பிரிவோம்… சந்திப்போம்..!

 

வண்டியை காரிடாரில் நிறுத்தி வீட்டிற்குள் நுழைந்ததும், தனிமை என்னை அப்பிக்கொண்டது. இந்த பாழாய் போன பணத்திற்காக என் உயிரின் பாதியாய் வந்தவளை பிரிந்து எங்கோ தூர தேசத்தில் இருக்கிறேன் என்ற உண்மை சுடும் போது பணத்தின் மேல் கோபமாய் வரும்.. என்ன செய்வது.. பாசத்தை பகிர்ந்து கொள்ள கூட பணம் தேவை படுகிறதே… தூக்கத்தை விட்டு விழித்தவுடன் அடுத்த நிமிடமே எதற்கெடுத்தாலும் பணம் தேவைப் படுகிறதே.

“ அம்மா மூணு வருஷம் போய்ட்டு வந்துடறேன்.. ப்ரியா, கல்யாணத்தை முடிச்சிடலாம்… அதுக்குள்ள பாலுவும் படிப்பை முடிச்சிட்டான்னா கொஞ்சம் பாரம் குறையும் அப்புறம் நான் இங்கயே வந்துடறேன்..”

முதல் முறையாக கிளம்பும் போது அம்மாவின் அழுகை இன்னமும் என் கண்களில் இருக்கிறது. “ பத்திரமா பார்த்துக்கப்பா… எங்க இருந்தாலும் நீ நல்லா இருந்தாதான் நாங்க இங்க நிம்மதியா இருப்போம்..”

விடுமுறை நாட்களில் போன் செய்வேன், போனுக்கருகிலேயே மொத்த குடும்பமும் காத்திருக்கும் போல , ஒரு ரிங்.. போகும் போதே அம்மா உடனே எடுத்து விடுவாள். பேசும் போதே அழுது விடுவாள். எனக்கும் இங்கு கண்ணீர் முட்டிக்கொள்ளும். அப்பா, தங்கை.. தம்பி நான் அங்கு இல்லாத வெற்றிடத்தை சொல்லி வருத்தப் பட்டுக் கொள்வார்கள்.

இரண்டு வருடம் பேங்க் பேலன்ஸ் கூடியது. “ பார்த்தீபா.. நம்ம ப்ரியாவுக்கு நல்ல இடம் கூடி வருது.. முடிச்சிடலாமா..? விவரங்களை சொன்னாள். “ இவ்வளவு நல்லா இடம் வர்றப்ப என்னம்மா தயக்கம்..முடிச்சிடுங்க..”

“.. அதில்லை அவங்க பெரிய இடம் ..கொஞ்சம் எதிர்பார்ப்பாங்க போலிருக்கு..”

“ அதனாலென்னம்மா.. நம்ம வீட்ல பொண்ணுன்னு அவ ஒருத்திதானே அவளுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறோம்..? கடன் உடன் பட்டாவது நல்ல இடத்தில அவளை கொடுத்திட்டா அவ சந்தோஷமா இருப்பா இல்லே… பணத்தை பத்தி யோசிக்காம முகூர்த்த நாளை பிக்ஸ் பண்ணிட்டு எனக்கு சொல்லுங்க நான் ஒரு மாசம் லீவுல வந்துடறேன்.”

ப்ரியாவின் கல்யாணம் தடபுடலாய் நடத்தினேன். “ ஊர்ல இவ்வளவு விமர்சையா யாரும் பண்ணலை… எல்லாம் நல்லா பண்ணேப்பா..!” நண்பர்கள் என்னிடம் பாராட்டினார்கள். உறவுக்காரர்கள் சிலருக்கு மட்டும் குமைச்சல் “ க்கும்.. வெளி நாட்டுல நல்லா சம்பாதிக்கிறான் செய்யறதுக்கென்ன…” காதில் லேசாய் விழுந்தது. ஆமாம்.. வெளி நாட்டில் சும்மா தூக்கி கொடுத்து விட போகிறான்.. நம்ம வலியை சொல்ல கூட பக்கத்தில் ஆள் இல்லாமல் அங்கு தினம் தினம் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை இவர்களுக்கு எங்க புரிய போகிறது?.
இந்த முறை விடுமுறை முடிந்து நான் கிளம்பும் போது, அம்மாவிற்கு லேசாய் கண்கள் கலங்கினாலும், பெண்ணை நல்ல இடத்தில் கட்டி கொடுத்துவிட்ட திருப்தியில் விடை கொடுத்தாள்.
மூன்றாவது வருடம் பேங்க் பேலன்ஸ்.. “ பார்த்தீபா.. பாலுவும் இந்த வருஷத்தோடு படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போயிடுவான். உனக்கு இப்ப கல்யானத்தை பண்ணாதான் அவனுக்கு ஒரு ரெண்டு வருஷம் கழிச்சி பண்ண சரியா இருக்கும். இது வரைக்கும் இந்த ஓட்டு வீட்ல நாம எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிட்டோம். பூரா இடிச்சிட்டு புதுசா கையோடு கையா கட்டிட்டா நிம்மதியா இருக்கலாம். அப்பா எஞ்சினியர் கிட்ட பேசினாரு சிம்பிளா ஒரு பத்துக்குள்ள முடிச்சிடலாம்னு சொன்னார்..”

தாய் தேசம் இந்த முறையும் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. ஓடு வீடு மாடி வீடானது. கிரஹ பிரவேச போட்டோக்களை மெயிலில் பார்த்துக் கொண்டேன். “ நீ இல்லாம பண்ண கஷ்டமாதான் இருக்கு. இதுக்கெல்லாம் வந்து போயிட்டு செலவு ஜாஸ்தியாவுதில்லே… ஒரு வழியா கல்யாணத்துக்கு வந்துடு..” அப்பா சொன்னாலும் நிஜமும் அதுதானே.

எனக்கு ஏதோ செவ்வாய் தோஷமாம்.. அதே போல் தோஷமுள்ள பெண்தான் கட்டனுமாம், “ “சரவணா.. தோஷமிருக்கிற பெண்ணா கிடைக்கிறது கஷ்டமா இருக்கு… அப்படியே கிடைச்சாலும் ஜாதகம் பொருந்தாம போகுது.. ஒரே ஒரு இடம்தான் எல்லா பொருத்தமும் வருது. பொண்ணு கூட நல்லாத்தானிருக்கு… ஆனா நம்மை விட வசதி கம்மி அதான்… யோசிக்கிறேன்…”

நம்மை விட வசதி.. இதற்கு முன் எப்படி இருந்தோம் என்று அம்மா மறந்து விட்டாள் போலும். “ அம்மா.. பொண்ணு உங்களுக்கு பிடிச்சிருக்கா.. குணமாயிருக்காங்களா.. அது போதும். சீர், செனத்தின்னு எதுவும் கேட்காத.. அவங்களுக்கும் சம்மதம்னா பேசிடுங்க…”

ஒரு நல்ல நாளில் காயத்ரியை கை பிடித்தேன்.. விடுமுறையில் மனைவியுடன் இருந்த அந்த மூன்று மாதங்களும் வாழ்க்கையின் வசந்தமாய் இருந்தது. இடையே அங்கேயே வேலை தேடிக் கொள்ள முயற்சி செய்தேன்.. அங்கு வேலை கிடைத்தது போதுமான சம்பளம் இல்லை, இங்கு தேவையான சம்பளத்தோடு வேலை .. கூட மனைவி இல்லை, பணமா? பாசமா? என்று எடை போட்டு பார்த்தபோது ஏனோ எப்பவும் பணம்தான் வெற்றி பெறுகிறது. மிடில்கிளாஸ் குடும்பத்தில்.

“ லேசா… லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா…” மொபைல் ரிங்-டோன் பாடியது.. என் காயத்ரிதான்,

“ என்னங்க எப்படி இருக்கிங்க.. உங்க குரலை கேட்டாதான் தூக்கமே வருது. இன்னிக்கு செக்கப் போனேன்ங்க ஜனவரி 13 தேதி கொடுத்திருக்காங்க.. “

“ ஏய்.. பொங்கல் வரவுன்னு சொல்லு.. என் பொண்ணு என்ன சொல்றா… ரொம்ப படுத்தறாளா..?”

“ என்னங்க அத்தை பேரன்னு சொல்லிகிட்டிருக்காங்க.. நீங்க பொண்ணுன்னு சொல்றிங்க யார் ஆசையை நான் நிறைவேத்துவேன்…”

“ அசடு எதுவாயிருந்தாலும் நம்ம குழந்தை.. சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்.. சரி உடம்பை பார்த்துக்க.. நான் நாளைக்கா பேசறேன்..”

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அருகாமை எவ்வளவு முக்கியம். காயத்ரி மனசில நினைக்கறதை யார் கிட்ட சொல்வா.. என் நிலமை எனக்கே வெறுப்பாக இருந்தது.
மறு படியும் தொலைபேசி .. ரிங் டோனை வைத்து காயத்ரியாய் இருக்க வாய்ப்பில்லை என்று யோசித்தவாறே எடுத்தேன்..

“ பார்த்தி… பார்த்தீ… மாலதியின் குரலில் பதட்டம் தெரிந்தது. நண்பரின் மனைவி .

“ என்னங்க.. இந்த நேரத்துல போன்..?

“சீக்கிரம் வாங்க, சீக்கிரம் வாங்க……..”

“என்ன? என்ன ஆச்சி?….

அவருக்கு என்னவோ ஆயிடுச்சி, சீக்கிரம் வண்டி கொண்டு வாங்க………..

இதோ உடனே வரேன்…..எதுவும் புரியவில்லை, என்ன செய்வதென்றே தெரியவில்லை அடுத்த மூன்றாவது நிமிடம் அவர்வீட்டு முன், கதவு திறந்தே கிடந்தது என் வரவை எதிர்பார்த்து ..உள்ளே சென்றேன் ஒரே அழுகை சப்தம் மட்டும் கேட்க, நண்பர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

“பார்த்தீ.. நான் என்ன செய்வேன் ஆஸ்பத்ரிக்கு போகனும் , எங்க போகனும் எப்படி போகனும் ஒண்ணும் புரியவில்லை, “

அவரை வண்டியில் படுக்க வைத்துவிட்டு நான் வண்டியை விரட்டினேன், , கணவனுக்கு என்ன ஆச்சோ? எதுவும் ஆகக்கூடாது என்று எல்லா தெய்வத்தையும் வேண்டியவாறே சீக்கிரம் போங்க ………சீக்கிரம் போங்க………என்று பதட்டத்தில் மாலதி.

கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கு ஒன்று என்றால் ஒரு குடும்பமே துடிக்கும், அந்த ஆஸ்பத்திரிக்கு போகலாம், இங்க போகலாம், ஒன்னும் ஆகாது பலர் இருக்கும் அந்த பலம் கூட இப்ப இங்க இல்லாமல் குடும்பத்தை இழந்து , சொந்த பந்தம் இல்லாமல் அன்னிய நாட்டில் அனாதையாக இருப்பது போல் தெரிந்தது. எதோ நண்பன் என்ற உறவு கூட இல்லையென்றால் வாழ்வது கடினம்தான்.
அவசர சிகிச்சைபிரிவில், அவசர அவசரமாக அவரை தள்ளு வண்டி உதவியோடு உள்ளே அழைத்து சென்றோம். நமக்குதான் அவசரமே தவிற அவர்களுக்கு எந்த அவசரமும் இல்லை…

எல்லா டெஸ்ட்டும் முடிந்து, மூச்சுவிடும் குழாயில் அடைப்பு உள்ளது உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும்… மூன்று லட்சம் கட்டி விட்டால் பண்ணலாம்.. இப்போதைக்கு நினைவு திரும்பிடுச்சி போய் பார்க்கலாம்…”

மாலதி அழுகையை அடக்கி கொண்டு சுந்தரின் கையை பிடித்து கொண்டு, “ என்னங்க என்ன ஆச்சி.. காபி போட்டுட்டு வர்றதுக்குள்ள…?” கண்கள் குளமாகியது.

“சிஸ்டர் இப்ப ஜாஸ்தி பேச வைக்க வேண்டாம்.. வாங்க வெளியில..”

“என்னங்க இப்ப பணத்துக்கு என்ன பண்ணலாம் வீட்ல சேமிப்பு எதாவது இருக்கா..? கேட்டேன்.

“ பார்த்தீ…உண்மைய சொல்லபோனா வீட்ல சேமிப்பு எதுவும் இல்லை, சம்பாதிக்கும் சம்பளம் எல்லாம் லோன், குடும்ப செலவு, தங்கை கல்யாணம் என்று செலவுக்குமேல் செலவு வந்ததால் சேர்த்துவைக்க முடியாமல் போய்விட்டது.. இதுவரை எனக்காக ஒன்றுகூட வாங்கிக்கொள்ளவில்லை.. என் வீட்டில் போட்ட நகைகள்தான் வச்சிருக்கேன் .. அவர் அப்பா அம்மா அண்ணன் தங்கை குடும்பம் என அனைவருக்கும் ஓடிஓடி செய்தோம் . “ கண்ணீர் விட்டழுதாள்.. “ இந்த சமயத்துல நீங்கதான் எனக்கு கடவுள் மாதிரி எப்படியாவது ஏற்பாடு பண்ணுங்க.. அவர் நல்லாயிட்ட பிறகு எதாவது வழி செய்துக்கலாம்…”

வரவுக்குமேல செலவு, அளவுக்குமேல ஆசை .. நானே ஏற்கனவே மூன்று மாத சம்பளத்தை அட்வான்ஸாக வாங்கி ஊருக்கு அனுப்பி விட்டிருந்தேன்.. இப்போது கம்பெனியில் கேட்க முடியுமா? இந்த நிலைமையை சொல்லி உதவிகேட்டால் என்ன என்று தோன்றியது. முதலாளியிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன், அவர் அதையெல்லாம் ரொம்ப பொறுமையா கேட்டார் எப்படியும் உதவி செய்வார் என்ற நம்பிக்கை வந்தது ஆனால் அவர் பேசத்தொடங்கினார்” உனக்கென்றால் கம்பேனி முடிந்தவரை உதவி செய்யும், ஆனால் இது உனது நண்பன் என்று சொல்கிறீர்கள். அவருக்காக கம்பேனி எதற்கு உதவி செய்யனும்,
உங்களுக்கே உங்க நண்பரை இங்கு வந்தபிறகுதான் பழக்கம், அவர் எப்படி பட்டவர் என்றுகூட தெரியாது, உங்களைப்போல நாங்க யாரையும் நம்ப முடியாது. உனக்கு அளவுக்கு அதிகமா பணம் கொடுத்து அவருக்கு உதவி செய்தும், அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் இந்த பணத்துக்கு யார் பொறுப்பு நீங்கதானே? இந்த பணத்துக்காக நீங்க இன்னும் ஒன்று இரண்டு வருடம் வேலை செய்யவேண்டி வரும், இந்த நேரத்தில் உங்க குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை என்றால்…அப்பவும் இங்கதான் வருவீங்க… யாருக்குத்தான் பிரச்சினை இல்லை? அவரவர்கள் பிரச்சினையை அவரவர்களேதான் பார்த்துக்கணும் சரி நீங்க இப்ப புறப்படுங்க எனக்கு நேரமில்லை…”

“என்ன வாழ்க்கை இது…மனிதாபிமானம் அது எங்கே போயிற்று மனிதர்கள் இப்படிதான் இருப்பார்களா? அல்லது பணம் உள்ளவர்கள் மட்டும்தான் இப்படி இருப்பார்களா? ஒருவர் நண்பன் என்று சொல்லிக்கொள்ள என்ன என்ன வேண்டும். அவர்களை பற்றி தெரிந்துக்கொள்ள சிபிஐ வைத்தா தெரிந்துகொள்ள முடியும், நம்பிக்கை.. நம்பிக்கைதான வாழ்க்கை? மனிதன்தான் மனிதனை மதிக்கனும், கடவுள் இருக்கிறாரோ? இல்லையோ? அவர்கள் நேரடியாக வருவதில்லை யார்மூலமாகவோதான் உதவுவார்கள், ஒருவருக்கு ஆபத்து நேரத்தில் உதவி செய்யனும் அப்பதான் இந்த நாட்டில் கொஞ்சமாவது மனிதகுலம் வாழும், நீங்கள்ளாம் மனிதனா சார்.? என்று ரத்தம் கொதித்தது …அப்படியே அமைதியாக வெளியேறினேன்.

“ லேசா.. லேசா…” மொபைல் ஒலித்தது.. இந்த கலாட்டாவில் காயத்ரிக்கு வழக்கமாக பேசும் நேரத்தை மறந்திருந்தேன்.

“ சொல்லு…” குரல் கம்மியது.

“ என்னங்க என்ன ஆச்சி குரல் ஒரு மாதிரியா இருக்கு..? நானும் நாலு தரம் போன் பண்ணிட்டிருந்தேன்.. லைன் கிடைக்கல…”

“ ஒண்ணுமில்ல.. நண்பருக்கு… விஷயத்தை சுருக்கமாக சொன்னேன்.

“ என்னங்க இப்போதைக்கு கடன் வாங்கியாவது கட்டிடுங்க… அப்புறம் என் நகைய வச்சி ஏற்பாடு பண்ணிக்கலாம்..”

எவ்வளவு அன்பான மனைவி.. முன் பின் பார்த்திராத என் நண்பனுக்காக உதவ துடிக்கிறாள்.

“ …. என்னங்க எனக்கு பயமாயிருக்குங்க… அவங்களுக்காவது அவங்க வொய்ப் கூடவே இருக்காங்க… உங்களுக்கு தலைவலின்னா கூட பார்த்துக்க யார் இருக்காங்கன்னு நினைக்கும் போது வயிறு கலங்குதுங்க… எனக்கு கஞ்சியை குடிச்சாக் கூட போதும்.. நீங்க என்னோட இருந்தா போதும்…” அழுதாள்.

“ சும்மா மனசை போட்டு குழப்பிக்காத.. போய் தூங்கு.. நான் இங்க நிலமை சரியான பிறகு பேசறேன்..”

பணத்துக்காக அலைந்து கடைசியாக கந்துவட்டி வரை வந்துவிட்டேன் மாதம் மாதம் பணம் சரியாக கொடுப்பதாக சொல்லி பத்திரத்தில் கையெழுத்து போட்டேன் எனது அனைத்து அடையாள அட்டைகளின் நகல்களையும் கேட்டார்கள், அவர்கள் சொன்ன அனைத்து இடத்திலும் கைய்யொப்பமிட்டேன், இது போதாதற்கு எனது நண்பனின் அடையாள அட்டைகளின் நகல்களையும் கொடுத்தேன். என் நண்பனை காப்பாற்ற வேண்டும் என்று மட்டும்தான் முக்கியமாய் பட்டது. எப்படியும் நண்பனை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டேன்..

அங்கு சென்றதும் மாலதி பதட்டத்துடன் … என்ன ஆச்சிங்க? பணம் கிடைத்ததா?

“ ம்.. கொஞ்சம் இருங்க பணம் கட்டிவிட்டு டாக்டரிடம் சொல்லிட்டு வந்துடறேன்..”

பணம் கட்டிவிட்டு டாக்டரிடம் சொன்னேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆப்ரேஷன் பயப்படாதிங்க.. ச இந்த ஆப்ரேஷன் முடிந்ததும்உங்க நண்பர் எப்பவும்போல சாதாரண நிலைக்கு வந்திடுவார் என்று நம்பிக்கையாக சொன்னார். நானும் அதே நம்பிக்கையோடு வெளியில் வந்து மாலதியிடம் பணம் எப்படி வாங்கினேன், யார் யாரிடமெல்லாம் கேட்டேன் என்பதை சொன்னேன்.

“பார்த்தீ ” எங்களால் உங்களுக்கு எவ்ளோ சிரமம் பாருங்க.. நாங்க இதற்க்கெல்லாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை? நீங்க இல்லை என்றால் எங்க நிலைமையை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை…” கலங்கினாள்.

ஐயோ! என்ன இதெல்லாம் கொஞ்சம் சும்மா இருங்க
ஆப்ரேஷன் சக்சஸ் சுந்தருக்கு நினைவு வந்ததும் அருகில் சென்ற மாலதி கட்டிபிடித்துக்கொண்டாள் மறுபிறவி என்று சொல்லி அழுதாள். அப்போதுதான் என் முகத்தில் சின்ன சிரிப்பு வந்தது. இரண்டு நாட்களில் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டோம், ஒரு வாரத்தில் சுந்தர் மீண்டும்வேலைக்கு போகத்தொடங்கினார். கந்துவட்டிக்கடனை மாலதியின் நகையை விற்று கொடுத்தார்கள்.
ஒரு வார விடுமுறை நாளில், சுந்தர் வீட்டில் மதிய உணவு, “ பார்த்தீ நாங்க ஊருக்கே போயிடலாம்னு இருக்கோம். என்னவோ போப்பா.. குடும்பத்தைவிட்டு சொந்த பந்தம் விட்டு பொழைக்கணும்னு திக்கு தெரியாம இங்க வந்து மட்டும் என்ன சாதிச்சோம்..? நம்ம தேவைங்களுக்கு முடிவே கிடையாது.. மிச்ச இருக்கிற வாழ்க்கையாவது அன்பா வாழ்ந்துட்டு போவேமே.. பத்தாயிரம் கிடைக்கிற வேலையா இருந்தாக் கூட பரவாயில்லன்னு.. பார்க்க சொல்லி நண்பர்களுக்கு சொல்லியிருக்கேன்… நீ என்னப்பா சொல்றே..?”

“ கிடைக்கறதே போதும்னு பட்ட பிறகுதானே புரியுது.. புரிஞ்சும் சில சமயம் மௌனமாய்தான் இருக்க வேண்டியிருக்கு.. நான் கூடதாங்க பல முறை இதை யோசிச்சிருக்கேன்.. என்னடா வாழ்க்கை இதுன்னு..? முந்தா நாள் என் வொய்ப் கஞ்சி குடிச்சா கூட நீங்க கூட இருந்தா போதும்னு சொன்னப்ப உடைஞ்சிட்டேன்ங்க…”

லேசா…லேசா… மொபைல் அழைத்தது.

“ காயத்திரி.. இனிமே நாம ஒண்ணாயிருக்க போறோம்டி.. சந்தோஷமாயிரு.. சீக்கிரமா அங்கேயே வந்துடுவேன்..” மறு முனையில் சந்தோஷமாய் முத்தமிட்டாள்.

இந்த முறை தாய் நாடு எங்களை திருப்பி அனுப்ப போவதில்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
விநாயகர் சதுர்த்தி விழா.. வசந்தம் நகரில் இளைஞர் குழு சுறு சுறுப்பாக செயல் பட்டு கொண்டிருந்தது. ஏரியா முழுக்கும் வசூல் வேட்டை நடத்தியவர்கள் இனியவன் வீடு வந்ததும் தயங்கி நின்றார்கள். இனியவன் தீவிர நாத்திகவாதி.. கோயில் குளம் என்று வந்தால் விரட்டாத ...
மேலும் கதையை படிக்க...
அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில் பரிசுக்குரிய போட்டியாளரை தேர்ந்தெடுப்பது கஷ்டமாகவே இல்லை. ஆனால் கும்பகோணத்தில் ...
மேலும் கதையை படிக்க...
"மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க , "இதோ வந்துட்டேங்கா.. 12 மணி சீரியலுக்குள்ள சாதம் வச்சுடாலாம்னு உலை வச்சேன்.. அதுக்குள்ள நீங்க கூப்பிடவே சிம்ல வைச்சிட்டு வந்துட்டேன்..." "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..? நேத்து நான் மார்க்கெட் ...
மேலும் கதையை படிக்க...
திண்ணையில் கேப்பைக்கூழை டம்ளரில் கலந்து வாகாக செல்விக்கு குடிப்பூட்டி கொண்டிருந்தாள் தாயம்மா. “ ஆயா.. சில்லுன்னு இருக்கு சூடா சோறு தா…” சிணுங்கினாள். “ ஆமா ஆத்தாக்காரி வந்து உனக்கு சூடா சோறு பொங்கி போடுவா.. கோபத்தில் தெறித்த வார்த்தைகளில் செல்வி கழுத்தை பின் ...
மேலும் கதையை படிக்க...
“பாஸ்கர் நான் ஊர் பக்கம் போயிருந்தேன் உங்க அம்மாவால முன்ன மாதிரி வேலை செய்ய முடியல நீதான் இங்க வசதியா இருக்கியே அழைச்சிட்டு வந்திடாலாமில்ல?" சரவணன் கேட்டதும் சுருக்கென்று வந்தது, “ நானென்ன அம்மாவை பார்த்துக்க மாட்டேன்னா சொன்னேன்.. அவங்க வீம்பா கிராமத்த ...
மேலும் கதையை படிக்க...
சுருதியை கைபிடித்து இறக்கியவள், ராஜுவை தோளில் சாய்த்து பையுடன் பேருந்திலிருந்து , அப்பா வந்திருக்கிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் சுகந்தி. அப்பா கணேசன் ஓடி வந்தார். " வாம்மா... ஒரு மணி நேரம் முன்னாடி வந்து காத்துக்கிட்டிருந்தேன்....மாப்பிள்ளை வரலையா..? கேட்டுக்கொண்டே பேரனையும், ...
மேலும் கதையை படிக்க...
" டாடி.. அணா.. செப்பு தகடு இதெல்லாம் எப்படி இருக்கும்? ஸ்கூல்ல பழங்கால பொக்கிஷம்- னு அசைன்மென்ட் பண்ணனுமாம் .." சித்தப்பா பெண்ணின் திருமணத்திற்காக துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சூர்யா, பிரவீனை கட்டிக்கொண்டு.." ம்ம் .. சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்பவே எத்தனை ...
மேலும் கதையை படிக்க...
“ ஜெய்… எனக்குதலை வலிக்கிற மாதிரி இருந்தது.. பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்.நீங்க பிக்-அப் பண்ண வர வேண்டாம்…” சுஜிபோனில்சொல்லவும் , “ சரி நான் நேரா வீட்டுக்கே வந்துடறேன்…” போனை வைத்தான். அவனுக்கு தெரியும் தலைவலி எல்லாம் இருக்காது… அவன் தம்பி மனைவிக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக ...
மேலும் கதையை படிக்க...
"விஷால் இன்னிக்கு எங்காவது வெளியில் போறியாப்பா.? தேவகி கேட்டாள். " இல்லைம்மா.. தொடர்ந்து மூணு நாளா வெளியில போய் போரடிச்சிடுச்சி.. இன்னிக்கு வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கோம்.." ஸ்வாதி குளித்து விட்டு வருவதற்குள் பரபர வென்று சமையலை முடித்த தேவகி, கணவர் ராகவனை கூப்பிட்டாள், " என்னங்க.. இன்னிக்கு மாம்பலம் வரை ...
மேலும் கதையை படிக்க...
“ ஷைலு.. இன்னிக்கு எல்லாமே உன் மெனுதான்.. எதையாவது ஆர்டர் பண்ணு..” தருண் மெனு கார்டை நீட்டினான். ஷைலு புன்னகையை உதிர்த்து ஆராய்ந்து கொண்டிருந்தாள். டிஸைனர் சாரியில் தேவதையாய் தெரிந்தாள். “ம்.. ரொட்டி பனீர், அப்புறம் ரவா மசாலா..” சொல்லிவிட்டு காத்திருந்த வேளையில் அவர்கள் மேசையில் ...
மேலும் கதையை படிக்க...
வசந்த விழா…!
பரிசு – ஒரு பக்க கதை
திலகாவும்…மாலாவும்…!
பாதை மாறிய பயணம்…!
காலம் மாறும்…!
நிம்மதி
பொக்கிஷம்
இனி எல்லாம் சுகமே..!
பார்வை..!
அவள் பணக்காரி…!

பிரிவோம்… சந்திப்போம்..! மீது ஒரு கருத்து

  1. prabhu says:

    ஹாய் நான் பிரபு இந்த கதையை படித்தேன் அருமை
    என்னுடைய வாழ்க்கையிலும் இதில் பாதி நடந்துவிட்டது
    இன்னும் பாதிநடக்கதான் போகுதுன்னு நினைக்கிறன்

    அருமை நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)