கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 11,266 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊரைவிட்டு வந்ததிலிருந்து, நிலவு வளர்ந்து தேய்ந்தது நூறு இருநூறு முறை இருக்கும். போட்டியாய் நகர் விளக்குகள் எரிந்து, நிலவு தோற்கும் இந்த ஊரில் யார் கணக்கெடுக்கப் போகிறார்கள்? வெய்யில் பதம் பண்ணிய செம்மண் மத்தியில் பனந்தோப்புகளுக்குப் பின்னால் சந்திரன் ஒளிவீசும் அழகை யெல்லாம் விட்டுவிட்டு குளிர் நடுங்கும் பனிப்பிரதேசத்தில் வாழ்கிறேன் என்று நாட்களைக் கடத்தும் நிலைமையாகிவிட்டது.

எஞ்சினியர், ஆராய்ச்சியாளன்.

எப்படியிருந்தால் என்ன? நாளை வேலைநீக்க அறிவிப் புகள் வரக்கூடும். இதுவரைக்கும் என்னுடைய டிபார்ட்மெண் டில் ஆள்குறைப்பைப் பற்றிய கதையில்லை. திடீரென்று வருகிற ஆள் குறைப்பு அறிவிப்புகள் வராமல் இருந்ததில்லை. எங்கள் குழுவில் ஐந்து வெள்ளையர்கள், ஒரு ஆபிரிக்க அமெரிக்கன், ஒரு சீனன், மற்றது நான். ஒவ்வொருத்தருக்கும் மற்றவர்களைப் பற்றி ஒவ்வொரு கணிப்பு. நான் வேறெந்த விதமாகவும் நடக்க முடியாது. அவர்களுடைய கணிப்பைப் பற்றி எந்த ஆய்வு நடத்தவும் முடியாது. இது பலகீனமானவர்களுக்கான சமூகமில்லை . இந்தக் குழுவில் இருக்கும் ஒரே ஒரு ஆபிரிக்க அமெரிக்கன் என்றபடியால் தன்னைத் தூக்க மாட்டார்கள் என்பது ஜிம் (Jim) முடைய யோசனை. சீனன் யங் (Yung) அவ்வளவாகப் பேசமாட்டான். இதனால், அவன் ஒரு அறிவுக்கடல் என்கிற கணிப்பு இருக்கிறபடியால், அவனுக்கும் ஆபத்தில்லை . அலெக்ஸ் (Alex), ஜெனரல் மனேஜருடைய வெள்ளை நண்பன். Golf விளையாடுபவன். அவனுக்கும் ஒன்றும் நடக்காது. மற்றது ரிச்சர்ட் (Richard), பிரெட் (Fred), ரோனி (Tony), டான் (Dan). இந்த வெள்ளையர்களுடன் நான். இரண்டு பேரை நீக்கலாம் என்று கேள்வி. ஜிம்மின் கணிப்பும் யங்கின் கணிப்பும் தவறாகிப் போனதென்றால், நான் தப்பிக்கும் வாய்ப்புகள் அதிகமாகலாம். இந்தக் குழப்பம் காலை எட்டிலிருந்து மாலை ஐந்து வரை. வீட்டிற்குப் போனால், எனக்குள்ள தொல்லை கள் பற்றி என் மேலதிகாரி மாக் (Mac) இற்குத் தெரியாது. அவன் இந்தப் பிரதேசத்தையே தாண்டியதில்லை. யாழ்ப்பாணம் எங்கே தெரியப்போகிறது? இடைக்கிடை வரும் பத்திரிகைச் செய்திகள் வாசித்து, ஸ்ரீலங்காவில் யுத்தம் நடக்கிறது என்பது மட்டும் தெரியும். நான் ஒவ்வொரு முறையும் அவனுக்கு விளங்கப்படுத்துவது வழக்கம். மாக் கேட்பதில் தவறில்லைப் போல எனக்குத் தோன்றும். கம்பெனியின் விற்பனைப் பகுதியில் இருக்கும் தமிழ்நாட்டு மனிதன் கிருஷ்ணனுக்கே அங்கே நடப்பது என்னவென்று தெரியாது. ராஜீவ் காந்தியைக் கொலை பண்ணி யது நான்தான் என்கிற மாதிரி அவர் என்னை நடத்திக்கொண்டு இருக்கிறார். கிருஷ்ணன் கர்நாடகக் கச்சேரிகள், தமிழ் சிரிப்பு நாடகம், மற்றைய இந்திய சினிமா நடந்தால் ரிக்கெற் விற்பார். என்மொழியில் பேசும்போதெல்லாம், “தமிழில் சொல்லுங்க சார்” என்று சொல்லுகிறபோது சிரிப்பே வந்துவிடும். என் ஊர் அவலம் அவருக்கு எங்கே தெரியப்போகிறது?

ஊர் அவலம் குடும்ப அவலமாகி, என் தனி அவலமு மாகி அடுத்த கிழமை வரப்போகிற ஆள்குறைப்பு வெட்டிலும் முடியும். தெரிந்திருந்தால் ஊரில் நடக்கும் அவல யுத்தத்தில் சாவதற்கும் துணிந்திருக்கலாம்.

மாலை ஐந்து, ஐந்தரைக்கு என் வேலையிலிருந்து புறப் பட்டு, குழந்தைப் பராமரிப்பாளரிடமிருந்து கதிரையும் செல்வியையும் கூட்டிக்கொண்டு போக மாலை ஆறு மணியாகிவிடும். கல்யாணி வர ஆறேகாலாகும். வந்தவுடனேயே விவாதக் கச்சேரி தொடங்கிவிடும். நான் செய்ய மறந்து போனவையும், மற்றப்படி செய்யாமற்போன பட்டியலும் கிடைக்கும். சிலவேளைகளில், பல வருடங்கள் முன்னே நியூயோர்க் விமான நிலையத்திலிருந்து அப்போது நான் இருந்த ஊருக்கு அவள் வந்த விபரங்களிலிருந்து தொடங்குவாள். அவள் ஒரு கம்பெனியில் அக்கவுண்டன்ட். அவள் சம்பளம் என் சம்பளத்தைத் தாண்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை. விவாதக் கச்சேரியில் இதுவும் அவ்வப்போது ஆலாபனைக்குள்ளாகும். பிள்ளைகளுக்குச் சாப்பாடு மக் டொனால்ட்ஸில் இல்லாதபோது, வீட்டில் கொடுப்போம். செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் பெரிய வேலைகளாகவே தோன்றுகின்றன. ஆறு வயதுக் கதிரையும் நான்கு வயதுச் செல்வியையும் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் இலகு வானதில்லை. என்னால் இந்த வயதில் தான் சொல்லக்கூடிய வற்றைக் கதிரால் இப்போதே சொல்ல முடியும். வாழ்க்கை வெகு வேகமாகவே ஓடுகிறது. விலக முடியாதென்று நினைத்திருந்த செம்மண்ணும் பனந்தோப்பும் மனத்திரையிலிருந்து தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றன.

காதில் ஒலிக்கிற தமிழ்ப் பாட்டு மட்டுமே சுய உணர்வு தருகிறதாக இருக்கிறது. வெய்யில் காலத்தில் எல்லோரும் கண்ணாடியை இறக்கிவிட்டு காரில் போகிறபோது, இந்தத் தமிழ்ப் பாட்டுகள், சமிக்ஞை விளக்குகளுக்காக கார் நிற்கிற போது, எல்லோரையும் எங்களைப் பார்க்கத் தூண்டுகின்றன. கார்க் கண்ணாடிகளை உயர்த்தவே தோன்றுகிறது.

அன்று வெளியே குளிர் மட்டுந்தான். பனியில்லை. வேலை முடிந்து கதிரையும் செல்வியையும் கூட்டிக்கொண்டுவரப் போய்க்கொண்டிருந்தேன். பெருஞ்சாலையில் கார்கள் கூட்டம் அதிகமாகி, எல்லோரும் குறைவான வேகத்தில் போய்க் கொண்டிருந்தார்கள். இந்த ஆள்குறைப்பு விஷயத்தைப் பற்றிக் கல்யாணியிடம் இரண்டு கிழமைக்கு முன்னரே சொல்லி யாகிவிட்டது. அவள் இதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை . அவள் தாயும் தந்தையும் அடுத்த சில கிழமைகளில் இங்கிலாந்தில் இருந்து வர இருக்கிறார்கள். அங்கே கல்யாணியின் தமையன் ஒருவர் மருத்துவர். அவள் இளைய சகோதரி கனடாவில் இருக்கிறாள். இங்கே வந்து ஒரு மாதமளவில் நின்றுவிட்டு ரொறன்ரோ போகப்போகிறார்கள். ஈழத்தமிழர் அவலத்தில் பிழைக்கிறவர்கள் ஆயுதத் தளபாடம் செய்கிறவர்கள், விற்கிறவர்கள் மட்டுமில்லை. இந்த விமானக் கம்பெனிக்காரர்கள், ரெலிபோன் கம்பெனிக்காரருந்தான் என்று நண்பன் சற்குணம் சொல்வது சரிதான். கல்யாணிதான் ரிக்கெற் காசு அனுப்பினாள். என் தந்தை அடிக்கடி சொல்வதுபோல ஒரு பிள்ளைச் சீதனம். பஸ்சில் சுண்ணாகம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி என்று அலையுமாப் போல் விமானத்தில் ஏறிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். என் தந்தைக்கு திருச்செந்தூர் போவதைத் தவிர வேறெந்த பிரயாண நோக்கமும் இருந்த தில்லை. இரண்டு பிள்ளைகளைப் போர்க்களத்தில் பலி கொடுத்திருக்கிறார். அவரைக் கடைசியாகப் பார்க்க முடியாம லேயே போய்விட்டது. என் தாய் இங்கு வரமாட்டேன் என்கிறாள். தமக்கையுடன் எங்கோ வவுனியாப் பிரதேசத்தில் இருக்கிறாள். கல்யாணியின் விவாதங்கள் அங்கேயும் எட்டி விட்டனவோ தெரியவில்லை. முதலில் தம்பி விமலன் போய்ச் சேர்ந்தான். எந்தக் களத்திலிருந்தோ உடலைக் கொண்டுவந்து காட்டி விட்டுக் கொண்டு போய்விட்டார்களாம். நான் அப்போது கலிபோர்னியாவில் மேற்படிப்புப் படித்துக்கொண்டிருந்தேன். விபரங்கள் எங்கே தெரிகின்றன? விமலனைச் சைக்கிளில் கொண்டு போவது மட்டுமே ஞாபகத்திலிருக்கிறது. வெய்யிலில் வேர்க்கவேர்க்க நல்லூர்த் திருவிழாவிற்கும் ஒருமுறை கூட்டிக் கொண்டு போய், அவன் வேட்டி சைக்கிள் சில்லில் மாட்டி உரிந்தது ஞாபகமிருக்கிறது. நான் பல்கலைக்கழகத்துக்குப் போனபோது, அவன் நண்பர்கள் அவனைச் சுவீகரித்துக் கொண்டார்கள். மற்றவன் ரமணன், அமைதிப்படை ஆத்தி ரப்படையாய் மாறியபோது நடந்த சண்டையில் இறந்து போனான். தமிழ்நாட்டு நண்பர் கிருஷ்ணனுக்கு இவைகளைப் பற்றி எங்கே தெரியப்போகிறது? தம்பியர் இரண்டு பேரும் பல்கலைக்கழகத்திற்குப் போய் என்னை மாதிரி வருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்த என் தந்தையின் நம்பிக்கையில் மண்ணையும் அள்ளிப்போட்டுக் கொள்ளியும் வைத்துவிட் டார்கள். நடந்தவையெல்லாம் யாருக்கும் தெரியப்போவதில்லை. என் மேலதிகாரி மாக், நண்பன் கிருஷ்ணன் இவர்கள் அறியாமை பற்றிக் குறைப்பட முடியாது. ஆனால், கல்யாணி ? இவளும் என்னைச் சாடுகிறாள்.

என் தமக்கை யோகராணி குடும்பத்தைக் கனடாவிற்கு அனுப்பலாம் என்று தெண்டித்தேன். பதினாறு பரப்புக் காணி யில் வீடும் பத்து லட்சத்தோடும் வந்தவள், வரும் கடிதங்களுக்குப் பதிலெழுதவும் விடுவதில்லை . என் மருமகன் குமாரும், மருமகள் விஜயராணியும் பதினாறு வயது எல்லையைத் தாண்டியிருக் கிறார்கள். அரசாங்கக் குண்டு வீச்சிலிருந்து உயிர் தப்பியிருப்பது பெரிதென்றால், ராணுவக் கொடுமைகளிலிருந்து தப்பியிருப்பது அதைவிடப் பெரிது. ஆயுதம் தாங்கும் போராளிகளாய் மாறாம் லிருப்பது அதைவிடப் பெரிதா? அக்காவிடமிருந்து வரும் கடிதங்கள் துன்பத்தைத்தான் தருகின்றன. அவள் கணவர் பத்மநாதனுக்கு அரசாங்கத்தில் ரெக்னிக்கல் உத்தியோகம். என் வாழ்க்கை ஒரு தோல்வியென்று தோன்றினால், அவர் வாழ்க்கையை எப்படி வர்ணிப்பது? நான் கலிபோர்னியாவில் இருந்தபோது அவர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை தேடும் ஸ்தாபனத்துக்குக் கட்டிய ஆயிரம் டொலர்கள் வீணாகிப்போய் எல்லா அல்லல்களும் பட்டிருக்கிறார். அவர் குடும்பத்து அல்லல் களைப் பற்றிச் சொல்ல வேறோர் அத்தியாயம் தேவை.

கல்யாணியின் போக்கு குரூரமாகவே இருக்கிறது. என்னு டைய கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்து மேற்படிப்புச் சான்றிதழையே இவள் கட்டியிருந்திருக்கலாம். அவள் தாய் ஒரு மருத்துவர். இப்போது ஓய்வு பெற்றுள்ள தம்பதி. யாழ்ப்பாணம் ஒரு யுத்தகளமாகிப் போனதும் தெரியாமல் வளர்ந்த குடும்பம். எண்பத்தி மூன்றில் அவர்களுடைய கொழும்பு வீடு ஒரு மாதிரித் தப்பிவிட்டது. வருஷத்துக்கு ஒருமுறை உலகச் சுற்றுப் பிரயாணம் நடத்திக்கொண்டிருக்கிற தம்பதி. ரெலிபோனில் பேசும் போது என் தாய் தமக்கையைப் பற்றி ஏதாவது விபரம் தெரியுமா என்று கேட்பேன். கல்யாணிக்கு அவர்கள் மனிதர்களாகத் தோன்றியதில்லை. பயங்கரவாதிகள் குடும்பம் என்று நெடுகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். மாமன் இங்கு வந்தால், புலிப்படைபற்றி என்னுடன் விவாதிக்க ஆரம் பித்து விடுவார். எல்லாவற்றையும் இரண்டிரண்டாக வெட்டி இருவேறாக்கித் தனித்துவம் கொடுத்து வித்தியாசம் காட்டி ஒன்று மற்றொன்றைவிட உயர்வானது என்று உணர்வுப்படுத்தும் பாடாக இந்த வாழ்க்கை அமைந்து போயிருக்கிறது. கல்யாணிக்கு இங்கே மருத்துவர் பெரியதம்பி மனைவி கௌரியுடன் நட்பு. என்ன நட்பு என்று தெரிய வில்லை. போட்டி நிறைந்த தொடர்பு. மருத்துவர் பெரிய தம்பிக்கு மருத்துவர்கள் அல்லாதவர்களுடன் தொடர்பு கொள்ள விருப்பமில்லையா அல்லது தெரியவில்லையா என்று நெடுகவே புதிர். இருதய நோய் நிபுணர்; பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் மனிதன். நான் ஒரு கார்க் கம்பெனியில் வேலை செய்வதால், எல்லாக் கார்களைப் பற்றியும் தெரியும் என்பது அவர் யோசனை. பென்ஸ், ஜகுவார், லெக்சஸ் மாதிரியான கார்களைப் பற்றியே என்னிடம் கதைப்பார். என்னுடைய துறை, வெப்பம் கடத்துவது (Heat Transfer). அமெரிக்கக் கார்கள் தரத்தில் கூடிக்கொண்டு வருகின்றன என்று சொல்லுகிறார்களே, அதில் எனக்கும் பங்கு உண்டு. இரண்டு கண்டுபிடிப்புக்களுக்குப் பதிப்புரிமை எடுத்திருக்கிறேன். மருத்துவர் பெரியதம்பி பணத்தைத் தவிர எதைப் பற்றியாவது சிந்திப்பாரா என்று தெரியவில்லை. வருஷத்துக்கு ஒருமுறை உல்லாசப் பயணம் போவது, வேலையிலிருந்து ஓய்வு எடுக்கவா

அல்லது அதைப் பற்றி நண்பர்களுக்குச் சொல்லுவதற்கா, தெரியவில்லை. கௌரி, தங்கமும் வைரமும் நிறையவே சேர்த்து வைத்திருக்கிறார்கள். கல்யாணியிடம் காட்டுவாள். பெரிய தம்பியின் வீட்டுக்குள் நீச்சல் தடாகமிருக்கிறது. கல்யாணியும் பிள்ளைகளும் அவ்வப்போது போய் நீச்சலடித்துவிட்டு வரு வார்கள். கௌரியின் தாய் தந்தையர் அவர்களுடன் தான் இருக்கிறார்கள். சாயி பாபா பக்தர்கள். ஒவ்வொரு வருஷமும் புட்டபர்த்தி போய் வருகிறார்கள். சாயி பாபாவிடம் போவதால் பணம் சேருகிறதா அல்லது பணம் சேர்ந்ததனால் தான் சாயி பாபாவிடம் போகிறார்களா தெரியவில்லை. கல்யாணியும் சாயி பாபாவிடம் போகலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

வவுனியாவில் எங்கேயோ இருக்கிற என் தாயையும் என் சகோதரி குடும்பத்தையும் எப்போது பார்ப்பது? கம்பெனி வாழ்க்கை சீராகப் போய் லீவு எடுத்துக்கொண்டு போகலாம் என்றால், அது எங்கே நடக்கப் போகிறது? வேறு கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன். முடிவுவர கிழமைக் கணக்கிலாகப்போகிறது.

கதிரையும் செல்வியையும் கூட்டிக்கொண்டு வீடு போகும் போது ஆறு மணியாகிவிட்டது. கடிதப் பெட்டியிலிருந்து கடிதங்களை எடுத்துக் கொண்டு வீட்டினுள் போனோம். கல்யாணி வீட்டில் இருந்தாள். என்ன கரச்சலோ தெரியவில்லை’ என்று யோசித்துக்கொண்டே அவளைப் பார்த்தேன்.

“மறந்துபோனீர்களோ? டொக்டர் மூர்த்தி வீட்டில் இண்டைக்கு meditation meeting” என்றாள்.

இது நல்ல அறிகுறி விவாதம் தொடங்காது போல இருந்தது.

“எத்தனை மணிக்கு” என்ற கேள்விக்கு , “ஏழரைக்கு” என்று பதில் சொல்லிவிட்டு மேல் மாடிக்குப் போய்விட்டாள். கையிலிருந்த கடிதக்கட்டைத் தேடியதில் அந்தக் கடிதம் இருந்தது. ராணி அக்காவிடமிருந்துதான். பணத்தேவைகளாக இருக்கலாம். வவுனியாவிலிருந்து கொழும்புக்கு வந்துவிட்டார்களா? மற்றக் கடிதங்களை வைத்துவிட்டு அதைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். நினைத்தது சரிதான். கடைசியாக, கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். கொழும்பு சொர்க்கலோகமா? தலைப்பக்கமாகக் குண்டு விழாது. அது ஒன்றுதான். மற்றப் படியான அவலங்களுக்குக் குறையில்லை. அக்கா, கணவரின் தம்பியார் வீட்டில் தற்போதிருக்கிறார்கள். கனடாவிற்கு எப்படியும் இனி இழுக்கத்தான் வேண்டும். ராணி அக்கா விவரமாகத் 234 தான் எழுதியிருந்தாள். நெஞ்சுச் சுமையை ஏற்றும் வண்ணமாய்க் கடிதக் குவியலில் வேறு முக்கியமாக ஒன்றுமில்லை .

கல்யாணி சேலை கட்டிக்கொண்டிருப்பாள் போலிருந்தது. செல்வியும் கதிரும் மேலே தாயுடன் போயிருந்தார்கள். கதிர் கீழே வந்து தாய் கூப்பிடுவதாகச் சொன்னான். மேலே போகும் போதே, “லெட்டர் ஏதென் வந்ததா” என்று அவள் கேட்பது காதில் விழுந்தது. ராணி அக்காவிடமிருந்து என்பதைச் சொன்னேன்.

“கொழும்புக்கு வந்துவிட்டினமாம்.”

அவள் ஒன்றும் சொல்லவில்லை . ” வேறு ஏதாவது கடிதங்கள் வந்ததா” என்று கேட்டாள். “வரவில்லை” என்று சொன்னேன். கிழமைக்கு ஒருதரம் கொழும்புக்கு அவள் தாய் தந்தையுடன் ரெலிபோன் செய்வதால் கடிதம் அங்கிருந்து வராது. கனடா வுக்கும் இங்கிலாந்துக்கும் ரெலிபோன் செய்வதால், எனக்கு மட்டுந்தான் ஊரிலிருந்து கடிதங்கள் வருகின்றன. செம்மண் வாசனைதான், வாழ்க்கைப் போராட்டங்களைச் சமாளிக்கும் பலத்தையும், ஈழம் என்கிற பலவீனத்தையும் கொடுத்திருக்கிற மாதிரித் தோன்றுகிறது. ஊர்க் கடிதங்கள் நெஞ்சைக் கொத்தி யெடுக்கின்றன.

“என்ன கூப்பிட்டனீர்” என்று கேட்டேன். “இண்டைக்கு அங்கே டின்னர். பெடியளுக்கு ஸ்நாக்ஸ் ஏதாவது குடுமன்” என்றாள். கீழே பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போய் அவர்கள் கேட்டதைக் கொடுத்து ரெலிவிஷனைப் போட்டேன். செய்திகள் தொடங்கியிருந்தார்கள். ஜனாதிபதி கிளின்டனும் கிங்ரிச்சும் விவாதம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ரெலிவிஷனைப் போட்டாலே நித்திரை வருகிறது. ராணியக்காவின் கடிதத்தில் என் தாயின் சுகவீனங்களைப் பற்றியும் எழுதியிருந்தாள். ‘நடேசபிள்ளை மாஸ்டர் பெண்சாதி’ என்று மரியாதையாகவே ஊரில் இருந்து வந்தவள் என் தாய். எங்களைப் பற்றியெல்லாம் அவளுக்குப் பெருமை உண்டு. வெகு நிதானமாகக் குடும்பம் நடத்தியவளுக்கு நடந்ததென்ன? நாங்கள் போயிருந்தபோது இங்கே வரச்சொல்லிக் கேட்டோம். பிடிவாதமாக மறுத்து விட்டாள். பழைய நினைவுகள் எத்தனை? கல்யாணி வெளிக் கிடுவதற்கு முன் என் நண்பன் ரிச்சர்டைக் கூப்பிட்டு வேலை நிலவரங்களைப் பற்றி விசாரித்துக்கொள்ளலாம் என்று அவனைத் தொலைபேசியில் அழைத்தேன். ரிச்சர்ட் குடும்பத்துடன் இரவுச் சாப்பாட்டை முடித்திருப்பான். பானை, தட்டுகளை ‘டிஷ் வோஷரில் போட்டும் முடித்திருக்கலாம்.

ரிச்சர்ட் முடித்திருந்தான் நல்ல வேளையாக.

“ஹலோ பாலா” என்றான். ரிச்சர்ட்டும் நானும் கார் எஞ்சினில் பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இன்னும் இரண்டு வருடங்கள் பின்னர் வரப்போகிற எஞ்சினை தயாரிக்கும் குழுவில் வேலை பார்க்கிறோம். கம்பெனி மனேஜ்மென்ட் இரண்டு பேரைக் குறைத்து, அந்த வேலை களெல்லாவற்றையும் மற்றவர்களிடம் கொடுத்துவிட்டுச் செலவுகளைக் குறைக்கலாம் என்று பார்க்கிறது. என் மேலதிகாரி மாக்கிடம் என்னுடைய பரிசோதனைகளின் முடிவுகள் எல்லாவற்றையும் சொல்லிவைக்கவில்லை. என்னை நீக்கினால் எஞ்சின் டிசைனில் முன்னேற்றம் எதையும் காணமுடியாது. யார் இங்கே வேலைத்தரத்தைப் பார்க்கிறார்கள்? அரைநிர்வாண உடையில் ஹொலிவூட் நடிகைகளுக்கு அருகில் நிறுத்தினால் கார்கள் தன்னால் விற்கும். பத்து வீதத்தால் எரிபொருள் பாவிப்புக்களில் குறைவதைவிட, இந்த ஆண்டு கம்பெனி இலாபம் கூட வேண்டுமென்பதே முயற்சி ரிச்சர்ட்டுக்கு வேலை நன்றாகவே தெரியும். இதனால் ரிச்சர்ட்டுக்கும் எனக்கும் வேலை தொடர் பான நட்பு நீடித்திருக்கிறது. செய்து கொண்டிருக்கும் பரி சோதனைகள் பற்றிக் கேட்டேன். அடுத்த கிழமை ரிச்சர்ட் தன் குடும்பத்துடன் ஃப்ளோரிடாவுக்கு உல்லாசப் பயணம் போகவிருப்பதாகச் சொன்னான். அப்போதே இந்த வேலைநீக்க அறிவிப்புகள் வரவிருப்பதைப் பற்றி விசாரித்தேன். அதைப் பற்றி தான் கவலைப்பட முடியாதென்று ரிச்சர்ட் சொன்னான். “அவர்கள் என்னாவது செய்யட்டும். நான் உல்லாசப் பயணம் போகவே போகிறேன்” என்றான். சந்தோஷமாக இருந்துவிட்டு வாருங்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? ரிச்சர்ட் வேலையைத் தவிர வேறெதையும் பற்றிப் பேசியதை நான் கண்டதில்லை. அவனிடம் எஞ்சின்கள் பற்றி ஒன்று அல்லது இரண்டு நல்ல யோசனைகள் உண்டு. ஆனால், மாக் கேட்க மாட்டான். ரிச்சர்ட் மாதிரி இருந்தால் வாழ்க்கையை நன்றாகவே ஓட்டலாம். வெள்ளிக்கிழமைகளில் எல்லோரையும் போல அவன் “தண்ணியடிக்கப் போவதில்லை. நான் சொல்லுவது அவனுக் குத்தான் வழக்கமாகப் புரியும். முதலில் என்னைப் பற்றி மிகுந்த நம்பிக்கைக் குறைவுடன்தான் இருந்தான். போன வருஷம் எங்கள் குழு எஞ்சின் டிசைன் உற்பத்திக்குப் போனபோதுதான் அவனுக்கு என்மேல் மதிப்பு உண்டாயிருக்கிறது. ரிச்சர்ட் கர்மவீரன். அவன் மனைவி லிண்டா (Linda) நெடுகச் சிரித்தபடியே இருப்பாள். நாங்கள் செய்த ஒரு எஞ்சின், உற்பத்தித் தவறுகளி னால் உடைந்தபொழுது ரிச்சர்ட்தான் அவற்றையெல்லாம் எடுத்துக்காட்டி, தவறுகளைத் திருத்தியெடுத்தான். சைக்கிள் ஓட்டுவதும் நீச்சலடிப்பதுமான பேர்வழி. “நீ வேலையைப் பற்றிக் கவலைப்படாதே” என்றான். சந்தோஷமாக இருந்தது. அது நீடிப்பதற்குள், “வெளிக்கிட்டாச்சோ?” என்று கல்யாணி கேட்டுக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள். என் வேலை நினைப்புகள் கலைந்தன.

மருத்துவர் மூர்த்தி வீட்டிற்குப் போகும் போது, கௌரி யைப் பற்றிப் பேசத் தொடங்கினாள். ஹவாய்த் தீவில் வீடு வாங்கியிருக்கிறார்களாம். மார்கழிக் குளிர்நாட்களில் போய் இருந்துவிட்டு வருவதற்காக. “அறுநூறாயிரம் டொலர்கள்” என்றாள்.

ராணியக்காவின் ஞாபகங்கள் வந்தன. கொழும்பில் அவள் கணவரின் சகோதரர் வீட்டில். அவர்களுக்கே போதுமான இடமில்லை. என்ன செய்யலாம்? கல்யாணி பேசிக்கொண்டு வந்தது ஒன்றும் மனதில் பதியவில்லை . மருத்துவர் மூர்த்தி வீடு கொஞ்சம் தொலைவில் இருக்கிறது. கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டால் கௌரி குடும்பத் தகராறுபற்றி சுவாரசி யமாக ஏதாவது கிடைக்கும். என் மனம் மலிவான இன்பங்களைத் தேடும் நிலையில்லை . மருத்துவர் பெரியதம்பி ஹவாயில் வீடு வாங்கியிருந்தார் என்றால், மூர்த்தியும் எங்காவது வெகு விரைவில் வாங்குவார் என்பது நிச்சயம். காகங்கள் உணவுக்கு அடிபடுமாப் போல் போட்டி போடுகிறார்கள். என்னத்துக்கு என்று தெரியவில்லை . பெரியதம்பிக்கு கார்கள், வீடுகள், முதலீடு கள், விஸ்கி இவற்றைத் தவிர வேறேதாவது தெரியுமா என்பது சந்தேகம்தான். மூர்த்தி இப்போது ஆன்மீகத்தில் இறங்கியிருப்பது, இந்த நிலையையும் அவர் தாண்டியிருப்பதுதான். சேர்த்த பொருள் அளவில் சுவாரசியமான மனிதர். அவரின் இரண்டு பிள்ளைகளும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். ஆன்மீகத்தில் இறங்க இதுதான் நேரம். இந்தத் தியானம் உடம்புக்கும் நல்லது என்பது அவர் வாதம். எல்லா பெளதிகத் தொடர்புகளையும் துண்டிப்பதுதான் தியானம் என்றால் யாரால் முடியும்? ஓடாத இயந்திரத்துக்கு எரிபொருள் எதற்கு?

தலையில் குண்டுமாரி பொழிந்து கொண்டேயிருக்குமா னால் தியானம் முடியுமா? ராணியக்கா தன் குழந்தைகளு டன் நிலக்கிடங்கில் ஒளிந்துகொள்ளும் காட்சியே மனதில் ஓடுகின்றது. அவர்கள் உயிருடன் தியானம் செய்யவே முடியாது. கல்யாணி, “இங்கேதான் திரும்ப வேணுமப்பா” என்றாள். மூர்த்தி வீட்டு அடித்தளத்தில் (basement) கூட்டம், சின்மயானந்தா மடத்தில் இருந்து வந்த காவிச்சட்டை எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தது. என் நண்பர் மருத்துவர் ரெடிங்கரும் அங்கேயிருந்தார். ரெடிங்கர் மூர்த்தியை விட சுவாரசியமான மனிதர். கல்யாணியை கௌரி கையுடன் அழைத்துக்கொண்டு போய்விட்டாள். பெரிய தம்பியர் மாமியைப் பற்றி ஏதாவது சொல்லியிருக்கக்கூடும். செல்வியும் கதிரும் அவர்களை ஒத்த வயதுக்காரக் குழந்தைகளுடன் போய்விட்டார்கள். மருத்துவர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்தது, ரெடிங்கரைத் தவிர . மருத்துவர் ரெடிங்கரைப் பார்த்து “ஹலோ” என்றேன். அவரும் எங்களைப் போல் இந்த மூன்றாவது கூட்டத்துக்கு வந்திருக்கிறார். அவர் மனைவியும் வந்திருந்தார். கார் எஞ்சின் டிசைன் பற்றி முதல் சந்திப்பில் விளங்கப்படுத்தினதிலிருந்து அவருக்கும் எனக்கும் சுவாரசியமான சம்பாஷணைகள் நடக்கும். அவருடைய முதல் பட்டப்படிப்பு, மெக்கானிக்கல் எஞ்சினியரிங். என்ன புதினங்கள் என்று கேட்டார். அப்போதுதான் இந்த ஆள்குறைப்பு அலுவலைப் பற்றிச் சொன்னேன். புருவங்களை உயர்த்தித் தன் அபிப் பிராயத்தைச் சுருக்கமாகவே சொன்னார். “கம்பெனி ஸ்ரொக்குகள் மேலே போக வேண்டும் என்ற குறுகிய நோக்குத்தான்.”

“நாங்கள் முதலில் மேலே போய்விடுவோம்” என்று மேலே கையைக் காட்டினேன். சிரித்தார்.

உயிருள்ளவற்றிற்கும் உயிரில்லாதனவுக்கும் உள்ள வித் தியாசங்கள் பற்றி அவருடன், போன கூட்டத்தின் போது பேசிக் கொண்டோம். ரெடிங்கர் பல நாடுகளுக்கும் போய் வந்த மருத்துவர். ஆபிரிக்காவில் ஐந்து வருடங்கள் மருத்துவராக இருந்தவர். உயிரில் தான் உலகமியங்கும் தத்துவத்தை அறிய முடியும் என்பது அவர் வாதம். அவர் பல கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார். உயிர் மூச்சுவிடுவது மட்டுமில்லை என்று அவருக்குத் தெரியலாம். சக மனிதனே துன்பம் தருவது தெரியுமா?

மருத்துவர் மூர்த்தி எல்லோரையும் வரவேற்று உட்காரச் சொல்லிவிட்டு, வந்திருந்த சுவாமியை அறிமுகப்படுத்தினார். சுவாமியார் சுலோகங்கள் பலவும் சொல்லித் தன் பேச்சைத் தொடங்கினார். குழந்தைகள் மேலே போய் ரெலிவிஷன் பார்க்கத் தொடங்கியிருக்க வேண்டும். பெண்கள் யாவரும் ஒன்றாக இருந்தனர். சுவாமி எல்லோரையும் அளவிட்டுக் கொண்டே பேசினார்.

அவரும் கதை சொல்லத் தொடங்கினார். ஒரு திருடனும் ஒரு வியாபாரியும் ஒன்றாக ஒரு நெடுந்தூர ரயில் பிரயாணம் மேற்கொண்டார்களாம். திருடனுக்கு வியாபாரி பணம் கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிந்தது. வியாபாரி தூங்கும் போது எல்லா இடமும் தேடினானாம். அவன் தேடிய விதங்களைப் பற்றிச் சுவாமியார் சுவாரசியமாக விபரித்தார். கிடைக்கவில்லை . கடைசியாக வியாபாரி இறங்கும் போது திருடன் கேட்டானாம், எங்கே அவர் பணத்தை ஒளித்து வைத்திருந்தார் என்று. “உன் தலையணைக்கு அடியில் தான்” என்று வியாபாரி சொன்னானாம். சுவாமியார் இந்தக் கதையை நன்றாகவே சொன்னார். அந்தத் திருடனைப் போல நாங்கள் சந்தோஷத்தை வெளியே தேடுகிறோமாம். சந்தோஷம் எங்கள் மனதிலேயே இருக்கிறதாம். எல்லோரும் சுவாமியாரை இன்னும் கவனமாகக் கேட்க ஆயத்தமானார்கள்.

எனக்குள்ளே சந்தோஷம் எங்கே வரமுடியும்? இன்னொரு பிறப்பு எடுத்து, சகோதரங்கள் சாகாமல், நாட்டை விட்டு ஓடாமல், பணமும் சேர்ந்திருக்குமானால் சந்தோஷம் எனக்குள்ளேயிருந்து வரலாம். தொடர்புகள் எல்லாவற்றையும் அறுத்துக் கொண்டால் வெட்டவெளிப் பயணம் தொடங்க லாம். சுவாமியார் பேச்சை முடித்தார்.

“ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.” தியானம் ஆரம்பித்தார்கள். கண்ணை மூடிக்கொண்டு சூன்யத்தில் நிலைக்க வேண்டுமென்பது சுவாமிகள் வேண்டு கோள். முடிகிறதா? தந்தையுடன் மெயில் ட்ரெயினில் கொழும்பி லிருந்து தூங்கித் தூங்கி வருவதுதான் ஞாபகத்துக்கு வந்தது. தியானம் முடிந்து சாப்பிடத் தொடங்கினோம். மருத்துவர் பெரியதம்பிக்கு விஸ்கி இல்லாமல் சாப்பாடு இறங்காது. சைவச் சாப்பாடும் பிரச்சினையாகப் போயிருக்கும். அவரிடம் இதைப் பற்றிச் சொன்னேன்.

“இன்டைக்குக் கொஞ்சம் கஷ்டந்தான்.”

“நான் எல்லாம் குறைச்சாச்சு” என்றார்.

கல்யாணி, கௌரியுடன் இன்னும் பல பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். மூர்த்தி மும்முரமாகப் பலரிடமும் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்த சொற்பொழிவைப் பற்றியாயிருக்கலாம்.

ரெடிங்கருடன் மறுபடியும் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் அரிசிச் சாப்பாடு சாப்பிடுவார். அவருக்கென்று மூர்த்தி உறைப்புக் குறைவாகச் சமைத்து வைத்திருப்பார். அதைத் தேடிக்கொண்டிருந்தார்.

“சந்தோஷத்தைத் தேடுகிறீர்களோ?” என்று கேட்டேன். “நீர் ஒரு ஆள்தான் அதைத் தேடாமலிருக்கலாம்” என்றார்.

“சுவாமியார் சொல்கிற மாதிரி சந்தோஷத்தை எங்களுக் குள்தான் முதலில் தேட வேண்டுமென்றால், உங்கள் தட்டையே முதலில் பாருங்கள்” என்றேன். சிரித்தார்.

“வெறுந்தட்டு” என்றார்.

எல்லாவற்றிற்கும் ஒரு பின்னணி (context) இருப்பதாக அவரிடம் சொன்னேன். என்னால் ஈழத்துப் பிரச்சினைகள் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ரெடிங்கரிடம் ஈழத்துப் பிரச்சினைகள் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.

“சுவாமியார் சொல்வதை அகதிகள் முகாமில் சொல்ல லாமா?” என்று கேட்டேன். ரெடிங்கர் என்னை உற்றுப்பார்த் தார். ஆபிரிக்க அகதிகள் முகாமில் வேலை பார்த்திருக்கிறார். அகதிகள் முகாமைப் பற்றி அவருக்குத்தான் தெரியும்.

“எனக்கு இவற்றில் நம்பிக்கையில்லை. சுவாமியாருடன் சண்டை தொடங்கவும் விருப்பமில்லை” என்றேன்.

ரெடிங்கர், “மனித உயிர் வாழ்க்கை பல முகம் படைத்தது” என்று ஒரு நடுநிலை எடுத்துக்கொண்டார். மூர்த்தி வேகமாக எங்களை நோக்கி வந்தார். அடுத்த மாதக் கூட்டம் எங்கே நடக்கப்போகிறதென்று சொல்லிவிட்டுப் போனார். கௌரி யின் தந்தை புண்ணியமூர்த்தி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார். அவர் மனைவியும் பக்கத்தில் நின்றுகொண்டிருந் தார். புண்ணியமூர்த்தி அமைதியான மனிதர்.

“ஊரில் நிலவரம் எப்படியாம்?” என்று கேட்டார்.

“கொழும்பில் பெடி பெட்டையளைப் பிடிச்சுக்கொண்டு போறதுதான் பெரிய பிரச்சினையாம்” என்றேன். ராணியக்காவின் குடும்பநிலை பற்றிய யோசனைகள் மனமேட்டில் உலவ ஆரம்பித்தன. புண்ணியமூர்த்தியின் மனைவி தன் கண்ணா டியை நிமிர்த்திக்கொண்டு கேட்டாள்.

“உங்கடை மச்சானை இன்னும் ஆமிக்காறர் பிடிக்கேல் லியோ?”

என்ன சொல்லுகிறாள் இந்தக் கிழவி?’ என் கோபம் தலைக்கேறியது. ‘உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலை பவர்களைப் பற்றி இதைவிடச் சொல்வதற்கொன்றுமில்லையா?

“இல்லையாம், கொழும்பில் எறிய வேண்டிய வெடி இன்னும் ஒன்றிரண்டு இருக்குதாம். அது முடிஞ்சு ஆமிக்காரரிடம் தானே போறதெண்டு சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று வெடித்தேன். நேரே குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு கல்யாணியிடம் போய், “நாங்கள் போகலாம்” என்றேன். என் குரலில் இருந்த ஆத்திரத்தைப் பார்த்துக் கல்யாணி பயந்திருக்க வேண்டும். ஒருவரிடமும் பேசாமல் கோட்டு , காலணியை மாட்டிக்கொண்டு காரில் ஏறி, வீடு நோக்கிப் புறப்பட்டோம். புறப்படும் போது, தலையைத் திரும்பிப் பார்த்தபோது, புண்ணியமூர்த்தி கிழவி யிடம் ஏதோ சொல்லுவது தெரிந்தது. “என்ன பிரச்சினை?” என்று தொடங்கினாள் கல்யாணி.

“ஆமிக்காரர் பிடிக்கேல்லியோவாம் ராணியக்கா ஆக் களை. கிழவி கேட்கிறாள்!” என் கோபம் அடங்கவில்லை .

“பயங்கரவாதிகள் குடும்பம் என்றால் கேட்பாள்தானே!” கல்யாணி சாட்டையை வாயில் எடுத்துக்கொண்டாள்.

“உங்கடை குடும்பத்தில் யாரேன் செத்திருந்தால் தெரியும்.” இக்கதையை ஒரு நியாயமான தளத்தில் கொண்டு நிறுத்துவது என்று முடிவெடுத்துச் சொன்னேன்.

“நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டாள். நான் சொன்னதைச் சொன்னேன். கிழவியின் தமக்கையும் அவர் புருஷனும் கொழும்பில் அவர்கள் வீட்டுக் காவல். என்னுடைய நக்கல், கிழவிக்கு விளங்காவிட்டாலும் அவள் கணவனுக்கு விளங்கும். கல்யாணிக்குக் கோபம் வரத் தொடங்கியது.

“நான் சொன்னேன். இது ஒரு பயங்கரவாதிகள் குடும்பம் எண்டு. இந்த மாதிரிப் பயங்கர யோசனைகள் ஆருக்கு வரும்?” என்றாள்.

“பயங்கர யோசனைகள் இல்லாமல் தான் ஊரில் சிங்கள வர் ஆமியை வைச்சு அடிக்கிறார்கள்.”

“உங்கடை இந்தப் பயங்கரவாதிகள் இல்லாது போனால், கவண்மென்ற் ஆமிக்கு என்ன வேலை?”

கல்யாணிக்குக் குருவியைவிடச் சின்ன மூளை இருக்கிற தாகப் பட்டது. அதைச் சொல்லப்போக விவாதம் வளரத் தொடங்கியது. குழந்தைகள் பின்னால் அழத்தொடங்கின.

“இப்படிக் கதைச்சால் கௌரி எங்களைப் பற்றி என்ன நினைப்பாள்?” கல்யாணியின் பிரச்சினையே அதுதான் போல இருந்தது.

“இவையள் கதைக்கிற மெடிற்ரேஷன் கதையெல்லாம் நம்புறவையாக இருந்தால் இப்படிக் கதைப்பினமோ?”

“பயங்கரவாதிகள் என்னெண்டு கடவுளை நம்புவினம்?”

“கடவுளை நம்புறதுக்கும் ஊருக்காகச் சண்டை பிடிக்கிற துக்கும் என்ன தொடர்பு? யோசிச்சுக் கதையுமன்.” இவளின் ஒருதலை நோக்கிற்கெல்லாம் அவள் தாய் தந்தையரின் அறி வுரைகள் ஒரு பக்கம்; மற்றது குருவி மூளை. “யோசிச்சுக் கதையுமென்” என்று திரும்பவும் சொன்னேன்.

வீடு வந்து சேர்ந்து குழந்தைகளைப் படுக்கப் போட்டு, நாங்கள் படுக்கப் போகும் வரை விவாதம் நிற்கவில்லை. நித்திரை லேசில் வருவதாக இல்லை.

சுவாமியாரின் அறிவுரைகள் திரும்பவும் மனதில் எழுந் தன . சந்தோஷம் எனக்குள்ளேதான் இருந்தால், அதைத் தட்டி எழுப்பத் தெரியவில்லை.

எல்லாவற்றையுமே மறந்தால்?’

நினைவுகள் எப்படிப் போகும்? நான் பயங்கர யோசனை களை விட்டெறிந்தால் தான் சந்தோஷத்தைக் காண முடியும் என்றால், பயங்கர யோசனைகள் வருவதே என் மனம் விறாண்டுப் படுவதால் தானே? அது ஏன் ஒருத்தருக்கும் தெரியவில்லை ? படுக்கையிலும் விவாதம் தொடர்ந்தது.

“கொழும்பில் வீடு எரிந்திருந்தால் தெரிந்திருக்கும்.”- நான்

“ஆட்கள் சாகிறது தெரியேல்லியோ?” – அவள்

“எதுவும் சும்மா கிடைக்காது.” – நான்

“கண்டபடி கௌரியின் தாயோட இப்படிக் கதைச்சால், மரியாதை மானம் எல்லாம் போகுது.” – அவள்.

“அந்த மனுசி தேவையில்லாமல் என்ன விசர்க் கதை கதைக்குது? டொக்டர் தில்லையைப் பாருமன். இண்டைக்கும் அந்தாளும் அந்தாளின் குடும்பமும் ஊருக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராய் இருக்கினம். உங்களுக்குச் சிங்களவன அண்டிப் பிழைச்சே பழகிவிட்டுது. இவ்வளவு தமிழர் சாகி றார்கள். விசர்க் கதை கதைக்கிறீர்.” – நான்,

“ஒழுங்கான மனுசர் எண்டால், ஒத்து வாழத் தெரியம்.” – அவள்.

“தலையில் ஆமிக்காறன் குண்டு விழுந்தால் தான் தெரியும்.” – நான்.

“சிங்களவர்கள் வெல்லுகினம்.” – அவள்

வாதம் நிற்பதாக இல்லை. என் இரத்தக் கொதிப்பு அடங்கு வதாக இல்லை. தூக்கம் வருவதாகவும் இல்லை.

கல்யாணிக்கு என்ன தெரிகிறது? கீழே போய் ரெலிவி ஷனை போட்டேன். ஒவ்வொரு நிலையமாக மாற்றிப் பார்த்தேன். ஒன்றிலும் நல்ல நிகழ்ச்சி இல்லை. சோபாவில் படுத்தபடி சிந்தனைகள் தொடர்ந்தன.

எனக்குள்ளேதான் என்னை மகிழ்விக்கும் சக்தி இருக்கு மானால், அதைத் தோண்டியெடுக்க வேண்டும்.

என்னுடைய வேலை நிலையாக இருப்பது என் கையில் இல்லை. என்னுடைய தாய், தமக்கையின் இவர்களைப் பற்றி நான் எதுவும் செய்ய முடியாது. கல்யாணியிடம் இரக்க குணமோ அறிவோ எதையும் எதிர்பார்க்க முடிய வில்லை.

நாளை ரிச்சர்ட்டுடன் சைக்கிள் ஓடப் போகலாம். ஆனால், அவன் வேகத்தில் போக முடியாது. எஞ்சின் சோதனைகளைத் தொடரலாம். ஆனால், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டுவந்து விட்டுவிட்டு, திரும்பிப் போக வேண்டும். கல்யாணி குலைப்பாள். எனக்குள்ளே அமைதி எங்கே வரப்போகிறது?

கல்யாணியிடம் சொல்ல வேண்டும் சந்தோசத்தைத் தேடத் தொடங்க வேண்டுமென்று. சைக்கிள் ஓடுவதுதான் சாத்திய மானது. ஆனால், தனியாகத்தான் போக வேண்டும்.

தூக்கம் வர ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலை. கல்யாணியும் நானும் குழந்தைகளை வெளிக்கிடவைத்து, காரில் ஏற்றும் வரையும் ஒன்றும் பேசவில்லை.

“இண்டைக்கு நீர்தான் போய்க் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்” என்றேன்.

“என்னால் முடியாது” என்றாள். இது வெறும் வாதம். “என்னாலும் முடியாது” என்றேன்.

குழந்தைகள் எங்களைப் பார்த்தன. என் குரலில் இருந்த தீர்மானம் அவர்களையும் உலுப்பியிருக்க வேண்டும்.

“Gosh aad” என்றான் கதிர்.

“Let us go” என்று சொல்லிப் புறப்பட்டேன். கல்யாணி மற்றக் காரை எடுத்துக்கொண்டு போவாள். நான் அன்று காலை சாப்பிடவுமில்லை. பனியும் நல்ல வேளையாக இல்லை. குழந்தைகளைப் பராமரிப்பாளரிடம் விட்டபோது செல்வி அழத் தொடங்கினாள். கொஞ்சம் நின்றுவிட்டு, அலுவலகத்துக்குப் போகும் போது போக்குவரத்து அதிகமாகி விட்டது. தாமதிக்கத்தான் போகிறது.

நான் போய்ச் சேர்ந்த போது அலுவலகத்தில் ஒருவருமில்லை. கொம்பியூட்டரில் எனக்கு வந்த செய்திகளைக் கேட்டுவிட்டு, என் கணக்கீடுகளைத் தொடங்கினேன். எங்கள் குழுவின் கூட்டம் பத்து மணிக்கு வைத்திருக்கிறார்கள். ஆள்குறைப்பு பற்றிய அறிவித்தல்கள் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்படலாம். யோசனைகள் பெருகத் தொடங்கின. மற்றும் கம்பெனிகளிலிருந்து இன்னும் ஒரு பதிலும் வரவில்லை. கொம்பியூட்டர் என் கணக்கீடுகளைச் செய்து முடிக்க நேரமெடுக்கப்போவது தெரிந்தது. எஞ்சின் பரிசோதனை அறைக்குப் போய் அங்கியை மாட்டிக் கொண்டு பரிசோதனைகளைத் தொடங்கினேன் . ரிச்சர்ட் அப்போதுதான் வந்தான். “கொம்பியூட்டர் செய்திகளைக் கேட்டாயா” என்று ரிச்சர்ட்டைக் கேட்டபோது, “இல்லை” என்றான். கூட்டம் இருக்கிறதைப் பற்றியும் ஆள்குறைப்பைப் பற்றியுமிருக்கலாம் என்பதைச் சொன்னேன். “அதைவிடப் புதிதாக என்ன இருக்கப்போகிறது” என்று சொல்லிவிட்டு, எஞ்சின் பரிசோதனைகளைத் தொடங்கினான்.

“என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டதற்கு, “பார்க்கலாம்” என்று வேலையில் இறங்கினான்.

“பயணம் இந்தக் கிழமை முடிவில் போகத்தான் போகி றீர்களோ?” என்று கேட்டேன்.

“நிச்சயமாக. இந்த மாதிரியான நேரத்தில் தான் மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்” என்றான்.

சுவாமியாரைவிட இவன் பரவாயில்லைப் போல இருந் தது. கல்யாணியுடன் பயணம் போவதென்றால், அவளும் லீவு எடுக்க வேண்டும்.

எனக்கும் போக ஆசையாயிருந்தது.

பத்து மணிக் கூட்டத்துக்குப் போனோம். மாக் சிரிப்பே இல்லாமல் நின்றுகொண்டிருந்தான். வழக்கம் போல, “நல்ல செய்தி முதலில், கூடாத செய்தி பின்னர்” என்று தொடங்கினான்.

“நல்ல செய்தி – இரண்டு பேரைத்தான் எங்கள் குழுவி லிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறார்கள்…”

“கூடாத செய்தி – நாங்கள் எல்லோரும் இந்த இரண்டு பேருடைய வேலையையும் சேர்த்தே பார்க்க வேண்டும்” என்று நிறுத்தினான் மாக். “இதென்ன கூடாத செய்தி? நாங்கள் யாராவது வேலை ஏதேன் பார்த்தால் தானே?” என்று அலெக்ஸ் பகிடி சொல்லும்போதே, அவனுக்கு இவைகள் பற்றித் தெரிந் திருக்கும் போல இருந்தது. ஆனால், ஒருவரும் சிரிக்கவில்லை .

மாக் தொடர்ந்தான். “… ஆளணிப் (Personnel) பகுதியி லிருந்து இந்த இரண்டு பேருக்கும் இன்று மத்தியானத்துக்குள் அழைப்பு வரும். நீங்கள் எல்லோரும் உங்கள் காரியாலயத்துக்குப் போகலாம்.”

“அந்த இரண்டு பேரும் யார் என்று தெரியுமா?” எல்லோரும் ஆவலாகக் கேட்டார்கள், அலெக்ஸைத் தவிர.

“நாங்கள் ஓர் இலகுவான முறையைப் பின்பற்றினோம். யாரின் உழைப்புக்கும் ஊதியத்துக்குமான விகிதம் குறைவாக இருந்ததோ அவர்களை நீக்கியிருக்கிறோம். மாக்குக்கு, தான் தப்பிட்டோம் என்கிற சந்தோஷம் மனதில் இருந்தது போன்று எனக்கும் தோன்றியது.

எல்லோரும் கசமுசவென்று எல்லோரையும் திட்டியபடி அறையைவிட்டுத் தங்கள் காரியாலய அறைகளுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

நானும் ரிச்சர்ட்டும் எஞ்சின் பரிசோதனை அறைக்குள் நுழைந்து பரிசோதனைகளைத் தொடர்ந்தோம். “செய்தி ஏதாவது இருந்தால் ரெலிபோனில் பதிவாகட்டும்” என்று ரிச்சர்ட் சொன்னான். எஞ்சினில், ஒரு புது மாதிரியான எஞ்சினைக் குளிர்ப்படுத்தும் (Coolant) திரவத்தைப் பரிசோதனை பண்ணிக் கொண்டிருக்கிறோம். எஞ்சினில் வெப்ப நிலையைக் காட்டும் கருவிகள் சத்தமில்லாமல் மின் பூச்சிகளைப் போல மாறிக் கொண்டிருந்தன. கொம்பியூட்டருக்குத் தன்னாலேயே போகும் வண்ணம் செய்து வைத்திருக்கிறோம். எஞ்சினை ஓட்டிவிட்டு அவ்வப்போது எல்லாம் ஒழுங்காக இருக்கின்றனவா என்று பார்த்தால் போதுமானது.

“ரிச்சர்ட், கம்பெனிக்காரரின் முடிவுகளை அறிய விருப் பம் உண்மையாகவே இல்லையா?” என்று கேட்டேன்.

“பாலா, இங்கே பார். சிலவற்றைப் பற்றி நாங்கள் கவலைப்படலாம். சிலவற்றைப் பற்றி ஒன்றும் செய்ய முடி யாது. இந்த முட்டாள்கள் என்னை வேலையிலிருந்து நிறுத் தினால், நான் வேறு வேலை ஏதாவது தேட வேண்டும். அதைத்தான் நான் செய்யலாம். உனக்கும் ஏதாவது நடந்த தென்றால், எங்கேயாவது குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு போய் வா. உனக்கு நல்லது” என்றான். என் மனம் கொஞ்சம் அமைதியானது.

மறுபடியும் வேலையில் ஆழ்ந்தோம். பதினொன்றே காலானது பரிசோதனைகள் முடிவதற்கு. கொம்பியூட்டர் தாள்களைக் கையில் எடுத்துக்கொண்டு காரியாலய அறை களுக்குப் போனோம். என் மனம் பதட்டப்பட ஆரம்பித்தது. போனில் செய்திகள் வந்ததற்கான விளக்கு எரிவதைப் பார்த்த வுடன் மனப் பதட்டம் அதிகரித்தது. போன் செய்திகளை ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கினேன். முதலில் கல்யாணியின் செய்தி.

உடனடியாகத் தனக்கு போன் செய்யச் சொல்லி.

கௌரி, ஏதாவது கல்யாணிக்குச் சொல்லியிருப்பாள்.

ஆனால், காரியாலயச் செய்திகள் முக்கியமாக ஒன்று மில்லை. தப்பினேன் என்று யோசித்துக்கொண்டு கல்யாணிக்கு போன் செய்தேன். கல்யாணிக்கு, நான் நினைத்ததைப் போலவே, கௌரி போன் செய்திருக்கிறாள்.

“உங்களுக்கு ஆரோட என்ன கதைக்கிறதெண்டு நிதானம் இல்லையா? கௌரி ஆட்கள் எங்களைப் பற்றி என்ன நினைப்பினம்?”

“அந்த மனுசி என்ன கதைச்சதெண்டு சொல்லேல்லியோ? எங்கட ஒபீசில் ஆக்களை நிற்பாட்டுறதைப் பற்றி கதைச்சுக் கொண்டிருக்கிறாங்கள். எப்ப, எது கதைக்கிறதெண்டு தெரியாதா…?” என்று உரக்கச் சொன்னேன்.

என் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். உள்ளே வரச்சொல்லிக் குரல் கொடுத்தேன், போன் வாயை மூடியபடி. ரிச்சர்ட்தான்.

“கெல்லி போனில் பேசுகிறாள்” என்று அவனிடம் சொல்லி விட்டு, நான் பிறகு கதைப்பதாக கல்யாணியிடம் சொல்லிவிட்டு போனை வைத்தேன். கல்யாணி மறுமுனையில் ஏதோ சொல்வது கேட்டது. ரிச்சர்ட் முக்கியமான செய்தி ஏதாவது சொல்லக்கூடும். கல்யாணியை இங்கு எல்லோரும் கெல்லி (Kelly) என்று கூப்பிடுகிறார்கள்.

“கெல்லிக்கு ஆயிரமாயிரம் மற்றப் பிரச்சினைகள்” என்று ரிச்சர்ட்டிடம் சொன்னேன்.

“என்னை வேலையிலிருந்து நிறுத்தியிருக்கிறார்கள்” என்றான் ரிச்சர்ட், தன் தோள்களைக் குலுக்கியபடி.

“என்ன…?” என் கதிரையிலிருந்து எழும்பிவிட்டேன்.

“இது நல்ல செய்திதான். நாங்கள் நாளைக்கே ஃப்ளோரிடா போகவேண்டியதுதான். லிண்டாவால் இரண்டு நாள் அதிகமாக லீவு எடுக்க முடியும்.” ரிச்சர்ட் அப்போதே புறப்படுவான் போல இருந்தது.

“இதுபற்றி உனக்குக் கவலையில்லையா?” என்று கேட்டேன்.

“நான் உனக்கு முன்னரே சொல்லவில்லையா? இதுபற்றி என்னால் ஒன்றும் செய்ய முடியாது. வேறு வேலை தேடுவது பற்றி வந்துதான் யோசிக்க வேண்டும். உனக்குத்தான் கவலைப்படுவது திருப்தியைத் தரும், எனக்கில்லை. என் சாமான்களை எடுக்க, வந்து ஒருகை கொடுப்பாயா?” என்றான்.

ரிச்சர்ட் போவது பற்றிக் கவலையாக இருந்தது. நல்ல மனிதன் தன் வேலை உண்டு, தன் தேகாப்பியாசங்கள் உண்டு என்றிருக்கும் மனிதன். மாக், அலெக்ஸ் மாதிரி மேலதிகாரிகளுக்குப் பின்னால் போவதில்லை. சர்ச்சுக்கும் போவதில்லை, கொல்ஃப்பும் விளையாடுவதில்லை. விஷயங்கள் முற்றிக் கொண்டே வருகின்றன. இவன் போனால் யார் இந்த வெப்ப நிலை கணிக்கும் கருவிகளைச் சரிபார்ப்பார்கள் என்று தெரியவில்லை. இவன் ஒரு நல்ல சக ஆராய்ச்சியாளன். அவன் காரியாலயத்துக்குப் போய், அவன் புத்தகங்களை அட்டைப் பெட்டிகளில் அடுக்கத் தொடங்கினோம்.

“மையாமியில் (Miami) ‘போட்’ (boat) ஒன்று வாடகைக்கு எடுக்கப்போகிறோம். மைக்குக்கு மீன் பிடிப்பதென்றால் சந்தோஷம் ” என்றான். மைக், அவனுடைய எட்டு வயது மகன். அவனும் ஒரு நல்ல பெடியன்.

ரிச்சர்டை நிறுத்தியிருக்கிறார்கள் என்றால், என் கழுத் துக்கான கத்தியும் தீட்டப்பட ஆரம்பித்திருக்கலாம். மற்றும் சில கார், விமானம் செய்கிற கம்பெனிகளுக்கு விண்ணப்பித் திருக்கிறேன். எல்லோரையும் போனில் விசாரிக்க வேண்டும். ரிச்சர்ட் சொல்லுவதுபோல் எதைப் பற்றியும் கவலைப்பட முடியாது.

“… உனக்குத்தான் கவலைப்படுவது திருப்தியைத் தரும், எனக்கில்லை.” ரிச்சர்டின் வார்த்தைகள் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்தன.

ரிச்சர்ட் போவது எனக்கு இழப்புத்தான்.

“ஃப்ளோரிடா போய்விட்டு வா. நாங்கள் சந்திப்போம்” என்று சொன்னேன்.

“நிச்சயமாக” என்று சொல்லிக் காரில் ஏறிப் போய்விட்டான். என் மனம் உறுதிப்பட ஆரம்பித்தது.

திரும்பிக் காரியாலயத்துக்கு வந்தபோது ரெலிபோனில் செய்திகளுக்கான விளக்குத் திரும்பவும் எரிந்து கொண்டிருந்தது. இது கல்யாணியாகத்தான் இருக்க வேண்டும்.

அவள்தான் – தனக்கு உடனடியாக போன் செய்யுமாறு கேட்டிருந்தாள். அவளுக்கு போன் செய்தால், நல்லவேளை யாக அங்கே, அவள் மேசையில் இல்லை. என்னத்துக்காகக் கதைக்கக் கேட்டாள் என்று தெரியுமென்றும், வீட்டுக்கு வந்து தொடரலாம் என்றும் அவளுக்குச் செய்தி வைத்துவிட்டு, மறுபடியும் பரிசோதனை அறைக்குள் போய்விட்டேன். மாக் திரும்பவும் கூட்டம் போட்டு வேலைகளைத் திரும்ப ஒழுங்குபடுத்தத் தெண்டிப்பான் என்று தெரிந்தது . ரிச்சர்டை நிறுத்தினால், யாரை என்னுடன் போடுவார்கள்? அலெக்ஸ் என்றால் கஷ்டந்தான். அவன் ஒரு இனவெறியன். அவன் ஜெனரல் மனேஜரின் நண்பன் என்பதால், மாக்கின் இடத்தையே அவனால் பிடிக்க முடியும். வேலைதான் நடக்காது. மனக் கவலை திரும்பவும் வரும்போல இருந்தது.

ரிச்சர்ட் வேலை செய்துகொண்டிருந்த கருவிகளைப் பற்றி அறிவதில் அன்று பின்னேரம் செலவானது. வீட்டுக்குப் போன போது நினைத்ததைப் போலவே கல்யாணி வெடித்துக் கொண்டிருந்தாள். கௌரி சொன்னாளாம், நான் அவள் தாயுடன் தேவையில்லாத கதைகள் கதைத்தாக. நடந்தவற்றைத் திரும்பவும் சொன்னேன். கௌரியின் தாய் சொன்னவற்றைச் சொன்னேன்.

“அவ அப்படிச் சொல்லியிருக்கமாட்டா” என்றாள் கல்யாணி. நான் இன்று எந்த விவாதத்தையும் தொடருவதாக இல்லை. தோள்களைக் குலுக்கிவிட்டு என் அறைக்குப் போக ஆரம்பித் =தேன்.

“இதுக்கு என்ன சொல்லிறியள்?” என்று கத்தினாள்.

“உம்முடைய பிரச்சினை என்ன தெரியுமா? உப்பிடி விவாதிக்கிறது உமக்குச் சந்தோஷமாக இருக்குது. அப்பிடி யெண்டால் இன்னும் கத்தும்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டேன். இன்னும் ஏதேதோ சொன்னாள்; கேட்கவில்லை. பின்னேரச் சாப்பாடு செய்ய ஆரம்பித்திருந்தாளோ தெரிய வில்லை . அதைப் பற்றியும் இப்போது விவாதம் ஆரம்பிக்கலாம். மேலே போய் முகம் கழுவிக்கொண்டு, இறங்கிவந்து ரெலி விஷனைப் போட்டேன். கல்யாணி ரெலிவிஷனை நிறுத்தினாள்.

“நான் இந்த விவாதங்களால் சந்தோஷமடைகிறேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நான் இப்படிக் கத்துறது சந்தோஷமாகவோ?” என்றாள்.

“பின்னேரச் சாப்பாடு செய்யத் தொடங்குவோமா” என்று கேட்டேன். அதுக்கும் கத்தினாள். பிஸ்சா (Pizza) தான் ஓடர் பண்ணி எடுக்க வேண்டும் போல இருந்தது. வேறு கதைகளை வளர்க்காமல் பிஸ்சாவுக்கு போன் பண்ணினேன்.

ராணியக்காவின் கணவர் பத்மநாதனின் மச்சான் ஒருவர் கனடாவில் இருக்கிறார். கல்யாணியின் தங்கையும் குடும்பமும் ரொறொன்ரோவில் இருக்கிறார்கள். நாங்கள் ஒருமுறை ரொறொன்ரோ போனபோது இரண்டு குடும்பத்தாரையும் பார்த்துவிட்டு வந்தோம். கல்யாணியின் தங்கையும் அவள் கணவரும் இருவரும் அக்கவுண்டன்ட் உத்தியோகம் பார்க்கிறார்கள். பத்மநாதனின் மச்சான் சில்லறை உத்தியோகங்கள் பார்ப்பதால், கல்யாணிக்கு அவர்களைப் பிடிக்காது.

“இந்த மாதிரிச் சனங்களை இங்கு விட்டபடியால் தான் தமிழரின்ர மானம் போகுது….” என்பாள்.

“நீங்கள் மேல்மட்டக்காரரெல்லாம் எங்கேயும் போகலாம். சுருட்டுச்சுத்துற சனங்கள் வரக்கூடாதோ.”

“வரலாம். ஆனால், ரொறொன்ரோ குப்பையாகிறதுக்கு அதிக நாள் எடுக்காது” என்றாள். தொடர்ந்து, “களவுக் கூட்டங்களும் திருட்டுக்கூட்டங்களும் இங்கே வந்து எல்லாற்றை மானமும் போகுது” என்று கத்தினாள். நெடுக இப்படியே கதைப்பாள்.

பிஸ்சா இன்னும் வந்து சேர்ந்தபாடாக இல்லை. கல்யாணி யின் குரல் ஓங்கிக்கொண்டே வந்தது. “எங்கடை ஆக்களுக்கு பயங்கர வேலையள் செய்யிறது பழகிவிட்டுது…”

“அது சரி. நேற்றுச் சாமியார் சொன்னது என்ன? அதைக் கேட்டனீரோ?”

“என்ன சொன்னதைப் பற்றிக் கேக்கிறியள்” என்றாள்.

“சந்தோஷம் எங்கள் மனதில் தான் இருக்கிறது. அதை நாங்களே உணரவேணும் எண்டார்.”

“அதெல்லாம் சரி. அது, மனிசர் மாதிரி இருக்கிற சனங்களுக்கு. உங்களுக்கென்னத்துக்கு?” என்று கடுமையாகவே சொன்னாள்.

“முதலில் உம்மிலேயே ஆரம்பியுமென்” என்றேன்.

“நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். நீங்கள் தான் பிரச்சினை” என்றாள் – முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வண்ணமாக.

“சந்தோஷமாக இருக்கிற மாதிரித் தெரியல்லியே” என்று சொன்னேன்.

இந்த விவாதம் முடிவடையாது. ஊர்ச் சண்டைகள் மாதிரித் தான். சண்டைகள் பிடிப்பதென்றே தீர்மானம் எடுத்திருக்கிறோம். இது நிற்காது. பிஸ்சா வந்து சேர்ந்து, சாப்பிட ஆரம்பித்தோம். குழந்தைகளுக்கு எங்கள் விவாதங்கள் பழகிவிட்டன. கல்யாணி யின் விவாதங்களில் ஆழத்தைக் காணவும் முடியாது அடக்கத்தை யும் காணமுடியாது. என்னுடைய பதில்களும் பயங்கரவாதப் பதில்களாகிவிட்டன.

“இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேணும் எண்ட யோசனை இல்லியா உமக்கு” என்று கேட்டேன்.

“இதுக்கு நீங்கள் மனிசர் மாதிரி நடக்கப் பழக வேணும்.”

“நீர்தான் மிருகம் மாதிரி இருக்கிறீர்… நான் என்ன செய்ய வேணும் எண்டு பாக்கிறீர்?” கல்யாணி முதல் வசனத்தால்

இந்தமுறை ஆத்திரமடையவில்லை.

“கெளிரியின் தாயிடம் மன்னிப்புக் கேளுங்கோ ….”

“நான் செத்ததன் பிறகு கேட்கிறேன்…”

இந்த விவாதம் முடிவே அடையாது. “நான் இனி உங்கை யெல்லாம் வர ஏலாது. இனி, நீரே உங்கையெல்லாம் போய் வாரும்” என்றேன்.

போன் மணி அடித்தது. மருத்துவர் பெரியதம்பி. “என்ர மாமியிட்ட நேற்று என்ன சொன்னனீர்?” என்று நேரே தொடங்கினார். அவர் மாமி சொன்னதையும் சொல்லி, என் மறுமொழியையும் சொன்னேன். “ஏதென் பிழையோ?”

அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “வயசு போனவையோட சரியாகக் கதைக்க வேணும்” என்றார்.

“வயசுபோன ஆக்களும் சரியாகக் கதைக்க வேணும்….” என்றேன். நான் இதை விடுவதாகவும் இல்லை.

“அங்கே ஊரில் சனங்கள் சாகினம். இங்கை இருந்துகொண்டு, அங்கே சனங்கள் இன்னும் சாகேல்லியோ எண்டு கேக்கிறது என்ன கலாசாரத்தில் சேர்ந்தது?” பெரியதம்பியால் எந்த ஆழமான சிந்தனையும் முடியாது.

“நீர் அவவிட்ட மன்னிப்புக் கேக்க வேணும்…” என்றார். கௌரி ஒரு பலம் வாய்ந்த சக்தி. எத்தனை பேரை ஆட்டிப் படைக்கிறது?

“நீங்கள் முதலில் அவவை மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்கோ. எனக்கு வேற வேலை கிடக்கு. நான் போக வேணும்” என்று உடனே போனை வைத்துவிட்டேன். இந்த விவாதமும் முடியாது.

கல்யாணி, யாருடன் கதைத்ததென்று கேட்டாள். “பெரிய தம்பி” என்றேன்.

“உங்களுக்கு இந்த உலக நடப்புகள் ஒன்றும் தெரியாது” என்றாள்.

கதிரும் செல்வியும் எங்களைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். கல்யாணி அவர்களை இழுத்துக்கொண்டு மாடிக்குப் போனாள்.

ரிச்சர்ட் ஃப்ளோரிடாவுக்குப் போய்விட்டானோ தெரிய வில்லை என்று அவனை போனில் விசாரித்தேன். அடுத்த நாள் கிளம்ப இருக்கிறார்களாம்.

“எல்லாம் எடுத்து வானில் வைத்துவிட்டாயிற்று” என்றான். கதை முடிந்த பின்னர் சோபாவில் சரிந்தேன். என் வாழ்க்கையைச் சீர்பண்ண வேண்டும். விவாதங்களும் முரண் பாடுகளும் கவலைகளும் தொல்லைகளும் என்னை ஆட்டிப் படைப்பதை நிறுத்த வேண்டும். பலமும் நிறைய வேண்டும்….”

தூக்கம் வரலாயிற்று. கல்யாணியின் குரல் தொலைவில் கேட்டது.

அடுத்த நாள் காலை பனி பெய்து கொண்டிருந்தது. இரண்டு அங்குலம் விழுந்திருக்கும். குழந்தைகளை ஆயத்தப்படுத்தி, காலை உணவு அருந்தி, காரியாலயத்துக்கு வெளிக்கிடும் வரையில் கல்யாணி ஒன்றும் சொல்லவில்லை. நான் சோபாவில் சரிந்ததன் பின் கௌரி போனில் கதைத்திருக்கலாம். இதுபற்றி ஆய்வு நடத்த முடியாது.

காரியாலயத்திற்குப் போன போது மாக் நின்று கொண்டிருந்தான்.

“கூட்டம் (meeting) வைத்திருக்கிறாயா?” என்று கேட்டேன்.

“ஆம். இன்று காலை முதல் வேலையாய். எட்டு முப்பதுக்கு.”

இன்னும் அரை மணித்தியாலம் இருக்கிறது. கொம்பியூட்டரைத் தொடக்கி முதலில் எனக்கு வந்த கடிதங்களைப் பார்க்கத் தொடங்கினேன். நண்பன் சிவராஜா சிட்னியிலிருந்து கடிதம் எழுதியிருந்தான். சிவராஜா என் பால்ய நண்பன். அவனுடன் சைக்கிளில் திரிந்த நாட்கள் எத்தனை? ஊருக்குப் போய் வந்திருக்கிறான். அதைப் பற்றியும் விபரமாக எழுதியிருந்தான். மனம் கவலையில் ஆழ்ந்தது.

எட்டரை மணிக் கூட்டத்துக்குப் போன போது, நான் பயந்தது போலவே அலெக்ஸை என்னுடன் வேலைக்குப் போட்டிருந்தார்கள். அலெக்ஸ் என்ன மாதிரி எஞ்சினியராக வந்தான் என்றதே ஆச்சரியமானது. ஜெனரல் மனேஜரின் நண்பன் என்பதைத் தவிர வேறொரு தராதரமும் இல்லை.

“ஹலோ அலெக்ஸ்…” என்றேன்.

“ஹலோ” என்றான். அவன் குரலில் உற்சாகமில்லை . அவனுக்கு வெள்ளையரல்லாதவரைப் பிடிக்காது என்பது தெரியும்.

“எனக்கு இந்த ஆராய்ச்சிப் பகுதியையே பிடிக்காது” என்றான்.

“ஒரு கிழமைக்குப் பிறகு பார்” என்றேன். அடுத்து வந்த ஒரு கிழமை நரகமாகவே அமைந்தது. அலெக்ஸுக்கு ஒன்றும் புரிவதுமில்லை. வேலை செய்ய விருப்பமுமில்லை. பாதி நேரம் மாக்கின் காரியாலய அறையிலேயே நின்றான்.

அன்று வழக்கம் போல காலையில் கோப்பியைக் குடித்து விட்டு, பரிசோதனை அறைக்கு எட்டரை மணிக்கு வந்தான்.

“இந்த வெப்பநிலை மாற்றத்திற்கு ஏற்ற மாதிரி எஞ்சினைக் குளிர்ப்படுத்தும் திராவகம் ஓடுகிறதை மாற்ற வேண்டும்…வெப்பநிலை மாற்றத்தைப் பதிவு செய்யும் கருவிகள் சரியாக வேலை செய்கிற மாதிரித் தெரியவில்லை. அதைச் சரிபார்த்துத் தா” என்று கேட்டேன்.

“முடியாது” என்றான் அலெக்ஸ். “அது உன்னுடைய கடமை” என்றேன்.

“இல்லை. இதுவெல்லாம் முட்டாள் பரிசோதனைகள்” என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து “நீ ஒரு மூன்றாந்தர பேர்வழி” என்றான் நக்கலாக.

“நான் மூன்றாந்தரம் என்றால், உன்னை விபரிக்க வார்த்தையேயில்லை. நான் மைக்கிடம் சொல்லப்போகிறேன்” என்று கோட்டுடன் புறப்பட்டேன்.

“நீ, உன் வேலை நிலைபெறப்படாது என்று யோசித்தாயானால் போய்ச் சொல்” என்றான்.

பரிசோதனையை நிறுத்திவிட்டு ஆத்திரத்துடன் மாக்கிடம் போனேன். மாக் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்னுடன் வர ஆயத்தமானான். மாக்குடன் பரிசோதனை அறையை நோக்கிப் போனேன். அங்கு போனால், அலெக்ஸைக் காணவில்லை. பக்கத்துப் பரிசோதனை அறையிலிருந்த யங்கையும் டானையும் கேட்டோம். அலெக்ஸ், ஜெனரல் மனேஜரிடம் போவதாகச் சொன்னானாம்.

மாக் என்னைப் பார்த்தான். இனிக் கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டுமென்றான்.

கல்யாணியும் அந்தக் கிழமை ஓரளவு அமைதியாக இருந்தாள். புயல் வருவதுக்கு நேரமெடுக்காது என்று தெரிந்தது. கௌரியும் அவளும் இன்னும் போனில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.

என்னைத் திருத்த முடியாது என்று தீர்மானித்திருக்கலாம். அல்லது வேறு யார் பிரச்சினையையோ விவாதித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். இரண்டுமாகவும் இருக்கலாம். பெரியதம்பியிடமிருந்து வேறு ஒரு கதையும் இல்லை . என் வேலைப் பிரச்சினைகளைச் சொல்லவும் ஒருவருமில்லை. கதிரும் செல்வியும் இந்தப் புதிய அமைதியைப் பயன்படுத்திக்கொண்டு குதூகலமாகவே இருந்தார்கள். கதிரின் புது லேகோ (LEGO) ‘செட்டைப் பொருத்த உதவி செய்து கொடுத்தேன். இந்த அரை அமைதியைக் குலைத்தபடி அலெக்ஸின் காரியாலய விவாதங்கள் மனக்கொதிப்பை அதிகப்படுத்த ஆரம்பித்திருந்தன.

அலெக்ஸுடன் விவாதம் நடந்த அன்று, வேலை முடிந்த பின் வீடு போகும் போதும் ஆத்திரம் அடங்கவில்லை. பனியும் பெய்து தெருவெல்லாம் கார்கள் சறுக்கிக்கொண்டிருந்தன. வீடு போனபோது பத்மநாதனின் மச்சான் லிங்கத்திடமிருந்து போன் றெக்கோடரில் செய்தி இருந்தது. தன்னை உடனடியாகத் தொடர்பு கொள்ளச் சொல்லி.

லிங்கத்துக்கு போன் செய்த போது செய்தி கிடைத்தது. என் மருமகன் குமாரை ராணுவத்தார் கொழும்பில் கைது செய்திருக்கிறார்களாம். மூன்று நாட்களாகிவிட்டதாம். எங்கு பிடித்துவைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லையாம்.

“ஒண்டு அல்லது ஒண்டரை லட்சம் குடுத்தால், வெளிய எடுத்துப் போடலாம்” என்றார் லிங்கம்.

“இப்ப ஆருக்குக் காசை அனுப்புறது?”

“மச்சானுக்கே அனுப்புங்கோ” என்றார் லிங்கம்.

அதையும் வீணாக்கிவிட்டு நிற்கக்கூடும். ஆனால், வேறு என்ன செய்ய முடியும்?

“அங்கே கொண்டுபோய்க் குடுக்கிற ஆக்கள் இருக்கின மாம்?” லிங்கம் தனக்குக் காசை அனுப்பினால், தான் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

“நான் உடனே ‘செக்’ அனுப்புகிறேன்” என்றேன்.

கல்யாணி, “என்ன” என்று கேட்டாள். சொன்னேன்.

“இது ஒன்றும் சரிவராது” என்று தொடங்கினாள்.

“நீர் என்ன எண்டாலும் செய்யும். நான் அனுப்பவே போகிறேன்” என்றேன். ஏர்போட்டிற்கு அருகில் உள்ள பெடரல் எக்ஸ்பிரஸில் அனுப்பினால், நாளைக்குக் கிடைக்கும். லிங்கத்திடம் உடனடியாக மூவாயிரம் டொலர்கள் எடுக்க முடியாது.

பெடரல் எக்ஸ்பிரஸைத் தேடி, லிங்கத்துக்கு செக் அனுப்பி விட்டேன். தமக்கை யோகராணியுடன் கதைக்க வேண்டும் போல இருந்தது. எப்படிக் கவலைப்படுகிறாளோ? தெரியவில்லை.

கல்யாணியின் தகப்பனைக் கேட்க முடியாது. தமிழர்கள் எல்லாம் புலிகள் என்கிற பயத்துடன் வாழ்கிற சிங்கள் அதிகார வர்க்கத்துடன் தொடர்பு வைத்திருக்கிற மனிதன். அரசாங்கம் புலிகளை வெல்லும் நாளில் கிடைக்கும் பரிசுகளை எதிர் பார்த்திருக்கும் மனிதர். குமாரை வெளியே கொண்டுவரத் தெண்டிக்கவும் மாட்டார். கேட்டாலும் இழிவுதான்.

இப்போது என்னால் முடிந்ததெல்லாம் பணம் அனுப்புவதுதான்.

நான் வெளியே போய்த் திரும்பும் போது இரவு ஒன்ப தரை இருக்கும். கல்யாணி போனில் பேசிக்கொண்டிருந்தாள். கௌரியிடம் இந்நேரம் செய்திகள் போயிருக்கும். தமக்கை, தமையன், தாய், தகப்பன் எல்லோருக்கும் இந்தச் செய்தி கிடைத்திருக்கும். இவளுடைய தாய் தகப்பன் வர இருப்பது இவளைப் பார்க்க. என்னைப் பார்ப்பதற்கு அல்ல.

கதிரும் செல்வியும் தூங்கப் போய்விட்டார்கள். குழந்தை களை இவ்வார இறுதியில் சினிமாப் படம் பார்க்கக் கூட்டிக் கொண்டு போவதாக உறுதியளித்திருக்கிறேன்.

என் தந்தையார் சினிமாப் படம் அவ்வளவாகப் பார்த்த தில்லை. எப்போதாவது கூட்டிக்கொண்டு போவது உண்டு. யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் வெய்யில் வியர்வை யுடன் பகல் காட்சிகளுக்குப் போவோம். என் குழந்தைகள் சினிமாவும் பார்த்து, ரெலிவிஷன் பார்ப்பதிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது. கல்யாணி ஏதாவது செய்யலாம்.

கல்யாணி பலவேறாகவும் நேரமில்லாதவளாக இருக்கி றாள். ஒன்பது வருடங்களுக்கு முன், அவளைக் கட்டி, இங்கு அழைத்து வந்தபோது சந்தோஷமாகவே இருந்தோம். நாங்கள் பார்க்காத இடமில்லை. யாழ்ப்பாணம் யுத்தகளமாக மாறி, எங்கள் வீடு போய், நான் சகோதரங்களை இழக்க, ஊரில் மக்கள் பல்விதமாகவும் அல்லல்பட்டு வெளியேற, நாங்களும் விவாதம் செய்யும் வழக்கறிஞர்கள் மாதிரி ஆகி விட்டோம். அவள் விவாதத்தில் பொருளில்லாமல் போய்விட்டது. வாழ்க்கை ஓர் ஓட்டப் போட்டி மாதிரி என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள். எல்லோரையும்விட முன்னால் ஓட முடியாது போனால், முன்னால் ஓடுகிற குழுவிலாவது இருக்க வேண்டுமென்று பார்க்கிறாள்.

“இந்தப் போட்டிக்கு என்னை இழுக்காதே” என்றால், கேட்கிறாளில்லை. நான் ஒரு வெற்று உருவமாகிவிட்டேன். நான் நாளையே ஓர் ஆயிரமாயிரம் டொலர் பணம் கொண்டு வந்தால், மனிதனாகிவிடுவேன். “கிடுகு வேலித்தனம்”; என்னைப் போன்று கிடுகு வேலிகளுக்குள் இருந்து வந்தவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. கொழும்பில் இருப்பவர்களுக்கு வேறு இதைவிட மோசமான வியாதிகள் வந்திருக்கின்றன.

போனில் கதைத்து முடித்துவிட்டு கல்யாணி என்னிடம் வந்தாள்.

“என்ன குழப்படி செய்து பிடிச்சுக்கொண்டு போயிருக் கிறார்கள் எண்டு தெரியுமா?” என்றாள்.

“கல்யாணி இங்கே பாரும். அங்கே பிடிபடுகிறதுக்குத் தமிழன் என்றிருந்தால் காணும். உம்முடைய கொப்பர் கொம்மா வுக்கு உது தெரிய நியாயமில்லை. உமக்கு நான் வேணுமோ இல்லியோ எண்டு நீர் முடிவெடுக்க வேணும். நீர் இப்பிடி முட்டாள் கதையள், சிங்களவரின்ர நியாயம் மாதிரிக் கதைச்சுக் கொண்டிருந்தால் சரிவராது. நான் இண்டைக்கே இப்பவே வெளியே போகத் தயார். நீர் ஒரு அட்டாணியுடன் கதையும், தேவையென்றால். என்னால் இனி இப்பிடிப் பிரச்சினைப்பட்டுச் சீவிக்க ஏலாது?”

கல்யாணி என்னை உற்றுப் பார்த்தாள். “பெரியதம்பி உமக்கு போன் எடுத்தவரோ?”

அப்போதுதான் எனக்கு விளங்க ஆரம்பித்தது. “நீர் அப்ப இதைப் பற்றி சீரியசாகத்தான் இருந்திருக்கிறீர். கௌரி உம்முடைய வாழ்க்கையையும் கொண்ட்ரோல் பண்ண நிக்கிறாள். அது நடக்க நீர் விட்டீர் எண்டால், எங்கட வாழ்க்கை சிதறிப்போகும். அது உம்முடைய விருப்பம்.”

என் ஆத்திரம் அடங்கவில்லை. “நான் வெளியே ஒருக்கா போய்வாறன். நீர் யோசிச்சுவையும்.”

நான் காலணிகளை அணிந்து, கோட்டையும் போட்டுக் கொண்டு கார்த் திறப்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

“எங்கே போறீங்கள்?” என்று கேட்டாள்.

“ஏன் கேக்கிறீர்? நான் எங்கே போனால் என்ன?”

“நீங்கள் ஒரு இடமும் போக வேண்டாம்.”

“என்ர ஒபிசில் இருக்கிற கஷ்டங்கள் உமக்குத் தெரியும். என்ர குடும்பப் பிரச்சினகைள் உமக்குத் தெரியும். உமக்கு விஷயங்கள் எவ்வளவு இறுகிப்போயிருக்கிறதெண்டு தெரியேல்லை. உம்மிட வாழ்க்கையில் நிம்மதியைத் தேடுவோமெண்ட யோசனையுமில்லை. என் மனம் ஆற, நான் காரில் போய்த் திரும்பி வாறன்” என்றேன். என் தாய் தந்தையார் என்னை வளர்த்த வளர்ப்பு. ‘தண்ணி’ அடிக்க, சிகரெட் குடிக்கப் பழக்கி இருந்தால், கொஞ்சமாவது நிம்மதி கிடைத்திருக்கும்.

நான் என்ரபாட்டில் காரில் ஏறிப் போய்விட்டேன், கல்யாணியின் பேச்சு ஒன்றையும் கேட்காமல்.

ஒரு போன் பூத்திற்குப் போய், ரிச்சர்ட்டின் நம்பரைச் சுழற்றினேன். ரிச்சர்ட் எடுத்தான்.

“எப்போ திரும்பினீர்கள்” என்று கேட்டதற்கு, “இரண்டு நாட்களுக்கு முன்னர்” என்றான். “நான் உன்னிடம் இப்போது வரலாமா?” என்று கேட்டதற்கு, “என்ன நடக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டான். “நான் வந்து சொல்லுகிறேன்” என்றேன்.

“சரி, வா” என்றான்.

ரிச்சர்ட்டிடம் போனேன். லிண்டாவும் நின்றாள்.

“எல்லோரும் எப்படி?” என்று கேட்டான். “ஓகே” என்றேன். ரிச்சர்ட்டுக்குக் கல்யாணியின் மனச்சிக்கல்களை விளக்கப்படுத்து முன் என் மண்டை வெடித்துப் போகும். ஆபீஸ் பிரச்சினைகளை ரிச்சர்ட்டிடம் சொன்னேன்.

அலெக்ஸ் சண்டை பிடிப்பதைப் பற்றிச் சொன்னேன். “இதைப் பற்றி நான் ஆச்சரியப்படவில்லை ” என்றான் ரிச்சர்ட்.

“உன்னுடைய வேலை தேடும் முயற்சிகள் எப்படி?” என்று கேட்டேன்.

“அடுத்த கிழமை இரண்டு, மூன்று நேர்முகப் பரீட்சைகள் இருக்கின்றன. ஒன்று லொஸ் ஏஞ்சலஸ். மற்றது அட்லாண்டா வில்” என்றான்.

“நானும் இந்தக் கம்பெனியை விட்டுப் போகலாமா என்று பார்க்கிறேன். உன்னுடைய உதவி கட்டாயம் தேவை” என்றேன். ஒருவன் பெயரையும் போன் எண்ணையும் தந்து, அவனை விசாரிக்கும்படி சொன்னான். எஞ்சின் பரிசோதனை விபரங்களைப் பற்றியும் பேசிவிட்டு நான் வீடு திரும்பும் போது பதினொன்றரையாகிவிட்டது.

“எங்கே போனீர்கள்?” என்று குறுக்கு விசாரணையில் இறங்கினாள் கல்யாணி. என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். “ரிச்சர்ட்டிடம்” என்று சொல்லிவிட்டுத் தூங்கப் போய்விட்டேன். அவளுடன் பேசச் சக்தியில்லை. எஞ்சின் பரிசோதனைகள் முக்கிய கட்டத்தில் இருக்கின்றன. அலெக்ஸுடன் சண்டை பிடித்ததும் பாரதூமான விளைவுகளைக் கொடுக்கும்.

படுக்கும் போது அம்மா, அக்காவின் ஞாபகங்கள் திரும்பவும் வந்தன. உயிருக்குத் தப்பி, கொழும்பு வந்த நேரத்திலும் புது நெருக்கடி. நித்திரை வந்தேவிட்டது.

அடுத்த நாள் காலை எழுந்தபோது கதிரையும் செல்வி யையும் நானே கூட்டிக்கொண்டு போய் குழந்தைப் பராமரிப் பாளரிடம் விட்டேன். கதிர் பின்னேரம் தனக்கு frosty வேணு மென்றான். செல்வி தனக்கும் வேண்டுமென்றாள்.

“பின்னேரம் பார்க்கலாம்” என்று உறுதியளித்தேன். காரியாலயத்துக்குப் போய் நேரே அங்கியையும் மாட்டிக் கொண்டு பரிசோதனை அறைக்குப் போய்ச் சேர்ந்தேன். பரிசோதனை முடிவுகள் வந்திருந்தன. இருதயம் பலமாக அடிக்கத் தொடங்கியது. இவ்வளவு காலத்தின் பின்னர் பரிசோதனைகள் நல்ல முடிவுகளைத் தந்திருக்கின்றன. எஞ்சின்கள் இன்னும் திறமாய் வேலை செய்யவே போகின்றன. மறுபடியும் கொம்பியூட்டரில் எல்லாமும் சரியாக இருக்கின்றனவோ என்று பார்த்து, முடிவுகளை எடுத்துக்கொண்டு மாக்கின் அறையை நோக்கிப் போனேன். மாக் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

பரிசோதனைகள் எல்லாம் வெற்றிகரமான முடிவுகளைத் தந்திருக்கிற விஷயத்தைச் சொன்னேன்.

“உனக்குக் கூடாத செய்தி வைத்திருக்கின்றேன்” என்றான். “எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை” என்றேன்.

“உன்னையும் வேலையிலிருந்து நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள்!” மாக்கிற்கு உண்மையில் இது கூடாத செய்திதான். எஞ்சின் பரிசோதனைகள் முடிவுகள் பற்றிய விபரங்களை நான் அவனிடம் சொல்லப்போவதில்லை.

“உன்னுடைய வேலைகளை டானிடம் கொடு” என்றான். அவனுக்கே தெரியும், இது நல்ல முடிவில்லை என்று.

“பல ஆயிரமாயிரம் டொலர்களுடன் கம்பெனி என்னை ஒரு கோர்ட்டில் சந்திக்கட்டும்” என்றேன். மாக் முகத்தில் ஈயாடவில்லை. அலெக்ஸ் சக்தி வாய்ந்தவன். போய் என் சாமான்களை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, ஆளணிகளுக்குப் பொறுப்பாயிருக்கிற பகுதியில் திறப்புகளைக் கொடுத்து, கையெழுத்து வைக்கிற இடங்களில் கையெழுத்தை வைத்துவிட்டு வீட்டுக்குப் போனேன்.

ரிச்சர்ட்டுக்கு போன் செய்து அவனிடம் விபரங்களைச் சொன்னேன்.

“கவலைப்படாதே. உனக்கு வேறு வேலை எளிதில் கிடைக்கும்” என்றான்.

கல்யாணியிடம் சொல்வதா? விடுவதா? அவளுக்கு போன் செய்தேன்.

“என்னை வேலையிலிருந்து எடுத்துப்போட்டார்கள்” என்றேன்.

“நான் லீவு எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்றாள்.

வந்து என்னைத் திட்டக்கூடும். சோபாவில் சரிந்தேன். வீடு மிகப் பெரிதாகத் தெரிந்தது. இந்த இருநூற்றி ஐம்பதாயிரம் டொலர் பெறுமதியான வீடு, இருபதாயிரம் டொலர் பெறுமதி வாய்ந்த கார் எல்லாமே பாரமாகத் தெரிந்தன. மெல்லச் சுதாரித்துக்கொண்டு, போன் புத்தகங்களில் அட்டர்ணிகளின் எண்களைத் தேட ஆரம்பித்தேன்.

கல்யாணி வந்து சேர்ந்தாள். “என்ன நடந்தது?” என்று கேட்டாள். விபரங்களைச் சொன்னேன். “உங்களுக்குக் கதைக்கத் தெரியாது” என்றாள். அவளுக்கு இப்போதுதான் விஷயங்கள் எப்படி முற்றிப் போயிருக்கின்றன என்று தெரிந்தது போல இருந்தது. மேலும் ஏதேன் கடுமையாகச் சொல்வாள் என்று பார்த்தேன். “நீர் வேலைக்குப் போம். நான் சிலருக்கு போன் அடிக்க வேணும்” என்று சொன்னேன்.

கௌரியிடம் வேலையிலிருந்து நீக்கப்பட்ட கணவனைப் பற்றிச் சொல்ல முடியாதுபோலிருந்தது.

“குழந்தைகளைப் போய்க் கூட்டிக்கொண்டு வாருங்கோ. நான் திரும்பவும் ஒபீசுக்குப் போயிட்டு வாறன்” என்றாள்.

யோசனையுடன் வேலைக்குத் திரும்பவும் போனாள். அவள் வர இன்று தாமதாகப்போகிறது.

மூன்றரைக்கு கதிரை அவன் பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைப் பராமரிப்பாளர் கொண்டுவந்துவிடுவாள். மூன்றரைக்குப் போய் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வரப் போனேன்.

கதிரையும் செல்வியையும் கூட்டிக்கொண்டு போய் frosty வாங்கிக்கொடுத்து வீடு வர நாலேகாலகிவிட்டது. வீட்டுக்குள் வரும்போது செல்வியின் frosty விழுந்து சரிந்தது. அவள் கத்த ஆரம்பித்தாள். கதிர் அரைவாசி முடித்திருந்தான்.

“குடுங்கோ ராசா” என்று கேட்டுக் கொஞ்சத்தை செல்வியிடம் கொடுத்தேன். இருவரும் கத்த ஆரம்பித்தார்கள். இருவருக்கும் பிரிட்ஜைத் திறந்து இன்னும் ஐஸ்கிரீம் கொடுத்த பிறகுதான் அழுகை நின்றது.

ரெலிவிஷனைப் போட்டு, கார்ட்டூன்கள் பார்க்க நானும் செல்வியும் சோபாவில் உட்கார்ந்தோம். கதிர், தன் விளையாட்டுச் சாமான்களுடன் ஒரு மூலையில் ஒதுங்கினான். சோபாவில் உட்கார்ந்து கார்ட்டூன்கள் பார்த்தாலும் மனம் வேறெங் கெல்லாம் அலைபாய்ந்தது. செல்வி முதுகுப் பக்கமாய்த் தோளில் ஏறி என் தலைமயிரைக் குழப்பினாள்.

“இறங்குங்கோ குஞ்சு” என்று கெஞ்சினேன். “I love you daddy” என்றாள்.

மூலையிலிருந்து கதிரும் , “Me too” என்று கத்தினான். திரும்பவும் எங்கேனும் வெளியே போகப்போகிறீர்களா என்று கேட்டேன். “இல்லை” என்றார்கள். செல்வியை இறக்கி விட்டு, கடிதங்களை எடுத்துவரப் போனேன். எல்லாம், கட்ட வேண்டிய காசுகளுக்கான கடிதங்கள். மின்சார பில், தண்ணீருக் கான பில். பணவசதி அட்டைக்கான பில்…. எல்லாம் ஒரே நேரத்தில் வேறு முக்கியமான ஒன்றுமில்லை. கல்யாணி அக்கவுண்டன்ட் இவைகளெல்லாவற்றையும் சமாளிக்க ஏதாவது செய்வாள்; செய்யத்தான் வேண்டும்.

திரும்பவும் அட்டாணிகளின் எண்களைத் தேடினேன். சிலரைக் கேட்டேன், போன் மூலமாக நாலு மணிக்குப் பின்னர் வேலை செய்கிற வழக்குரைஞர்கள் இல்லைப் போலிருந்தது.

அதுவும் களைப்பைத் தரலாயிற்று.

கல்யாணி வந்து இன்னொரு யுத்தம் ஆரம்பமாகலாம். கௌரியை ஒபிசிலிருந்து போன் செய்து விசாரித்திருப்பாள். இது ஒரு சுதந்திர நாடு. எவரும் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம். “மண்டை விறைச்சுப்போச்சு” என்று என் தந்தை சொல்வது ஞாபகத்துக்கு வந்தது. மண்டை விறைத்து, மனிதன் உயிர்போவது பற்றி எனக்குத் தெரிந்துவிட்ட உணர்வு தோன்றியது.

ரெலிபோன் மணி அடித்தது. யார் இந்த நேரத்தில்?

லிங்கம் ரொறொன்ரோவிலிருந்து பேசினார். “மனதைத் திடமாக வைச்சிருங்கோ” என்ற பீடிகையுடன் தொடங்கினார். மனம் அப்போதே ‘திக்’ கென்றது.

“சிறையில், ஆமிக்காறர் குமாரைச் சாக்கொல்லிப் போட்டார்கள்…” தனக்கு இப்போதுதான் செய்தி வந்ததாம்.

அக்கா, அவள் கணவர், அம்மா மற்றும் மருமகளைப் பற்றி விசாரித்தேன். “அவர்கள் சுகமாக இருக்கினமாம்.”

லிங்கம் பேசிக்கொண்டிருக்கும் போதே, கல்யாணி வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

“யார்?” என்று கேட்டாள்.

“ரொறொன்ரோவிலிருந்து லிங்கம்” என்றேன். லிங்கத்திடம் வேறென்ன பேசுவது? பிறகு கதைப்பதாகச் சொல்லி போனை வைத்தேன்.

கல்யாணி விபரங்களைக் கேட்டாள். என் மருமகன் குமாரை ராணுவத்தினர் சிறையில் அடித்துக் கொன்றுவிட்டதைச் சொன்னேன்.

“நான் ஒருக்காப் போய் பார்த்துப்போட்டு வாறன்” என்றேன். “இல்லை இப்ப நேரம் சரியில்லை” என்றாள்.

சோபாவில் போய் உட்கார்ந்தேன். செல்வி, என் மடியில் வந்து அமர்ந்து நித்திரை கொள்ள ஆரம்பித்தாள். கதிர் தன் தாயை முத்தமிட்ட பின் என் காலடியில் அமர்ந்து கொண்டான். கல்யாணி தன் கோட்டையும் காலணியையும் கழற்றி எறிந்து விட்டு, என் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்.

“I am sorry darling” என்றாள்.

கார்ட்டூனில் எலியும் பூனையும் மின்னலோட்டம் ஓடிக் கொண்டிருந்தன. என் தலையைக் கல்யாணியின் தோளில் சாய்த்துக்கொண்டு கண்ணை மூட, பனந்தோப்புகளுக்கு ஊடாகப் பாய்கிற நிலவொளி தெரிந்தது. கல்யாணியும் தோளில் கையைப் போட்டு என்னை அணைத்துக்கொள்வதை உணர்ந்தேன். நித்திரை கொள்ள ஆரம்பித்தேன்.

– 31.03.1996 (நியூஹாம் தமிழர் நலன்புரி சங்க மலர், 1996)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *