அம்மாவுக்காக…

 

ராஜூவுக்கு வியப்பாக இருந்தது. மேனேஜர் எதற்காக, தன்னை கூப்பிட்டு இருப்பார். வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் நிலையில், வேறு யாரிடமும் இல்லாத அளவுக்கு, தன்னிடம் மட்டும் அவர் தனியாக அக்கறை எடுத்துக் கொள்வதாக தோன்றியது. பல முறை, அவனே அதை கவனித்தும் இருக்கிறான். உடன் பணிபுரிபவர்கள் கூட, சில முறை அவனிடம் கேட்டு இருக்கின்றனர். ஆனால், ராஜூ பதில் சொன்னதில்லை. அது, அவனுக்கும் தெரியாது.
ஒருவித குழப்பத்துடன் லேசாக கதவைத் திறந்தான். கண்ணாடிக் கதவு லேசாக விலகியவுடன், “ஏசி’யின் குளிர்காற்றுடன் சந்தன வாசம் வீசியது. மேனேஜர் எப்போதும், சந்தன மணம் கொண்ட ரூம் ஸ்பிரேயைத்தான் பயன்படுத்துவார் என்று, அவனுக்கு தெரியும். உள்ளே வந்தான்.
ஒரு சில வினாடிகள் அவனை அமைதியாகப் பார்த்த மேனேஜர், உட்கார சொல்லி, மெதுவாக ஆரம்பித்தார்…
“”என்ன ராஜூ… முதல் மாதச் சம்பளம் வாங்கிட்டீங்க, எப்படி, “பீல்’ பண்றீங்க? ரொம்ப எக்ஸ்சைட்டிங்கா இருக்குமே?”
“”ஆமாம் சார்… ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
அம்மாவுக்காக...“”வழக்கமா தினமும், ஓவர் டைம் பார்ப்பீங்க. இன்னிக்கு, 5.00 மணிக்கே கிளம்பறீங்க போலிருக்கு…”
“”அது… வந்து சார்…”
“”நோ… நோ… பர்சனல்ன்னா சொல்ல வேண்டாம். நான் சும்மாத்தான் கேட்டேன்.”
“”அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். காலேஜ் படிக்கும் போதே, எப்படா ஒரு வேலைக்கு போவோம். சொந்தமா சம்பாதிப்போம்ன்னு ரொம்ப ஆர்வமா இருக்கும். என்னை படிக்க வைக்க, எங்கம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு, எனக்கு தான் சார் தெரியும். இதுவரைக்கும், எங்கம்மா கையில, அவங்களுடையதுன்னு மொத்தமா, ஒரு ஐயாயிரம் ரூபாய் கூட இருந்தது கிடையாது. அப்படி இருந்தா, அது அவர்களுடையதாக இருக்காது. எனக்கு காலேஜ் பீஸ் கட்ட, யாரிடமாவது கடனா வாங்கியிருப்பாங்க…
“”ஆனா, இப்போ என்னுடைய இந்த முதல் மாத சம்பளம் இருபதாயிரம் ரூபாயை, மொத்தமா எங்கம்மா கையில கொடுத்து, “இது, முழுக்க முழுக்க உனக்கு மட்டுமே சொந்தமான பணம்மா’ன்னு சொல்லணும் சார். இது, என்னோட ரொம்ப நாள் ஆசை. அதான், இன்னிக்கு ஓவர் டைம் பார்க்காம, சீக்கிரமா வீட்டுக்கு போகணும்ன்னு நினைச்சேன்.”
கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர், லேசாக தலையை சாய்த்து, மேஜையில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டார். அவர் கண்களில், கண்ணீர் கசிந்ததை ராஜூவால் கவனிக்க முடிந்தது.
லேசாக அதிர்ந்தவனாய், தயக்கத்துடன் கேட்டான்…
“”சார்… சாரி சார். நான் ஏதும் தப்பா…”
“”இல்லேப்பா… நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அவ்வளவுதான்.” கண்களைத் துடைத்துக் கொண்டார். நிமிர்ந்து அவனை பார்த்தார்.
“”சார்… உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கணும். நீங்க தப்பா எடுத்துக்கலன்னா,” தயக்கினான் ராஜூ.
“”பரவாயில்லை கேளுங்க.”
“”சார்… நான் இந்த ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகுது. ஆனால், மத்தவங்கக்கிட்ட இல்லாத அளவுக்கு, எங்கிட்ட மட்டும் நீங்க கொஞ்சம் அக்கறையா நடந்துக்கற மாதிரி எனக்கு…” தயங்கித் தயங்கி அவன் பேச, லேசாக ஆரம்பித்து, பின் பலமாக சிரித்து முடித்தார் மேனேஜர்.
“”நீங்க இன்டர்வியூக்கு வந்திருந்த போது, “உங்களுக்கு எதற்காக இந்த வேலையை கொடுக்கணும்’ன்னு கேட்டதற்கு, ஒரே வார்த்தையில், “எங்க அம்மாவுக் காக…’ன்னு சொன்னீங்க. ஞாபகம் இருக்கா?”
“”ஆ…மாம் சார். ஞாபகம் இருக்கு.”
“”அப்படி ஒரு பதிலை நான் யாரிடமிருந்தும், அதுவரை கேட்டதில்லை. அப்பவே, உங்களுக்கு இந்த வேலையை கொடுத்துடணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.”
சற்று நிறுத்தி தொடர்ந்தார்…
“”உங்களை மாதிரிதான் ராஜூ, நானும் இருந்தேன். சொல்லப்போனால், உங்களைவிட அதிகமாகக்கூட கஷ்டப்பட்டிருக்கலாம். என்னுடைய அப்பா, நான் ஸ்கூல் படிக்கும் போதே இறந்துட்டார். அதுக்கப்புறம், என்னோட அம்மாதான் என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க…
“”நானும், உங்களை மாதிரியே தான், நல்லா சம்பாதிச்சு அவங்களை பார்த்துக்கணும், அவங்க கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கு வேலை கிடைக்கிறதுக்குள்ள, அவங்களும் போய்ட்டாங்க…”
“”சாரி சார்.”
சில நொடிகள் மவுனத்துக்கு பின், அவரே தொடர்ந்தார்…
“”இப்ப இந்த கம்பெனிக்கே நான் மேனேஜர். எக்கச்சக்கமா சம்பளம் வாங்கறேன். ஆனா, என்னோட சம்பளத்துல, ஒரு நூறு ரூபாய் புடவை கூட அம்மாவுக்கு வாங்கி கொடுக்க முடியல… எனக்கு அதுக்கு குடுத்து வைக்கல.”
உணர்ச்சி வசப்பட்டதில், அவர் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது.
“”இதனாலேயே, நான் எவ்வளவு சம்பாதிச்சாலும், அதுல எனக்கு திருப்தியே கிடைக்கிறதில்லை. அந்த பணத்தால, எனக்கு முழுமையான சந்தோஷமும் இல்லை. மனசுக்குள்ள நிம்மதியும் இல்லை.
“”அந்த மாதிரியொரு நிலைமை உங்களுக்கு வந்துடக்கூடாதுன்னு தான், நான் உடனே இந்த வேலையை உங்களுக்கு கொடுத்துட்டேன். அதுதான், உங்களுக்கும், மத்தவங்களுக்கும், நான் உங்க மேல ரொம்ப
அக்கறையா இருப்பது போல் தெரியுதுன்னு நினைக்கிறேன்.”
இப்போது புன்னகை.
நெகிழ்ச்சியுடன் வெளியே வந்தான் ராஜூ. உடனே, அம்மாவை பார்க்க வேண்டும் போல தோன்றியது.
ஒரு வாரம் கழிந்திருக்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் தாமதமாகத்தான் எழுந்தான்.
குளித்துவிட்டு, சாப்பிட அமர்ந்த போது, மொபைல் போன் தானும் எழுந்து விட்டதை உணர்த்துவது போல, லேசாக அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தான்.
ரிமைண்டர். இன்று மேனேஜருக்கு பிறந்த நாள் என, பொறுப்புடன் நினைவுப்படுத்தியது.
“வாழ்த்துச் சொல்லி ஏதாவது, பரிசளிக்கலாமா?’ என்று யோசித்தான் ராஜூ.
உடனடியாக அவருக்கு போன் செய்தான்.
சில வினாடிகளுக்கு பின், போனில் அவர் குரல்.
“”ஹலோ…”
“”சார்… நான் ராஜூ!”
“”ராஜூ… சொல்லுங்க… என்ன விஷயம்? சண்டே கூட போன் பண்றீங்களே… எதுவும் விசேஷமா?”
“”எஸ் சார்… உங்களுக்குத் தான். பிறந்தநாள் வாழ்த்துகள்!”
“”ஓ மை குட்னஸ். எனக்கே ஞாபகம் இல்லை. உங்களுக்கு எப்படி? ரொம்ப நன்றி ராஜூ.”
“”நம்ம கம்பெனி சைட்ல, உங்களோட புரோபைல்ல பார்த்தேன் சார். பை த வே, நீங்க இப்ப ப்ரீயா… உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும் சார்…”
“”ம்… என்ன விஷயம் சொல்லுங்க…”
“”சார்… நீங்க வாங்கிய முதல் மாச சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“”எதுக்காக இப்படி திடீர்ன்னு கேட்கறீங்க… ம், யாராலையும் அதை மட்டும் மறக்க முடியாதே. நல்லா ஞாபகம் இருக்கு. நாலாயிரத்து ஐநூறு ரூபாய்.”
“”சார்… நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா, ஒரு நாலாயிரத்து ஐநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு, காந்தி நகர் ஆஞ்சநேயர் கோவில் பக்கம் வர்றீங்களா?”
“”எதுக்காக ராஜூ?”
“”வாங்களேன் சார்… சொல்றேன்.”
அவர் மீண்டும் ஏதோ கேட்க ஆரம்பிக்க, ராஜூ போனை வைத்து விட்டான்.
அடுத்த, இருபதாவது நிமிடம், இருவரும் காரில் இருந்தனர்.
“”எங்க ராஜூ போறோம்?”
“”வாங்க சார் சொல்றேன்,” என்றவன், காரை கடைவீதி நோக்கி ஓட்டினான்.
அவரை ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான். ராஜூ தான் வாங்கினான். பத்து புடவைகள்.
அதன் பின், ஒரு பேக்கரிக்கு சென்று, கேக் வாங்கி வந்தான். நடப்பவை எதுவும் புரியாமல், மேனேஜர் அமைதியாக அமர்ந்திருக்க, ராஜூ ஒவ்வொரு கவருக்குள்ளும், ஒரு புடவையையும், ஒரு கேக்கையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
ஒரு சிறிய தெருவுக்குள் சென்று, வலமாக திரும்பி, “அன்னை இல்லம்’ என்ற போர்டு வைக்கப்பட்டிருந்த ஒரு காம்பவுண்டுக்குள் நுழைந்து நின்றது கார்.
தன் பிறந்த நாளைக் கொண்டாட, ராஜூ செய்த ஏற்பாடு இது என்பது, மேனேஜருக்கு புரிய ஆரம்பித்தது. அந்த கவர்களுடன் இருவரும் உள்ளே வந்தனர்.
அங்கே வரிசையாக கட்டில்களில், நடப்பதற்கு கூட சிரமப்படும் வகையில், வயதான அம்மாக்கள் இருந்தனர்.
“”ம்… எடுத்து வந்து எல்லாருக்கும் குடுங்க சார்.”
ஒருவித தயக்கத்துடன் எடுத்துக்கொடுக்க ஆரம்பித்தார் மேனேஜர். வரிசையாக கொடுத்துக் கொண்டே சென்றபோது, நடுவில் ஒரு பாட்டி, கையில் கவரை வாங்கியதும், சட்டென கண் கலங்கினார். பார்த்த மாத்திரத்தில், மேனேஜருக்கும் உள்ளுக்குள் என்னவோ போல் ஆகியது.
அந்த பாட்டியோ, அழ முயன்று முடியாமல், உதடுகள் துடிக்க, தன் இரு கைகளாலும் அவரின் கன்னங்களை ஏந்திக் கொண்டார்.
தழுதழுத்த குரலில், “”பெத்த புள்ளைங்களே ஒதுக்கித்தள்ளிட்ட இந்த அம்மாவை கவனிக்க, நான் பெறாத புள்ளை நீ வந்திருக்கியா… என் ராசா…” என்று அழத்தொடங்க, மேனேஜர் நெஞ்சுக்குள்ளே, இதுவரை அனுபவித்திராத, ஒரு பிரளயமே நடந்து முடிந்தது போன்ற ஒரு உணர்வு. தன்னையும் மீறி, வெடித்து அழ ஆரம்பித்தார்.
அந்த தாயின் கைகளில், முகம் புதைத்து விம்மினார்.
பல வருடங்களாக, மனதில் கனத்துக் கொண்டிருந்த, ஒரு பெரிய சுமை, இப்போது இறகாக மிதக்க ஆரம்பித்தது அவருக்குள்.

- சு.வரதராஜன் (நவம்பர் 2012)

வயது: 21
கல்வித்தகுதி: பொறியியல் – எந்திரவியல் பிரிவில் இறுதியாண்டு.
கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். கல்லூரியில், கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கு கொண்டு பரிசு பெற்றுள்ளார். பத்திரிகைக்கு சிறுகதை அனுப்பி, பரிசு பெறுவது இதுவே முதல் முறை. நிறைய எழுத வேண்டும் என்பது இவரது ஆசை. 

தொடர்புடைய சிறுகதைகள்
அது ஒரு காலைப்பொழுது ! பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் பெயர் வைக்கப்படாத ராகங்களை பாடி மகிழ்ந்து திரிந்தன. இரண்டு புறமும் பச்சைப்பசேல் நிலங்களாய் கடந்ததைப் பார்த்தபோது அந்த கிராமத்தில் இன்னமும் நீர் மிச்சமிருப்பதையும் நீர் திருடும் கம்பெனிகளின் கழுகு கண்களில் ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஒற்றை மாட்டின் கழுத்து மணி கணீர் என்று ஒலிக்கிறது... சாலையில் நேற்று முளைத்த நாகரிக ஒலிகளுக்கு மத்தி யில், "கிணுங் - கிணுங்" - அந்த ஆரவாரமற்ற மணி யோசை யாருக்குக் கேட்கப்போகிறது?. வண்டி என்ற பேரில் அது மெல்லத்தான் அசைகிறது. ...
மேலும் கதையை படிக்க...
''ஆயிரந்தான் இருந்தாலும் பொம்பள அட்ஜஸ் பண்ணித்தான் போவணும்மா...'' எரிச்சலாக இருந்தது அவளுக்கு... 'இந்த வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்' என்று. 'கிராமத்துக் கூட்டம் இப்படி வரப்போவது முன்னமே தெரிந்திருந்தால்... எங்கேயாவது தொலைந்திருக்கலாம்' என்றும் தோன்றியது. நல்லவேளை பிள்ளைகள் பள்ளிக்குச் ...
மேலும் கதையை படிக்க...
பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா..! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது. விமானத்திலிருந்து குதிக்க முடியுமா..? என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்..! விமானம் ஏதாவதொரு நாட்டில் ...
மேலும் கதையை படிக்க...
சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்…உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட….காலங்கார்தால என்னதிது…..மழையா…? என்று போர்வையை உதறி எழுந்தார்..வீடு வெறிச்சென்று சமையல் அறையில் சப்தமின்றிப் பாலைவனம் போலிருந்தது ! .அதைத் தொடர்ந்து மின்வெட்டும் கூடவே வந்ததும், ...
மேலும் கதையை படிக்க...
எப்படியும் வந்து விடுவாள் என்ற தன் நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற அகிலனின் பதற்றத்தை ஓடிக் கொண்டிருந்த கடிகார முள்ளின் டிக், டிக் சப்தம் அதிகமாக்கிக் கொண்டிருந்தது. மனமும் திக், திக் என்று தன் சுருதியைக் கூட்ட திறந்து கிடக்கும் வாசற்கதவை ...
மேலும் கதையை படிக்க...
பயணம்
பிருந்தா மாமியின் முதல் ஆண்டு திதி, மூன்று நாட்கள் நடந்து முடிந்த பத்தாம் நாள், பிருந்தாவின் கணவர் மகாதேவன் காணாமல் போனார். சென்னையின் புறநகர் பகுதியொன்றின், தனி வீட்டில் தன் மூத்த மகன் ரவியுடன் இருந்தார் மகாதேவன். ரவி, ரவியின் மனைவி உஷா ...
மேலும் கதையை படிக்க...
கண்மாய்க் கரையும் கருவேலங்காடுமாக காட்சியளிக்கும் இது ஈரம்புளி கிராமம். 24 மணிநேரத்தில் ஒருமுறையாவது அங்குள்ள முகங்கள் களைகட்டுமோ இல்லையோ, முன்று வேளையும் கச்சேரி போல களைகட்டுகிறது அங்குள்ள பேருந்து நிறுத்தம். பேருந்து பழசுதான், ஆனால் பிரயாணம் செய்யும் பயணிகள், கொஞ்சம் புதிதாகத் ...
மேலும் கதையை படிக்க...
“மத்தளங்கள் கொட்டுங்கள், மந்திரங்கள் சொல்லுங்கள். பெட்டை மாட்டைக் கொண்டுவந்து தாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம் தெரியவில்லை. ஆழம் காணமுடியாத சோகம் நிழலாடியது. மாமியார் தர்ம சங்கடத்துடன் அவளைப் பார்த்தாள். மாமிக்கு வயது எழுபது ஆகப்போகிறது. அவளுக்கு, அதுதான் கிழவியின் மருமகளுக்கு முப்பத்தைந்து ...
மேலும் கதையை படிக்க...
பிரெஞ்சு மூலம்: மோலியர் கடவுளைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டால் உலகத்தின் கண்ணில் மண்ணைவாரிப் போடலாம்; திருடுவது, பொய் சொல்லுவது முதலிய கெட்ட செயல்களில் தலையிடுவதைவிட வேதத்தையும் ஒழுக்கத்தையும் ஒரு வியாபாரமாக நடத்தினால், உலகில் பெரும்பாலோரை ஏமாற்றிவிடலாம். அவ்விதம் ஏமாற்றப்படுவதாக அவர்கள் மனத்துயர் அடையவும் ...
மேலும் கதையை படிக்க...
அவன் அப்படித்தான்…
அந்த வண்டியின் ஓட்டம்
வெளிச்சம்
சொல்லிச் சென்றவள்!
மீளாத பிருந்தாவனம்..!
பொய்க்காத நம்பிக்கை
பயணம்
ஆடு புலி ஆட்டம்
மஞ்சுளா
ஆஷாட பூதி

அம்மாவுக்காக… மீது 2 கருத்துக்கள்

  1. r.k.jeyprakash says:

    அருமையான ஸ்டோரி , வாழ்த்துக்கள்,

  2. A.T.Deivasigamani says:

    படித்த கதைகளில் சிறந்த கதை இது. அனைவருக்கும் இந்த கதை பொருந்தும். படித்த போது கண் கலங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)