கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 14,240 
 

“வணக்கம்!பண்ண.”

“வாடா!வெள்ள,மண்டய சொரியாத. என்ன வேணுஞ்சொல்லு.”

“பண்ண,ரெண்டு மாடு வாங்கிருக்கேன்.”

“அப்படியா!மாட்ட வேணா…நம்ம தோட்டத்துல மேய்ச்சிக்கோ,வேற என்ன?”

“சரி பண்ண,மேய்ச்சுக்கிறேன்”னு மீண்டும் மண்டய சொரிஞ்சான் வெள்ளைத்துரை.

“கழுதப்பயலே!மறுபடி ஏண்டா சொறிஞ்சிட்டு நிக்குற.சோலி நெறய கெடக்கு.சொல்லி தொலடா?” சளித்தொண்டையை இருமி,விழி ரெண்டை உருட்டினார் பண்ணையார்.

“மாட்டுக்கு வைக்கப்படப்பு அடய எடமில்ல பண்ண.”

“இதென்னடா!ஆனைய வாங்குனவென் தொரட்டிய வாங்காத கதையாயிருக்கு.”

“வீட்டுக்கு பின்னால ரெண்டுசென்ட்டு கெடந்துச்சி பண்ண.அதுலத்தான் தம்பி வீடு கெட்டிட்டு இருக்கான்.”

“ஓந்தெருவுல எவன் எடமாவது சும்மாருந்தா,பண்ண சொன்னாருன்னு அடஞ்சிக்கோ. நான் சொல்லிக்கிறேன்.”

“தெருக்காரப்பயவ எடமெல்லாம் வேண்டாம் பண்ண.என்னைக்கு இருந்தாலும் அது பிரச்சனத்தான். ஊருக்கு வடக்க ரோட்டோரம் முள்ளுப்பத்தி கெடக்குற,ஒங்க எடத்துல ஒரு ஓரமா படப்ப அடஞ்சிக்கிறேன்.”

“ஏலே!கழுத,அது பொட்டச்சியளு ஒதுங்குற எடமாச்சடா…”-இழுத்தார் பண்ணையார்.

“இவளுவ பேளுறதுக்கு நம்ம எடந்தான் கெடச்சதாக்கும்?”

“என்னடா செய்யுறது.எடத்த நாசம் பண்ணுறாளுவ.மொதல ஒரு ஓரமா படப்ப அட.அப்புறமா எவளும் ஒதுங்காதபடி சுத்தி வேலிய போட்டுருலாம்.”

“கரெக்ட்டா சொன்னீய பண்ண.”

“சரிடா…நான் தெங்காசிவர ஒரு சோலியா போவவேண்டியதிருக்கு.நீ மறக்காம வாழைக்கி தண்ணி பாய்ச்சிரு.”

“நீங்க போயிட்டு வாங்க பண்ண.நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்”னு பணிந்து நடப்பதுபோல் பம்மாத்து காட்டினான் வெள்ளைத்துரை.

போக்குவரத்துக்கு ஏற்ற இடமாக ஒரு பகுதியை தேர்வுசெய்து மண்வெட்டியால் சுத்தம் செய்தான்.

மாட்டுவண்டியில் வைக்கலோடு வந்திறங்கியது.மதிய வெயிலுக்கு முன்னே மளமளவென வைக்கப்படப்பு அடைந்து முடிக்கப்பட்டு மலைபோல் உயர்ந்து நின்றது.ஆடுமாடுகள் நுழையாமலிருக்க முள்மர கிளைகள் வெட்டப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.பனங்கம்புல கட்டமா சட்டம் செஞ்சி, பழைய சாக்குகள் கிழித்துத்தைத்து,கதவும் போடப்பட்டது.

மறுநாள் காலையில் காட்டுப்பக்கம் ஒதுங்கப்போன பெண்கள். வாத்தியார் கொட்டிய கொட்டில் மக்கு மாணவனின் மண்டயப்போல, வீங்கிப்போயிருந்த வைக்கப்படப்பை பார்த்து அவசரத்திலும் ‘ஆ’ன்னு நின்று பார்த்து ஒதுங்க ஓடினர்.

“எவன்ப இங்க வந்து அடஞ்சிருக்கான்?”-என்றாலோருத்தி.

“பண்ணையாருக்கு ஊரச்சுத்தி எடங்கெடக்க,இதுலப்போயா படப்ப அடையனும்ன்னு முக்கிக்கொண்டே முணங்கிக்கொண்டிருந்தா.”- இன்னொருத்தி.”

“இவனப்பாத்து இன்னொருத்தன் அடைவான்.அவனப்பாத்து அடுத்தால ஒருத்தன் அடைவான்.இப்படியே போச்சுன்னா…நாம வெளிக்கியிருக்க வண்டிமாடுப்பூட்டி வெளியூருக்குத்தான் போணும்போலப!”என்று கூட்டத்தில் ஒருத்தி சொன்னதும், குத்தவைத்தவர்கள் குபீரென்று சிரித்தார்கள்.

“குட்டி…ஏ,முத்துக்குட்டி! பொழுது விடியப்போது எந்திரி ரெண்டுபேரும் காட்டுக்குப்போயிட்டு வந்துரலாம்,” என்றாள் முத்துக்குட்டியின் தாய் வெள்ளையம்மாள்.

மேல்பக்கம் வைக்கப்படப்பு அடைஞ்சிருக்கிற ஊர் பீங்காடு. கீழ்பக்கம் ஊருக்கு துணி வெளுக்குற வெள்ளையம்மாளின் வீடு.ரெண்டுக்கும் நடுவுல பல்லு வுழுந்து புண்ணுப்புடிச்சி, தோலுக்கிழிஞ்சி,நகர முடியாமல் நரக வேதனைப்படும் ஒரு கெழட்டு பாம்பைப்போல குண்டும் குழியுமான திருநெல்வேலிக்கு செல்லும் தார்ரோடு.

“சீக்கிரம் எந்திரி குட்டி. விடிஞ்சிடுச்சின்னா ஆம்பிள்ளைங்க நடமாட்டம் அதிகமாயிடும்.அப்புறம் அந்திவரைக்கும் அடக்கிக்கிட்டு எல்லா வேலையும் பாக்கணும்.அது அடிவயித்துக்கு நல்லதல்ல. சொன்னா கேளுடி.”

“வந்தாத்தானம்மா போகமுடியும். வரும்போது நான் போயிக்கிறேன். இப்பும் நீ போயிட்டு வா.”

“வரும்போது அவுத்துட்டு போறதுக்கு நீயென்ன ஆம்பளப்புள்ளயாடி? பொம்பளயா பொறந்துட்டா பொறுத்துப்போனும்;பாத்துப்போனும்;அவசரன்னாலும் ஆளரவம் இல்லன்னாத்தான் ஒதுங்கப்போனும்.புரிஞ்சிதா!நானே நீ குத்தவச்ச நாள்லருந்து வயித்துல நெருப்பக்கட்டிட்டு திரியுறேன்.இவ என்னன்னா திமிராப்பேசிட்டு திரியுறா.யென் சொல்பேச்ச கேக்கல, பல்லத்தட்டி பருப்பு கடைஞ்சிப்புடுவன் பாத்துக்கோ!” என்று ஒத்தயில ஒதுங்கப்போய் வந்தாள் வெள்ளையம்மாள்.

வாடை தாங்காமல் வேட்டிக்குள் வெரச்சிப்போயி கெடந்த முத்துமாலையை நிமிர்த்தி…

“ஆமாய்யா!நேத்தே ஒங்கிட்ட கேக்கணும்னு நெனச்சேன். ரோட்டோரம் யாரு வைக்கப்படப்பு அடஞ்சிருக்கா?”

“அது,நம்ம பங்களாப்பண்ணையாரு வூட்டுல வேலபாக்குற வெள்ளத்துரய்யாத்தான்.”என்றான் முத்துமாலை.

“ஊரு பொம்பளய ஒதுங்குற எடத்துலப்போயி அடஞ்சிருக்காரு? அந்த ஐய்யா என்ன இப்படி பண்ணுனாவ!ஊருல வேற எடமாயில்ல.சரி,நானும் குட்டியும் ஊருக்குள்ளப்போயிட்டு துணி எடுத்துட்டு…சோறு வாங்கிட்டு வர்றோம்.”

முத்துக்குட்டி சோறுவாங்க பெரிய ஈயப்பானையும்,கொழம்பு வாங்க தூக்குவாளியையும் எடுத்துக்கொண்டாள்.வெள்ளையம்மாளும் துணிகள மூட்டக்கட்டி கொண்டுவர எட்டுமொழம் வேட்டியொன்னு எடுத்துக்கிட்டு, ரெண்டுபேரும் ஊருக்குள் கிளம்பினார்கள்.

போகும்வழியில், “ஏ!யாத்தான்னு நொண்டிக்கொண்டு ஒத்தக்காலுல நின்னு” துடித்துடித்தாள் வெள்ளையம்மாள்.

கட்டமாதிரி முள்குத்தி சொட்டச்சொட்ட வடிந்த ரெத்தத்த தொடைத்துவிட்டு, “எத்தன நாளும்மா ஒனக்கு சொல்றது! இந்த முள்ளுக்காட்டு வழியா போவவேணாம்.நடுத்தெரு வழியா போலாம்னு சொன்னா கேக்குறீயா?”என்றாள் முத்துக்குட்டி.

“நானும் எத்தனநாளு சொல்றது ஒனக்கு!நம்ம நடுத்தெருவு வழியா போவக்கூடாதுன்னு சொன்னா கேக்குறீயா நீ?”

“நாயிப்போவுது!நம்ம போவக்கூடாதா?”-கோவப்பட்டாள் முத்துக்குட்டி.

“ஐயாமாருவ வேல சோலிக்கிப்போவும்போது, நம்ம அழுக்குமூட்டய தூக்கிட்டு அங்கயும் இங்கயும் அலஞ்சா நல்லாருக்குமாட்டி?”

“நம்மமட்டுமென்ன வேல சோலிக்கித்தானப்போறோம்;ஒங்க ஐயாமாருவ வீட்டுக்கு விருந்துக்காப்போறோம்.
நம்மத்தூக்கி சோமக்குற மூட்டையில இருக்குற அழுக்கு,ஒங்க ஐயாமாருவ அழுக்குத்தான்.அவுங்க அழுக்கே அவுங்களுக்கு அசிங்கமா இருக்குதுன்னா,நம்மல எவ்வளவு அசிங்கமா நெனைப்பாங்கன்னு புரிஞ்சிக்கோ!”

“பாதவத்தி!படியளக்குற சாமியள இப்படி பழிச்சிப்பேசுனா,நம்ம வெளங்குவோமா!இனி இப்படி பேசுன செருப்பு பிஞ்சிக்கும் ஒனக்கு.” என்றாள் வெள்ளையம்மாள்.

“ஒன் செருப்பு ஒருநாளும் பிய்யாது.”

“ஏன்ட்டி பிய்யாது!”

“ஒங்க ஐயாமாரு வெறுங்கால்லயே ஒன்ன தெருவுல நடக்கவிடமாட்டுக்காவ.அப்புறம் எப்படி ஒன் செருப்பு பிய்யும்”என்றாள் முத்துக்குட்டி.

“ஏட்டி, ஒனக்கு கோட்டிக்கீட்டி புடிச்சிடுச்சா?யாராவது கேட்டுட்டுப்போயி ஐயாமாருவ சொல்லிட்டவன்னா,நம்ம தோல உரிச்சிப்புடுவாவ.நல்லாயிருப்ப வாயமூடிட்டு வாடி”ன்னு அழத்தொடங்கினாள் வெள்ளையம்மாள்.

முத்துக்குட்டியும் “சரி…அழாத”ன்னு அம்மாவை ஏதும் பேசாமல் பின்தொடர்ந்தாள்.

“எம்மோவ்!எம்மோ…வ்! வெள்ளையம்மா வந்துருக்கேன். வெளுக்க துணிப்போடுங்க.”

முன் வாசல்ல யாரோ “எம்மோவ்”ன்னு கூப்பிடமாதிரி இருந்துச்சு.நான் நீதான்னு பதறிப்போயிட்டேன் என்றாள் பண்ணையாரம்மாள்.

“நாங்க என்னைக்குமா முன்வாச வழியா வந்திருக்கோம்!”

“சரிச்சரி.இதலாம் ஐய்யா வேட்டிச்சட்டை துணியளு.இதுக்கு தொவச்சி நீலம்போட்டுரு.அந்த சின்னமூட்டயல வீட்டுக்குத்தூரமான உள்பாவாடையும்,கறத்துணியளும் இருக்கு.நல்லா பஞ்சுமாதிரி தொவச்சிக்கொண்டா!போன மாசம் சரியா தொவைக்காம வடகம்மாதிரி இருந்ததால தொடை ரெண்டும் அறுத்துப்புண்ணாப்போச்சு”யென்று முகத்தை கோணலாகவும்,கொஞ்சம் கோவமாகவும் சொன்னாள் பண்ணையாரம்மாள்.

“மனிச்சிருங்கம்மொ.இந்தத்தடவ அடிச்சி அலசி,பூமாதிரி கொண்டுவாரேன்.நீங்கப்போயிட்டு சோத்த எடுத்துட்டு வாங்கத்தாயி.”

பாத்திரத்த வாசல்ல வையின்னு உள்ளேப்போயிட்டு வந்து பச்சரிசி சோற்றையும், புளிக்குழம்பையும் பாத்திரத்தில் கொட்டினாள் பண்ணையாரம்மாள்.

கால்வலியில் மூட்டைய தூக்கிக்கொண்டு வெள்ளையம்மாள் தவிப்பதைக்கண்ட முத்துக்குட்டி,
“குடும்மா…நான் மூட்டய தூக்கிட்டு வாரேன்”என்றாள்.

“வேணாங்குட்டி.நான்தான் கழுதையா பொறந்துட்டேன்; பொதி சொமக்குறேன்.ஆனா,நீ நல்லப்படிச்சி இந்த ஊர்ல மனுசியா வாழனும்.அதான் யென் ஆசை! ஒனக்காக நான் எவ்வளவு பாரம்னாலும் சோமப்பேன்; தாங்குவேன்.”என்றாள் வெள்ளையம்மாள்.

பரு நிறைந்த தன் கன்னத்தில் விறுவிறுவென வழிந்தோடிய கண்ணீர் துளிகளை துடைத்துவிட்டு, கவலப்படாதம்மா!படிச்சி பெரியளாகி,ஒன்ன நல்லபடி பாத்துக்குவேன்.” என்றாள் முத்துக்குட்டி.

“யென் தங்கம்…”என்று மகளை மார்போடு அணைத்து,நேர்கோடு வகுடெடுத்த தலைமீது நிறைய முத்தம் வைத்தாள் வெள்ளையம்மாள்.

வீட்டிலிருந்து மனிதர்களாக ஊருக்குள் போனவர்கள்.சுமைகளை சுமந்துகொண்டு ‘கழுதைகளாக’ வீடு வந்து சேர்ந்தனர்.வெவ்வேறு சாதியினர் தந்த சோற்றினை ஒன்றாய் குழைத்து மூவரும் சாப்பிட்டனர்.

“நானும்,ஒங்க அய்யனும் போயிட்டு துணி வெளுத்துட்டு வாறோம்.நீ ஒத்தயில எங்கேயும் போவாத.”என்று சொல்லிவிட்டு பொட்டைக்குளத்தை பார்த்து இருவரும் பொடிநடையாய் நடந்தனர்.

“பண்ண,நாளைக்கி திருச்சந்தூரு முருவங்கோயிலவச்சி, பொண்டாட்டியோட தங்கச்சி புள்ளைக்கு மொட்டப்போட்டு காதுக்குத்துறாங்க!”

“நல்லது.அதுக்கு காசு ஏதாவது வேணுமா?”என்று தொட்டில் சேருல தொப்பைய காட்டியப்படி படுத்துகிட்டே கேட்டார் பண்ணையார்.

“ஆமாப்பண்ண!தோடு எடுத்துப்போடனும்.”

“ஒனக்கு தேவையானக்காச,நான் சொன்னேன்னு அம்மாட்ட வாங்கிக்கோ!அப்புறம் வைக்கபடப்ப அடைஞ்சதுக்கு ஊர் பொம்பளய எதும் சொன்னாள்களா?”

“ஆளுயில்லன்னா கூடிக்கூடி பேசுராளுக.ஆளுயிருந்தா சாடமாட பேசுராளுக.கொஞ்சங்கொஞ்சமா எடத்த சுத்தம் பண்ணிராலாம்.நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க.” என்றான் வெள்ளைத்ததுரை.

“சரிடா…போயிட்டு நாளைக்கி சாயந்தரம் வந்துருவல்ல?”

“ஆமாப்பண்ண.”

சாராயம் வாங்க தேவையானக்காச சட்டையின் உள்பையிலும்,மீதிக்காச மனைவியிடமும் கொடுத்துவிட்டு, “நான் போயி மாட்டுக்கு வைக்க புடுங்கிட்டு வாரேன்.”என்றான் வெள்ளைத்துரை.

“நாளைக்கி மொட்டப்போட்டுட்டு நாம எப்பும் வர்றோமோ தெர்ல. அதுவரைக்கும் மாடுவ பட்டினி கெடந்துப்போவும்.கொஞ்சம் சேத்தே புடுங்கிட்டு வாரும்.போட்டுட்டே போயிருவோம்.”என்றாள் வெள்ளைத்துரை மனைவி.

சாராயம் விக்கும் பனமூட்டுக்கு சைக்கிளில்’புல்லட்’மாதிரி பாய்ந்து சென்று,படப்பு அடைந்த இடத்திற்கு பாட்டிலோடு திரும்பினான் வெள்ளைத்துரை.

படப்பிற்கு பின்புறம் நின்ற முள்ளு மூட்டில் வசதியாய் சாய்ந்துகொண்டு, வாயில் தலைகீழாய் கவிழ்த்தான் சாராயப்பாட்டிலை…

தொட்டுக்கொள்ள கறியேதுமில்லாததால்,வெறியேறி தலையை தொங்கவிட்டு தனியே புலம்பிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து,சில அடிதூரம் தடுமாறி நடந்து,முட்டிய மூத்திரத்தை வேட்டித்தூக்கி வேலித்தாண்டி முக்கியடித்து, வலதுகாலை பின் வைக்கும்போது காலடியில் பந்துப்போல கிடந்த சிவப்புநிற சுருட்டியத்துணியை பார்த்துவிட்டான்.

“சூறாவளியோ!இல்ல சொறிநாயோ! எது கொண்டுவந்து போட்டதோ? எந்த தேவ்….யா தூமத்துணியோ?” என்று கடுவாப்போல கத்தினான்; கெட்டக்கெட்ட வார்த்தையால் திட்டினான்.

அந்நேரம்பார்த்து முத்துக்குட்டி, கருவாலியைப்போல் ஓடிவந்து முள்ளுமூட்டில் ஒதுங்கினாள்.

வெள்ளைத்துரை வேட்டைநாயாய் வெறிகொண்டான்!வேட்டையாட தயாரானான்!காப்பு பிடித்த கைகளில் கருங்கற்களை எடுத்து, முத்துக்குட்டி குத்த வைத்திருக்கும் மூட்டினை நோக்கி குறிவைத்து மூர்க்கமாய் எறிந்தான்.

அடிப்பட்ட பறவையாய் காயம்பட்ட கண்ணாமண்டையை பிடித்துக்கொண்டு பாதைக்கு ஓடிவந்தாள் முத்துக்குட்டி.

வேட்டையாடிய மகிழ்ச்சியில் மறைவிடத்தைவிட்டு வெளியே வந்தான் வெள்ளைத்துரை.

ஓடிவந்தவளை வழிமறித்து,”இனும இந்தப்பக்கம் நீ ஒதுங்குறத பாத்தேன்.ஓன் கவுட்டய கிழிச்சிப்புடுவேன்”னு ஓங்கி ஒரு மிதி மிதித்து,”ஓடு செரிக்கியுள்ள”யென்றான்.

அங்கிருந்து அழுதுக்கொண்டே வீடு வந்தவள்.அழுக்குமூட்டை மீது விழுந்து “யம்மா…வலிக்கிதே!” என்று அப்படியே மயங்கிப்போனாள்.

துணி வெளுக்கப்போன வெள்ளையம்மா தலையிலிருந்த பொட்டணத்த திண்ணையில ஏறக்கி வச்சிட்டு,முத்தத்துல மோந்துப்பாத்துட்டுருந்த மூஞ்சுக்கருத்த தெருநாய, ‘ச்சீப்போ’ன்னு வெரெட்டிட்டு கீழப்பாக்குறா!முத்தமெல்லாம் ஒரே ரெத்தம்.பதறியடிச்சி குடிசைக்குள்ள என்னாச்சோ ஏதாச்சோன்னு ஓடுனா.அழுக்கு மூட்டமேல அசையாம கெடந்தா முத்துக்குட்டி.

“ஏ…யம்மா!என்னாச்சி ஒனக்கு?”ன்னு மடியில தூக்கிவச்சி மாருல அடிச்சிக்கிட்டா!

முத்துமாலை சொம்புல தண்ணீர் எடுத்துட்டு வந்து,முத்துக்குட்டி முகத்துல தெளித்தார்.

மெல்ல கண்விழித்து,நல்ல மூச்சுயிழுத்தாள் முத்துக்குட்டி.

அடிப்பட்ட எடத்துல காப்பிப்பொடிய அள்ளியப்பி கட்டிவிட்டு,”என்ன நடந்துச்சுன்னு சொல்லு”என்றாள் வெள்ளையம்மாள்.

நடந்தவற்றை நடுங்கியப்படி சொன்னாள் முத்துக்குட்டி.

“யோவ்!நீரு புள்ளய பாத்துக்காரும்.நா இந்தா வாரேன்னு…” வெள்ளையம்மாள்!வெள்ளைத்துரை வீட்டை நோக்கி வேங்கையாய் புறப்பட்டாள்.அவன் வீட்டில் ஆளில்லையென்று தெரிந்ததும், பண்ணையார் வீட்டை நோக்கி புலியாய் பாய்ந்தோடினாள்.

“சாமீ…சா..மீ.”

“யாரு?என்ன வேணு”மென்று கதவ தொறந்திட்டு வெளியே வந்த பண்ணையாரம்மாளுக்கு, முன்வாசலில் நிற்கும் வெள்ளையம்மாளை பார்த்ததும், மூக்குமேல கோவம் வந்தது.

“எம்மோவ்!சாமீ இருந்தாவன்னா கொஞ்சம் வரச்சொல்லுங்க.”

“ஐய்யா!டவுணுக்கு போயிருக்காரு. எதுவாயிருந்தாலும் பின் வாசலுக்கு வந்து சொல்லு.”

“எம்மோ!நா ஒண்ணும் அழுக்குத்துணிய ‘எடுக்க’வரல. ஐய்யாவப்பாத்து ‘கேக்க’த்தான் வந்துருக்கேன்.”

முன்வாசல்ல வந்து கேக்குற அளவுக்கு அப்படியென்ன ஒனக்கு முக்கியமான பிரச்சன?-கேட்டாள் பண்ணையாரம்மாள்.

“காட்டுக்கு ஒதுங்கப்போன எம்புள்ளைய,நாய அடிச்சி தொரத்துறமாரி கல்லக்கொண்டு அடிச்சி வெரட்டியிருக்காரு வெள்ளைத்துரய்யா.”

“தூமத்துணியப்போட்டு அசிங்கம் பண்ணா அடிச்சித்தொரத்தாம, ஆரத்தியா எடுப்பாங்க.”

“எம்மோவ்!பீங்காட்டுல தூமத்துணி கெடக்காம,’பட்டுத்துணியும் பாலீஸ்டர்துணியுமா’கெடக்கும்!
அந்த்துணிய கண்ணுல பாத்ததுக்கே புள்ளய அடிச்சிருக்காருன்னா, இதோ!இந்த கையால…அந்த அசிங்கத்த தொட்டு தொவைக்க வச்சி,அதே கையால எங்கள சாப்பிடவைக்குற ஒங்களலாம் என்னம்மா பண்ண”ன்னு வெள்ளையம்மா சொன்னதும்!

“வெளுக்குற வண்ணாநாயி!யென் வீடேறி என்னயவே அடிப்பேன்னா சொல்ற.அடியே! இன்னியோட ஓங்கத…” முடியுதென்றாள்.

“எம்மொவ்!மிஞ்சிப்போனா ஊரவிட்டு தொரத்துவீய;இல்ல உசுரோடு கொளுத்துவீய.வேறன்ன பண்ண முடியும் ஒங்களாள? ‘ஒங்களுக்கு பயந்து பணிஞ்சி வாழ்றதவிட, துணிஞ்சி மோதி சாவுறது எவ்வளவோ மேலு.'”

“ஏ!நாயே,ஐய்யா வர்றதுக்குள்ள எதய்யாவது குடிச்சிட்டு எங்கயாவதுப்போயி செத்துரு.வம்பா துடித்துடிச்சி சாவாத!”

“எம்மொவ்!நல்லா…கேட்டுக்கோங்க. ஒடச்சக்கைய திருப்பி ஒடைக்காம இந்த ஊரவிட்டு நானும்;யென் ஒடம்பவிட்டு உசுரும் போவாது!இது நா கும்புடுற தங்கம்மமேல சத்தியம்!”ன்னு சொல்லிவிட்டு, அவிழ்ந்த தலைமயிரை அள்ளி கொண்டை போட்டுக்கொண்டு, ‘நடுத்தெரு வழியாய்’ நடந்துப்போனாள். கம்பீரமாக வெள்ளையம்மாள்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *