கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 12,116 
 

சுப்புணிக்கு நல்ல வாட்டிய வாதாமர இலையை விரித்துச் சுட சுட அன்னம் பரிமாறி அதில் உள்ளங்கை ஆழத்திற்குக் குழித்துக் கொண்டு சாம்பாரை நிரப்பித் தந்தால் போதும் சங்கநிதி பதுமநிதி இரண்டும் கொடுத்தால் கூட வேண்டாம். அவனைத் தரையில் உட்கார வைத்து இலை போட்டு சாப்பாடு பரிமாறுபவர்கள்தான் மிகவும் குறைவு. உடல் உழைப்பு தேவை என்றால் மட்டும் சுப்புணியைத் தேடித் போக ஆள் கிளம்பும். அஸ்தம்பட்டி தண்ணீர் தொட்டியிலிருந்து ரெண்டு நடை தண்ணி கொண்டு வரணும் சுப்புணி . சுப்புணி உடனே ஆஜர். இரண்டு பக்கமும் பங்க்சர் ஆன டியூபில் தொங்கும் பிளாஸ்டிக் குடங்களை எடுத்துக் கொண்டு ஒரு நடையில் தொடங்கி ஏழெட்டு நடைகள் கூடச் சலிக்காமல் தண்ணீர் சுமந்து வருவான். ஒரு காக்கி டிராயரை மாட்டிக் கொண்டு வாயில் இஷ்டத்திற்கு ஒரு பாட்டை எவருக்கும் புரியாத மொழியில் பாடியபடியே நீர் சுமப்பான். சுப்புணி கோரிமேட்டிலிருந்து விறகு தூக்கிகிட்டு வரணும்டா என்று மெஸ் நடத்தும் மாசாணி அதட்டலாகச் சொன்னால் போதும் உடனே மூன்று சக்கரத் தள்ளு வண்டியில் நான்கு குண்டு விறகுகளைக் கூடத் தூக்கிபோட்டு ஏற முடியாத மேடுகளில் கூடக் கெண்டைக்கால்கள் இரண்டும் வலிக்க அழுத்திக் கொண்டு வருவான். செவ்வாய்ப்பேட்டையில் மூட்டை மூட்டையாய் பருப்பும், அரிசியும் சுமந்துவர சுப்புணி வேண்டும். சுப்புணி கூலியாக எதிர்பார்ப்பது அவனை வக்கணையாக உட்கார வைத்து வாழை இல்லை விரித்துச் சாதம் கூட்டு பொரியல் சாம்பார் அப்பளத்துடன் கூடிய முழுச் சாப்பாடு. இவ்வளவுதான்.

சுப்புணியின் வீடு எங்கிருக்கிறது என்றுகூட அந்தப்பகுதி மக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆர்வ மிகுதியில் ஓரிருவர் அவன் வீடு குறித்துக் கேட்டால் அவன் கிழக்குத் திசையில் தனது முழங்கையை உயர்த்தி “ அங்க யுக்கு “ என்பான். அவன் பேச்சில் தெளிவான உச்சரிப்பு இருக்காது. உற்றுப்பார்க்கும் பார்வைகளை அவனால் தாங்க முடியாது. கீழ் உதட்டில் எச்சில் ஒழுக ஓர் அசட்டு இளிப்பு இளித்துவிடுவான். ஒரு காக்கி டிராயரும் , கறைபடிந்த முண்டா பனியனுடன்தான் அந்த வீதிகளில் அலைந்து கொண்டிருப்பான்.எண்ணெய் என்ற சமாச்சாரத்தையே கண்டிராத செம்பட்டை படிந்த முடி. தூசு படர்ந்த முகம். செவ்வரியோடிய கண்கள். உழைத்து உழைத்து உரம் ஏறிப்போன கைகளும், கால்களும், விரிந்த நெஞ்சும் ஒரு தேர்ந்த உடற்பயிற்சியாளனின் உடலை விட உறுதியுள்ளவையாகத் தோன்றும்.

எந்த வீட்டிலும் பந்தலோ சாமியானாவோ போட்டுவிடக்கூடாது. அவனுடைய உடைந்த சைக்கிளை உருட்டிக் கொண்டு விசேடம் நடக்கும் வீட்டின் முன்பு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி “ வேல கொயுங்க “ அவனுடைய உச்சரிப்பில் ‘ட’வும்வராது, ‘ர’வும் வராது.

அவன் வேலை கொடுங்க என்று சொல்வதற்குள் ஆயிரம் வேலைகளை அவனிடமிருந்து வாங்க ஒவ்வொரு இல்லமும் காத்துக் கொண்டிருக்கும். கன்னங்குறிச்சி போலீஸ்காரர் வீட்டில் இரண்டு பசுமாடு, நான்கைந்து ஆடுகள், இரண்டு வான்கோழி உள்ளன. போலீஸ்காரன் சம்சாரம் பாக்கியம் அவனிடம் மொத்த தொழுவத்தையும் சருகு பொறுக்கி, குப்பை கூளங்களை ஒதுக்கி எரியூட்டி, ஹோஸ் பைப் மூலமாக ஆடு மாடுகளைக் குளிப்பாட்டி, ஒரு வாரத்திற்கு உண்டான தட்டு வாங்கி வரச் சொல்லி, கிணற்றடியில் காயப்போட்டுள்ள எருவாமுட்டைகளை கோணிப்பையில் போட்டு மாடியறையில் ஸ்டாக் அடுக்கி விட்டு வரச் சொல்லுவாள். மாதம் ஒருமுறை மேலே இருக்கும் தண்ணீர் தொட்டியைக் கழுவி மருந்தடிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை அவனிடம் மொத்த வேலையையும் வாங்கிவிட்டு, “ ஒனக்கு சோறு ஆக்கி கொழம்பு ஊத்திக் கொடுக்கணும்னுதான் ஆசை சுப்புணி. ஆனா பாரேன் இன்னிக்கு ஒருநாதான் அவுரு ரெஸ்டுன்னு எண்ணெய் தேச்சு குளிச்சுட்டு வந்திருக்காரு. குளிர்ச்சின்னு கோழிக் குளம்பு ஆக்கி வச்சிருக்கேன். உனக்கு கவிச்சி புடிக்காது. வேணுன்னா ஒண்ணு செய்யி. குளம்புல பீஸ் இல்லாம ஊத்துறேன். சாப்பிடு. “ என்பாள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்.

சுப்புணிக்கு இறைச்சி உண்ணும் பழக்கம் கிடையாது. முட்டை கூட சேர்த்துக் கொள்ள மாட்டான். இது அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரியும். தெருமுனையில் மளிகைக் கடை வைத்திருக்கும் நாடாத்தி மீனா தைப்பொங்கல் முடிந்த மறுநாளும், ஆடிமாதத்தில் ஒருநாளும் கரிநாள் கொண்டாடுவாள். ஊரை வளைத்து தெரு முழுவதற்கும் போக்குவரத்தைத் தடுத்து இரண்டு பெரிய ஆட்டுக் கிடாக்க்களை வெட்டிக் கறிசோறு போடுவாள். சுப்புணி கூடவே இருந்து எல்லா வேலையும் செய்து கொடுப்பான். வேலை வாங்குவதில் நாடாத்தி பலே கில்லாடி. இருப்பினும் விருந்து தொடங்கும் சமயம் சுப்புணி அங்கு இருக்க மாட்டான். பறந்து விடுவான்.ஒரு கரிநாளின்போது சுப்புணியை ஓடவிடாமல் தடுத்து அவனையும் உட்கார வைத்து இலையை போட்டு அன்னம் பரிமாறி அதன் தலையில் மீனாவின் மூத்தமகன் சிரித்து கொண்டே கோழியிறைச்சி மிதக்கும் குழம்பை பெரிய அகப்பையினால் ஊற்றி “ சாப்பிடுடா சுப்புணி “ என்று அதட்டினான். சுப்புணி வாயைக் கோணிக் கொண்டு பெரிதாக அழத் தொடங்கினான். அனைவருக்கும் சங்கடமானது.

டாக்டர் வீட்டில் வாரம் ஒருமுறையோ இரண்டு முறையோ காரைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். டாக்டர் இருந்தால் அவர் சம்சாரம் வாசல் தோட்டத்தில் உள்ள குழாயில் ஹோசை செருகிக் கொடுப்பாள். சுப்புணி உற்சாகமாக வாய்க்கு வந்தபடி பாடல்களைப் பாடிக் கொண்டு ஒரு இங்கு இடுக்கு இல்லாமல் காரைச் சுத்தமாக கழுவி மட்கார்ட் பகுதிகளில் குப்புற நுழைந்து சேறு சகதி அகற்றிக் காரைப் புதிதாக ஷோ-ரூமிலிருந்து இறக்கியது மாதிரி மாற்றிவிடுவான். டாக்டர் இல்லையென்றால் அவர் சம்சாரத்திற்கு ஏதாவது ஒரு காரணம் கிடைத்துவிடும். வாசல் குழாய் அடைத்துக் கொண்டது என்பாள். பழைய பேப்பர் சேர்ந்து போனது என்பாள் .அப்பொழுதெல்லாம் சுப்புணி இரண்டு பெரிய பிளாஸ்டிக் குடங்களில் தெருமுனையில் உள்ள பைப்பிலிருந்து நீர் எடுத்துக்கொண்டு வந்து போர்டிகோ மூலையில் டாக்டர் சம்சாரம் எடுத்து வைத்திருக்கும் அறையாள் உயர பேரலில் நீர் நிரப்பி காரை கழுவி விடவேண்டும். ஒருமுறை அவன் பாடிக் கொண்டிருப்பதை டாக்டர் கேட்டுவிட்டு : என்ன பாடறான் தெரியுமோ அச்சப்பத்து. மாணிக்கவாசகரோட பதிகம். கிறுக்கா உனக்கு எப்படிடா இது தெரியும் ?” என்றார். “ அவன் பாடற அழகில் அது மாணிக்கவாசகர் பதிகம்னு உங்களால மட்டும்தான் சொல்ல முடியும் “ என்றாள் டாக்டர் சம்சாரம். டாக்டர் இருந்தால் கார் கழுவுவது மட்டும்தான் சுப்புணிக்கு இருக்கும். டாக்டர் இல்லையென்றால் போதும் ‘ சுப்புணி அப்படியே அந்த போர்டிகோவை சுத்தம் பண்ணி பெருக்கி வெச்சுடு ‘ என்றோ, ‘ தோட்டத்தில் அதிகமா வளர்ந்திருக்கும் செடிகளை கட் பண்ணிட்டு அப்படியே மருந்து அடிச்சிடு’, என்றோ, ‘ என்னதான் ஒட்டடைக்குச்சி நீளமா இருந்தாலும் நீ ஒட்டடை அடிப்பதுமாதிரி என்னால முடியல உள்ளே வந்து கொஞ்சம் தூசி தட்டி கொடுத்துடு ‘ என்றோ ஒரு கூடுதல் வேலையை வாங்கிவிடுவாள். புறக்கடையில் டாக்டர் வீட்டில் நிறைய புழங்குவதற்கு இடமிருக்கும். தரையில் சிமெட்டி போட்டு பூசியிருப்பார்கள்.மோட்டார் ஷெட் அருகில் ஒரு பழைய பிளாஸ்டிக் உணவருந்தும் வட்டிலை போட்டு டாக்டர் சம்சாரம் அன்னம் பரிமாறுவார். அன்னமோ, குழம்போ, பொரியலோ சுடச் சுட இருக்கும். சும்மா சொல்லக் கூடாது டாக்டர் சமாசாரம் வீட்டு சாம்பாரும், கூட்டும், பொரியலும் அலாதி மணம் மிகுந்ததாக இருக்கும் .டாகடர் சம்சாரம் அவனை ஒட்டக் கறந்து வேலை வாங்கினாலும் வஞ்சனையின்றி அமுது படைப்பாள். ‘ இன்னும் கொஞ்சம் சாம்பார் விடவா ? ‘ என்றால் சுப்புணி ஏக குஷியுடன் தலையாட்டுவான். ‘ எல்லா சாதத்திலும் சாம்பாரே விட்டுண்டா எப்போ ரசம் மோர் இதெல்லாம் குத்திக்க போறே ? ‘ என்று டாக்டர் சம்சாரம் கேட்டு கேட்டு பரிமாறுவாள்.

சுப்புணி உழைக்கும் உழைப்பிற்கும் அவான் வயிற்றில் எரியும் அக்னிக்கு போடப்படும் அவிசின் அளவு சரியான விகிதத்தில் இருக்காதுதான். பசி தாங்க முடியாவிட்டால் இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கும் நடைபாதை கடையுமில்லாமல், மெஸ்ஸுமில்லாமல் , அர்ச்சுனன் நடத்தும் பணியாரக் கடையில் போய் நிற்பான். அர்ச்சுனனுக்கு நான்கு வாரிசுகள். பற்றாக்குறைக்கு அவன் மனைவி கௌரியும் வாட்டசாட்டமாக எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்ததால் அந்தப்பணியாரக் கடையில் அவனுக்கு அதிகமாக வேலையிருக்காது. பெரிய ஆட்டுரலின் முன்பு முழங்கால் தெரிய வழித்து கட்டி கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாங்கு மாங்கென்று மாவாட்டி விடுவாள். அர்ச்சுனனின் பெரியபெண் கையில் ஒரு பாடப் புத்தகத்தை வைத்து கொண்டே அடுப்பின் முன் அமர்ந்து வெந்த பணியாரங்களை கம்பியால் குத்தி திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கும்.அர்ச்சுணன் ஒரு மேசைமுன்பு நின்றுகொண்டு தக்காளி, வெங்காயம், கொத்துமல்லி எல்லாவற்றையும் பொடிப் பொடியாக அரிந்து கொண்டிருப்பான். இரண்டு வளர்ந்த பிள்ளைகள் தெருக் குழாயில் வாரம் ஒருமுறை மாநகராட்சி தண்ணீர் குழாய்களில் விநியோகிக்கும் குடிநீரை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல நீர் பிடித்து பெறல் பேரலாக நிரப்பி விடுவார்கள். சுப்புணி வம்படியாக போய் நின்றால் அர்ச்சுனன் அஸ்தம்பட்டி தண்ணீர் தொட்டியிலிருந்து நீர் பிடித்துவர ஏவுவான். பத்துநடை நடந்தபின்பு சரியான பதத்திலிருந்து தப்பிய உதிர்ந்த பணியாரங்களையும், இரண்டு இட்லிகளையும் கொஞ்சம் கார சட்னியும் ஒரு எவர்சில்வர் தட்டில் போட்டு தருவான். அருச்சுனன் செய்யும் பணியாரங்கள் தனி ருசியாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் சுப்புணி போய்நின்றால் அர்ச்சுனன் வேலை எதுவும் கொடுக்க மாட்டேன் என்கிறான்.

