கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 12,595 
 

“டீச்சர்! ஒங்களைப்போல எப்படி நடக்கறது?”

“என்னது?”

முன்வரிசையிலிருந்த ஒரு பெண் விளக்கினாள்: “எங்களை யாருமே மதிக்கறதில்லே. டீச்சருங்களும் சரி, மத்த மாணவிங்களும் சரி”. குரலில் ஆழ்ந்த வருத்தத்தை மீறி கோபம் வெளிப்பட்டது. தோல் நிறத்தால் மட்டும் தாங்கள் எவ்விதம் மட்டமாகிவிட முடியும் என்று விளங்காத குழப்பமும்கூட கலந்து வந்தது.

இன்னொரு பெண் அவளுடன் சேர்ந்துகொண்டாள்: “டீச்சர் நடக்கறபோது, தலையை நிமிர்த்தி நடக்கறீங்க! எல்லாரும் ஒங்ககிட்ட மரியாதையா இருக்காங்க. அந்த மாதிரி நாங்களும் ஆகமுடியுமா?”

கடந்த வாரம் தலைமை ஆசிரியை மிஸஸ்.கூ புவனாவை அழைத்து, ‘நம்ப பள்ளியில் ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கணும்னு எல்லா மாணவிகளும் பல தடவை என்கிட்ட வந்து கேட்டுட்டாங்க. அதில நீங்கதான் பொறுப்பு ஏத்துக்கணும்னும் சொல்லிட்டாங்க. இருபது, முப்பது பேருக்காக ஒரு சங்கம் எதுக்குன்னு நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தும் கேக்கலே!’ என்று கூறியபோது, புவனாவிற்கு எதுவும் புரியவில்லை.

இப்போது சங்கத்தின் முதல் கூட்டத்திற்கு வந்தபோதுதான் அப்படி ஒரு வினா, மாணவிகளிடமிருந்து.

அவளைப்போல நடக்க வேண்டுமாமே!

தற்பெருமையுடன், எதிரிலிருந்தவர்களைப் பார்த்துப் பரிதாபமும் எழுந்தது. ஆரம்பப் பள்ளிகளில் மலாய்மொழி படித்திருந்த இவர்களுக்குத் தேவையானது தமிழ்மொழிப் புலமை இல்லை. ஒரு மனிதர் பிறருக்கு அளிக்க வேண்டிய அடிப்படை மரியாதை. எதனால் இவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது? வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து, தனியார் பள்ளிகளில் கல்வி பயின்றிருந்த அவளுக்கு அவர்களுடைய பிரச்னை புரியத்தான் இல்லை.

“ஆறாம் வகுப்புவரை இந்தமாதிரி எதுவும் கிடையாதா?” என்று கேட்டாள்.

வருத்தம் தோய்ந்த முகத்துடன் அங்கிருந்த எல்லா மாணவிகளும் பக்கவாட்டில் தலையை ஆட்டினர். உதடுகள் பிதுங்கின, சுய பச்சாதாபத்தில்.

யோசனையுடன், “எத்தனை பேர் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

ஒரு கைகூட மேலெழவில்லை.

ஆச்சரியம் தாங்காது, “ஒருத்தர்கூட இல்லையா?” என்று அவள் தனக்குத்தானே கேட்டுக்கொள்வதுபோல் மீண்டும் வினவ, மெள்ள மெள்ள கரங்கள் உயரத் தொடங்கின.

புவனாவிற்கு மெல்லப் புரிய ஆரம்பித்தது. தமிழ்ப் பள்ளிகளில் படித்திருப்பதே அவமானகரமான செயல் என்ற நினைப்பில் இவர்கள் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள்!

“கைதூக்க இவ்வளவு நேரமா? இல்ல, எங்கே படிச்சோம்னு மறந்துபோச்சா?” என்று வேடிக்கையாகக் கேட்க, அவர்களின் முகத்தில் இருந்த இறுக்கம் கணிசமாகக் குறைந்தது. “தமிழ் நம்ப தாய்மொழி. அதில பேசவும், படிக்கவும் எதுக்கு வெட்கப்படணும்? நம்ப மொழி நமக்கே தெரியாவிட்டால்தான் கேவலம்!” என்று அடித்துச் சொன்னாள் ஆசிரியை. தொடர்ந்து, “இந்த இங்கிலீஷ் இப்போதான் நானூறு, ஐந்நூறு வருஷமா இருக்கு. நம்ப தமிழோட வயசு என்ன தெரியுமா?” என்று ஒரு சிறு புதிர் போட்டுவிட்டு, தானே விடையும் அளித்தாள்: “இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால எழுதின திருக்குறளே தமிழிலதானே இருக்கு! இப்ப அமெரிக்கா, ஐரோப்பாவிலகூட அதோட மொழிபெயர்ப்பை விரும்பிப் படிக்கறாங்களாம்!”

முதலில் கைதூக்கப் பயந்தவர்கள் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். தமிழில் பேச மட்டுமே முடிந்த சிலர், அதிலும், ‘தமிழ் பேசத் தெரியுமா?’ என்ற கேட்கக்கூடாத கேள்வியை யாராவது அசந்தர்ப்பமாகக் கேட்டுவிட்டால், ‘கொஞ்சம் கொஞ்சம்!’ என்று சாதாரணமாக அலட்டிக் கொள்பவர்கள் தலையை லேசாகக் குனிந்து கொண்டார்கள். தம்மை இக்கட்டில் மாட்டிவிட்ட ஆசிரியைமீது கோபம்கூட வந்தது.

“நம்ப சம்மதம் இல்லாம யாரும் நம்மை தாழ்த்திவிட முடியாது. புரிஞ்சுக்குங்க!”

“டீச்சர்! நாங்க எப்பவாவது பாவாடை கட்டினா, ‘தங்கச்சி பாவாடை!’ன்னு மத்த பிள்ளைங்க கேலி செய்யறாங்க!” அழாதகுறையாக கமலவேணி கூறினாள். ஒல்லியான உருவம், கண்களில் எப்போதும் கலக்கம், நல்ல கறுப்பு என்று அவளை ஒரே பார்வையில் எடைபோட்டாள் ஆசிரியை.

“இதில கேலி செய்ய என்ன இருக்கு? பாவாடை-சட்டை, புடவை இதெல்லாம் நம்ப கலாசார ஆடை. மத்தவங்க அவங்க முறைப்படி ஏதேதோ உடுத்திக்கலியா?” புவனா வேலைக்கு வரும்போது புடவையைத் தவிர வேறு எதுவும் அணிந்ததில்லை.

எல்லோர் முகத்திலும் புன்னகை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்துகொண்டதைக் கவனிக்கத் தவறவில்லை புவனா.

பிறர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று மனோதத்துவ ரீதியாக விளக்கத் தொடங்கினாள்: “மத்தவங்க வித்தியாசமா இருந்தா, சில பேருக்கு அதில ஒரு பயம் — எங்கே நாம்ப செய்யறதிலே குத்தம் கண்டுபிடிச்சுடுவாங்களோன்னு. நாம்ப அவங்களைச் சொல்றோமோ இல்லியோ, அவங்க முந்திக்கறாங்க! அவ்வளவுதான்”.

“பொறாமை, இல்ல டீச்சர்?” முதல் வரிசையிலிருந்த பெண் கேட்டாள்.

“உன் பேர் என்ன?”

“உமா தேவி, டீச்சர்!” டீச்சரின் பார்வை தன்மீது பட்டுவிட்ட சந்தோஷத்துடன் பதிலளித்தாள் அந்த மாணவி. ‘கொஞ்சம் குண்டு, நீண்ட இரட்டைப் பின்னல், குறுகுறுப்பான கண்கள்,’ என்று குறித்துக்கொண்டாள் புவனா.

“பொறாமை, அவநம்பிக்கை, ஏதோ ஒண்ணு. அவங்க பேச்சை எல்லாம் கேட்டு மனசு தளர்ந்தா, நமக்குத்தான் நஷ்டம்!”

இப்போது எல்லோருமே நிமிர்ந்தனர். புவனா “அ ஆ இ ஈ,” என்று ஆரம்பித்தாள்.

அவர்கள் அதைத் திரும்பச் சொன்னபோது, இனிய கானமாக ஒலித்தது.

“டீச்சர்!”

புவனா திரும்பினாள். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்ததாலோ, என்னவோ, தமிழ்ப் பெண்கள் பெரும்பான்மையும் வகுப்பில் பேசாமடந்தைகளாக இருந்ததை அவளறிவாள். ஏற்கெனவே இளக்காரத்துக்கு ஆளான தாம் ஏதாவது சொல்லப்போக, அது தவறாக இருந்துவைத்து, பிறரது கணிப்பில் மேலும் தாழ்ந்துவிடுவோமோ என்ற பயமே அவர்கள் நாவைக் கட்டிப் போட்டிருந்தது என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. இப்போது வலியவந்து ஒரு பெண் பேசுகிறாள் என்றால், அதுவே ஒரு நல்ல அறிகுறி என்று அவளுக்குப் பட்டது.

“என்ன துர்கா?”

அந்தப் பெண் ஏகமனதாக தமிழ்ச் சங்கத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததில், புவனாவிற்கு அவளுடைய பெயர் தெரிந்திருந்தது.

“நான் எங்க போனாலும், நம்ப சங்கத்தில இருக்கறவங்க எல்லாரும் ‘அக்கா, அக்கா’ன்னு கூப்பிட்டு, சும்மா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்காங்க, டீச்சர். என் கிளாசில இருக்கறவங்க கேலி செய்யறாங்க!”

“நாளைக்கு நான் அவங்ககிட்ட சொல்றேன்,” என்று புவனா உறுதி கொடுத்ததும்தான் துர்கா நிம்மதியுடன் அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

புவனாவுக்குப் பரிதாபம் ஏற்பட்டது. ஆனால் துர்காவிடம் அல்ல. அவளைத் தொந்தரவு செய்வதாக அவள் கருதிய பிறர், ‘ஒரு வழியாகத் தமக்கும் ஒரு ஊன்றுகோல் கிடைத்ததே!’ என்ற பூரிப்படைந்திருந்தது அவளுக்குப் புரியும் வயதாகவில்லை, பாவம்!

அவர்களது வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்டிருந்த தமிழ்ச் சங்கத்தில் நாலைந்து தடவைகள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயன்றுவிட்டு, அதன்பின், நோட்டுப் புத்தகத்தை வெளியில் எடுக்கத் தயக்கம் காட்டி, ‘கிளாசில நாள் முழுவதும் படிக்கிறோமே, டீச்சர்!’ என்று சாக்குப்போக்கு சொன்னார்கள் அம்மாணவிகள்.

புவனாவுக்குக் கோபம் வரவில்லை. தன்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் தாம் எப்படி பிறர் மதிக்க வாழவேண்டும் என்ற அடிப்படைக் கல்விதான். தமிழ் மொழியைக் கற்பதால் அது எப்படி இயலும் என்ற நிராசையே அவர்களிடம் மிகுந்திருந்தது.

அதிகம் வற்புறுத்தாமல், “ஒங்களோட பிரச்னை என்னன்னு ஒவ்வொருத்தரா எழுந்து சொல்லுங்க!” என்று அடுத்த கட்டத்தில் இறங்கினாள். “மொதல்லே ஒங்க பேரு..”

“என் பேரு கலைவாணி. நான் ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்கு என்னோட கொலுசை எடுத்திட்டு வந்தேன்..,” என்று ஒரு பெண் ஆரம்பிக்கவும், கோபமாக இடைமறித்தாள் புவனா. “சம்பந்தமில்லாத சாமான்களை எடுத்திட்டு வரக்கூடாதுன்னு பள்ளி விதிமுறை. தெரியாது?”

“அன்னிக்கு டான்ஸ் கிளாஸ் இருந்திச்சு, டீச்சர். ஆனா, நான் சொல்லச் சொல்ல கேக்காம, வழக்கம்போல என் பையைச் சோதனை செய்யறப்போ, அதைப் பாத்துட்டு, எடுத்திட்டுப் போயிட்டாங்க ப்ரிஃபெக்ட்ஸ்!”

“என் பொட்டு சிவப்புக் கலரில இருந்ததால, அதை அழிக்கச் சொன்னாங்க, டீச்சர்!” உமா தேவி. “கறுப்புப் பொட்டுதான் வைக்கணுமாம். கல்யாணமானவங்கதான் சிவப்புப் பொட்டு வைக்கலாமா, டீச்சர்?”

‘வாயாடி!’ என்று தலையை ஆட்டிக்கொண்ட புவனா எதுவும் பதிலளிக்கவில்லை.

சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் தான் பிள்ளை பெற முடியாது என்பதால் கல்யாணமே வேண்டாம் என்றிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் புடவை நிறத்திற்கேற்ப, சிவப்பு மட்டுமின்றி, பச்சை, நீலம் என்று எல்லா வண்ணங்களிலும் பொட்டு வைத்துக்கொள்கிறோம். இதற்கெல்லாம் விதிமுறைகளா வகுப்பார்கள்? அவரவர் விருப்பம் என்று விட்டுவிட வேண்டியதுதான். எல்லாவற்றுக்கும் கண்டித்தால், மாணவ மாணவியர்க்கு பள்ளிக்கூடமே வெறுத்து விடாதா!

“என் நெத்தி பூராவும் விபூதி இட்டிருக்கேன்னு அழிக்கச் சொன்னாங்க, டீச்சர்! தினமும் காலையில குளிச்சதும், விபூதி பூசணும்னு அப்பா சொல்வாரு! சின்ன வயசிலேருந்து பழக்கம்!” விக்னேஸ்வரி.

புவனா மென்மையாகப் புன்னகைத்தாள். அவளே மீண்டும் சிறுபெண்ணாகி, தன் தாயுடன் பேசுவது போலிருந்தது. நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தும், அந்தச் சம்பவத்தை நினைக்கும்போது இன்றும் லேசாக வலித்தது.

அன்று பொங்கல் பண்டிகை என்று அவள் அதிசயமாக வளையலும், பொட்டும் அணிந்து பள்ளிக்குப் போக, எதுவும் கேளாது, அவள் கன்னத்தில் அறைந்தாள் தலைமை ஆசிரியை. மத்தியானம் அழுதபடியே அவள் வந்ததைப் பார்த்த தாய்தான் என்னமாக அதிர்ந்து போனாள்! அந்த விவகாரத்தை அத்துடன் விடாது, கல்வி இலாகா, தமிழ், ஆங்கில தினசரிகள் எல்லாவற்றுக்கும் தகவல் கொடுத்தாளே! தலைமை ஆசிரியை கண்டிக்கப்பட்டு, உடனே வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்பட்டாள்.

விரைவிலேயே, “இன்னிக்கு வளை போட்டுக்க, புவனா!” பள்ளிக்குப் போகுமுன் அம்மா சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்கள் நான்கை நீட்ட, பெண் பயந்தாள். திரும்பவும் அடி வாங்கவா!

“போட்டுக்க, சொல்றேன்,” அம்மா மிரட்டினாள்.

அம்மாவின் எதிரில் இப்போது அணிந்து கொண்டுவிட்டு, பள்ளிக்கூடத்தில் கழற்றிவிடலாமா என்று புவனாவின் யோசனை போயிற்று. அவளுடைய மனத்தைப் படித்தவளாக, “யாராவது கழற்றச் சொன்னா, ‘இந்துப் பெண்கள் வளை போட்டுக்கணும்’னு எங்கம்மா சொன்னாங்கன்னு சொல்லு!” என்று சொல்லியும் கொடுத்தாள் தாய்.

அம்மா சொன்னபடிதான் நடந்தது. முன்பே பிரச்னையை எதிர்பார்த்திருந்ததால், அதைச் சமாளிக்கத் தெரிந்தது. “எங்கம்மா சொன்னாங்க…,” என்று திரும்பத் திரும்ப அதையே சொன்னாள், ஒவ்வொரு முறையும் எதிராளியின் வலிமை குறைவது புரிய. அவளுக்கே வியப்பு உண்டாகும் விதமாக, புதிய தலைமை ஆசிரியை அந்த இடத்துக்கு வந்து, “என்ன தகறாறு இங்கே?” என்று விசாரித்து, இரு தரப்பினரது வாதத்தையும் கேட்டு, இறுகிய முகத்துடன், “புவனா வளை போட்டுக்கட்டும், விடு,” என்று தகறாறு செய்த மாணவியிடம் கூறினாள்.

அம்மா ஆவலுடன் வாசலிலேயே காத்திருந்தாள். “என்ன ஆச்சு?”

சிரித்தபடி தனது வெற்றியை விளக்கினாள் மகள்.

மறுநாள், “வளையைக் கழட்டி வெச்சுடு!” என்று தாய் சாதாரணமாகக் கூற, “பின்னே எதுக்கும்மா நேத்து அவ்வளவு சண்டை போடச் சொன்னீங்க?” என்று அழமாட்டாக் குறையாகக் கேட்டாள் மகள்.

“நம்ப பக்கம் நியாயம் இருந்தா, நாம்ப எதுக்கும் பயப்பட வேண்டியதில்ல. அதுக்காகப் போராடணும். அது ஒனக்குப் புரியணும்னுதான்!”

தாய் கூறியது அப்போது முழுமையாகப் புரியவில்லை எனினும், புவனா தைரியமாக உணர்ந்தாள். தான் தவறு செய்யாதிருக்கும்வரை பிறருக்கு எதற்காக அஞ்சுவது என்ற அறிவு வந்தது. தலை நிமிர்ந்து நடந்தாள். அஞ்சி, அவமானம் செய்யப் பார்த்தவர்களை அலட்சியம் செய்தாள். தனிமையிலேயே வாழ்வைக் கழிக்க நேர்ந்தவளுக்கு அந்த படிப்பினை மிகவும் உபயோகமாக இருந்தது.

இப்போது, தாயிடம் கற்ற பாடங்களை பிறருக்குப் போதிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது!

“நான் முதல் நாளே சொன்னமாதிரி, நம்பளை மத்தவங்ககிட்டேயிருந்து ரொம்ப வித்தியாசப் படுத்திக்கிட்டா, அவங்களுக்குப் பயம் வந்துடும். நம்பளை மிரட்டுவாங்க. கூடியவரைக்கும், பள்ளி விதிமுறைகளை மீறாம நடந்துக்குங்க. கறுப்புப் பொட்டு வைக்கலாம். விபூதியும் ஓகே. நான் பெரிய டீச்சர்கிட்ட கேட்டுட்டேன். ஆனா, ஒளவையார்மாதிரி வேண்டாமே!”

இந்த ஒளவையார் ஜோக்கிற்கு எல்லாப் பெண்களும் சிரித்தார்கள்.

ஒரு மெல்லிய குரல் பின்னாலிருந்து தயங்கித் தயங்கி வந்தது: “நாங்க மஞ்சள் பூசிக்கிட்டு, பயங்கரமா இருக்கோமாம்”. அந்தத் தமிழ்ச் சங்கத்திற்கு ‘குறைகளை வெளிப்படுத்தும் இடம்’ என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். “என் பேர் காமாட்சி, டீச்சர்!” என்று அந்தப் பெண் சேர்த்துக் கொண்டாள்.

“நமக்குத் தெரியும், மஞ்சள் பூசினா, முகத்தில முடி வளராது, பரு வராதுன்னு. இதைப் பாக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிட்டுத் திரியமுடியுமா? சாயங்காலம் முகத்தைக் கழுவறபோது மஞ்சள் பூசிக்கலாமே! காலையில ஸ்கூலுக்கு வரப்போ எதுக்கு?” என்றாள் புவனா, நைச்சியமாக.

இன்னொரு குறை வெளிவந்தது: “கிளாசில மத்த பொண்ணுங்கல்லாம் எங்களைப் பக்கத்தில ஒக்கார விடமாட்டேங்கறாங்க, டீச்சர்!”

ஆத்திரம் எழுந்தது புவனா டீச்சருக்கு. “ஏனாம்?”

“எங்க தலையில பேன் இருக்குமாம். எங்க முடி நாறுதாம்!”

புவனா பெருமூச்சு விட்டாள். “நானே ஒங்ககிட்ட இதைப்பத்தி சொல்லணும்னு இருந்தேன். தலைக்கு கடலை எண்ணை பூசினா, பழக்கம் இல்லாதவங்களுக்கு நாத்தமாத் தோணும். அது வேணாம், வேற ஏதாவது வாசனைத் தைலம் வெச்சுக்கலாம்னு டீச்சர் சொன்னாங்கன்னு அம்மாகிட்ட சொல்லுங்க, என்ன?” என்றாள் பக்குவமாக. மாணவிகளுக்கு மட்டுமின்றி, அவர்களது தாய்மார்களுக்கும் தான் வழிகாட்டியாக விளங்குகிறோம் என்று அவள் புரிந்து வைத்திருந்தாள். “பேன் இருந்தா, அதுக்கு மருந்து இருக்கு. இல்லே, தலைகாணிமேல துளசியைப் போட்டுக்கிட்டு படுக்கலாம். நாம்ப சுத்தமா, புத்திசாலியா இருந்தா, தானே எல்லாரும் கிட்ட வரமாட்டாங்களா!”

அவர்களது இளம் முகத்தில் நம்பிக்கை ரேகை.

“வெளிர் நிறத்தில உடை போட்டுக்குங்க. மத்தவங்கமாதிரி ஒங்க நடையுடை பாவனையும் இருந்தா, தானே அவங்க ஒங்களை ஃப்ரெண்டா ஏத்துப்பாங்க!”

அடுத்த வாரம், டீச்சருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு பெண்கள் முடியைக் கட்டையாக வெட்டிக் கொண்டிருந்தனர்!

“என்ன, புது ஃபேஷன்!” என்று புன்சிரிப்புடன் புவனா கேட்க, “ரொம்ப வேர்த்துக் கொட்டுது!” என்று இல்லாத வியர்வையைத் துடைப்பதுபோல் பாவனை காட்டினாள் உமா தேவி. தான் சிவப்புப் பொட்டு இட்டுக் கொண்டதால் பிரச்னை எழுந்தது என்ற பெண்.

“அம்மா முந்தியெல்லாம் முடி வெட்டிக்கக் கூடாதும்பாங்க. இப்ப, டீச்சரே சொன்னாங்கம்மா, ‘மத்தவங்கமாதிரி நாம்பளும் இருந்தாத்தான் அவங்க நம்பளை ஃப்ரெண்டா ஏத்துப்பாங்க’ன்னு அப்படின்னு சொன்னதும், ‘சரி’ன்னுட்டாங்க!” சங்கத் தலைவி துர்கா உண்மையைக் கூறினாள்.

பிறருடன் இணைந்து வாழ, நமது தனித்தன்மையை இழக்க வேண்டியதன் அவசியம் என்ன? துர்கா ஆத்திரப்பட்டாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

அடுத்து அவர்கள் ஏற்பாடு செய்யவிருந்த கலைவிழாவில் பிற இன மாணவிகளும் பங்கேற்று, மிக ஒற்றுமையாக எல்லாரும் இயங்குவதைக் கண்டு, தான் சொல்லிக்கொடுத்தது வீண்போகவில்லை என்று பூரிப்படைந்தாள் புவனா.

“இந்தப் பாட்டுக்கா ஆடப் போறீங்க?” ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினாள் புவனா.

சினிமாப் பாட்டு என்றாலும், சற்று விரசம் இல்லாமல் இருக்கக்கூடாதா!

“எங்களுக்கு இதுதான் தெரியும்,” துடுக்காகப் பேசினாள் மாலா. “டீச்சர் வேணாம்னா, நான் ஆடலே!”

புவனாவிற்கு ஆழ்ந்த வருத்தம் உண்டாயிற்று. “அதில்லம்மா. ஒங்க டான்ஸ் ஏன் இவ்வளவு ஆபாசமா இருக்குன்னு யாராவது கேட்டா, நான் என்ன பதில் சொல்றது?”

“வாங்கடி!” சினிமா கதாநாயகன் பாணியில் மாலா கையை வீச, அவளைப் பின்தொடர்ந்து போனார்கள் ஐந்து பெண்களும்.

அவர்களையே பார்த்தபடி வாயடைத்துப்போய் நின்றாள் புவனா. தன்னை இவர்களுள் ஒருத்தியாகப் பாவித்துத்தானே இவர்களுக்கு வழிகாட்டுகிறோம்! சிலருக்கு ஏன் தன்மேல் இவ்வளவு காட்டம்? ஒருவேளை, எல்லாரிடமுமே இப்படித்தான் நடந்துகொள்ளத் தெரியுமோ இவர்களுக்கு?

அவள் நீண்ட காலம் குழம்ப வேண்டி இருக்கவில்லை. ஓரிரு வருடங்களில் உத்தியோக மாற்றல் கிடைக்க, புவனாவுக்கும், அந்தப் பள்ளிக்கும் தொடர்பு அற்றுப்போயிற்று. என்றாவது அந்தத் தமிழ்ப் பெண்களின் நினைவு வரும். இப்போது எல்லாரும் தன்னைப்போல் படிப்பு முடிந்து, வேலை பார்ப்பார்கள். ஒருவேளை, தன்னைப்போல் இல்லாது, கல்யாணமாகி வீட்டில் இருக்கிறார்களோ, என்னவோ என்றெல்லாம் அவர்களைச் சுற்றி எண்ணத்தை ஓட்டுவாள்.

சிலர் மரியாதை இல்லாது பேசினார்கள். அது தன் குறையால் அல்ல. அவர்களுடைய தாழ்மை மனப்பான்மையே அப்படி பார்ப்போரிடமெல்லாம் சண்டை போடத் தூண்டுகிறது என்பது புரிந்திருந்ததால், அவர்களிடம் விரோதம் பாராட்டத் தோன்றவில்லை.

அந்தக் கொலுசுப் பெண் — அவள் பெயர் என்ன? சாமர்த்தியமான பெண். தினமும் வந்து வந்து, தன்னிடம் ஏதாவது கற்றுப்போவாளே! மிகவும் மரியாதையாக நடந்துகொள்வாள். அவள் புத்திசாலி, டீச்சருடைய அபிமானத்திற்கு ஆளானவள் என்றே மற்ற பெண்களுக்கு அவளை அவ்வளவாகப் பிடிக்காது.

அவளுக்கு விடை அளிப்பதற்கென்றேபோல் நாளிதழில் அந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. குறிப்பிடத்தக்க அரசியல்வாதியாகி விட்டாளா இவள்! குட்டையும், பரட்டையுமான முடி. பாழ் நெற்றி. பக்கத்திலேயே அவளுடைய தேர்தல் வெற்றியைப் பாராட்டும் வகையில் அவள் வாயில் கேக்கை ஊட்டும் கணவர்.

‘எனக்குத் தமிழ் மொழியும், நமது கலாசாரமும் மிகவும் பிடிக்கும்,’ என்று பேட்டியில் அவள் சொல்லி இருந்தது புவனா டீச்சருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தனது மாணவி! இன்று நாடே பாராட்டும் வண்ணம் பெயரும், புகழுமாக இருக்கிறாள்!

ஏதோ உந்துதலின்பேரில், உடனே அந்தக் கட்சியை அழைத்தாள், தொலைபேசியில். “நான் உமாவோட டீச்சர். புவனா டீச்சருன்னு சொன்னா, அவளுக்கு.. ம்.. அவங்க புரிஞ்சுப்பாங்க”.

“யாரோ புவனாவாம். ஒங்க டீச்சர்னு சொல்றாங்க! ஒங்ககூடப் பேசணுமாம்மா!”

“இப்ப நேரமில்லன்னு சொல்லு. அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம நான் யாரையும் பாக்கறது கிடையாதுன்னு சொல்லத் தெரியாதா ஒனக்கு?” என்று உதவியாளனிடம் எரிந்து விழுந்ததும், கூடவே, “யாராவது கொஞ்சம் வசதியா, செல்வாக்கோட இருந்தா, வந்துடுவாங்களே, சொந்தம் கொண்டாடிக்கிட்டு!” என்று சொன்னதும் தன் காதில் விழவெனவே அவ்வளவு உரக்கச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று புவனாவிற்கு நன்றாகவே புரிந்தது.

என்றோ எழுந்த வினாவிற்கு அன்று விடை கிடைத்தது. பிறரை மதிக்கத் தெரியாது, தம்மைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மரியாதை கிட்டுவதில்லை. அதை வன்முறையால், பதவியால் பெறத் துடிக்கிறார்கள்!

நடுங்கும் கரத்தால் ஃபோனைக் கீழே வைத்தாள். மனம் குமுறியது. ‘நான் பெறாத குழந்தைகளாக அவர்களைக் கருதி இருக்கலாம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, நான் ஒரு கருவி. அவ்வளவுதான். அதோ, அந்த ஏணிமாதிரி. மேலே ஏற்றிவிட்டதுடன் என் கடமையும் தீர்ந்தது’.

ஏமாற்றமும், அவமானமும் ஒருங்கே எழுந்து, கண்ணீராக மாறின. இனிமேல் எந்த மாணவ மாணவியரிடமும் பற்று கொள்ளாது, அவர்கள் எக்கேடு கெட்டால் என்னவென்று, புத்தகங்களிலுள்ள பாடங்களை மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும்.

வாசலிலிருந்து ஒலித்த குரல் அவளுடைய சிந்தனையைக் கலைத்தது: “அம்மா! இன்னிக்குப் புல் வெட்டலாங்களா?”

“வெட்டுப்பா,” என்று பதில்குரல் கொடுத்த புவனாவிற்கு சட்டென ஞாபகம் வந்தது. வழக்கமாகப் புல் வெட்டும் பெருமாள் போன மாதம் வந்திருந்தபோது, அவனுடைய நான்கு வயது மகளைப் பாலர் பள்ளிக்கு அனுப்ப தான் பொறுப்பேற்றுக் கொள்ளுவதாகச் சொன்னோமே!

அவசரமாகத் தனது ‘செக்’ புத்தகத்தை வெளியே எடுத்து, அந்தக் குழந்தைக்கு ஓராண்டுக்கான சம்பளப் பணத்தைப் பூர்த்தி செய்யும்போதே சொல்லவொணாத திருப்தி எழுந்தது அவளுக்குள். இன்னொரு தமிழ்க் குழந்தையின் நலனுக்கு வழிவகுத்தாயிற்று!

‘ஏணிகள் வளைவதில்லை,’ என்று ஏதோ தோன்ற, புன்சிரிப்பு எழுந்தது.

– 2004, மலேசியா பாரதிதாசன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *