கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 12,951 
 

அவன் தளத்துக்கு அடுத்த அரங்கு வாசலிலும், தம்பி தளத்துக் கதவின் பின்னாலும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாமா கூடை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அத்தைக்கு அவருக்குப் பக்கத்திலேயே பாய் விரிக்கப்பட்டிருந்தது. வளவு இருட்டாக இருந்தது.தளத்துக்குள் குண்டு பல்பிலிருந்து மெலிதாக வெளிச்சம். பங்களூரிலிருந்து மாமாவும் அத்தையும் வந்துவிட்டதாக மூன்று நாட்களுக்கு முன்பே தகவல் வந்து விட்டது. மாமா பங்களூரில் எதோ தொழில் செய்து நிறைய சம்பாதிப்பவர்.வருடத்திற்க்கு ஒருமுறை வந்து சம்பிரதாயமாக எல்லோரையும் பார்த்துவிட்டுப் போவார். அதில் அவருக்கு அப்படியொரு மகிழ்ச்சி.பாதிநாள் வெளியூரிலும், பலநாள் வெளிநாடுகளிலும் அவர் சுற்றிக் கொண்டிருப்பதாகச் சிலர் சொல்வார்கள். மாமா வரும் போது அத்தை எதற்க்கு அவரோடு வருகிறாள் என்று எல்லோருக்கும் எரிச்சலாக இருக்கும். அத்தை அதிகம் பேச மாட்டாள்.முக்கியமாக சிரிக்க மாட்டாள்.அதைவிட முக்கியமாக, மாமாவின் கை அத்தைக்கு வராது. மாமாவையே அவள் காவல் காத்துக் கொண்டிருப்பாள். அவளின் கண் அசைவுக்கு அவர் கட்டுப்பட்டு நடப்பது மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். அத்தையைக் கல்யாணம் செய்து கொண்ட பின்னால்தான மாமாவுக்கு அதிர்ஷ்டம் வந்ததாகச் சொல்வார்கள்.அத்தை அதை ஆமாம் என்பதுபோலவே நடந்து கொள்வாள்.

மாமா வீட்டுக்கு வந்தால் நிறைய நேரம் இருக்க மாட்டார். நேரமும் அவருக்கு இருக்காது.ஊர் முழுக்க ஏதோ ஒருவகையில் சொந்தமானவர்கள்.மேற்கிலிருந்து கிழக்காக ஆறு தெருக்களும், அவற்றில் நடுவில் கோடு கிழித்தது போல ஒரு தெருவும் இருக்கும் கிராமத்தில் யார்தான் யாருக்கு வேண்டாதவர்கள். மாமா வீட்டுக்குள் வந்ததும் சம்பிரதாயமாக நாலு வார்த்தை பேசுவார். படிப்பு பற்றி விசாரிப்பார். மேலும் நன்றாகப் படிக்கச் சொல்லுவார். நான் படித்ததால்தான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் என்பார். ”நல்லாச் சொல்லுங்க, இவனும் அவனும் கூட்டுச் சேந்துக்கிட்டு எந்தநேரமும்” என்று அம்மா புகார் சொல்ல ஆரம்பிப்பதற்க்குள், அத்தை குறுக்கிடுவாள். ”சின்ன புள்ளைங்கதான அந்தந்த வயசு வந்தா தானா பொறுப்பு வந்துடும்” என்பாள் சொல்லிக் கொண்டே மணி பார்ப்பாள், அவள் மணி பார்க்க ஆரம்பித்ததும் அம்மா காப்பி என்று அடுப்படிக்குள் போக முயல்வாள், எத்தன வீடு ஒரே காப்பி, டீன்னு , வயிறு என்னத்துக்கு ஆவும் அத்தை பேசிக் கொண்டே இருப்பார். மாமா முன்னால் அம்மா சாப்பிட எதையாவது கொண்டு வந்து வைப்பாள் அது மாமாவுக்குப் பிடிக்கும் என்பது அம்மாவுக்குத் தெரியும், மாமா கூச்சமில்லாமல சாப்பிடுவார். அந்த விஷயத்தில் அத்தையும் விட்டுக் கொடுப்பவள் போல அமைதியாக இருப்பாள்.

மாமா ஊருக்கு வந்து மூன்று நாட்கள் கழித்தே வீட்டுக்கு வந்திருந்தார்கள்.அவர்கள் எந்தநேரமும் வீட்டுக்குவரலாம் என்று மூன்று நாட்களாய் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் நாள் கீழத்தெருவை முடித்துக் கொண்டு போய்விட்டார்கள். இரண்டு கல்யாணமும், ஒரு சீமந்தமும், ஒரு வீட்டில் சண்டை சச்சரவும் நடந்து முடிந்திருந்தது. மாமா எல்லாவீட்டுக்கும் போவார்.அனால் ஏன் முதலில் கீழத்தெருவுக்குப் போனார் என்று தெரியவில்லை. கீழத்தெரு முக்கு வீட்டில் அவர்கள் இருக்கும் போது அந்தப்பக்கமாக தற்செயலாகப் போவது போல ஒரு போக்கு காட்டலாம் என்று அண்ணனுக்கும் தம்பிக்கும் தோன்றியது. அவர்கள் மனதைப் படித்தவளாக அம்மா சொன்னாள். “ மாமா வந்திருக்காஹ, எவனும் அவுஹ கண்ணுல பட்டுரக்கூடாது. பாத்தேன்,துட்டு தந்தாஹ அது இதுன்னு எவனாவது சொல்லிக்கிட்டு வந்தா, தோல உரிச்சு தொங்க விட்டுருவேன்.’ கண்டிப்பாக சொல்லும் அம்மா செய்யவும் செய்வாள் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால அமைதி காத்தார்கள்.

கிழக்குத்தெரு சுப்பையா வீட்டில் ப்ர்ஸை எடுத்த மாமா சலவை நோட்டுக்களாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்பதைச் சொல்லி யாரோ அள்ளிப் போட்டுவிட்டுப் போனார்கள்.” சோத்துக்கு வழியில்ல அது இதுன்னு வாயப் பொழந்து கண்ண கசக்கியிருப்பான் சுப்பையா. மேக்க இருந்துதான கிழக்க போகணும் உங்க மாமா ஏன் கிழக்க இருந்து மேக்க வாராஹ. எல்லாம் உஙகத்தக்காரி வேலை. எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு கடைசி நேரத்ல இங்கன வந்து நின்னுக்கிட்டு நேரமாச்சு நேரமாச்சுன்னு புது வாச்சிய புரட்டிப் புரட்டி காட்டிக்கிட்டிருப்பா.’ அம்மா கடும் கோபத்திலிருந்தாள். அன்று மாமா வரவில்லை. தான் பேசியதை எவளாவது கேட்டுப் போய் அத்தையிடம் வத்தி வைத்திருப்பார்களோ என்று பயம் வந்தவளாக, யாரவது இந்தப்பக்கம் அந்தப்பக்கம் போனாளுஹளா என்று விசாரித்து, இல்லை என்ற பிறகுதான் உற்சாகம் வந்தவளாக, நாளைக்கி எப்படியும் கண்டிப்பா வருவாஹ, இங்கவராம எப்பிடிப் போவாஹ என்று எல்லோரையும் தேற்றும் விதமாகச் சொன்னாள்.

இரண்டாவது நாள் வடக்குத்தெருவில் ஒர் சாவு விழுந்து விட்டது. அத்தைக்கு அவர் தூரத்து சொந்தம். மாமாவும் அத்தையும் காலையிலேயே அங்கு போய் விட்டார்கள். அம்மா அங்கு போய் அதை உறுதிப்படுத்திக் கொண்டு, குனிந்த தலை நிமிராமல், மாமாவையோ அத்தையையோ பார்க்காமல் வந்து விட்டாள். அன்று இரவு அமைதியாகக் கழிந்தது. மூன்றாவது நாள் இலஞ்சி குமாரர் கோவிலில் ஒரு கல்யாணம். சாப்பாடு முடித்த கையோடு மாமாவும் அத்தையும் ஊருக்கு வரலாம், வராமலும் போகலாம் என்று அம்மா சொன்னாள். சொல்லும்போதே அவள் குரல் உடைந்திருந்தது.

மூன்றாவது நாள் மதிய வாக்கில்,இந்நேரம் முகூர்த்தம் முடிந்திருக்கும் இந்நேரம் சாப்பாடு முடிந்திருக்கும் என்று மனசுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டு அவனும் தம்பியும் உட்கார்ந்திருந்தர்கள். மாமா கடைய நல்லூர் நண்பர் வீட்டில் தங்கிக் கொண்டு சுற்று வட்டாரத்திலுள்ளா எல்லா இடங்களுக்கும் போய் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.மாமாவின் நண்பருக்கு அம்பாஸடர் காரும்,ஜீப்பும், லேம்பி ஸ்கூட்டரும் இருந்தன.முதல் நாள் ஊருக்கு மாமாவும் அத்தையும் காரில் வந்ததாகச் சொன்னார்கள். இரண்டாவது நாள் நாள் ஸ்கூட்டர். இன்று கல்யாணத்துக்கு வந்தகாரில்தான் ஊருக்கு வரவேண்டும் என்று அவர்கள்எதிர்பார்த்தாகள்.

ஊர் முனையில் பிள்ளையார் கோவில். அரச மரம், அரசமரத்துப் பக்கத்தில் இடிந்து கிடக்கும் மதுரைக்காரர் வீடு. அண்ணன். சுவற்றில் ஏறி ஏறி வடக்கு நோக்கிப் பார்த்தான். தென்னத்தோப்புகளுக்குப் பின்னாலிருந்த தண்ணீர் வற்றிக் கொண்டிருந்த பனையங்குளம்தான் தெரிந்தது. மேற்கிலிருந்து கிழக்காக வரும்வரும் வாகனங்கள் தென்படவே இல்லை. கால்வலிக்கும்வரை நின்று பார்த்துவிட்டு அண்ணன் இறங்கினான், சற்றுப் பொறுத்து அம்மா வருகிறாளா என்று அண்ணனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தம்பி ஏறிப் பார்த்தான். நயினாகரம் சனிக்கிழமை சந்தைக்குப் போகும் மாடுகள் தான் தெரிந்தன.அண்ணனும் தம்பியும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

காற்று அரச மரத்தை உலுக்கி இலைகளைப் பிய்த்துப்போட்டுக் கொண்டிருந்தது. பழம் பழுக்கும் காலம். கிளிகள். காகங்கள், மைனாக்கள் அமர்ந்து கொத்தித்தின்று விட்டு சத்தமிட்டுப் பறந்தன. இலஞ்சியில் கல்யாணத்துக்ககுப் போனவர்களில் சிலர் திரும்பினார்கள். மீதி பலர் பாக்யலட்சுமி தியேட்டரில் சிவாஜி படம் பார்க்கப் போயிருப்பதாக தகவல் வந்தது. அத்தையும் மாமாவும் கல்யாண வீட்டில் சாப்பிடக்கூட இல்லாமல் வந்து திருநீறு பூசிவிட்டுப் போய் விட்டார்கள் என்று கேள்விப்பட்டபோது ஊருக்குப் போய்விட்டார்களோ என்று அதிர்ச்சியாக இருந்தது.

அம்மாவுக்கு பயந்து முதல் நாள் போய் மாமாவைப் பார்க்காமல் விட்டது தவறு என்று அண்ணன் தம்பியிடம் சொன்னான். தம்பி தலையை மட்டும் அசைத்தான். இருவரும் வீட்டுக்கு வந்த போது அம்மாவும் அமைதியாகவே இருந்தாள் யாரும் மாமாவைப் பற்றி பேசிக் கொள்ளவேயில்லை. மாலையானதும் அம்மா தலை வாசலில் கிழவிகளோடு கதை பேசப் போய்விட்டாள். அண்ணனும் தம்பியும் தளத்துக்குள் லைட்டைப் போடாமல் படுத்துக் கிடந்தார்கள். காகங்கள் கரைந்து அரசமரத்தில் அடைந்து கொண்டிருந்தன.அண்ணனுக்கும் தம்பிக்கும் உறக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. மெல்ல கண்ணயர்ந்த நேரம், அவசரமாக உள்ளே ஓடி வந்தவந்த அம்மா லைட்டைப் போட்டாள். ””எந்திரி மூதேவி மாமா”’ என்றபடி கூடை நாற்காலியில் கிடந்த அழுக்குத்துணிகளை அள்ளி ஒளித்துப் போட்டு விட்டு வந்தாள். அண்ணன் தம்பிகள் எழுந்த போது, அத்தையும் மாமாவும் உள்ளே வந்துவிட்டார்கள்.

”ஆளு வளந்துட்டாங்கள””

என்றார் மாமா

”அறிவுதான் வளர மாட்டக்கு. பேசாம பெங்களூருக்கு கூட்டிக்கிட்டு போங்களேன்”

”அங்க வந்து என்ன பண்ணப்போறாங்க”

என்று அத்தை குறுக்கே வந்தாள்.

”ஆமா, அவன் வந்து என்ன பண்ணப்போறான். இன்னும் நாலு வருஷம் கழிச்சு என்ஜீனியருக்கு படிக்கணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கான் பெரியவன். ஒருத்தன் படிச்சான்னா அடுத்தவன பாத்துக்குவான்.”

அதன் பிறகுதான் மாமா சேரிலும் அத்தை பாயிலும் உட்கார்ந்தார்கள். அத்தை மணி பார்த்த போது அம்மா பனங்கிழங்கை சுளவில் போடு எடுத்து வந்து வைத்தாள்.

மாமா குனிந்து எடுக்கப்போகும் போது

”வயிறு சரியில்லன்னு சொன்னீங்களே”

என்றாள் அத்தை. மாமா நீட்டிய கையை எடுத்துக் கொண்டார். ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதிலும் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைப்பதிலும் நேரம் கழிந்தபின்

”காப்பி போடட்டுமா? வயிறு சரியில்லானு சொல்லுதாஹ”

”போடு போடு”

அம்மா உள்ளே போனாள்.

அண்ணனும் தம்பியும் மாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுதான் மாமா வருகையின் முக்கியமான நேரம். அப்போதுதான் மாமா பேண்ட் பாக்கெட்டிலிருந்து தோல் பர்ஸை எடுப்பார்.பிரிப்பார். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் எடுப்பார். கொடுப்பார்.

அன்று அது நிகழாதிருந்தது.அது நிகழட்டும் என்று காத்திருந்தவள் போல அம்மாவும் சற்றுப் பொறுத்துதான் வெளியே வந்தாள்.

மாமா காப்பி குடித்தார். குடித்த கையோடு எழுந்தும் விட்டார்.

”வரட்டுமா?”

அண்ணனுக்கும் தம்பிக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். இருவர் முகமும் பேயறைந்தது போலிருந்தது.

அத்தை முதலில் நடக்க, மாமா மெதுவாக பின்னால் நடந்தார்.அம்மா அவருக்குப் பின்னால் போனாள். அண்ணனும் தம்பியும் நப்பாசையுடன் அம்மாவுக்குப் பின்னால் போனார்கள்.

”தப்பா நினைச்சுக்கிடாத, எடிஎம்ல பணம் எடுத்துட்டு வரலாம்ன்னு ரெண்டு மூணு இடத்துக்குப் போனேன். எங்கயும் பணம் இல்ல.”

”அதனால என்ன, இதுல நா தப்பா நினைக்க என்ன இருக்கு. நீ வந்தது ரொம்ப சந்தோஷம்.வராம போயிடுவியோன்னு …”

”அதெப்படி வராம போயிடுவேன்.இன்னிக்கு என்ன பாக்க யார்யாரோ ஆசைப்படறாங்க.அன்னிக்கு அம்பது பைசா வேனும்ன்னா உன்கிட்ட தான வந்திருக்கேன்.”

சொல்லும்போது மாமாவின் குரல் கமறியது போலவும், அத்தை முகம் வெளிறியது போலவும்,அம்மாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது போலவும் இருட்டில் நடந்து கொண்டிருந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *