்ந்த கணவரைக் கைவிடத் தயாராயிருக்கும் அம்மாமார்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பிரியம் எல்லையற்றது. இந்தச் செல்லமானது பிள்ளைகளைப் பொறுத்தவரை அம்மாக்களின் பலவீனம். ஆனால், பிள்ளைகள் அதைப் பரிதாபகரமாகப் பயன்படுத்த நினைப்பதுதான் அபத்தம்.

நான்கு பிள்ளைகளில் மூத்தவனான பெரியவனை பெரியவன்’ என்று அம்மாவும் அப்பாவும் செல்லமாக அழைக்கப் போய் பின்னால் வந்தவர்களும் அதையே பின்பற்றினார்கள். இப்பொழுது

அந்த வீடே பெரியவனுக்காகக் காத்திருந்தது.

வாசலில் ஹார்ன் ஒலி கேட்டது. வீட்டுக்குள் பரபரப்பு. காரை விட்டு கம்பீரமாக இறங்கி வந்தான் பெரியவன்.

பெரியவனைக் கண்டதும் இதுவரை வீட்டார் மனதில் வீசிக் கொண்டிருந்த அதிருப்தி ‘தீ’ சட்டென அணைந்து போனது…. எங்கிருந்தோ ஒரு திடீர் வாஞ்சை வந்து ஒட்டிக் கொண்டது.

“பெரியவன் ! எப்டிப்பா இருக்க…?” அம்மா.

“பெரியவன்! புதுசா வாங்கின காரா?….. ” தம்பிமார்.

“பெரியவன்! அண்ணி புள்ளங்க வரலியா” தங்கச்சி.

நீண்ட நாளைக்குப் பின் வீட்டில் புதிதாக ஒரு மகிழ்ச்சித் தூறல்.

அந்தப் பெருமைக்கும் கூட உரித்தானவர் சிவராம் என்பது யாரின் நினைவுக்கு வந்ததோ….!

“பெரியவன்! வா, அப்பாவப் பார்ப்போம்…!” தலையாட்டிய பெரியவன் அம்மாவுடன் அப்பாவின் அறைக்குள் நுழைந்தான்.

அம்மா அப்பாவின் காதருகே வந்து “இந்தாங்க…! நம்ம பெரியவன்…!” என்றாள். அப்படிச் சொல்லும் போது அம்மாவின் குரலில் அவளை அறியாமலேயே ஒரு பிசிறல்.

சிவராமின் மூச்சுக்குள் பெரியவன்’ ‘சுளு’வாகக் கலந்தான். அவர் விழிகளைத் திறக்கும் பிரசவ முயற்சியில் இறங்கினார். உதடுகளைப் பிரிக்க எத்தனித்தார். உடம்பில் ஓர் அசைவாட்டம். இழுபறி… விழி வழியே அரைத்துளி அளவில் சுடுநீர்… எதையோ சொல்ல ஏகப் பிரயத்தனம்…… எதுவுமே சாத்தியப்படவில்லை …..

தலைமாட்டினருகே வந்தான் பெரியவன்.

“அப்பா……! எங்கள நல்லாத்தான் வளத்தீங்க…. படிக்க வச்சீங்க….. ஆளாக்கினீங்க…… அத மறக்க மாட்டோம்பா….. ஒங்களோட தேவைய’ செறப்பா செய்வோம்…. இந்தப் பகுதியில் இது வரையில் யாருமே நடத்தாத மாதிரி இறுதி ஊர்வலத்த நடத்துவோம்…”

போர்வையைத் தலை வரை இழுத்து மூடிவிட்டு வெளியே வந்தான்.

வெளியே பாத்ரூம்’ பக்கமாகப் போனவன் முகத்தைச் சுழித்த படியே கூடத்துக்கு வந்தான்.

குந்தியிருந்த தம்பிமாரைப் பார்த்தான்.

“என்னடா பாத்ரூம் பக்கம் போகமுடியல, நாத்தமான நாத்தம். சுத்தம் பண்ண ல…” .

கடைசித் தம்பி பதில் சொன்னான்.

“சுத்தம் பண்ணி வேல இல்ல…. பெரியவன். அப்பா படுத்ததுல இருந்து அங்கதான் ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாமே… அப்பா கத முடிஞ்சப் பிறகுதான்…..”

கூடத்தில் ஆலோசனை நடந்தது.

இறுதி ஊர்வலத்தை எவ்வாறு சிறப்பாக நடத்துவது. யார் யார் என்னென்ன பொறுப்புகளை ஏற்பது எனத் தீர்மானித்தார்கள். செலவு முழுவதையும் பெரியவன் ஏற்றுக் கொண்டான்.

அம்மா இடைக்கிடை பிள்ளைகளின் ஆலோசனைகளுக்குத் திருத்தம் கொண்டு வந்தாலும் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதி களின் யோசனைகள் நிராகரிக்கப்படுவதுபோல அவை நிராகரிக் கப்பட்டன.

எனினும் அம்மா தனது பிரதிநிதித்துவத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. இவர்கள் இங்கே கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அவ்வேளை…..

சிவராம் இன்னும் எதற்காகவோ ஏங்கிக் கொண்டிருந்தார்.

வேகமான மூச்சு, கண்களின் அமானுஷய தேடல் முயற்சி, உதடுகளிடையேயான உரசல். போர், ஓய்வு பெறத் துடிக்கும் இதய நாளங்களின் இறுக்கம்…. ஓ!…. அவர் கொஞ்சம் கொஞ்சமாக…. ஏக்கத்துடனேயே….

– வீரகேசரி வாரமலர் 14-01-2007 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *