பெரியப்பா

 

எனது தந்தையைவிட ஐந்து வயது மூத்தவர், எனது பெரியப்பா. ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர். எச்சில் கையால் கூட காக்கை விரட்டாத ஜாதி. அவருக்கு நல்ல வருமானம் இருந்தது. அரசு வேலை தவிர பெரியம்மாவீட்டு சீதனமாக வயலும்,தோட்டமும் இருந்தது. நல்ல வசதியாக வாழ்ந்து வந்தார்.

அவருக்கு அடுத்தடுத்தாக மூன்று பெண்குழந்தைகள் பிறந்தனர். ஓவ்வொருமுறை குழந்தை பிறக்கும் போதும் அடுத்த முறை ஆண்குழந்தை பிறக்கும் என்று கட்டுப்பாட்டை தள்ளி வைத்து வந்தவர், மூன்றாவதும் பெண்குழந்தை பிறக்க, குடும்பக்கட்டுப்பாட்டை அமல்படுத்தினார்.

அதற்குப்பிறகு தான், நான் எங்கவீட்டில் பிறந்தேன். என்னிடம் மிகுந்தவாஞ்சையாக இருப்பார். எனக்கு பட்டுசொக்காயெல்லாம் வாங்கித்தருவார். அடிக்கடி தின்பண்டங்களும் வாங்கித்தருவார். எங்கஅப்பாவுக்கு கொஞ்சகாலம் வேலையில்லாமல் இருந்தபோது, திரும்பிக்கூட பார்க்காதவர். அம்மாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஆனால் எனது தங்கைக்கு மட்டும் ஒன்றுமே வாங்கித் தரமாட்டார். தின்பண்டம் வாங்கித்தந்து நான்தின்று தீர்ப்பது வரை கூடவே இருப்பார். சிறிது தங்கைக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கவே மாட்டார். நான் அவருக்குத் தெரியாமல் நிக்கர் பாக்கட்டுக்குள் மறைத்துக்கொண்டுபோவேன். பாவம் அவள் வாசலிலேயே எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பாளல்லவா ?. இப்போதேல்லாம் அவளுக்குத்தெரியும், பெரியப்பா என்னைக்கூப்பிட்டால் ஏதாவது தின்பண்டம் தருவார் என்று.

நாட்கள் செல்ல செல்ல, நாங்கள் வளர்ந்து பெரியவர்களானோம். எனக்கு நல்லவேலை கிடைத்தது நல்ல சம்பளம் வாங்கினேன். எங்களது வீட்டிலிருந்து வறுமை படியிறங்க தொடங்கியது.

இப்போது கூட, இவ்வளவு பெரியவனாகியும் ஏதாவது எனக்கு வாங்கித்தந்து கொண்டே இருப்பார். பொருட்கள் மட்டும் உருவம் மாறி வந்தது. தின்பண்டத்திற்குப்பதில் கைகடிகாரம் வாங்கித்தருவார்.

ஆனால், நான் முதல் சம்பளம் வாங்கினபோது, அவருக்கு சட்டையும், வேட்டியும் வாங்கிச் சென்றேன். கடிந்துகொண்டார். “பெரிய ஆளாகிவிட்ட நினைப்போ, இன்றைக்குப்போகட்டும் இனிமேல் இப்படி வாங்கிவராதே”. அவர் அந்த சட்டையை போட்டு நான் பார்த்ததேயில்லை. ஒருநாள் பெரியம்மாவிடம் இதை வருத்தத்தோடு சொன்னேன். “முட்டாபயலே, உங்க பெரியப்பா ராத்திரி தூங்கும்போது நீ வாங்கிகொடுத்த சட்டையைப்போட்டுத்தான் தூங்கப்போறார்” சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள் பெரியம்மா.

இப்போதெல்லாம், எங்களது வீட்டில் என்னை கிண்டல் பண்ணத்தொடங்கிவிட்டார்கள். “அவர் உன்கிட்டே எதையோ எதிர்பார்த்துத்தான் இதையெல்லாம் செய்கிறார்” என்று.

இதற்கிடையில், பெரியப்பாவின் மூத்த மகளுக்குத் திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. என்னிடம் கண்டிப்பாக கூறிவிட்டார். “நீ என்கூட நின்று ஏதாவது உதவிசெய்வதானால் செய். ஆனால் பணமோ, பொருளோ தரக்கூடாது”. ஆனால் எங்கள் வீட்டில் இதை நம்பத்தயராகவில்லை, நான் பெரியப்பாவுக்குக் கொடுத்ததை மறைக்கிறேன் என்றே பேசிக்கொள்கிறார்கள்.

சிறிதுநாட்களில். உடனே இரண்டாவது மகளுக்கும் கல்யாணம் நடந்தது. பெரியப்பா யாரிடமிருந்தோ கடன் வாங்கித்தான் நடத்தினார். ஆனால் என்னிடம், ஒருகாசு கூட கேட்கவில்லை. எனக்கு அவரிடம் இதுபற்றி கேட்கபயமாகத்தானிருந்தது.

ஏசிவிடுவாரே.

எங்களது வீட்டிலோ நான்தான் பெரியப்பாவுக்குப் பணம் கொடுத்து உதவுவதாக, ஜாடை மாடையாகப் பேசிக்கொள்கிறார்கள்.

இப்போதெல்லாம், நானும் எனக்குள் கேட்கத்தொடங்கிவிட்டேன், ‘என்கிட்ட அவர் என்னதான் எதிர்பார்க்கிறார்;.

ஓரிரு வருடங்கள் ஒடிவிட்டன. பெரியப்பா தளர்வாகத்தான் தெரிகிறார். ஒருநாள் திடீரென சுகமில்லாமல் படுத்துவிட ,நான் தான் உடனே டாக்டரை அழைத்துவந்தேன். அந்த டாக்டர் பீஸைக்கூட என்னைத் தர விடவில்லை, பெரியம்மாவிடம் ஜாடைகாட்டி கொடுக்க சொல்லிவிட்டார்.

இவ்வளவு எனக்கு செய்தீங்களே பெரியப்பா, ஏதாவது என்னை செய்யவிடுங்களேன், – என்று கதறனும் போலிருந்தது

மூன்றாவது மகளுடைய கல்யாணத்திற்கு, குடிஇருந்த வீட்டை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறினார். அப்போதுகூட என்னிடம் எந்த உதவியும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ரொம்பவருத்தமாக இருந்தது. எப்படி உதவி செய்வதென்று தெரியாமல் விழித்தேன்

சிலநாட்களில்,

தீராத நோயும் தொற்றிக்கொள்ள படுத்த படுக்கையானார். தினசரி ஆபீஸ் விட்டுவந்து, நேராக பெரியப்பாவை பார்க்கத்தான் போவேன். ஒருநாள், பெரியப்பா நிலைமை ரொம்ப மோசமாகயிருந்தது. காலையிலிருந்து கண்விழிக்காதிருந்தவர், சாயுங்காலம் நான் வந்து நெற்றியை வருடினபோது கண்திறந்தார். எனது வலது கையை தனது இருகைகளாலும் பிடித்துக்கொண்டு கண்களால் கெஞ்சியபடியே ஏதோ முனகினார். குனிந்து காதில் வாங்கினேன்.

“எனக்கு, நீ கொள்ளி வைப்பாயா?”. எனது கண்களிலிருந்து கண்ணீர் கட்டுப்பாடின்றி வெளிவந்து பெரியப்பாவின் கைகளை தழுவி சூடாக உறுதியளித்தது.

இதைத்தான் எங்கிட்ட இருந்து எதிர்பார்த்தீங்களா பெரியப்பா.

நிமிர்ந்து பார்த்தேன். எனது நெற்றியிலேயே அவரது பார்வை உயிரின்றி நிலைத்திருந்தது.

உங்க உடம்பில் தீயை நான் வைக்கவேண்டுமென்றா, என்னிடம் இத்தனை வாஞ்சையுடனிருந்தீர்கள் பெரியப்பா, கதறி , கதறி அழுதேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
சமூக தண்டனை
அந்த பேரூந்தில்; ஆறு மிருகங்கள்; ஒரு பூவையிடம் வெறித்தாண்டவமாடி, சின்னாபின்னமாக்கப்பட்டு இறுதியில் பிணமாகிப்போன,… அந்த கோரசம்பவத்தின் முழுநீள விளக்கமான ‘ரிப்போர்ட்’ தயாரிக்கும் பொறுப்பு ‘இன்வெஸ்டிகேட்டிவ்-ஆபீஸ’ரான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பயணிகள் பேரூந்தென்று நம்பி ஏறிய தப்பைத் தவிர வேறொன்றும் செய்யாத அந்த இளம்பெண் பட்ட ...
மேலும் கதையை படிக்க...
சமூக தண்டனை

பெரியப்பா மீது 6 கருத்துக்கள்

 1. Roopini says:

  கடைசியில் அழுதுவிட்டேன் . இந்த காலத்தில் இப்படி ஒரு பெரியப்பாவும் மகனும் கிடைப்பது அபூர்வம் . ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கதை, நெஞ்சை தொடும்கதை படித்ததில் ரொம்ப மகிழ்ச்சி

 2. jayanthi says:

  நல்ல கதை

 3. கீழை நாடன் says:

  அருமையான கதை.
  இவ்வளவு சுருக்கமாய் சொல்லி பாதிப்பை ஏற்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
  கதையின் பாதியில் பெரியப்பா என்ன கேட்பார் என்று புரிகிறது. அவருடைய நிலையில் வேறு என்ன தான் கேட்க முடியும்.

 4. rathinavelu says:

  மிகச் சிறந்த கதை

 5. Somasundar says:

  என்னை கடந்தகாலத்துக்கு இட்டுசென்றது.இன்றுநான் தூங்குவது கடினம்

 6. Babu K Thampy says:

  கலாசாரக்கண்ணாடி, அசத்தலான நடை, மனதை அங்கங்கே இதமாக கிள்ளி செல்கிறது. ஸுபெர்ப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)