கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 13,538 
 

ஜானுவின் அலறல் இரவின் நிசப்தத்தின் நடுவே பயங்கரமாக ஒலித்தது. பரிதாபமான அதன் ஓலம் சங்கரனின் காடாந்திர நித்திரையைக் கூடக் கலைத்து விட்டது போலும். அவன் புரண்டு படுத்தான். ஆனால் எழுந்திருக்கவில்லை. குழந்தையின் அலறல் மேலும் மேலும் உச்ச ஸ்தாயியை அடைந்த பிறகுதான் கண்ணைத் திறந்தான்.

தூளியிலிருந்து, தலை கீழே தொங்க, அலறிக் கொண்டு இருந்தாள் ஜானு. தூக்க மயக்கம் தெளியாத சங்கரனின் விழிகள் அறையின் நாற்புறமும் துழாவின.

‘காமாக்ஷி எங்கே?’ என்றது மனது. ஆனால் அதைப்பற்றி சிந்தனையை மேலே ஓடவிடாது காதுகளை நாராசமாய்த் துளைத்தது அழுகுரல். போர்வையை உதறிவிட்டு எழுந்து முணுமுணுத்தவாறே தூளி அருகில் சென்றான்.

குனிந்து அதை எடுக்கக் கை நீட்டியவன், அருவெறுப்புடன் பின் வாங்கியவாறே, ”ஏ காமாக்ஷி!” எனக் குரல் கொடுத்தான் பலமாக. கரப்பான் சிரங்கால் மேல் எல்லாம் அழுகிச் சொட்டும் குழந்தையை அவன் எடுப்பானா என்ன? அவன் குரலுக்குப் பதில் வரவில்லை. ஆத்திரத்துடன் தூளிக் கயிற்றைப் பிடித்து வீசி ஆட்டினான் சங்கரன். டணார் என்ற சப்தத்துடன் குழந்தை சுவரில் மோதியது. ரோதனம் இன்னும் பலமாகியது. ஜானு நெஞ்சே பிளந்து போகும்படி வீறிட்டாள்.

மறுவினாடி நிலைப்படி அருகே நிழலாடியது. சங்கரன் தலை நிமிர்ந்து பார்த்தான். காமாக்ஷி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள். தலைமயிர் கலைந்து அலங்கோலமாய்க் கிடந்தது. புடவைத் தலைப்பு அவிழ்ந்து தரையில் புரள மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்து வந்து கொண்டு இருந்தாள். ரத்தப் பசையற்று வெளுத்துக் கிடந்த அவள் முகத்தில் தோன்றிய பாவம், கண்ணில் மிளிர்ந்த கோபத்தின் சாயை, சங்கரனைக் குற்றவாளியைப் போல் தலை குனியச் செய்தன. அவன் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. சங்கரன் தன் தவறை மறைக்க விரும்பியவன் போல், ”சனியன், பிடிவாதத்தைப் பாரு; ஒரு நாள் கூட நிம்மதியாய்த் தூங்க விடுவதில்லை” என்றான். அவள் வாயே திறக்காமல் கதறும் குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு ஆசுவாசப் படுத்தலானாள்.

”பசிக்கிறதோ என்னவோ? ஏதாவது கொடேன்.” அவள் தலை நிமிரவில்லை. சுவரோடு சாய்ந்து கொண்டாள். மெல்லப் பஞ்சினால் புண்களை ஒற்றியவாறே, ”மாவு நேற்றே தீர்ந்து விட்டது” என்றாள் மெல்லிய குரலில். தாயின் ஆதரவான அணைப்பில் குழந்தை விசும்பிக் கொண்டு இருந்தது.

சங்கரன் பழையபடி படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

”என்னிடமும் பால் இல்லை. மாதம் ஆகி விட்டதோ இல்லையோ.” காதில் விழாதவன் போல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

சில வினாடி மௌனம் நிலவியது.

”காலமேயிருந்து எனக்குக்கூட உடம்பு சரியில்லை. இடுப்பை ரொம்ப வலிக்கிறது.”

அவளுடைய வார்த்தைக்குப் பதில் அளிப்பது போல் லேசான குறட்டைச் சப்தம் கேட்டது.

காமாக்ஷி நீண்ட பெருமூச்செறிந்தாள். அவள் இதய வேதனை காற்றோடு கலந்தது.

குழந்தை, தாயின் வறண்ட மார்பைச் சுவைத்தவாறே தூங்கி விட்டது. காமாக்ஷியால் உட்கார முடியவில்லை. நெளிந்து கொடுத்தாள். சுற்றும் ஒரே காடாந்திர மௌனம் பரவி நின்றது. கைவிளக்கின் மங்கலான ஒளியிலே கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி 12. சங்கரன் லேசாகக் குறட்டை விட்டுக் கொண்டு இருந்தான். சுற்றிலும் கால்மாடு தலைமாடாக, அவர்களைப் ‘புத்’ என்ற நரகத்தில் விழாமல் காப்பாற்ற வந்த செல்வங்கள் படுத்துக் கிடந்தனர்.

கோபு, லஷ்மி, கிருஷ்ணன், பஞ்சு, இதோ மடியில் ஜானு… இவர்கள்தான் அவர்களுடைய 10 வருஷ தாம்பத்திய வாழ்வின் சின்னங்கள். கால் மரத்துப் போகவே குழந்தையை மெல்லக் கீழே விட்டு விட்டுக் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டாள் காமாக்ஷி.

அவளால் உட்கார முடியவில்லை. புழுக்கமோ என்னவோ வியர்வை வெள்ளமாகப் பெருகிற்று. மெல்ல எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். முற்றத்துக் கம்பத்தடியில் சாய்ந்து உட்கார்ந்தவாறே வானத்தை அன்னாந்து பார்த்தாள்.

பௌர்ணமி கழிந்து-ஐந்தாறு நாட்கள் இருக்கும். கீழ் வானில் சந்திரிகை தன் பால் ஒளியைப் பரப்பியவாறே ஊர்ந்து கொண்டு இருந்தது. ஆங்காங்கே வாரி இறைத்தாற் போல் நட்சத்திரங்கள் மினுமினுத்தன. கிணற்றங்கரை அருகிலிருந்த வேப்ப மரம் ஜிலுஜிலுவென்ற காற்றை வீசியது. பறவைகளின் சரசரவென்ற சப்தம்கூட இல்லை. அந்நிசி வேளையில் காமாக்ஷி கண்களை மூடியவாறு சிந்தனையில் லயித்துப் போனாள்.

கவிழ்ந்திருந்த இமைகளிலிருந்து கண்ணீர் முத்து முத்தாய் உருண்டோடலாயிற்று.

இன்னும் மாதம் கூடப் பூர்த்தியாகவில்லை. அதற்குள் ஏன் இப்படி… ஒரு வேளை… ஏதோ ஒரு விதமான திகில் அவள் மனதில் கவிழ்ந்து கொண்டது. பளீர் என இடுப்பை ஓர் வெட்டு வெட்டியது. வேதனை ஒவ்வொரு நரம்பையும் சுண்டி இழுத்தது. யாரையாவது ஆதரவாகப் பற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. திரும்பிப் பார்த்தாள். சங்கரன் அயர்ந்த நித்திரையில் இருந்தான். ஓர் வினாடி அவள் உள்ளத்தில் கோபம் குமுறி எழுந்தது. ”காலையிலிருந்து துடிக்கிறேன். ஏன் என்றாவது கேட்டாரா? அவருக்கென்ன வந்தது? தன் சுகம், சௌகரியம் குறையாமல் நடந்தால் சரிதான். குழந்தைகளோடு அதுவும் வியாதிக்காரக் கைக் குழந்தையோடு அல்லல் படுகிறேனே ராவும் பகலும். துளியேனும் இரக்கம் உண்டா… இந்தப் புருஷர்களே…”

மறுவினாடியே அவள் உள்ளத்தில் பச்சாதாபம் மேலிட்டு நின்றது. ‘பாவம்!’ என் கஷ்டத்திற்கு அவர் என்ன செய்வார்! என்னைக் கல்யாணம் செய்து கொண்டுதான் என்ன சுகம்! நாய் மாதிரி காலையிலிருந்து இருட்டும்வரை ஓடியாடி உழைத்து ஓடாய்ப் போகிறார். என்ன சுகம்? தினமும் இதே பல்லவி, உடம்பு சரியாயில்லை. குழந்தைக்கு ஜுரம்… பிரசவம்… செலவு… வைத்தியம்… அவரைப் போலப் பொறுமைசாலியை அளித்த பகவான்…

மறுபடியும் பளீர் என ஒரு வலி. இம்முறை காமாக்ஷியால் தாங்க முடியவில்லை. வாய் விட்டு அரற்றினாள். மெல்ல எழுந்திருக்க முயன்றாள், கால்கள் நடுங்கின. கண் இருட்டியது. எங்கோ ஆகாயத்தில் லேசாகப் பறப்பது போல் ஓர் உணர்ச்சி.

மறுவினாடி தடால் என காமாக்ஷி நிலைப் படி அருகில் தலைகுப்புற வீழ்ந்தாள். போட்ட கூக்குரல் அவனை ஓர் உலுக்கு உலுக்கியது. போர்வையை உதறிவிட்டு எழுந்து ஓடி வந்தான். ”காமாக்ஷி, காமாக்ஷி.” காமாக்ஷி நினைவிழந்து கண்களைச் செருகியவாறே கிடந்தாள். கையும் காலும் சில்லிட்டு… சங்கரனால் அவளைத் தூக்க முடியவில்லை. மிக்க சிரமப்பட்டுப் படுக்கையில் கொண்டு விட்டான். அவன் தூக்கம் பறந்தோடிவிட்டது. முகத்தில் ஜலம் தெளித்து விசிறலானான்.

பத்து நிமிடம் கழிந்துதான் கண் திறந்தாள். அவனை எதிரே கண்டதும் கைகளைப் பிடித்துக் கொண்டு விசும்பலானாள். அவள் மெலிந்த கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள் சங்கரன்.

அவளை என்ன கேட்பது? என்ன செய்ய வேண்டும்? ஏன் இப்படி? ஒன்றுமே புரியவில்லை. ஜந்து குழந்தைகளுக்குத் தந்தையாகியும் கூச்சம் அவனைப் பேச விடவில்லை. கடைசியில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு,

”லேடி டாக்டரைக் கூட்டி வரட்டுமா?” என்றான்.

”பணத்திற்கு எங்கே போவது?”

அதைப் பற்றி உனக்கு என்ன கவலை?”

காமாக்ஷி பலமாகச் சத்தமிட்டாள். ”எனக்குப் பயமா இருக்கே.” அவள் விழிகள் பயங்கரமாகச் கழன்றன.

”சீச்சீ! அசடு! பயப்படாதே…” சங்கரன் பரபரப்புடன் எழுந்து நின்றான்.

விளக்கைத் தூண்டிவிட்டு, பர்ஸைக் கவிழ்த்தான். சில்லரை நாணயங்கள் நாற்புறமும் சிதறி ஓடின. அவற்றைத் திரட்டி ஜேபியில் போட்டுக் கொண்டு கதவைத் திறந்து வெளியே நடந்தான்.

***

”கேஸ் ரொம்ப சீரியஸாக இருக்கிறது. இங்கே வீட்டில் வைத்துக் கொள்ள சவுகரியப் படாது, மிஸ்டர். ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய வேண்டும். தெரிகிறதா? குழந்தை உயிருடன்தான் இருக்கிறது… ஆனால் தாயை ரொம்பக் கவனிக்க வேண்டும். ஒரு வேளை நாளையே குழந்தையை எடுத்துவிட வேண்டும். எதற்கும் காலையில் 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள்” என்று தடதடவெனப் பொழிந்தாள் லேடி டாக்டர் லட்சுமி.

கைதிக் கூண்டிலிருந்து, ஜட்ஜின் வாயிலிருந்து என்ன தீர்ப்பு வருமோ எனப் பதைபதைக்கும் உள்ளத்துடன் அவரைப் பார்க்கும் மனிதனைப் போன்ற நிலையில் இருந்தான் சங்கரன். குழந்தைகள் மூலைக்கு ஒருவராய் மலர மலர விழித்துக் கொண்டு நின்றனர்.

”அப்பா, அம்மா ஏம்பா பேச மாட்டேன் என்கிறா?” என மழலையைக் கொட்டியவாறே கால்களைப் பிடித்துக் கொண்டாள் பஞ்சு. சற்றே பெரியவனான கிருஷ்ணனோ அரைத் தூக்கத்தில் விழித்துக் கொண்டதால் மூலையில் ராகம் இழுத்துக் கொண்டே இருந்தான். கோபுவும் லக்ஷ்மியும் வாய் திறவாது உட்கார்ந்து விட்டார்கள்.

டாக்டர் ஒர் இன்ஜக்‌ஷன் செய்தாள். காமாக்ஷியின் சலனமற்றுக் கிடந்த உடலில் சிறிது அசைவு ஏற்பட்டது. வலியால் புருவத்தைச் சுளித்துக் கொண்டாள்.

”இப்போ ரெஸ்டாய் தூங்குவதற்கு மருந்து கொடுத்து இருக்கிறேன். இந்த நர்ஸு இங்கே இருப்பாள். காலையில் சரியாக 8 மணிக்கு வந்து விடுங்கள்…” என்று கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள் டாக்டர்.

”டாக்டர்…” என ஆரம்பித்தான்.

”பயப்படாதீங்க. நான் இருக்கேன்!” என தன் வெண்ணிறப் பற்களைக் காட்டினாள் நர்ஸ்.

”நமஸ்காரம். வரட்டுமா?” என்றாள் டாக்டர்.

சங்கரன் அவசரமாக ஜேபியில் இருந்த சில்லரை நாணயங்களை எடுத்து நீட்டினான்.

***

மணி 8 அடித்து விட்டது. சங்கரன் நடையின் வேகத்தை துரிதமாக்கினான். அவன் கையிலிருந்த பையின் கனம் வேகத்தை சற்றுத் தளர்த்தினாலும், சங்கரனின் மனமும் நினைவும் ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்து கொண்டு இருந்தன.

காமாக்ஷியை முன்னதாகவே டாக்ஸியில் பாட்டியுடன் அனுப்பி விட்டான். வீட்டில் குழந்தைகளைக் கவனித்து விட்டு, பிறகு மருந்துக்கும் பணத்திற்குமாக அலைந்து அலைந்து சுற்றிவரவே நேரமாகி விட்டது. அவள் எப்படி இருக்கிறாளோ?

பத்தாம் நம்பர் பஸ்ஸுக்காகத் தவம் நின்றான் சங்கரன். இரவெல்லாம் தூக்கமின்மையும் கவலையும் அவனைப் பத்து வருஷங்கள் வயது அதிகமானவன் போல் தோற்றுவித்தன.

களுக் எனச் சிரிக்கும் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

இரு சிறு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டு நின்று இருந்தார்கள். குதூகலம், இளமையின் எக்களிப்பு, நாகரிகத்தின் உச்சத்திலே திளைத்துக் கொண்டிருந்த அந்த யுவதிகளைத் திணற அடித்துக் கொண்டிருந்தது. நகத்தைக் கடிப்பதும், மையிட்ட விழிகளைச் சுழற்றுவதும், கலகலவென நகைப்பதுமாய் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தனர்.

சங்கரன் ஓரக் கண்ணால் அவர்களை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான்.

மஞ்சள் வாயிலில் சிவப்புப் பூக்கள் அச்சிடப்பட்ட புடவையை ஸ்டைலாக உடுத்தி தலைப்பை நீளமாக விட்டிருந்தாள். புதிய மோஸ்தர் பாடியும் சோளி ரவிக்கையும் அவளுடைய அங்க சௌந்தர்யத்தை எடுத்துக் காட்டின. விழி நிறைய மை. பவுடர் வாசனை ஸ்டாண்டில் நிற்பவர்கள் மூக்கைத் துளைத்தது. இன்னொரு பெண் பச்சை நிறக் கரைப்புடவையைத் தலைப்பை மடித்துக் கட்டி இருந்தாள். ஒன்று இரண்டு ஆபரணங்களும், நாகரிக அலங்காரமும், இருவரையும் அழகிகளாக எடுத்துக் காட்டின.

பெண்… சங்கரனின் மனத் திரையில் காமாக்ஷியின் உருவம் தோன்றிற்று.

காமாக்ஷி நல்ல உயரம். வாளிப்பான தேகம். நல்ல சூழ்நிலையில் வளர்ந்ததினால் வியாதி, பலஹீனம் இல்லாமல் மதமதவென்று வளர்ந்திருந்தாள்.

”மதமதவென்று வளர்த்தியைப் பாரு! தீட்டு தீட்டு என்ற நடையையும் பலத்தையும் பார்த்தாலே பயமாயிருக்குடா” என்று அவன் விவாகத்தின் போது யாரோகூடச் சொன்னார்கள்.

பட்டணத்தின் நோஞ்சலான, இளைத்துக் கன்னம் ஒட்டிய பெண்களை அலங்காரப் பொம்மைகளாக நினைத்து வெறுத்ததால்தான், காமாக்ஷியை விவாகம் செய்து கொண்டான்.

மாநிறமானாலும் களையான முகம்; பாவம் நிறைந்த குறுகுறுத்த விழிகள். எப்பொழுதும் சோர்வே தட்டாத முறுவல் நெளிந்தோடும் முக விலாசம். எந்த உழைப்பிற்கும் பின்வாங்காத சுறுசுறுப்புடன், அவள், வாழ்வில் கரும்பைப் போன்ற இனிய சுவையுடன், தென்றலைப் போன்ற சலசலக்கும் இனிமையுடன், அவனுக்கு மலர்ச்சியூட்ட, அவன் வாழவிலே விளக்கேற்றி வைத்தொளி பரப்ப 12 வருஷங்களுக்கு முன் அவன் கைப் பிடித்தாள்.

ஆனால்… இன்று… காமாக்ஷி… இளைத்து உலர்ந்து எலும்பெடுத்து, ரத்தமற்ற சோகையால் வெளுத்து… ஏன்? எதனால்?…

அவளை விவாகம் செய்து கொண்டு அவன் வாழ்க்கை இன்பத்தை அனுபவித்து விட்டான். அவனுக்காகத் தன்னையே தியாகம் செய்து உழைத்து ஓடாகிப் போன அவள் இன்று சக்கையாகி விட்டாள். அவனைக் கைப் பிடித்த அவள் என்ன சுகம் கண்டாள்? குறைந்த வருமானம், போஷாக்கு இல்லாமல், இரண்டு வருடத்திற்கு ஓர் குழந்தை… இடையிலே இரண்டு குறை பிரசவம்… வியாதி பிடித்த குழந்தைகளைப் பராமரிக்கும் சக்திக்கு மீறிய வறுமை.

இள வயதில் வறுமையில் அவள் உழன்ற நாட்களில் வாய் திறந்து ஏதாவது கேட்டிருக்கிறாளா? இளமையின் முறுக்குடன் வாழ்வில் பிரவேசித்தவள். தாய்மைச் சுமை பிரதி வருஷமும் ஏற, சொல்லொணா வேதனை விழிகளில் சுடர்விட, இதயத்தின் எண்ணங்கள் குமுற, களைத்து… துவண்டு துடிக்கும் இன்றும்தான் அவள் வாய் திறந்து ஏதாவது கேட்கிறாளா!

சங்கரன் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. வெடித்துக் கொண்டு வரும் துயரத்தை ‘‘பகவானே!…” என்ற பெருமூச்சுடன் வெளியிட்டவாறே பஸ்ஸுக்காக முண்டி அடித்துக் கொண்டு ஓடினான்.

***

டாக்டர் லஷ்மி தயாராக ஆபரேஷன் கவுனை அணிந்து கொண்டு ஸ்டவ் எதிரே நின்றாள். நர்ஸ் பாக்கியம் ஆயுதங்களை கொதிக்க வைத்துப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். டாக்டர் லஷ்மி அறையில் குறுக்கிலும் நெடுக்கிலுமாய் உலாவாலானாள். அவளுடைய நிச்சலனமான முகத்தில் சிந்தனை பரவி நின்றது.

”ஏ பாக்கியம்! உனக்கு என்ன தோணுது?”

பாக்கியம் ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கும் காமாக்ஷியை அவநம்பிக்கையோடு ஏற இறங்கப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினாள்.

டாக்டர், காமாக்ஷியின் நாடியைப் பிடித்துப் பார்த்தாள். விழிப்பும் தூக்கமும் அற்ற நிலையில் காமாக்ஷி புரண்டு கொடுத்தாள். டாக்டரைக் கண்டதும் உதடுகளை அசைத்து ஏதோ சொல்ல முயன்றாள்.

அவள் அருகில் குனிந்து, ”உனக்கு என்னம்மா வேணும்?” என்றாள் டாக்டர்.

”ஒரு முறை அவரை…”

”யாரை அம்மா? பாட்டியைக் கூப்பிடட்டுமா?”

காமாக்ஷி வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

”உன் புருஷரையா?” டாக்டர் நர்ஸிடம் ஜாடை காட்டினாள்.

”ஊம். குழந்தைகளை ஒரு தரம்…” மேலே அவளால் பேச முடியவில்லை. பலமான வலி அழுத்தியது. சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள். டாக்டர் லட்சுமி அன்புடன் அவள் தலையைக் கோதியவாறே, ”பயப்படாதே, அம்மா. எல்லாம் கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும். இதோ கை நீட்டு, பார்க்கலாம்” என்றாள்.

ரத்தமற்ற எலும்பெடுத்த கையிலே ஊசியை ஏற்றினாள் டாக்டர். உடல் முழுமையும் ஏதோ விறுவிறுவென ஏறுவது போல் இருந்தது காமுவுக்கு. அவள் விழிகள் வாயிற்படியை வட்டமிட்டன.

நர்ஸுடன் உள்ளே நுழைந்த சங்கரனைக் கண்டதும், அவள் முகம் மலர்ந்ததையும், உதடுகளில் முறுவல் நெளிந்தோடியதையும் கண்ட டாக்டர் லட்சுமி மனதிற்குள் வியந்து கொண்டாள்.

‘அடி அசட்டுப் பெண்ணே, உனக்குத்தான் உன்னை இந்தப்பாடு படுத்தி வைக்கும் புருஷன் பேரில் எத்தனை பிரியம்! எவ்வளவு அன்பு!’

”பயப்படாதே காமு… நான் இருக்கிறேன்!” என்றான் சங்கரன். அவன் குரல் நடுங்கியது. கை கால்கள் உதறலெடுத்தன.

”குழந்தைகள்… ஜானு… அவளை என்ன பண்ணி…” மேலே பேச முடியாது குளோரபாரத்தின் நெடி மெல்ல ஏறியது. காமாக்ஷிக்குத் தன்னை யாரோ அணு அணுவாக அந்தகாரத்தில் இழுத்துச் செல்லுவது போல் தோன்றியது. ஒரே இருட்டு. கண்களை விழிக்க முயன்றாள்… இயலவில்லை. கை காலை அசைக்க முடியவில்லை. மனதில் திகில் சூழ்ந்து கொண்டது குழுந்தைகள் ஒவ்வொருவராக அவள் நினைவில் தோன்றினர்.

”பாவம்! குழந்தைகள் என்ன திண்டாடுகிறார்களோ! கோபு எச்சுவாவது பரவாயில்லை… ஜானு… பால் மனம் மாறாத குழந்தை… என்ன செய்வாள்? சிரங்கு அரிக்கத் துடித்தும் போவாளே!… இவருக்கு ஒன்றுமே பழக்கமில்லையே?…. பகவானே! குழந்தை… வீறிட்டால்…”

எல்லாம் மறைந்துவிட்டது. உடலை, விரலைக் கூட அசைக்க முடியவில்லை. காமாக்ஷி நினைவிழந்து விட்டாள்.

சங்கரன் வெளியே வந்தான். கதவு தாழிடப்பட்டது. வெளி ஹாலில் நிசப்தம் பரவி நின்றது. அவனைப் போன்று ஒரிருவர் மோட்டு வளையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர். சங்கரன் பெஞ்சில் சாய்ந்து கொண்டான். குறுக்கும் நெடுக்கும் டக்டக் என பூட்ஸ் ஒலி எழுப்ப நடை போடும் நர்ஸுகளையும், பரபரப்புடன் அலையும் வார்ட் பையன்களையும் பார்த்து அலுத்த சங்கரன் கண்களை மூடிக் கொண்டான். மருந்து வாசனை நெடி அவன் வயிற்றைக் கலக்கியது.

உள்ளே ஒலிக்கும் சிறு சப்தம் கூட அவன் சிந்தனையை கலைத்தது. ஆயுதங்கள் வைக்கப்படும் ஓசை, தடதடவென்று பைப் தண்ணீர் கொட்டும் சப்தத்தைக்கூடக் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டான். ஒவ்வொரு வினாடியும் மெள்ள மெள்ள ஊர்வது போலத் தோன்றியது மனதிற்கு.

மிகுந்த அயர்வால் சங்கரன் இமைகளைத் தூக்கம் அழுத்தியது. பெஞ்சில் சாய்ந்தவாறே கண் அயர்ந்து விட்டான்.

விழிப்பிலே, மனம் விவரமறிந்திருக்கும் நிலையிலே ஓடிய சிந்தனைகள் தொடர்ந்து எழுந்தன. பஸ் ஸ்டாண்டில் கண்ட பெண்களின் யௌவனப் படபடப்பும் குதூகலமும் உற்சாகமும் காமாட்சியிடமும் நிறைந்திருந்ததே, அதெல்லாம் எங்கே? அதற்குத்தான் முன்பே பதில் சொல்லியாகி விட்டதே. அவன் சேவையில் அவ்வளவையும் செலவழித்து விட்டாள். அவன் அதையெல்லாம் அனுபவித்துத் தீர்த்து விட்டான். சீ! நீ என்ன மனிதன். அவளைப் பற்றி, பலாபலன்களைப் பற்றி நினைவேயில்லாமல் நிலை கண் குருடனாக வாழ்ந்தாய்! உனக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பத்திரப்படுத்தி, அளவோடு பயன்படுத்தி, நீடித்து நிலைத்து நிற்கச் செய்து கொள்ள வேண்டு மென்ற நினைவே இல்லாமல் பாழாக்கிவிட்டாய்… கரும்பை வேருடன் பிடுங்கி விட்டாய்…

இல்லை… இல்லை… இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன்… அவள் இந்தப் பூட்டுக்குத் தப்பி வந்து விடுவாள். அவள் உடலில் ரத்தம் ஊற, பலம் ஏற, டானிக்குகள் வாங்கிக் கொடுக்க வேண்டும். குடும்ப வேலையில் அவள் சக்தி விரயமாகி விடாமல் பாதுகாக்க வழிகோல வேண்டும்…

திடீர் எனக் குழந்தை வீறிட்டது. சங்கரன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். காமாக்ஷியிருந்த அறைக்குள் கசமுசவென்று பேச்சு. கதவருகில் சென்று நின்றான்.

women and child

குழந்தை மறுபடியும் வீறிட்டது. ”ஆம்புளைப் பிள்ளை!” என்று நர்ஸ் கூறியது காதில் விழுந்தது. சங்கரன் முகம் விரிந்தது. ‘‘அப்பாடா!” என்று பெருமூச்செறிந்தான். நிச்சயம் பிள்ளையாருக்குப் பத்துக் காய் சூறை போட வேண்டும். இந்தக் கண்டத்திற்குத் தப்பி விட்டாள்! இனிமேல்… இனிமேல் அவளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா! நான் பெரிய முட்டாள்! பாவம்!.. அவளை ரொம்பக் கஷ்டப்படுத்தி விட்டேன்.

மறுவினாடி கதவு திறக்கப்பட்டது. அவனைத் தள்ளிக் கொண்டு நர்ஸ் வெளியே ஓடினாள். அவள் முகத்தில் ஏன் அத்தனை பரபரப்பும் கலவரமும்!

குழப்பத்துடன் அறைக்குள் எட்டிப் பார்த்தான். ஆபரேஷன் மேஜைமேல் காமாக்ஷி முகம் வெளிறி, கண்மூடிக்கிடந்தாள். லேடி டாக்டர் மும்முரமாக ஏதா இஞ்சக்‌ஷன் ஏற்றிக் கொண்டிருந்தாள். குழந்தை வீறிட்டு அலறிக் கொண்டேயிருக்கிறது.

அவனுக்குக் காரணம் புரியவில்லை. ஆனால் ஒரு பெரிய பயம் அவனைப் பிடித்து நெருக்கி அழுத்தியது. மூச்சு முட்டுவது போலிருந்தது. நர்ஸ் அவனைத் தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். அவள் பின்னால் நாலைந்து டாக்டர்கள் வந்து உள்ளே போனார்கள்.

சங்கரன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். ” டாக்டர்… இதைக் கொஞ்சம் பாருங்கள்…” என்று உள்ளே வந்த ஒரு டாக்டரிடம் சொன்னாள் டாக்டர் லஷ்மி. ”ஹோப்லஸ்கேஸ். சீரியஸ் ஹெமரேஜ் (ரத்த நஷ்டம்). நாம் என் செய்ய முடியும்?” என்றாள் தொடர்ந்து.

புதிய டாக்டர் நாடியைப் பார்த்து விட்டு, ” நம்முடைய உதவிக்கும் சக்திக்கும் மீறிவிட்டது!” என்று காமாட்சியின் கையை விட்டாள். கை தொப்பென்று கீழே விழுந்தது.

சங்கரனை யாரோ மண்டையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. ”ஐயையோ, டாக்டர்!” என்று வீறிட்டான்.

குழந்தையும் வீறிட்டது. ”என்னையும்தான் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய் விட்டாள்!” என்று சொல்லி அலறியது போல இருந்தது அதன் வீறிடல்.

(1950)

(‘கலைஞன் பதிப்பகம்’ வெளியிட்ட ‘மணிக்கொடி இதழ் தொகுப்பு’ பாகம் மூன்று புத்தகத்தில் இடம் பெற்ற சிறுகதை).

***

சரஸ்வதி ராம்நாத்

தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தவர். சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கோவை மாவட்டம் தாராபுரம் சொந்த ஊர். 1925, செப்டெம்பர் 7ம் தேதி பிறந்தார். இந்தியில் வித்வான் பட்டம் பெற்றவர். ‘கேந்திரிய இந்திய சன்ஸ்தான் விருது’, ‘இந்திய சன்ஸ்தான் விருது’, ‘பாரதீய அனுவாத் பரிஷத் துவிவாகிஷ் புரஸ்கார் விருது’ ஆகியவற்றைப் பெற்றவர். தி.ஜானகிராமன், தொ.மு.சி.ரகுநாதன், அகிலன், ஜெயகாந்தன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்ற பல எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் நாவலையும் இந்தியில் மொழிபெயர்த்தவர். 1990ல் ‘சர்வதேச பெண்கள் ஆண்டு’ கொண்டாடப்பட்டபோது, ‘இந்திய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 19 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1999, ஆகஸ்ட் 2ம் தேதி காலமானார். ஆரம்ப காலத்தில் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். பிறகு முழு மூச்சாக மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தொடங்கினார். இவருடைய மொழிபெயர்ப்புப் பணி மகத்தானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *