கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 11,017 
 

அம்மா, சொல்லுங்க என்று ஆரம்பித்தாள் என் அக்கா மேனகா. காலேஜ் ஸ்டுடென்ட்.

“நீங்க அண்ணி க்கு ரொம்ப இடம் கொடுக்கறீங்க. அவர்கள் என்ன சொன்னாலும் சரின்னு சொல்றீங்க. ஏன்? ” என்ற அவளின் கேள்விக்கு,

அம்மா, பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார். நான் கடைக் குட்டி பிரகாஷ். ரெண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னு புரியாமல் கேட்டுகிட்டு இருந்தேன்.

நான் என்ன சொல்லணும்னு நீ விரும்பற ? அம்மா கோபமாக கேட்டதும் மேனகா அக்கா, மௌனமானாள்.

“எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க?” மேனகாவிடம் கேட்டேன்.

அண்ணி , என்னை ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு போக வேண்டாம் னு சொல்லிட்டாங்க. அம்மாவும் சரின்னு சொல்றாங்க. கோபமாக வெளியேறினாள்.

ஏம்மா, இப்படி செய்தே ? அக்கா போக நீயாவது பெர்மிஸ்ஸின் கொடுக்கலாமே ? என்றுஅம்மாவிடம் கேட்டேன்.

அம்மா சொன்னார் , “அண்ணி, உன் அக்கா நல்லதுக்கு தானே சொல்றாள்; கேட்டு கிட்டா இவ கொறைஞ்சா போய்டுவா” -என்றாள்.

ஏம்மா, எப்போதும் அண்ணி வார்த்தைக்கு நீ மறுப்பு சொல்றதில்லை. – கேட்டது நான்.

அம்மா, ” அவள் எல்லாத்தையும் யோசித்து தான்டா செய்கிறாள். ஒருத்தர் மேல அனாவசியமான கோபம் கூடாதுடா. மற்றவங்க வார்த்தைகளை அலட்சியமும் செய்யக் கூடாது. நல்லது சொன்னா எடுத்துக்கணும். பார். உங்க அண்ணன் மிலிட்டிரி ல இருந்து எப்போவோ தான் வருகிறான். பொறுப்பில்லாமல் மேனகா ஊர் சுத்துறது நல்லதா ? அண்ணியும் நம் குடும்பத்துக்கு தானே பாடு படறா.இவள் நமக்காக எங்கேயும் போகாமல் நம்ம கூடவே இருக்கிறாள். குழந்தையையும் பார்த்துகிட்டு, அவங்க வீட்டுக்கு கூட போகாமல் இங்கிருந்து வேலைக்கு போறா.என்கிட்டே கேட்டுட்டு தான் எதுவும் செய்கிறாள். அப்புறம் ஏன் நான் அவகிட்ட காரணமே இல்லாம கோபிக்கணும் ?

நான் – ” நல்ல பதில் தான் ; எனக்கு உன்கிட்ட ஒண்ணு கேக்கணும் அம்மா; ரொம்ப நாளாக கேட்க நினைத்தேன். எல்லோர் வீட்டிலும் மருமகள் கிட்ட குறை கண்டுபிடிக்கறதே தொழிலா இருக்காங்களே. நீ ஏன்மா ? அப்படி இல்லை ?

அம்மா- கொஞ்ச நேரம் எதையோ சிந்தித்தாள்; நான் சொல்றது உனக்கு புரியுமா ? தெரியலை; ஆனால் புரிஞ்சிப்பேன்னு நம்பறேன் என்ற பீடிகையுடன் ஆரம்பித்தாள்;

என்னை வளர்த்தது, எங்க பாட்டி தான். செல்லம்மா பாட்டி. தாத்தா ரொம்ப சீக்கிரமே காலமாயிட்டார்; ஆனாலும் மற்ற பெண்கள் போல பாட்டி ஊர் வம்பு பேசி நான் பார்த்ததில்லை; தனக்கு வாழ்க்கை இப்படி ஆயிட்டதேன்னு கவலைப்பட்டதில்லை; எங்க அப்பாவுடைய கல்யாணத்திற்கு பின்னர் , அம்மாவையும் நல்லா கவனிச்சுக்கிட்டாங்க; எப்போவும் மருமகளை வேற்று மனுசியா நினைத்ததில்லை; பிள்ளைகளை அவங்க கிட்ட விட்டுட்டு சினிமா பார்த்துட்டு வாங்கன்னு அனுப்பி வைப்பாங்க ன்னா பார்த்துக்கோ. அப்பேற்பட்ட மனுஷி.

அவங்களுக்கு, பிள்ளையார் சாமின்னா ரொம்ப பிடிக்கும். தினமும் என்னை கூட்டிகிட்டு கோவிலுக்கு போவாங்க. நான் கூட கேட்பேன் ” ஏன் பாட்டி இந்த கடவுளை நாம கும்பிட்டால் தான் நிறைய நல்லது செய்வாரா ? அது தான் நாம் தினமும் இங்கு வருகிறோமா? என்று.

பாட்டி சொல்லுவார்; – இல்லடா கண்ணு. நமக்கு நல்லது செய்யணும்னு மட்டும் கடவுளை கும்பிட கூடாது. கஷ்ட காலம் வரும் போது நாம் சமாளிக்கும் மன உறுதியை கொடுங்கன்னும் வேண்டிக்கணும்.”

நான் வளர வளர அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்கள் ஏராளம். அதில் முக்கியமான ஒண்ணு நம்ம வாழ்க்கையை பிறத்தியாருடன் ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் நம் வாழ்க்கையிலும் நமக்கு திருப்தி இராது. மத்தவங்க வாழறதை பொறுக்கவும் முடியாது. ”

இதெல்லாம் தான் என் வாழ்கை நல்லபடி அமைய உதவிய விஷயங்கள். உங்க அப்பா இறந்த பின் நான் உங்களை ஆளாக்க நல்ல உறுதுணை யாக இருந்தது என் அம்மாவும், என் பாட்டியின் அறிவுரைகள் தான்.

இப்போ, உன் கேள்விக்கான பதில் நான் சொல்லவா ? ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உடனே நல்ல நட்பாக பழக முடியுது. இதுவே ஏன் ஒரு பெண் மற்ற பெண்ணுடன் நட்பு கொண்டாட முடிவதில்லை? என்ற கேள்விக்கு நான் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன். காரணம் நானே சொல்கிறேன் என்று தொடர்ந்தார்.” தான் சொல்வது தான் சரி என்ற ஆளுமை தன்மை” அது இயல்பாகவே ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும். ஆனால் எங்க பாட்டி காலத்தில் அதை வீட்டில் அதிகமான பேர் செய்ததில்லை; இன்று உன் அக்கா முதல் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே ஆளுமையை பிரச்சனையாக மாற்றுகிறார்கள்; வீடு என்பது கோவில் போல நல்ல சந்தோஷமும், அமைதியும் தரும் இடமாக இருக்கணும். அதை ஆண், பெண் , இருவரும் புரிந்து நடக்கணும். ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பத்து உறவுகள் தான் முதல் சப்போர்ட் ஆக இருக்கணும். அதே நேரம் தப்பு வழில போன தட்டி கேட்டு திருத்துற உறவாகவும் இருக்கணும். நம்ம பாரம்பரியமும், பண்பாடும் குடும்ப வாழ்வை ஒட்டி இருப்பதற்கான அடையளமாக தான் நாம் நம் கடவுள்களுக்கும் குடும்ப அமைப்பை நம் முன்னோராகள் அமைத்தார்கள். ”

உங்க அண்ணி, யார் ? அவள் ஒரு பெண். உன் அக்கா போல எண்ணின் மறு பிரதி ; எனக்கு அவங்க வயதில் என்னென்ன ஆசைகள், பிடிப்புகள், பிரச்சனைகள் இருந்ததோ, அது தான் காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப கூட குறைய இருக்கும். அவங்களும் அதை தான் கடந்து வாழணும். ஒவ்வொரு பெற்றோரும், பெரியோர்களும் நம்மால் முடித்த உதவியை அவர்களுக்கு செய்யணும். அது தான் நல்லதும் கூட. நானும் அதை தான் செய்கிறேன்.

உங்க அக்காவுக்கு நான் எப்படி உதவி யாக இருக்கிறேனோ, அதே போல தான் அண்ணிக்கும் உதவியாக இருக்கிறேன். இதில் என்ன தவறு? –

அம்மாவின் சரமாரியான பேச்சில் நான் பேச்சற்று போயிட்டேன்.

அம்மா, உங்களுக்குள் எத்தனை தெளிவு? என்றதும் அவள் சிரித்தாள். இதுவெல்லாம் என் பாட்டி எனக்கு தந்தது. ரொம்ப சிம்பிள். “தன்னை போல பிறரை உணர முயற்சி செய்தால் எல்லோர்க்கும் தானாக இந்த புரிதல் அமையும்”. அம்மா முடித்து விட்டார்.

எனக்குள் பிரகாசமான எண்ணம் தோன்றியது,

நமது காலச்சாரத்தின் மதிப்பே நல்ல விசயங்களை தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்வது தானே. இந்த நல்ல விசயங்கள் நம் நாட்டின் தலைவர்கள் பின் பற்றினால் நம் நாடும், வீடும் நன்றாக இருக்கும். உண்மை தானே ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *