கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 9,710 
 

அன்று பகல் பெய்யத் தொடங்கிய மழை விட்டப்பாடக இல்லை. மருத்துவமனையில் தனியார் அறையில்உள்ள ஜன்னல கண்ணாடியில் இருந்த மூடுபனியை நான் என் கைகுட்டையால் துடைத்து வெளியே பார்த்தேன். இலையுதிர் காலம் என்ற படியால் மேப்பல், செர்ரி மரங்களின் இலைகள் நிறம் மாறி காட்சி தந்தன. மரங்களின் இலைகlள் கீழே சொரிந்து கடந்தன. சில மாதங்களுக்கு முன் மரங்கள் நிறையப் பூக்கள். பார்க்க கண்கொள்ளாக் காட்சி. வைத்திய சாலைக்கு வந்தவர்கள் அதன் அழகைப் பார்த்து, ரசித்து பாராட்டி சென்றனர். அந்த பாராட்டு இப்போது இல்லை. மரங்களின் சுழற்சி முடியும் காலம் நெருங்கி விட்டது மனித ஆன்மா மறு பிறவி எடுப்பது போல அடுத்த சுழற்சிக்காக செல்லும் காலம் மரங்களுக்கு வந்துவிட்டது.

மத்திய கிழக்கு நாடன துபாயில் என் நண்பர் ஆத்மனுடன் நான் செலவு செய்த மகிழ்ச்சியான நாட்கள் என் நினைவுக்கு வந்தது . நாங்கள் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள் . நாங்கள் இருவரும் ஒன்றாக நிறுவனத்தில் சேர்ந்தோம். ஆத்மன், கேரள மாநிலத்திலிருக்கும் கொச்சினில் இருந்து வந்த இந்தியர். வெகு விரைவில் என் நண்பரானார் . அவர் மலையாளி என்றாலும், தமிழ் சரளமாகப் பேசுவார். அவரது தந்தை ராஜன் பல சொத்துகளுக்கு அதிபதி. ஆத்மனின் தாய் வள்ளியம்மா பழனியைச் சேர்ந்தவள். ராஜன், பழனி கோவிலுக்கு போயிருந்த பொது அவளைக் கண்டு. காதலித்து. திருமணம் செய்ததாக ஆத்மன் என்னிடம் சொன்னார்.

ஆத்மன் என் நம்பிக்கைகு பாத்திரமான உதவியாளராக இருந்தார். நாங்கள் இருவரும் மூன்றாம் நாட்டில் சந்திப்பதன் மூலம் ஒரு வலுவான நட்புறவை ஏற்படுத்திக் கொண்டோம் . துபாயில் எனது மனைவி வசந்தி,. மகள் சங்கீதாவுடன் வாழ்ந்து வந்தேன். ஆத்மன் ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தாலும் நல்ல மனவி ஒருத்தி இருக்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லை. அவருடைய திருமண வாழ்க்கையில் அவருக்கு பிரச்சினைகள் பல இருந்தன. அதை பற்றி எனக்கு அடிக்கடி சொல்லுவார் அவர் வேலை சம்பந்தமாக மங்களூருக்கு போய் இருந்த போது அர்த்தனாவை சந்தித்து, அவளின் பேச்சாலும் சிரிப்பாலும் கவரப்பட்டார். எடுத்ததேல்லாம் பால் என நினைக்கும் ஆத்மன், அர்த்தனாவின் குணம் அறியாது காதலித்து திருமணம் செய்தார், அந்த முடிவு அவருக்கு குடும்ப வாழ்கையில் நிம்மதியைக் கொடுக்கவில்லை.

ஆத்மன் என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவருக்கு காரமான ஆட்டு இறைச்சிக் கறி, மீன் பொரியலும் சுறா மீன் பிட்டும் என் மனைவி சமைத்து கொடுப்பாள் . நாங்கள் சாப்பிடுவதற்கு முன்பு நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்து பிராண்டி அருந்துவோம். அரசியல், சினிமா. ஸ்போர்ட்ஸ் பற்றி பேசுவோம். . தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி என்னுடைய மனைவி யாழ்ப்பாண முறையில் தயாரித்த உணவை ரசித்து ஆத்மன் உண்பார்

“ கேரளாவில் கூட, உணவு வகைகள் யாழ்ப்பாண உணவைப் போன்றது. ஏன் யாழ்ப்பாணத்து தமிழ் கூட கேரளா வார்த்தைகள் கலந்தவை அவர்கள் உடுக்கும் உடுப்புகளில் கூட கேரளத்தோடு ஒற்றுமையுண்டு” என்றார் ஆத்மன்.

“ கேரளா. ஈழத்தில் இருந்து வெகு தூரத்தில் இல்லையே ஆத்மன்” நான் சொன்னேன்

ஒரு நாள், குடித்துவிட்டு, ஆத்மன் சொன்னார் . “சுரேஷ் நீர் முந்தைய பிறப்பில் நல்ல கர்மா செய்திருக்கிறீர், அதனால்தான் உமக்கு நல்ல குடும்பம் அமைந்திருக்கிறது. நான் உம்மைப்போல் அதிர்ஷ்டசாலி இல்லை. எனக்கு மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கைதான் இருந்தது. என்னுடைய மனைவி ஒரு மங்கலூரியன். அவளோடு எனக்குப் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டன. அவள் என்னை திருமணம் செய்த பொது அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்தான் என்று எனக்குத் தெரியாது. என்னை பணத்துக்காக திருமணம் செய்தாள் என்பது பிறகு தான் எனக்குத் தெரிய வந்தது. ஒரு நாள் நான் வேலை விசயமாக ஒரு கிழமை சென்னை சென்று நான் கொச்சின் திரும்பிய பொழுது அவள் வீட்டில் இல்லை ”

“ ஏன் உம் மனவி வீட்டில் இருக்கவில்லை? என்ன நடந்தது அவளுக்கு “?

“ம்.. நீர் என்ன நினைக்கிறீர்?”

” என்ன நடந்தது அவளுக்கு? நீர்தான் சொல்லுமன் “

“அவள் தன் மங்களூர் காதலனோடு எனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடிப்போய்விட்டாள். எங்கள் இருவரின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் எல்லாவற்றயும் எடுத்துக் கொண்டு போய் விட்டாள். கள்ளி . அவள் மேல் நான் நம்பிக்கை வைத்து, எங்கள் இருவர் பேரிலும் வங்கியில் அக்கௌன்ட் வைத்திருந்தேன். அவள் என்னிடம் இருந்து பிரிந்து போனபின் என்திருமண வாழ்க்கை முடிந்தது. நான் சேமித்த பணத்தின் பெரும் பகுதியை அவள் கொண்டு போய் விட்டாள் . துரோகி. ” சொல்லியபடி இன்னொரு கிளாஸ் பிரண்டியை குடித்தார்

“நீ அவளை தேட முயற்சிக்க வில்லையா?”

“ஏன் நான் அவளைத் தேடவேண்டும்? அவள் எனக்கு உண்மையாக இருப்பதற்கு என்ன உத்தரவாதம்? அவளுடன் நான் ஒரு துன்பகரமான வாழ்க்கை வாழ்ந்ததற்கு பதிலாக தனியாக இருக்கவே விரும்புகிறேன் “என்று ஆத்மன் கண்களில் கண்ணீர் வழியச்சொன்னார்.

****

ஆத்மன் ஒரு திறமையான டென்னிஸ் வீரர். எனக்கோ டென்னிஸ் புதிசு அவர் ஆரம்பத்தில். ஸ்குவாஷ் மற்றும் டென்னிஸ் விளையாட எனக்குக் கற்று கொடுத்தார். அதற்கு பதிலாக, நான் அவருக்கு ஜோதிடமும் செஸ்சும் கற்றுக்கொடுத்தேன் . அவர் ஒரு திடக்காத்திரமான உடலமைப்புடன் மிகவும் துடிப்பு உள்ளவராக இருந்தார். அவர் ஒரு கருப்பு பெல்ட் கராத்தே வீரர் என்று பின்னர் எனக்குத் தெரியவந்தது.

எங்கள் நட்பு மிகவும் நெருக்கமாக வளரத் தொடங்கியது.

துபாயில் பணிபுரிந்த காலத்தில் அவர் பெற்றோரை இழந்தார். ஆத்மனின் மனைவி அவரை விட்டு சென்ற பிறகு அந்த கவலையில் அவரின் பெற்றோர் இறந்தனர். அந்த சம்பவம் அவர்களை கவலையில் ஆழ்த்தியதால் அவர்கள் இறந்தார்கள். தன் பெற்றோர்களைக் கொன்றதாக அர்த்தனாவை ஆத்மன் குற்றம் சாட்டினார். அவரது பெற்றோருக்கு மூத்த மகன் ஆத்மன். அவருக்கு ஒரு சகோதரன், பாலன் ஒரு கட்டிட பொறியியலாளன். ஆத்மனின் சகோதரி ஷீலா ஒருமென்பொருள் பொறியியாளர். அவர்கள் இருவரும் கனடாவுக்கு குடிபெயர ஆத்மனே ஸ்போன்சர் செய்தார். அவர்கள் இருவரும் கனடாவுக்கு வரமுன்பு அவர்கள் இருவரினதும் கல்விக்கு ஆத்மனே நிதி உதவி அளித்தார்.

ஆத்மனின் மனைவி அவரை விட்டு விலகியபோது அவருக்கு அவர்கள் ஆதரவாக இருக்கவிள்லை. தங்களுக்கு செய்த உதவிக்கு அவர்கள் நன்றி கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் ஆத்மனை மறு திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

*****

பழைய நினிவுகளில் இருந்து நான் விடு பட்டபோது அறைக் கதவு தட்டிய சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். டாக்டரும் நர்சும் அங்கே நின்றனர். ஆத்மன் ஒரு சடலத்தைப் போல் படுகையில் படுத்திருந்தார். டாக்டரும் நேர்சும் படுக்கையை நோக்கிச் சென்றனர் ஆத்மனின் முகத்தை பிளாஸ்டிக் குழாய்கள் மறைத்தன. அவையும் சில் கருவிகளும் ஆத்மனின் உயிரைப் பாதுகாத்தன . கட்டிலுக்ளகு பக்கத்தில் உள்ள மொனிட்டரில் ஆத்மனின் இருதயத் துடிப்பு கோலம் போட்டு காட்டியது.. ஆச்சிஜன் சிலிண்டர் கட்டிலுக்குப் மறு பக்கத்தில் இருந்தது . ஆத்மனின் கண்கள் மூடியபடி இருந்தன அவருக்குப் பக்கத்தில் நின்ற நான் ஆத்மனின் வலது காலைத் தொட்டுப் பார்த்தேன் ஓரு அளவுக்கு வெப்பத்தை என்னால் உணர முடிந்தது. அவரது விளையாட்டு வீரருக்கான உடல் அமைப்பு இப்போ அங்கு இல்லை.

அவருக்குப் பக்கத்தில் நின்ற என்னைப் பார்த்து “நீங்கள் நோயாளியின் சகோதரரா?” டாக்டர் கேட்டார்.

“இல்லை டாக்டர். நான் இவரின் நீண்ட கால நண்பன். இவருடைய தேக நலம் முன்னேற வாய்ப்பு உண்டா டாக்டர்?. கடந்த மூன்று கிழமைகளாக இவர் கோமாவில் இருகிறார் அவரது உடல் அரைவாசியாகி விட்டது. என் நண்பனுக்கு இந்த மோசமான நிலை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ” , நான் கவலையோடு சொன்னேன்

“மருத்துவர்கள் குழு இவரது மருத்துவ அறிக்கைகளை பார்த்தார்கள் அவர் கோமாவிலிருந்து வெளியே வருவார் என்பதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை என்று சொல்லி விட்டார்கள் . அவர் இந்த லைப் சப்போர்ட் கருவிகளோடு இருக்க வேண்டும். இப்படி எவ்வளவு காலம் இவர் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது, இதுபோல் எவ்வளவு காலம் அவதிப்பட போகிறாரோ தெரியாது . “மருத்துவரின் பதிலானது எதிர்மறையாக இருந்தது.

நான் அவரிடம் இருந்து அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆத்மன் கோமாவில் இருந்து வெளியே வருவார் என்று நான் நம்பினேன்.

“டாக்டர், அவருக்காக நாம் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவருக்கு ஒரு சகோதரர் மற்றும் சகோதரி இருக்கிறார்கள். அவர்கள் அவரைப் பற்றி கவலைப்படுகிறார்கள் ”

“நான் அவனது சகோதரனோடும் சகோதரியோடும் பேசுவேன், அதன் பின் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்போம் என்று முடிவு செய்வோம். நீங்கள் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாது. ” டாக்டர் சொன்னார்

டாக்டர் அவரது இதய துடிப்பு பரிசோதித்தார் அதன் பின் நேர்சுகு சில அறிவுறுத்தல்களை கொடுத்தார்.

நான் மீண்டும் ஆத்மனிடம் சென்றேன். நான் மந்திரித்து பூஜையில் வைத்து கொண்டுவந்த கறுப்பு நூலை என் போக்கெட்டில் இருந்து எடுத்து அவர் வலது கையில் கட்டினேன் நான் அவரது ஜாதகத்தை நன்கு அறிந்தவன் . ஆத்மன் ஐம்பது வயதை அடையும்போது அவருடைய காலம் நல்லதாக இருக்காது,அதனால் அவர் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் அவரிடம் இரு முறை சொன்னேன்.

அவர் நான் சொன்னதை கேட்டு சிரித்தார் ,

“சுரேஷ் எனக்கு திருமணமாகிவிட்ட காலத்திலிருந்து சுரேஷ் என் கெட்ட காலம் தொடங்கி விடடது இனி நான் . யாருக்காக வாழ்கிறேன்”? அவருடைய குரலிலும் முகத்திலும் உள்ள விரக்தியை நான் கவனித்தேன். அந்த உரையாடல் அவருக்கு நாற்பது ஆறு வயதில் நடந்தது. நான் ?சொன்னது வாக்கு, மூன்று வருடத்துக்குள் உண்மையாகுமோ? என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

நான் கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது ஆத்மனுக்கு துபாயில் நிரந்தரமாக தங்க விரும்பமில்லை. கேரளாவுக்கு செல்லவும் விரும்பமில்லை. அங்கு யாரும் அவருக்கு இல்லை அவரின் சகோதரனும் சகோதரியும் படிப்புக்கு சென்னை சென்று விட்டனர் . அவர் கேரளாவில் உள்ள தனது அனைத்து சொத்துக்களையும் விற்று, நான் கனடாவுக்கு குடிபெயர்ந்த பொது அவரும் குடிபெயர்ந்தார் . எங்கள் நட்பு கனடாவிலும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு மனேஜராக பணிபுரிந்த தொலை தொடர்பு ஒரே நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அவர் தனது சகோதரியோடும் அல்லது சகோதனோடும் வாழ விரும்பவில்லை. அவர் என் வீட்டிற்கு அருகே ஒரு படுக்கை அறை உள்ள அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்தார் . அடிக்கடி தன் தனிமையைப் போக்க என் வீட்டுக்கு வருவார் அவர் வந்தால் வீட்டில் ஒரே கலகலப்பு

சில மாதங்களுக்கு முன்பு என் மகளின் பதினாறாம் பிறந்தநாளுக்கு என் வீட்டில் ஒரு பார்ட்டி வைத்தேன் . அன்று என் துபாய் நண்பர்கள் சிலரை அழைத்திருந்தேன் துபாயில் என் வீட்டில் பல முறை அவரை பலர் சந்தித்ததால் அவர்கள் ஆத்மனை நன்கு அறிந்திருந்தனர்.

அன்று , ஆத்மன் பலரின் கவனத்தை தன் பேச்சின் மூலம் கவர்ந்தார். 60-களில் வெளிவந்த செம்மீன் படத்தில் இருந்து இருபாடல்களைப் பாடி வந்தவர்களின் பாராட்டை பெற்றார். கேரளா மாந்தரீகம் மற்றும் கதகளி நடனம் பற்றிய சுவாரஸ்யமான கதைகளை அவர் விவரித்தார். அவர் ஒரு விலையுயர்ந்த ஒமேகா பெண்கள் கைக்கடிகாரத்தை என் மகளின் கையில் பரிசாக கட்டினார் – நான் அதை எதிர்பர்கவில்லை ஒரு விலையுயர்ந்த பரிசை வழங்கியதற்காக அவரை நான் கடிந்து கொண்டேன் . அவரது பதில், “சுரேஷ். உன்னையும் உன் குடும்பத்தையும் தவிர வேறு யாரும் என்னை கவனித்துக்கொள்ள இல்லை. நீ என் சகோதரனைப் போல் இருக்கிறாய். என் சொந்த சகோதரரும் சகோதரியும் என்னுடைய பணத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் பெற்றோரின் இறுதி ஊர்வலத்திற்கு கூட வந்ததில்லை.

ஆத்மன் அவர்களிடம் கோபமாக இருப்பதை நான் கண்டேன் , அதனால் ஆத்மன் அவவர்களோடு வாழ விரும்பவில்லை என் தெரிந்தது . கடவுள் ஏன் இந்த நல்ல மனிதருக்கு இவ்வளவு சோதனைகளை கொடுகிறார்? நான் தலையணையில் அவரது தலையின் நிலையை சரி செய்தேன் .

****

நான் திரும்பி அறைக்குள் வந்தபோது, ஆத்மனின் சகோதரன் பாலன் மற்றும் சகோதரி ஷீலா அறையில் இருந்தனர்

“நீங்கள் இருவரும் டாக்டரிடம் பேசினீர்களா?” என்று அவர்களை பார்த்து நான் கேட்டேன்

அவர்கள் பதில் சொல்லவில்லை.

“அவர் என்ன சொன்னார்?” நான் மீண்டும் அவர்களிடம் கேட்டேன்.

“இன்று இறுதி முடிவை அவர்கள் எடுப்பார்களாம்.. இவரை இப்படி இருக்க தொடர்ந்து அனுமதிக்க முடியாதாம் . அவர்கள் தகுந்த நடவடிக்கையை எடுக்க நாங்கள் அவர்களுக்கு அனுமதியளித்தோம் . “ஷீலா சொன்னார்

“பாலன் நீர் என்ன சொன்னீர்?”

“டாக்டர்கள் சொன்னனதுக்கு நானும் ஒப்புதல் கொடுத்தேன். வேறு வழி இல்லை”.

“நங்கள் இருவரும் அவசரப்பட்டுவிட்டீர்கள். அவர் இதில் இருந்து பிழைப்பார் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. அவருக்கு சிறிது நாட்கள் கொடுங்கள். அவர் தனது வாழ்க்கையில் இதை விட மோசமான பிரச்சனைகளை எதிர்கொண்டவர். அவர் மனத் தைரியம் உள்ளவர் ” என் வார்த்தைகள் நடுங்கின.

அவர்கள் பதில் சொல்லவில்லை. அறை அமைதியாக இருந்தது. நர்ஸ் வந்தாள்,

“என்ன இந்த பெரிய கூட்டம்?. ஒரு ஆள் மட்டுமே நோயாளிக்கு உதவியாக இரவில் தங்கலாம். மற்றவர்கள் தயவு செய்து அறையை விட்டு போகவும்” எங்களுக்கு நர்ஸ் கண்டிப்போடு தெரிவித்தார். நான் பகல் முழுவதும் ஆத்மனோடு இருந்தபோது, ​​ஷீலா இரவு முழுவதும் அவரை கவனித்துக் கொண்டார். நான் ஆத்மனின் இனத்தவன் இல்லை. ஆத்மனை பாலனுக்கும் ஷீலாவுக்கும் பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு அதிகமான உரிமைகள் இருந்தன. நான் அறையில் இருந்து வெளியே செல்லப்போகும் பொது , என் மனைவியும் மகளும் உள்ளே வந்தார்கள் . நான் ஷீலாவின் முகம் மாறியதைக் கண்டேன். ஷீலாவுக்கு என் மனைவியின் வருகை பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தது. எங்கள் குடும்பத்துடன் ஆத்மனின் நெருங்கிய நட்பே காரணம்.

“அப்பா, ஆத்மன் மாமா எப்படி இருக்கிறார்? டாக்டர்கள் என்ன சொன்னார்கள்? அம்மாவும் நானும் கோவிலுக்குப் போய் , அவருக்கு ஒரு சிறப்பு பூஜை செய்தோம். அவருக்கு இந்த பிரசாதம் கொண்டு வந்துள்ளோம். அவரது நெற்றியில் இந்த புனித விபூதியை பூசவும் “. என் மகள் சங்கீதா எனின்டம் விபூதி மற்றும் குங்குமம கொடுத்தாள். நான் அதை ஆத்மனின் நெற்றியில் பூசச் செய்தேன் .

“டாக்டரிடம் கேட்காமல் ஓன்று அவர் உடலில் பூச வேண்டாம் பிறகு இன்பெக்டின் வந்து விடும் அவரை தொட வேண்டாம். நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கும்போது சுத்தம் குறித்து டாக்டர்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுகிறார்கள் ” ஷீலா சொன்னார்

விபூதி பூசுவதை ஷீலா நிறுத்தியது என் மனைவிக்கு பிடிக்கவில்லை.. பாலன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவர் தனது சகோதரி சொல்வதை ஏற்றுக் கொண்டார் என்று எனக்குத் தெரிந்தது . பாலன் ஓன்றும் பேசாமல் அறையில் இருந்து வெளியேறினார்.

“தன் அண்ணனின் உயிரைக் காப்பாற்றுவதில் ஷீலாவுக்கு உண்மையான ஆர்வமா?” என்று நான் நினைத்தேன். நான் பதில் சொல்லவில்லை. நான் அவளிடம் பதில் சொன்னால் அவள் ஒரு காட்சியையே அங்கு உருவாக்கியிருப்பாரள் என்று எனக்கு தெரியும். ஆத்மனின் சகோதரி எனக்குப் புதியவள். அவள் சற்று முன்கோபி என்று ஆத்மன் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது. என் மனைவியின் முகத்தில் கோபத்தைக் கண்டேன். நான் பேசாமல் கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள மேசையில் விபூதி பாக்கெட் வைத்தேன். என் நண்பரைப் பார்த்தேன். அவரது கண்கள் மூடியிருந்தன, அவருடைய முகத்தில் அமைதி இருந்தது

.ஷீலாவை பார்க்காமல் என் குடும்பத்துடன் அறையிலிருந்து வெளியே சென்றேன்.

******

என்னால் அந்த இரவு தூங்க முடியவில்லை. நான் கடிகாரத்தை பார்த்தேன் அது இரவு 11.30 காட்டியது. ஆத்மன் பற்றி நான் கவலைப்படுகிறேன் என்று என் மனைவிக்கு தெரியும். டாக்டர்கள் அவருடைய வாழ்வைப்பற்றி ஒரு முடிவை எடுக்கப் போகிறர்கள் என்பதால் அந்த இரவு நான் ஆத்மனோடு தங்கியிருந்திருக் வேண்டும் என்று உணர்ந்தேன்.

நான் படுக்கையில் இருந்து எழுந்து முகம் கழுவ குளியல் அறைக்கு சென்றேன். விராந்தையில் லைட் போடாவிரும்பவில்லை. இரவு விளக்கு மட்டுமே மங்களாக எரிந்து கொண்டிருந்தது. நான் முகம் கழுவி அறையில் இருந்து வெளியே வந்தபோது, ​​ஆத்மன் விராந்தை வாசல் கதவருகே நிற்பதை பார்த்தேன். அது ஆத்மன் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர் தூய வெள்ளை உடையில் ஒரு மூடுபனிபோல் நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம் இருந்து 10 அடி தூரத்தில் நின்றார் . அசாதாரணமான மூக்கை துளைக்கும் மல்லிகை வாசனை வீசியது. ஜஸ்மின் வாசனையை ஆத்மன் விரும்புபவர் என்று எனக்குத் தெரியும். அவர் புன்னகை செய்து தான் மிகவும் ஆரோக்கியமாக .இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னார் ..

“ஆத்மன் நீர் தானா அங்கே நிற்பது “? என்று கேட்டேன்

அவரிடம் இருந்து பதில் வரவில்லை. மங்கிய வெள்ளை நிற ஆடை உடுத்த உருவம் விலகி நின்று சிரித்தது .

“நீர் சௌக்கியமாக இருக்கிறீரா? உம்மை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்களா? ”

அந்த உருவம் ஆமாம் என்று தலையை ஆட்டுவது போல் ஒரு தோற்றம்

அது என் கேள்விக்கு பதில் போல் இருந்தது. அந்த உருவம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

நான் அவரை நோக்கி நகர்ந்தேன் “ஆத்மன் வந்து எனக்கு கை கொடு ”

நான் அவரது கையைப் பிடித்துக் கொள்ள என் கையை நீட்டினேன் .. திடீரென்று உருவம் என் பார்வையில் இருந்து மறைந்தது. எனக்கு பயம் வந்து விட்டது என் உடலில் வியர்வை கொட்டத் தொடங்கியது. என் இதயம் பட படத்தது

“ வசந்தி கெதியிலை இங்கை ஓடிவாரும்” என் மனைவியை கூப்பிட்டேன். என் குரல் கேட்டு என் மனைவி ஓடி வந்தாள்.

” என்ன சுரேஷ் என்ன? ஏன் நடுங்குறீர்? ஒருவரோடு நீர் பேசுவதை நான் கேட்டேன். அது யார்? வசந்தி கேட்டாள்.

“நான் விராந்தையில் ஆத்மனைப் பார்த்தேன். . அவர் எங்களைப் பார்க்க வந்திருக்கிறார். நான் அவரிடம் பேசினேன். அவர் ஒரு வார்த்தை கூட என்னோடு பேசவில்லை. நான் கேட்ட கேள்விக்கு அவன் சிரித்து தலையை மட்டும் அசைத்தார் . நான் கைகுலுக்க அவரை நோக்கி சென்ற போது அவர் மறைந்து போனார் ”

“நீங்கள் எப்போதும் உங்கள் மனதில் அவரைப் பற்றி நினைத்து இருக்கலாம். அதனால்தான், நீங்கள் உங்கள் கற்பனையில் அவரைப் பார்த்திருக்க வேண்டும் அது தான் பயந்து இருக்குறீர் சுரேஷ் “அவள் எனக்கு ஆறுதலளித்து படுக்கை அறைக்கு என்னை அழைத்துச் சென்றாள்.

“ இப்ப என்ன நேரம் வசந்தி “ நான் அவளைக் கேட்டேன்

“இப்போத சாமம் பதின்ரண்டு மணி. கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு படுங்கள் . காலையில் உங்கள் நண்பரைப் போய் பார்க்க முடியும்”.

வசந்திகொடுத்த தண்ணீரரைக் குடித்துக் . கொண்டிருந்த போது, ​​எனது படுக்கைக்கு அருகே இருந்த டெலிபோன் மணி ஒலித்தது. நான் டெலிபோனை எடுத்தேன்.

“யார் அது. சுரேஷ் இல்லையா? டெலிபோநில் பெண் குரல் கேடடது

ஷீலாவின் குரல் என அறிந்தேன். அது மருத்துவமனையிலிருந்து வந்த கோல் என்று எனக்குத் தெரியும்.

நான் சொன்னேன், “ஆமாம். நான் தான் இங்கே சுரேஷ் பேசுறன் ”

“சுரேஷ் உங்களுக்காக ஒரு துயரமான செய்தி வைத்திருக்கிறேன்.”

” என்ன செய்தி ?”

“என் அண்ணாவின் ஆயுட்காலம் 11.50 மணியளவில் முடிந்து விட்டது அவர் உயரைப் பாதுகாத்த கருவிகளில் இருந்து விடுவிக்கப் பட்ட சில நிமிடங்கள் கழித்து அவர் காலமானார். இரு மணி நேரத்தில் அவரின் உடலை மோச்சரிக்கு கொண்டு போய்விடுவார்கள் . நீங்கள் அதற்கு முன் வந்து அவர் உடலை பார்த்தால் நல்லது “, ஷீலா சொன்னாள்.

“கடவுளே ஆத்மனின் ஆத்மா சாந்தி பெறட்டும் ” என் வாயுக்குள் சொல்லியப்டி நான் என் மனைவியிடம் டெலிபோனை கொடுத்தேன். ஷீலாவோடும் பாலனோடும் அவள் பேசினாள். நான் படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்து என் தலையில் என் இரு கைகளை வைத்தபடி நான் விம்மி விம்பி அழுதேன்.. என் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. என் கன்னங்களில் கண்ணீர் கசிந்தது.

“சுரேஷ். கவலைப்படாதையும். ஆத்மன் மேலும் இருந்து கஷ்டப் படாமல் போய் சேர்ந்தது நல்லது இந்த உலகை விட்டு உம் நண்பர் போகமுன் அவரின் ஆத்மா உம்மை வந்து சந்தித்திருக்கிறது. நீர் விறாந்தையில் பார்த்தது அவருடைய ஆத்மா. அவருடைய ஆத்மா உங்களை எவ்வளவுக்கு மதிக்கிறது பாருங்கள். டாக்டர்கள் அவரை மேலும் பரதவிக்க விடாமல் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார்கள். அவருடைய ஆத்மா இப்போது மறு பிறவியை நாடிப் போய் விட்டது . நீங்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எழும்பிப் போய் . உங்கள் முகத்தை கழுவுங்கள் . மருத்துவமனைக்கு சென்று அவருடைய உடலை முதலில் பார்ப்போம். நாளை சனிக்கிழமையன்று அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.

என் மகள் சங்கீதா என் அருகில் நின்பதைப் பார்த்தேன்.

“அப்பா பார் அந்த அத்தை ஷீலாவை உன்னை ஆத்மன் மாமாவின் நெற்றியில் விபூதி பூச அனுமதிக்கவில்லை. அவள் எவ்வளவு கேட்டவள். நீங்கள் அதை பூசி இருந்தால் , அவர் வாழ்ந்திருக்கலாம் ” சங்கீதா அழுதபடி சொன்னாள்.

நான் அவளுடைய நம்பிகையை நினைத்து மனதுக்குள் சிரித்தேன்,

“சங்கீதா. ஆத்மன் மாமாவுக்கு எங்களை விட்டுப் பிரியும் நேரம் வந்துவிட்டது. யாரும் அதை நிறுத்த முடியாது. புறப்படும் போது அவர் எனக்கு விடைகொடுக்க வந்திருக்கிறார். அது நம் நட்பின் அடையாளமாக இருக்கிறது. ஒரு நாள் நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தை விட்டு பாசத்தில் இருந்து விடு பட்டு வெளியேற வேண்டும் ” என்றேன்.

பூக்களும் இலைகளும் உதிர்ந்த மரங்கள் தான் என் கண் முன் வந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *