காணாமற் போனவர்கள்

 

எங்களை, ‘ வயலினின் மூன்று தந்திகள், என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், அதுதான் அன்று உண்மை.

அந்த மூன்றில் கொஞ்சம் முரட்டுத்தனமாகப் பேசுகிற தந்தி – அருணா.

ஆளைப் பார்த்தால் அந்த முரட்டுத்தனம் தெரியாது. முகத்தில் எப்போதும் பூ மலர்ந்திருக்கும். வாடவே செய்யாத சூரியகாந்திப் பூ. உற்றுப் பார்ப்பவர்களுக்குக் கண்ணில் குறும்பு மிதப்பது தெரியும். பின்னால் இருந்து பார்த்தால் நடையில் குதிரை தெரியும்.

குதிரை இவளானால் அதன்மீது அமர்ந்து போகிற இளவரசி என்று கீதாவைச் சொல்ல வேண்டும்.

இந்திராகாந்தி மாதிரிக் கூர்மையான பார்சி மூக்கு, முகத்தில், பேச்சில் அதே கம்பீரம். விஷயங்களைத் திட்டமிடுவதில் ஒரு துல்லியம். செயல்படுவதில் துணிச்சல்.

இந்த இரண்டு பேருக்கும் சேடி – நான்.

நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து அடித்த லூட்டியை எங்கள் கல்லூரி சுவறில் காது வைத்தால் இன்றும் கேட்கலாம்.

எங்களை ஒன்று சேர்த்த புண்ணியம் பாரதியாருடையது. அவர் நினைவு நாளன்று கல்லூரியில் ஒரு கவிதைப் போட்டி நடக்கும். எங்கள் கல்லூரி ஆண் – பெண் படிக்கும் இருபால் கல்லூரி. பாரதியார் தினம் என்றாலும் பெண்களை வாயைத் திறக்கவிட மாட்டான்கள் பசங்கள். எவ்வளவு உயரிய கவிதை என்றாலும், ஓ வென்று கூச்சல் கிளம்பும். காகித அம்புகள் புடவை மடிப்பில் வந்து செருகும்.

விபரம் தெரிந்த சீனியர்கள், போட்டி நடக்கும் பக்கமே தலை வைக்க மாட்டார்கள். நான் புதிது. கல்லூரியில் நுழைந்த முதல் வருடம் பள்ளியில் ‘ கப் ’ வாங்கிய பெருமிதம். பாரதியாரைத் தகப்பன் போல் நேசிக்கிற சந்தோஷம். கவிதை எனது என்று பொங்குகிற உற்சாகம். பெயர் கொடுத்து விட்டேன்.

மேடையேறி வரும்போதே சீழ்க்கை ஒலி ஆரம்பம் ஆயிற்று.

“ பாரதி பாரதி பா ரதத்தில் வந்தான் என்றால்…. ” என்று ஆரம்பித்தேன். கூட்டத்திற்கு இந்தச் சொற்சிலம்பம் புரியவில்லையோ, இல்லை அதன் வழக்கமான வெறியோ, ஏன் என்று தெரியாமல் ‘ ஓ ! ” என்று இரைந்தது. ‘ சீரதிரச் செயல்கள் செய் சிறுமை மங்கும் ’ என்ற இரண்டாவது வரியில் என் தொண்டை கம்மிற்று. காரணமில்லாமல் அழுகை வந்தது.

என் அழுகையைக் கண்டு கூட்டத்திற்கு கன உற்சாகம். மிரளுகிற மாட்டை விரட்டுவது போல் துரத்தியது. ஒரே சீராக கைகொட்டித் தாளம் போட்டது.

அப்போதுதான் –

கீதா விடுவிடுவென்று மேடையேறி வந்தாள். என் அருகே வந்து கை நீட்டினாள். அந்த ராஜ நடை, மிடுக்கு, இவற்றைக் கண்டு என்னையறியாமல் என்னிடமிருந்த காகிதங்களை அவளிடம் நீட்டினேன். அவள் மைக் முன் வந்து கணீரென்ற குரலில், ‘ நேரெதிரே நின்று நேயம் பெருக்காத நெஞ்சக் காமம் சாகும் ’ என்று தொடர்ந்தாள்.

அவளது கணீர் குரலையும், கம்பீரத்தையும் கண்ட கூட்டம் அரை நிமிடம் சும்மா இருந்தது. பின் மறுபடியும் கூச்சல் கிளம்பிற்று. கீதா உதட்டில் விரல் வைத்து, மைக்கில் “ உஸ்ஸ் ! ” என்றாள். ஒரு விநாடி அடங்கியது கூட்டம். அடுத்த கணம், மூலைக்கு மூலை உஸ் உஸ் என்று பாம்பு சீறியது. இடதுபுற மூலையில் இருந்து சரமாரியாக காகித அம்புகள் கிளம்பின. அங்கே உற்சாகம் கரைபுரண்டு, உச்ச நிலையை எட்டிய தருணத்தில் அவர்கள் நடுவில் ஒரு செருப்பு வந்து விழுந்தது.

குதிகால் உயர்ந்த, பெண்கள் அணியும் செருப்பு !

இடதுபுற மூலை இந்தத் தாக்குதல் கண்டு முதலில் திகைத்தது. வந்தது பெண்கள் செருப்பு என்று கண்டு கொண்டதும் கொதித்தது. பெண்கள் பக்கம் பாயத் தயாரான நிமிடம் திமுதிமுவென, மாணவிகள் இடத்தைக் காலி செய்ய, முறுக்கு மீசையும், முண்டாசுத் தலையுமாக இந்த அக்கிரமத்தை பாரதியார் படத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க விழா முடிந்தது.

விழா நடைபெற்ற கூட்டத்தில் இருந்து நாங்கள் மூன்று பேரும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். கீதாதான் முதலில் கவனித்தாள்.

“ என்னடி ! வெறும் காலோட வந்திருக்க … ” அருணா பதில் பேசாமல் தன் கைப்பையைத் திறந்து காண்பித்தாள். ஒரே ஒரு ஒற்றைச் செருப்பு – குதிகால் உயர்ந்த பெண்கள் செருப்பு அதனுள் இருந்தது.

“ அப்படீன்னா … நீயா … ? ”

ஆமாம் என்று அருணா தலையை அசைத்தாள்.

“ அடிப்பாவி ! என்ன துணிச்சல் ! ”

“ கீதா ! இது துணிச்சல் இல்லை ! கோழைத்தனம். கூட்டத்தில் புகுந்து, முகம் தெரியாம, கைல கிடைச்சதை எடுத்து வீசறது இருக்கே, அதில என்ன சூரத்தனம் இருக்கு ? நீ பண்ணினியே அது சரியான பாரதியார்தனம். கிண்டல், கேலி, எல்லாத்தையும் கால்லே போட்டு மிதிச்சுகிட்டுப் போய், அத்தனை கூச்சலுக்கு நடுவிலேயும் கடைசி வரி வரை பாடி முடிச்ச பாரு, தட் இஸ் கிரேட் ! ஆனா அந்த ராட்சஸன்கள் நடத்தின அமர்க்களத்திலே எனக்கு வேற ஒண்ணும் செய்யத் தோணல ! இவனுக பொட்டைப் பிள்ளைகளையே பார்த்தது இல்லியா ? ஆரோ அடிச்சா சூரனென்று நினைப்பா ? அவ அவ மயங்கி அப்படியே மாலையைப் போட்டுடுவான்னு கனவா ? கவிதை படிக்கிறவள்னா சுலபமா படுக்க வைச்சிடலாம்னு சபலமா ? எனக்கு வெறி மாதிரி வந்திடுச்சு. என்ன செய்யறதுன்னு புரியல ! கால்ல இருக்கிறதைக் கழட்டிட்டேன் ! ”

அதற்குப் பிறகு எங்களைப் பிரிக்கவே முடியவில்லை.

நவநீதம் தாலாட்டும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி வகுப்பில், கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கவிதை எழுதியிருக்கிறோம். பாட்டனி வகுப்பில் ரப்பரைத் தொடாமல், ரிக்கார்டு வரைந்திருக்கிறோம். அவசரத்திற்கு பெட்டிகோட்டை மாற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறோம். பரீட்சை ஹாலில் ஆன்ஸர் பேப்பர்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். மணியார்டர் ஃபார்மில் மாற்றி கையெழுத்துப் போட்டுப் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

இந்த மூன்று வருடங்களில் ‘ எங்களுடையது ’ என்று எதுவும் இருந்ததில்லை. எல்லாம் நம்முடையதுதான். அப்படி ஒருவரோடு ஒருவர் இறுகிக் கொண்டிருந்தோம்.

அருணாதான் முதலில் கரைய ஆரம்பித்தாள்.

ஆம் ! காதல் ! அந்த வயதின் கன்றுக்குட்டி காதல். ஹார்மோன்கள் நிகழ்த்தும் ரசாயன மாற்றம்.

காதல் தோல்விகளுக்கெல்லாம் காரணம் பெண்கள் என்ற ரீதியில் எவனோ ஒரு தேவதாஸ், கல்லூரி சஞ்சிகையில் கவிதை எழுதினான். அருணாவிற்குத் தாங்க முடியவில்லை. விறுவிறுவென்று ஒரு கடிதம் எழுதினாள். அமிலம் தோய்ந்த கடிதம். அமிலத்திற்குப் பதிலாக, அவனிடம் இருந்து ஒரு ரோஜாப் பூ வந்தது. ஆதாரம், தர்க்கம் என்ற அறிவுசார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லாமல், அழகாய் வாசனை அடிக்கிற ரோஜாப் பூ. அதற்கு அருணா பதில் எழுதினாள்.

ஆனால் இந்த முறை அதில் அமிலம் இல்லை. வெறும் தண்ணீர். ஜில் என்ற தண்ணீர். அதற்கும் ஒரு ரோஜாப் பூ பதில். தாங்க முடியவில்லை. அருணா விழுந்து விட்டாள்.

தாங்க முடியாத கட்டத்தைக் காதல் அடைந்ததும், தகராறுகள் எழுந்தன. ஊருக்குச் சேதி போய் குடும்பம் மொத்தமும் இங்கு வந்தது. பெண் சுதந்தரமாய் முடிவு எடுப்பது, அண்ணன்மாரைக் கிழித்தது. ஜாதி என்ன என்று தந்தை மனம் கேட்டது. கூட இருந்தே குடியைக் கெடுத்து விட்டோம் என்று பெற்ற வயிறு எங்களைப் பார்த்து சீறிற்று.

அமளி என்று வந்தபிறகு, அருணா இறுகினாள். புயலோ மழையோ, ஆங்காரமோ அசைக்க முடியாத பாறையாக இறுகினாள்.

ஆனால், தேவதாஸ் தயங்கினான். சண்டை கண்டு சற்றுக் குழம்பினான். வாழைப்பழம் போல் குழகுழத்துப் போனான்.

அர்த்தமில்லாத குழப்பத்தைக் கண்டு கீதாவிற்கு ஆத்திரம் வந்தது. யாரும் கேட்காமல் சிக்கலைப் பிரிக்கிற பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டாள். அருணாவிற்காக அவள் யோசித்தாள். அருணாவிற்காக அவள் முடிவெடுத்தாள்.

“ அருணாவின் முடிவு தவறு. அவளைப் போன்ற குதிரைக்கு ஒரு அலெக்ஸாண்டர் அமைந்திருக்க வேண்டும். ஆனால், தெனாலிராமன் தான் கிடைத்தான். இது விதியின் குறும்பு. ஆதாரமான தவறு. ஆனால், இனிப் பேசிப் பயன் இல்லை. பேசப்பேச அவள் பாறையாவாள். தான் செய்தது சரி என்று சாதிக்க முற்படுவாள். இனிமேல் இதில் அறிவுக்கு வேலை இல்லை. உணர்ச்சிக்குத்தான் இடம். அவள் சந்தோஷம் முக்கியம். இப்போது உன்னிடம் எவ்வளவு தேறும் ? ’

‘ ஐம்பது ரூபாய் ” என்ற என்னை எரித்தாள். எதுவும் பேசாமல் கையில் இருந்த வளையலைக் கழற்றினாள். விற்றாளா அடகு வைத்தாளா என்று எனக்கு இன்று வரை தெரியாது. இரண்டாயிரம் ரூபாய் பணத்துடன் திரும்பி வந்தாள். அங்கே இங்கே என்று பீராய்ந்து இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் திரட்டினாள்.

அருணாவின் கல்யாணம் நடந்தது. வாழை மரம், நாதஸ்வரம் என்ற அமர்க்களங்கள் இல்லாமல், பட்டுப் புடவை, ஜரிகை மாலை, மஞ்சள் வேட்டி என்று பதிவாளர் முன்பு நடந்தது. சட்டத்தின் ரிக்கார்டுகளில் கையெழுத்திட்டு அருணா திருமதியானாள்.

அருணாவின் கல்யாணம் நடந்த விதத்தைக் கேள்விப்பட்ட எங்கள் தந்தைமார்கள் அதி ஜாக்கிரதையானார்கள். கல்லூரியை முடித்து காம்பவுண்டிற்கு வெளியே வந்ததும் கட்டுப் போட ஏற்பாடு செய்தார்கள்.

பிறந்ததில் இருந்து பேசப்பட்ட என் மாமா பிள்ளைக்கு என்னை முடிச்சுப் போட்டார்கள். கல்யாணத்திற்கு அருணா வரவில்லை. தந்தி, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இதற்கு ஒரு போஸ்ட் கார்டில் அவள் கைபட நாலுவரி எழுதியிருக்கலாம். எனக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

கீதா எழுதியிருந்தாள். பேங்க்கில் வேலை கிடைத்து பெல்காமிற்குப் பக்கத்தில் ஆட்டு லோன் விநியோகித்துக் கொண்டிருப்பதாக. டிரெயினிங் பீரியட் என்பதால் லீவு போட முடியாது என்பதாக. கணவனை அழைத்துக் கொண்டு ஹனிமூனுக்கு வரவேண்டும் என்பதாக.

அதற்குப்பின் இரண்டு வருடம் எந்தத் தகவலும் இல்லை. அப்புறம் அவள் கல்யாணப் பத்திரிகை வந்தது.

அது அறிவுப் பூர்வமாகத் தீர்மானித்த கல்யாணமா என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் கல்யாணத்திற்குப் போகவில்லை. கவிதை எழுதி அனுப்பி இருந்திருக்கலாம். என்னுடைய மாமனார் கால் முறிந்து, ஆஸ்பத்திரியில் கிடந்த நேரம் அது. அந்த களேபரத்தில் ஒரு வாழ்த்துத் தந்தி கூட அனுப்பவில்லை. ’

ரகளையில் செருப்பு வீசிக் கவிதையைக் காப்பாற்றிய அருணாவிற்கு நானும், கை வளையலைத் தானம் செய்து கல்யாணம் நடத்திய கீதாவிற்கு அவளும் ஆயுசு முழுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், இன்று யார் யார் எங்கு எப்படி இருக்கிறோம் என்று எங்கள் மூன்று பேருக்குமே தெரியாது,

ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அதுதான் வாழ்க்கை. 

தொடர்புடைய சிறுகதைகள்
எதையும் மதிக்காமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடப்பவன், காலடியில் இருக்கும் பள்ளத்தில் தடுக்கி விழுந்து நகைப்புக்குள்ளாவான். From : Aesop Fables ‘ எண்ணிப் புள்ளி வைத்த இழைக் கோலம் மறந்து போகும். உண்ணச் சோறு எடுத்தால் உன் நினைப்பால் புரைக்கேறும் தண்ணீருக்கு உருளும் ராட்டை உன்னைப் போல் முரடாய் பேசும் துணி உலர்த்தும் ...
மேலும் கதையை படிக்க...
“ காப்பாத்துங்க ! ஐயோ என்னைக் காப்பாத்துங்க ! ” காகிதத்தில் தீப்பிடித்த மாதிரி அந்தக் குரலில் ஒரு பதற்றம். அச்சத்திலும் அவநம்பிக்கையிலும் நனைந்திருந்த அந்தக் குரல், கையில் மண்வெட்டி பிடித்துக் களை கொத்திக் கொண்டிருந்த பூட்டா சிங்கின் காதுகளைச் சுட்டது. குரல் வந்த ...
மேலும் கதையை படிக்க...
சுப்ரமணிக்கு ‘கொச்சு முதலாளி’ என்று பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், அவனுடைய அப்பா அல்ல. அதற்கான முழுப் பொறுப்பு தகழி சிவசங்கரன் பிள்ளையை சாரும். அந்த சிறந்த மாலையாள எழுத்தாளரின் ‘செம்மீன்’ அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த நேரம் அது.முதல் வருடப் ...
மேலும் கதையை படிக்க...
“ திஸ் இஸ் டூ மச் ” என்று வீறிட்டாள் மைதிலி. கையில் இருந்த செய்திப் பத்திரிகை எகிறிப்போய் விழுந்தது. கலவரத்துடன் எட்டிப் பார்த்தாள் சாவித்ரி. ‘ அறிவு ஜீவிகள் கிளப் ’ மொத்தமும் கூடத்தில் ஆஜராகியிருந்தது. அறிவுஜீவிகள் என்றால் ஏதோ ...
மேலும் கதையை படிக்க...
வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி. ‘வாக்கிங்' போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக் கிடந்த பேப்பரைத் திரட்டி எடுத்துக் கொண்டு படிக்கத் திறந்தபோது அந்த பயங்கரம் அதில் விரிந்து கிடந்தது. ‘அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி: குடும்பத்தைக் ...
மேலும் கதையை படிக்க...
மடத்துக் கதவு சாத்தியிருந்தது. கதவைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பாக வந்தது இவனுக்கு. நாலு பேராக இழுத்துத்தான் திறக்க வேண்டும். மூட வேண்டும் அதை. கிண்ணெண்று பாரியான தேக்கங்கதவு. எவனோ ஒரு தேர்ந்த ரசனையுள்ள தச்சன் இழைத்து இழைத்துப் பண்ணிய கதவு. சின்னச் சின்னதாய்ப் ...
மேலும் கதையை படிக்க...
அவன் நிறம் வெள்ளை, வெள்ளையென்றால் தந்த வெள்ளையில்லை. நீலம் கலந்தடித்த சுண்ணாம்பு வெள்ளை, வெளிறிப்போன ரோஜா வெள்ளை. லுகோடர்மா வெள்ளை. அவன் இடம் மூலை. மூலையின் இடதுபுறம் டெஸ்பாட்ச், அவன் நிறம் கொண்டு வந்து சேர்ந்த இடம். கஸ்டமர்கள் முகம் சுளிப்பார்கள். கவுண்ட்டரில் போட ...
மேலும் கதையை படிக்க...
இவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இன்று மழை வரும். அதன் எல்லா அழகுகளுக்குப் பின்னாலும் இருக்கிற சோகங்களை நினைவுபடுத்துகிற மாதிரி, மழை அதன் சோகங்களுடனும் வரும். இன்றும் மழை ...
மேலும் கதையை படிக்க...
அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் – முன்பின் அறிந்திராத நபர்கள், நான்கு பேர். நடுத்தர வயது. நல்ல ஆகிருதி. உட்கார்ந்திருக்கும்போதே உயரம் தெரிந்தது. தாடை இறுகிய சதுர முகம். தணல் போல் சிவப்பு, விழியோரம். அனந்த் வந்ததும் ...
மேலும் கதையை படிக்க...
மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு ரூபாய், நேற்றைக்கு பேங்க்கில் வாங்கி மடித்துப் பையில் சொருகியது. வாங்கியபோது, புதுசுக்கு உண்டான சுத்தமும் மொட மொடப்பும் தொடத் தொடச் ...
மேலும் கதையை படிக்க...
கரப்பான் பூச்சிகள்
உயிரே…உயிரே…
வெற்றி
கவசம்
நடுவர்கள
கதவைத் திறக்கும் வெளிச்சம்
பாம்பின் கால்
கசங்கல்கள்
அடிமைகள்
கற்றதனால் ஆன பயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)