அர்ச்சுனன் மட்டுமில்லை சுப்புணியை அந்தப்பகுதியே மறந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு அவன் வம்படியாக சைக்கிளை நிறுத்திவிட்டு வேலை வாங்கும் வீடுகளில் கூட வேலைக்கு வைத்து கொள்ள மறுக்கத் தொடங்கினார்கள். போலீஸ்காரர் வீட்டில் புறக்கடையில் சின்னதாக ஒரு பயோ கியாஸ் பிளான்ட் போட்டு அதில் சாணியை அவரோ அவர் சம்சாரமோ சேர்த்து விடுவதால் அவர் வீட்டில் வேலை கிடைப்பதில்லை.டாக்டரும் தனது காரை மெயின் ரோடில் உள்ள புதிதாக துவங்கப்பட்ட கார் கழுவும் பட்டறையில் தனது காரை கொண்டுபோய்விட்டு வருகிறார். டாக்டர் சம்சாரம் மட்டுமில்லை பெரும்பாலான இல்லங்களில் தூசு துடைக்கும் எந்திரத்தை மாட்டிக்கொண்டு வொய்ங்க்க் என்ற சப்தத்துடன் தூசு தட்டத் தொடங்கிவிட்டனர். எந்திரங்களுக்கு சுப்பிநியைப் போல தனி அடையாளங்களும், பரிதாபப்பட வேண்டிய காரணங்களும் கிடையாது.

எது எப்படி போனால் என்ன சுப்புணிக்கு வாரம் ஒருமுறை வக்கணையாக கிடைத்த உணவு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அதையும் மீறி வேலை என்று போய்நின்றால் அரசாங்கம் இலவசமா அரிசி போடுதே போதாது ? என்ற கேள்வி முன்வைக்கபடுகிறது. அந்த இலவச அரிசியில் ஓர் அலட்சியம் இருப்பது கேள்வி கேட்பவர்களுக்குத் தெரியாது. எல்லாமே பண பரிவர்த்தனை அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்டுவிடும் போல. எவருக்கும் எதற்கும் நேரமில்லாமல் போய் இஞ்சிப் பூண்டு விழுது கூட பிளாஸ்டிக் பைகளில் மளிகைக்கடைகளில் தொங்கத் தொடங்கிவிட்டன. மூன்று ரூபாய்க்கு எலுமிச்சை சாதமும், கொத்துமல்லி சாதமும் போடறாங்களே போய் துண்னேன் என்று முகத்தில் அடிக்கிறார்கள்.தினம் ஒரே கொத்துமல்லி சோற்றை தின்ன முடியுமா? நாக்கு என்ன எந்திரமா?

இப்படி நாக்கு செத்து போய்க்கிடந்த சுப்புணிக்கு காதில் தேன்வந்து பாய்ந்தது போல சேதி ஒன்று வந்தது. மெயின் ரோடிலிருந்து உள்ளடங்கி ஜட்ஜ் சாலைக்கு வடக்கே சண்முகம் மளிகைக்கடைக்கு முன்பு ஒரு முருகன் கோவில் உள்ளது. ராமசுப்பிரமணிய சாஸ்திரிகளின் தாத்தா காலத்தில் கட்டப்பட்ட கோவில். ராமசுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு ஏழெட்டு சகோதரர்கள். சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் , லாஸ் ஏஞ்சல்ஸ் கத்தார் என்று எல்லா இடங்களிலும் வியாபித்த குடும்பம். ராமசுப்பிரமணிய சாஸ்திரிகள் கோவில் போதும் என்று இங்கேயே இருந்து விட்டார்.

விஸ்தாரமான கோவில். சின்ன விக்கிரகம் என்றாலும் அழகான முருகன்.வள்ளி தெய்வானையுடன் மயில்வாகன போஸ். முருகன் கோவில் என்று பெயரே தவிர சிவலிங்கம், காலபைரவர் , லக்ஷ்மி நரசிம்மர், நவகிரகம் என்று கோவில் தன்னை காலத்திற்கேற்ப விருத்தி செய்து கொண்டே போனது. அந்த கோவிலில் தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படும். கொடியேற்றி காப்புக்கட்டி துவங்கினால் பத்துநாள் திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படும். கடைசி இரண்டுநாள் அந்தப்பகுதியே அல்லோலகல்லோபடும். இறுதி நாளான தைப்பூசத்தன்று சுப்பிரமணியக் கடவுளுக்கு வள்ளி தெய்வானையுடன் திருமணம் நடைபெறும். காவடியும் சிறப்பு பூஜைகளுமாய் அந்தப் அப்குதியே அலறும். பந்தல் போடப்பட்டு ஆள் உயர சவுண்ட் ஸ்பீக்கரில் விடிகாலையில் டி.எம்.எஸ் ‘ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ என்று பாட ஆரம்பித்தால் மாலையில்தான் ஓய்வார் .

“ சுப்புணி முருகன் கோவிலில் நாளைக்கு திருக்கலியாணம்னு ஊரைக் கூப்பிட்டு ஓசிச் சோறு போடறாங்களாம். காசி அய்யர் சமையலாம் “ அர்ச்சுனன் சொல்லிவிட்டு போனான்.

காசி ஐயர் நளபாகத்தை சாப்பிடும் வாய்ப்பு சுப்புணிக்கு குருசாமி தெருவில் இருக்கும் சந்திரா மாமி வீட்டில் கிடைத்தது. மாமியின் பேரனுக்கு பூணூல் கலியாணம் முடித்து வீட்டில் சமாராதனை விசேடம் நடத்தினார்கள். காசி ஐயர்தான் சமையல். வீடு கொள்ளாமல் உறவினர் வந்து குவிய முதல் நாள் குழாயைத் திருகினால் தண்ணீர் நின்று போயிருந்தது. கூப்பிடு சுப்புணியை. முதல்நாள் காலையில் அவனது ஓட்டை சைக்கிளில் தண்ணீர் எடுத்து அவர்கள் வீட்டு ‘சம்ப்’பில் ஊற்றத் தொடங்கிய சுப்புணி மாலை மூன்றுமணி வரைக்கும் தண்ணீர் எடுத்துக் கொட்டியவண்ணம் இருந்தான்.சந்திரா மாமி பாரபட்சம் பாராமல் அவனை கூடத்தில் உட்காரவைத்து தலை வாழையிலை போட்டு அன்னம் பரிமாறினாள். ஒரு துளி பாயசம் வலது பக்கம் கீழ்ப்பகுதியில். அதற்கு மேலே வெண்டைக்காய் தயிர்பச்சடி; அடுத்து உருளைக்கிழங்கு பொடிமாஸ்; பீன்ஸ் உசிலி; பூஷணிக்காய் கூட்டு; பீட்ரூட் இனிப்பு பச்சடி ; காரட் கோசுமல்லி; ஊறுகாய்; இஞ்சிப்புளி; கொஞ்சம் புளியோதரை; வடை ஒன்று ( மொறு மொறுவென்று பருப்பு வடை.) வாழைக்காய் சிப்ஸ்;அப்பளம்; பருப்பு; அன்னம் பரிமாறி அதன் தலையில் குளம் கட்டி மணக்கும் சாம்பார். கண்களில் நீர்மல்க சுப்புணி சந்திரா மாமியைப் பார்த்தான். மாமி அவனுக்கு அன்னபூரணியாக காட்சியளித்தாள்.எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியாத ஒரு கைமணம் காசியினுடையது. இத்தினிக்கூண்டு போடப்பட்ட புளியிஞ்சியில் கூட காசி ஐயரின் பெயர் எழுதியிருந்தது. ஒரு மாதத்திற்கு அந்தச் சாப்பாட்டை நினைத்து நினைத்து சுப்புணி நாவில் நீர் ஊறி நின்றான்.

சுப்புணி சைக்கிளை மிதித்து கொண்டு ராமசுப்பிரமணியம் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினான். ராமசுப்ரமணிய சாஸ்திரிகளுக்கு கோவில் காரியம் பிரதானமில்லை . வைதீகம்தான் வருமானம். கார் இருக்கிறது.பைக் இருக்கிறது. பாதிநேரம் அவரை சுப்புணி மோட்டார் சைக்கிளில் பார்த்திருக்கிறான். ஊர் அறிந்த ஏமாளி என்பதால் சுப்புணியும் சாஸ்த்ரிகள் கண்ணில் விழுந்திருக்கிறான்.

“ வேயை “ என்று இளித்தான் சாஸ்திரிகளை பார்த்து. சாஸ்திரிகளுக்கு அவன் என்ன கேட்கிறான் என்று புரியவில்லை.

‘” வீத்து வேலை இயுந்தா செய்யயேன் “ சுப்புணி திக்கி திக்கி பேசினான். எங்கே தான் சொல்வது புரியாமல் சாஸ்திரிகள் விரட்டி விட்டால் பிறகு அங்கே நுழைவது அரிய செயலாகி காசி அய்யரின் நலபாகத்தை ருசிக்க முடியாமல் போய்விடும் என்ற பதற்றமும் அதிகமானது .

கோவில் சிவாசாரியார் ஏதேச்சையாக அங்கு வந்தவர் இவனை பார்த்துவிட்டு, “ வாடா கிறுக்கா ! நல்ல சமயத்தில்தான் வந்திருக்க.நாளை முச்சூடும் விறகு, எருவாட்டி, ஹோமத்துக்கான பண்டம்,பாத்திரம் எல்லாம் கொண்டு வரணும். கூடம் பெருக்கி, பாத்திரம் பண்டம் சுத்தமா கழுவி, எடுத்து அடுக்கி வைக்கன்னு ஏகப்பட்ட வேலையிருக்கு.கார்த்தால நாலு மணிக்கு கோவிலுக்கு வந்துடு. சரியா? “ என்றார்.

“ உழைப்பதற்குன்னு பிறந்த ஜீவன். பாருங்கோ கையும் காலும் கரணை கரணையா வெச்சிண்டிக்கிறதை ஒருவேளை சோறு போட்டா போதும். இந்தக் காலத்துல உடல் உழைப்பை கொடுக்கன்னு யாரு வர்றா ? மாசம் இருபதுநாள்னு கணக்கு பண்ணி அரசாங்கம் கொடுக்கற நானுறு ரூபாயும், இலவச அரிசியும் வாங்கிண்டு கார்த்தால சீட்டு, ஆடுபுலி ஆட்டமும் பொழுது சாஞ்சா சாராயக் கடையும் போவோம்னு சொல்றாங்களே தவிர உடல் உழைப்பை யார் தரேன்னு சொல்றாங்க?”

சுப்புணி மறுநாள் விடிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து, குளித்து, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, வழமையான காக்கி டிராயரையும், முண்டா பனியனையும் அணிந்த வண்ணம் கோவிலில் போய்நின்றான். ராமசுப்ரமணிய சாஸ்த்ரிகளுக்கு மேற்பார்வை மட்டும்தான். கோவில் முழு பொறுப்பும் ராமமூர்த்தி சிவாச்சாரியாரும் அவரது இரண்டு எடுபிடி பிராமணர்களும்தான். அவர்களில் ஒரு பிராமணன் சுப்புணியை அழைத்துக் கொண்டு கிணற்றடியில் கொண்டு விட்டான். பெரிய முற்றம்; பெரிய விவசாயக் கிணறு. முழுவதும் சிமென்ட் தளம் போடப்பட்ட புறக்கடையில் ஒரு மூலையில் இரண்டு பெண்கள் பெரிய பெரிய பாத்திரங்களை போட்டுகொண்டு தேங்காய்நார் கொண்டு தேய்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு மூலையில் கிணற்றின் அருகில் பெரிய குழாய் திறக்கப்பட்டு தண்ணீர் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. பெண்களில் ஒருத்தி அவனை கூப்பிட்டாள்.

“ உன் பேர் என்ன ? “

“ சுப்புணி “

இன்னொருத்தி ஜாடையாக சிரித்தாள்.

“ என்ன ணீ? “

“ சுப்புணி “ என்று மீண்டும் அவன் விகல்பமில்லாமல் கூறினான்.

“ நானே இவளை ரோடில் போகவர பார்த்திருக்கிறேன். சரியான கிறுக்கு பய. “ என்றாள் முதலில் கேட்டவள்.

“ வீடு எங்கே ? “ என்றாள் சிரித்தவள்.

சுப்புணி வழக்கம் போல கோணல் சிரிப்பை சிரித்து கன்னங்குறிச்சி மயானம் இருக்கும் திசையை தனது வலது முழங்கையை உயர்த்தி காட்டி “ அங்க யுக்கு “ என்றான்.

“ எங்க இருந்தா என்ன? மொதல்ல அந்தா அங்க இருக்கும் பைப்புல வார தண்ணியை கொண்டுவந்து இந்த நாலு அண்டாவிலும் ரொப்பனும்.காலையில அஞ்சு மணிக்கே காசி ஐயிரு சமைக்க வந்திருவாரு. அதுக்குள்ள இத்தனை பாத்திரங்களையும் கழுவியாவணும். நீ பயப்படாதே . உன் வேலை தண்ணி மொண்டு கொடுப்பது மட்டும்தான். “

சுப்புணி இரண்டு பிளாஸ்டிக் குடங்களை எடுத்துக் கொண்டு உற்சாகமாக பாடியவண்ணம் குழாயை நோக்கிக் கிளம்பினான்.

செந்தில் மாநகர் வாழ் கந்தநாதன் இரு

செய்யபாத கஞ்சமே-நமக்கு

உய்யமேவு தஞ்சமே- இன்று

செப்புவது கொஞ்சமே-கேட்கத்

தீய பாதக விரோதம் மாய விட்டு

திரும்பு வாயே நெஞ்சமே .

சுப்புணியிடம் ஓர் உற்சாகம் கிளம்பியது. கால்களில் ஒருவித தாளகதியுடன் அசைவுகளை உண்டாக்கி, துள்ளு நடையுடன் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை பாடியவண்ணம் சென்றான். அவனுக்கு அண்ணாமலை ரெட்டியார் பற்றியோ அவர் முருகன் மேல் காவடிச் சிந்து பாடியிருக்கிறார் என்பனபோன்ற கூகிள் சமாச்சாரங்கள் தெரியாது.இருப்பினும் இந்தப்பாடலை அவன் சிறுவயதில் தங்கியிருந்த ஒரு சாமியார் மடத்தில் நிதமும் பாடவேண்டும் என்பதால் பாடி மனப்பாடமான பாட்டு.

முதலில் அந்தபெண்களுக்கு அந்தப்பாடலின் வார்த்தைகளும், அதன் அர்த்தங்களும் அந்த புரியவில்லை என்றாலும் அதனுடைய சந்தம் அவர்களிடம் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியது அவன் நீர் சுமந்துகொண்டு வந்து அண்டாக்களில் நிரப்பியதோ, பாத்திரங்களை தேய்த்துக் கழுவி கவிழ்த்தியதோ எதுவுமே ஒரு பாரமின்றி ஆற்றோடு மரக்கட்டைகளை சுமந்து செல்வது போல எளிதாக இருந்தது.

ஆறுமணி சுமாருக்கு காசி ஐயரும் அவருடைய சகபாடிகளான பரிசாரகர்களும் வந்து இறங்கினர். சுப்புணியின் கவனமெல்லாம் மடப்பள்ளியில்தான் இருந்தது. காசி ஐயர் சின்னதாக ஒரு பூஜையை போட்டுவிட்டு விறகடுப்பை பற்ற வைத்தார். ராமமூர்த்தி சிவாச்சாரியார் உள்ளே வந்து , “ இன்னியோட உற்சவம் முடியறது காசி. கார்த்தால டிபன் வேண்டாம். மத்யானம் பூச நட்சத்திரத்தில் பார்வதியிடம் வேல் வாங்கும் வைபவம் முடிஞ்சவுடனே அலங்காரம்ஆகி தீபாராதனையோட விசேஷம் எல்லாம் முடியும். மத்யானம் ஒருமணிக்கு மேல ஆகும். பந்திக்க்கூடத்தைத் திறந்து, வந்திருக்கும் பக்தா எல்லாருக்கும் சுவையான சாப்பாடா போடணுங்கிறது சாஸ்திரிகளோட ஆர்டர். ரெண்டு கறி, அவியல்,கூட்டு, பச்சடி, கிச்சடி , பாயசம்,வடைன்னு பிரமாதமா இருக்கணும்னு சொல்லிட்டார். பார்த்து சமைங்கோ “ என்று சொல்லிவிட்டு சென்றார்.

சுப்புணிக்கு நாவில் நீர் ஊறியது. உற்சாக மிகுதியில் பாத்திரங்கள் தேய்த்த இடத்தை கோரி கோரி நீர் ஊற்றி தென்னை விளக்குமாற்றால் வறட்டு வறட்டு என்று கூட்டி சுத்தம் செய்யத் தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து சிவாச்சாரியார் தனது மூன்று சீடர்களின் உதவியுடன் கருவறையில் உள்ள திருவாசிகை, பெரிய வெண்கல மணிகள் மூன்று, பூஜை சாமான்கள், செம்பு, சந்தனக்கின்னம், ஆலவட்டம், கண்ணாடி, குடை தூப தீபங்கள், நான்கைந்து பெரிய தாமிரத் தாம்பாளங்கள், மூன்றடுக்கு தீபாராதனை தட்டு ஆகியவற்றையும் கொண்டு வந்து போட்டார்.

“ இங்கே பாருங்கோம்மா. அரைமணிநேரம் திரைபோட்டு சுவாமிக்கு தைலகாப்பும், திருமஞ்சனமும் ஆகும். அதுவரைக்கும் இதெல்லாம் வேண்டாம். ஆனா அதற்குள் இத்தனை பூஜை சாமான்களையும் புளி போட்டு பளிச்சுன்னு பொன்போல மின்றாப்பல தேச்சு வைக்கணும். என்ன செய்வேளோ, எப்படி செய்வேளோ தெரியாது. அதோ அங்கே கண்ணாடி போட்டுண்டு பேப்பர் படிச்சிண்டிருக்காரே அவர்கிட்ட சொன்னா வேணுங்கிற புளிய எடுத்துத் தருவார். சீக்கிரம் வேலையாகட்டும். “

சுப்புணி சிவாசாரியார் சொன்ன நபரிடம் சென்று “ புயி “ என்றான். அவர் புரியாமல் தடுமாறினார். “ பூச பாத்திரம் தேக்க புயி “ என்றான். அந்த நபர் “ தரித்திரம் ஒழுங்கா புளின்னு சொல்லேன் “ என்றார். உள்ளே சென்று ஒரு சிறிய பந்து அளவிற்கான புளியை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தார். அதற்குள் பெண்களில் ஒருத்தி சாம்பலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். இன்னொருத்தி பக்கத்தில் இருந்த தோட்டத்திலிருந்து ஒரு செங்கல்லை எடுத்து பொடித்து ஒரு கிண்ணத்தில் நிரப்பியிருந்தாள். திருவாசிகையை தேய்ப்பதற்குள் அவர்கள் இருவருக்கும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. மூன்று சன்னதியிலும் சிறிய மூர்த்தி என்பதால் திருவாசிகை இந்த மட்டுடன். சுப்புணி அவளை விலகிக் கொள்ள சொன்னான். காலம் காலமாக அந்த கோவிலின் பூசைப் பொருட்களை கழுவி சுத்தம் செய்யும் அவளுக்கு அந்தப் பொறுப்பை அவனிடம் கொடுக்க முதலில் ஒப்பவில்லை. உடலும் சேர்ந்து ஒத்துழைக்க மறுத்ததால் அரைமனதுடன் அவனிடம் கொடுத்தாள்

சுப்புணி அவளைப் போல முக்காலியில் உட்காராமல் திருவாசிகை அருகில் டிராயர் நனைந்தாலும் பரவாயில்லை என்பது போல அமர்ந்தான். முதலில் செங்கல் பொடியை கையில் எடுத்து, சூடு பரக்க நான்கடி உயரமும், அரையடி உயரமுமுடைய திருவாசிகையை தேய்க்கத் தொடங்கினான். திருவாசிகை முகப்பில் காணப்படும் பூத முகத்தை மிக உற்சாகமாக தேய்த்தான்.

“ ஏண்டா கிறுக்கா இதுக்கு பாட்டு எதுவும் இல்லையா ? “ என்றாள் ஒருத்தி.

வள்ளிமயில் முருகேசன்-குடி

வள்ளிபதம் பணிநேசன் – உரை

வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற

வாதே செல்வேன் மாதே

என்று குரலில் சுதி ஒரு பக்கமும், தாளம் ஒரு பக்கமுமாக பாடினாலும் பாடலின் சந்தமும் துள்ளலும் மாறாமல் பாடினான்.

உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் கூர்ந்து கேட்டால் அவன் என்ன பாடுகிறான் என்பது புரியும். சுப்புணி போன்றவர்கள் பேசும் பேச்சை இங்கு கூர்ந்து கேட்க எவருமில்லை. அவனுடைய சந்தமும், தாளமும், உற்சாகமும் மற்ற இரு பெண்களையும் தொற்றிக் கொள்ள இருவரும் அவர்கள் இருவரும் எவரும் ஆணையிடாமல் நீர் சுமந்து வந்தனர்.

பத்து நிமிடங்களில் புளி, செங்கல்பொடி, சாம்பல் இவற்றைக்கொண்டு மூன்று திருவாசிகளை பொன்போல மின்னச் செய்து சுவரின் மீது நீர்படிய சாற்றி வைத்தான். மீண்டும் அவன் வாயிலிருந்து ஒரு காவடிச் சிந்து எழுந்தது.

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் – கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் எவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்.

மூன்று வெண்கல மணிகள், ஏனைய பூசனை செய்வதற்குரிய உபகரணங்கள், கோடி விளக்குகள், கோபுர விளக்குகள் ஆகியவற்றை அவன் மேலும் சில காவடி சிந்துகளை பாடியவண்ணம் சுத்தம் செய்து கழுவுவதை கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் உற்சாகமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

காசி மாமா ஒரு பெரிய குவளை நிறைய காபியை அவனிடம் கொடுத்து, “ இந்தா இதக் குடிச்சுக்கோ. ஒருமணிக்கு மேலதான் பந்தி இருக்கும்.” என்றார். அவன் அதையும் ஒரு சந்தோஷத்துடன் வாங்கி குடித்தான். அதன் சுவையும், மணமும் அவனுக்கு ஒப்புமை கூற முடியாத ஒரு வஸ்துவாக இருந்ததால் உற்சாக மிகுதியில் சின்னதாக ஊளையிட்டான்.

கனஜோராக பூஜை ஆரம்பமானது. சுற்று வட்டாரத்து மக்கள் கோவிலில் திரள ஆரம்பித்தனர். மூன்று சன்னதிகள்; தனி தனி மண்டபங்கள்; இந்த மூன்று மண்டபங்களின் முன்பாக ஒரு பெரிய கூடம். கூடத்தில் அமர்ந்து அபிஷேகம் ஆராதனை முதலியவற்றை பார்ப்பதோடு சின்ன சின்ன குடும்ப நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளவும் அந்தக் கூடம் வசதியுடன் இருந்தது. பெரிய பெரிய பவானி ஜமுக்காளங்கள் விரிக்கப்பட்டு ஜனங்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். சிவாசாரியர்களின் சீடர்களில் ஒருவன் சன்னதிக்கு முன்பு ஒரு மைக்கை பிடித்து வேதகோஷங்கள், கந்தர் அநுபூதி, திருப்புகழ் , சுப்பிரமணிய புஜங்கம் என்று வரிசையாக ஓதியவண்ணம் இருந்தான். வேதியர் ஐவர் விடாமல் வேதமந்திரமும், ஷண்முக மந்திரமும் உச்சரித்தவண்ணம் ஓமத்தீ வளர்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒருவர்பின் ஒருவர் என்ற ஒழுங்குமுறை மெல்ல மெல்ல சிதைந்து, கிடைக்கும் இடத்தில் முண்டியடித்தபடி அமரத் தொடங்கினர். நீண்டுகொண்டே செல்லும் பூஜையின் மீதும் பழகிப்போன கடவுளின் உருவம் திரைக்குப் பின்னால் மறைக்க பட்டதனாலும் ஒருவித அமைதியற்ற சலிப்பு அவர்களிடம் தோன்றத் தொடங்கியது. மண்டபத்தின் அடுத்த சுவரில் மடப்பள்ளி இருந்ததும், காசி ஐயரின் கைவண்ணம் அடிசில் மணமாக அவர்கள் பசியின் வேகத்தை அதிகரித்தது. பசி வேகம் ஏற ஏற அவர்கள் சகிப்புத்தன்மையின் அளவு குறைந்தவண்ணம் இருந்தது.

சுப்புணிக்குத் தன்னை யாரும் அழைத்து சோறு போடமாட்டார்கள் என்பது தெரியும். உணவுக் கூடத்திற்கும் மண்டபத்தில் உள்ள கூடத்திற்கும் நடுவில் ஒரு அழிக்கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அழிக்கதவு என்பதால் உள்ளே இல்லை போடப்படுவதும் , தண்ணீர்க் குவளைகள் இடுவதும், அவற்றில் நீர் நிரப்பப்படுவதும் தெரிந்தது. கடைசி வகுப்பில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளுக்கு மணியடிக்க இரும்புக்கழியை தூக்கிக் கொண்டு செல்லும் பியூனை பார்த்ததும் ஓர் உதறல் உதறுமே அது மாதிரி உதறியது. ஜனக்கூட்டத்தில் ஓரிருவர் மெல்ல நகர்ந்து அழிக்கதவின் அருகில் வந்து நின்றனர். அழிக்கதவிற்கு அருகில் ஒரு சுவர். சுவரை ஒட்டி ஒரு மரக்கதவு. அந்த மரக்கதவின் வழியாக உள்ளே அடிசில் தயாரிக்கும் அடுப்படிக்கு செல்ல முடியும். அந்த மரக்கதவு திறந்திருந்ததால் சுப்புணி அதன் வழியாக உள்ளே போனான்.

“ யாருடா நீ ? நீயெல்லாம் உள்ளே வரக்கூடாது. “ என்றான் பரிசாரகர்களில் ஒருவன்.

“ சும்மா இரு ரங்கா. இது சுப்புணி. கார்த்தால நாலு மணிலருந்து மாங்கு மாங்குன்னு என்னமா வேலை செஞ்சிருக்கான் தெரியுமா? விடு.விடு. சுப்புணி இந்தப்பக்கமா போய் டைனிங் ஹாலில் நல்ல இடமா பார்த்து உட்கார்ந்துக்கோ. இப்போ சாப்பாடு போட்டுடுவோம். “ என்றார் காசி மாமா.

சுப்புணி காசிமாமாவைப் பார்த்து இணக்கமாக சிரித்தான். சமையல் மேடையில் பெரிய பெரிய பாத்திரங்களில் பாயசம்,சாம்பார், போரியல் கூட்டு, ரசம் நிரம்பியிருந்தன. ஒரு பெரிய ஓலைக்கூடை நிறைய தைலக்காப்பு செய்துகொண்ட மூர்த்தி போல பொன்னிற அப்பளங்கள் எண்ணெய் மினுங்க மலர்ந்திருந்தன. சுப்புணி கிழக்கு மூலையில் போடப்பட்ட இலையின் முன்பு ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

பூஜை முடிந்ததன் அறிகுறியாக பலத்த மணியோசையும், ஜனங்களின் ஹர, ஹர கோஷமும் எழுந்தன. ஜனங்களின் நடுவில் அதுவரையில் அவர்கள் கட்டி காப்பாற்றிய ஒழுங்கும், மௌனமும் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடையத் தொடங்கின. மாறாக ஒரு ஆவேசம் எழுந்தது. சொல்லலி வைத்தது மாதிரி மொத்த ஜனமும் அழிக்கதவின் முன்பு முட்டி மோதி நின்றன. ஒரு நடுத்தரவயதுக்காரர் உயர்ந்த குரலில் அங்கிருக்கும் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட இருப்பதால் பக்தர்களை அமைதி காக்குமாறு வேண்டிக்கொண்டார். பிறகு காசி ஐயரை பார்த்து “ மாமா கதவை திறக்கலாமா? “ என்றார். காசி சம்மதம் என்று தலையாட்டினார்.

கதவு திறக்கப்பட்டதும் மொத்த கூட்டமும் முண்டியடித்து உள்ளே நுழைய பார்த்தது. எந்தவித ஒழுங்குமுறையும் பின்பற்றப்படவில்லை. ஒவ்வொருவரும் தனக்கான இருக்கைகளைத் தேடிச் சென்று அமர்வதிலும், அவற்றை தக்கவைத்துக் கொள்வதிலும் முனைப்பாகவும் ஆவேசமாகவும் செயல்பட்டனர். ஓர் இருக்கைக்கு மூவர் என்ற விகிதத்தில் கூட்டம் இருந்ததால் அவர்களுடைய போராட்டம் உக்கிரம் மிகுந்ததாக காணப்பட்டது.

சுப்புணி இந்த நிகழ்வை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தபோது நெருக்கியடித்து இடம் பிடிக்கவந்த கூட்டத்தில் ஒருவரின் அதீதவேகம் காரணமாக சுப்புணி முற்றிலும் தள்ளப்பட்டு அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து விசிறி எறியபட்டு அருகில் இருந்த இரும்புக் கம்பம் ஒன்றில் தலையை ‘ ணங் ‘ என்று முட்டிக்கொண்டு கீழே விழுந்தான். தலையில் இரும்புக்கம்பி மோதியதால் ஏற்பட்ட வேதனையை விட தனது இடம் பறி போன வேதனை அதிகமிருந்தது. சுப்புணி தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து தான் அமர்ந்திருந்த கிழக்கு மூலை இருக்கையில் இப்போது திடகாத்திரமான நடுவயதுப் பெண்மணி அமர்ந்திருந்தாள்.

சுப்புணி அவளிடம் சென்று “ இது என் சீய்யு “ என்றான்.

அந்தப் பெண்மணி அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ உன் பேரென்ன? “ என்றாள்.

சுப்புன்னி வெள்ளந்தியாக “ சுப்புணி “ என்றான்.

அந்தப்பெண் தான் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்புறம் எட்டி பார்த்து தேடும் பாவனையை காட்டி “ ஓம் பேரு இதும் பின்னாடி எழுதலியே “ என்றாள். சுப்புணி அவளுடைய மலிந்த அங்கதத்தை புரிந்துகொள்ளும் முன்னர் அந்தக் கோவில் நிர்வாகிகளில் ஒருவர் மிகுதியாக உணவு கூடத்தில் நின்று கொண்டிருந்தவர்களை வாசலுக்கு வெளியில் போகுமாறு விரட்டியபடி வந்தார்.

சுப்புணி வருத்தத்துடன் வெளியில் வந்தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. அடுத்தமுறை கீழே விழுந்துவிடாத ஓர் இருக்கையாக பார்த்து அமரவேண்டும். உள்ளே பக்குவமாக செய்யப்பட்டு பரிமாறப்பட்ட பண்டங்களின் மணம் அவனை நிலைகுலையச் செய்தது. அனைவருக்கும் ஒரு சிறிய பிளாஸ்டிக் குவளையில்தான் பாயசம் தருகின்றனர். பாயசம் பரிமாறுபவனிடம் இலையிலும் இரண்டு கரண்டி ஊற்றச் சொல்ல வேண்டும். அடிவயிறு சுண்டி இழுப்பது போல இருந்தது. காலையில் காசிமாமா அவன் மேல் பரிதாபப்பட்டு கொடுத்த ஒரு லோட்டா காபி போன இடம் தெரியவில்லை. ஒருமணிக்குதான் சாப்பாடு என்றாலும் சிவாசாரியாரும் அவருடைய சிஷ்ய கோடிகளும் சத்தமே எழுப்பாமல் மடப்பள்ளியில் போய் டிபன் சாப்பிட்டதை சுப்புணி கவனிக்காமல் இல்லை.

இந்தமுறை ஏமாந்துவிடக் கூடாது என்று மெல்ல மரக்கதவின் வழியாக உள்ளே போக முயற்சித்தவனை பரிசாரகன் தடுத்து, “ என்ன சுப்புணி ஒரு தடவை சாப்பிட்டது பத்தலியா? “ என்று தடுத்தான்.

சுப்புணிக்கு தூக்கிவாரி போட்டது.பதறியபடி “ நான் இன்னும் சாப்பியய ” என்றான் தன்னுடைய புரியாத மொழியில். அந்தப்பரிசாருகன் சுப்புணியைத் தகாத வார்த்தைகளால் விரட்டவே அவன் எதுவும் பேசாமல் வெளியில் வந்தான். இப்போது அழிக்கதவும் அடைக்கப்பட்டு பந்தி நிரம்பியிருந்தது.

சுப்புணிக்கு மயக்கம் வருவது போல தலை சுற்றியது. மண்டபத்தில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான். அருகில் அவனுடன் புறக்கடையில் பாத்திரம் கழுவிய பெண்களும் அமர்ந்திருந்தனர்.

“ ரெண்டு தபா உள்ள போனியே இன்னுமா சோறு துன்னல ? என்றாள் ஒருத்தி.

இல்லை என்று சுப்புணி தலையாட்டினான்.

“ நமக்கெலாம் கடேசி பந்தில்தான் சோறு போடுவாங்க. நீதான் பெரிய இவனாட்டும் புகுந்து புறப்பட்ட “ என்றாள் இன்னொருத்தி.

இரண்டாவது பந்தி முடிந்ததும் காசி மாமா வெளியில் வந்தார்.

“ என்னடா சுப்புணி இன்னுமா நீ சாப்பிடல? “

சுப்புணி எழுந்து அவர் முகத்தை பார்த்து “ இல்லை “ என்று தலையாட்டினான்.

“ போ போ உள்ளே போய் உட்காரு “ என்றார் காசிமாமா.

சுப்புணி மற்ற இருவரையும் பார்த்து “ வாங்க “ என்றான். அவர்கள் மூவரும் உள்ளே சென்றனர். நூறுபேருக்கு அமர இடவசதி கொண்ட அந்த உணவுக்கூடம் இரண்டு பந்திகளில் ஓய்ந்து போய்விட்டது. அந்தக் கடைசி பந்திக்கும் எழுபது பேர் அமர்ந்திருந்தனர். காசி மாமாவும் கோவில் நிர்வாகியும் உள்ளே வந்து அமர்ந்திருந்த கூட்டத்தை பார்வையிட்டனர்.

“ நீங்க சொல்றது சரி. இப்பல்லாம் முன்ன மாதிரியில்ல . ஒரு இலைக்கு இவ்வளவுதான்னு தீர்மானம் பண்ணிடுவோம். அதுக்கு ஏத்தா மாதிரிதான் பண்டம், விறகு , இலை எல்லாம். நீங்க என்ன சொன்னேள் ரெண்டு பந்திக்குக் கூட ஆள் இருக்காதுன்னு . இப்போ பாருங்கோ ரெண்டு பந்தி முடிஞ்சு மூணாவது பந்தி முக்கால் ரொம்பிக் கிடக்கு. கூட்டத்தை வச்சே எத்தனை இலைன்னு கணக்கு பண்ணிடுவேன் நான். கைவசம் இருக்கட்டும்னு எப்பவும் புளிக்காய்ச்சல், வடாம், அப்பளம்னு எடுத்துண்டு வருவேன்.டே சாம்பு கோணிப்பையில் கட்டி எடுத்திண்டு வந்திருக்கும் பாக்குமட்டை தட்டுகளை வரிசையா பந்தியில் போடு. “ என்றார்.

சுத்தம் செய்யப்பட்ட பாக்குமட்டையில் செய்யப்பட்ட தட்டுகளை சாம்பசிவம் என்ற உதவியாளன் போட்டு கொண்டே வந்தான். சுப்புணி பாக்கு மட்டையை கைகளில் தூக்கி பார்த்தான்.

காசிமாமா ஒரு பெரிய பேசின் போன்ற பாத்திரத்தில் அம்பாரமாக குவிந்த புளியோதரையை இடது கையில் சுமந்து மற்றொரு கையிலிருந்த அகப்பையினால் ஒவ்வொரு தட்டிலும் அள்ளி அள்ளி வைத்தபடி சென்றார். சுப்புணிக்கு கூடுதலாக ஒரு அகப்பை புளியோதரையை வைத்து “ சாப்பிடு “ என்றபடி சென்றார்.

சுப்புணி புளியோதரைக் குவியலை பார்த்தான்.

“ சாப்பிடு கண்ணு. ஐயிரு புளியோதரை நல்லாயிருக்கும் “ என்றாள் அருகிலிருந்தவள்.

சுப்புணி எழுந்தான்.

“ சாப்பிடு கண்ணு . நமக்கெல்லாம் புளிசோறுதான் “ என்றாள் அடுத்தவள்.

காசி ஐயர் தன் கையிலிருந்த பாத்திரத்தை சட்டென்று ஒரு மேசையில் வைத்துவிட்டு வருவதற்குள் சுப்புணி தனது இடது கையினால் தன் முன்பிருந்த பாக்குமட்டை தட்டினை கோபமாக விசிறியடித்தான். பத்தடிதூரம் பறந்துசென்ற பாக்குமட்டைதட்டு சுவரில் மோதி தரையில் வீழ்ந்தது. தரையெங்கும் புளிசோறு சிதறியது.

கோவில் நிர்வாகியின் அதிகாரக் கரம் சுப்புணியின் கழுத்தில் விழுந்தது.

“ சுத்தம் சுகாதாரம் பார்க்காம எல்லாரையும் மனிதர்கள்னு நினைத்து கூடத்தில் உட்கார வச்சு சோறு போடுறோமில்ல அந்தத் திமிருடா உனக்கெல்லாம். இன்னொரு தடவை இந்தப்பக்கம் வந்து வேலைன்னு இளிச்சிகிட்டு வந்து நில்லு பேசிக்கிறேன். “ என்று ஓங்கிய அவரது கரத்தை காசி தடுத்தார்.

“ வேண்டாம் விட்டுடுங்கோ . நான் பாத்துக்கறேன் “

கோவில் நிர்வாகி காசியின் கைகளை உதறிவிட்டு “ அவன இன்னொரு தடவை இந்தக் கோவில் காமப்வுண்டுக்குள்ள நான் பார்க்கக்கூடாது ஆமாம். “ என்று கத்திவிட்டு உள்ளே சென்றார்.

காசி தனது வேட்டி முடிச்சிலிருந்து ஒரு நூறுரூபாய் தாளை எடுத்து சுப்புணி கையில் கொடுத்து “ சுப்புணி. கிளம்பிக்கோ. நல்ல ஹோட்டலா பார்த்து முழுச் சாப்பாடு வாங்கி சாப்பிடு. “ என்றார்.

சுப்புணி அந்த நூறு ரூபாய்த் தலையும் விசிறியடித்தான். ஹும் என்று ஒரு சப்தம் எழுப்பிவிட்டு வெளியேறினான். அந்த ரூபாய் நோட்டு காற்றில் அலைந்து அலைந்து காசியின் காலடியில் வந்து விழுந்தது. காசியும் உள்ளே போய்விட்டார்.

எடுப்பார் எவருமின்றி அந்த நூறுரூபாய் நோட்டு தரையிலேயே கிடந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *