அக்கினிப்பிரவேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 18,139 
 

சென்னை சென்ரல் ரயில் நிலையம்.

ராமுசார், என்றழைக்கப்படும் ராமச்சந்திரன் சென்னைக்கு சில முறை வந்திருந்தாலும், சென்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு முதன்முதலாய் வருகிறார். எண்ணிலாப் பேருக்கு அடையாளம் தந்த சிங்காரச் சென்னையின் கம்பீர அடையாளமாய் நிமர்ந்து நிற்கும் சென்ட்ரல் இரயில் நிலையக் கட்டிடத்தை பார்க்கும், ரசிக்கும், பிரம்மிக்கும் மனநிலையில் இல்லை அவர்.

ஸ்டேசனில் நுழைந்ததும் – இதுவரை அவர் பார்த்து உணர்ந்திருந்த, இதோ இப்போது வந்து இறங்கிய டவுன்பஸ் வரை அவருடன் தொடர்பில் இருந்த தமிழகத்திற்கு மிக அந்நியமான வேறு ஒரு பிரதேசத்தில் சஞ்சரிப்பதாய் உணர்ந்தார். தாய்மொழியில் பேசுவோர் எளிதில் அகப்படவில்லை. அவரது வாய்மொழியும் வசப்படவில்லை. பரந்திருக்கும் நிலையத்தில் எங்கு டிக்கெட் எடுப்பது? பரபரக்கும் ஜனசந்தடியில் யாரிடம் விசாரிப்பது? குழம்பினார். கலைந்து அலையும் கூட்டத்தில் தயங்கி நகர்ந்தார். கண்ணைக்கட்டி ரோட்டில் விட்டது போல் திணறல்.

ஒருவழியாக தட்டுத்தடுமாறி விசாரித்து டிக்கெட் எடுத்துவிட்டார். அன்ரிசர்வ்டு டிக்கெட், சென்னையிலிருந்து சாப்ராவிற்கு. கங்கைநதி பிரவாகமாய் ஓடும் வாரணாசிக்குப் போகப் பிரயத்தனப்பட்டு, நேரடியாக வாரணாசிக்குப் போகும் இரயில், இன்றைய தினத்தில், இப்போதைக்கு இல்லையென்பதால் சாப்ரா செல்கிறார். அங்கிருந்து எளிதில் காசிக்கு செல்லலாம் எனவும் விசாரித்து அறிந்து கொண்டிருந்தார்.

அவரது மனதின் நம்பிக்கையின் படி வாரணாசி எனும் காசி, புனித ஸ்தலங்களுக்கு எல்லாம் தலைநகரம். தெய்வத்தின் சிரசிலிருந்து புறப்பட்டு பூவுலகைப் பேரருள் கொண்டு பரிபாலிக்கும் கங்கைநதி பாயும் புனித நகரம். மனித பாபங்களை விநாசனம் செய்யும் மஹாசேத்திரம். சாகும் முன் ஒரு முறையாவது காசியைப் பார்க்க வேண்டும் என்பது அவரது கனவு. இப்போது சாகத் துணிந்து விட்டார். சாவதற்காகத்தான் இப்பொழுது சாப்ரா செல்லும் இரயிலேறி காசிக்குப் போகிறார்.

சாப்ரா செல்லும் எக்ஸ்பிரஸ் கிளம்ப இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது, தமிழகத்தின் இண்டு இடுக்கில் எங்கும் நுழைந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் இருக்கும் வடக்கத்தியர்கள் அனைவரும் இன்றே கிளம்பிவிட்டது போல, இரயிலில் அவ்வளவு கூட்டம். லக்கேஜ் வைக்கும் இடமெல்லாம் மனிதர்கள். லக்கேஜ்களின் மீதும் மனிதர்கள். இடங்கிடைத்து அமர்ந்த மனிதர்கள் மீதும் மனிதர்கள். அவர்களின் பான்பராக் புகையிலை வீச்சமும், பகலிலேயே இருட்டுமாய் இருந்த பெட்டிக்குள் செல்லவே அவரால் முடியவில்லை. ஒரு மாற்றுத்திறனாளி தனது ஊன்றுகோலை வைத்து குறுக்கு நடைபாதையில் இடம்போட்டிருந்தார். அதை அவர் எடுத்துக்கொள்ளவும் கொஞ்சம் இடம் கிடைத்தது. எதிர் எதிர் சீட்டுகளுக்கு இடையே நடைபாதையிலேயே உட்கார்ந்து கொண்டார்.

இம்மாதிரி பயணமெல்லாம் அவருக்கு பழக்கம் கிடையாது. பழக்கம் என்ன? இம்மாதிரியெல்லாம் தன்வாழ்வில் நடக்கும் என அவர் கற்பனையில் கூட நினைத்தது கிடையாது. இந்த மாதிரி அசௌகர்யங்களைத் தாங்கிக் கொள்ளும் மனிதரும் கிடையாது. விளங்கமுடியா, விளக்கமுடியா இக்கட்டில் தவித்தார்.

இவ்வளவு நெடும்பயணங்களும் அவர் போனதில்லை. அவ்வாறு செல்லும் பயணங்களையும் முன்கூட்டியே தீர்மானிக்காமலும் கிளம்பியது கிடையாது. அதுவும் புது இடங்களுக்குச் செல்வதென்றால் ஓராயிரம் முறை விசாரித்து ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ளாமல் கிளம்பியதே இல்லை. இரயில் கழிப்பறையில் பயன்படுத்த பிளாஸ்டிக்குவளை உட்பட, வீட்டையே காலிபண்ணிக்கொண்டு போகிறாரோ என்று நினைக்கும்படி தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொண்டுதான் கிளம்புவார். இப்போது கையில் லக்கேஜ் என்று எதுவும் இல்லை. மாற்றுத்துணிகூட இல்லை. கிளம்பிவிட்டார்.

பொதுவாக அவரின் பயணங்கள் ஆண்டுக்கொருமுறை அல்லது எதாவது முக்கிய தேவை அல்லது குடும்ப நிகழ்வுகளின் போது திருச்சியிலிருந்து திருநெல்வேலி சந்திப்பு வரைக்கும்தான். திருச்சி அவர் ஊர். பாளையங்கோட்டையில் மாமியார் வீடு. அதாவது அவரது மனைவியின் தாய்வீடு. திருநெல்வேலி சந்திப்பில் இறங்கினால் ஆட்டோ அல்லது டவுன்பஸ்ஸில் போய்விடுவார். போனவாரம் கூட திருநெல்வேலிக்குப் போயிருந்தார். போனதிலிருந்துதான் ஓரேடியாக உலகைவிட்டே போய்விட்டால் தேவலை என்று முடிவுக்கு வந்துவிட்டார்.

ராமு சாருக்கு திருமணமாகி கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நிறைவுற்றிருந்தன. திருமணத்திற்குப் பிறகான வாழ்வுதான் அவருக்கான வரம். அப்பா, கடமைக்கென செய்து வைத்த திருமணம்தான். சமயங்களில் ஏனோதானோ என்று அமைக்கப்படும் இசை, எதிர்பாராமல் ஹிட் ஆகிவிடுவது போல, ராமு சாரின் வாழ்வை இந்த திருமணம் வரமாக்கிவிட்டது. குணவதி மனைவி. ஆணொன்றும் பெண்னொன்றுமாக இரு பிள்ளைகள். திருச்சி நகரின் மையத்தில் உயர்ந்தோங்கும் ஒரு நிறுவனத்தில்; மேனேஜராக வேலை. வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை.

ராமு சார், சிறுவனாக இருந்து போதே தாயை இழந்தவர். தந்தை இரண்டாம் கல்யாணம் செய்து கொண்ட பிறகு, பெரும்பாலும் ஹாஸ்டல்; வாழ்கை. காட்டூர் யு.டி.சி.காலேஜில் பி.எஸ்.ஸி பிசிக்ஸ் படித்தார். படித்து முடிக்கும் வரை அப்பா பார்த்துக்கொண்டார். டிகிரி முடித்தும் வேலைக்குச் சேர்ந்தார். அதிலிருந்து அவர் வாழ்வு சொந்தப்பாடாயிற்று. மனைவி வந்த பின் மனைவியைச் சுற்றிய வாழ்வு. மனைவியின் விருப்பு வெறுப்புத்தான் அவரின் விருப்பு வெறுப்பு.

அவருக்கு கல்யாணம் முடிந்த ஒராண்டுக்குள்ளே அப்பா காலமானார். தந்தையின் இரண்டாம் தாரத்திற்கும் ஒரு பையன். அவனும் படித்துவிட்டு சென்னையிலோ, பெங்களுரிலோ இருக்கிறானாம். அப்பாவிற்;குப் பிறகு அவர்களை அவர்களை அப்பப்போ பார்த்துக்கொள்வது கூட நின்றுபோய்விட்டது. லால்குடியில் இருக்கும் பூர்வீக வீட்டை சித்தி வாடகைக்கு விட்டிருக்கிறாள். திருச்சியில் அப்பா வாழ்ந்த வீட்டில் இப்போது இவர்கள் வாழ்கிறார்கள். இந்த சொத்துப் பிரிவினையின் போது வந்த பல உறவுப்பிரச்சனைகளையும் கூட மனைவிதான் கவனித்துக் கொண்டார்.

இப்படியான வாழ்வில் அவருக்கு பெரும் குறையொன்றும் இல்லை. அவர் வாழ்வின் குறைபட்ட காலம் என்று சொன்னால், மகள் பிறக்க இருந்த சமயம்தான். அப்போது அவர் வேலை பார்த்து வந்தது ஒரு சிட்பண்ட்ஸ் கம்பெனி. நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. நிறுவனமும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வளர்ந்து வந்தது. என்ன காரணமோ தெரியவில்லை நிறுவனத்திற்குள் திடீர் பண நெருக்கடி. பண பட்டுவாடாவில் தகராறு ஆரம்பித்து, மக்கள் படையெடுப்பு நடந்து, வழக்குகள் தொடரப்பட்டு, நிறுவனமும் மூடப்பட்டது.

நிறுவனம் மறுபடியும் திறக்கும், போட்ட பணம் கிடைக்கும் எனவும் சிலர் மூடா நம்பிக்கை கொண்டிருந்தனர். ராமு சாரும் அவ்வாறு நம்பினார். மீண்டும் வேலை கிடைக்கும் எனக் காத்திருந்தார். காத்திருந்த நாட்கள் கையிருப்பையும், காலண்டர்தாளையும் கிழித்துப்போனது தான் மிச்சம். அதிகபட்ச சேமிப்பெல்லாம் வேலை பார்த்த நிறுவனத்திலேயே போட்டிருந்ததால், அதுவும் கிடைக்காமல் போனது.

மீண்டும் பழைய வேலையும் கிடைக்காது. சேமிப்பும் கிடைக்காது என்பது, தன் கையைத் தானே ஊன்றி எழ முயற்சிக்கும் மனிதருக்கு எவ்வளவு பெரிய அடி. ராமு சார், ஆளே உடைந்து போனார். இவ்வளவு சிரமத்திலும் நம்பிக்கையும் ஆதரவுமாயிருந்து அவரை மீட்டெடுத்தது அவரது மனைவிதான். கொஞ்சம் கூட தயங்காது தன் நகையெல்லாம் அடகுவைத்தும், விற்றும், அக்கம் பக்கம் உருட்டிப்பிரட்டி சிறு வருமானங்கள் பார்த்தும், அருகில் இருந்த கம்பெனிக்கு வேலைக்குச் சென்றும் குடும்பத்தை நகர்த்தினார். மகள் பிறந்தது, குழந்தைப் பராமரிப்பு, தற்போதிருக்கும் குடும்பத்தின் பொருளாதார மீட்சி எல்லாம்.. மனைவியின் வைராக்கியத்தின் பலன். கிட்டத்தட்ட நான்கு, ஐந்து வருடப் போராட்டங்களுக்குப் பிறகுதான் இப்போதிருக்கும் வாழ்வு ஓரளவு வசப்பட்டது.

ஒருமுறை ராமு சாரின் இரு பிள்ளைகளுக்கும் ஒரே சமயத்தில் பெரியம்மை கண்டது. இருவருக்கும் மருத்துவமனைக்கும் சமயபுரம் மாரி கோவிலுக்கும் நடையாய் நடந்து குணம் கண்ட சமயத்தில் ராமு சாருக்கும் அம்மை வந்தது. ‘ம்’என்றால் தாங்காத ராமு சாரா அம்மையை தாங்கப் போகிறார். அவரை நோய் ஒரு பாதி படுத்தியது என்றால், மன ஓட்டங்களாலும் தன்னைத்தானே படுத்திக்கொண்டார். சாவுபயம், இறந்துவிட்டால் குடும்பம் குழந்தைகள் என்னாகுமோ என்றெல்லாம் கூட புலம்ப ஆரம்பித்து விட்டார்.

எதுவென்றாலும் அதன் உச்சபட்ச நினைவுகளைக் கைக் கொள்பவர்களை என்னதான் செய்வது? இருப்பினும், அவரையும் பொருமையுடனும், விடாத தன்னம்பிக்கையுடனும் நோயிலிருந்து மீட்டெடுத்தது ராமுசாரின் மனைவிதான். அந்தக் கால கட்டைத்தைப் பற்றியெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் கண்கலங்கிவிடும்.

இப்படி எவ்வளவோ நினைவுகள் இருக்கிறது. இன்றளவும் ராமுசார் அவரைச்சுற்றிய சமூகத்தில் மரியாதைக்குரிய நிலையில் இருப்பதின் காரணமாக இருப்பவர் அவரது மனைவிதான். வறுமைக் காலத்தில் நம்பிக்கையும், வாழும் காலத்தில் நல்வழியும் காட்டும் மனைவிதான் கணவனின் கடவுள். ராமு சாருக்கும் அவரது மனைவி அப்படித்தான்.

– சென்ட்ரலிருந்து சாப்ரா செல்லும் எக்ஸ்பிரஸ் கிளம்பி கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு மணிநேரம் இருக்கும். கைகால்களை அசைக்கக்கூட முடியாத இந்த பயணமே ஒரு சாவைப் போன்று இருந்தது. சக பிரயாணிகளின் இந்த இழிநிலையும், அதைப்பற்றிய பிரக்ஞையற்ற போக்கும் அவர்கள் மீது கழிவிரக்கத்தை உண்டுபண்ணியது. ‘மலைக்க வைக்கும் ஊழல் செய்த யாரேனும் இதே இரயிலின் அடுத்த பெட்டிகளில் ஒன்றில் சொகுசாக பயணம் செய்யக்கூடும்;. “மலக்கூடையில் மனிதர்களை அள்ளிச் செல்வதைப்போல் இவர்கள் இப்பெட்டியில் பயணிக்கிறார்கள்“ என்ற நினைவு ஆயாசத்தை உண்டு பண்ணியது. ஒன்றும் செய்வதற்கில்லை. நீண்டு பயணிக்கும் இரயில், அன்றைய இரவுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

தெலுங்கு தேசத்தின் ஒரு முக்கிய சந்திப்பு. இரயில் கொஞ்சம் அதிக நேரம் நின்றது. பசித்தது. யாரும் தன்னை தொடரக்கூடாது என்பதற்காக செல்போன், ஏ.டீ.எம் கார்டையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு வந்திருந்தார். கையிலிருக்கும் சொற்ப பணம் தான் கடைசி வரைக்கும். ஒரு டீயும், சமோசாவும் வாங்கிச் சாப்பிட்டார். முடங்கிக்கிடந்த இடத்திலேயே பெரும் பிரயத்தனப்பட்டு ஒற்றைக் காலை மட்டும் சற்று நீட்டி சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

அதுவரை அருகில் அசைவற்றுக் கிடந்த மாற்றுத்திறனாளி, இவரை இடித்துக்கொண்டு.. வெளியே எட்டி யாரையோ எதிர்பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்காகத்தான் எதிர்பார்த்தார்; என்பதாக, ஒரு பெண், அவருக்கு வந்து ஒரு சாப்பாடு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுப் போனாள். அவளின் மிகை ஒப்பனை உறுத்தியது. அதுவரை கம்பார்ட்மெண்டின் நடைபாதையில் முடங்கிக்கிடந்த மாற்றுத்திறனாளிக்கும், அப்பெண்ணிற்கும் நடை உடை பாவணையில் சம்பந்தமிருப்பதுபோல் தோன்றவில்லை. ஆனால், அவள் வந்து சென்ற நிமிடத்தில் அவர்களுக்கிடையே பறிமாரிக்கொண்ட அன்பும் அன்னியோன்யமும் அலாதியாகப்பட்டது.

பொதுவாக தனக்குச் சம்பந்தமில்லாத சிந்தனைகளை ராமு சார் மனதில் ஏற்றிக் கொள்வதில்லை. அதிலும் பெண்களின் விசயங்கள் என்றால் சுத்தம். மாற்றாந்தாய் வளர்ப்பினால் என்று சொல்வதற்கில்லை. அப்படி அமைந்துவிட்டது.

எதிரில் இருந்த மாற்றுத்திறனாளிக்கு உணவுப் பொட்டலம் அளித்த பெண்ணின் முகம் ஏனோ.. ராமுசாரின் நினைவுக்கு வந்தது. அவளது வளைந்து நெளியும் நடையும், அவையங்களைக் காட்சிக்கு விரிக்கும் உடையும் அவருக்கு நெருடலாய் இருந்தது. அதை மறக்கும் பொருட்டு எதை எதையோ நினைத்துக் கொண்டார். எங்கு சுற்றினாலும் இறுதில் அவர் மனைவியிடம் தான் நினைவு மீண்டும் மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தது. மனைவியை நினைத்ததும் மனம் வெதும்பியது. கண்கள் ததும்பியது.

– சென்றவாரம் பாளையங்கோட்டைக்குச் சென்றிருந்தார்கள். சும்மாதான். நெடுநாட்களாகச் செல்லவில்லை. பிள்ளைகளுக்கும் அம்மாச்சி வீட்டுக்குப் போகலாம் என்று ஒரு அடம். லீவு வேறு. போனதும், வழக்கமான மாமியார் வீட்டு உபசரிப்புக்கள். இன்ன பிற விசய விசாரிப்புக்களுடனும் முதல் நாள் கழிந்தது.

மறுநாள், கோவிலுக்குச் சென்றிருந்தார்கள். நெல்லையப்பர் கோவில் பிரகாரம் ராமு சாருக்குப் பிடிக்கும். காந்திமதியம்மனையும், நெல்லையப்பரையும், சுற்றுத் தெய்வங்களையும் தரிசித்து விட்டு அடுத்த அடுக்கில், பிள்ளைகள் சற்று முன்னே நடக்க அவரும் அவர் மனைவியும் பின்தொடர்ந்தனர்.

பிரகாரத்தின் கிழக்கு திருப்பத்தில் கோவில் யானை போவோர் வருவோர்க்கு ஆசி வழங்கி, துட்டு வாங்கிக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்ததும் ஓடி, யானைக்கு அருகே செல்ல முயன்ற மகனை பிடிக்க மனைவியும் சற்று வேகமாக நடக்க.. எதிர்வந்த ஒரு பெண்மணி ராமுசாரின் மனைவியை அடையாளம் கண்டுகொண்டார். அவரது மனைவிக்கும் அந்தப் பெண்மணியை ஏற்கெனவே தெரிந்திருந்தது.

இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. இருவரும் ஓரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் சந்திக்கிறார்கள். இருவருக்கும் கல்யாணம் பிள்ளைகுட்டி என்றாகி விட்ட போதிலும் இடையில் இருவரும் சந்தித்துக் கொண்டதில்லை. இப்பொழுதான் வாய்த்திருக்கிறது.

பெண்கள் பேசிக்கொள்ள ஆரம்பிக்கும் முன்பே, அவர்களது கண்கள் ஒருவரை ஒருவர் எடைபோட ஆரம்பிக்கிறது. என்ன மாதிரி உடுத்தியிருக்கிறாள், என்ன கலர், என்ன டிசைன், மேட்சிங் ஜாக்கெட் எப்படி, கழுத்தில் என்ன? காதில் என்ன? இத்தியாதிகளைக் கொண்டே எதிரிலிருப்போரின் ஜாதகத்தையே பெண்கள் கணித்து விடுகிறார்கள். இந்தக் கணிப்பில் ஒரு ஜோடிப்பொருத்தம் நடக்கும். முக்கியப் பொருத்தங்கள் அடிப்படையில்தான் பெரும்பாலும் பேச்சு மேற்க்கொண்டு தொடர்கிறது.

இதற்கிடையில் ராமு சார், யானையைப் பார்க்க ஓடிய மகனை கையில் பிடித்துக் கொண்டு, மகளையும் தூக்கிக்கொண்டு இவர்கள் பேசிக்கொண்டிருந்த நடையின் ஓரமாய் நின்று கொண்டதையும் இரு பெண்களும் கவனிக்கத்தான் செய்தார்கள்.

முதலில் ‘என்னல.. ஒடம்பு வெயிட்டு கூடிட்டு?’ என்பது போன்ற நல விசாரிப்புகள். அடுத்ததாக, உள்ளபடியே பெண்கள் மகிழ்ந்து செய்துகொள்வது தாங்கள் தங்கள் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி வைப்பதைத் தான். ‘இது மூத்தவன். மூணாங்கிளாஸ். இது கடைக்குட்டி. இன்னும் ஸ்கூல்ல சேக்கல. இவ பன்ற லூட்டி தாங்கல’ எனும் போது எற்படும் அகமலர்ச்சிதான் தாயானதின் பேறு.

‘இப்பதா, திர்நெவேலி வழிதெரிஞ்சுதா?

‘இல்லல. இப்பத்தான் பிள்ளேளுக்கு லீவு. அவருக்கும் ஒரே வேல. நேரம் சரியா போயிடுதுல்லா.. அதுஞ்சேரி. நீ எங்கிருக்கு? என்ன பண்ணுத?’

‘நான். தூத்துகுடில இருக்கே. அவுக மளிக கடை வச்சிருக்காவ. சிலப்பொ நானும் கடய பாத்துக்கிடுவே. பொழப்பு ஓடுது. அப்பம்.. என ஆரம்பித்து தொடங்கும் தொலைக்காட்சி சீரியல்களை விட நீளமான ஃபிளாஸ்பேக். நின்றும், இருந்தும், நடந்தும் தன் சினேகிதர்கள், பார்த்தவர்கள், பழகியவர்கள் என் ஒவ்வொருவர் பற்றியும் பேச்சு தொடர்ந்தது. பரணி பாடிய ஜெயங்கொண்டாரே.. பெண்களுக்கு நிகராக பொரணி பாடுவதில் ஜெயங்கொள்ளார்.

புருசனாகப் பிறந்தவர்களுக்கு, இப்படிப்பட்ட தருணங்களில் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருப்பது மட்டும்தான் வேலை. அவ்வப்போது அவர்களையும்; பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரிக்கலாம். அதைத்தான் ராமு சாரும் செய்தார். அவ்வளவு அரட்டையும் அடித்து முடித்து கிளம்பலாம் எனும் போதுதான்.. தொடக்கத்திலிருந்து மறக்கப்பட்ட புதுச்செய்திகள் தொடங்கும். அப்படித்தான் அன்றும் சினேகிதிப்பெண் ஒன்றைச் சொன்னார்.

‘ஒன்னு சொல்ல மறந்துட்டு. வர்ற ஞாயிறு நம் காலேஜ் செட்டுப் பசங்கள்ளாஞ் சேந்து ‘கெட்டுகெதர்’ வச்சிருக்காகல்லா.. உனக்கு சேதி வந்துச்சா.’

‘இல்லல்லா, எனக்கொன்னும தெர்ல! ஒரு சேதியும் வர்லலா!’

‘நீ, பேஸ்புக்கு, வாட்ஸ் அப்புல இருக்கியா..?

‘இல்லல்லா!’

‘அதா ஒனக்குத் தெரியல்ல.. நம்ம காலேஜ் பேச் மேட்ஸ் எல்லாஞ் சேந்து, காலேஜ்ல ஒரு ஃபங்சன் வச்சிருக்காவல. எல்லாரும் மீட் பண்ணி ஒன்டே செலிபரேசன். அந்தன்னிக்கு வந்திரு. என்னா? நம்ம பிரண்ட்ஸ் சொல்லிருக்காவ. எல்லாரும் வருவா. நானும் அதுக்குத்தாந் திர்நெவேலிக்கு வந்தே. நீயும் வந்திரு என்னா..’

‘என்னல.. திடீர்ன்னு சொல்லுத.. நாங்க ஞாயித்துக்கெழம திருச்சி கௌம்பளாண்டு இருக்கு, இப்பம் காலேஜுக்கு வர்றது ஏலாது. ஆமா.. எல்லாப்பிள்ளேளும் வராளுவளா?’ என நண்பியிடம் சொல்லிக்கொண்டே ஒரு பார்வையை ராமு சாரின் மீது வீசினார் அவர் மனைவி. அந்தப் பார்வைக்கு அர்த்தம் தெரியாமலா ரெண்டு பிள்ளைகளைப் பெற்றார் ராமு சார். காலேஜ் கெட்டுகெதருக்கு போகலாம் என்று முடிவாயிற்று.

– இரயில்களின் உள் இருந்து பார்த்தால் உலகம் அழகு. உலகில் எங்கிருந்து பார்த்தாலும் இரயில் அழகு. அர்த்தராத்திரியில் பயணித்துக் கொண்டிருந்தது ராமு சார் சென்று கொண்டிருந்த இரயில். இரவில் இரயில் பயணம் யாருக்கும், எந்த நிலையிலும் தூக்கம் வரவழைக்க வல்லது. குலுங்கிச் செல்லும் இரயில் தாய்மடியின் அசைவைக் காட்டிலும் இசைவானது. தாய்மடியின் அசைவு கூட குழந்தைப் பருவம் மட்டும்தான், சிலருக்கு அதுவும் இல்லை. இரயிலோ எங்கும் எப்பொழும் தன் மடியில் சாயும் அனைவரையும் தாலாட்டிச் செல்கிறது.

ஒடுங்க இடங்கிடைக்காத யாவரும் ஒருவர் மீது ஒருவராய் தூக்கத்தின் பிடியில் தங்கள் சூழலும் துக்கமும் மறந்து தூக்கத்தில் ஆழ்கின்றனர். இதைத்தாண்டியும் தூக்கம் முழிக்கும் சிலரோ.. இரயில் இழுத்துச் செல்லும் சுமைகளைக் காட்டிலும் மனச்சுமை உள்ளவர்களாக இருக்கக் கூடும்.

ராமு சாரும் அத்தகைய சுமையை சுமந்தவர்தான். தூக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு ஸ்டேசன். சாயா விற்பனையாளர்கள் யாவரையும் எழுப்பிக்கொண்டிருந்தனர். இரயிலின் கூட்டம் சற்று இறங்கியது. சீட்டில் இடம் கிடைக்கும் போல் இருந்ததும் ராமு சார் ஏறி உட்கார்ந்து கொண்டார். அருகிலேயே அந்த மாற்றுத்திறனாளியும் ஏறி உட்கார்ந்து கொண்டார். அவருக்கு உணவுப் பொட்டலம் தந்த அந்தப் பெண்ணும் எங்கிருந்தோ வந்து அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். இரயில் நகரத்துவங்கியது.

கவனிக்க விரும்பாவிட்டாலும் அந்தப்பெண்பால் அடிக்கடி ராமு சாரின் கவனம் திரும்பியது. சென்ற முறை பார்த்தபோது இருந்த அதீத மேக்கப் இப்பொழுது அந்தப் பெண்ணிடம் இல்லை. களைப்புற்று இருந்தது போல் தோன்றியது. இரவின் தூக்கக் கலகத்கத்தை விட அந்த களைப்பு சற்று தூக்கலாகத்தான் இருந்தது. ராமு சாருக்கு சென்ற முறை அவள் சாப்பாடு கொண்டு வந்து மாற்றுத்திறனாளிக்கு கொடுத்த பாங்கும், இப்போது இருக்கும் அசதியாக போக்கும் தலைகீழ் மாற்றமாகத் தெரிந்தது. ஆயினும், அப்பொழுதுக்கும் இப்பொழுதுக்கும் ஒரு ஒற்றுமை என்னவெனில் மாற்றுதிறனாளிக்கும் அந்தப்பெண்ணிற்கும் இடையூடாடிய தீர்க்கமான காதல்தான்.

அந்தப் பெண் யார்? எங்கிருந்து வருகிறாள்? இரயிலில்தான் பயணித்து வந்தாளானால், இத்தனை நேரம் எங்கே, என்ன செய்துகொண்டிருந்தாள்? என்பதெல்லாம் ராமுசாரை தேவையின்றிக் குழப்பின. பதில் அவருக்கு தேவையே இல்லைதான். பதில் தெரிந்து கொண்டாலும் அதில் பிரயோஜனம் இல்லைதான். இருந்தாலும்.. ஏதோதோ எண்ணச் சிக்கல்களுக்குள் இருந்த மனதில் இந்தப் பெண் பற்றிய கேள்விகளும் வந்து தவிர்க்க இயலாமல் தொற்றிக்கொண்டது.

ஒருவேளை பெண்கள் பெட்டியில் பயணித்து வந்திருக்கலாம். இப்பொழுது இந்தப் பெட்டியிலேயே இருக்கை கிடைத்ததும் வந்திருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். மாற்றுத்திறனாளி தூங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் தூங்கவில்லை. அந்தப் பெண்ணின் விலை உயர்ந்த செல்பேசி அடிக்கடி சிணுங்கிக் கொண்டிருந்தது. அவள் பதிலளித்துக் கொண்டிருந்தாள். ராமு சார், தூக்கம் வராத கொடுமைக்கு இதையெல்லாம் கவனிக்க வேண்டிவருகிறது. அவள் இந்தியில் பேசி இருக்கக்கூடும். புரியாத மொழிகளை கேட்பதற்கு காதில் இடிப்பது போல் இருக்கிறது. மொழியின் இனிமை அதன் பொருளில் இருக்கிறது போலும்.

அடுத்து வந்த ஸ்டேசனில் அந்தப் பெண் மீண்டும் இறங்கி எங்கோ சென்று விட்டாள். மாற்றுத்திறனாளி இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தார்.

– பாளையங்கோட்டை. அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ராமுசார் குடும்ப சகிதம் கல்லூரி ‘கெட்டுகெதரில் ஆஜரானார்கள். ஒரிருவர் தவிர அனைத்து ஆண்களும் வந்திருந்தனர். ஒன்றாய்ப் படித்த பெண்கள் பன்னிரெண்டு பேரில் வந்திருந்தது நான்கே பேர்தான்.

முன்பெல்லாம் கல்லூரி இறுதிநாள் ஃபேர்வெல் பார்ட்டியில் பாடித்திரிந்த பறவைகளாக பிரிந்து போனவர்கள் மீண்டும் சந்திப்பது துர்லபம். ஆட்டோகிராப் புத்தகத்தில் ‘முகவரியை வாங்கிவிட்டு, முகத்தை மறந்துவிடாதே’ போன்ற வசனங்கள் எல்லாம் எழுதிவாங்கும் சம்பிரதாயம் மட்டும்தான். ஒரே ஊருக்குள் வாழும் வாழ்க்கை வாய்த்தவர்கள் மட்டும் பார்த்துக் கொள்வார்கள். ஒரே வணிகத்திற்குள், வர்க்கத்திற்குள் இருப்போர் மட்டும் பழகிக்கொள்வார்கள்.

இப்பொழுது அப்படியல்ல.. கிட்டத்தட்ட எல்லா கல்லூரிகளிலும் ‘பேட்ச்மேட் கெட்டூகெதர்’ நடந்து விடுகிறது. சமூகம் தொடர்புகளால் விரிந்து, தூரங்களால் சுருங்கிக் கொண்டிருப்பதின் விளைவு.

காலையிலிருந்து விழா கலைகட்டியது. பழைய நினைவுகளில் முழ்கிய மாணவர்களின் சிரிப்பொலிதான் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருந்தது. கல்லூரி நாட்களில் செய்த சேட்டைகளை எண்ணிச் சிரித்தார்கள். வாங்கிய தண்டனைகளை எண்ணிச்; சிரித்தார்கள். வைத்த அரியர்களை எண்ணிச் சிரித்தார்கள். எது எதற்கோ சிரித்தார்கள். எதெற்கெடுத்தாலும் சிரித்தார்கள். எல்லாம் ஆனந்தமாய் இருந்தது.

மதிய உணவு ஏகத் தடபுடல். சாப்பாட்டு வகையில் சைவமும் உண்டு, அசைவமும் உண்டு. சிலர் இரண்டும் உண்டு களித்தனர். காலையிலிருந்து அரட்டைக் கச்சேரி, விளையாட்டு எனத்தொடங்கி மதியத்திற்கு மேல் மேடை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பேராசிரியர்களைக் கௌரவித்தார்கள். மாணவர்களையும் மேடையில் பேச அழைத்தார்கள். சிலர் பேசினர். சிலர் கூசினர். அடுத்தடுத்து நற்பணிகள் இணைந்து செய்யவேண்டும் என நண்பர்கள் என்றெல்லாம் சில தீர்மானங்கள் எடுத்தனர்.

நினைவுகளைப் போல மனிதனைச் சந்தோப்படுத்துவது எதுவும் இல்லை. நினைத்ததை அடைவதும், அடைந்ததை நினைப்பதும் தான் மகிழ்வு. மகிழ்வினைத் தரும் எது ஒன்றும் நினைவிற்கு அப்பாற்பட்டது இல்லை. நினைவுதான் அனைத்தும். எனவே நிகழ்ச்சியில் நினைவுப்பரிசுகளும் நிகழ்வில் வழங்கப்பட்டன.

மகிழ்வான இந்த விழாவில், ஒருவர் மட்டும் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தார். அவர் வேறு யாருமல்ல. நமது ராமு சார்தான். அவருக்கு அந்தக்கூட்டத்தில் எளிதில் ஒட்ட முடியவும் இல்லை. அதைத்தவிர வேறு வேலையும் இல்லை. நிகழ்வில் பலரிடம் அவர், தன் மனைவியின் கணவன் என அறிமுகப் படுத்தப்பட்டார். சிலரிம் சிரித்தார். சிலரிடம் சிரித்து வைத்தார்.

அவர் மனைவி படித்த கல்லூரிக்கு இப்போதுதான் வருகிறார். நிகழ்வு நடக்கும் அரங்கில் மனைவியை விட்டுவிட்டு கல்லூரி வளாகத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினார். நல்ல மதிய உணவும், அதற்கு பாதகமில்லாத அன்றைய வெயிலும், அப்போதிருந்த அவரது மனநிலையும் சற்று ஏகாந்தமாயிருந்தது. கல்லூரியின் நீண்ட வராண்டாவில் ஒவ்வொரு வகுப்பறையாகக் கடந்து கொண்டிருந்தார்.

கல்லூரி நண்பர்களை மீண்டும் சந்திப்பது மனதிற்கு ஒரு ரீசார்ஜ். நண்பர்களை காண்பதும், கதைப்பதும் கூடுதல் சந்தோசமளிக்கிறது. இந்த சந்தோசத் தருணங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. உற்சாகம் சிலருக்கு நண்பர்களைப் பார்த்தில், சிலருக்கு பேசிக் களிப்பதில். சிலருக்கு எதுவானாலும் மது அருந்துவதில். இத்தனை பேர் கூடிய நிகழ்வில் ‘குடி’க்கும் குழு இல்லாமல் இருந்தால் அது சமகாலத்தின் ஆச்சர்யம்.

ஆனால், இந்த கல்லூரிக்குழு அப்படி ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. நான்கைந்து பேர் இருக்கும், வராந்தாவின் நேர் எதிர் மூலையிலிருக்கும் வகுப்பறையில் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் பேச்சும் களிப்பும் உச்சத்திலிருந்தது. குடி போதையில் திளைக்கும் மனது கேடான விசயங்களைக் கொண்டாடுகிறது. பிரக்ஞையின்றி கடந்த காலத்தை கூறுபோடுவதில் போச்சு அவர்களின் பேச்சு. அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த ராமு சார், அவர்களின் பேச்சைக் கேட்காமலிந்திருக்கலாம்.

ஆனால், என்ன செய்வது? சிலருக்கு தெரிவிக்க விரும்பும் விசயம் கடைசிவரையில் தெரிவிக்கப்படாமலேயே போய்விடுகிறது. சமயங்களில், யார் காதில் எது விழுகக்கூடாதோ.. அது விழுந்து தொலைத்து விடுகிறது. அப்படி விழுவது வார்த்தையாக இருக்கலாம். இல்லை, கொலை ஆயுதமாகவும் இருக்கலாம்.

– தேசத்தின் தேகத்தில் இரத்த ஓட்டத்தைப் போன்று இரயில்கள் இரவிலும் பகலிலும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. சாப்ரா செல்லும் இந்த இரயிலும் என்னவோ வேகத்துடன் தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், உள்ளிருக்கும் ராமுசாருக்கோ இரயிலும், நேரமும் நகர்வதாகவே தெரியவில்லை. ஓவ்வொரு மணித்துளியும் யுகங்களை உள்ளடக்கி நகர்கிறது. இதோ இந்த நாள் விடிந்தால்.. நினைத்தபடி முடிந்தால்.. கங்கையில் மடிந்துவிடுவார். சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் துன்பவெள்ளம், அவருடன் சேர்ந்து கங்கையில் வடிந்து விடப்போகிறது.

விடியலின் வெளிச்சம் இன்னும் வரவில்லை. சாப்ரா ஸ்டேசன் வந்துவிட்டது. இரயிலில் இருந்து கூட்டத்தோடு கூட்டமாக இறங்கிக் கொள்கிறார் ராமு சார். நிலையம் தனது வழமையான பரபரப்புடன் இருந்தது. இவ்வளவு தூரம் நெருக்கடியில் பயணித்து வந்தது ஆயாசமாக இருந்தது. சிந்தனையில் எதுவுமிருக்கவில்லை. இதோ, முடிவான இரவு விடியப்போகிறது.

நடைமேடையில் இருந்த குழாயிலேயே வேண்டுமட்டும் தண்ணீர் குடித்தார். தண்ணீர் குடித்ததும் சற்று வயிற்றைக் கலக்குவது போலவும் இருந்தது. அதே நடைமேடையில் இருந்த பொதுக்கழிப்பிடத்திற்கு சென்றார். பொதுக்கழிப்பிடங்கள் அவருக்கு சங்கடத்தை விளைவிப்பவை. ஆனாலும் அவசரத்திற்கு வேறு என்ன செய்ய முடியும்? அப்படி முன்பும் சில சமயங்களில் தமிழக பொதுக்கழிப்பிடங்களுக்குச் சென்றிருக்கிறார் ராமுசார். அப்படிச் செல்லுகையில் அவ்விடத்தின் தூய்மையற்ற தண்மையை விட, அவரை அதிகம் துணுக்குறச் செய்தது கிட்;டத்தட்ட எல்லாக் கழிப்பறை ஓரத்திலும் கிடந்த மதுப்புட்டிகள் தான். இவ்வளவு கேவலமான சூழலிலும் மது அருந்துபவர்கள், எவ்வளவு மோசமான மனநிலையில் இருக்கக்கூடும்?

சாப்ரா இரயில்நிலையத்தின் கழிப்பறைகள் அவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை. வெளியே வந்ததும், களைப்பு மேலும் அழுத்த, நடைமேடையிலேயே கடைசி ஓரத்தில் சற்று வெளிச்சம் குறைவான பகுதியில் இருந்த பலகையில் உட்கார்ந்து கொண்டார். சற்று நேரத்தில், அதே இருக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டார். இராத்தூக்கம் முழித்தது.. பயண அசதி.. எல்லாம் சேர்ந்து அழுத்த அப்படியே தூங்கிப்போனார்.

– நினைவுகள் தூங்குவதில்லை. கல்லூரி வளாகத்தில், அவர் கேட்ட வார்த்தைகள் அவர் பூஜித்த தெய்வத்தினைப் புறம்கூறியது. இதுவரை அவர் வாழ்ந்த நிம்மதியான வாழ்வில் மண் அள்ளிப்போட்டது. அவரது இல்லத்தரசியை இழிவுக்கு உட்படுத்தியது. அவர் ஒரு சந்தர்ப்பத்தில் உடன் படித்த ஒருவனால் சோரம் போனவர் என்பதைப் போட்டு உடைத்தது. உடைந்தது ராமு சாரின் சகலமும். நினைத்துப்பாருங்கள்! தன் உயிரென நினைத்த மனைவி சோரம் போனவர் எனக்கேட்கும் தருணம் நேர்வது நேர்மையான கணவனுக்கு எவ்வளவு துயரம்?

கேட்ட செய்தி பொய்யாகவும் இருக்கலாம். சொன்னவர்கள் தவறானவர்களாக இருக்கலாம். இப்படியான செய்திக்கெல்லாம் கவலைப்படக்கூடாது. அதை காதிலேயே போட்டுக்கொள்ளக்கூடாது என புத்தி சொல்லியதுதான். ஆனால்.. ஆனால்.. உயிருக்கும் மேலாக நினைத்த மனைவி ஆயிற்றே? அவரை தவறாக நினைத்துப் பார்க்கவும் முடியவில்லையே? நினைவுகளை துறந்து செல்லவும் முடியவில்லையே? நினைவுகள், கண்ணாடி மாதிரிக் கற்புடையவை. சிறு கீறலிலும் சிதைபவை. தன் தன்மை இழப்பவை.

“இப்படி நடந்தது உண்மையா?’ என மனைவியிடம் கேட்டுவிடலாம்தான். அப்படிக் கேட்டால், ‘தான் மறைத்துவிட்ட அல்லது தானே மறந்துவிட்ட உண்மையானது கணவனுக்குத் தெரிந்து விட்டது என்பதை அறிந்தால், அதன் பாரம் தற்போது கணவன் பிள்ளைகளுக்காகவே வாழும் மனைவியை என்ன பாடுபடுத்தும்?’ என்பதும், ஒரு வேளை கேட்ட விசயம் உண்மையாக இல்லாவிட்டால்.. ‘எப்பேர்ப்பட்ட தவறிழைத்தவனாகி விடுவோம்?’ என்றெல்லாம் சிந்தனை ஊசலாட்டத்தால் கேட்கத் துணிவில்லை. ‘கேட்ட விசயத்தை, கெட்ட கனவென நினைத்து மனது மறந்து விடலாம்’ என்றால், மறக்கக்கூடுமா? நீங்கள் கற்றுக்கொண்டதை எல்லாம் இந்த நொடியோடு மறந்து விடுங்கள் என்றால் மறந்து விடுவீர்களா?’

குழம்பிக் கொண்டிருக்கும் ராமுசாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனைவியைப் பார்க்கும் தோறும் அந்த ஞாபகம் வருகிறது. அது தரும் சஞ்சலத்தினால் அவரது நடவடிக்கையில் மாற்றம் என்பது பகலின் வெளிச்சத்தைப் போல் அப்பட்டமாகிறது. ஏதாவது தவறாக சொல்லி விடுவோமோ? செய்து விடுவோமோ? என்ற பயமே கொல்கிறது. வேலையில் நாட்டமில்லை. நினைவுகள் எப்படி மகிழ்வைக் கொடுக்குமோ, அதேபோல நினைவுகளே மரணம் நிகர் துக்கத்தையும் கொடுக்கிறது. இந்த உள்ளக் குடைச்சலை தாங்கிக் கொள்ளும் மனிதராக ராமு சார் இல்லை.

வழக்கமான பிரச்சனைகளில் ராமுசாரின் மனவலிக்கான மருந்து அவர் மனைவிதான். ஆனால் பிரச்சனையே மனைவி என்றால் என்ன செய்வது? இப்படி நாள் தோறும், மணி தோறும், நொடி தோறும் நினைவுகளால் செத்து செத்து பிழைப்பதற்கு செத்தே போய்விடலாம் என்பது முடிவு. முடிவைச் செயலாக்கவே மனைவி குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு, இதோ வருகிறேன் என்று கிளம்பியவர்தான். இன்றுடன் இரண்டுநாளுக்கு மேலாச்சு, பயணித்துக் கொண்டிருக்கிறார் மரணம் நோக்கி.

– இரயில்கள் பெரும்சத்தத்தை எழுப்பியபடியே செல்கின்றன. அப்படி ஒரு சத்தம் கேட்டு சாப்ரா ஸ்டேசனில் தன்னை அறியாமல் தூங்கிப்போன ராமுசார் எழுந்து கொண்டார். எழும்போது உச்சிப் பொழுது.

பசிக்கிறது. ஆனால், பசியா முக்கியம்? இப்போது காசிக்குச் செல்ல வேண்டும். இரயில் கிடைக்குமா? பஸ்சில் போகவேண்டுமா? இங்கிருந்து பக்கம் என்றார்களே! உண்மையில் பக்கமா? தூரமா? என எதுவும் தெரியாது. இரயில்வே ஸ்டேசன் கவுண்டரில் விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி ஸ்டேசனின் வாயிலுக்கு நகர்ந்தார். கவுண்டரில் ராமு சார் கேட்டதற்கான பதில் சரிவரக் கிடைக்கவில்லை. பலமுறை விசாரித்தும் கவுண்டரிலிருந்து எரிச்சலே பதில். வேறு யாராரிடமாவது விசாரிக்கலாம் என்று சுற்றும் பார்த்தார்.

முதலாம் நடைமேடையில் இருந்து வெளி வாசலுக்குச் செல்லும் இடைவெளியில், தன்னோடு பயணித்த அந்த மாற்றுத்திறனாளி அமர்ந்திருக்கக் கண்டார். அவரிடம் கேட்கலாமா? என தயங்கினார். இரயில் பயணத்தின் போது இருவரும் பக்கத்தில் அமர்ந்து வந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. ஏன்? நட்பாய் ஒரு புன்னகை கூட பரிமாறிக்கொள்ள வில்லை. இருந்தாலும் நீண்ட தூரம் இணைந்து பயணித்தது ஒரு அறிமுக நெருக்கமாக இருந்தது. அவரிடம் கேட்கலாம்! அவரும் சென்னையில் இரயில் ஏறியவர்தான், ஒருவேளை அவர் தமிழ் தெரிந்தவராகவும் இருக்கலாம். என எண்ணி அவரிடம் சென்றார்.

ராமு சார் அருகில் வந்தது கூட தெரியாமல் கவனமற்று இருந்தார் மாற்றுத்திறனாளி. ‘ஐயா! ஐயா!!’ என அழைத்த குரலுக்கும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதிரி நிலைகுத்திய கண்களுடன் இருக்க.. சற்று அவரை உற்றுப் பார்த்தார் ராமுசார். கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. உடம்பில் யாரோ அடித்த தடுப்புகள் கூட. ராமுசாருக்கு, மாற்றுத்திறனாளியுடன் இருந்த பெண்ணின் ஞாபகமும் வந்தது. அவர்களுக்குள் பிரச்சனையா இருக்குமோ? இருக்கலாம் நமக்கேன்? இவரிமிருந்தும் நமக்கான பதில் கிடைக்கப்போவதில்லை என்று நினைத்து அவரைவிட்டுத் திரும்ப யத்தனித்தார்.

மாற்றுத்திறனாளி அப்போதுதான் அவரைக் கவனித்திருப்பார் போல.. அவரை மீண்டும் பார்த்து விம்மி அழ ஆரம்பித்தார். திரும்பிச் செல்ல முயன்ற ராமுசாரின் கைகளையும் பற்றிக் கொண்டார். மாற்றுத்திறனாளியின் விம்மல் அழுகையின் ஊடே ‘அய்யா.. அவள போலீஸ் பிடிச்சுட்டுப் போய்ட்டாங்கய்யா..’ வார்த்தைகள் திக்கித் தடுமாறி வந்தன. ராமுசாருக்கு ஐயோ! என இருந்தது. நாமே பெருங்கவலையில் இருக்கிறோம். இதில் அடுத்தவன் பிரச்சனையில் தலையிட என்ன இருக்கிறது? என்று கை உதறப் பார்த்தார் முடியவில்லை. வேறு வழியில்லை. மாற்றுத்திறனாளி சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் போலிருக்கு.

மாற்றுத்திறனாளியின் கதையோ ரொம்பவும் பரிதாபத்திற்குரியது. அவர்கள் நெடுநேரம் பேசிக் கொண்டதின் சுருக்கம் இதுதான். ‘தனக்கென யாருமற்றுப் போன மாற்றுத்திறனாளி ஒரு சாலையோரப் பூங்காவில் தஞ்சமடைந்து, கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். அந்தப் பூங்காவிற்கு அடிக்கடி வந்து போகும் பாலியல் தொழிலாளியான பெண்ணை, ஓரு சமயம் ஒரு இக்கட்டான பிரச்சனையில் அவரை காப்பாற்றியதில் இருந்து இருவருக்கும் கருத்தொற்றுமை ஏற்பட, இவளுக்கு அவர் பிடிமானம். அவருக்கு இவள் பிடிமானம் என்றாகிய உறவு இணைந்து வாழ்;வதாக ஏற்றம் பெற்றிருக்கிறது.

இப்படி வாழ்ந்ததிலும் வயிற்றுப்பாடு உண்டே! அதற்காக புதிதாக எதுவும் அவர்கள் செய்வதற்கில்லை. செய்யச் சிந்தனையும் அவர்களுக்கு இல்லை. அந்தப் பெண்ணிற்கு தெரிந்த இரயில்வே சிப்பந்தி இருந்தான். அவன் இரயிலில் தொடர்ந்து பயணிக்கும் பணக்காரர்களின் களியாட்டங்களுக்கு தரகர். அவனோடு சேர்ந்து ஓடும் ரயிலில் தன்னை விற்று வந்தாள். அதில் வரும் தொகை கொண்டே அவர்களுக்கான வாழ்வு ஓடியது.

அப்படியான ஒரு சம்பவமாகத்தான் இன்றும் இரயிலில் பயணித்திருக்கிறார்கள். என்றுமில்லாத கொடுமையாக இன்று போலீசில் அகப்பட்டு அவளை இழுத்துச் சென்று விட்டனர். அதை தடுக்க முயன்ற மாற்றுத்திறனாளிக்கும் அடி, உதை. அவர்களைப் பிரித்தே விட்டார்கள். போலீஸ் அவளை விட்டு விடுமா? இல்லை ஏதேனும் இல்லாது பொல்லாதது சொல்லி சிறையடைத்து விடுவார்களா? இனி அவள் வருவாளா? இல்லை அவ்வளவுதானா? என்னதான் ஆகும்? இப்போது என்னதான் செய்வது? இங்கேயே காத்திருக்கலாமா? இல்லை போய்விடலாமா? என ஏதும் புரியாது திக்கற்றவராக இப்போது மாற்றுத்திறனாளி இருக்கிறார்.

இவ்வளவெல்லாம் இருவரும் பேசி முடிக்க நெடுநேரம் ஆனது. வாயடைத்துப் போய் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த ராமுசாருக்கு மனம் கனத்தது. ‘இப்படியெல்லாமா வாழ்க்கை? இப்படியெல்லாமா மனிதர்கள்? இப்படியெல்லாமா சமூகம்? என்ன கொடுமை! அடச்சே! கடவுள் இல்லவே இல்லையா? ஏன் இப்படி? ஏன் இம்மாதிரிச் செய்திகள் எல்லாம் என்னை வந்து அடைகிறது? நான் உண்டு என் வாழ்க்கை உண்டு என்று இருந்தேனே? ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்ததில்லையே! ஐயோ!’ சுய பச்சாதாபத்தில் வெலவெலத்துப் போனார்.

ராமுசாரின் வாழ்வில் இது அந்தகாரம். என்னென்னவோ அவர் இதுவரை கற்பனைக்கும் எட்டாத நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இப்போது கேட்;ட கதையோ அவரின் சப்தநாடிகளையும் ஸ்தம்பிக்ச் செய்தது. என்ன மனிதர் இவர்? ஒரு பாலியல் தொழிலாளியை ஒரு மனிதன் திருமணம் செய்து வாழ்வதாவது? திருமணத்திற்குப் பின்னும் பாலியல் தொழில் செய்வதாவது? அவரது புத்திக்கு உட்பட்டு இத்தகு விசயங்களைச் ஜீரணிக்கவே முடியவில்லை. உலகில் இப்படியெல்லாம் இருக்குமா? நடக்குமா? என்பதே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாய் இருக்கிறது.

இப்படியெல்லாம் ஒரு மனிதரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? கற்பு என்பது என்ன? இதுவரை நாம் எண்ணி வந்த கற்பு என்பது வேறா? கற்பைப் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாதா? இதோ இந்த மாற்றுத்திறனாளியால் வெகு இயல்பாக சற்றும் உறுத்தல் இல்லாமல், ஏதோ! ‘அதுவும்’ ஒரு சகஜமான வேலை என்பது போல் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது, தன்னால் ஏன் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை? தொடர் கேள்விகள் வந்து மண்டையைக் குடைந்தன. எண்ணங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

நெருப்பு அருகிலிருப்பவரையும் உஷ்ணத்தை உணரச்செய்கிறது. மாற்றுத்திறனாளிக்கு, ராமுசாரின் மனஓட்டங்கள் இன்னதுதான் என்பது புரியவில்லை என்றாலும் அவர் சஞ்சலத்தில் இருக்கிறார் என்று புரிந்தது. நீண்ட பெருமூச்சுடன் தொண்டையைச் செருமிக்கொண்டார்.

‘ஹர்ர்ர்ர்ர்ர்க்’ என்று அவர் எழுப்பிய ஓசையால் ராமுசாரின் நினைவு தடைப்பட மாற்றுத்திறனாளியை நிமிர்ந்து பார்த்தார். தன் திக்கித்தடுமாறும் குரலில் மாற்றுத்திறனாளி இடையிடையே இருமிக்கொண்டே பேசினார்.

‘ம்ம்ம்… என்னடா.. தேவுடியாகூட வாழ்றானேன்னு பாக்குறீங்களா?… வாழனுமேய்யா! வாழனுமே!! பாசம் வச்ச மனசு பாவம் பாக்குறதில்லை. பாவம் பாக்குற மனசு.. பாசம் வைக்கிறதில்ல. ஒடம்புலயா இருக்கு பாசம்? மனசுலதான!.. நாங்க பாசம் வச்சிருக்கோம். அந்த பாசம் வாழ வைக்குது.. வைக்கும்!’

மாற்றுத்திறனாளி இழுத்து இழுத்துப் பேசிக்கொண்டிருந்தார். ராமுசாரின் நினைவு நெருப்பை மடைமாற்றும் பேச்சு.

“ஏதோ ஒரு ராசா.. சாமியாம்.. எவனோ சொன்னான்னு பொண்டாட்டிய நெருப்புல போட்டுச்சாம்.. நெருப்பு என்னய்யா செய்யும்? உடம்பச்சுடும்! அவ மனசுல வேற ஒருத்தன் இருந்தான்னா அந்த நினைப்பை அழிச்சுடுமா?.. மனச மாத்தனும்!.. மனசுமாத்தம் தான் நெசமான அக்கினிப்பிரவேசம்! அப்படிப்பாத்தா அந்தச்சாமி மனசத்தான் முதல்ல மாத்தனும்! அதுக்குத்தான் செய்யணும் தீக்குளிப்பு!!”

இருமலும், செருமலுமாகத் தொடர்ந்த மாற்றுத்திறனாளியின் பேச்சு.. ராமுசாரின் மனதை மாற்றிக்கொண்டுதானிருந்தது.

‘சாமிக பேச்சு.. எனக்கெதுக்கு?.. ஐய்யா… எம்பொண்டாட்;டி எப்படியும் வந்துருவா.. நாங்க வாழுவோம்.. நீங்க சங்கடப்படாதீக!..’ என இன்னும் எதேதோ பேச இழுத்தார் மாற்றுத்திறனாளி. அதெல்லாம் கேட்கவில்லை ராமுசாருக்கு.

அன்புதான் மனித மனத்தில் இருந்து பொங்கும் ஜீவநதி. அது பெருகவே பெருகுமே தவிர.. வற்றாது! கங்கையில் மக்கள் பாவங்களைக் கழுவிக்கொள்கின்றனர். அவ்வளவு பாவங்களையும் கழுவித்தீர்த்த கங்கை, எப்போதும் புண்ணிய நதிதான். கங்கையில் ஒருபோதும் பாவங்கள் ஒட்டுவதில்லை. அன்பும் பாவங்களை மன்னிக்கிறது! ஏற்றுக்கொள்கிறது! புனிதப்படுத்துகிறது! அன்பு ஒருபோதும் மாசடைவதில்லை! அந்த அன்புதான் பாலியல் தொழிலாளியையும் நேசிக்கிறது! அந்த அன்புதான் தன்னால் ஒன்றும் இயலாத மாற்றுத்திறனாளியுடன் வாழ தன்னையும் விற்கத் துணிகிறது!

ராமுசார் மனம் விம்மியது. அன்பு பெருக்கெடுக்க வீடு, மனைவி, குழந்தைகளின் நினைவு வந்தது. தன் மனைவி தன்மீது காட்டிய அன்புக்கு நிகராக அவர் ஒன்றும் செய்துவிடவில்லை. மாறக இப்போது அவர்களைத் தவிக்கவிட்டு வந்துவிட்டார். அன்பானவர்களை தவிக்கவிடுவது பாவம்! எண்ணங்கள் பெருக, ராமுசாருக்கு பெரும் அழுகை வந்தது. அந்த அழுகையில் வழியும் அன்பிலும் நிகழ்ந்தது ஒரு அக்கினிப்பிரவேசம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *