இழந்ததும் பெற்றதும்

 

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கே உட்காரப்போறே?” என்றாள் வீணா முகத்தை சுளித்துக் கொண்டு.

அவளுக்கு அவள் சலிப்பு!

அவளுடைய பள்ளியில் முதலாவதாக வந்த பெண்ணுக்கு மட்டுந்தான் சென்ற வருடம் இங்கே இடம் கிடைத்ததாம். அந்தப் பெண்ணை விட ஓரிரு மதிப்பெண்கள் குறைவாக வாங்கி இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்த மாணவிகளுக்குக் கூட இங்கே படிக்க இடம் கிடைக்கவில்லையாம்.

ராதிகாவுக்கு அந்தக் கல்லூரி வளாகத்தை விட்டுக் கிளம்பவே மனம் வரவில்லை. பூவரச மரங்களும் மயில் கொன்றை மரங்களும் இளங்காற்றில் மெல்லத் தலையசைத்து விடை கொடுக்க, தரையில் உதிர்ந்து கிடந்த பல வண்ண மலர்களும், சருகுகளும் காற்றில் லேசாகத் தத்தித் தவழ்ந்து கூடவே வந்து வழியனுப்ப, மெதுவாக வெளியே வந்தாள். இந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது ஒரு காலத்தில் அவளுடைய கனவாக இருந்திருக்கிறது.

பகல் உணவு நேரத்திற்குள் இன்னும் இரண்டு கல்லூரிகளில் விண்ணப்பப் படிவங்கள் வாங்க வேண்டும் என்கிற பரபரப்பில் வீணா ‘ஸ்கூட்டியை’ வேகமாகக் கிளப்பினாள். தானே போய் விண்ணப்பப் படிவங்கள் வாங்கி வருவதாக வீணா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், சிறு பெண்ணைப் போல பிடிவாதமாக ராதிகா அவளுடன் ஒவ்வொரு கல்லூரி வாசலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறாள்.

வீணாவுடன் தான் என்று அல்ல. நான்கு வருடங்களுக்கு முன் விக்னேஷ§டனும் பொறியியல் நுழைவுத்தேர்வு விண்ணப்பப் படிவம் வாங்க அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு உற்சாகத்தோடு ஓடியிருக்கிறாள். அதற்குப் பிறகும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தாளைக் கொடுக்க, அவனுடன் நுழைவுத்தேர்வுக்குப் போக என்று ஏதேதோ சாக்குகளை வைத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் நீள அகலங்களை நடந்தே அளந்திருக்கிறாள். படிப்பு, படிப்பு சம்பந்தப்பட்ட இடம் என்றால் அவ்வளவு பைத்தியம், அவ்வளவு பரவசம்!

கிருஷ்ணன் கூட கோபமாகக் கேட்டிருக்கிறான்.

“என்ன ராது இது? சின்னக் குழந்தையாட்டம் ஆபீசுக்கு லீவு போட்டுட்டு அவன் கூட சுத்திக்கிட்டிருக்கே? விக்னேஷ் பெரிய பையன்! அவன் வேலையை அவனே பார்த்துப்பான்!”

‘எத்தனை படிப்பாளிகளை, எத்தனை அறிஞ்ர்களை, தலைவர்களை உருவாக்கிய இடம் இது!’ என்று அந்த வளாகத்தைப் பார்க்கும் தோறும் மனதில் எழும் பிரமிப்பையும் பரவசத்தையும் அவனுக்கு புரிய வைக்க முடியுமா என்கிற சந்தேகத்தில் பதில் பேசாமல் வாய் மூடி மௌனம் காத்திருப்பாள்.

‘நாட்டின் எத்தனையோ துறையில் வல்லுனர்களாக விளங்கும் எத்தனை உன்னதமான மனிதர்கள் நடமாடிய இடம் இது!’ என்று பரந்து கிடக்கும் மணல் துகள்களைப் பார்த்துப் பார்த்து மனசு புளகாங்கிதம் அடையும். விக்னேஷ§ம் இதே பல்கலைக்கழகத்தில் படித்து இப்போது வேலையிலிருக்கிறான்.

இப்போது வீணாவுக்காக கல்லூரி, கல்லூரியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறாள், ஆசையாசையாய்!

புதிதாகத் தைத்து வந்திருக்கும் நாலு வண்ண சூடிதார்களில் எதைப் போட்டுக்கொண்டு முதல் நாள் கல்லூரிக்குச் செல்வது?

வீணாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

ராதிகா சட்டென்று இள மஞ்சள் நிற சூடிதாரைக் கையில் எடுத்துக் கொடுத்தாள்.

“இதைப் போட்டுண்டு போ வீணா! மனசுக்கே ரம்யமாயிருக்கும் பாரு!”

பக்கத்துத் தெருவில் வசிக்கும் ராதிகாவின் தாயாரை வணங்கி ஆசி பெற்றுக் கிளம்புவதாகச் சொன்ன வீணாவை வழியனுப்பி விட்டு வந்த ராதிகாவின் மனதில் வண்ண வண்ண பாவாடை தாவணிகளுடன் அவளோடு பள்ளியில் படித்தத் தோழிகள் வலம் வந்தனர்.

ராதிகா பள்ளியிறுதி வகுப்பை முடித்த வருடம், அப்போதிருந்த அரசாங்கம் அந்த வருடத்திலிருந்து பீ.யூ.சி. படிப்பும் இலவசம் என்று அறிவித்தது. பள்ளியிறுதியில் தேர்வு பெற்ற அத்தனைப் பெண்களும், கல்லூரியில் சேருவோம் என்று நினைத்தே பார்த்திராத பெண்கள் உட்பட, மகிழ்ச்சியோடு ஓடோடிப் போய் ஒட்டு மொத்தமாய் பீ.யூ.சி. வகுப்பில் சேர்ந்தனர். ராதிகாவும் சென்னையில் பிரபலமான கல்லூரி ஒன்றில் சேர முடிவு செய்து விண்ணப்பப்படிவம் வாங்கி வைத்திருந்தாள். ஆனால் வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் எங்கே நடக்கிறது?

எதிர்பாராதவிதமாக ராதிகாவின் தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்தாள். ராதிகாவின் தகப்பனாருக்கோ ஊர் ஊராக ‘டூர்’ போகும் உத்யோகம்!

“படிப்பு எப்ப வேணா படிச்சிக்கலாம். ஆனா பிழைப்பாளா மாட்டாளான்னு படுத்துக் கிடக்கிற அம்மாவை கவனிக்க உன்னை விட்டா யார் இருக்கா சொல்லு!”

தந்தையின் ஆதங்கமான வேண்டுகோள் மனதைத் தொட, தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மறு பேச்சின்றி தன் மேற்படிப்பு ஆசையைத் துறந்தாள்.
பள்ளியிறுதி வகுப்பில் பள்ளியிலேயே இரண்டாவது இடத்தைப்பிடித்திருந்த ராதிகா மேற்படிப்பு படிக்க முடியாததில் அவளுடைய நெருங்கிய தோழிகள், அவள் மேல் மிகுந்த அபிமானம் வைத்திருந்த ஆசிரியைகள் எல்லோருக்குமே ரொம்ப வருத்தந்தான்.

அவள் தோழிகள் கூட கேட்டனர். “ராது! நாங்க வேணா உங்க அப்பா கிட்ட பேசிப் பார்க்கிறோண்டீ!” என்று.

பாயில் கிழிந்த நாரைப் போலக் கிடக்கும் தாயாரைப் பார்த்தவாறே, “ஏய்! இது எங்கப்பா மட்டும் எடுத்த தீர்மானமில்ல! எங்கம்மாவை இந்த நிலைமையில விட்டுட்டு நிச்சயமா என்னால கல்லூரிக்கெல்லாம் வர முடியாதுடீ!” என்று தீர்மானமாக மறுத்து விட்டாள்.

அந்த பகுதியில் வசிப்பவர்கள் ராதிகா இருக்கும் தெரு வழியாகத்தான் பஸ் நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டும். பள்ளியில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து படிப்பைத் தவிர மீதி எல்லாக் கதைகளையும் பேசிப் பொழுதைப் போக்கிய கும்பலெல்லாம் வண்ண வண்ணப் பாவாடை தாவணியணிந்து ‘கலகல’வென்று பேசிச் சிரித்தவாறே கல்லூரிக்குப் போகும் நேரம் மட்டும் மனம் பொறுக்காமல் வாசற்கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளேயே முடங்கிக்கொள்வாள்.

காலையில் தம்பி, தங்கைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அம்மாவுக்குத் தேவையானவற்றை செய்து விட்டு சற்றே உட்காரும்போது, மனதில் ஆர்வம் பீறிடும்.

‘இப்போ அவங்க எல்லாம் பீ.யூ.சி. வகுப்பில என்ன பாடம் படிச்சிக்கிட்டிருப்பாங்க?’

பிறகு சற்று நேரத்தில் அதுவே வேறு விதமான எண்ணமாக உருவெடுக்கும்.

‘அவங்க எல்லாம் ஒரு பீ.யூ.சி. படிக்கிற நேரத்தில என்னால என்னவெல்லாம் கத்துக்க முடியும்?’

தட்டெழுத்து, சுருக்கெழுத்து, தையல் என்று தாயாரின் உடல் நிலைக்கும், வீட்டு வேலைகளுக்கும் பாதிப்பு வராமல் மத்தியான, மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து வெறியோடு கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி கூட இல்லாத அந்த கால கட்டத்தில் ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையே உள்ள இடைவெளி நேரத்தை வீணாக்காமல் சுருக்கெழுத்து பழகிக்கொண்டேயிருந்ததால், வெகு விரைவில் தொழில் முறைக்கல்வியில் தேர்ச்சி பெற்று, தகுதி அடிப்படையில் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அவளுடன் படித்த தோழிகள் பீ.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தனர்.

பட்டப்படிப்பு முடிந்தும் வேலை சரிவர கிடைக்காத ஒரு தோழி வாய் விட்டே புலம்பி விட்டாள்.

“நீ படிக்கும்போது நல்லா படிச்சதோடு மட்டுமில்லாம, மேல என்ன செய்யணும்னும் நல்ல முடிவு எடுத்தேடீ ராது! அதான் இன்னிக்கி நல்ல மத்திய அரசு அலுவலகத்தில வேலை பார்க்கிறே. எங்களைப் பாரு! ‘சேல்ஸ் பெண்களாக’ ஏதேதோ சோப்பு வகையறாக்களைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம்!”

ராதிகாவுக்கு சிரிப்புத்தான் வந்தது.

அவளா முடிவெடுத்தாள்? வாழ்க்கை அவளுக்காக எடுத்த தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டு அவளைச் சுற்றி வரையப்பட்ட வட்டத்துக்குள் என்ன செய்ய முடியும் என்று யோசித்து வெறியோடு உழைத்து முன்னேறினாள் என்பது தான் உண்மை.

அவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த போது தாயாரின் உடல் நிலையிலும் நல்ல மாற்றம். நன்றாக எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டாள் என்பது குடும்பத்தில் எல்லோருக்குமே மிகுந்த ஆறுதலையும் ஆசுவாசத்தையும் தோற்றுவித்தது.

காலம் செல்லச் செல்ல ஏட்டுக்கல்விக்கும் வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமேயில்லையென்று ராதிகா நன்றாகக் கற்றுத் தெளிந்தபோது அவள் வயது நாற்பதைத் தாண்டியிருந்தது. வருடங்கள் உருண்டு காணாமற் போக, இப்போது அவள் மகள் வீணா கல்லூரிக்குச் செல்கிறாள்.

திடீரென ஒரு நாள் தூக்கத்திலேயே ராதிகாவின் தாயார் மாரடைப்பால் காலமடைந்து விட்டாள்.

தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததால் அம்மாவின் முகம் இயல்பாக தூங்குவது போல் அமைதியாகக் காட்சியளித்தது.

அம்மாவுக்கு மரண பயம் அதிகம். அம்மாவை பயப்படுத்தாமல் தூக்கத்திலேயே அலுங்காமல் நலுங்காமல் அழைத்துச் சென்ற இறைவனின் கருணையை நினைத்து ராதிகாவின் கைகள் தன்னிச்சையாய் குவிந்து நன்றி தெரிவித்தன.

உறவினர்கள் எல்லாம் சூழ்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஆச்சரியமா இருக்கு அண்ணா! குழந்தைகளெல்லாம் சின்னவாளா இருந்தபோது அக்கா கெடந்த கெடப்புக்கு, ஒவ்வொருவாட்டியும் நல்லபடியா பொழைச்சு எழுந்திருக்கணுமேன்னு எப்படி எல்லோரும் கவலைப்படுவோம்? அதுக்கப்புறம் இத்தனை வருஷம் நல்லபடியா ஓட்டி, கடைசி பையனோட குழந்தையைக் கூட சீராட்டிட்டுப் போயிருக்கா பாரேன்! ” ஆச்சரியத்துடன் எழுந்த சித்தியின் குரல் துக்கத்தில் மூழ்கி அழுகையில் முடிந்தது.

“என்ன இருந்தாலும் இப்படி அல்பாயிசில போயிட்டாளே! குழந்தைகளெல்லாம் முன்னுக்கு வந்து இருக்கிற இந்த சமயத்தில இன்னும் கொஞ்ச வருஷம் சந்தோஷமா இருந்துட்டுப் போயிருக்க மாட்டாளோ?” மாமாவின் குரல் ஆதங்கத்தில் கரைந்து கரகரத்தது.
வீணா மெதுவாக நகர்ந்த வந்து ராதிகாவின் அருகே அமர்ந்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

“காலேஜில சேர்ந்த புதுசில பாட்டி கிட்டே பேசிண்டிருந்தப்போ சொன்னாம்மா. ‘உங்கம்மாவுக்கு தான் மேலே படிக்கலேன்னு அவ்வளவு வருத்தம்டீ. எவ்வளவு நன்னா படிச்சு எப்போதும் ஃபர்ஸ்ட் ராங்க் வாங்குவா தெரியுமா? பாவம்! நா படுத்த படுக்கையா போனதினால அவளுக்கு மேல் படிப்பே போச்சு!’ன்னு. எனக்கு அப்ப ஒண்ணும் புரியலம்மா. நீ எப்போதும் ‘நல்லா படிப்பேன், ஃபர்ஸ்ட் ராங்க் வாங்குவேன்’ னு என் கிட்ட சொல்லும்போதெல்லாம் கூட நான் ஒன்னை ‘ஸெல்ஃப் டப்பா’ன்னு கேலி தான் பண்ணியிருக்கேன். இப்போ இவா எல்லாம் பேசறதைக் கேட்கும்போதுதான் எங்களுக்கெல்லாம் பாட்டி கெடைச்சதுக்கே நீ தான் காரணம்னு புரியறதுமா. இப்போ கடைசி மாமா குழந்தை வரைக்கும் பாட்டியோட பாசத்தை அனுபவிச்சிருக்கோம்னா, அதுக்கு அன்னிக்கி நீ எங்க பாட்டியை கண்ணும் கருத்துமா கவனிச்சிண்டதினால தானேம்மா?” வீணா அம்மாவைக் கட்டிக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்.

‘அட! இந்த விஷயத்துக்கு இப்படி ஒரு கோணம் இருக்கா? நாம இழந்ததையே நெனச்சிண்டிருந்திதனால, நமக்குக் கெடச்சதை, இத்தனை வருஷம் நம்ம கூட இருந்த பாக்கியத்தை, கொடுப்பினையை புரிஞ்சிக்க முடியாம போச்சே? கொழந்த எத்தனை அழகா எங்களுக்கெல்லாம் பாட்டி கெடச்சான்னு சொல்றா? எங்களுக்கெல்லாம் இத்தனை வருஷம் அம்மா இருந்திருக்காளே? எத்தனையோ வித உடல் நல சீர்க்குலைவுகளால் அலைக்கழிக்கப்பெற்று, படுத்துப் படுத்து எழுந்திருந்த போதிலும், கடைசியில் கணவர் தன்னை முந்திக் கொண்டு விட, குடும்பத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட கடமைகளை தனி ஒருவளாக சமாளித்திருக்கிறாள். எல்லோருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு, பிரசவம் பார்த்து, எங்களுக்கெல்லாம் செய்ய வேண்டியதையெல்லாம் ஒண்ணு விடாம பார்த்துப் பார்த்து செஞ்சு ……..அது புரியாம………………….. ‘

“அம்மா எங்களையெல்லாம் விட்டுட்டுப் போக எப்படீம்மா உனக்கு மனசு வந்தது?” என்று அங்கே அழ ஆரம்பித்தது வீணாவின் அம்மா ராதிகா அல்ல. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதும் பள்ளியிறுதி வகுப்பு முடித்தபோதும், வெளிப்பார்வைக்கு பெரிய மனுஷி போல வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்ட போதிலும், உள்ளூர, அம்மா இப்படி அடிக்கடி படுத்து விடுகிறாளே, அவளுக்கு ஏதாவது ஆகாமல் இருக்க வேண்டுமே என்று சதா சர்வ காலமும் நெஞ்சம் கனக்க, அஞ்சி அஞ்சி பார்த்துக் கொண்டிருந்த சின்னஞ்சிறு பெண் ராதிகா தான் அம்மா அருகே அமர்ந்து நெஞ்சம் வெடிக்க அழுது கொண்டிருந்தாள்.

- இலக்கிய பீடம் சிறுகதைப் போட்டி 2009இல் மூன்றாம் பரிசு பெற்றது 

தொடர்புடைய சிறுகதைகள்
கூட்டம் நெரிந்தது. கோலாகலமான டிசம்பர் சங்கீத சீஸன்! எல்லா சபாக்களிலும் மத்யான நேர கச்சேரி மேடைகள் வளரும் இசைக் கலைஞ்ர்களுக்கென்றே பிரத்யேகமாக. முதல் கச்சேரிக்கு வந்த கும்பல் அப்படியே அடுத்த கச்சேரிக்கும் அமர்ந்து விட்டது. அடுத்த கச்சேரிக்கு, அந்த பிரபலமாகி வரும் இளம் ...
மேலும் கதையை படிக்க...
கிருஷ்ணனுக்கு சாப்பாட்டு வக்கணை அதிகம். வீட்டில் என்னதான் பஞ்ச பட்ச பணியாரங்கள் மனைவி அனு சமைத்துப் போட்டாலும் வெளியே போய் சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம். எங்கே போய் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளட்டும். அது அனுவுக்கு ஆட்சேபணையில்லை. வீட்டுக்கு வந்து அந்த ...
மேலும் கதையை படிக்க...
மழை விட்டிருந்தது. அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய வாணி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று இடது கால் கோணிக்கொண்டது. ஒரு நொடி குனிந்து அந்த கால் செருப்பு அறுந்திருப்பதை கவனித்தாள். சாலை ஓரமாக ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. ஜோடி செருப்பையும் அவிழ்த்து ...
மேலும் கதையை படிக்க...
இவனும் அவனும்
"தடுக்கி வுழுந்தா பல் டாக்டர் மேலதான் வுழணும். நம்ப ஏரியாவிலேயே அத்தினி பல் டாக்டருங்க இருக்காங்க. இதுக்காக திருவான்மியூரிலிருந்து தண்டையார்பேட்டைக்குப் போகணுமா? உலகத்திலேயே ஒங்க ஒருத்தருக்குத்தான் தனியா ஊர்க்கோடியில ஒரு டாக்டர்!' ராதாவின் ஆசீர்வாதத்தோடு கிளம்பும்போது ரவியின் மனத்திலும் அதே கேள்விதான் எழுந்தது. "ஏன் ...
மேலும் கதையை படிக்க...
"கங்கிராட்ஸ்! நீங்க மறுபடி தந்தையாகப் போறீங்க!" டாக்டர் சொன்னதைக் கேட்டு வசீகரன் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது. பதில் பேசாமல் டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு மைதிலியுடன் வெளியே வந்தபோது அவள் சந்தோஷமாக இருக்கிறாளா இல்லையா என்று ...
மேலும் கதையை படிக்க...
'பிரபல நடிகன் 'ஆக்ஷன் ஆறுமுகம்' ஷ¨ட்டிங் முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருந்தது. எதிரேயிருந்த சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான். அவன் கூடவே உள்ளே வந்த ரசிகர் மன்றத் தலைவனும் அவனுடைய பால்ய நண்பனுமான சண்முகம் பக்கத்தில் ...
மேலும் கதையை படிக்க...
அம்மா நான் பாஸ்
மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான். "ரிஸல்ட் வந்திடிச்சா? நீ பாஸா? ஓ! கங்கராட்ஸ்! என்னோடது? பாக்கலியா? ஓ.கே.!' என்று சுருக்கமாகப் பேசிவிட்டு ஓடிப்போய் கம்ப்யூட்டரை "ஆன்' செய்தான். ...
மேலும் கதையை படிக்க...
"ஏ புள்ள! நானெல்லாம் அந்த காலத்துல நெதமும் எட்டு மைலு தொலவு நடந்து போய் படிச்சிட்டு வந்தவந்தான்! அப்போ மாதிரியா இருக்குது ஊரு இப்போ? ரோட்டு போட்டிருக்காங்க. அக்கம் பக்கத்து ஊருங்களுக்கு பஸ்ஸ§ ஓடுது?" இளங்கோ வாத்தியார் பேசுவதை பூங்கோதையும் காவேரியும் ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரைக்குச் செல்லும் சாலையில் நீள நெடுக நடந்து கொண்டிருந்தார் நடராஜன். காலை வீசிப் போட்டு நடக்கும் இந்த நடைப்பயிற்சி தான் எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். கூடவே மனதிற்கும் அல்லவா பயிற்சி? 'சள சள'வென்று பேசிக்கொண்டே ஒரு குழுவாக ...
மேலும் கதையை படிக்க...
'கிளி ஆன்ட்டீ வீடு' எங்கள் தெருவில் பிரசித்தம். தெருக் குழந்தைகள் எல்லாம் மாலையில் பள்ளி விட்டு வந்து ஆன்ட்டீ வீட்டில் இருக்கும் பேசும் கிளிகள், மைனாக்கள், வகை வகையான வண்ணப்பறவைகளைப் போலக் குரல் கொடுத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆன்ட்டீ பறவைகளை மிக அன்பாகப் பராமரிப்பார்கள். ...
மேலும் கதையை படிக்க...
சங்கீத சௌபாக்யமே!
அத்திரிபச்சான் கல கலா!
சொல்லாமலே…
இவனும் அவனும்
ஒன்றா…. இரண்டா?
தீர்வு புலப்பட்டபோது….
அம்மா நான் பாஸ்
ஜான்சி ராணிகள்
மனசு, அது ரொம்பப் பெரிசு!
மனிதர்கள் பலவிதம்

இழந்ததும் பெற்றதும் மீது ஒரு கருத்து

  1. அருமையான நடை. எப்பொழுதே என்று தெரியாமல்
    flashback க்கு கதை வழுக்கிக் கொண்டு போவதில் எழுதுவதில் உள்ள முதிர்ச்சி தெரிகிறது. .
    “நாம இழந்ததையே நெனச்சிண்டிருந்திதனால, நமக்குக் கெடச்சதை, இத்தனை வருஷம் நம்ம கூட இருந்த பாக்கியத்தை, கொடுப்பினையை புரிஞ்சிக்க முடியாம போச்சே? ” – கதையின் முத்தாய்ப்பு . கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)