கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 12,760 
 

பெற்றோருடன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட நவீனா மிக ஆவலுடன் மாடியிலிருக்கும் தன் அறைக்கு வந்து, கதவைப் பூட்டினாள். அவள் மனதில் ஒரு கிளுகிளுப்பு ஏற்பட்டது. மனம் சிறகு கட்டிக் கொண்டது. போல் இணையத்தில் உலாப் போனது.

அவள் இதுவரை நேரில் பார்த்திராத, அருணின் பிம்பம் அவளது அகக் கண்ணில் தோன்றியது. அறையின் மூலையில் வைக்கப் பட்டிருக்கும் கணணிக்கு முன் குதூகலத்தோடு உட்கார்ந்தாள்.அவளுடைய இந்தக் கணணி விலை கூடியதும் அதி வேக      இணைய   இணைப்பும்      மிகுந்தது.        உலகிலுள்ள எந்த நாட்டவர்களுடனும் இணையம் மூலமாகத் தொடர்பு கொள்ளக் கூடிய சக்தியுள்ளது.துள்ளும் உள்ளத்தோடு  அந்தக் கணணி முன் அமர்ந்திருந்த நவீனா, அதிலே சமிக்ஞை காட்டுகிறதா என்று உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். .தினமும் அதே நேரம் அமெரிக்காவிலிருந்து , அருண் தொடர்பு கொள்ள, அவளுடைய கணணி இனிமையான தகவல்களை அவளுக்குத் தந்து அவளைப் பரவசப் படுத்தும். முதலில் அவள் தான் ஒரு தேவைக்காக அவனுடைய இணைய முகவரியுடன் தொடர்பினை ஏற்படுத்தினாள். இப்போதெல்லாம் அவனாகவே, இதே குறிப்பிட்ட நேரத்தில் தொடர்பு கொள்ள அவளுக்கு இனிமையாய்ப் பொழுது போகும்.

அருண்  அவளுக்கு இனிய நண்பனாகி அவளுடைய இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டு விட்டான். இது வரை அவர்களிடையே ஈமெயில் தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. பலவிதமான புதினங்கள். பிரேமையான வார்த்தைகள். எதிர்காலதைப் பற்றிய திட்டங்கள் என்று பலவிதமான விஷயங்களும் பகிந்து கொள்வார்கள்.

கணணி அவர்களுடைய நட்பை வளர்த்துக் கொண்டிருந்தது. ஐந்தாறு மாதங்களாகி விட்டது. தன் பெற்றோருக்கும் நவீன் இது பற்றிப் பெரிதாக எதுவும் சொல்லவில்லை நவீனா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவி. மாடியில் அவளுக்குத் தனியறை. யாருடைய தொந்தரவுமில்லாமல், அவள் படித்து முன்னேற வேண்டுமென்பதற்காக மாடிப் பகுதி முழுவதும் அவளுக்காகவே விட்டு விட்டு, பெற்றோர் கீழ்ப் பகுதியிலேயே இருந்தனர். நவீனாவின் தந்தை தொழில்  அதிபரான சங்கர் பெரு பணம் படைத்த மனிதர். தலை நகரிலேயே வளர்ந்து, படித்து வாழ்கின்றபடியால் நவ நாகரீக

மனிதராய் அவர் விளங்கினார். அவரைப் போலவே மனைவியும்  மகள் நவீனாவும் நாகரீக வனிதையராக இருந்தனர்.

உலகில் புதிது புதிதாய் என்னென்ன பாஷன் வருகிறதோ உடன் அவர்களின் வீட்டுக்கு அது வந்து விடும். நவீன   கணணித் துறையில் பெரிய ஆராய்ச்சியாளராய், மிளிர வேண்டுமென்று பெற்றோர் விரும்பினர் அவளது கல்விக்கு    வேண்டிய      வசதியெல்லாம் செய்து     கொடுத்தனர்.அவள் நிம்மதியாய் படிப்பதற்கு மாடியில் தனி அறை .உலகின் எந்தவோர் இடத்திலுள்ள கணனியுடனும் தொடர்பு  கொண்டு தகவல்களைப் பரிமாறும் வசதி கொண்ட கணணி வரையறையற்ற இணைய சேவையைப் பெற்றதாய் ஒரு நவீன கணனணி அவளது அறையில் இருந்தது. உலகமே தன் காலடிக்கு வந்து விட்டதாய் அவள் மகிழ்ந்தாள்.

ஒரு நாள் படித்துக் கொண்டிருக்கும்  போது அவளுக்குப் பாடத்தில் ஏதோ

புரியவில்லை, உடனே அதைப் புரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. கணனியின் முன் அமர்ந்தாள். இணைய தேடல் மூலம்  அமெரிக்காவில் இருக்கும்  இத்துறையில் பேர் போன ஒருவரின் இணைய முகவரியைத் தெரிந்து கொண்டாள். தனக்குத் தேவையான தகவலை  டைப் பண்ணிக் கணணிக்குள் செலுத்தி, இணையத்தில் தூது விட்டாள்.

அமெரிக்காவில் இருக்கும் அவனது கணணிக்குள் அது சமிக்ஞை காட்டியது, அவளது அதிர்ஷடம் உடனடியாகவே அவளின்  கணணி வேண்டிய தகவல்களை அவளுக்குத் தந்து அவளது பாடத்தைப் புரிய  வைத்தது, அவனது அறிவின் விளக்கம், அவளுக்கு வியப்பைத் தர மீண்டும்   மீண்டும் அவனுடன் தொடர்பு கொண்டு, அவன் அனுப்பும் தகவல்களைத் தன் கற்றலுக்குப் பயன் படுத்திக் கொண்டாள்.

அவனது அறிவின்   விரிவு,     நவீனாவுக்குஅவன்    மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது அவளின் அறிவுத் தேடலின் ஆர்வம் அவனுக்கும் பிடித்துப்

போயிற்று அவனும் அவளோடு தொடர்பு கொண்டு ,தகவல்கள் பரிமாறுவதை வழமையாக்கிக் கொண்டான்.

அவன் தான் அருண். அவன் அமெரிக்காவுக்கு வந்து பல வருடங்களாகி விட்டன. யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றில் பிறந்தவன். அவனது குடும்பம்

உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதைச் சின்ன வயதிலே உணர்ந்து பிஞ்சு வயதில் மனம் வெந்திருக்கிறான்.

இந்த ஒதுக்கலை எப்படி உடைக்கலாம் என்று, குமுறியிருக்கிறான். எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு வைராக்கியத்தோடு படித்து உபகாரச் சம்பளம் பெற்று அமெரிக்காவுக்கு வந்தான். உத்வேகத்தோடு படித்து, அங்கேயே நல்ல பதவியும் பெற்றுத் தான் காலூன்றி நிற்கக்கூடிய  தகுதியும் ஏற்பட்ட பிறகு தன் பெற்றோரையும் அந்த      நாட்டுக்கு அழைத்துத்      தன் கூட வைத்திருக்கிறான்.

அருணின் தாய் சொந்த ஊரில் இருந்த வரை ஒருவித மனக் குறையோடு வாழ்ந்து கொண்டிருந்தவள் தன் உறவினர்கள் யாவரும் தன்னை  ஒதுக்கி வைத்து விட்டார்கள். .உயிருக்குயிராய் இருந்த அண்ணனே தன்னை  விலக்கி வைத்துப் பிரிந்தும் போய் விட்டார், இந்த மனச் சோர்வு வாழ்நாள் முழுவதும் அவளிடம்  இருந்தது.

மகனிடம் அமெரிக்காவுக்கு வந்த பிறகு, அவளுக்குப் புது உற்சாகம் தோன்றியது .இந்த இடத்தில்  பாகுபாடுகள் இல்லை. தராதரப் பிரச்சனைகள் இல்லை. ஒரு வீட்டில் சேவகனாய் இருப்பவனும்  அந்த வீட்டு எஜமானனும்  ஒரே மேசையில்  சமமாய் இருந்து சாப்பிடுகிறார்கள். இந்த சமத்துவம் புவனேசுவரிக்கு  மிகவும் பிடித்து விட்டது, அருண் தன் பெற்றோரை, வேறு நாடுகளுக்கும் கூட்டிக் கொண்டு போய்க் காட்டி விட்டு வருவான். சொந்த நாட்டில் ஏற்பட்ட மனத் தாக்கமோ என்னவோ,அவளுக்கு அந்த அந்நிய நாடுகளில் விருப்பத்தை ஏற்படுத்தியது. அங்கேயே இனி ஒன்றி விடலாம்  என்ற நினைப்பும் உண்டானது.

அந்த நினைப்பில் மகனுக்குச் சொன்னாள்.

“அருண்! உனக்குப் பிடிச்ச பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ள நான் தடை சொல்ல மாட்டேன்.”

தொழில் ரீதியாக அவனுடன்  அந்த இடத்துப் பெண்கள் பலர் பழகுவதை பார்த்து விட்டு அவள் அப்படிச் சொன்னாள். அவனுக்குச் சிரிப்பாக இருந்தது அப்படியான எண்ணமேதும் அப்போது அவனிடம் தோன்றவில்லை, படிப்பிலும் ஆராய்ச்சியிலும்  அவனது மனம் லயித்திருந்தது.

“அம்மா நீங்கள் எந்தப் பெண்ணைக் காட்டுகிறீர்களோ, அவளையே நான் மெரி பண்ணிறன்.”

“சரி தம்பி, உனக்குத் தகுதியாய் எனக்கும் பிடித்ததாய், ஒரு பெண்ணைப்  பார்க்கிறன்,  என்றாள் தாய்“

அம்மா காட்டும் பெண்ணையே அவன் மணப்பதாக இருந்தான். ஆனால் நவீனாவின் தொடர்பு ஏற்பட்டு, அவன் மனதிலும அவள்  இடம் பிடித்துக் கொண்ட பிறகு “அம்மா நீங்கள் எனக்குப் பெண் பார்க்க வேண்டாம்.” என்றான்.

“ஏன் தம்பி? நீ பார்த்திட்டியா?”

“நேரிலை  இன்னும் பார்க்கேலை. நவீனாவைக் கல்யாணம் செய்யச் சொல்லிக் கம்பிய்யூட்டர் எனக்குச்  சிபார்சு பண்ணுது” என்றான்  நகைச் சுவையாக.

புவனேசுவரிக்கு ஓரளவு விடயம் தெரியும். .நவீனா என்ற பெண் கற்கை நெறிகளை அறிந்து கொள்வதற்காக அருணுடன் தொடர்பு கொள்கிறாள். அவனும் அவளுடைய கணணிக்குத் தகவல்களை அனுப்புகிறான். என்பது தெரியும். இப்போது அவளையே  கல்யாணம் செய்து கொள்ளலாமென்ற விருப்பத்தையும்       தாய்க்குத் தெரிவித்து      விட்டான். தாய்க்கும் சந்தோஷம்தான்.

“பேர் நவீனாவோ? நல்ல பேராய்க் கிடக்கு! எந்த இடத்துப் பெண்ணாம் அவள்?” ஆர்வத்தோடு கேட்டாள் புவனேசுவரி.

““நவீனா எங்கடை நாட்டுப் பெண்தான் அங்கைதான் இருக்கினம்.”

நீ   அந்த      இடத்துப்   பெண்ணையே   கல்யாணம்      செய்யப்      போறாய்?”பாகுபாடுகள் சாதிகள் பார்த்து  மனிதனை மனிதன் , விலக்கி வைக்கிற இடம். அந்த இடத்துப் பெண் வேண்டாம்” உறுதியாகக் கூறினாள் தாய்.

“அம்மா! ஒரு சிலர் அப்படி நடந்ததுக்காக  எல்லோரையும் அப்படி நினைக்காதையுங்கோ” என்றான் அருண்.

“எங்கடை ஊரிலை எல்லோரும் அப்படித்தானே நடந்தவை”

“நவீனா அப்படி இருக்க மாட்டாள். அவள் கம்பியூட்டர் யுகத்துப் பெண் அறிவிலே உயர்ந்தவள்” அருண் நம்பிக்கையோடு கூறினான்.

அந்த நம்பிக்கை தாய்க்குத் திருப்தி தந்தது.

“அப்படியிருந்தால் சந்தோஷம்தான் அருண்  நீ அவர்களை அமெரிக்காவுக்கு

அழைப்பித்து இங்கேயே கல்யாணத்தை நடத்த ஒழுங்கு செய்”

தாயின் சம்மதம் கிடைத்தவுடனே அவன் ஈமெயில் மூலம் நவீனாவுக்குத் தகவல் அனுப்பினான்.

அந்த நேரம் அவள் வீட்டில் இருக்கவில்லை. அவன் அனுப்பிய ஈமெயில் அவளது கணனியின் அஞ்சல் பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் நவீனா வீட்டிற்கு வந்தாள். வழமையாய் அவள் வீட்டுக்கு வந்தவுடன் தனக்கு அருணிடமிருந்து ஈமெயில் வந்துள்ளதா என்று கணணியை       இயக்கிப்       பார்ப்பாள் அன்றும்  அப்படித்தான்    உடை மாற்றாமலே  கணணியின்      முன்      அமர்ந்து இயக்கி, ஈமெயில் வந்திருப்பதை அறிந்து அதைத்      திரையில் பார்த்தாள்.

அவளையும்     பெற்றோரையும் அமெரிக்காவுக்கு      அழைக்க   ஒழுங்குகள் செய்வதாகவும் அங்கு வந்தவுடன் கல்யாணம் நடக்குமென்றும்  இவர்களைப் புறப்பட ஆயத்தமாகுமாறும் தகவல் கிடைத்தது. அவளுக்கு மனம் குதூகலித்தது. உடனே  பெற்றோருக்கு விஷயத்தைச் சொல்லி விட்டு, அருணுக்கும் ஈமெயில் அனுப்ப வேண்டும் நல்ல வேளையாக அவளது பெற்றோர் வீட்டில் தான் இருந்தனர்.

அப்பா1 நான் கல்யாணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறன்”

கம்பியூட்டர் யுகத்துப் பெண்னல்லவா. தயங்காமல் சொல்லி விட்டாள்.

“அடே !நானே கேட்கலாமென்றிருந்தனான். நீ சொல்லிவிட்டாய். மாப்பிள்ளை. …..?”என்ற கேள்விகுறியோடு  நிறுத்தினார் சங்கர்.

“கம்பியூட்டர் ஒரு நல்ல மாப்பிள்ளையை எனக்குக் காட்டியிருக்குது.” என்றவள் நடந்ததை அப்படியே மறைக்காமல் பெற்றோரிடம் சொன்னாள்.

“அவருடைய    பேர் அருண்    யாழ்ப்பாணத்து   ஆள்தான். இப்ப அமெரிக்காவிலை  பெரிய பதவியிலை இருக்கிறார்.  தாய் தகப்பனும் அவர் கூட இருக்கினம்.. எங்களை அமெரிக்கா அழைக்க ஏற்பாடு  செய்கிறாராம். அமெரிக்காவிலை தான் கல்யாணமாம்” என்று தொடர்ந்து சொன்னாள்.

அவளுடைய பெற்றோருக்கு மிகவும் சந்தோஷம்.

“அமெரிக்கா மாப்பிள்ளையா? எனக்கும் அமெரிக்கா போக ஆசை. எல்லோருமாய்ப் போவம்” என்றார் சங்கர்.

“ணங் ணங் ணங் ணங்”

“மணிச் சத்தம் கேட்குது. நவீனா .நல்ல சகுனம் .உன்ரை கல்யாணம் சிறப்பாக நடக்கப் போகுது. உனக்கு நல்ல வாழ்க்கை அமையப் போகுது” சந்தோஷப் பட்டாள் தாய்.

சகுனமா? என்ன அது?” என்றாள். நவீன கேலியாக.

சுவாமி அறையில் நவீனாவின் தாத்தா மயில்வாகனத்தார், பூசை செய்து கொண்டிருந்தார். மணி அடித்துத் தீபம் காட்டித்தான்,அவர் பூசை செய்வது வழக்கம். சரியான தடிப்புப் பிடித்தவர். பழமைவாதி. அவர் வெளியே வந்தவுடன் சங்கர் சொன்னார்.

“நவீனாவுக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு அப்பா”

“கல்யாணம் பேசினதாய், ஒரு ஆரவாரமுமில்லை அதெப்படி இருந்தாப் போலை நிச்சயமானது?”

சங்கர் சிரிப்போடு சொன்னார்.

“கம்பியூட்டர் தான் நிச்சயம் பண்ணியிருக்குது”

நவீனா களுக்கென்று சிரித்தாள். மயில்வாகனத்தார் புரியாமல் முகத்தைச் “ சுளித்தார் மாப்பிள்ளை அமெரிக்காவிலை அங்கைதான் கல்யாணம். நாங்கள் அமெரிக்கா போகிற ஒழுங்கெல்லாம், மாப்பிள்ளையே செய்கிறாராம்.´என்றார் சங்கர்.

“எல்லாம் நல்லாய் விசாரிச்சிட்டியா?”

“ஓமப்பா, எல்லாம் நல்ல திருப்தியாய் இருக்கு”

உண்மையாகவே  சங்கருக்குத் திருப்தியாக இருந்தது .”படிச்ச மாப்பிள்ளை

அமெரிக்காவிலை தொழில் செய்கிறார். நவீனாவின்ரை செலக்க்ஷன் என்று திருப்திப் பட்டுக் கொண்டார். அந்த மகிழ்ச்சியோடு தகப்பனிடம் சொன்னார்.

“அப்பா! நாங்கள் அமெரிக்கா போக இருக்கிறம் .நீங்களும் வாங்கோ”

மயில்வாகனத்தார் ஒரு நிமிஷம் தடுமாறிப் போனார்.

“என்ன? நான் அமெரிக்காவுக்கு வாறதா?ஓ நீங்கள் போனால் தள்ளாத வயதிலை  நான் தனிச்சு நின்று என்ன செய்யிறது?வந்தால் நவீனாவின்ரை கல்யாணத்தையும் பார்க்கலாம். சரி வாறன்”

“தான் அப்பா அம்மா நாலு பேரும்  அமெரிக்காவுக்கு வருகிறோம் என்று ஈமெயிலில் தகவல்  தந்தாள் நவீனா. ஈமெயிலின் வேகத்திற்கு ஈடாக நின்று    பயண      ஒழுங்குகளைச் செய்தான் அருண்.செய்து விட்டு நவீனாவுக்கு உடனுக்குடன் நவீனாவுக்குத் தகவல் தந்தான் நால்வரும் சுலபமாக அமெரிக்கா வந்து சேர்ந்தனர்.

அவர்களுக்குத்  தனியானதோர் இருப்பிடம்  ஒழுங்கு செய்திருந்தான் அருண் .மயில்வாகனத்தாருக்குப் பயணக்களைப்பு சுவாத்தியமாற்றம் எல்லாம் சேர்ந்து சிறிது சுகவீனம்       ஏற்பட,     அவர்      படுக்கையில்    ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று.

நவீனாவின்  கல்யாணம் ஒரு பெரிய  ஹோலில் பிரமாண்டமாய் ஏற்பாடு செய்யப்பட்டது. அருணின் பெற்றோரான புவனேசுவரியும் சதாசிவமும்  மணப் பெண்ணைக் கல்யாண மண்டபத்திற்க்கு அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.

பேத்தியின் கல்யாணத்தைப் பார்க்கிற உற்சாகத்தில் மயிவாகனத்தாரும் சுகமாகி எழுந்து நின்றார். இப்போதுதான் “இவர் என்ரை அப்பா” என்று சங்கர் அவரை அறிமுகப்படுத்தினார்.

புவனேசுவரியும்      மயில்வாகனத்தாரும் நேருக்கு   நேர் பார்த்துக் கொண்டார்கள்.

“இவரை எங்கேயோ  பார்த்த மாதிரிக் கிடக்கு” என்று புவனேசுவரியும் “இந்த மனுஷி      எனக்குத்   தெரிஞ்ச   ஆள் போலை   கிடக்கு”

என்று மயில்வாகனத்தாரும் யோசனையில் நின்றனர்.

யாரென்று கண்டு பிடிக்க முடியாமல் “ஐயாவின்ரை பேரென்ன? என்று புவனேசுவரி கேட்டாள்.

“மயில்வாகனம்” என்று பதில் வந்த உடனேயே அவர் யாரென்று அவளுக்குப் புரிந்து விட்டது.

திகைப்பும் சிரிப்புமாக நின்ற அவளைக் கூர்ந்து பார்த்தார். கண்டு பிடிக்க முடியாமல்”உங்கடை பேரென்ன?” என்றார்  அவள் உடனே பெயரைச்  சொல்லவில்லை

“பேர் சொல்ல என்ன தயக்கம்? நான் சொல்லுறன். இவளின்ரை பேர் புவனேசுவரி . என்ரை பேர் சதாசிவம்” என்றார் அருணின் தந்தை.

“எந்தப் புவனேசுவரி?”

“உங்கடை கூடப் பிறந்த தங்கை புவனேசுவரிதான்..”உங்கடை பேத்தி நவீனாவுக்கும் எங்கடை மகன் அருணுக்கும் திருமணம் செய்து வைக்கத் திருவருள் கூடியுள்ளது”என்று எகத்தாளமாகப் பெருமிதத்தோடு கூறினார் சதாசிவம்.. மயில்வாகனத்தாரின் கை விரல்கள் லேசாக நடுங்கின.

“டேய்! சங்கர் என்ன இது அலங்கோலம்?என்றார் வெறுப்பாக.

சங்கருக்கு மெதுவாக விஷயம் புரிகிற மாதிரி இருந்தது. அப்பாவின்  தங்கை புவனேசுவரி என்றவுடன் , பழைய சம்பவங்கள் நினைவில் வந்தன சங்கர் சிறுவனாய் இருந்தபோது, பெற்றோருடன் சொந்த ஊரில் இருந்தார்.

அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்த, புவனேசுவரியும் சதாசிவமும் விரும்பிப் பழகினார்கள். மயில்வாகனத்தார் தடுத்தார்.

“எங்கடை குலம் கோத்திரமென்ன? எங்கடை மதிப்பென்ன? அவன் ஆரோ? அவனை விட்டிடு” என்று கத்தினார். விரும்பிப் பழகியதால் புவனேசுவரியும் சதாசிவமும் கல்யாணம் செய்து கொண்டனர். மயில்வாகனத்தார் மிகுந்த வெறுப்புடன் தங்கையை  ஒதுக்கி விலத்தி வைத்து விட்டார். பெரிய அவமானமாய் போச்சுதென்று அந்த ஊரை விட்டே புறப்பட்டுத் தலைநகரில் குடியேறினார். அதன் பிறகு தங்கையை அவர் காணவேயில்லை

சங்கர் அந்த நினைவுகளில் நிற்க, மயில்வாகனத்தார் நவீனாவின் கையைப் பிடித்துக் கொண்டார்.

“நல்ல வேளை! .இன்னும் தாலி  ஏறேலை. பிள்ளை நவீனா  இந்தக் கல்யாணம் வேண்டாம். விட்டிடு” என்று கெஞ்சினார்.

“இதென்ன தாத்தா மென்ரல் கேஸாகி விட்டாரோ,  ஏதேதோ சொல்கிறார்” என்று நவீனா திகைக்க, சங்கர் அவளுக்கு ஓரளவு விஷயத்தைப் புரிய வைத்தார். விஷயம் புரிந்ததும் நவீனாவுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது.

“அருணின்ரை அப்பாவைப் பாருங்கோ பெரிய ஜென்ரில்மன் மாதிரிக் கிடக்கு அவருக்கு என்ன குறை? அவரைக் குறைவானவர் என்று  அருணின்ரை அம்மாவை அவரைக் கல்யாணம் செய்ததுக்காக விலக்கி வைச்சீங்களாம் மன்னிக்க முடியாத குற்றம் தாத்தா அது” கோபத்தோடு கூறினாள் நவீனா.

மனிதனை மனிதன் விலக்கி வைக்கிற வக்கிர நினைவுகள் அவளிடம் இல்லை .கணணி யுகத்துப் புதுமைப் பெண் அவள். மணப் பெண் கோலத்தோடு   நின்ற அவள்     தயக்கமில்லாமல்     குழப்பமில்லாமல் புவனேசுவரியின் பக்கத்தில் போய் நின்றாள்.

அருணின்ரை அப்பாவையும் அம்மாவையும் எனக்கு நல்லாய் பிடிச்சுக் கொண்டுது உயர்ந்த நிலையில் அவர்களை வைச்சுப் பார்க்கிறன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுவே என்ரை கொள்கை. அநியாயமான காரணங்களைச் சொல்லிக் கல்யாணத்தைக் குழப்ப வேண்டாம்  தாத்தா”

அவள் உறுதியாய் நின்ற நிலை  சொன்ன விதம் , இவைகளைப் பார்க்க மயிவாகனத்தாருக்குத் திகைப்பாக வியப்பாகக் கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது.

“இவள் சொல்வதுதான் சரியோ?இவ்வளவு நாளும் நான் நடந்து கொண்டது அநியாயமோ?” திடீரென்று அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது.

தங்கைச்சி! புவனேசுவரி! என்னை மன்னிச்சுக் கொள்ளம்மா” என்று குரல் தழு தழுக்கக் கூறினார்.

“முகூர்த்தத்திற்கு நேரமாகுது” சங்கர் நினைவூட்டினார்.

“மாப்பிள்ளை காத்துக் கொண்டிருப்பான்” சதாசிவம் சிரிப்போடு சொன்னார்.

புவனேசுவரி வெள்ளை  நிற “நெட்” கொண்டு நவீனாவின் முகத்தை மறைத்தாள்.காரை நோக்கி அழைத்துச் சென்றாள். மயில்வாகனத்தார் அவர்களுக்கு முன்னதாகக் காரின் முன் சீற்றில் ஏறினார்.

பிரிந்தவர்கள் சேர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் அந்தக் காரும் துள்ளலுடன் புறப்பட்டது.

– வீரகேசரி (03.02.2002)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *