நான் நீயாக.. நீ நானாக..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 16,543 
 

சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள்; அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள் ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு.

‘என்ன..? திடீரென்று அழகுப்பாட்டு பாடுகிறாய் என்கிறீர்களா..? ம்.. என் கஷ்டம் எனக்கு.. இப்படித்தான் அவ்வப்போது புலம்புவது என் வழக்கம். இதையெல்லாம் நீங்கள் கவனிக்காமல் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள், என் உயிர்த்தோழி சரிதா போல..’

‘அவ.. வேலைனு வந்துட்டா வெள்ளக்காரி.. ஸ்கூல் டைம்ல இருந்தே என்னோட குளோஸ் ப்ரண்டு. காலேஜ்லயும் ஒரே குரூப். காலேஜ் முடிச்சிட்டு வேலை தேடி ஒன்னாத்தான் அலைஞ்சோம். அதான் ஒரே கம்பெனிலேயே வேலையும் கிடைக்க காரணமாச்சு…’

‘வேலைக்கு சேர்ந்த அன்னைக்கு.. எங்க கூட இன்னும் ரெண்டு பேர் வேலைக்கு சேர்ந்தாங்க.. ஆண்கள்.. எங்க ஏஜ் குரூப் தான். அவங்க பேரு சங்கர் அப்பறம் அன்வர்…’

‘எங்க கம்பெனில நாங்க நாலு பேரும் சேர்றதுக்கு முன்னாடியே சரிக்குச் சரியா பெண்களும் ஆண்களும் இருந்திருக்காங்க.. நாங்க சேர்ந்த பின்னாடியும் இதுவே தொடர்ந்துச்சு…’

‘சேர்மன் நல்லவர். இப்படிப்பட்ட நல்ல பாலிசிகளை ஃபாலோ பண்றதும் இல்லாம, அவங்க ப்ரண்ட்ஸுக்கும் சொல்லி பல பெண்களோட குடும்பத்துல விளக்கேத்தி வச்சிருக்கார்…’

‘அப்புறம் நாங்க சேர்ந்த அன்னைக்கு நடந்த கதையக் கேளுங்க. அன்னைக்கு ஈவ்னிங் எங்க நாலு பேரையும் டீ, வடையோட பார்ட்டி தரச் சொல்லிட்டாங்க… என்கிட்டேயும், சரிதாகிட்டேயும் சத்தியமா பணம் இல்ல. சேர்ந்து மொத மாசம் சம்பளம் வாங்கினாத்தான் பார்ட்டினு நாங்க சொல்ல… இல்ல இல்ல நாங்க பார்த்துக்கறோம்னு சங்கரும் அன்வரும் அதுக்கு செலவு பண்ணாங்க..’

‘எங்களப்போலவே நல்ல பசங்க போல.. எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்.. ஆனா சரிதா.. சடசட படபட தான்.. யாரா இருந்தாலும் டக்குனு பேசிடுவா.. கொஞ்சமா பிடிச்சுப் போச்சுனா நல்ல ப்ரண்டாவும் ஆகிடுவா..’

‘அடுத்த நாள்ல இருந்து ஆபிஸ் ஆண்கள் எல்லாம் வெட்டுன பலாப்பழத்த மொய்க்கற ஈக்கள் மாதிரி சரிதாவ மொய்க்க ஆரம்பிச்சிட்டாங்க..’

‘வேலைய நான் சொல்லித்தரேன்.. நான் சொல்லித்தரேனு.. ஒரே போட்டி..’

‘கடைசியில யாருக்கும் அந்த வேலையைக் கொடுக்காம, சேர்மனே அந்த வேலையை ஏத்துக்கிட்டார்..’

‘என் பக்கம்.. ஈயும் வர்ல.. பேயும் வர்ல… ஒரு வயசான அம்மா.. அடுத்த மாசம் ரிட்டயர்டு ஆகப்போறவங்க.. பேரு லட்சுமி.. அவங்க கிட்ட எனக்கு சொல்லித்தர்ற‌ வேலைய ஒப்படைச்சிட்டாங்க..’

‘நானும் சரிதாவும் ஒரே லேடீஸ் ஹாஸ்டல் தான்.. ரெண்டு மூனு நாளா சரிதா எங்கிட்ட கூட சரியா பேசறது இல்ல.. எனக்கு ஒன்னுமே புரியல.. ஏதோ ஒரு விஷயம் இருக்கு.. சொல்லுடீனு சொன்னாகூட அவ ஒன்னும் வாயத்திறக்கவேயில்ல..’

‘நைட் தூங்கும் போது.. எதோ சத்தம்.. ” நான் ஏன் அழகா பொறந்தேன்? நான் ஏன் அழகா பொறந்தேன்”னு.. முழிச்சுப்பார்த்தா தூக்கத்துல உலறிட்டு இருக்கறா சரிதா…’

‘என்னடீனு? எழுப்பிக்கேட்டா அவளுக்கு ஒன்னும் தெரியல..’

‘அடுத்த நாள் எல்லாம் வழக்கம் போல அமைதியாத்தான் இருந்தா.. பழைய கலகலப்பு அவகிட்ட இருந்து போயிருச்சு… எனக்கு ஒன்னுமே புரியல..’

‘இதப்பத்தி வேற யார்கிட்ட கேக்கறதுனும் தெரில.. சரிதாவோ அதப்பத்தி எங்கிட்ட ஒன்னுமே சொல்றமாதிரியும் இல்ல..’

‘இந்தக் கொஞ்ச நாள்ல சங்கரும், அன்வரும் நல்ல ப்ரண்ட்ஸா மாறிட்டாங்க..’

‘அப்பத்தான் ஒரு இங்கிலீஸ் படத்தப் பத்தி அன்வர் சொன்னான். இரண்டு பேர்.. முகத்த மாத்திப்பாங்க.. சோ.. மனசால அவங்க வேற ஆட்கள்.. முகத்தப்பார்த்த.. முகம் சொல்ற ஆளா எல்லோருக்கும் தெரிவாங்க.. பட் உள்ளுக்குள்ள இருக்கறதோ வேற ஆள்..’

‘அதப்பத்தியே அடுத்த ரெண்டு மூனு நாளைக்கு அச போட்டுட்டே இருந்தேன். இது சாத்தியமா? ஒன்லி பேன்டசி படங்களிலும், கதைகளிலும் மட்டும் தான் இது நடக்குமா.. அப்படி இப்படீனு ஒரே குழப்பச் சிந்தனை..’

‘இதப்பத்தியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கும் போது சங்கர்.. ஒரு சித்தரப் பத்தி சொன்னான்..’

‘பயங்கர பவர்புல். அவர்கிட்ட யார் என்ன கேட்டாலும் அவருக்கு அது புடிச்சிருந்தா உடனே நடத்தி வைக்கறாருனு.. எனக்கு அவர உடனே பார்க்க ஆச வந்திருச்சு…’

‘சங்கரும் அடுத்த நாளே என்னை அவர்கிட்ட கூட்டிட்டுப் போனான்..’

‘நான் அங்க போனதே சரிதாவுக்காகத்தான்..’

‘எப்பவுமே கலகலனு இருக்கறவள, இப்படி பதட்டமா படபடப்பா வித்தியாசமா பார்க்கவே என்னால முடியல.. என்னோட உணர்ச்சிகளையெல்லாம் கொட்டி சித்தர்கிட்ட அழுதிட்டேன்..’

‘அப்போ அவர்கிட்ட ஒரே ஒரு கோரிக்கை வச்சேன்.”

“ஐயா.. என்னை ஒரே ஒரு நாள் சரிதாவா மாத்தி வாழவிடுங்க.. அவ என்ன பிரச்சனையில இருக்கானு நான் கண்டுபிடிச்சாகனும்..”

‘நான் சரிதானு பேரச் சொல்லும் போதே அவர் முகம் லேசா மாறுச்சு… நான் அத ஒன்னும் கண்டுக்கல.. உடனே அவரும் ஒரு கேள்வியக் கேட்டார்…’

“சரி.. நீ ஒரு நாள் சரிதானா.. சரிதா எங்கப் போவா?”

“ம்.. சரிதாவ நானா மாத்திடுங்க.. ப்ளீஸ் ஒரே ஒரு நாள்..”

“சரி.. இன்னைக்கு நைட் பன்னெண்டு மணிக்கு மேல.. உங்க ரெண்டு பேரோட மனசும் இடம் மாறிக்கும்.. உடம்பால அது பழைய மாதிரியும்.. நெனப்பால புது மாதிரியும் இருப்பீங்க.. ஆனா சரியா ஒரு நாள் மட்டும் தான்.. என்ன புரிஞ்சுதானு?”, சித்தர் சாமி கேக்க, நான் அவர் கால்ல விழுந்து எந்திருச்சு வந்தேன்..’

‘நைட் பன்னெண்டுக்கே எனக்கு அந்த மாற்றம் பதிவாயிருச்சு…’

‘சரிதாவுக்கும் அது புரிஞ்சாலும், அன்னைக்கு ஒரு நாள் அவளுக்கு எந்த சந்தேகமும் வராம பார்த்துக்கங்க சித்தர்னு சொன்னதால நான் ஹேப்பியாத்தான் இருந்தேன்..’

‘ஆபிஸ்ல நுழைஞ்சோன எல்லாருமே என்னை (அதான் சரிதாவ) வித்தியாசமாப் பார்த்தாங்க.. ஏன்னா பல நாளா மிஸ்ஸாகியிருந்த சிரிப்பு, இன்னைக்கு திரும்ப வந்ததுல எல்லாருக்கும் சந்தோசம்..’

‘ஆனா இவ ஏன் சரிதா மாதிரி ஆயிட்டானு என்னை.. (அதாவது சரிதா இருந்த என்னை) எல்லாரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க..’

‘சரி.. அத விடுங்க..’

‘இன்னைக்கு சரிதாவா என்னென்ன நிகழ்வுகள சந்திக்கப் போறேனு பார்க்க ஆர்வமா காத்திருந்தேன்..’

‘ஆபிஸ்குள்ள நுழையும் போதே, ரெண்டு பேரு வேணும்னே என்னை (சரிதாவ) இடிச்சிட்டுப் போறானுங்க..’

‘அட.. சரிதாவோட தோழியா இத்தன வருஷம் நான் இருந்தும், எனக்கு இந்த அனுபவம் இதுவரைக்கும் ஏற்பட்டது இல்லையே..!!’

‘அடிக்கொருதரம் என்னோட (சரிதா) டேபுளுக்கு மூனு நாலு பேரு வர்றாங்க.. எதாவது சந்தேகம் கேக்கறாங்க.. இல்ல எதாவது சும்மாவாச்சும் கடலை போட பாக்கறாங்க.. அப்பறம் போயிடறாங்க.. வேலையே செய்ய முடியலையே!’

‘கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தா, ஏழெட்டு கண்ணுங்க எப்பவுமே என்னை (சரிதா) மொய்ச்சுக்கிட்டே இருக்கு.. அட கொஞ்சம் அழகா இருக்கறது இவ்வளவு தப்பாடா!!?? ச்சே….’

‘நடுவுல ஏழெட்டு கால் வேற.. ரெண்டு பேரு எங்க காலேஜ்ல படிச்ச ரவுடிங்க.. “என்னடி .. என்ன முடிவு பண்ண..?” அப்படீனு மிரட்டலான கேள்வி வேற.. ஒன்னுமே புரியல..’

‘சரிதா.. பெருசா.. எதோ சிக்கல்ல மாட்டிட்டு இருக்கானு மட்டும் தெரியுது.. ஆனா என்னானு இன்னும் பிடிபடல..’

‘டைம் வேற ஓடிட்டே இருக்கு… சித்தர் எனக்கு கொடுத்ததே ஒன்டே அவகாசம்.. இதுல பாதி நாள் போச்சே.. லஞ்ச் அவரும் ஆச்சு..’

‘புலம்பியபடியே என்னை (ஒரிஜினல் சரிதா) அழைத்துக்கொண்டு லஞ்ச் சாப்பிடச் சென்றேன்.’

‘இப்பவும் அவள் எதுவும் பேசவில்லை. அதுவரை எனக்கும் நிம்மதியே..’

‘அப்படியே பொழுது போக.. மாலை நான்கரை மணி ஆனது. இன்னும் அரைமணி நேரத்தில் ஆபிஸ் முடிந்துவிடும்.’

‘அப்போது சேர்மன் அழைப்பதாக எனக்கு (சரிதா) தகவல் வந்தது.’

‘அவரது ரூமுக்குச் சென்றவுடன் அத்தனை ஜன்னல்களும், கதவுகளும் சாத்தப்பட்டன. இப்போது ரூமில் நானும் அவரும் மட்டும் தான்..’

“சொல்லுமா சரிதா.. என்ன முடிவு எடுத்திருக்க? சீக்கிரமா ஒரு பாஸிடிவான பதிலச் சொன்னீனா… உனக்கு நல்லது. உன்னோட தங்கச்சி கூட எதோ ஒரு ஊர்ல ஹாஸ்டல்ல இருந்து படிக்கறதா சொல்லி இருக்க.. அதையும் ஞாபகம் வச்சுக்க..”

“நான் நினைச்சா உன்ன என்ன வேணா செய்ய முடியும்!! என் பவர் தெரியுமில்ல.. உன்னோட ஹிஸ்டரிய அக்குவேறு ஆணிவேறா தெரிஞ்சு வச்சிருக்கேன். நான் என்னோட ப்ரண்ட்ஸ் அஞ்சு பேரு, எங்களோட ஒரு நான் வந்து என் சொந்த ரிசார்ட்டுல நீ தங்கி இருந்தா போதும். அப்பறம் உன்னை எந்த டிஸ்டர்ப்பும் பண்ண மாட்டோம். சீக்கிரம் உன் முடிவச் சொல்லு.”

“இத எப்படியாவது லீக் பண்ணி எங்கள மாட்டி விட முயற்சி பண்ணா, உனக்கு மட்டுமில்ல உன் குடும்பத்துக்கே ஆபத்து.”

“உன்னோட காலேஜ்ல படிச்ச ரவுடிப்பசங்க.. நாலு பேர்.. இப்ப என் கைக்குள்ள.. அவனுக இப்ப உன் வீட்டை, உன் தங்கச்சி ஹாஸ்டலத் தான் சுத்திக்கிட்டு இருக்கானுக. சீக்கிரமா முடிவச் சொல்லு.. அப்பறம் நீ பாட்டுக்கு உன் வேலைய தொடர்ந்து பாரு.. டக்குனு இன்கிரிமென்ட்.. டக்குனு புரமோசன்.. டக்குனு ஃபாரின் டிரிப்.. அப்பறம் உனக்கு வேண்டிய எல்லா வசதியும் செஞ்சு கொடுக்க நாங்க ரெடி.. வெயிட்டிங் பார் யுவர் ரிப்ளை..”

“சீக்கிரமா சொல்லிருடி.. வெள்ளத்தோலு.. உன் கொள்ளை அழகு.. எப்பவோ எங்கேயோ என் ப்ரண்டு ஒருத்தன் பார்த்துட்டான். அப்ப இருந்து ஒரே டார்ச்சர்.. டார்ச்சர்..”

“எங்க குருப்போட பழக்கமே பல வருஷமா இதுதான். எங்களால வேட்டையாடப்பட்ட மான்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்ல..”

“கடத்தறது ஒன்னும் பெரிய விஷயமில்ல..”

“என்ன.. நம்ம ஆபிஸ் பொண்ணாயிட்ட.. அதான் பக்குவமா பார்த்து பார்த்து கேட்டு கேட்டு வெயிட் பண்றேன். இன்னும் ரெண்டு நாள் டைம் தர்றேன்.. தப்பான முடிவச் சொன்னா உன் தலையெழுத்த எவனாலும் மாத்த முடியாது. ஜாக்கிரதை.. இப்ப போலாம்..”

‘சரிதாவாகவே இருந்தாலும் இப்படி ஒரு கொடூரமான சூழ்நிலையில் சரிதா மாட்டி இருப்பதை என்னால் தாங்கவே முடியவில்லை.. உடம்பெல்லாம் ஆடத் துவங்கியது..’

‘ஓஹோ.. இதுதான் விஷயமா? இவ்ளோ பெரிய சிக்கல்ல சரிதா மாட்டி இருக்காளே..!? இவளை எப்படி இதுல இருந்து காப்பாத்தறது என்பதே என்னுள் இப்போது ஓடும் சிந்தனையாக மாறிப் போனது..’

‘அன்றைய இரவு பனிரெண்டு மணிக்கு சித்தர் சொன்னது போல இருவரும் பழைய படி மாறினோம்..’

அடுத்தநாள் காலை தூங்கி எழுந்தவுடனே சரிதா என்னை நோக்கி ஓடிவந்தாள்..’

“அடியே.. நேத்து எனக்கு என்னாச்சு..? ஒரு வாரமா தலை பாரமா இருந்த மாதிரில இருந்துச்சு.. ஆனா நேத்து எனக்கு அப்படி எதுவும் இருந்த மாதிரி தெரியலையே…!”, என்றாள் ஆச்சரியமாக.. முகத்திலும் சிறு புன்னகை..’

‘சரிதாவை பழையபடி பார்க்கவே எனக்கு பரவசமாக இருந்தது. சரி அவளிடம் விஷயத்தைச் சொல்லி விடலாம் என மெல்ல ஆரம்பித்தேன்..’

“சரிதா..”

“ம்..”

“ஒரு உண்மைய உங்கிட்டச் சொல்லட்டா?”

“ம்..”

“அப்பறம் திட்டக்கூடாது”

“சரிடி..”

“எல்லாம் உனக்காகத்தான் நான் பண்ணேன்.. உனக்காக மட்டும் தான்.. என் உயிர்த்தோழி உன்னை எப்படியாவது உன் பிரச்சனைகள்ல இருந்து வெளியே கொண்டு வர்றது மட்டும் தான் என்னோட முக்கியமான வேலை. அதுக்காகத்தான் நான் இவ்வளவும் பண்ணேன்..”

‘நான் பேசுவதைக் கேட்க கேட்க சரிதாவின் முகம் மாறியது. என்ன சொல்றா இவ? நான் பிரச்சனையில இருக்கேனு இவளுக்கு எப்படித் தெரியும்..!!??’

“அடியே.. ஃபஸ்ட் விஷயத்தைச் சொல்லுடி.. அப்பறம் விளக்கத்தச் சொல்லலாம்”

“ம்.. சொல்றேன்.. நேத்து ஒரு நாள்.. நீ நானாவும், நான் நீயாவும் இருந்தோம்”

“என்ன..!!?”, என செம அதிர்ச்சியானாள் சரிதா.

“ஆமா.. கொஞ்ச நாளா நீ வேற மாதிரி ஆயிட்ட.. பழைய சிரிப்பு.. பழைய கலகலப்பு இல்ல.. எப்பவுமே புன்னகைக்கிற உன் முகம்.. என் கண்ணுக்கு புலப்படவே இல்ல.. எவ்வளவோ வாட்டி கேட்டும்.. நீயும் அதச் சொல்ற மாதிரி தெரியல.. அதான் நானே ஆக்சன்ல இறங்கிட்டேன்.. ஒரு சித்தரின் மூலமா.. ஒரு நாளைக்கு நாம ரெண்டு பேரும் இன்டர்சேஞ்ச் ஆயிட்டோம்..”

“ஓஹோ.. என்னோட முழு நாளுமே அதான்.. அவ்ளோ பீஸ்புல்லா கழிஞ்சுச்சா..!?? ச்சே.. எனக்குள்ள வந்து மாட்டின உன்னோட முழு நாளும் படு பயங்கரமா இருந்திருக்குமே!”

“ஆமான்டி.. சரியாத்தான் சொல்ற.. அழகா பொறந்தா தப்பாடி?!?! இவ்ளோ மோசமாவா போச்சு உலகம்?”

“நம்ம சேர்மன் எதாவது சொன்னானா?”

“சொன்னான் சொன்னான்.. இன்னும் ரெண்டு நாள் டைம்னு சொன்னான்..”

சரிதாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

“அழாத சரிதா.. நாமெல்லாம் அழுகப் பொறக்கல.. சாதிக்கப் பொறந்தவங்க.. எதாவது யோசிப்போம்.. எப்படியாவது இந்த சிக்கல்ல இருந்து வெளிய வருவோம்.. இத்தன நாளா நீ தனியா நின்னுட்டு இருந்த.. ஒரு துடிப்பில்லா படகாட்டம்.. இப்ப துடுப்பா நான் வந்திருக்கேன். இனி நிச்சயம் கரையேறலாம். கவலப்படாத.. நாளைக்குள்ள ஒரு நல்ல முடிவு வந்தே தீரும்..”

என்னை அள்ளியெடுத்து அப்படியே கட்டிக்கொண்டு தேம்பினாள் சரிதா…

***

திட்டமிட்டோம்..

இருவருமே சித்தர் சாமியிடம் வழி கேட்கலாம் என்று கிளம்பினோம்.

மகிழ்ச்சியாக திரும்பி வந்தாள் சரிதா.

அவளைவிட மகிழ்ச்சியாக நான் இருந்தேன்.

***

திட்டப்படி மீண்டும் ஒரு நாள் சரிதாவானேன் நான்.

நானே தானே சென்று சேர்மனை மீட் செய்வதாகக் கூற ஆச்சரியமானார் சேர்மன்.

“வா சரிதா.. சந்தோசமா சிரிச்சுக்கிட்டே வந்திருக்க.. சூப்பர்மா.. ஒரு நல்ல முடிவ எடுத்துட்டப் போல..”

“ஆமாங்க சார்.. சத்தியமா ஒரு நல்ல முடிவ எடுத்துட்டேன்.. அப்பறம் உங்களுக்குப் பிடிச்ச ஒரு ஆஃபரோட வந்துருக்கேன்..”

“என்ன எனக்கு பிடிச்ச ஆஃபரா? சொல்லுமா சொல்லு..”, எனச் சொன்ன சேர்மனின் அனைத்துப் பற்களும் வெளியே தெரிந்தது…

“நீங்க சொன்னமாதிரி நான் உங்க ரிசார்ட்டுக்கு வர ரெடி..”

“ஆகா..”

“ஆனா.. அதுக்கு முன்னால”

“அதுக்கு முன்னால!!!!!”

“என் ப்ரண்டு அந்த ரிசார்ட்டுக்கு வருவா.. உங்களோட ஒரு நாள் டைம் ஸ்பென்ட் பண்ணுவா.. அதாவது என் இடத்துல அவ..”

“அட.. இது ஒரு புதுமையான ஆஃபரா இருக்கே. இதுல ஏதும் டிராப் ஒன்னும் இல்லையே.. எங்கள மாட்டவைக்கற சதித்திட்டம் எதாவது தீட்டி இருக்கியா என்ன?”

“எப்படி சார் அதுக்கெல்லாம் பாஸிபிள்..? நீங்க என்ன பண்ணுவீங்கனு எனக்குத் தெரியாதா சார்..? இல்ல உங்க பவர் தான் தெரியாதா?”

“வாவ்.. குட் கேர்ள்.. அப்ப நாளைக்கே உன் ப்ரண்ட அனுப்பி வை.. ஓகே..”

“சரிங்க சார்..”

மனதில் எழுந்த அத்தனை கோபத்தையும் அடக்கிக் கொண்டு வெளியே வந்தேன்.. சரிதாவாக ஆகியிருந்த நான்..

***

அடுத்த நாள் சேர்மனும் அவரது ஐந்து நண்பர்களும் மிகுந்த குஷிமூடில் இருந்தனர்.

திட்டமிட்டபடி அன்று நானாக அந்த ரிசார்ட்டிற்கு சென்றது சித்தர் சாமிகள். அதாவது நான் சென்றேன்.. என் மனதாக அவர் இருந்தார்.

“அவர்கள் என்மேல்.. அதாவது உன்மேல் கை வைத்த அடுத்த நொடி நினைவிழப்பார்கள். அடுத்த பத்து வருடங்களுக்கு ஆழ்ந்த கோமாவிற்கு போய்விடுவார்கள். இனி உன் தோழி சரிதாவிற்கு எந்தப் பிரச்சனையும் உன் சேர்மனால் வராது. எனவே அவளை தைரியமாக இருக்கச் சொல். இனியும் அவளுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னைக் கேள்.”

“சரிதாவின் விஷயத்தில் நான் இன்னும் நன்கு கவனமுடன் செயல்படுவேன்”, என சித்தர் சொல்லி இருந்தார்.

“சரிதாவின் விஷயத்தில் ஏன் சாமி இன்னும் கவனமாகச் செயல்படுவேன் என்று கூறுகிறீர்கள்?’, என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..

“சரிதா.. நான் பிறக்கும் போது.. இறந்து போன.. நான் முகமே பார்க்காத.. என் தாயின் பெயர்…”

‘ஓஹோ.. சரிதாவின் மீதான அவரது அதீத பரிவிற்கான அர்த்தம் எனக்குப் புரிந்தது.’

இப்போது நானாக.. சித்தர் சாமிகள் அந்த ரிசார்ட்டில் நின்று கொண்டு இருந்தார்.

நடக்க இருக்கும் விளைவுகள்.. கிடைக்க இருக்கும் தண்டனைகள்.. கோமாக்கண்டம்.. என ஒன்னுமே தெரியாமல்…. என்னைத் தொட.. தங்கள் வசமாக்க… வசமாக மாட்டிக்கொள்ளப் போகும் ஆறு பேர் என்னை நெருங்கினார்கள்!

வெளியான மாதம்/ஆண்டு: ஜூன் / 2022
வெளியான இதழ் : முக நூலில் கணேஷ் பாலா சார் வைத்த சுஜாதா பிறந்த நாள் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை (முதல் பேராவும், கடைசி வரியும் சுஜாதாவின் நாவலில் இருந்து கொடுத்து இருந்தார். இரண்டையும் கனெக்ட் செய்து கதை எழுத வேண்டும் என்பது விதி)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *