கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 19,843 
 

அதிகாலையிலேயே முருகேசனுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதிகாலை என்றுதான் நினைத்தான். ஆனால், ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் சூரிய ஒளி அல்ல; தெருவிளக்கின் பிரதிபலிப்பு என்று தெரிந்தவுடன் செல்போனை எடுத்து மணி பார்த்தான். இரண்டரை. எழுந்தான். எழுந்திருக்க முடியவில்லை. கால்களில் யாரோ சங்கிலியால் கட்டியது போன்ற வலி. எழுந்து அமர்ந்து பாதங்களைத் தடவிப் பார்த்தான். பயங்கரமாக வீங்கியிருந்தன. வயிற்றிலும் ஏதோ பிரச்னை என்று உள்ளுணர்வு சொல்ல, தடவிப் பார்த்தால் அது பானைபோல் உப்பியிருந்தது. இரண்டு கைகளும் வீங்கி இருந்தன. முதுகில் ஒரே அரிப்பு. சொறிந்துவிட்டுக் கையைப் பார்த்தால், அதில் பிசுபிசுப்பாக வழிந்த ரத்தம். சம் திங் ராங்.

கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப் போட்டான். அவன் கால்களையும் கைகளையும் வயிற்றையும் பார்க்க அவனுக்கே பிடிக்கவில்லை. விடிந்ததும் எங்காவது பெரிய ஆஸ்பத்திரிக்குப் போய்விட வேண்டியதுதான். ஏ.டி.எம்-ல் சேமிப்பு பதினைந்து ஆயிரம் இருக்கிறது. முதலாளி இரக்கப்பட்டு ஒரு பத்தாயிரமாவது கொடுப்பார். தலை சுற்றியது. கண்களை இருட்டியது. சுவரைப் பிடித்துக்கொண்டு அப்படியே சரிந்து அமர்ந்தான். இனி மேலும் தள்ளிப்போட முடியாது. ஆஸ்பத்திரிக்குப் போயே ஆக வேண்டும். இதைப் போன்ற ஒரு களைப்பை அவன் வாழ்க்கையில் அனுபவித்ததே இல்லை. மெதுவாக எழுந்து கட்டிலை அடைந்து, தொப்பென்று விழுந்தான். தனிமை இரக்கம் அவனைச் சூழ்ந்தது.

அவன் அதிகம் வெறுப்பது மருத்துவமனைக்குச் செல்வதைத்தான். ஸ்கேனிங், டயாலிசிஸ், இன்ன பிற மெஷின்களும் மருந்துகளும் உயர்ந்த கட்டடங்களும் வார்டுகளும்… சுரண்டுவதற்காகவே படைக்கப்பட்டவை என்பது அவனது தீர்மானமான எண்ணம். இந்த 42 வயது வரை மருத்துவமனையில் ஒருமுறைகூட அட்மிட் ஆனதே இல்லை. அட்மிட் என்ற சொல்லை ஏன் தமிழில் ‘மருத்துவமனையில் அனுமதி’ என்று எழுத வேண்டும் என்று அந்த நிலையிலும் ஒரு யோசனை ஓடியது. ஒருவேளை பாரிச வாயுவாக இருக்குமோ என்று மற்றொரு எண்ணம் சுனாமியாகத் தாக்கியது.

டேக் இட் ஈஸி முருகேசா! உலகின் மிகப் பெரும் பணக்காரன் ஸ்டீவ் ஜாப்ஸ் சாவதற்கு முன்னால் என்ன சொன்னான்? ”மரணத்தைக் கண்டு ஏன் எல்லோரும் பயப்படுகிறார்கள்? மரணம் உண்மையில் ஒரு விடுதலை. அது இனிமையான உணர்வு. நிம்மதியாகப் படுத்து அதை எதிர்கொள்…’ குஷ்வந்த் சிங் கூட வாசலுக்கு வந்துவிட்ட மரணத்தை எதிர்பார்த்துத் தினமும் காத்திருப்பதாக எழுதி இருக்கிறார். அட சட், இப்போது ஏன் மரணத்தைப் பற்றி நினைக்க வேண்டும்? தனிமை அப்படித்தான் நெகட்டிவ் எண்ணங்களைத் தரும். மனதைத் திசை திருப்பு.

இனிமேல் நிச்சயம் தூக்கம் வரப்போவது இல்லை. மிச்சம் இருக்கும் நேரத்தை ஏதாவது புத்தகத்தைப் படித்து ஓட்ட வேண்டியதுதான். பாதி படித்து இருந்த அ.முத்துலிங்கத்தின் ‘மகாராஜாவின் ரயில் வண்டி’யை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். ஒரு பறவையின் மரணத்தைப் பற்றி எழுதி இருந்தார். எங்கேயோ வடக்கு ரஷ்யாவில் பிறந்து பறந்து… ஆப்பிரிக்காவின் உயர்ந்த கட்டடம் ஒன்றின் ஜன்னலில் மோதி உயிர்விட்ட பறவையைப் பற்றிய கதை. மனிதர்களும் அப்படிப்பட்டவர்கள்தானே என்று தோன்றியது. அரை மணிநேரம் சென்றது. மூளையின் தனி டிராக் ஒன்று உடம்புக்கு என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தது. வாயு சேர்ந்துவிட்டதா? அப்படி என்றால் வலி தெரியுமே. இதயக் கோளாறு? கிட்னி ஃபெயிலியர்? மூளையில் அல்லது நுரையீரலில் யுவராஜ் சிங்குக்கு வந்ததுபோல் மாலிக்னன்ட் கட்டி? ஸ்டீவ் ஜாப்ஸ்போல் கணையத்தில் புற்று?

பிடிவாதமாகக் கண்களை மூடினால், ஒரு கல்லறைத் தோட்டம் தெரிந்தது. சார்லஸ் டிக்கன்ஸ், ஜான் லென்னன், கார்ல் மார்க்ஸ், வர்ஜினியா உல்ஃப், மால்கம் எக்ஸ், பகத் சிங் போன்ற பலர் கல்லறையின் மேல் கல்லில் அமைதியான புகைச் சிலைகளாக அமர்ந்திருந்தார்கள். அவனை மௌனமாகப் பார்த்தார்கள். கண்களை வலுக்கட்டாயமாகத் திறந்து மீண்டும் புத்தகத்தைத் தொடர்ந்தான். கண்கள் சோர்வில் தானாக மூடிக்கொண்டன.

செம்பட்டிக்கு போன் போட்டு தமிழரசியை வரவழைக்கலாமா? வேண்டாம். அழுது கலாட்டா செய்து, ஊரையே கூட்டிவிடுவாள். இரண்டு குழந்தைகளுக்கும் அறிந்தும் அறியாத வயசு. அவர்களுக்கு ஏதும் சொல்ல வேண்டாம். உனக்கு ஒன்றும் இல்லை முருகேசா! கோழைபோலப் பயந்து சாகாதே. மருத்துவமனையில் சொல்லிவிடுவார்கள் பார். ‘கவலைப்படாதீங்க முருகேசன். வெறும் விட்டமின் டெஃபீஷியன்ஸி. மாத்திரை சாப்பிட்டு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். கவுன்ட்டர்ல இருநூறு ரூபா கட்டிடுங்க.”

காலை 6 மணி வரை ஒவ்வொரு நிமிடமாக நரகத்தை ஓட்டியவன், குளிக்கக்கூட முடியாமல் வெளியே வந்து நடந்தபோது நடப்பது அவன்தானா என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது. ஒவ்வோர் அடி எடுத்துவைக்கும்போதும் குதிகால்களில் வலி உயிரை எடுத்தது. ஆட்டோ பிடித்து அந்தப் பெரிய ஆஸ்பத்திரியின் பெயரைச் சொன்னான்.

”இன்னா சார் கால் இப்பிடி வீங்கிக்குது? யானைக் காலா?” என்றான் ஆட்டோ டிரைவர். முருகேசன் கடுப்பில் பதில் சொல்லவில்லை.

அந்தப் பெரிய மருத்துவமனையின் போர்ட்டிகோவில் நின்ற கார்களும் பளபளப்பான மனிதர்களும் மாதம் எட்டாயிரம் சம்பாதிக்கும் முருகேசனுக்குள் தாழ்வு மனப்பான்மையைக் கொண்டுவந்தார்கள். ரிசப்ஷனில் சிக்கனமாக அவன் பிரச்னையைப் பற்றி விசாரித்துவிட்டு, ஓ.பி. என்பதற்கு அடையாளமாகக் கையில் ஒரு நீல நிறப் பட்டையைக் கட்டி, ”உட்காருங்க… டாக்டர் வந்ததும் சொல்றோம்” என்றார்கள். 300 ரூபாய் கட்டச் சொன்னார்கள். முருகேசனைச் சுற்றி மருத்துவமனையின் இளம் ஆண், பெண் பணியாளர்கள் மகா சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருந்தார்கள். வண்ணத்துப்பூச்சிகள்போல் இருந்தது அவர்களின் வேகமான நடமாட்டம். சிலர் கைகளில் காபி கோப்பைகள். எத்தனை ஃப்ரெஷ்ஆக, மலர்ச்சியாக இருக்கிறார்கள். முருகேசனின் பார்வை அவர்களுடைய கால்களின் மீதே படிந்து இருந்தது. நரம்புகள் தெரியும் ஆரோக்கியமான பாதங்கள். மனிதனின் முன்னேற்றமே நடைப்பயணத்தில்தான் தொடங்கியது. எத்தியோப்பியாவில் கிளம்பிய முதல் ஆதி மனிதக் கூட்டம் நடந்தே ஆப்பிரிக்கக் கண்டத்தைக் கடந்து மத்திய ஐரோப்பாவின் சைபீரியாவை அடைந்தது. அதன் தொடர்ச்சியாக இவர்களும் நடந்துகொண்டே இருக்கிறார்கள். தன்னுடைய கால்களும் அதுபோல் நன்றாக ஆகுமா என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டான் முருகேசன்.

ஏழரை மணிக்கு இரண்டாவது மாடியில் இருக்கும் டாக்டர் மஞ்சுளா ராமநாதனைப் பார்க்கச் சொன்னார்கள். மறுபடி தள்ளாடியபடி நடந்து லிஃப்ட்டை ஒரு வழியாகப் பிடித்து, இரண்டாவது மாடியை அடைந்தான். டாக்டர் மஞ்சுளாவின் சிறிய கன்சல்டிங் அறையில் நுழைந்தபோது அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காத தொனியில், அலட்சியமாகப் பார்த்தாள் மஞ்சுளா. பணக்கார வீட்டில் பிறந்தவள் என்று பார்த்ததும் சொல்லி விடலாம். திருத்தமாக இருந்தாள். காட்டன் புடவை கஞ்சி போடப்பட்டு முறைப்பாக இருந்தது.

‘என்ன பிரச்னை?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

‘கை, கால், வயிறு வீங்கியிருக்கு டாக்டர். கொஞ்ச நாளாவே இந்தப் பிரச்னை இருக்கு. இப்ப திடீர்னு ரொம்ப அதிகமாயிடுச்சு. நடக்கக்கூட சிரமமா இருக்கு.’

‘சட்டையைத் தூக்குங்க.’

அவனுடைய வயிறைத் தொட்டுப் பார்த்தாள். வலது இடதாக அமுக்கிப் பார்த்தாள்.

”வலிக்குதா?”

”கொஞ்சம்.”

கண்களைப் பரிசீலித்தாள். தொடர்ந்து நிறையக் கேள்விகள் கேட்டாள். பசி எடுக்கிறதா? மலத்தின் நிறம் என்ன? ஜீரணக் கோளாறு உண்டா? இன்சோம்னியா? ஜுரம் அடிக்கடி வருகிறதா? எத்தனை நாட்களாக வீக்கம்? பல் ஈறுகளில் ரத்தம் கசிவது உண்டா? அடுத்து அவளிடம் இருந்து வந்த கேள்வி ”ஆல்கஹால் சாப்பிடுவீங்களா?”

”வாரத்துக்கு ரெண்டு நாள். சனி, ஞாயிறு…” என்றான் தயங்கியபடி.

”எத்தனை வருஷமா?”

”அது இருக்கும் ஒரு எட்டு, ஒன்பது வருஷமா…”

”அந்த ரெண்டு நாளும் தொடர்ந்து சாப்பிடுவீங்களா?”

”நண்பர்களைப் பொறுத்து. கோவில்பட்டி நண்பன் மாரிமுத்து வந்தா, தொடர்ந்து வண்டி ஓடும்.”

”சிரிக்காதீங்க. உங்களுக்கு லிவர் சிரோஸிஸ்னு சந்தேகப்படுறேன். சின்னச் சின்னக் கொப்புளங்கள் இருக்கு உடம்புல. புரொஜக்டட் லிவர். டெலிரியம், வாய் குழறுது. உங்க லிவர் ரொம்பப் பாதிச்சி இருக்கு. சரிபண்றது கஷ்டம். இவ்வளவு லேட்டாவா வருவீங்க. கண்ணு மஞ்சளா இருக்கு. ஜாண்டிஸ் நிச்சயம் இருக்கும். அட்மிட் ஆகிடுங்க. ஹெப்படைடிஸ் இருக்கா?”

”அப்படின்னா?”

”அது ஒரு கிருமி. வெரி டெட்லி. அட்மிட் ஆகி நிறைய லிவர் ஃபங்ஷனிங் டெஸ்ட் எடுக்கணும். எண்டாஸ்கோபி, அல்ட்ரா சவுண்ட், சி.டி. எல்லாம் பண்ணணும். பிலுருபின் தொடர்ந்து வாட்ச் பண்ணணும். ச்… ச்… என்ன படிச்சீங்க நீங்க?’

”பி.ஏ. ஹிஸ்ட்ரி தமிழ் மீடியம்.”

”படிச்சவர்தானே? இதை எல்லாம் முன்னாடியே பார்த்திருக்க வேணாமா? ஒய்ஃப் எங்கே?”

”அவங்க செம்பட்டியில ஸ்கூல் டீச்சரா வேலை பார்க்கிறாங்க. சொன்னாக் கலவரமாயிடுவாங்க. நிச்சயம் அட்மிட் ஆகியே தீரணுமா டாக்டர்?”

”தீஸ் பீப்பிள் ஆர் இன்காரிஜிபிள்” என்று அலுத்துக்கொண்டாள். ”நிறைய டெஸ்ட் எடுக்கணுங்க. உடம்பு ஃபுல்லும் லிவர் வேலை செய்யாததால ஃப்ளூயிட் சேர்ந்துக்கிட்டே இருக்கு. அது இன்ஃபெக்ட் ஆச்சுன்னா, நிலைமை ரொம்ப மோசமா ஆயிடும். நிச்சயம் ப்ளேட்லட் குறைஞ்சி இருக்கும். ஜாண்டிஸ் கன்ட்ரோலுக்கு வரணும். இதயத்தைவிட முக்கியமானதுங்க லிவர். அதைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வெச்சிருக்கீங்க. எக்ஸ்ட்ரீம் ஸ்டேஜ். இப்படியே விட்டா கிட்னி ஃபெயிலியர், கோமா இல்லைன்னா சடன் மல்ட்டி ஆர்கன் கொலாப்ஸ். உயிருக்கு எந்த கியாரன்ட்டியும் இல்லை. உங்களுக்கு அது நடக்க நிறைய வாய்ப்பு இருக்கு. யூ ஆர் சிட்டிங் ஆன் எ டிக்கிங் பாம். போர்ட்டல் வெயின்ல ஹெமரேஜ் ஆகி ரத்தம் கசிஞ்சா, ரொம்ப ஆபத்து. நீங்க என்னடான்னா அட்மிட் ஆகணுமான்னு கேக்கறீங்க?”

அவள் பேசப் பேச… வாள் போன்ற உண்மையின் கூர்மை அவனை அறுத்து எடுத்தது. மகள் சாந்தினி, மகன் சாந்தன் இருவரின் முகமும் ஞாபகத்தில் வந்து போயின. அவன் இல்லாவிட்டால் தமிழரசி அந்தப் பிள்ளைகளை எப்படிக் கரை சேர்ப்பாள்? ஒரு பாலிஸிகூட அவன் பெயரில் கிடையாது. சொந்த வீடு, வங்கியில் பணம் ஏதும் இல்லை. மூட்டை மூட்டையாகப் புத்தகங்கள் வைத்திருக்கிறான்.

”ஹலோ! என்ன யோசனை? எல்லாத்துக்கும் ரெடியா இருங்க. டஃப் டேஸ் ஆர் அஹெட்… லிவர் டிரான்ஸ்பிளான்டேஷன் பண்ண வேண்டியது வந்தாலும் வரலாம். சிம்ப்டம்ஸ் அப்படித்தான் இருக்கு. டெஸ்ட்லதான் எல்லாம் தெரியும். இப்பக்கூட யூ ஆர் நாட் ஸ்டேபிள். சாப்பாட்டுல உப்பு, காரம், எண்ணெய், புளி எதுவும் சேர்க்கக் கூடாது. டயட் இங்கேயே தருவாங்க. ஓ.கே?”

”டிரான்ஸ்பிளான்டேஷன்னா… இன்னொருத்தர் லிவரைப் பொருத்தற ஆபரேஷனா டாக்டர்?”

”யெஸ்” என்றவள், லெட்டர் பேடில் வரிசையாக என்னென்னவோ எழுத ஆரம்பித்தாள்.

”அதுக்கு எவ்வளவு செலவு ஆகும்?”

”முப்பது லட்சம் இல்லைன்னா நாப்பது. பணம் கொடுத்தாலும் லிவர் கிடைக்கிறது கஷ்டம். எட்டாவது ஃப்ளோர் போய்ப் பாருங்க. எத்தனை கிரானிக் சிரோசிஸ் பேஷன்ட்ஸ் லிவருக்காக வெயிட் பண்றாங்கன்னு. என்ன வேலை பார்க்கறீங்க?”

”பிளாஸ்டிக் மோல்டிங் கம்பெனி. எல்லா வேலைகளையும் அங்கே செய்வேன்.”

”குழந்தைங்க?”

”ரெண்டு பேர் டாக்டர். பையன், பொண்ணு.”

”ச்… ச்ச்” என்றாள். விறுவிறு என்று அந்த பேப்பரில் எழுதிக்கொண்டே இருந்தாள்.

”டாக்டர் நான் அதிகமாக் குடிக்க மாட்டேன். எனக்கு எப்படி?”

”ஒரே ஒரு தடவை குடிச்சாக்கூட வரும். சிலருக்கு முப்பது வருஷம் குடிச்சப்புறம் வரும். சிலருக்கு வரவே வராது. எல்லாம் பாடி கான்ஸ்டிட்யூஷன்…” என்றவளின் முகம் செல்போன் அடித்ததும் மலர்ந்தது.

”ஹாய் சதீஷ் வந்துட்டியா? வெயிட் தேர். கேன்டீன்லதானே? அங்கே வேணாம். வில் கோ டு கே.எஃப்.சி.” என்று பேசிவிட்டு அணைத்தாள்.

”டாக்டர், மறைக்காம சொல்லுங்க. நான் உயிரோடு இருப்பேனா?”

”ஐயாம் சாரி மிஸ்டர் முருகேசன். ஹானஸ்ட்லி என்கிட்டே இதுக்கான பதில் இல்லை. இப்ப நாங்க செய்யப்போறது ஃபர்ஸ்ட் எய்டு மாதிரி. மறுபடியும் ஆல்கஹால் பக்கம் போனீங்கன்னா, நிச்சயம் உங்களைக் காப்பாத்த முடியாது. இன்னொரு உண்மையையும் உங்ககிட்டே சொல்லிடறேன். கெட்டுப்போன லிவர் குப்பை மாதிரி. அதைச் சரிப்படுத்தவே முடியாது. லிவர் மாத்தறதுதான் ஒரே வழி. ஹெப்படைடிஸ் இருக்கக் கூடாதுனு கடவுள்கிட்டே வேண்டிக்குங்க. கோ ஆபரேட் வித் அஸ்!” என்றவள், கைப்பையை எடுத்து மாட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருந்தாள். முருகேசன் பிரமை பிடித்ததுபோல் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தான். அவன் முற்றிலும் எதிர்பாராத தாக்குதல். கொஞ்சம் பணம் சேர்த்து பூம்பாறை பக்கம் நிலம் வாங்கி கோஸ், உருளை, காலிஃபிளவர் அல்லது பண்ணைக்காடுப் பக்கம் திராட்சைத் தோட்டம் போடும் எதிர்காலத் திட்டம் அவனிடம் இருந்தது. இனி, அது சாத்தியம் இல்லை. அவன் உயிரின் விலை முப்பது அல்லது நாற்பது லட்சம்!

முருகேசனை வீல் சேரில் வைத்து ஆறாவது மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கவுன்டரில் டெபிட் கார்டு கொடுத்து ஐயாயிரம் கட்டினான். வார்டில் படுக்கை தயாராகிக்கொண்டு இருந்தது. சலைன் ஏற்றும் கம்பி ஸ்டாண்ட், தலைப் பாகம் உயர்த்தப்பட்ட கட்டில், ஆஸ்பத்திரி உடை. ஒரே நாளில் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது? மெத்தை பெட்ஷீட் மாற்றச் சொல்லிக்கொண்டு இருந்த செவிலியரிடம் ”சிஸ்டர், இங்கே ஒரு நாள் வாடகை எவ்வளவு?”

”கம்மிதாங்க. ஆயிரத்து இருநூறு!”

இன்னும் இரண்டு செவிலியர்கள் வந்தார்கள். ஒருவரின் கையில் தட்டு. அதில் ஊசி, மருந்து, பி.பி. பார்க்கும் கருவி. சடசடவென்று காட்சிகள் மாறின. படுக்கவைத்து ரத்த சாம்பிள்கள் எடுத்தார்கள். பி.பி. சரிபார்த்து, இரும்புச் சத்து ஐ.வி. மூலம் ஏற்றப்பட்டது. உப்பு போடாத இட்லி, காரம் இல்லாத சட்னி வந்தது. வாயில் வைக்க முடியவில்லை.

”படுத்துக்குங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ஃப்ளூயிட் சாம்பிள் எடுப்பாங்க. ரெஸ்ட் எடுங்க. வாமிட்டிங் சென்சேஷன் இருக்குதா?”

”இல்லை. சாப்பாடுதான் வாயில வைக்க முடியலை!”

”பொறுத்துக்குங்க. வேற வழி இல்லை.” படுத்துக்கொண்டான். எதிரே வலதுபுறம் ஒரு கல்லூரி மாணவன் சுருண்டு படுத்திருந்தான். நேர் எதிரே ஒருவர் காலில் பெரிய கட்டுடன் படுத்திருந்தார். அவனைப் பார்த்துச் சிரித்தார். இவனும் சிரித்தான். யாரோ ”நன்னு விடுச்சேய்… பயங்கா உந்தி!” என்று தெலுங்கில் அலறும் சத்தமும் தொடர்ந்து பலர் புலம்பும் ஓசையும் கேட்டது. எதிரே படுத்திருந்தவர்,”பக்கத்து வார்டு ஃபுல்லும் நியூரோ பேஷன்ட்டுங்க. ஆக்ஸிடென்ட், ஹெட் இஞ்சுரி. டார்ச்சர் தாங்க முடியாது. ராப்பூரா கத்திக்கிட்டே இருப்பானுங்க. உங்களுக்கு என்ன? ஐ யம் கதிரேசன்!” என்றார்.

”லிவர் சிரோஸிஸ்னு சொல்றாங்க. என் பேரு முருகேசன்.”

”நமக்கு ஷுகர். ஐநூறைத் தாண்டிடுச்சு. கால் கட்டை விரல்ல அடிபட்டு புண்ணு ஆறலை. பஸ் எடுக்கணுமாம். சப்ப மேட்டர். அதுக்குள்ள பத்தாயிரம் ரூபாயை முழுங்கிட்டானுவ. இன்ஷூரன்ஸ் இருக்குங்களா?”

”இல்லைங்க!”

”இல்லையா? சொத்தையே எழுதி வாங்குவானுங்களே? இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட்னு இழுத்து அடிப்பானுங்க. எல்லாத்துக்கும் மீட்டர் ஓடும். கந்து வட்டிக்காரனுங்களைவிட மோசம்ங்க!’ என்றவர் பேசிக்கொண்டே இருந்தார். எதிரில் இருந்த பையனும் லிவர் பாதிக்கப்பட்டவன்தான். ”ஹெப்படைடிஸ் பி கேஸ்… பாவம்” என்றார். உடனே நட்பாகி விட்டார். மறுபடி செவிலியர்கள் வந்து, ”ஃப்ளூயிட் எடுக்கப்போறோம். கொஞ்சம் வலிக்கும்” என்று சொல்லிவிட்டு, வயிற்றில் ஊசியைச் செருகி நீர் எடுத்தார்கள். வலி உடல் முழுவதும் பரவியது. பற்களைக் கடித்துக்கொண்டான்.

மதியம் 12 மணி அளவில் சீஃப் டாக்டர் ராவ், தன் ஜூனியர்கள் புடைசூழ விசிட் வந்தார். அவருடன் கூடவே மஞ்சுளாவும் இருந்தாள். அருகில் வந்தவர், அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார். சிரித்த முகம். சிவப்பாக மேல்நாட்டில் படித்தவர் போன்ற தோற்றம். வலது விரலில் மஞ்சள் கல்வைத்த மோதிரம். வெள்ளையும் கறுப்பும் கலந்த மீசை. பழைய இந்தி நடிகர் சஞ்சீவ் குமாரைப் போன்ற தலைமுடி. கண்ணியத்துக்கு உரியவர் போல் இருந்தார். கேஸ் ஷீட்டைப் புரட்டிப் பார்த்தவர் ”என்ன முருகேசன். அட்டெண்டர்ஸ் யாரும் இல்லையா?”

”வருவாங்க டாக்டர். அட்மிட் ஆவேன்னு நானே எதிர்பார்க்கலை!”

”ஆறு மாசம் முன்னாடியே அட்மிட் ஆகியிருக்க வேண்டியது. பெட்டர் லேட்!” கண்களைத் திறந்து பார்த்தார். ”உங்க பயோ கெமிஸ்ட்ரி, ஹெமட்டாலஜி ரிப்போர்ட் வந்திருக்கு. ஜாண்டிஸ் எக்கச்சக்கமா இருக்கு. எஸ்.ஜி.ஓ.டி. என்ஸைம் அளவும் நிறைய. ரத்தம் ப்ளேட்லட் லெவல் அபாயமா இருக்கு… 35,000. நார்மலா ஒரு லட்சத்துக்கு மேல இருக்கணும். காமா ஜி.டி., ஆல்கலைன், ஆல்புமின், குளோபுலின் எதுவுமே நார்மலா இல்லை. ஒண்ணு கூட இருக்கு… இல்லைன்னா கம்மியா இருக்கு. ஷுகர் லெவல் லோ. சிரோஸிஸ்ல அப்படித்தான் இருக்கும். தட்ஸ் டேஞ்சரஸ். இதெல்லாம் பேட் நியூஸ்!” என்று சிரித்தார்.

”ஒரே ஒரு ஆறுதல் செய்தி ஹெப்படைடிஸ் இல்லை. நெகட்டிவ்… அதுவும் இருந்திருந்தா, ஃபிரீஸர் பெட்டிக்குச் சொல்லிட வேண்டியதுதான்!” என்றவர், குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். கூட இருந்தவர்களும் சிரித்தார்கள். ”லிவர் ஃபங்ஷன், டெஸ்ட் எடுத்தாத்தான் தெளிவாத் தெரியும். பட் கிரானிக் ஸ்டேஜ். இனிமேல் டாஸ்மாக் பக்கமே போகாதீங்க. அது ஒயின் ஷாப் இல்லை… பாய்சன் ஷாப். கொஞ்ச நாள்ல தமிழ்நாடே லிவர் சிரோஸிஸ்ல மூழ்கப்போகுது. அரசாங்கமே காசு வாங்கிக்கிட்டு மக்களைக் கொல்லுது. இந்த நாடு எப்படி உருப்படும்?”

”டாக்டர் லிவர் மாற்று ஆபரேஷன் பண்ணியே ஆகணுமா?”

”யெஸ். அப்படித்தான் தெரியுது. வேற வழி இல்லை. அதுவரைக்கும் பொழைச்சி இருக்கணும்.”

”அவ்வளவு பணம் என்னால செலவு பண்ண முடியாது டாக்டர்!”

”அதைப் பத்தி இப்ப யோசிக்காதீங்க. கடவுள் யோசிச்சு வெச்சிருப்பாரு!” அருகில் குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்த ஜூனியர் டாக்டரிடம், என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று வேகமாகச் சொன்னார். அதில் அவர் அனுபவம் பளிச்சென்று தெரிந்தது. ”ராத்திரி மட்டும் தர்ட்டி எம்மெல் டுப்பெலாக் கொடுங்க. ஹி மஸ்ட் சீ எ டெர்மடாலஜிஸ்ட். காலையில எண்டோ, அல்ட்ரா சவுண்ட், சி.டி. மூணும் வெறும் வயித்துல எடுக்கணும். முருகேசன் சில மாத்திரைகள் தருவாங்க. நிறைய மூத்திரம் போகும். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா, ஃப்ளூயிட் வெளியே போகும். நல்லது கெட்டது எல்லாம் பிச்சுக்கிட்டுப் போகும். அதனால, ஸ்டாமினா குறையும். பயந்துராதீங்க. தைரியமா இருங்க. இனிமேல் நான்-வெஜ் வேண்டாம். நம்ம ஊர்லதான் எல்லாரும் தீனிப் பண்டாரம். உலகத்துல எங்கேயும் இங்கே மாதிரி ஸ்பைஸி ஃபுட் கிடையாது. எதைத் தின்னாலும் உப்பு, காரம், புளிப்பு. எண்ணெயைக் கொட்டி, மைதாவுல வாழைக்காயை முக்கி எடுத்து, பஜ்ஜி போடுறது எல்லாம் வெளிநாடுகள்ல கிடையாது. ஃபுட் ஹேபிட்டை மாத்திக்குங்க. டயட்டீஷியன் வந்து சொல்லுவாங்க. நாளைக்குப் பார்க்கலாம்” என்றவர், அடுத்து கதிரேசனைப் பார்க்கப் போனார்.

கதிரேசனுக்கு அருகில் இருந்த வேட்டி கட்டிய ஐம்பது வயதுக்கு உட்பட்டவர் டாக்டருக்கு வழிவிட்டு பவ்யமாக நின்றார். ”ஹலோ கதிரேசன்… இன்னும் தலைகாணிக்கு அடியில பன் பட்டர் ஜாம் ஒளிச்சி வெச்சி சாப்பிடறீங்களா? காபிக்கு சர்க்கரை போட்டே ஆகணும்னு நேத்து ரகளை பண்ணீங்களாமே? பின்னிடுவேன் பின்னி. லேட்டஸ்ட் ஷுகர் அளவு என்ன தெரியுமா? 490. காலை வெட்டி எடுக்கணுமா?”

”நீங்க இருக்கும்போது நான் எதுக்கு டாக்டர் கவலைப்படணும்?” என்றார் கதிரேசன். ஒவ்வொருவராக ஏறக்குறைய அரட்டை அடித்துவிட்டுப்போனார் டாக்டர் ராவ்.

கதிரேசன் தன் முன்னால் நின்றிருந்த வேட்டி மனிதரிடம் ”உங்ககூட பெரிய ரோதனை மாமா. நாந்தான் உங்க வைத்தியம் வேணாம்னு சொல்றேன்ல? எனக்கு அலோபதிதான் நம்பிக்கை. உங்க எலை, தழை, கஷாயம் எல்லாம் சாப்பிட முடியாது” என்று எரிந்து விழுந்தார். கதிரேசனின் மனைவி அவருடைய காலைப் பிடித்துவிட்டுக்கொண்டு இருந்தார்.

வேட்டி மனிதர் அவருடைய மாமா போலும். ”மாப்ள… சர்க்கரை ஒரு வியாதியே கிடையாது. அது கம்ப்ளைன்ட். லைஃப்ஸ்டைலை மாத்தி, கொஞ்சம் மருந்து, உடற்பயிற்சி, உணவு முறைனு கடைப்பிடிச்சாப் போதும். நீங்க அலோபதியை நிப்பாட்ட வேணாம். கூடவே நான் சொல்றதையும் கேளுங்க.”

”டயம் ஆச்சு கிளம்புங்க. சிறுகுறிஞ்சான், கடுக்காய், நவதானியக் கஞ்சினு தூங்குற நேரத்துல பேசிக் கடுப்பேத்தாதீங்க.”

”நீங்க கிளம்புங்கப்பா. அவரு யார் பேச்சையும் கேக்க மாட்டாரு.”

அவர் ஏதும் பேசாமல், எந்த உணர்ச்சியும் காட்டாமல் தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். சித்த வைத்தியராக இருக்க வேண்டும் என்று யூகித்தான் முருகேசன். ”என்ன பார்க்கறீங்க… என் மாமாதான். பதினெண் சித்தரையும் கரைச்சிக் குடிச்சவரு. ஆனா, கொல்லி மலையில இருக்க வேண்டியவரு. இந்தக் காலத்துல அதெல்லாம் வேலைக்கு ஆகுமா? ஒரு இன்சுலினைப் போட்டா, கழுதை சர்க்கரை ஓடப்போகுது. அதுக்குப் போய்… குட் நைட்டுங்க… தூக்கம் வருது” என்று திரும்பிப் படுத்துக்கொண்டார். கல்லூரி மாணவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு குறுகிப் படுத்திருந்தான். அவனுடைய அம்மா கண்களை மூடி, கைகளால் இறைஞ்சி கடவுளிடம் பிரார்த்தித்துக்கொண்டு இருந்தாள். முருகேசனுக்குத் தூக்கமே வரவில்லை. கற்பனைகள் தாறுமாறாக ஓடின. நாற்பது லட்சம் எல்லாம் செலவு செய்ய முடியாது. இயலாது என்று தீர்மானமாக முடிவு செய்தான். எவ்வளவு நாள் இருக்கப்போகிறோமோ தெரியாது. அதுவரை எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவும் சம்பாதித்து, தமிழிடம் கொடுத்துவிட வேண்டும். மிச்சம் இருக்கும் கடமை அது ஒன்றுதான்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுப்பி ரத்தம் எடுத்து பி.பி. செக் செய்தார்கள். உடை மாற்றச் சொல்லி, ஸ்கேனிங் டெஸ்ட் எடுக்க அழைத்துச் சென்றார்கள். பலி ஆடுபோல் உணர்ந்தான். அல்ட்ரா சவுண்டில் வயிற்றில் ஜெல் தடவி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் பார்த்தார்கள். கொஞ்சம் ஜில்லென்று சுகமாகத்தான் இருந்தது. டெஸ்ட் எடுத்த டாக்டர் அடிக்கடி அவனைத் திரும்பிப் பார்த்தது கலவரமாக இருந்தது. அங்கு இருந்து எண்டாஸ்கோபிக்கு அனுப்பினார்கள். கொஞ்சம் வலிக்கும் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்து, பற்களுக்கு இடையே கடித்துக்கொள்ள தகட்டை வைத்து, சிறிய கேமரா வைத்த கம்பியை ஒரு பெண் அவன் வாயைத் திறந்து தொண்டைக் குழிக்குள் இறக்கினாள். முருகேசனுக்கு அலற வேண்டும்போல் இருந்தது. கேமரா கம்பி உள்ளே உள்ளே சென்று அவனுடைய லிவரை ஆராய்ந்து, படமாக எடுத்துத் தள்ளியது. ஒரு சில நிமிடங்களில் அந்த டெஸ்ட் முடிந்து, அடுத்து சி.டி. ஸ்கேன். படுக்கையில் படுக்க வைக்க, அது மெள்ள நகர்ந்து அரை வட்ட ஆர்ச்சின் அருகே அவன் வயிற்றைப் பார்க் செய்தது. ‘லேசர் ரேடியேஷன். அதையே பார்க்க வேண்டாம்’ என்று அதில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. கண்களை மூடிக்கொண்டான். எல்லாமே பல கோடி ரூபாய் பெறுமானம் உள்ள மெஷின்கள். இதன் முதலீடு, மெயின் டெனன்ஸ், வருமானம் எல்லாம் முருகேசன்களிடம் இருந்துதான் பிடுங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். கஷ்டமோ, நஷ்டமோ ஒரு இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்து இருக்கலாம் என்று காலம் கடந்து யோசித்தான். ”அவ்வளவுதான் மிஸ்டர் முருகேசன். நீங்க வார்டுக்குத் திரும்பலாம். ரிப்போர்ட்ஸ் டாக்டர்கிட்ட போயிடும்!”

அன்று மாலை டாக்டர் ராவின் அறைக்கு முருகேசன் அழைத்துச் செல்லப்பட்டான். ஏ.சி. அறை பயங்கர சில்லென்று இருந்தது. அங்கே மஞ்சுளாவும் இருந்தாள். அவர் முன்னால் முருகேசனின் டெஸ்ட் ரிப்போர்ட்டுகள் கிடந்தன. டாக்டர் ராவ் தன் லேப்டாப்பில் நெட்டை மினிமைஸ் செய்துவிட்டு ‘முருகேசன் நான் ஸ்ட்ரெய்ட்டா பேசக் கூடிய டாக்டர். டைம் வேஸ்ட் பண்றதால பிரயோஜனம் இல்லை. உங்க லிவர் கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் கெட்டுப்போயிருக்கு. இனிமேல் அது ஸ்கிராப்தான். மஞ்சக் காமாலை, ஷுகர் டபுள் அட்டாக் வேற. சாப்பாடும் கன்ட்ரோல் இல்லாம இருந்ததால, எல்லாம் சேர்ந்து லிவரைக் காலி பண்ணிடுச்சு. பொய் சொல்ல விரும்பலை. போர்ட்டல் வெயின் ரொம்ப டயலேட் ஆகி எப்ப வெடிக்குமோனு இருக்கு. மருந்துனால சரிபண்ண முடியும்னு உங்களை ஏமாத்தலை. அந்த லிவரைத் தூக்கிப் போட்டுட்டு புதுசு பொருத்தறதுதான் ஒரே வழி!’

டாக்டர் மஞ்சுளா, ‘இன்ஃபெக்‌ஷன் பரவிடுச்சுன்னா, இன்னும் ரிஸ்க். ஸ்ப்ளீன், பாங்கிரியாஸ் ரெண்டும் எப்ப வேணா அஃபெக்ட் ஆகும். சிறுநீரகமும் டேஞ்சர் ஜோன்ல இருக்கு. இத்தனை நாள் எப்படி நடமாடினார்னே ஆச்சர்யமா இருக்கு’ என்றாள். முருகேசனுக்குக் கதிகலங்கியது.

‘வேற வழியே இல்லையா டாக்டர்?’ என்றான் பரிதாபமாக.

‘இருந்தா சொல்ல மாட்டோமா? டாக்டர் மோகன் குமார்னு லிவர் டிரான்ஸ்பிளான்டேஷன் ஸ்பெஷலிஸ்ட். இந்தியாவுலயே பெஸ்ட். ஆனா, தானம் கொடுக்கிறவர் கிடைக்கிற வரைக்குமோ மூளைச் சாவு கேஸ் கிடைக்கிற வரைக்குமோ வெயிட் பண்ணணும். அதுவே போனஸ் நாட்கள்தான்.’

முருகேசன் தீர்மானமாக, ”இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லிடுங்க டாக்டர். நாங்களெல்லாம் வேற வர்க்கம். இதுக்கெல்லாம் அவ்வளவு செலவழிக்க முடியாது. பணக்காரங்களுக்கு வர வேண்டியது எனக்குத் தெரியாம வந்திடுச்சி. என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும்!’ என்றான்.

டாக்டர் ராவ் லேசான குற்ற உணர்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்து ”வாட் யூ ஆர் சேயிங் இஸ் எ ஃபேக்ட் முருகேசன். ஆனா, உயிர் ரொம்ப முக்கியம் இல்லையோ. நாப்பது லட்சத்தைச் சம்பாதிச்சிட மாட்டீங்களா? உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு!”

‘வேணாம் டாக்டர். அப்படிச் சம்பாதிக்க ஏதாவது அதிசயம் நடக்கணும். லாட்டரியைக்கூடத் தடை பண்ணிட்டாங்க. நீங்கள்லாம் கார்ல் மார்க்ஸ் படிச்சிருக்க மாட்டீங்க. அவரு என்ன சொல்றாரு தெரியுமா? ‘மூலதனம்கிறது ரத்தம் குடிக்கிற வவ்வால் மாதிரி. உயிர் வாழும் உழைப்பாளிகளோட ரத்தத்தை அது உறிஞ்சிக் குடிக்கும். எவ்வளவு ரத்தம் குடிக்குமோ, அவ்வளவு நாள் உயிர் வாழும்.’ உங்க மூலதனத்துக்கு ரத்தம் தேவை. அதை என்னால கொடுக்க முடியாது. என்னை உடனே டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க ப்ளீஸ்!’

டாக்டர் ராவும் மஞ்சுளாவும் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். இப்படிப் பேசுவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மஞ்சுளா கடுப்பாக ‘ரொம்ப டூ மச்சாப் பேசறாரு… டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர்…’ என்றாள்.

டாக்டர் ராவ் அவன் கோபத்தைப் புரிந்துகொண்டு ‘எல்லாத்தையும் நெகட்டிவ்வா பார்க்காதீங்க. ஆத்திரப்பட்டுப் பிரயோஜனம் இல்லை முருகேசன். தட்ஸ் தி சிஸ்டம் ஹியர். இதுவே கனடாவாவோ, கியூபாவாவோ இருந்தா… அரசாங்கமே செலவை ஏத்துக்கும். பட்… ஹியர்…”

‘ப்ளீஸ் டாக்டர் கோபப்பட்டதுக்கு மன்னிச்சிருங்க. என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க. நான் எல்லாத்துக்கும் தயாராயிட்டேன்.’

‘ஒரு மூணு நாள் மட்டும் ஸ்டே பண்ணுங்க. வீக்கத்தை எல்லாம் குறைச்சி, ப்ளேட்லட் ஏத்தி… கொஞ்சம் சரிபண்ணி அனுப்பறோம்!’

‘சரி டாக்டர்!’

வீல் சேரில் சென்ற முருகேசனைப் பரிதாபமாகப் பார்த்தார் டாக்டர் ராவ். மஞ்சுளா தோள்களைக் குலுக்கிக்கொண்டாள். ‘ரொம்ப நாள் தாங்க மாட்டான் பாவம். உண்மையிலேயே பணத்துக்கு என்ன பண்ணுவான்? என் கணிப்புப்படி மூணு மாசம் தாங்கினா அதிகம்’ என்றார் ராவ். இன்டர்காமில் கேஷ் கவுன்ட்டரை அழைத்து ‘தங்கமணி, வார்டு ஆறுல பெட் நம்பர் 126. பேஷன்ட் பேரு முருகேசன். டிஸ்சார்ஜ் பண்ணும்போது ஃபிஃப்டி பெர்சென்ட் ஃபீஸ் குறைச்சிடுங்க’ என்றார். பெருமூச்சுவிட்டார்.

முருகேசன் உடல் முழுக்க அடிபட்டவன்போல் மறுபடி வார்டு திரும்பினான். முதலாளியை போனில் அழைத்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கும் விஷயத்தைச் சொல்லி பத்தாயிரம் கேட்டான். கொடுத்து அனுப்புவதாகச் சொன்னார். சிரோஸிஸ் என்பதைச் சொல்லவில்லை. தமிழரசியைக் கூப்பிட்டபோது அவளுடைய ‘ஹலோ’ என்கிற குரலைக் கேட்டு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவள் மடியில் படுத்து அத்தனையும் சொல்லிக் கதற வேண்டும் போல் இருந்தது. சொல்லாதே!

‘தமிழ் எப்படி இருக்க? சின்னதா ஃபுட் பாய்சனிங் ஆயிடுச்சு. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கச் சொல்றாங்க. அட, பதறாத. பயப்பட எல்லாம் ஒண்ணும் இல்லை. நீ எல்லாம் வர வேண்டாம். நானே சரியானதும் வர்றேன். குழந்தைங்க ஸ்கூலுக்குப் போயிடுச்சா?’ என்றபோது கண்களில் நீர் வழிந்தது. எதிரே கதிரேசன் அருகே இருந்த மாமா அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார். முருகேசன் போன் பேசி முடித்ததும், அவனிடம் வந்தார். ‘என்ன சொல்றாங்க டாக்டர்ஸ்? என் பேரு வள்ளிநாயகம். சித்தா டாக்டர்’ என்று கை கொடுத்தார்!

டாக்டர் ராவ் ஜெனிவாவில் ஹெப்பாடாலஜி மாநாடு முடிந்து சென்னை திரும்பி, ஏர்போர்ட்டில் இருந்து காரில் வந்துகொண்டு இருந்தார். பேத்திக்காக ஏகப்பட்ட பொம்மைகளும் பரிசுகளும் வாங்கியிருந்தார். உடல் மிகச் சோர்வாக இருந்தது. ஹைப்பர்டென்ஷன் அவருக்கு உண்டு. பி.பி. செக் செய்ய வேண்டும். லீ மெரிடியனை காரில் தாண்டியபோது இடதுபுறம் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்த ஒருவனைப் பார்த்தார். அது முருகேசன் அல்லவா? அவன்தானே?

‘டிரைவர் காரை அந்த சைக்கிள் முன்னால நிறுத்து.’

கார் சைக்கிளை மறித்து நின்றது. காரில் இருந்து அவசரமாக இறங்கி ‘முருகேசன் என்னைத் தெரியுதா? டாக்டர் ராவ்.’

”ஹலோ டாக்டர் எப்படி இருக்கீங்க?” முருகேசன் மலர்ச்சியாகச் சிரித்தான். சற்று சதை போட்டு, ஆரோக்கியமாகத் தெரிந்தான். அவன் கண்கள் மஞ்சள் நீங்கி வெண்மையாக ஒளிர்ந்தன. வயிறு ஒட்டியிருந்தது. சாதாரண ஹவாய் செருப்புதான் போட்டிருந்தான். அதன் வழியே அவன் பாதங்கள் நரம்புகளோடு தெரிந்தன. டாக்டர் ராவ் நம்ப முடியாமல் பார்த்தார். ‘நான் உங்களைப் பார்த்து ஒரு வருஷம் இருக்குமா?’

‘ஒன்றரை வருஷம் ஆச்சு டாக்டர்’ என்று சிரித்தான்.

‘கொஞ்சம் காருக்குள்ள வாப்பா. பேசணும்’ என்றார்.

காருக்குள் நுழைந்து உட்கார்ந்தான். ‘என்ன விலை சார் இந்த கார்? பத்து லட்சம் இருக்குமா?’

‘அதை விடுப்பா. ஹவ் இஸ் இட் பாஸிபிள்? ரொம்ப ஹெல்த்தியா இருக் கீங்க. என்ன ட்ரீட்மென்ட் எடுத்தீங்க? லிவர் டிரான்ஸ்பிளான்டேஷன் பண்ணிட்டீங்களா?’

‘அதே பழைய லிவர்தான் சார். ரொம்ப விசுவாசி. நல்லா உழைக்குது. எல்லாம் நம்ம ஊர் வைத்தியம் சார். சித்தா. கொஞ்சம் அலோபதி. ரெண்டும் மிக்ஸ் பண்ணி புது வைத்தியம்.’

‘எனக்கு ஒண்ணுமே புரியலையே’ என்றார் ஹேமநாத பாகவதர்போல.

‘சொல்றேன் சார். எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு. டாக்டர் வள்ளிநாயகம்னு ஒரு சித்தா டாக்டரைச் சந்திச்சேன். எந்த வைத்தியத்தையும் குறை சொல்லாத அபூர்வமான டாக்டர். என்னை அப்படியே முழுசா அவர் கன்ட்ரோல்ல எடுத்துக்கிட்டாரு.

ஆடாதொடை, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி… அதோட அலோபதி மாத்திரை பேக்கேஜ்ல முதல்ல மஞ்சக் காமாலையையும் ப்ளேட்லட்டையும் கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்தாரு. சாப்பாட்டு முறையை முழுக்க மாத்தினாரு. உப்பு, எண்ணெய், காரம் பக்கம் போக விடலை. டெய்லி கொஞ்சம் எக்சர்சைஸ். அப்புறம் லிவருக்கு வந்தாரு. நீங்க லிவர் வேஸ்ட் ஆயிடுச்சி, அதைத் தூக்கிப் போடணும்னு சொன்னீங்க. அவரு பதினஞ்சு பெர்சென்ட் லிவர் சரியா வேலை செஞ்சாலே வாழ முடியும்னாரு. ஏகப்பட்ட சித்தா, அலோபதி மாத்திரை, கஷாயம்னு கொடுத்தாரு. மனசை சந்தோஷமா வெச்சுக்கணும்னு பொண்டாட்டிக்கிட்ட உண்மையைச் சொல்லி, லீவு போட்டுட்டு குழந்தைகளோட வரச் சொன்னாரு. டிரீட்மென்ட்டை ரெண்டாப் பிரிச்சு, கெட்டுப்போன லிவருக்கு கொஞ்சமா உயிர் கொடுக்கிற முதல் முயற்சி. மிச்சம் இருக்கிறதை நல்லா ஃபங்ஷன் பண்ணவெக்கிறது ரெண்டாவது. அடிக்கடி பிலுருபின் டெஸ்ட் பண்ணிக் கண்காணிச்சாரு. சில அலோபதி டாக்டர்ஸையும் கன்சல்ட் பண்ணிக்கிட்டே இருந்தாரு. மாசம் ஆயிரம் ரூபாதான் மருந்து செலவு டாக்டர். லிவர் கொஞ்சம் கொஞ்சமா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி. சைடு எஃபெக்ட் இல்லாத மருந்து.

டாக்டரோட முதல் கடமை பேஷன்டைப் பயமுறுத்தாம நம்பிக்கை கொடுக்கிறதுதான்னு அடிக்கடி சொல்வாரு. நீங்க எல்லாம் நான் செத்துப்போயிடுவேன்னு முகத்துல அடிச்சாப்ல சொன்னீங்க. நீங்க நல்லா உயிர் வாழ்வீங்கன்னு அவர் சொன்னாரு. அவர்கிட்டே சரணாகதி அடைஞ்சேன். இப்ப லேட்டஸ்ட் பிலுருபின் டெஸ்ட்படி எல்லா பாராமீட்டர்ஸும் நார்மலா இருக்காம். கம்பெனி வேலை முடிஞ்சதும் அவர்கிட்ட அசிஸ்டென்டா வேலை பார்க்கிறேன். ஏதோ நம்மால முடிஞ்ச ஹெல்ப்’ என்றான் முருகேசன்.

‘திஸ் மஸ்ட் பி எ மிராக்கிள்’ என்றார் டாக்டர் ராவ். அவர் கைகள் லேசாக நடுங்கின.

‘உங்களுக்கு ரத்தக் கொதிப்பு இருக்கா டாக்டர்? சிம்ப்டம்ஸ் அப்படி இருக்கு. காலையில எழுந்ததும் தலைவலி, தலைசுத்தல் இருக்கா? கை கால்ல மதமதப்பு? காலையில முருங்கைக் கீரை சூப், சாப்பாட்டுல வாழைத் தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி நிறையச் சேருங்க. உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை. இஞ்சி சாறோட சீரகம் மிக்ஸ் பண்ணிச் சாப்பிட்டா ரொம்ப நல்லது. வெள்ளைத் தாமரை கேள்விப்பட்டிருக்கீங்களா?’ பேசிக்கொண்டே போன முருகேசனை பிரமித்தபடி பார்த்தார் டாக்டர் ராவ்!

– திரு.கிருஷ்ணா டாவின்சியின் கடைசி சிறுகதை. இக்கதை வெளியான சமயம் அவர் நம்முடன் இல்லை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “காலா… அருகே வாடா

  1. மனதை கொலை கொண்டது …….உண்மை உரைத்தது …………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *