கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 22,491 
 

தமிழகத்தில் போன வருஷமும் சரியான மழை பொழிவு இல்லாததினால் ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும் வறட்சியில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. எங்கும் வெக்கையின் தீட்சணம் கொளுத்துகிறது. நாட்டின் சராசரி வெப்பம் 110°F. சென்னை குடிநீருக்கு ஆதாரமான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், வீராணம், ஏரிகளெல்லாம் ஏற்கனவே வறண்டு போச்சு. வேற வழியில்லாமல் குவாரிகளில் தேங்கிக் கிடக்கும் அழுக்குத் தண்ணீரையெல்லாம் சுத்தப் படுத்தி சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுகூட இன்னும் பத்து நாட்களுக்குத்தான் காணுமாம். அப்புறம்?. அரசுக்கு எந்த வழியும் தெரியவில்லை. இந்த சூழலில் எங்கள் சிறுகாட்டூர் கிராம மக்கள் படும் தண்ணீர் கஷ்டத்தைப் பற்றி என்னவென்று சொல்வது?. சொல்லி மாளாது. தெருவெங்கும் ஆண்களுக்கு நிகராய் பெண்களும் சைக்கிளில் இரண்டு பக்கங்களிலும் பிளாஸ்டிக் குடங்களை கட்டிக் கொண்டு தண்ணீரைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.. ஊரில் எங்கேயும் தண்ணிர் கிடையாது.

போர் குழாய்கள் வறண்டு கிடக்கின்றன. ஒரு மணி நேரம் அடிச்சாலும் அரை குடம் தண்ணீருக்கு உன்னைப் பிடி என்னைப் பிடின்னு ஆயிப் போவுது. புதுசாக ரெண்டு இடத்தில போர் போட்டு பார்த்தாச்சி. ஊஹும். சட்டியில இருந்தால் தானே அகப்பையில் வரும். ஜனங்க ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கொடிவழியில் நடந்து போய் ஏரிக்கு வடக்கே துருவக்கோட்டை மலையடிவாரத்தில் இருக்கிற காசியண்ணன் பம்ப்செட் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள். அங்கே ராத்திரி ஒன்பது மணி இருட்டில் கூட கஜகஜவென்று கூட்டம். அந்த கிணறு ஒண்ணுதான் இன்றைக்கு ஊருக்கே படியளக்கிறது. கல்லூத்து, உள்ளே ரெண்டு அங்குல பைப் கணத்துக்கு மோழை, தமதமன்னு தண்ணீர் கொட்டுகிறது. புண்ணியவான், பரோபகாரி, அவ்வளவு தண்ணீரையும் ஊருக்கு நேர்ந்து விட்டாற்போல மனுஷன் ஒரு செண்ட்டு நிலத்தில கூட வெள்ளாமை பண்ணல. ஒரு கூலியாள் இருந்து மோட்டர் போட்டு போட்டு தொட்டியை நிரப்ப மக்கள் குடங்களில் மோந்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

மாலை நேரம் ஊர் முக்கியஸ்தர்கள் சாவடியில் கூடியிருந்தார்கள். பஞ்சாயத்து தலைவர் பச்சையப்பன் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தார். யாருக்கும் பேச்சில்லை. ஆணி மாசமும் பொறந்தாச்சி. ஒரு வருஷமாக எம்.எல்.ஏ, எம்.பி., கலெக்டர்னு எல்லோர் கிட்டேயும் கும்பல் கும்பலாய் போயி மகஜர் கொடுத்து கெஞ்சியாச்சி. ஆகட்டும் பார்க்கலாம்னு சொல்லி யாரும் விஷயத்தை தள்ளிப் போடவில்லை. எல்லோரும் கவனிக்கிறேன், உடனே கவனிக்கிறேன்னு சொல்லிச் சொல்லியே வேப்பிலை அடிச்சிட்டாங்க. ஒண்ணும் நடக்கல. எல்லோருக்கும் வெறுத்துப் போச்சு.

“மச்சான்! இது தோது படாது. பேசாம ஊரைத் திரட்டிம் போயி மெயின் ரோட்ட மறிச்சி உட்கார வெச்சிடலாம்னு சொல்றேன் யாரும் கேக்க மாட்டேன்றீங்களே. ஒரு வண்டி அப்பிடி இப்பிடி நவுட்ட முடியாது. எல்லாப் பயலுவளும் நம்மள தேடி அங்க வரட்டும். என்ன?.”

“டேய்! யார்றா அவன்?. ஊரையே ஒண்ணா தெரட்டிப் புடுவியா நீ?. எல்லா சாதிக்காரனும் நம்ம பேச்சிக்கு கட்டுப் படுவானுங்களா?. இங்கதான் டெய்லி ஒரு சண்டையா கீதே, பேச வந்துட்டான். பொது விசயத்துக்கு போராட்றதுக்குக் கூட நாம ஒண்ணு சேரமாட்டோமடா. சாபக்கேடு. சாதி குறுக்கே வந்துடும். யாரு பெரியவன்ற வீம்புல சண்டை ஆரம்பிச்சிடும். நீ எடுப்பு எடுத்தன்னா பேரு உன்சாதிக்குப்

போயிடும்னு மத்தவன் ஒதுங்குவான். அவன் எடுப்பு எடுத்தா உன் சாதிக்காரன்லாம் ஒதுங்குவான். சேராதுய்யா.” இது கைலாசம், ஓய்வு பெற்ற தாசில்தார்.

“அப்புறம் இன்னாதான் பண்றதாம்?. எதாயிருந்தாலும் சீக்கிரம் முடிக்கணும்பா. மழைக்காலம் வருது. இப்பவே கீழக் காத்து ஓட்ட ஆரம்பிச்சிடுச்சி.”

விஷயம் இதுதான் சார். எங்க சிறுகாட்டூர் கிராமம். கொஞ்சம் பெருசு. ஜனத்தொகை –5310. மாதிரி இந்தியா போல எல்லா சாதிகளும், மதங்களும் கலந்திருக்கும் ஊரு இது. அதுபோல இன்றைய இந்தியா போல உல்ட்டாவாக ஒற்றுமையில் வேற்றுமை கண்டுக் கொண்டிருக்கிற ஊரும் இதுதான். ஊருக்கு குடிதண்ணீரை கொடுத்துக் கொண்டிருந்த தாமரைக் குளம் இன்றைக்கு பத்தடிக்கு மேல வண்டல் சேற்றில் தூர்ந்து போய் வறண்டு கிடக்கிறது. எங்க ஊர் ஏரியும் பெருசுதான். பள்ளக்காலு, மோட்டாங்காலு மொத்தம் சேர்ந்து பாய்ச்சவாரி 2100 ஏக்கரா. ஏரி கலிங்கல் சாஞ்சா மூணு போகமும் கியாரண்டி. அதுக்கப்புறமும் ஆடு மாடுங்க குடிக்க, விழுந்து புரளன்னு தண்ணீர் எதேஷ்டமாக இருக்கும். அதுக்குள்ள அடுத்த வருஷ மழை வந்து கோர்த்துக் கொள்ளும். இதெல்லாம் பழைய காலத்து கதை.. த்சு! இன்னிக்கு ஒரு போகம்தான். ரெண்டாவது சம்பா பட்டத்துக்கே கதிரு பால் பிடிக்கிற பருவத்தில தண்ணி அருந்தட்டலாப் போயிடுது. போன 2015 ல பெய்ஞ்ச கனமழையில சென்னையே முழுவிப் போச்சில்ல?. அப்ப சுத்துப்பட்ட சில ஏரிங்க கலிங்கல் சாஞ்சி எங்க பார்த்தாலும் தண்ணி புரண்டுங் கிடக்க, அன்றைக்குக் கூட எங்க சிறுகாட்டுர் ஏரி கலிங்கல் சாயவில்லை. ஏன்? ஏரிக்கு பிரதான நீர் வரத்து ஆற்றுக் கால்வாய்ல மண்ணு படிஞ்சி, மேடாகி, மரம் செடி, கொடிலாம் மண்டிப் போனதில அடைப்பாகி ஆற்றுத் தண்ணிர் ஏரிக்கு சிறுவதான் வந்துச்சி. அப்புறந்தான் ஊர்ஆட்களுக்கு சுரணை வந்தது. ஏரி கால்வாயை சுத்தம் பண்ணணும், குளத்திலிருக்கிற வண்டல் சேற்றையும் வாரி சுத்தம் பண்ணணும்னு ஆரம்பிச்சாங்க. இதுதான் எங்க கோரிக்கை..தினசரி ஒருநாள் விட்டு ஒரு நாள் ஊர் முக்கியஸ்தர்கள் கும்பல் கும்பலாக வெள்ளையும் சள்ளையுமாய் துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு பி.டி.ஓ. ஆபீஸ், தாலுக்காபீஸ், கலெக்டர் ஆபீஸ்னு விடாம மாத்தி மாத்தி படையெடுத்தாங்க. ஹும்! ஒரு நாள் ஜீப்ல யாரோ ஒரு அதிகாரி வந்து பார்வையிட்டுட்டு போனார், அத்தோடு சரி.

“எல்லாரையும் பார்த்தாச்சி. இதுக்கு மேல இன்னய்யா பண்ணலாம்?.”—- ஒருத்தரிடமும் பதிலில்லை..

“ ஏரி கூட ஏக விஸ்தீரணத்துக்கும் பத்து பாஞ்சி அடி உசரத்துக்கு மேல தூர்ந்துதான் போயிருக்குபா, கவனிச்சீங்களா?..”

“ஹும்! பல்லவங்க காலத்தில வெட்டின ஏரிபா இது, அதுக்கப்புறம் எவன் ஏரியை தூர் வாரி பராமரிச்சான்?. ராஜாக்களுக்கு ஏரி,குளங்களின் அருமை தெரிஞ்சிருக்குது. அதுங்கதான் நிலத்தடி நீருக்கு ஆதாரம்னு தெரிஞ்சி வெச்சிருந்தாங்க.. அவங்க காலத்தில வெட்டின ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களைத்தான் நாம் இன்னைக்கு வரைக்கும் அனுபவிச்சிட்டு இருக்கோம்.”—- என்றார் கைலாசம்.

“நம்ம மந்திரிங்க நம்மளையே வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி நிலத்தடி நீரை பெருக்கச் சொன்னாங்க. நிலத்தடி நீருக்கு ஆதரமா இருக்கிற குளம் குட்டை, ஏரிகளை மனை போட்டு பணமாக்கிட்டாங்க. அத்தோட மழைநீர் செகரிப்பு தொட்டி கட்டியதாலதான் நிலத்தடி நீர் மட்டம் இந்தளவுக்கு கிடுகிடுன்னு மேல வந்துட்ச்சின்னு துறை சார்ந்த அறிஞர்களை பொய்யாய் பேட்டி கொடுக்க வெச்சி…., சே! பாவம்யா நம்ம ஜனங்க. எதை சொன்னாலும் அப்பிடியே நம்பிடுதுங்க.”.—மகாதேவப் பிள்ளை குரலில் மிதமிஞ்சிய சலிப்பு இருந்துச்சி.

“நம்ம ஜனங்களையும் சொல்லணும்ய்யா. அரிசிக்கும், டி.வி., கிரைண்டருக்கும், மிக்ஸிக்கும் விலை போயிடுச்சிங்கல்ல? மானக்கேடு..”

“யோவ்! இந்த நாட்டில வக்கணையா பேசறதுக்கு மட்டுந்தான்யா ஆளிருக்கு. நீ என்னமோ யோக்கினாட்டம், நீயுந்தான் இளிச்சிக்கிட்டு போய் அத்தனையையும் வாங்கினியே. யாருக்கும் தெரியாதுன்னு அளக்கறியா?..” —- அவர் முகம் தொங்கிப் போச்சி.

“ அட ஒரு கணக்கு சொல்றேன் கேளுங்கப்பா. நேத்துதான் படிச்சேன். 2008 ஆம் வருஷ கணக்குப்படி தமிழ்நாட்டில் இருந்த மொத்த குளங்கள், கண்மாய்கள், கால்வாய்களில் 30% இன்னைக்கு இல்லையாம். ஆக்கிரமிக்கப்பட்டு விடுகளாகி விட்டதாம். ஏரிங்களை ஆக்கிரமிச்சி கார்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்த்துட்டு, ஏரி கால்வாய்களையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டாங்களாம்.”—– இப்படியே சிறுகாட்டூரின் முக்கியஸ்தர்கள் மாறி மாறி அன்றைக்கு நாட்டு நடப்பை பேசிப் பேசி, ராத்திரி எட்டுமணியாகி விட, அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாம, பிரச்சினைகளை அப்படியே தொங்கலில் விட்டு விட்டு கலைந்தார்கள். இந்த நாட்டில் இன்றைக்கு மக்களுடைய எழுச்சி என்பது இப்படியான கவைக்கு உதவாத திண்ணைப் பேச்சுக்களாகத்தான் இருக்கிறது.

மறுநாள் சாயங்காலம் மறுபடியும் எல்லாரும் வந்து கூடிய போது நேற்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களை தேடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்தார்கள்.

“ஐயா! நாங்க காஞ்சீபுரம், `அக்கினி’ என்ற நற்பணி மன்றத்திலயிருந்து வர்றோம். உங்க ஏரியின் நீர்வரத்து கால்வாயை தூர் வாரவும், ஊர் பொது குடிநீர் தாமரை குளத்தில படிஞ்சிருக்கிற பத்தடி உசர வண்டல் சேறுகளை தூர் வாரி சுத்தப் படுத்தவும் நாங்க தயாரா இருக்கோம். வாராவாரம் சனி ஞாயிறு மட்டும் நாங்க மொத்தம் அம்பது பேர் க்ரூப்பா வந்து தூர் வார இருக்கிறோம். அதை உங்க கிட்ட சொல்லி அனுமதி வாங்கிட்டுப் போவத்தான் வந்தோம்.”

“எப்பிடி குழி கணக்கா?. குழிக்கு இன்னா ரேட்டு வாங்கறீங்க?.”.

“இல்ல..இல்ல..ஃப்ரீயாத்தான் செய்யறோம். இது நாங்க நாட்டுக்கு செய்ற சேவை. எங்கள்ல கம்ப்யூட்டர் என்ஜினியர்களா வேலை செய்யவங்களும் இருக்காங்க, அரசாங்க வேலையில இருக்கிறவங்களும் இருக்காங்க. சனி, ஞாயிறு லீவுல மட்டும்தான் இந்த மாதிரி தொண்டு வேலை.” ——-அவர்களால் நம்பவே முடியவில்லை. இப்படியும் ஆளுங்க இருக்காங்களா?.
“தம்பீ! சந்தோசம். எங்க ஊரு ஏரி கால்வாயும், குடிதண்ணி குளமும் தூர்ந்து போயிருக்கிற விஷயங்கள் காஞ்சீபுரத்தில இருக்கிற உங்களுக்கெல்லாம் எப்படி தெரிஞ்சிது?.

“ஒரு வாரத்துக்கு முன்ன கலெக்டரை பார்க்க அனுமதிக்கலேன்னு காலையில இருந்து நாலு மணி வரைக்கும் வெளியே கும்பலா உட்கார்ந்து கூச்சல் போட்டு போராட்டம் பண்ணீங்களே, அப்ப வந்து விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டோம். நாலு நாளுக்கு முன்ன இங்க வந்து குளத்தையும், ஏரி கால்வாயையும் பார்த்துட்டு போனோம்.”

“உங்களைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. வழி தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தோம் ரொம்ப சந்தோசம் தம்பிங்களே. சரிப்பா இதனால உங்களுக்கென்ன லாபம்?. ”

“ஐயா! இப்படியே எல்லாரும் லாபம் நஷ்டம் பார்த்து பார்த்துதான் இன்னைக்கு எங்கியும் குடிக்க தண்ணி இல்லை. மழை பெய்யலேன்னா அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது. பெய்ஞ்ச மழை தண்ணியையே நாம சரியா பாதுகாக்கலியே. ஏரி, குளம், குட்டைகள் ஆழம் இல்லாததால சீக்கிரத்திலேயே காய்ஞ்சி போய் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு போயிட்டுது. எல்லா இடங்களிலும் தூர்ந்து கிடக்கிற நீர் வரத்து கால்வாய்ங்களால பல ஏரிங்க ரொம்பறதே இல்லைன்னு ஆயிப் போச்சுது. தூர்ந்து கிடக்கிற எல்லாத்தையும் தூர் வாரணும்யா, யார் செய்யறது?. யாரும் செய்யல. அதான் நாங்க செய்யறோம்.”——-தலைவர் நெகிழ்ந்து போனார்.

எல்லோரும் எழுந்து சின்ன பசங்களா இருந்தாலும் பரவாயில்லைன்னு கும்பிட்டார்கள்.

ஆயிற்று அடுத்த வாரம் சனிக்கிழமை விடிநேரமே `அக்கினி’ — தன்னார்வ தொண்டுப் படை ஒரு தனி லாரியில் எல்லா ஏற்பாடுகளுடன் வந்திறங்கியது.. ஊராருக்கு ஒரு கஷ்டத்தையும் கொடுக்க வில்லை. கொடுவாகத்தி, கடப்பாரை, மண்வெட்டி, மூங்கில் கூடை, இது ஒருபக்கம். சமையல் வேலைக்குன்னு மூணு பேரு. சமையல் பாத்திரங்கள், அரிசி, பருப்பு, கேன் வாட்டர், கேஸ் அடுப்பு, சிலிண்டர், உட்பட எல்லாவற்றையும் தயாராக கொண்டு வந்துட்டாங்க. எல்லாத்தையும் ஆத்துக் கால்வாயை ஒட்டி பிரமாண்டமாய் தலை விரித்துக் கிடந்த வேப்பமர நிழலில் இறக்கினார்கள். ராத்திரியில படுக்கை மட்டும் ஊர் பள்ளிகூடத்தில ஏற்பாடாகியது. கால்வாயை தூர் வாரும் பணியை யூனியன் சேர்மேன் அய்யாதுரை துவக்கி வைத்தார்.
ஆற்றிலிருந்து இருந்து மொத்தம் எட்டு ஏரிகளுக்கும் நீர் வரத்து இந்த கால்வாய் மூலம்தான், ஆழமும், அகலமும் ஜாஸ்தி. கால்வாயில் நிறைய மரங்கள் செழிப்பாக கிளைச்சிருந்திச்சி. சீமை கருவேலன், புங்கன், வேப்பன், நுணா, ஒவ்வொண்ணும் தொடை சைஸுக்கு பெருத்திருந்துச்சி. அப்படீன்னா தூர் வாரி எத்தினி வருசம் ஆயிருக்கும் பார்றான்னு பேச்சு எழுந்துச்சி. அடர்த்தியாய் ஓணான் கொடிங்க, உத்தாமணி, காரமுள்ளு செடிங்க, கிளேரியா, ஆமணக்கு, நொச்சி, மாதிரியான செடிகொடிகள் மண்டிக்கிடந்தன. இதில்லாமல் ஊர் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் பொறுப்புள்ள கிராம குடிமக்களால் கால்வாய்லதான் கொட்டப்பட்டிருந்தன. ஆற்று மணலும் கால்வாயில் வந்து பரவலாக மேடு தட்டியிருந்துச்சி. புதூர் ஏரியில இருந்துதான் இந்த ஏரிக்கு நீர் வரத்து. அங்கிருந்து இங்க வரைக்கும் கால்வாயின் மொத்த நீளம் நாலு கிலோமீட்டர். அவ்வளவு தூரமும் இதே நிலைதான். மலைப்பா இருந்துச்சி. சரசரவென மரங்களை வெட்டி அப்புறப் படுத்த ஆரம்பிச்சாங்க.. வேர்முடிச்சிங்களை அடியோடு கிளறி வாரி அப்புறப் படுத்த ஒரு மினி ஜேசிபியை கால்வாயில் எறக்கி வுட்டிருந்தாங்க.

ஊரே திரண்டு நின்னு வேடிக்கை பார்க்க, வேலை ஆரம்பித்து விட்டது. அவங்க மரம், செடி கொடிகளை வெட்டி சுத்தப் படுத்திக் கொண்டே செல்ல, மினி ஜேசிபி வெட்டின மரங்களை வேரோடு கிளப்பி, தூர் வாரி வெளியே கொட்டிக் கொண்டிருந்தது. உக்கிரமான வெய்யிலு தோலுரியுது. பன்னிரெண்டு மணிக்கெல்லாம் அந்த இளைஞர்கள் சோர்ந்து போய் நிற்கிறாங்க.. அந்நேரத்துக்கு தலைவர் பச்சையப்பன் பிஸ்கட்டு, சில்லுன்னு மோரு, பானகம்னு ஏற்பாடு செஞ்சி சோர்வுதட்டாம பார்த்துக்கிட்டார். ரெண்டாம் நாள் வேலையின் போது காலையில் வேலை ஆரம்பிக்கிறப்போ விஷயம் தெரிஞ்சி பத்திரிகைக்காரங்களும், டி.வி. சேனல்களும் வந்துட்டாங்க. அவங்க செய்யற வேலையை எல்லா சேனல்களும் `நமக்கு நாமே திட்டம்’ என்ற தலைப்பில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அக்கம் பக்கத்தில் இருந்து ஊர் முக்கியஸ்தர்கள் வந்து பார்த்துட்டு போனார்கள். எங்க ஊர் முக்கியஸ்தர்களும், ஊரிலிருக்கும் வாலிபர்களூம் வெள்ளையும் சள்ளையுமாய் அலங்கரித்துக் கொண்டு வந்து தோரணையோடு, பேட்டி குடுத்து, கேமராவுக்கு போஸ் கொடுத்தார்கள். வேலை ஆரம்பிச்சதில இருந்தே ஒவ்வொரு நாளும் வயசான கிழவர் ஒருத்தர், வேலை செய்ற பிள்ளைங்களுக்கு மோரு, பானகம், பிஸ்கட் என்று சுற்றிச் சுற்றி விநியோகம் பண்ணிக்கிட்டிருப்பாரு. ஒரு நாள் அவரைப் பார்த்து ஒரு அக்கினி இளைஞன் “பெரியவரே! உங்களுக்கு ஏன் இந்த தலையெழுத்து?, போய் நிழல்ல உட்காருங்க நாங்க பார்த்துக்கறோம்”

“தம்பீ! நீங்க யாரோ எவரோ?, எங்களுக்கோசரம் வந்து இப்பிடி கஷ்டப் பட்றீங்களே, நான் உங்களுக்கு என்னால செய்ய முடியற இதையாவது செய்றேனே.” —சொல்லிவிட்டு சிரித்தார்.

நாலாவது ஞாயிற்றுக் கிழமைக்கெல்லாம் மூணு கிலோமீட்டருக்கு மேல் கால்வாயை ஆழமா தொடைச்சியெடுத்து சுத்தம் பண்ணியாச்சி. அடுத்த ஞாயிற்றுக் கிழமையோட கால்வாய் வேலை முடியற கட்டம். ஊர் முக்கியஸ்தர்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி..ஊரு ஜனங்களும் வந்து வேடிக்கைப் பார்க்குதுங்க. அக்கம் பக்கத்து ஊர் முக்கியஸ்தர்களெல்லாம் வந்து வேலையை பார்த்துட்டு போனார்கள். அங்கேயும் இந்த பிரச்சினை இருக்குதுல்ல?. அடுத்த வாரத்தோட கால்வாய் வேலை நிறைவடைய, ஆறாவது சனிக்கிழமையிலிருந்து குளத்தில் வண்டல் சேற்றை வாரும் பணி துவக்கப் பட்டது. சேற்றில் அழுகிக் கிடந்த தாமரைக் கொடிகளினால் எழுந்த கெட்ட நெடி, மூக்கைப் பொத்திக் கொள்ள வைத்தது. அக்கினி இளைஞர்கள் மூக்கை மறைத்து கர்சிப்பால் கட்டிக் கொண்டு சேற்றை வாரி குளக்கரை மேல் கொட்டினார்கள். வண்டல் சேறு சேரச் சேர ஊர் ஆட்கள் உனக்கு எனக்கு என்று அதை மாட்டு வண்டிகளில் வாரிக் கொண்டு போய் தத்தம் கழனிகளில் உரமாகக் கொட்டினார்கள். எட்டாவது வார முடிவில் ஏரி கால்வாயும், குடிதண்ணி குளமும் தூர் வாரி சுத்தப் படுத்தியாகி விட்டது.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அன்றைக்கு எம்.எல்.ஏ தலைமையில் நிறைவு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். கலக்டரும் வந்திருந்தார். ஊர் ஜனங்களும், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து நிறைய ஆட்களும் பார்க்க வந்து திரண்டுபோவ, கஜகஜன்னு கூட்டம். பாதுகாவலுக்கென்று போலீஸ் வந்திருந்துச்சி. மேடையின் எதிரில் வி.ஐ.பி. இருக்கையில் `அக்கினி’ நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உட்கார வைக்கப் பட்டிருந்தனர். கடவுள் வாழ்த்து முடிஞ்சி, பெரிய பெர்தனம் எல்லோரையும் வரவேற்று சுருக்கமாக பேசிட்டு, தூர் வார தோள் கொடுத்த இளைஞர்களுக்கும் வந்திருந்த விருந்தினர்களுக்கும் சால்வை போர்த்தி மரியாதை செஞ்சாங்க. ஊரின் முக்கியஸ்தர்கள் ஒவ்வொருத்தராக வந்து நாலு நாலு வரிகள் மேற்படி இளைஞர்களை பாராட்டி பேசிட்டு போனாங்க. அடுத்ததாக எம்.எல்.ஏ. பத்து நிமிஷம் பாராட்டி பேசினாங்க.
“இது நாட்டுக்கே ஒரு முன்னுதாரணம். இந்த இளைஞர்கள் அமைதியாக ஒரு புரட்சியை நடத்திட்டாங்க. இதுபோன்ற மாற்றங்கள் வரணும். அதை இளைஞர்களாலதான் கொண்டுவர முடியும். இளைஞர்களுக்கு காதலையும் சினிமாவையும் தாண்டி சமூகப் பொறுப்புகளும் இருக்கின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.”— என்றார்.

ஏறக்குறைய கூட்டம் முடிந்த மாதிரிதான். தேசிய கீதம் பாட ஒரு பெண் வந்து நிற்கிறாள். அந்த நேரம் ஓடியாடி மோர் விநியோகம் செய்த அந்த பெரியவர் மேடை மேலே ஏறிவந்து மைக்கைப் பிடித்தார். பார்த்துவிட்டு தலைவர் பச்சையப்பன் ஓடி வந்தார்

“என்ன அய்யா பேசப் போறீங்களா?” ——-அவர் அழுத்தமாக ஆமாம் என்று தலையசைக்க, பச்சையப்பன் மைக்கில்.

“அடுத்ததாக நம்ம பழைய தலைவர் பேசுவார். அவரைப் பத்தி சொல்றதுன்னா அவர் மூணு தடவை நம்மூரின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். அந்தகாலத்திலேயே இண்டர்மீடியட் படிச்ச படிப்பாளி.,”—- என்றார். ஜனங்க கைத்தட்டினார்கள். கிழவர் உதறும் குரலில் உணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்..

“எந்நேரமும் ஏ.சி. ரூம்ல உக்காந்து வேலை செய்ற இந்த கம்ப்யூட்டர் புள்ளைங்களும், ஏதோதோ ஆபீஸ்ல வேலை செய்ற மத்த புள்ளைங்களும் எட்டு வாரமா எப்படி வெய்யில்ல வாடி வதங்கி வேலை செஞ்சதுங்கன்னு நாம எல்லாரும் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தோம். ஒரு பலனையும் எதிர்பார்க்காம இங்க வந்து மாடாய் உழைச்சதுங்களே. அவங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்றதுக்குக் கூடஅவங்க நமக்கு சந்தர்ப்பம் குடுக்கல. அவங்களுக்கு இந்த ஊர்மேல அப்படி என்ன அக்கறை?. நீர் நிலைகளை பாதுகாக்கணுன்ற பொறுப்புதான். நாம குடிக்கிறதுக்கும், வெள்ளாமை பண்றதுக்கும், அவங்க வந்து உழைச்சிருக்காங்க.”—–அவர்களைப் பார்த்து கும்பிட்டார்.

“என் காலத்தில் அன்னைக்கு ஒரு தொண்டு மாதிரி ஆட்சி பண்ணிய ராஜாஜி, காமராஜர், கக்கன்ஜீ போன்ற சத்தியவான்கள் ஆண்டதையும் பார்த்துட்டேன், இன்னைக்கு கோடி கோடியாய் சுருட்றதுக்குத்தான் மந்திரி பதவின்னு ஆள்ற ஊழல் மந்திரிகளையும் பார்த்துட்டேன். மனசு நோவுது. விழிப்புணர்வு இல்லாத ஜனங்க இருக்கிற இந்த நாடு இனிமேல் உருப்படாதுன்னுதான் நெனைச்சிருந்தேன். ஆனா…ஆனா… இந்த எட்டு வாரத்தில இங்க உழைச்ச படிச்ச இந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பாக்கிறப்போ, அவங்க பேச்சுகளை கேக்கறப்போ சத்தியமா சொல்றேன் மக்களைப் பத்தியே சிந்திச்ச அந்த சத்தியவான்கள் எங்கியும் போயிடலன்னு தோணுதுடா.”—சொல்லும்போதே அவருக்கு குரல் அடைத்துக் கொண்டது. அக்கினி இளைஞர்களைப் பார்த்து மீண்டும் ஒருமுறை கும்பிட்டார். உணர்ச்சிவசப்பட்டார். அங்கிருந்த கலெக்டர் முதற்கொண்டு எல்லோரையுமே அந்த உணர்ச்சி தாக்கியது.

“எங்கியோ இருக்கிற இந்த புள்ளைங்க இங்க வந்து நம்ம ஏரி கால்வாயை தூர் வாரினாங்க, குளத்தை தூர் வாரினாங்களே. சந்தோஷம். அவங்க செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லுவோம் அதேசமயம் இங்க ஆயிரக் கணக்கில் ஆம்பளைங்களும், இளைஞர்களும்னு இருந்தும் நாம அதை செய்யலையேன்னு நமக்கு உள்ளே உறுத்த வேண்டாம்?.. ஒருத்தனுக்கும் உறுத்தலியே, வெக்கமே இல்லாம வெள்ளையுஞ் சள்ளையுமா வந்து போட்டோவுக்கு போஸ் குடுத்துக்கிணு இருந்தமே. வண்டல் சேற்றை வாரிம்போய் தன் கழனியில கொட்டிக்கிறதுக்கு மட்டும் முன்ன முன்ன வந்துட்டமே. இது நமக்கு எவ்வளவு பெரிய அசிங்கம்?. நாமெல்லாம் முடமாவா போயிட்டோம்?. சொல்லுங்கப்பா. இந்த வேலைகளை நீங்கள்லாம் ஆளுக்கொரு மம்முட்டிய கையில் எடுத்திருந்தா செஞ்சிருக்க முடியாது?. த்தூ!. இதுக்கு ஒவ்வொருத்தனும் வெட்கப் படணும்டா. முப்பது வருசங்களுக்கு முன்னே வரைக்கும் ஒவ்வொரு ஊரிலும் இந்த வேலைங்களை நாமளேதானே செஞ்சிக்கிட்டோம்?.

குடிமராமத்து வேலைன்னு வருசா வருசம் காவாயை தூர் வாரவும், குளத்தை தூர்வாரவும் வூட்டுக்கு ஒருத்தரு போய் வெலை செஞ்சோம். நீர்நிலைகளை பாதுகாத்தோம். சித்திரை வைகாசியிலேயே ஏரி காவாயை தூர் வாரி சுத்தம் பண்ணி வைப்போமே. ஆத்து தண்ணி தடங்கல் இல்லாம தமதமன்னு வந்து சாயுமே. அதெல்லாம் போச்சி. இன்னைக்கு நமக்கு எல்லாத்தையும் அரசாங்கம் வந்து செஞ்சி குடுக்கணும்ன்ற புத்தி வந்திட்டுது. ஒரு துரும்பையும் கிள்ளிப் போட நாம தயாரில்லை. இலவசங்களை வாங்கித் தின்னு தின்னு, நடுவாந்திரத்தில நமக்கு வந்த புத்திடா இது. இதனால நாமதாண்டா அழியறோம். வாணான்டா வழக்கம் போல அலட்சியமா இருக்காதீங்க. கிழம் ஏதோ சொல்லுதுன்னு நெனைக்காதீங்கடா. நீர் நிலையை பாதுகாத்து வையுங்க. இல்லேன்னா இன்னைக்கே நாம ஒரு குடம் குடிதண்ணிக்கு நாயா பேயா அலையறோம், நாளைக்கு தண்ணிக்கு சாவற நெலமை வந்துடும். அதுவும் உங்க காலத்துக்குள்ளேயே. இது போதனை இல்லடா, எச்சரிக்கை.”
அக்கினி நற்பணி மன்ற இளைஞர்கள்தான் ஓடி வந்து அவரை அலக்காக தூக்கிக் கொண்டார்கள். உள்ளூர் இளைஞர்கள் இப்போதும் அவரை கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

நன்றி: மாம்பலம் சந்திரசேகர் மற்றும் இலக்கியப் பீடம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி 2018 ல் சிறப்புப் பரிசு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *