உள்ளங்கால் புல் அழுகை

 

“மை நேம் ஸ் றோசி, வட்ஸ் யுவர் நேம்?” எனக் கேட்டு விட்டு அவ என்னைப் பாக்கிறா.

எனக்கு அவவைப் பாத்த உடனை, எங்கடை ரீச்சர் மிசிஸ் ஜோன் ஸ்கூலுக்கு ஒரு நாள் வராமல் நிண்ட போது, வந்த அந்தச் சப்பிளை ரீச்சர் தான் ஞாபகத்துக்கு வந்தா. அந்த ரீச்சரின்ரை குரல் மாதிரி அவவின்ரை குரலும் கடுகடுப்பாக இருந்தது. அந்தச் சப்பிளை ரீச்சரை எனக்குப் பிடிக்கவேயில்லை. அம்மாவுக்கு அதைப் பற்றிச் சொல்லி ஒரு நாள் அழுத போது, ‘சரி, நாளைக்கு உங்கடை ரீச்சர் வந்திடுவா’ எண்டு சமாதானம் சொன்னா. ஆனால் அந்தச் சப்பிளை ரீச்சர் தொடர்ந்து ஐஞ்சு நாளா வந்ததாலை எனக்கு ஸ்கூலுக்குப் போறதிலை விருப்பமில்லாமல் போய், அம்மாவோடை சண்டைகூட பிடிச்சிருக்கிறன். அந்தச் சப்பிளை ரீச்சருக்கு எங்கடை ரீச்சர் மாதிரி மெல்லமாக் கதைக்கத் தெரியாது. அது மட்டுமில்லை மற்றவையிலை எந்த நேரமும் பிழை பிடிக்கிறது தான் அவவின்ரை வேலை.

நான் ஒண்டும் பேசாமல் நிற்கிறதைப் பார்த்ததும் அவவே தொடர்ந்து சொல்லுறா, “ஓ, யூ ஆர் நொட் றெடி ரு ரோக் ரு மீ யெற், தற்ஸ் ஓகே.”

“திஸ் ஸ் அபர்ணா, அபர்ணா திஸ் ஸ் றோசி.” என மாறி மாறி எங்களுக்கு சொல்லிப்போட்டு என்னைப் பார்த்து, “றோசி வில் ரேக் கேயர் ஒவ் யூ, அன்ரில் திங்ஸ் கெற் செற்ல்டு,” என்கிறா, என்னை றோசியிடம் கூட்டிக் கொண்டுவந்த டயானா. எனக்கு அவை சொல்லுற எதுவுமே விளங்கேல்லை. இதெல்லாம் ஏன் நடக்குது எண்டும் சரியாத் தெரியேல்லை.

பிறகு டயானா என்னை அந்த வீட்டுக்குள்ளை கூட்டிக் கொண்டு போறா. அங்கை என்னிலும் பாக்க வயது கூடின ரண்டு பிள்ளைகள் மேசையில இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கினம்.

“அபர்ணா, வுட் யூ லைக் ரு ஈற் சம் திங் ரூ?” எண்டு கேட்ட றோசிக்கு, “யேஸ், ஷி டின்ற் ஹாவ் ஹேர் டினர் யெற்,” என்று சொல்லிவிட்டு டயானா என்னைப் பார்த்து “ஜொயின் வித் தெம்,” என்கிறா.

நான் ரோபட் போல அசைந்து அசைந்து போய் சாப்பாட்டு மேசையிலை இருந்தாலும் எனக்கு பசி கொஞ்சமும் வரேல்லை. ஒரே அழுகை, அழுகை தான் வருகுது. மக்கரோனி அண்ட் சீஸ் எனக்குப் பிடிக்கிறேல்லை. அம்மா இடியப்பத்தை சொதியோடை குழைச்சுப் போட்டு தீத்த, அதைச் சாப்பிட்டுத்தான் எனக்குப் பழக்கம்.

சாப்பாட்டு மேசையில இருந்து நான் அழுறதைப் பார்த்த அந்த ரண்டு பிள்ளையளும் தாங்கள் கதைச்சதை நிப்பாட்டிப் போட்டு என்னைப் பரிதாபமாகப் பாக்கினம். கொஞ்ச நேரம் கழிச்சு, ’ஓகே, கம் அண்ட் சிற் வித் மீ’ எண்டு றோசி என்னைக் கூப்பிடுறா.

பிறகு டயானாவும் றோசியும் தமக்குள கதைச்சபடி ஏதோ எல்லாம் எழுதிக் கொண்டினம். பிறகு டயானா போய்விட்டா. “அபர்ணா, இற் ஸ் ஓல்மோஸ்ற் ரைம் ரு கோ ரு பெட்” எனச் சொல்லி என்னைக் கூட்டி கொண்டு வந்து ஒரு அறையில் படுக்க விட்டுப் போய் விட்டா, றோசி.

அம்மாவின்ரை சூட்டிலை அம்மாவோடை படுக்கிறதிலை சுகம் கண்ட எனக்கு அந்தத் தனி அறையைப் பாக்க ஏதோ பயங்கரப் பூதத்தைப் பாக்கிறமாரி இருக்குது. அம்மாவுக்கெண்டு ஒரு தனி வாசம் இருக்குது. “அம்மா, யூ ஸ்மெல் சோ குட்” என அடிக்கடி சொல்லி அம்மாவை இறுகக் கட்டிக் கொள்ளுவன் நான். இப்ப அம்மாவின்ரை சூடுமில்லை, மணமுமில்லை. எல்லாமே வெறுமையாக் கிடக்குது. நான் இங்கை, எங்கடை பேபி ஆற்ரை வீட்டிலையோ தெரியாது. பேபியையும் என்னையும் சேத்துக் கவனிக்க றோசியாலை முடியாது எண்டு தான் என்னை மட்டும் இங்கை கூட்டி வந்ததெண்டு டயானா சொன்னா.

இனி பேபியோடை விளையாடவும் ஏலாது; “அபர்ணாக் குட்டி, பேபிக்கு பவுடர் எடுத்துக் கொண்டு வா; பேபி அழுகுது, பேபியோடை போய் விளையாடு”, எண்டெல்லாம் அம்மா சொல்லுறதைக் கேக்கவும் ஏலாது. எத்தினை நாளைக்கு இப்பிடியிருக்கப் போறன்? எப்ப அம்மா கதைக்கிறதைக் கேக்கப் போறன்? எப்ப என்ரை அம்மா என்னைக் கொஞ்சித் தடவி விடப்போறா?

பில்லோவைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு விம்மி விம்மி அழுகிறன் நான்.

அப்பாவுக்கு கோவம் வந்தால் அவர் அம்மாவை எப்பவும் தான் அடிக்கிறவர். ஆனால் கடைசியாக அப்பா, அம்மாவோடை சண்டை பிடிச்சபோது மட்டும் தான் பொலிஸ் வந்தது. அப்பாவின்ரை சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்தான் கூப்பிட்டவை எண்டு அம்மா ஷெல்ரருக்குப் போகைக்கை சொல்லி அழுதா.

கவலை வாற நேரமெல்லாம் அம்மா என்னைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு தான் அழுவா. இப்ப தனிய இருந்து என்ன செய்யிறாவோ தெரியாது. பேபியோடை இனி நான் எப்ப விளையாடுறது, அம்மாவை இனி எப்ப பாக்கிறது, எண்டெல்லாம் ஒண்டுமே எனக்கு விளங்கேல்லை. பாவம் பேபி, தனக்கு என்ன பிடிக்கும் எண்டு மற்றவைக்கு சொல்லவும் அவவுக்கு தெரியாது. என்ன செய்யிறாவோ தெரியாது.

பொலிஸ் வந்து எங்களைக் கொண்டுபோய் ஷெல்ரரிலை விடேக்கை, எங்கடை வீட்டிலை இருக்காட்டிலும் பரவாயில்லை, என்ரை ரொய்ஸ் இல்லாட்டிலும் பரவாயில்லை, அம்மாவோடை இருந்தால் காணும் எண்டு தான் நான் நினைச்சன். இப்ப அம்மாவுக்கு வருத்தமாம். ஏதோ டிப்பிரஷனாம், அதாலை அவவாலை எங்களைப் பாக்க ஏலாது எண்டு எங்களை அவவிட்டையிருந்து பிரிச்சுப் போட்டினம்.
எங்களுக்கு எங்கடை அம்மா வேணும் எண்டு நாங்கள் எவ்வளவு அழுதாலும் அவைக்கு விளங்கேல்லை. எனக்கு என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. அம்மாவும் தன்னாலை எங்களைப் பாக்க ஏலும் எண்டு சொல்லிச் சொல்லி அழுதா. ஆனால் அவை ஆரும் அதைக் கேட்கேல்லை. ஆரிட்டை நான் போய்க் கதைக்கலாம்?

அவை சொல்லுகினம், அம்மாவுக்கு சுகம் வந்தாப் போலைதான் எங்களை அவவிட்டை விடுகிறதைப் பற்றி யோசிக்கலாமாம். அம்மா தனக்கு என்ன வருத்தம் எண்டாலும் ஒரு நாள் கூட எங்களைக் கவனிக்காமல் விட்டதில்லை. உடுப்புத் தோய்க்கிறது, சாப்பாடு சமைக்கிறது, சாப்பாடு தாறது, ஸ்கூலுக்குக் கூட்டிக் கொண்டு போறது எண்டு எங்களுக்கு எல்லாம் அம்மா தான் இவ்வளவு நாளும் செய்தவ.

இப்ப அப்பாவை பொலிஸ் பிடிச்சாப் போலை என்னெண்டு அவவுக்கு அப்படி பெரிய வருத்தம் திடீரெண்டு வந்தது எண்டு எனக்குத் தெரியேல்லை. இருந்தாலும், தான் எல்லாம் செய்வன் எண்டு தானே அம்மா சொன்னவ; அம்மா செய்ய மாட்டா எண்டு இவைக்கு என்னெண்டு தெரியும்?

எனக்கு அம்மாட்டை போகோணும் போலையிருக்குது; இனி இவை எப்ப என்னைக் கூட்டிக் கொண்டு போவினம்? ஒரே குழப்பமாயிருக்குது. ஆரிட்டை நான் கேக்கிறது?
இனி வேறை ஸ்கூலுக்குத்தான் போகவும் வேணுமாம். மிசிஸ் ஜோனையும் இனிக் காணேலாது. புது ரீச்சர் சப்பிளை ரீச்சர் மாதிரி இருப்பாவோ அல்லது மிசிஸ் ஜோன் மாதிரி நல்ல ரீச்சரா இருப்பாவோ, ஆருக்குத் தெரியும்? என்ன இருந்தால் தான் என்ன, என்ரை அம்மாவே இல்லையாம், இனி எந்த ரீச்சர் வந்தென்ன?

றோசியும் என்னிலை பிழை கண்டு கத்துவாவோ என்னவோ. அவ என்ரை அம்மா இல்லைத் தானே! அவவுக்கு நான் ஏதேனும் பிழையாய்ச் செய்தால் கோவம் வரும். பிறகு என்ன செய்வாவோ? இதெல்லாம் அப்பாவாலை தான் வந்தது. எல்லாம் அவற்ரை பிழை தானே.

அம்மாவுக்குப் பைத்தியம் எண்டு பேசிப் பேசி அவ்வோடை சண்டை பிடிக்கிறது தான் அவருக்கு வேலை. அண்டைக்கும் அம்மா பேபியோடை சாய்ஞ்சாடம்மா பாடிக்கொண்டு இருக்கேக்கை ‘வீடு குப்பையாக் கிடக்குது’ எண்டு கத்தினார். அம்மா “தன்னாலை எல்லாம் தனியச் செய்ய ஏலாது” எண்டு சொன்னது அவருக்கு பிடிக்கேல்லை. தான் வேலைக்குப் போறன், அம்மா வீட்டிலை சும்மா இருந்து கொண்டு சட்டம் கதைக்கிறா எண்டு அவவின்ரை தலைமயிரைப் பிடிச்சு இழுத்து, அவவின்ரை தலையை சுவரிலை மோதி அடிச்சார். அதைப் பாத்து நானும் பேபியும் பெரிசா கத்தினதாலை தான் பக்கத்து வீட்டுக்கு கேட்டிருக்குதாக்கும்.

அவை அப்பிடி பொலிசைக் கூப்பிட்டுக் குழப்பாட்டி, அப்பான்ரை கோபம் போனாப் போலை, எப்பவும்மாரி திரும்ப அம்மா அப்பாவோடை கதைச்சிருப்பா. அப்பா கோவமாய் இல்லாத நேரங்களிலை அம்மா அவரோடை சிரிச்சுக் கதைப்பா. அதைப் பாக்க எனக்கு சரியான சந்தோசமாயிருக்கும். சண்டை பிடிக்காமல் எந்த நேரமும் அப்பாவும் அம்மாவும் இப்படிச் சந்தோசமாக இருக்க வேணும் எண்டு நான் எத்தினை தரம் ஆசைப்பட்டிருக்கிறன்.

இப்ப நான் என்ன செய்யலாம்? எப்பிடி அம்மாவிட்டைத் திரும்பப் போகலாம்? நான் சரியான குழப்படி செய்தன் எண்டால், றோசி என்ன செய்வா? தன்னாலை என்னைப் பாக்க ஏலாது எண்டு அம்மாவிட்டைக் கொண்டு போய் விட்டாலும் விடுவா தானே?

அப்பிடித் தான் ஒருக்காச் செய்து பாக்க வேணும்.

நாளைக்கு ஏதாவது சாமனை உடைக்க வேணும். பிலத்துக் கத்த வேணும். இருக்கிற மற்றப் பிள்ளையளோடை சண்டை பிடிக்க வேணும்.

எப்பிடியாவது அவை என்னை அம்மாவிட்டை கொண்டு போக வழி பாக்க வேணும்.

அதையே நினைச்சுக் கொண்டு ஈரமாப் போன பில்லோவைக் இறுக்கிக் கட்டிப்பிடிச்சபடி கண்ணை மூடுறன்.

நன்றி: ஜீவநதி ஆண்டுமலர் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
“நாட்டு நிலைமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் கூட, கல்லூரி அனைத்து துறைகளிலும் ஓங்கி நிற்க அயராது பாடுபட்ட மாமனிதர், எமது கல்லூரியின் பொற்கால அதிபர் திருவாளர் சிவசுந்தரம் அவர்களை கல்லூரி பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்” ...
மேலும் கதையை படிக்க...
'ரீச்சர், இண்டைக்கு நாங்கள் நாடகம் நடிக்கலாமோ?' இது சுதன். அவன் சொல்லி முடிப்பதற்குள் இன்னும் சிலரும் 'ஒம் ரீச்சர், நாங்கள் நாடகம் செய்து கனநாளாச்சு. நாடகம் செய்வோம்,' என வேண்டுகோள் விடுக்கிறார்கள். காலையில் தமிழ் வகுப்புக்கு வந்ததும் அன்று படிக்க வேண்டிய விடயம் ...
மேலும் கதையை படிக்க...
சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஒரு நாள், நானும் என் மகளுமாய் ஒரு றெஸ்ரோரண்டுக்குச் சென்றிருந்த போது, எதிர்ப்பட்ட குளிரிலிருந்து எனக்குப் பாதுகாப்புத் தருவதற்காக, தனக்கென ஆசைப்பட்டு வாங்கிய அந்த ஸ்கார்ஃபை அவள் எனக்குத் தந்திருந்தாள். பின்னர் சாப்பிடும்போது என் முன்னால் இருந்து என் மேல் ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா, அம்மா” எனப் பல தடவை மகள் கூப்பிடுவதைக் கேட்டும் கேட்காதது போல் தனது வேலையில் வெகு மும்முரமாக நின்றாள் கலா. “என்ன, மது கூப்பிடுறது கேட்கேல்லையே? பிறந்தநாளும் அதுமா அவனை அழவிடாமல் போய்ப் பாரன்” என்று பத்திரிகைக்குள் தலையையும் வாய்க்குள் ...
மேலும் கதையை படிக்க...
நூல் வெளியீடு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த எங்களின் காருக்குள் புயல் வீசியது. சுனாமி வேகமாக அடித்து என்னை மூச்சுத் திணறச் செய்தது. வீட்டுக்குள் போனதும், மீதிப் புத்தகங்களுடான அந்த காட்போட் பெட்டியும் அதனுள் இருந்த புத்தகங்களும் சுதர்சன் எறிந்த வீச்சிலிருந்த அந்த ...
மேலும் கதையை படிக்க...
அந்த CAS எனப்படும் ‘சிறுவர் ஆதரவுச் சபைக்’ கட்டிடத்துக்குள் நுழையும் போது, மனசு கொஞ்சம் படபடத்துக் கொள்கிறது. “பாரபட்சமின்றி இருக்க வேணும்; வெறும் குரலைக் கொடுக்கிறது தான் எங்கடை வேலை; மற்றும்படி எந்தக் கலந்துரையாடலிலும் நாம் ஒரு பங்காளர் இல்லை” என்றெல்லாம் மொழிபெயர்ப்பாளருக்கான ...
மேலும் கதையை படிக்க...
தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று ஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான். ஆனால் அது வழமையாக வரும் மாதாந்த கிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு ...
மேலும் கதையை படிக்க...
“ரவியின்ரை முகத்திலை இப்பத்தான் கொஞ்சம் களை கட்டியிருக்கு.”, “ஒம், பாவம் அவன். இரண்டு பிள்ளையளோடையும் சரியாக் கஷ்டப்பட்டுப் போனான்” கலியாண வீட்டிலிருந்த இரண்டு பேர் கதைத்துக் கொண்டிருந்த போது இடையில் புகுந்து “திரும்பக் கலியாணம் கட்ட மாட்டன் எண்டு நிண்டவனை மனம் மாத்திச் சம்மதிக்க ...
மேலும் கதையை படிக்க...
என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது. “சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்கூடாது… சொறியடா ...
மேலும் கதையை படிக்க...
பிரமைகள்
ஓரங்க நாடகம்
ஒன்றே வேறே
நெறிமுறைப் பிறழ்வா?
ஏமாற்றங்கள்
சில்வண்டு
தடம் மாறும் தாற்பரியம்
நீயே நிழலென்று
இழை ஒன்று விடுபட்டுப் போகிறதா ?
பேசப்படாத மௌனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)