கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 18,037 
 

“டேய்! அரவிந்தன் மாஸ்டர் வாறாரடா” ரியூற்றறி வாசலில் நின்ற மாணவர்கள் உள்ளே போய் வாங்குகளில் அமர்கின்றனர். வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு வகுப்புக்கு வருகிறான் அரவிந்தன். தன் இருக்கையில் அமர்ந்தவாறு கையைத் திருப்பி நேரம் பார்க்கிறான். பாடம் தொடங்க வேண்டிய நேரத்திற்குப் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. பயிற்சிப் புத்தகத்தை, எடுத்து விரித்து வைத்துக் கொண்டு படிப்பிக்க ஆரம்பிக்கிறான்.

“இண்டைக்கு அரவிந்த் சேர் புது மணிக்கூடு கட்டியிருக்கிறார் என்னடா ரஞ்சன்”

“ ஓமடா புதுசு போலைத் தான் கிடக்கு”

“அரவிந்த் மாஸ்ரரின்ரை முகத்துக்கு ஸ்பெக்ஸ் நல்லாயிருக்கடா”

அந்த மாணவர்கள் மிக மெதுவாகப் பேசிய போதும் , அரவிந்தனின் கூர்மையான செவிகளில் அது விழுந்து விடுகிறது.

“என்னைக் கண்டவுடனை ஏதோ பெரிய ஹீரோவைக் கண்ட மாதிரி நிக்கிறாங்கள்” நினைக்கச் சிரிப்பு வருகிறது அரவிந்தனுக்கு. அவன் வழக்கமாகக் கட்டிகொண்டு வரும் மணிக்கூட்டிலிருந்த பற்றறியின் சக்தி குறைந்து விட்டதால், அது நேரம் காட்டாமல் நின்று விட்டது. அதனால் தம்பியின் மணிக்கூட்டை இரவல் வாங்க்கிக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறான்.. அதைப் புது மணிக்கூடு என்கிறார்கள் அவனுக்குத் தூரப் பார்வையிலே கொஞ்சம் கோளாறு இருப்பதால் , கண்ணாடி அணிந்திருக்கிறான். அதை அவன் முகத்திற்கு அழகாயிருப்பதாக விமர்சிக்கிறார்கள் அந்த மாணவர்களின் , மனப் போக்கைப் புரிந்து கொள்ள முடியாதவனாய் அவர்களின் முகங்களைப் பார்க்கிறான். பவுடர் பூசிய அந்த முகங்களில் களைப்புத் தெரிகிறது அவர்கள் மேல் அரவிந்தனுக்கு அனுதாபம் ஏற்படுகிறது.

“பாவம் இவர்கள், காலை எட்டு மணியிலிருந்து ஒன்றரை மணிவரை பள்ளிக்கூடத்தில் இருந்திருப்பார்கள். பள்ளிக்கூடம் விட்டதும் அவசரமாய் வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு முகம் கழுவவும் நேரமில்லாமல் வியர்வை கசியும் முகத்திலே பவுடர் பூசிக்கொண்டு, ரியூற்றறிக்கு ஓடி வந்திருப்பார்கள். .இவர்களில் சிலர் வீட்டுக்குப் போகாமல் நேரே ரியூற்றறிக்கே வந்திருப்பார்கள். இவர்களிலே எத்தனையோ பேருடைய பெற்றோர் வீட்டிலே சாப்பாட்டுக்குத் திண்டாடும் நிலையிருந்தும் கடன் பட்டாவது ரியூசனுக்குக் காசு கொடுத்திருப்பார்கள். இந்த மாணவர்களுக்குக் கொஞ்சம் ஓய்வெடுக்கவோ, சந்தோஷமாய்க் கொஞ்ச நேரம் வெளியில் போய் விளையாடவோ நேரம் இருக்காது இது அவர்களின் தலைவிதியோ அல்லது இந்தக் காலத்தின் ஒரு கோலம் தானோ……..என்னவாவது இருக்கட்டும். “நான் என்னுடைய கடமையைச் செய்வம்”

கையில் வெண்கட்டியை எடுத்து கொண்டு எழுந்து கரும் பலகை அருகே போகின்றான் அரவிந்தன்., வெண்கட்டி கரும்பலகையைத் தொடுகிற நேரம், பின்னால் “சேர்” என்று குரல் கேட்கிறது இரண்டாம் வரிசையில் , எழுந்து நிற்கும் மாணவன் ஏதோ சொல்ல விழைகிறான்.

“ என்ன விஷயம் சொல்லு”

இண்டைக்குப் பள்ளிக்கூடத்திலை ரீச்சர் , இருபதாம் பயிற்சியிலை ஒரு கணக்கு விளங்கப்படுத்தினவ. சரியாய் விளங்கேலை சேர்”

“விளங்காட்டில் திரும்ப விளங்கப்படுத்தச் சொல்லிக் கேட்கலாம் தம்பி” அவன் சிரித்து விட்டுச் சொல்கிறான், “ ரீச்சர் எப்பவும் லேற்றத்தான் வருவா. இண்டைக்கு முதலாம் பாடம் முடிகிற நேரம் வகுப்புக்கு வந்தா. ஒரு கணக்கு விளங்கப் படுத்தினா அதின்படி கணக்குச் செய்தால் விடை பிழையாய் வருகுது” புத்தகத்திலை பின்னுக்கு வேறை, விடை போட்டிருக்குதெண்டு ரீச்சருக்குச் சொன்னம். அவ அதைப் பார்க்க வேண்டாமாம் தான் காட்டித் தந்த மாதிரிச் செய்யட்டாம். அந்தக் கணக்கை நீங்கள் ஒருக்கா விளங்கப்படுத்தி விடுங்கோ சேர்”

“சரி நான் அதை விளங்கப்படுத்திறன். ஒரு நிமிடம் வீணாக்காமல் ஒழுங்காய்ப் பாடம் நடத்திற நானே, இப்பதான் பதினைந்தாம் பயிற்சி செய்விக்கிறேன். பள்ளிக்கூடத்திலை என்னெண்டு இருபதாம் பயிற்சிக்குப் போயிட்டீங்கள்.” பரிகாசமாய்க் கேட்டபடி, புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புகிறான் அரவிந்தன்.
“அங்கை எல்லாப் பயிற்சியும் செய்யிறதில்லை. விட்டு விட்டு இடைக்கிடை செய்வம் சேர்” பதில் சொல்லி விட்டு அமர்ந்து கரும்பலகையைக் கவனிக்கிறான். அந்தப் பையன் அரவிந்தன் கணக்கைச் செய்து காட்டிச் சமன் போட்டு விடை எழுத மாணவர்களிடையே ஒரு சலசலப்பு எழுகிறது.

“ சேர் புத்தகத்திலையும் உந்த விடை தான் போட்டிருக்கு” ஆனந்தமாய் ஆரவாரிக்கும் அவர்களைப் பார்க்க ஏனோ பரிதாபமாக இருக்கிறது அரவிந்தனுக்கு “இன்னொருக்கால் இந்தக் கணக்கை விளங்கப் படுத்திறன்” மீண்டும் அதைச் செய்து காட்டி விட்டு தன் ஒழுங்கின்படி பாடத்தைத் தொடர்கிறான் வகுப்புகள் முடிந்து அவன் வெளியே வரும் போது, நேரம் ஆறேகால் காட்டுகிறது.
“டே நாளைக்கு எங்கடை லேனா ரீச்சருக்கு அரவிந்த் சேர் செய்து விட்ட கணக்கைக் காட்ட வேணுமடா”

சைக்கிளை உருட்டியபடி நடந்து வரும் அரவிந்தன் தெருவில் நிற்கும் அந்தப் பையன்களைத் திரும்பிப் பார்க்கிறான் அவர்கள் மரியாதையோடு, அவனுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள்.

இவர்களுக்குப் பள்ளிக்கூடத்திலை கணக்குப் படிப்பிக்கிறது ஆரோ லேனா ரீச்சராமே. ஆராயிருக்கும் கேட்டுப் பார்ப்பம்” என்று தயங்கி நிற்கிறான் அரவிந்தன். இந்த மாணவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்களென்பதே அவனுக்குத் தெரியாது. வெவ்வேறு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்த ரியூற்றறி வகுப்பில் அவனிடம் படிக்கிறார்கள் . இவர்களது பெயர்களை மட்டும் அறிந்து வைத்திருக்கிறானே தவிர , பள்ளிக்கூடப் பெயரையே அவன் கேட்டதில்லை.. ஆனால் இப்போது இவர்களின் பள்ளிக்கூட ரீச்சரைப் பற்றிக் கேட்க வேண்டும் போலிருக்கிறது
உங்களுக்குக் கணக்குப் படிப்பிக்கிறது லேனா ரீச்சரா?|”
அவர்கள் உடனே பதில் சொல்லாமல் சிரிக்கிறார்கள்

“ சேர்! லேனா ரீச்சர் எண்டது, இவன் வைச்ச பேர்” ஒருவன் மற்றவனைச் சுட்டிக்காட்டுகிறான்” “சீ .. உங்களுக்குப் படிப்பிக்கிற ஆசிரியர்களுக்கு உப்பிடிப் பட்டம் சூட்டக் கூடாது. எனக்கென்ன பேர் வைச்சிருக்கிறியள்? விசனத்தோடு கேட்கிறான் அரவிந்தன்.

“ ஐயையோ உங்களுக்கு அப்படியெல்லாம் பேர் வைக்கமாட்டம்’ அங்கை பாருங்கோ சேர் அந்த போர்டிலை உங்கடை பேர் போட்டிருக்கு அதைத் தான் சொல்லுவம்”
அந்த மாணவர்களைப் புரிந்து கொள்ள முடியாத குழப்பத்தோடு, அவன் ரியூற்றறி வாசலில் இருக்கும் நீளமான பலகையை நோக்குகிறான் அதில் முதலாவதாக அவனுடைய பெயர் பெரிய எழுத்துக்களில்” அரவிந்த்” என்று எழுதப்பட்டிருக்கிறது இந்த ரியூற்றறியை ஆரம்பித்து நடத்தும் நண்பன் பார்க்கிறவர்களை ஈர்க்கிற மாதிரிப் பெயரில் ஒரு கவர்ச்சி இருக்க வேண்டுமென்று, அவன் பெயரை, அரவிந்த் என்று எழுதி அரவிந்த் மாஸ்டர் என்று அறிமுகப்படுத்தினான் நண்பனின் உள் நோக்கம் புரிந்த போது அவனது செய்கை” தவிச்ச முயல் அடிப்பது” போலிருப்பதாக
அரவிந்தன் நினைத்துக் கொண்டான்.

இப்போது அது நினைவுக்கு வர இந்த மாணவர்கள் மேல் அவனுக்கு இரக்கம் பிறக்கிறது.” பொழுது சாய்ஞ்சிட்டுது. நல்லாய் இருட்டமுன்னம் வீட்டுக்குப் போங்கோ நாளைக்குச் சந்திப்பம்”

அவர்களிடம் கனிவாய்க் கூறியவாறு சைக்கிளில் ஏறி அமர்கிறான். அவர்கள் சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

“பள்ளிக்கூடத்திலை எங்களுக்குக்கணக்குப் படிப்பிக்கிறது விதுனா ரீச்சர்”

“ஆ! என்ன விதுனாவோ? ‘ அதிர்ச்சியில் அரவிந்தன் சைக்கிள் பெடலை ஊன்றி மிதிக்கிறான். விதுனா அவனுக்குப் பேசப்பட்டிருப்பவள் அவனது மாமன் மகள். எப்பொழுதோ நிச்சயம் செய்து விட்டார்கள் பெற்றோர்.. ஆயின் சகோதரிகளின் கல்யாணம் முடிந்த பிறகுதான், அரவிந்தனுக்குக்கல்யாணம் என்று நினைத்ததில் இன்னும் அவனுக்குக் கல்யாணம் நிறைவேறவில்லை. ஒரு ச்கோதரிக்குப் போன வருடம் கல்யாணம் நடந்தது. அடுத்தவளுக்கும் நிச்சயமாகிவிட்டது விரைவில் கல்யாணம் நடக்கும். அதன் பிறகு அரவிந்தன் விதுனா கல்யாணம் தான்.

– வழக்கமாக விதுனாவை நினைத்தால் அவன் மனதில் ஒரு குளிர்மை ஏற்படும். இப்பொழுதோ அவன் மனம் கொதிக்கிறது விதுனா ஓர் இலட்சிய ஆசிரியையாக விளங்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அவளோ தன் மாணவர்கள் குறை சொல்லுமளவிற்கு நடந்து கொள்கிறாளே இப்போதே நேரில் போய்க் கேட்க வேண்டுமென்று மனம் துடிக்கிறது அம்மா பார்த்துக் கொண்டிருப்பாள். சொல்லி விட்டுப் போகலாமென்று வீட்டிற்கு வருகிறான்
“ அம்மா! விதுனாவிட்டை ஒரு விஷயம் கேக்க வேணும் போட்டு வாறன் “

“ களைச்சுப் போய் வருவாயென்று தேத்தண்ணி ஊத்தி வைச்சிருக்கிறன் குடிச்சிட்டுப் போ” குவளையில் தேனீர் கொண்டு முன் விறாந்தைகு வருகிறாய் தாய்.

“ இரவு நேரம் நிண்டு மினக்கெடாமல் வா தம்பி”

தேனீரைக் குடித்து விட்டு குவளையைத் தாயிடம் நீட்டியவாறு வானத்தை அண்ணாந்து பார்க்கிறான் அரவிந்தன் மேற்கு வானத்தி ல் உரித்த தோடம்பழச் சுளை போல் நாலாம் பிறைச் சந்திரன் பளபளக்கிறது. இடையிடையே நட்சத்திரங்களும் மினுமினுக்கின்றன. இந்தச் சந்திரன் நட்சத்திரங்களெல்லாம் அந்தந்த நேரத்திற்கு வந்து கடமை செய்கின்றன. அப்படி விதுனாவுக்கும் தன் கடமையைச் சரியாய் செய்யத் தெரியவில்லையே. அவன் மனம் அங்கலாய்க்கிறது.

“ ஏன் தம்பி ? ஆகாயத்தை பார்த்து ஏதோ யோசிக்கிறாய் இருண்டு போச்செண்டு போகப் பயப்பிடுறியே? அப்படியெண்டால் காலமை ரியூற்றறிக்குப் போகேக்கை விதுனாவைச் சந்திச்சுக் கொண்டு போவன்”

தாயின் வார்த்தைகள் அவனது சிந்தனையைத் திருப்புகின்றன.

ஓர் இளம் பெண் நிறையத் தங்க நகைகள் அணிந்து கொண்டு நட்ட நடு நிசியில் தன்னந்தனியாளாகத் தெரு வழியே எவ்வித பயமுமின்றிப் போய் வரக்கூடிய ஒரு காலம் வர வேண்டுமென்று, மகாத்மாகாந்தி விரும்பினார். ஆனால் இன்று நான் ஓர் ஆண்பிள்ளை ஒரு மஞ்சாடி தங்கம் கூட நான் அணிந்திருக்கவில்லை இந்த நிலையில் அதுவும் இந்த முன்னிரவு நேரத்தில், தெருவில் போகப் பயப்படுகிறாயா என்று அம்மா என்னைப் பார்த்துக் கேட்கிற அளவுக்கு ஒரு காலம் உருவாகியிருக்கிறதே இந்த சிந்தனை அவனுள் ஒரு புதிய வேதனையைக் கிளறிவிடுகிறது.

“ விதுனா வீட்டுப் படலையும் இப்ப பூட்டியிருப்பினம் இப்ப போய்ப் படலையைத் தட்டிக் கொண்டிராமல் காலமை போவம் ”நினைத்துக் கொண்டு சைக்கிளைப் படியில் ஏற்றிக் கொண்டு போய், உள் விறாந்தையில் நிறுத்தி விட்டு, உடை மாற்றச் செல்கிறான்
விதுனாவைப் பற்றி அந்த மாணவர்கள் சொன்ன விஷயம் கொழுக்கிப் புழுவாய் அவனது மனதைக் குடைகிறது. தாயிடமும் அவன் அதைச் சொல்லவில்லை” ஏனண்ணை உனக்கு இண்டைக்கு மூட் சரியில்லை” தங்கை கேட்க ஏதோ சொல்லிச் சமாளிக்கிறான்.

அரவிந்தனின் தங்கை தொண்டராசிரியை ஆகிப் படிப்பிக்கிறாள். இன்னும் நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை ஆனால் விதுனாவோ முதலிலேயே அரசாங்க சம்பளத்துடன் ஆசிரிய நியமனம் பெற்றுப் படிப்பிக்க வந்தவள் அவள் ஆசிரியை ஆனதில் அரவிந்தன் வீட்டாருக்கு மிகச் சந்தோஷம். அரவிந்தனும் அதில் பெருமைப்பட்டவந்தான். ஆயின் அவன் தான் படிப்பித்தல் துறையில் ஈடுபடுவேன் என்று முதலில் நினைதிருக்கவில்லை கணணியில் பயிற்சி பெற்று அத்துறையில் வேலை செய்யவே விரும்பினான். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கணணி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறவும் ஆரம்பித்திருந்தான். அந்த நேரம் தான் அவனுடன் படித்த பாலா வந்தான்.

“நான் டியூற்றறி ஆரம்பிக்கப் போறன் கணக்குப் பாடத்திற்கு உன்னைத் தான் போடப் போறன். நீகட்டாயம் வர வேணும் “ என்றான்.

“ நான் கொம்பியூட்டர் படிக்கிறன் .நேரமில்லை நீ வேறை ஆரையாவது போடு” ”அரவிந்தன் முதலில் சம்மதிக்கவில்லை.

“நீ கலையில்தானே கொம்பியூற்றர் வகுப்புக்குப் போறாய். பின்னேரத்திலை ரியூற்றறிக்கு வாவன்” அவனும் விடாமல் வற்புறுத்தினான் நண்பனுடைய வற்புறுத்தலைத் தட்ட முடியாமல் தான் அரவிந்தன் ரியூற்ரறியில் பின்னேர வகுப்புக்குப் படிப்பிக்கப் போனான். ஆனால் மாணவர்கள், அவனிடம் காட்டும் மதிப்பும் பணீவும், அவனுக்குப் படிப்பித்தலில், ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு தொகையான அங்கு படிக்க வருவார்களென அவன் எதிர்பார்க்கவில்லை அந்தப் பெரிய விசாலமான பாடசாலைக் கட்டிடங்களுக்குள் கிடைக்காத, அறிவு இந்தச் சிறிய கொட்டகைகுள் இவர்களுக்குக் கிடைக்கிறதா என்று முதலில் அவன் ஆச்சரியப்பட்டான், அந்தக் காலத்தில் ஒரு மாணவன் வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ பட்டதாரியாகவோ ஆவதற்கு அத்திவாரமிட்டுக் கொடுக்கும் முழுப் பங்கும் பாடசாலைகே இருந்தது., இன்று அத்தனிப்பெருமையிலே ரியூற்றறிக்குப் பங்கு கொடுக்க வேண்டிய நிலை ஏன் வந்தது என்று அவன் சிந்திப்பான்.

உண்மையில் முன்னையவர்களிலும் பார்க்க, இன்றைய சிறார்கள். பொது அறிவிலும் கிரகித்தலிலும் தரம் கூடியவர்கள் என்ற அபிப்பிராயம் எல்லாரிடமும் உண்டு. பக்கத்து வீட்டு மூன்று வயதுக் குழந்தையொன்று, அடிக்கடி அரவிந்தன் வீட்டுக்கு வரும் அரசியலிலிருந்து அடுபடி வரையுள்ள விஷயங்கள் பற்றி அந்தக் குழந்தை சொல்வதைக் கேட்டு அதிசயிப்பாள் அரவிந்தனின் தாய்”

“எங்களுக்கு உந்த வயதிலை ஆனா ஆவன்னாவே சரியாய் சொல்லத் தெரியாது.. உந்தப் பிள்ளை பேசிற பேச்சைப் பார்” என்று மூக்கிலே விரல் வைப்பாள் இப்படி மூளையுள்ள இன்றைய பிள்ளைகள் பாடசாலைக்கும் ரியூற்றறிக்கும் மாறி மாறி ஓடி ஓடிப்படிக்க வேண்டியிகிறது என்று அரவிந்தன் அங்கலாய்ப்பான். அதிலும் சில மாணவர்கள் தாங்கள் இரண்டு மூன்று ரியூற்றறிகளுக்குப் போய்ப் படிப்பதாகச் சொல்வார்கள் அதைக் கேட்கும் போது சந்திகளில் காணும் விளம்பரப் பலகைகள் நினைவுக்கு வரும் அரவிந்தனுக்கு. அந்தக் காலம் நடிகர்களின் பெயர்களைக் கவர்ச்சிகரமாய் எழுதிச் சினிமாவுக்குத்தான் இப்படி விளம்பரம் வைப்பார்கள் இந்தக்காலமோ ஆசிரியரின் பெயரெழுதி நேரே அவர்கள் படிப்பிக்கும் பாடங்களின் பெயர் போட்டு, சந்திக்குச் சந்தி ரியூற்றறிக்கு விளம்பரப் பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன இது கல்வியின் முன்னேற்றத்தைக் காட்டுகிறதா அல்லது கல்வியின் சீர்குலைவைக் காட்டுகிறதா என்று புரியாமல் குழம்புவான் அரவிந்தன்.

அவனிடம் படிக்க வரும் மாணவர்களின் வசதி கருதிக் காலையிலும் வகுப்பு நடத்த வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது.அதனால் அவனது கணணிப் பயிற்சி தடைப்பட்டது. அவன் ஒன்று நினைக்க நடப்பது வேறொன்றாகிவிட்டது கணணித் துறையில் இறங்க நினைத்தவன், முழு நேர ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். தன் விருப்பம் ஒரு மனக் குறையாய் இருந்த போதிலும் படிப்பித்தலில் கிடைக்கும் இன்பமும் மாணவர்கள் அவனிடம் காட்டும் பிரியமும் நாளடைவில் மன நிறைவைத் தந்தன. ஆயினும் ஒரு விஷயம் இடைகிடை அவன் மனதைக் குழம்ப வைக்கும் “ விதுனா என்க்கு மனைவியாகப் போகிறவள் அரசாங்க சம்பளம் பெறும் நிரந்தர ஆசிரியையாக இருப்பவள். அவளுக்கு என் வேலை திருப்தியைத் தருமா? என் வேலை பற்றி அவள் என்ன நினைக்கிறாளோ? என்ற கேள்வி அவன் மனதில் எழும்
அவள் ஆசிரியை ஆனதில், அவளை மிக உயர்வாக நினைத்திருந்தான் அவள் மேல் பெரிய மதிப்பு வைத்திருந்தான். ரியூற்றறியில் அவளைப் பற்றிச் சொன்னதைக் கேட்டதோடு அந்த மதிப்பும் போய் விட்டது. தன் கடமையில் கரிசனமில்லாதவளென்று ஆத்திரம் தான் வருகிறது இப்போது.

எப்போது விடியுமென்று காத்திருந்,து, காலையில் ரியூற்றறிக்குப் போவதற்க்குப் பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே புறப்பட்டு விதுனா வீட்டுக்கு வருகின்றான்.

“வா தம்பி. இந்தப் பக்கம் வந்து கன நாளாச்சு” விதுனாவின் தகப்பன் அரவிந்தனை வரவேற்கிறார். குரல் கேட்டு விதுனா சமையலறையிலிருந்து அவசரமாய் வருகிறாள் தேங்காய்ப் பால் பிழிந்து கொண்டிருக்கிறாள். கைகளிலே தேங்காய்ப்பூ ஒட்டிக்கொண்டிருக்கிறது இரவு படுக்கைக்கு அணிந்த கவுணை இன்னும் அவள் மாற்றவில்லை அவள் அவனைப் பார்த்துச் சிரித்தும் அவன் சிரிக்காமல் இருக்கிறான் அவளது கோலம் அவன் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது .” இவள் தலை வாரிச் சீலை கட்டி, இனி எத்தனை மணிக்குப் பள்ளிக்கூடம் போகப் போகிறாள் மனதிற்குள் கொதித்துக் கொண்டே வெளியில் இயல்பாகக் கேட்கிறான்”

“ நேரம் போட்டுது நீ இன்னும் பள்ளிக்கூடத்துக்குப் போக ஆயித்தமாகேலை. இண்டைக்கு லீவா?”

“ இல்லை லீவெல்லாம் எடுத்து முடிஞ்சுது. இண்டைக்குக் கட்டாயம் போக வேணும். இப்ப கொஞ்ச நாளாய் இப்படித் தான். அம்மாவுக்குச் சுகவீனம் வந்ததாலை நான் வீட்டு வேலையும் பார்த்திட்டு ஸ்கூலுக்குப் போக பெஸ்ற் பீரியட் முடிஞ்சிடுது” ஏற்கென்வே அவள் மீது கோபமாய் வந்திருக்கிறான். அதோடு அவள் சொல்றதைக் கேட்டு சுரீர் என்று ஆத்திரம் பொங்குகிறது.

“ரீச்சர் எப்பவும் லேற்றாய்த்தான் வருவா” அந்த மாணவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது ஒரு குற்றத்தைச் செய்து கொண்டு சர்வ சாதாரணமாய் அதைச் சொல்லிக் காட்டுகிறாளே. அவள் உணரத்தக்கதாய் , சூடாய் ஏதோ சொல்லத் துடிக்கிறது மனம், மாமாவும் மாமியும் முன்னால் நிற்கிறார்கள். பேச நா எழவில்லை”அரவிந்தன் முந்தியெல்லாம் வந்தால், நல்ல கலகலப்பாய்க் கதைப்பாய். இண்டைக்குப் பேசவே தயங்குகிறாய். என்ன காரணம்? நீ இப்ப பெரிய, பிரபலமான ஆளாயிட்டாயாம். நல்ல வருமானமாம் விதுனாவின்ரை வகுப்புப் பிள்\ளைகள் அரவிந்த் மாஸ்டர் அரவிந்த் மாஸ்டர் என்று எப்பவும் உன்னைப் பற்றித்தான்
கதைக்குதுகளாம் . ஆகா ஓகோண்டு புகழுதுகளாம்” விதுனாவின் தகப்பன் பெருமையாய்ச் சொல்லிக் கொள்கிறார்.

“நீ பிரபலமான ஆளாயிட்டியாம் பிள்ளைகள் ஆகா ஓகோண்டு உன்னைப் புகழுதுகளாம். மாமன் சொன்ன வார்த்தைகள் மனதில் அலை மோத, அரவிந்தனுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பிக்கிறது. ஒரு புதிர் விடுபடுகிறது. மாணவர்கள் எப்போதும் தன்னைக் கண்டவுடன் ஏன் ஒரு ஹீரோவைக் கண்ட மாதிரி ஆரவாரிக்கிறார்கள் ஏன் இவ்வளவு மதிப்புக் காட்டுகிறார்கள் என்பது அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது, இப்போது விதுனாவின் முன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கையில் பளிச்சென்று எல்லாம் புரிகிறது விதுனாவைஅந்த மாணவர்கள் கேலியாய்ப் பேசிக் கிண்டல் செய்ததற்குக் காரணம் புரிகிறது. அவளுக்குத் தவறை உணர்த்த வேண்டும் எப்படியும் அவளைத் திருத்த வேண்டும் அவனது மெளனத்தைத் தவிப்பைக் கண்டு கொள்ளாமல், மாமன் தன் விஷயத்தைப் பேச ஆரம்பிக்கிறார்.

“தம்பி விதுனாவுக்கும் வயது ஏறுது, நான் ஒருக்கா உங்கடை வீட்டுக்கு வந்து, உங்கடை கல்யாணத்தைப் பற்றி அம்மா அப்பாவோடை கதைக்கப் போறன் . அவை என்ன சொல்லினம்”

மாமனது பேச்சிலே விதுனாவைத் திருத்துவதற்கு ஒரு வழி தெரிய, அரவிந்தனுக்கு மனம் சற்று இலேசாகிறது அவன் மெதுவாய்ப் புன்னகைக்கிறான்.”

“நேற்றுக் காலமைகூட அப்பா சொன்னவர் எங்கடை கல்யாணத்துக்கு நாள் வைக்கிறது, மாமாவோடை கதைக்கப் போறனெண்டு……ஆனால் நான் இப்ப ஒரு தடை வைக்கப் போறன்”

நாணத்தில் முகம் சிவக்க , எங்கோ பார்த்துக் கொண்டிருந்த விதுனா திடுக்கிட்டு அரவிந்தனைப் பார்க்கிறாள்.

“ஓம் விதுனா,பள்ளிக்கு விளையாட்டுப் போட்டியில் தடை ஓட்டம் என்றொரு நிகழ்ச்சி நடக்குமே, அது மாதிரி இந்தத் தடையை நீ தாண்டினால் தான் எங்கடை கல்யாணத்துக்கு நாள் வைக்கிறது. இப்ப உன்ரை மாணவர்களுக்கு உன் மீது மதிப்பே இல்லை அவர்கள் உன்னைக் கேலி செகிறார்கள் இந்த நிலையை நீ மாற்ற வேணும். ஒரு கடமையைப் பொறுப்பேற்றால் அதனைக் கண்ணியமாகச் செய்ய வேணும் சாக்குப் போக்குச் சொல்லிக் கடமைக்குத் தாமதமாய்ப் போறதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றமென்று நான் கருதிறன் என்ரை கடமை நேரத்திலை ஒரு செக்கனையும் நான் வீணாக்கிறதில்லை. கமை எனக்குக் கண் போல. நீ எப்படியென்றால் வீட்டு வேலையைச் சாட்டுச் சொல்லி எப்பவும் லேற்றாய்ப் போறாய். போன பிறகும் உன்ரை கடமையை அக்கறையாய் செய்யேலை. என்னை மாணவர்கள் மதித்துப் போற்றுகிறார்களென்றால், அதுக்குக் காரணம் என்ரை கடமையுணர்வுதான் அது போலை உன்ரை கடமையுணர்வாலை மாணவர்கள் உன்னை ஆகா ஓகோவெண்டு புகழ வேணும் விதுனா ரீச்சர் என்ற உன் கடமையைப் பற்றிப் பேச வேணும், இந்த நிலை வந்த பிறகுதான் எங்கடை கல்யாணம் விதுனா நீ மனம் வைச்சால் ஒரு வாரத்தில இந்த நிலை உருவாக்கலாம்”

கை மணிக்குட்டைப் பார்த்து விட்டு எழுந்து நிற்கிறான் அரவிந்தன்.

“கடமைக்கு நேரமாகுது நான் வாறன்”

– வீரகேசரி 13.02.1994 .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *