கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 9,929 
 

“ஏதாவது கடுதாசி வந்திருக்கா?”

சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தொ¢விப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார்.

“ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!” என்றபடி, கோப்பையில் தேத்தண்ணீரை எடுத்து வருவாள் திலகம்.

அன்று அவளுடைய பதிலில் சிறிது மாற்றம். “இந்தாங்க. ஒங்க மகன் பள்ளிக்கூடத்திலிருந்து!”

“என்னாவாம்?”

“யாருக்குப் புரியுது! ”

அசுவாரசியமாக நோட்டம் விட்டவருக்கு கோபம் வந்தது. அதற்குப் பதில் எழுதித் தொலைக்கவேண்டுமே என்ற கவலை எழ, மனைவிமேல் பாய்ந்தார். “விநாயகம் ஒழுங்கா பள்ளிக்கூடம் போறதில்ல? மூணு நாளா வரல்லேன்னு எழுதியிருக்காங்களே!”

அவளுக்கும் கோபம் எழுந்தது. “தினமும் காலையில அஞ்சு மணிக்கே எழுந்து, கஷ்டப்பட்டு பலகாரம் பண்ணி அவன் கையில குடுத்து அனுப்பறேன் நான்! புத்தகப்பையை எடுத்துக்கிட்டு, ஆறரை மணி பஸ்ஸூக்குப் போயிடுவான். நீங்க வேணுமானா, அவனையே கேட்டுப் பாருங்க!” வீராவேசமாக ஆரம்பித்தவளின் குரல் அடைத்தது. அழுதுவிடுவாளோ என்று பயந்தார் குஞ்சிதபாதம்.

அவருடைய வாழ்வைப் பங்கு போட்டுக்கொள்ள துணிந்து வந்தவள் திலகம். அவளுடைய ஏழ்மையும், குள்ளமும், குண்டுமான உருவமும் அவரைப் பாதிக்கவில்லை. மாறாக, குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவள் கையில் விட்டுவிட்டு, தன் உத்தியோகம் உண்டு, வீட்டில் தொலைகாட்சி உண்டு என்று நிம்மதியாகக் காலத்தைக் கழித்தார்.

அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தான் விநாயகம், தன்னைப்பற்றி ஒரு பூகம்பமே உருவாகிக் கொண்டிருப்பதை உணராது.

பதினாறு வயதாகியும், பன்னிரண்டு வயதே மதிக்கத்தக்க தோற்றம். ஏனோ தானோ என்றிருக்கும் தந்தை, `கண்டிப்பு` என்ற பெயரில் சதா சுடுசொற்களை வீசும் சின்னம்மா, தன் நினைவில் இல்லாத, ஆனால் பிறர் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும், தாய் — இவர்களில் யாரால் அவனுடைய வளர்ச்சி பாதிக்கப் பட்டதோ!

வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி அடையவில்லையே என்ற தாபம் ஒரு புறம்; உடல் வளராமலேயே நின்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மற்றொரு புறம். அதோடு, தான் யாருக்கும் வேண்டாதவனாக குறித்தும் அவனுக்கு கலக்கம் உண்டாயிற்று.

பள்ளிக்கூடத்துக் கட்டுப்பாடுகள், கொள்கைகள் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை முளைக்க ஆரம்பித்தது.

தான் ஒழுங்காக இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே என்ற ஏக்கமானது கெட்டலையும்போது பக்கபலமாக நண்பர்கள் இருக்கிறார்களே என்ற திருப்தியில் மறைந்தது.

எப்படியோ இவ்வளவு நாட்களும் யார் கண்ணிலும் படாமல் தப்பியாயிற்று என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தவன், தந்தை கையிலிருந்த கடிதத்தை அவன்மீது வீசி எறிந்து, கூடவே, “ஏண்டா? இதுக்கு என்னா அர்த்தம்னு கேக்கறேன்!” என்று ஒரு அதட்டலும் போட்டதும், திகைத்துப் போனான்.

ஒரு கணம்தான். குறுக்கு வழியிலேயே போய் பழகிய மூளை அப்போது அவனைக் கைவிடவில்லை. “சின்னம்மாவையே கேட்டுக்குங்கப்பா, நான் பள்ளிக்கூடம் போகாம வீட்டிலேயே இருந்திருக்கேனா அப்படின்னு!” திமிராகப் பேசினான்.

“ஒழுங்காப் போயிருந்தா, இந்த கடுதாசி எப்படி வந்திச்சு?” மலேசிய அரசாங்கப் பள்ளிகளின் விதிமுறைப்படி, தொடர்ச்சியாக மூன்று தினங்கள் பள்ளிக்குச் செல்லாவிட்டால், வீட்டுக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள்.

அயரவில்லை விநாயகம். “டீச்சர் என் பேரைக் கூப்பிடறப்போ, நான் பதில் சொன்னது கேக்காட்டி, `ஆப்ஸெண்ட்` போட்டிருப்பாங்க!” என்று ஒரேயடியாக அளந்தான்.

“எதுக்கு மனசுக்குள்ளே முனகிக்கிறியாம்? உரக்க பதில் சொல்றது!”

“மத்தவங்க பேசறதால, என் குரல் அவங்களுக்குக் கேக்கல போலயிருக்கு! இனிமே ஜாக்கிரதையா இருக்கேம்பா!” என்று இரு பொருள்பட பேசினான் விநாயகம். இனிமேல் மாட்டிக்கொள்ளக்கூடாது. அதிகப்படி இரண்டு நாட்கள்தாம் மட்டம் போடலாம்.

குஞ்சிதபாதத்திற்கு அலுப்பு தட்டியது. மகன் சொல்வது உண்மையோ, பொய்யோ, அதை நம்பினால் நிம்மதி என்று தோன்ற, “சா¢ போ. இன்னொரு தடவை இந்தமாதிரி ஏதாவது வந்திச்சோ, முதுகுத்தோலை உரிச்சுடுவேன்!” என்று எச்சரித்துவிட்டு, அந்த சமாசாரத்தை அப்போதே மறந்துவிட்டவராக, தொலைகாட்சியை முடுக்கினார்.

ஏதோ ஆங்கிலப்படம். கதாநாயகனுக்கு ஆறு பிள்ளைகள். அவளுக்கு நான்கு. இருவரும் விவாகரத்து ஆனவர்கள். காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். மொத்தம் பத்து குழந்தைகள்!

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு மகனை வைத்தே தன்னால் சமாளிக்க முடியவில்லையே, அது எப்படி இந்தக் குடும்பத்தில் எல்லாரும் சிரிப்பும், கேலியுமாக வளைய வருகிறார்கள்?

நடப்பதையே காட்டினால், எவன் படம் பார்ப்பான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது.

சில மாதங்கள் கழிந்தன.

குஞ்சிதபாதத்திடம் ஒரு கடிதத்தை நீட்டிய விநாயகம், “அப்பா! வர்ற ஞாயித்துக்கிழமை எங்க பள்ளிக்கூடத்தில பி டி ஏ (PTA) மீட்டிங்காம். நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்லச் சொன்னாங்க டீச்சர். என்னையும் கூட வரச்சொன்னாங்க” என்றான், சற்றே பயந்தபடி.

“அது என்னடா கஷ்டகாலம்?” டீச்சர் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற கவலையில் கேள்வி தானாக வந்தது.

“பெற்றோர் ஆசிரியர் சங்கம். அதாவது, மாணவர்களோட அப்பாவோ, அம்மாவோ டீச்சர்ஸை பாத்துப் பேசறது”.

“ஓ! அப்போ, மத்த அப்பாவும் வருவாங்க, இல்லே?” தான் மட்டும் தனியாகப் போய் நின்று, உதவாக்கரையான மகனைப் பெற்றதற்கு பேச்சு வாங்கிக்கொண்டு வரவேண்டாம் என்ற நினைப்பில் சற்று நிம்மதி பிறந்தது.

பள்ளி வளாகத்துள் நுழையும்போது, குஞ்சிதபாதத்திற்குத் தயக்கம் ஏற்பட்டது. அவருக்குப் பின்னால் தன் சிறிய உருவத்தை மறைத்துக்கொள்ள முயன்றபடி, “அதோ வர்றாங்களே, அவங்கதான் எங்க டீச்சர்,” என்று கிசுகிசுத்தான் விநாயகம்.

குதிகாலில் சுமார் நான்கு அங்குலம் நீண்ட காலணிகளும், உச்சந்தலையில் போடப்பட்டிருந்த கொண்டையும் அவளை அசாதாரணமான உயரமாகக் காட்டின. உடலைத் தழுவிய மெல்லிய , ஜப்பான் நாட்டு நைலக்ஸ் புடவை, நீல வண்ணத்தில். அதே நிறத்தில் நீண்டு தொங்கிய காதணிகள், கண்ணாடி வளையல்கள். கைக்கடிகாரத்தின் பிளாஸ்டிக் பட்டை மற்றும் நகப்பூச்சும்கூட நீலம்!

`அலங்காரத்தில செலுத்தற கவனத்தை பிள்ளைங்க முன்னேற்றத்திலேயும் காட்டினா தேவலே!` என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் குஞ்சிதபாதம். `இவ்வளவு அழகா டிரெஸ் பண்ணிக்கிட்டா, வயசுப் பசங்க டீச்சரைத்தானே கவனிப்பாங்க! அவங்க படிச்சுக் குடுக்கறதிலே கவனம் போகுமா?` என்ற கவலையும் பிறந்தது.

ஆசிரியர்களின் நடையுடை பாவனை அவர்கள் போதிக்கும் பாடங்களில் மாணவர்களுக்குத் தனி ஆர்வத்தை உண்டாக்கும் என்பதெல்லாம் குஞ்சிதபாதத்தின் அறிவுக்கு அப்பாற்பட்டது. அவர் என்ன, கல்லூரியிலா படித்திருந்தார் சமூக இயல் தெரிய!

“அப்பா! இவங்கதான் எங்க டீச்சர், மிஸஸ் பாணி,” என்ற மகனின் குரல் கேட்டு, தம் எண்ணங்களிலிருந்து விடுபட்டார் குஞ்சிதபாதம்.

“எங்கப்பா, டீச்சர்!”

மிஸஸ் பாணி புன்னகையுடன் தலையைத் தாழ்த்தினாள், அந்த அறிமுகத்தை ஏற்கும் விதத்தில். “ஒங்களை இதுக்கு முன்னே பாத்ததில்லேன்னு நினைக்கிறேன்!” உருவத்திலிருந்த அழகு குரலில் இல்லை.

`பாவம்! பிள்ளைங்களோட கத்திக் கத்தி, தொண்டை வரண்டுபோச்சு டீச்சரம்மாவுக்கு!` என்று பா¢தாபப் பட்டுக்கொண்டார் குஞ்சிதபாதம்.

“ரெண்டு நாள் முந்திதான் இவன் வந்து சொன்னான்..,” என்று மென்று விழுங்கினார்.

“இந்தத் தடவை சொல்லாட்டி, நானே நேரிலே ஒங்க வீட்டுக்கு வந்துடுவேன்னு மிரட்டி அனுப்பினேன். ஒரு தடவைகூட விநாயகம் ஒங்ககிட்டே லெட்டரை ஒங்ககிட்டே குடுக்கலியா?”

“ஏண்டா டேய்!” மகன்மேல் பாய்ந்தார் தந்தை.

இப்படி ஒரு நேரிடைத் தாக்குதலை எதிர்பார்த்திராத பையன் மிரண்டே போனான்.

அவனைப் பார்த்து முறுவலித்தாள் ஆசிரியை. அவளுடைய உத்தியோகத்தில் இந்தமாதிரி எத்தனை அப்பாக்களைச் சந்தித்திருக்கிறாள்!

“வாங்க. அப்படிப்போய் ஒக்காந்துக்கிட்டு பேசலாம்,” என்று நடந்தவள்பின்னால் பலியாடுகள்போல் இரு ஆண்களும் நடந்தனர்.

“விநாயகம் ஒரு மாசத்தில ரெண்டு, மூணு நாள் கூட ஸ்கூலுக்கு வரதில்லே. அதுக்காக ஒங்களுக்கு எத்தனை லெட்டர் போட்டேன்! நீங்க ஏன் ஸார் எந்த ஆக்ஷனும் எடுக்கலே?”

டீச்சா¢ன் குற்றச்சாட்டைச் செவிமடுத்த குஞ்சிதபாதம் திகைத்துப் போனார். அவருக்கு ஒரே ஒரு கடிதம்தானே வந்தது? தன் உடலைக் குறுக்கியபடி பக்கத்தில் நின்றிருந்த மகனை நோக்கித் திரும்பினார். கையும் களவுமாகப் பிடிபட்டு, திருடனைப்போல் அவன் விழித்ததைப் பார்த்து அவருக்கு உண்மை புலனாகியது. தபால்காரரை மடக்கி, தனக்கு வரும் கடிதங்களை பாதி வழியிலேயே பெற்றுக் கொண்டிருக்கிறான்!

டீச்சர் தன்பாட்டில் தொடர்ந்தாள்: “விநாயகத்தோட படிப்பு மட்டுமில்ல, உடம்பும் ரொம்ப இளைச்சிருக்கு, பாத்தீங்க இல்ல?”

“அதுக்கு என்னங்க டீச்சர் பண்றது? காலையில போனா, ராத்திரி ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வரான். இங்க தினமும் ஹாக்கி, ·புட்பால் எல்லாம் விளையாடறானாமில்ல!” என்றார் அப்பாவியாக.

ஆசிரியை பெரிதாக நகைத்தாள். “விளையாடறானா? பாடம் படிக்கவே கிளாசுக்கு வராதவன் விளையாட மட்டும் ஸ்கூலுக்கு வர்றானா? அவன் சொன்னா, நீங்களும் நம்பிடறதா?”

குஞ்சிதபாதத்துக்கு அவமானம் தாங்கவில்லை.

அடுத்த கேள்வி பிறந்தது.”ஒங்க மனைவிக்கும், ஒங்களுக்கும் இடையே எந்த மாதிரி உறவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

என்னென்னவோ கேட்கிறாளே என்று அருவருப்படைந்தார் குஞ்சிதபாதம்.

அவருடைய எண்ணப்போக்கு முகத்திலும் பிரதிபலிக்க, புன்னகையுடன் விளக்கினாள் மிஸஸ் பாணி. “அதாவது, நீங்க ரெண்டுபேரும் குழந்தைகளோட நலனைப்பத்தி அக்கறையோட சேர்ந்து விவாதிப்பீங்களா? பெத்த பிள்ளைகளோட சேர்ந்து பொழுதைக் கழிக்க விரும்பறீங்களா? இதைத்தான் கேக்கறேன்”.

எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறாள் என்பது விளங்காது, பதில்சொல்லத் தொ¢யாது விழித்தார் குஞ்சிதபாதம்.

அவருடைய மௌனத்தை விநாயகம்தான் கலைத்தான், கணீரென்ற குரலில். “எனக்கு அம்மா கிடையாது, டீச்சர். சின்னம்மாதான் இருக்காங்க”.

மென்று விழுங்கியபடி, ” ஆமாம். என் ரெண்டாந்தாரம்,” என்று சேர்ந்துகொண்டார் குஞ்சிதபாதம்.

ஏதோ புரிந்தவள்போல் தலையை ஆட்டினாள் மிஸஸ் பாணி. “ஓ! முதல் மனைவி இறந்தபிறகு, விநாயகத்தை வளர்க்க இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டீங்கன்னு சொல்லுங்க!”

விநாயகத்திற்கு திடீரென்று ஆவேசம் பிறந்தது. “எங்கம்மா செத்துப் போகலே, டீச்சர். யாரோடேயோ ஓடிப் போயிட்டாங்க. அவங்க எங்க குடும்பத்துக்கு உண்டாக்கிட்டுப் போயிருக்கிற களங்கத்தைத் துடைக்க முடியலியே என்கிற ஆத்திரத்திலே என்மேலே வஞ்சம் தீர்த்துக்கிறாங்க இவங்க எல்லாரும்!” பெரிய குரலில் அலறிவிட்டு, சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். ஆண்டாண்டு காலமாகத் தன்னையுமறியாமல் தேக்கி வைத்திருந்த துயரம் எல்லாம் வெளிக் கிளம்பியது.

என்றோ சிறுவனாக இருந்தபோது நடந்ததை அப்படியே விட்டிருந்தால், அவனுக்கு மறந்து போயிருக்கக்கூடும்.

ஆனால், அது மனதில் என்றும் நிலைத்திருப்பது அவனுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று எண்ணியவள்போல, திலகம் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாரிடமும் தம்பட்டம் அடிப்பாள்: `விநாயகம் என் சொந்தப் பிள்ளைன்னுதான் எல்லாருமே நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அவன் எங்க வீட்டுக்காரரோட மூத்த சம்சாரத்துக்குப் பிறந்தவன்`. இந்த இடத்தில் சற்று நிதானித்து, கேட்பவர்களை யோசிக்கவைப்பாள். `அந்தச் சிறுக்கி எவனோடேயோ ஓடிப் போயிட்டா. இவரு, பாவம், மானி. சாது. மகனை வளர்க்க என்னைக் கட்டிக்கிட்டார்!` என்று நீட்டி முழக்கி, இன்னொருத்தியின் மகனைப் பேணும் தன் நல்ல குணத்தையும், மூத்தவளுடைய தரக்குறைவான நடத்தையையும் ஒப்பிட்டுக் காட்டுவாள்.

அதையே திரும்பத் திரும்பக் கேட்கும்போதெல்லாம் விநாயகத்தின் மனம் கொந்தளிக்கும். அப்படிப்பட்ட ஒரு தாய்க்குப் பிறந்த தான் மட்டும் ஒழுக்கமானவனாக இருக்க முடியுமா என்ற சந்தேகம்தான் அவனிடம் தலைதூக்கியது.

தன் இருப்பிடத்திலிருந்து எழுந்த ஆசிரியை, மாணவனின் மனக்குமுறலைப் புரிந்துகொண்டவளாய், ஆறுதல் அளிக்கும் வகையில் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

விம்மலுக்கிடையே தொடர்ந்தான்: “எங்கம்மா செய்த காரியத்துக்கு நானா டீச்சர் பிணை? அவங்க நல்ல காலம் போயிட்டாங்க. என்னால முடியலியே! அதான் கண்ட வழியில போறேன்”.

குஞ்சிதபாதம் விக்கித்துப் போனார். மகன் ஒரு முட்டாள், கீழ்ப்படியாதவன் என்றுதான் அதுவரை நினைத்திருந்தார். ஆனால், அவனுடைய குற்றச்சாட்டுகளைக் கேட்டபின், தன்மீதே அவருக்குச் சந்தேகம் பிறந்தது.

எப்போது மாறினான் இப்படி ஒரு உணர்ச்சிக் குவியலாக?

எவ்வளவு காலமாக இத்துணை ஏக்கத்தையும் சுமந்து வந்திருக்கிறானோ என்ற எண்ணம் உரைக்க, தன்னையுமறியாமல் மகன்மேல் பாசம் சுரந்தது.

“கண்ட வழியிலே போறதாச் சொன்னியே, விநாயகம்! சிகரெட்டா?”

கொஞ்சம் தயங்கிவிட்டு, கண்ணைத் துடைத்தபடி, `ஆமாம்` என்பதுபோல் தலையாட்டினான்.

“டாடா? (DADAH?)

போதைப் பழக்கம் கிடையாது என்று தலையசைப்பிலேயே மறுத்தான்.

சற்றுமுன் நெகிழ்ந்திருந்த குஞ்சிதபாதத்தின் மனம் மீண்டும் கல்லாகியது. ஆத்திரத்தில் அறிவிழந்தார். மகனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

“என்னடா சொல்றே? இந்த வயசிலே சிகரெட் பிடிக்கிறியா, காலிப் பயலே! வெக்கமா இல்லே, டீச்சர் எதிரிலேயே ஒத்துக்கிட?”

துடிக்கும் உதடுகளுடன், தலையைச் சற்றே சாய்த்தபடி ஆங்காரத்துடன் அவரை முறைத்துப் பார்த்தான் மகன்.

நிலைமையை மிஸஸ் பாணி தன் வழியில் சமாளிக்கப் பார்த்தாள். “நீ கொஞ்சம் வெளியே இரு, விநாயகம். நான் அப்பாவோட தனியா பேசணும்”.

உதடுகளைப் பிதுக்கியபடி அவன் அசையாது நின்றிருந்தான். வேறு வழியின்றி, அவன் எதிரிலேயே அவன் மனநிலைமையை அலசினாள். “புகை பிடிக்கிறதில்லேன்னு இவன் பொய் சொல்லி இருக்கலாம். ஆனா, இவன் அப்படிச் செய்யல. ஏன் தொ¢யுமா?”

தந்தை, மகன் இருவருமே உன்னிப்பாகக் கவனித்தனர்.

“தான் கெட்டுப் போறதை தன்னாலதான் தவிர்க்க முடியலே. மத்தவங்களாவது தன்னை நல்வழிப்படுத்த மாட்டாங்களான்னு ஏங்கிப் போயிட்டான்”.

விநாயகத்திடமிருந்து ஒரு பெரிய விம்மல் வெளிப்பட்டது.

“அதனாலதான் உண்மையை ஒத்துக்கிட்டான். அதுவே நல்ல ஆரம்பம்தான். என்ன சொல்றீங்க?”

அந்த அழகிய உடலுக்குள் அறிவு மட்டுமின்றி, அளவற்ற அன்பும் இருப்பது புலன்பட, குஞ்சிதபாதம் மனம் நெகிழ்ந்து கையைக் கூப்பினார்.

“பிள்ளைங்களை ஒழுங்கு படுத்தறது ஆசிரியர்கள் பொறுப்பு மட்டும்தான் என்கிறமாதிரி நடந்துக்கிறவங்கதான் இங்க அதிகம்,” மேலும் சொன்னாள்.

ஏதேதோ சொல்கிறாளே!

குஞ்சிதபாதம் நெளிந்தார்.

“அடடே! நீங்க வித்தியாசமா எடுத்துக்கிட்டீங்களா? பொதுவாச் சொன்னேன். தனித்தனியா நாம்ப எதுவும் செய்ய முடியாது. ஆனா, பெத்தவங்களும், ஆசிரியர்களும் ஒண்ணு சேர்ந்தா, கண்டிப்பா ஒரு நல்ல குடிமகனை உருவாக்க முடியும். என்ன சொல்றீங்க?”

தான் செய்யும் தொழிலில் கிடைக்கும் சம்பளத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்கேற்ப வேலை செய்யாது, அதன் மூலகாரணத்தையும், சிறப்பையும் அறிந்து நடக்கும் இவளைச் சந்தித்தது தன் பாக்கியம்!

“ஒரு பையனுக்கு அப்பாதான் வழிகாட்டி. சின்னம்மா நல்ல எண்ணத்தோட கண்டிச்சாலும், `பெத்த தாயா இருந்தா இப்படி தன் மனம் நோக ஏசுவாளா?`ன்னு நினைச்சு வருந்தலாம். அதுவே நீங்க உரிமையோட கண்டிச்சா, `அப்பாவுக்குத்தான் நம்பமேல எவ்வளவு அக்கறை!’ன்னு புரிஞ்சு ஆனந்தப்படுவான். ஒங்க அன்பையும், ஆதரவையும் எப்படியாவது அடையணும்னுதான் அவன் எதை எதையோ தேடிப் போயிருக்கான். நல்ல வேளை, சிகரெட்டோட போச்சு”.

பள்ளிக்கூட வளாகத்திலிருந்து வெளியே நடக்கும்போது, கோயிலுக்குப் போய்விட்டு வந்த நிறைவு இருவரிடமும்.

“என்னங்க, ஒன்பது மணிக்கே படுத்துட்டீங்க? சீரியல் பாக்கலே?”

“அது கிடக்கு! சும்மா சும்மா டிவி போட்டா, அதிலதான் அவன் மனசு போகும்!”

மகன்மேல் அவருக்குப் புதிதாகத் தோன்றியிருந்த கா¢சனம் திலகத்திற்குப் புதிராக இருந்தாலும், அவளுக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

(‘ஓடிப் போனவளின் மகன்’என்ற தலைப்பில், ஏப்ரல் 1974-ல் வெளிவந்து, தமிழ்நேசன் பவுன் பரிசும், மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரப் பரிசும் பெற்றது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *