கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 16,985 
 

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ டேனி பாயல் டைரக்ஷனில் ‘அழகர்மலை’ ஆர்.கே.ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும்?

தீபாவளிக்கு முதல் நாள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அப்படி இருக்கும்!

‘படையப்பா’ ரஜினி பேக்கோடு, ஃப்ரீ கக்கூஸில் இருந்து சாப்பாட்டுப் பொட்டலக் கூண்டு வரை சரக்கர்கள்… அரக்கர்கள். பெரிய பெரிய சரவணா ஸ்டோர்ஸ் பைகளுக்குக் காவல், பரோட்டா பார்சலோடு கணவனுக்கு வெயிட்டிங், மல்லிகை உதிரஉதிர மாமியாரைச் சபித்தல்… தாய்க்குலங்கள். மாலை பேப்பரை வெறிப்பது, வாட்ச் பார்த்துக் கதறுவது, அங்கும் இங்கும் ஓடி அலறுவது, சிகரெட் ஊதுவது, பொண்டாட்டி முதல் கண்டக்டர் வரை எகிறுவது, மகன்களின் பொடனியைத் தள்ளுவது, மகள்களின் ஷாலை அள்ளுவது… குடும்பஸ்தர்கள். தவிர, மூக்குக்கு க்ளோஸப்பில் கொட்டாவிவிடும் கொடூரர் கள், வானவில் நிறங்களில் வாந்தியெடுக்கும் கொசுபாலர்கள், ‘குட்டியம்மு வந்துருச்சா? குலோப்ஜாமூன் மாவு வாங்கியாச்சு…’ ஊர்தியேறும் முன்பே ஊரேறும் ‘செல்’லுண்டிகள், ‘ரூமுக்கு 300, எனக்கு … ஒன் அவருக்கு ஆப்பி தீவாளி வர்ரியா?’ \பண்டிகை ஆஃபர் பாலியல் பட்சிகள். இவைக்கு நடுவே அதோ மூன்றாம் நடைமேடையில் கைப்பை தெறித்து, வாணி ஒழுகக் கோணிச் சுருண்டு இருக்கும் ‘உன்னைப் போல் ஒருவன்’ போக வேண்டியது எவ்விடம்?

”அவன் ப்ளாக்ல ‘தண்ணி’ வாங்க நிலாவுக்குப் போவான்டா… நீ ஏன் ஊருக்குப் போகலை?”

”பிரவீனைப் பார்த்தியாடா… 15 நாளைக்கு முன்னாடி ரிசர்வ் பண்ணிட்டான். இப்போ பாரு… நம்மளோட கட்டிங் போட்டு, கட்டிங்கை மிக்ஸிங்ல போட்டு, காக் கிலோ திராட்சை, வசந்தபவன் தயிர் சாதத்தோடு வால்வோ பஸ் ஏறிட்டான். காசு மச்சான் காசு!”

”டேய்! பேசாம எங்கூருக்கு வா. அம்மா போன் பண்ணும்போது சொல்லுச்சு. நான் ரெண்டு டி\ஷர்ட் வாங்கிருக்கேன்ல… ஒண்ணை நீ போட்டுக்க. தம்பி புதுக் கைலி வாங்கிவெச்சுருப்பான்.”

”மச்சான் அழுதுருவேன்டா. இப்பல்லாம் ரொம்ப வீக்காயிட்டேன். ‘பூ’ பார்வதி, ஜக்கி வாசுதேவ், அட்டெண்டர் மாசானம், ‘பௌணர்மி’ மெஸ் ஆயாவையெல்லாம் பார்த்தாக்கூட அழுகை வருது. முந்தா நாள் நைட்டு, வள்ளுவர் கோட்டம் ஆப்போஸிட்ல, கார்ப்பரேஷன் டாய்லெட்டை ஒட்டி நாலஞ்சு வூடுக இருக்குல்ல… அங்க ஒரு அம்மா செத்து கண்ணாடிப் பொட்டில வெச்சுருந்தானுங்க. பக்கத்துல போய் உக்காந்துட்டேன். வெறைச்சுச் சிரிக்குது மச்சான். மொழங்கைக்குக் கீழ ‘இஸ்பேடு’ பச்சக் குத்தியிருக்கு. அது புருஷன் சீட்டாடுவானா… புள்ளை சீட்டு ஆடுவானா?”

”ஷேர் ஆட்டோவுக்குக் காசு இருக்குல்ல… செருப்படி வாங்காம ரூம் போய்ச் சேரு. நாளைக்கு ஃபுல்லா சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துட்டு மங்கி காய்ச்சல்ல போயிரு.”

நாள் முழுவதும் தீபாவளி தினச் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவோர் போத்தீஸ், பாப்புலர் அப்பளம், ‘ஆதவன்’ மற்றும் நோக்கியா… கனெக்ட்டிங் பீப்பிள்.

ரட்டட்டரட்டடவென ஷேர் ஆட்டோவில் அறை திரும்பும்போது அவனது நோக்கியா கனெக்ட்டிங். ‘ஹாய் மூஞ்சி… டிலைட் தீபாவளி – புனிதா.’ கண்டதும் கால்…

”புனிதா… எங்க இருக்க? வேர் ஆர் யூ புனிதா? நான் மேஜர் சுந்தர்ராஜன் பேசுறேன்.”

”ஹ்ஹா… ஹ்ஹா… ஹ்ஹா… நான் கே.ஆர்.விஜயா சிரிக்கிறேன்.”

”வீட்ல கோட்டா சீனிவாச ராவ், கோவை சரளாவெல்லாம் தூங்கிட்டாய்ங்களா? சரி, அந்த பிரவுன் ஜீன்ஸ் உனக்கு ஃபிட்டா இருக்கான்னு கேக்கத்தான் போன் பண்ணேன். சித்து என்ன சொன்னாரு?”

”பெர்ஃபெக்ட். சித்து என் இடுப்பைப் பிடிச்சுப் பார்த்துப் பார்த்து ஆச்சர்யப்படுறான். இளைச்சுட்டேனாம். அப்புறம் உன்னைப்பத்தி என்ன சொன்னான் தெரியுமா?”

”என்ன சொன்னார்?”

”டிரெஸ்ஸெல்லாம் இப்படி சூப்பரா செலெக்ட் பண்றாரே. அப்புறம் ஏன் அவருக்கு ஊர் பூரா தங்கச்சிகளா இருக்கு?ன்னான்.”

”அதுக்கு நீ என்ன சொன்ன?”

”பர்சேஸ் வரக்கூட டைம் இல்லாத உன்னை மாதிரி பன்னாடைகள்ட்ட என்னை மாதிரி செம ஃபிகருங்க ஏமாந்துருதுகள்ல… அதான்னு சொன்னேன். ஆமா, நேத்து தி.நகர்ல ஏன் அப்படி நடந்துக்கிட்ட?”

ஷங்கரும் தங்கரும் சேர்ந்து ஒரு படம் டைரக்ட் பண்ணினால் எப்படி இருக்கும்?

தீபாவளி நேர தி.நகர் ரங்கநாதன் தெரு அப்படி இருக்கும்!

பைபிளில் மோசேவின் கைத்தடி பட்டதும் கடல் பிளந்து வழிவிடுகிற மாதிரி, புனிதா அவன் கையைப் பிடித்துக்கொண்டு கூட்டத்தைக் கிழித்தாள். மனித குலத்தின் வாசனையைப் பகுத்து உணர, கடவுள் ரங்கநாதன் தெருவுக்குத்தான் வர வேண்டும். உஸ்மான் சாலை புதுப் பாலம் தொடங்கும் இடத்தில் இருந்து பஸ் டெப்போ வரை இரண்டு எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வலத்துக்கு ஆள் தேற்றலாம்.

இந்த மாமி மயிலாப்பூரா… மாம்பலமா? அந்த சேட்டு சௌகார்பேட்டையா… யானக்கவுனியா? இந்தப் பசங்க வியாசர்பாடியா… காசிமேடா? அந்தக் குடும்பம் அண்ணா நகரா… அடையாரா? எங்கு பார்த்தாலும் முகங்கள். மதுரையா? திருச்சியா? நெல்லையா? கோவையா? அண்ணாச்சிக் கடை பாத்திரம் மாதிரி எவன் நெற்றியிலும் ஸ்டிக்கர் இல்லை. ஆனால், எல்லோருடைய பாதத்திலும் சாகிற வரை ஒட்டிக்கொண்டே இருக்கிறது சொந்த மண். எஸ்.ராமகிருஷ்ணன் ரேஞ்சுக்கு அவன் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அவனுக்கும் புனிதாவுக்கும் நடுவில் ‘சொத்’தென்று விழுந்து எழுந்து ஓடினான் ஒருவன். ‘திருடன்… சார் புடிங்க. ஏய்ய்ய்…’ பின்னால் திணறித் திமிறினார் இன்னொருவர். திமுதிமுவென அந்தத் திருடனை மடக்கி சட்டையைக் கிழித்தார்கள் சிலர். லலிதா ஜுவல்லரி காம்ப்ளிமென்ட் பேக்கில் இருந்த கத்தை நோட்டை எடுத்துப் பார்த்துக்கொண்டார் துரத்தியவர்.

‘ஹலோ விடுங்க… நாங்க பேசிக்கிறோம் சார். சட்டையை விடுங்க…’ – கைகளைத் தள்ளிவிட்டபடி மொபைலை எடுத்து, ‘ஹலோ லொட்ட…’ என அவன் பேச, மறுபடி சுழற்றித் துவைத்தார்கள். தீபாவளிக்கு வீட்டுக்கு ஜவுளி, ஸ்வீட் வாங்கத் திருடியிருப்பான். அல்லது அந்த லொட்டையோடு சேர்ந்து குடித்துக் கும்மாளமிட்டு கூத்தியா வீட்டுக்குப் போய் குருவி வெடி வெடிக்க இருக்கும். இதுவும் இல்லாமல் க்ரியேட்டிவ்வாக அவனது அம்மாவோ, பிள்ளையோ, ஐ.சி.யு-வில் மூக்கில் டியூப் செருகி மூச்சிழுத்துக்கொண்டு இருப்பார்களோ?

”மூச்சே விட முடியலை… இன்னும் என்னடி எடுக்கணும். நயன்தாரா சேலைன்னு ஆரம்பிச்சேன்னா, நானும் பிரபுதேவாவும் சேர்ந்து உன்னைக் கொன்னுருவோம். ப்ரியாமணி கண்ணாடில்லாம் ஃப்ரிட்ஜுக்கு அங்கன போட்ருப்பான் வா.”

”நாங்க கேட்டது ‘மானாட மயிலாட’ ஸேரி… டி ப்ளாக் அஞ்சலி அரக்கு கலர்ல எடுத்துருக்கா. சான்ஸே இல்ல.”

”எதுக்கு எப்பப் பார்த்தாலும் கட்டம் போட்ட சட்டையா எடுக்குறீங்க? ஷாட்டா போட்டாலும், ராசாவுக்குத் தொப்பை அரசாளுது.”

”வந்தது வந்துட்டோம்… மைக்ரோ அவன்ங்க…”

”போகும்போது ஆட்டோக்காரனுக்கு என் டவுசரைக் கழட்டிக் குடுத்துருவோமா?”

”டேய்! கார்டை ரொம்பத் தேய்க்காத… இந்த மாசம் நீதான் பில் கட்டணும். ஸ்கூட்டி ஓட்டவாவது கத்துக்கடா.”

”மேடம்… மேடம்… ஸாரி கொழந்தையைக் கொஞ்சம் குடுங் களேன். ஹலோ! இதான் சைசு. ஆறு மாசம் இருக்குமா மேடம்? புஜ்ஜிடி… சிரிப்பப் பாரு. கலெக்டர் ஆவியாடா கண்ணு? என்னது, கிரிக்கெட் பிளேயரா ஓஹோஹோ!”

”டாடி ஃபேன்ஸி வெடி…”

”எங்க காலத்துல சரம்னாலே கையகலந்தான்… இப்போதான் என்னென்னவோ சொல்றான். எலெக்ஷன்ல ஓட்டுக்கு ஜனமே காசு கேக்க ஆரம்பிச்சாச்சுல்ல. எல்லாம் மாறிப்போச்சு. ச்சீ, என்ன ஜென்மங்க இப்பிடித் தள்ளுதுங்க!”

ஃபேமிலி தோசை, சில்லி பரோட்டா, கோன் ஐஸ், கரும்பு ஜூஸ், ரோஸ் மில்க், பாப்கார்ன், அவிச்ச கடலை…

”டேய் இளமாறா… எங்கடா இங்க?”

”கடல சாப்பிடுறியா மாப்ள… ஒன் இயரா இங்கதான் ஏர்டெல் கடைல வேலை பார்க்கிறேன். டென் லைட்ஸ்ல ரூம் எடுத்து எட்டு பேரு தங்கிருக்கோம். நைட்டு ஊருக்குப் போறேன். அம்மா, சிஸ்டருக்கெல்லாம் நைட்டி, சித்தப்பாவுக்கு செல் பௌச், இது கவர்மென்ட் டி.வி-க்கு கவர்… ஏற்கெனவே இருந்த டி.வி-யை சுகு சித்திக்குக் குடுத்துட்டோம்… நீ ஊருக்கு வரலை?”

”ஊருக்கா… பார்ப்போம்.”

தரை அடுக்கில் காதணி தொடங்கி, உச்ச அடுக்கில் பாதணி வரை, தோட்டாதரணி செட் ஜெராக்ஸ் கடையில் புகுந்தோம். சித்து வுக்குப் பிடித்த கலர் பிங்க், பிளாக், சாக்லேட்… ஸ்லீவ்லெஸ் கூடாது. முக்கால் கையும் நான் சென்ஸ். ஒரு நாள் ஜீன்ஸ் என்றால், இரண்டு நாள் சுடிதார். வீக்லி ஒன்ஸ் சேலை. நாள் குறித்து ஃபுல் ஸ்கர்ட்.

”இங்க பாரேன்… இந்த டிசைன் எனக்கு மேட்ச் ஆகுதா?”

”ஏய்… பொம்பளையா நீ? ஏம்மா சோத்ததான திங்கிற? கொழந்தையை வேற தூக்கிக்கிட்டு வந்துட்ட.”

”இல்லைங்க… அது தெரியாம பையோட வந்துருச்சு.”

”ஆமாமா… உன்னை மாதிரி ஊமக் களவாணிகளுக்குத்தான் கடை பூரா வீடியோ வெச்சுருக்கு. உன்னை இங்க திரியவிட்டுட்டு புருஷன் எங்க திரியுறான்… மூஞ்சப் பாரு.”

அவனுக்குப் பொசுக்கென்று நெஞ்சு விடைத்தது. ஜிவ்வ்வ்வென்று, இல்லாத ஆர்ம்ஸில் கோல்ஃப் பால் உருண்டது. ”ஹலோ! டீஸன்டாப் பேசுங்க…” என்றான் இடை புகுந்து.

”யார் சார் நீங்க… ரெண்டு எவர்சில்வர் கரண்டி, நாலு பிளவுஸ் பிட்டு திருடியிருக்கு இது.”

”அதுக்கு ஆயிரம் பேருக்கு முன்னாடிவெச்சு அவமானப்படுத்துவீங்களா? தனியா அழைச்சுட்டுப் போய் விசாரிங்க.”

”ஹலோ! இப்பிடி செஞ்சாதான் உறைக்கும். இதெல்லாம் வேற கேசு. வேலையைப் பார்த்துட்டுப் போங்க சார்.”

”யோவ்… என்னா… என்னா போங்கிற?”

”ஏய்… யார்றா அது. அதுக்குத் தொழில் பார்ட்னரா நீயி? ஓவராப் பேசுற. போட்டன்னா…”

வேகமாக வந்த ஒரு மேனேஜர் சொல்லி முடிக்கவில்லை… அவர் செவிப்புறத்தே சொட்டேரென்று வெறிகொண்டு வீசினான் அவன். அவ்வளவுதான்… நாற்புறம்இருந்து வந்தவர்கள் அவனை இழுத்துத் தள்ளி, வெடி வெடிக்க ஆரம்பித்தார்கள். அதிர்ந்து, திகைத்து, சுதாரித்து, ‘ப்ளீஸ்… ப்ளீஸ்’ எனக் கதறிக் கத்தி கச்சேரிக்கு பிரேக்விட்டாள் புனிதா. அந்தப் பெண் திருடிய பொருட்களுக்கு அவளே பில் கட்டி இருவரையும் மீட்டு, வேர்த்து வெளியேறினாள்.

ரயில் நிலையப் படிகளுக்குக் கீழே அந்தப் பெண்ணின் புருஷன் நின்றிருந்தான். கொஞ்ச நேரம் முன்பு லலிதா ஜுவல்லரி பையில் பணமடிக்கப் பார்த்த அதே பார்ட்டி, சட்டை மாற்றி வந்திருந்தான். ”கொழந்தையைக் கொடு… உஷாரு வேணாமா ஒனக்கு. ஸாரி சார்…” என்றவனுக்கு, அவன் விட்ட அறையில் அதிர்ந்து நின்றது ஒரு ரயில்!

”சொல்லு… நேத்து ஏன் அப்பிடி நடந்துக்கிட்ட?”

”அதை விடு.”

”சரி… நீ ஏன் ஊருக்குப் போகலை?”

”அதையும் விடு.”

‘நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட… வேட்டைக்காரன் குழுவோடு ஒரு சந்திப்பு… உங்கள் சன் டி.வி-யில்…’ – அறை மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். கீழ் வீட்டில் இருந்து ஒரே சத்தம். கறி மசாலா, வெல்லப்பாகு, வெடிப் புகை என பால்யத்தை விதைத்து, வாலிபத்தை வதைக்கும் வாசனைகள். நட்சத்திரங்களோடு மோதிச் சிதறும் மத்தாப்புகள். அபார்ட்மென்ட் சிறுவர்களின் கூச்சல். நகரம் ஒருகணம் ‘வார்னர் பிரதர்ஸ்’ படம் போல் களியூட்டுகிறது, மறுகணம் வான்கா ஓவியம் போல் கனமேற்றுகிறது.

வெட்டாற்று எண்ணெய்க் குளியல், வாசலில் சிதறும் காகிதங்கள் கணக்குவைத்து நடக்கும் வெடிப் போட்டி, அம்மா கை சுழியன், கோழிக் கறி, தஞ்சாவூர் சித்தி கொண்டுவரும் அசோகா அல்வா, ரயில்வே சித்தப்பா வாங்கி வரும் பாம்பு மாத்திரை, ரவி மாமா கட்டும் ராக்கெட் ஷோ, தைலம்மை தியேட்டர் மேட்னி ஷோ, தாத்தா வீட்டுக்கு வரும் தேவி, ‘டே… எனக்கு கறுப்புக் கறுப்பாப் போச்சு. ஒனக்கு…’ சுடுகாட்டாங்கரை சாயங்காலம், ‘மீதி வெடியைக் காயவெச்சா சொக்கப்பனைக்கு…’ – அவனது நினைவு கலைத்து அழைக்கிறது மொபைல். வீட்டு நம்பர் ஒளிர்கிறது…

”ஹலோ யப்பா… கௌம்பி வாப்பா. வேலை இருந்தா, நாளைக்குப் பொழுதுக்கு வண்டி புடிச்சுக்க. இங்க நீ இல்லாததுதான் கொறையாக் கெடக்கு.”

”இல்லம்மா கொஞ்சம் வேலை இருக்கு… அடுத்த வாரமா வர்றேன்.”

”ஆமா… நீ இதையே சொல்லு. அப்பிடி என்னடா வேலை? ஊர் புள்ளைகல்லாம் வந்துருக்கு.”

”வேலை இருக்குன்றேன்ல… காலையில கூப்பிடுறேன்.”

எப்படிப் போவான் ஊருக்கு? நினைச்சது நடக்கலையே… இன்னும் ஜெயிக்கலையே… காசு சேர்க்கலையே… நினைவு துரத்தக் கிடந்தான் நிலவின் கீழ்!

கூடத்தில் விழுந்த வெயில், இது மதியம் என்றது. ‘ஹாய்! ஸ்வீட்லாம் சாப்ட்டாச்சா? இப்போ நாம மீட் பண்ணப் போறது ஒரு ச்சோ ஸ்வீட் ஏஞ்சல்…’ எழுந்தான். மொபைலில் அன்புத் தங்கைகளின் மிஸ்டு கால்ஸ் ஆறு.

”ஹலோ… நானும் சித்துவும் மாயாஜால் வந்திருக்கோம். இப்போதான் எந்திரிக்கிறியா… சோம்பேறி. நீ சாப்பிட வருவேன்னு மம்மிட்ட சொல்லிருக்கேன்.”

”பரவாயில்லம்மா… ஃப்ரெண்ட்ஸ்லாம் வர்றாங்க.”

மதியச் சாப்பாடு தேடி தெருவில் நடந்தான். கண் தேடும் பாதையெல்லாம் உணவகங்கள் மூடிக்கிடந்தன. வயிற்றை இழுத்தது. திறந்துகிடந்த கறிக் கடைகளில் கூட்டம் தீரவில்லை. பெட்டிக்கடையில் தொங்கிய வாழைத்தார், முறுக்குகளைக் கண்டு வெறியேறினான். உருவம் வெயிலாகி, சொல்லொணா வெறுமை நிழலாகித் தொடர்ந்தது. ஓரிடத்தில் நின்றான். ‘எங்கே போவது?’ என யோசிக்கும்போதே தோளில் ஒரு கை. அகிலன் நின்றிருந்தான். கையில் ஒரு சாப்பாட்டு பார்சல். நண்பன் ஒருவனின் அறைவாசி. ஈழத் தமிழன்.

”அண்ணே… என்ன இங்க நிக்கறீங்கள்? எல்லா ஓட்டலும் க்ளோஸ். அங்க ஒன்று இருந்ததென்டு. எதுக்கும் நண்பர்களுக்கு ஆகுமென்டு ஒண்ணு எக்ஸ்ட்ரா வாங்கியாந்தேன்” என்றபடி ஒரு பார்சலை நீட்டினான்.

”தேங்ஸ்ரா…”

நடந்து திரும்பியவன், ”ஏன்ணே… உங்கட சொந்த ஊருக்குப் போகலியா நீங்கள்?” என்றான். ஒரு கணம் உடல் மெலிதாக நடுங்கத் தொடங்கியது. உறைந்து நின்றான் அவன். அகிலன் புன்னகைத்தான்… போய்விட்டான்!

– அக்டோபர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *