கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்  
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 3,273 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 2 | அத்தியாயம் 3 – 4

அத்தியாயம் 1

நாலு நாட்களாய்ப் பெய்த அடைமழையில் மரம் செடி கொடிகளெல்லாம் குளித்து, குளம் குட்டைகளெல்லாம் நிரம்பி பூமியே ‘வெடவெட’த்துக் கொண்டிருந்தது.

தவளைகளின் கோஷம் அடங்கி, கீழ்வானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஒளி ஜாலங்களைப் பார்த்தபடி மூர்த்தி ஆற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.

வேதக் களை சொட்டும் முகம், தெய்விகம் கலந்த தேஜஸ்! பிரம்மச்சரியத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பால சந்நியாசி போல் அமைதியாக, அடக்கமாக, வாய் கமகம் முணுமுணுக்க, நடந்து கொண்டிருந்தான்.

அருகில், ஒரு குட்டையைப் பார்த்தபோது பழைய ஞாபகம் வர, அப்பாவின் குரல் அசரீரிபோல் ஒலித்து மெய்சிலிர்த்தான்.

மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது.

அப்பா பரசு தீட்சிதர் பேசுகிறார்:

“மூர்த்தி! எனக்கு வயசாச்சுடா! உன் அம்மா போய் வருஷாப்திகமும் முடிந்து ஒரு வாரம் ஓடிப் போச்சு. இனி நீயும் நானும் இந்த கிராமத்திலே உட்கார்ந்துண்டு என்ன செய்யப் போறோம்? கிராமவாசம் சரி; சகவாசம் சரியில்லையே! நாளை காலை புறப்படுவோம். சனி உஷஸ்! நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்க வேணாம். உன்னைக் கொண்டு போய் சங்கர. கனபாடிகளின் பாடசாலையில் சேர்த்து விடுகிறேன். நீ அவரிடம் வேதம் ஓதி வேத வித்தாய்ப் பிரகாசிக்க வேண்டும் என்பது உன் அம்மாவின் ஆசை. அவள் போன பிறகு எனக்கு வாழ்க்கையே சூன்யமாப் போச்சு. உன்னை சங்கர கனபாடிகளிடம் ஒப்படைத்துவிட்டு நான் எங்காவது வடக்கே போய் கங்கைக்கரையில் தங்கி விடுகிறேன், என் அந்திம காலத்துக்கு ஏற்ற இடம் அதுதான்.”

ஒரு நீர்த்தேக்கத்தின் அருகே அவர்கள் வந்தபோது பொழுது விடிந்து விட்டதால் இருவரும் அங்கேயே ஸ்நானத்தை முடித்துக் கொண்டார்கள். தீட்சிதர் கையோடு கட்டிக்கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தை அவனிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.

அதை அவன் சாப்பிட்டு முடித்ததும் “இதைப் பார்த்தாயா மூர்த்தி! இது உன் அம்மா கழுத்திலிருந்த சங்கிலி. மூணு பவுன், இதை உன் கழுத்திலே போட்டுக் கொள். அவள் ஆசீர்வாதம் உன்னை எப்போதும் தழுவிக் கொண்டிருக்கும்.

பிராம்மண குலத்தில் பிறந்த நீ என்றைக்குமே ஆசார சீலனாக இரு. பிராம்மணீயத்திலிருந்து ஒரு போதும் வழுவி விடாதே! சங்கர கனபாடிகளை நீ ஆசானாக அடைவதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் இரண்டு யாகங்கள் செய்தவர். என் பால்ய சிநேகிதர். தக்க பருவத்தில், உனக்கேற்ற பெண்ணை அவரே தேடி உன் திருமணத்தை முடித்து வைப்பார். உனக்கு இனி மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்.”

மூன்று வருடங்களுக்கு முன் அப்பா சொன்ன அந்த வார்த்தைகளில் தோய்ந்திருந்த பாசமும் பரிவும் இப்போது நினைவுக்கு வர மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டான். அந்தத் தயிர் சாதமும் ஊறுகாயும் இப்போது நெஞ்சில் ருசித்தது.

பிடரியைத் தடவி அங்கே உறுத்திய தங்கச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தபோது அம்மாவின் நினைவு தோன்ற பனிக்கும் கண்களில் அந்தச் சங்கிலியை ஒற்றிக்கொண்டான்.

ஆற்றங்கரைப் படித்துறையில் அமர்ந்து சற்று நேரம் புரண்டோடும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நீந்திக் குளிக்கவேண்டும்போல் ஆசை தோன்றியது.

‘இத்தனை காலம் கிராமத்திலேயே வாழ்ந்திருந்தும் நீச்சல் தெரிந்துகொள்ளாமல் போனேனே!’ என்று வருத்தப்பட்டான்.

அதே படித்துறையில் கீழே கொஞ்சம் தள்ளி, அரை நிர்வாண கோலத்தில் யாரோ ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மேலாடை கரையிலிருந்த ஒரு புதர்மீது உலர்ந்து கொண்டிருந்தது.

“பொழுதுகூடச் சரியாக விடியாத இந்த நேரத்தில் தனிமையில் இங்கே வந்து குளிக்கும் இந்தப் பெண் யார்?” அந்த இளமையும், இயற்கையான வசீகரமும், உடல் வனப்பும் மூர்த்தியை மயக்கத்தில் ஆழ்த்தின.

“மோகினிப் பிசாசு என்று சொல்வார்களே, அதுவாக இருக்குமோ! பிசாசுகள் குளிப்பதுண்டா?”

“சூரிய பகவானே! துஷ்டதேவதைகளிடமிருந்து என்னைக் காப்பாற்று” என்ற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே எழுந்து நின்றான்.

அச்சமயம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயில் மணி ஓசை கேட்கவே, அர்ச்சகர் வந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டான். சீக்கிரமே குளித்து, விநாயகரை வலம் வந்து, அர்ச்சகருக்கு புஷ்பங்கள் பறித்துக் கொடுத்துவிட்டு, பாட சாலைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

“இன்னைக்கு துவாதசி. கனபாடிகள் எனக்காகக் காத்திருப்பார்.

இத்தனை நேரம் ஸ்நானத்தை முடித்துவிட்டு பொன் வேய்ந்த ருத்ராட்ச மாலையும், கட்டுக்கட்டாய் விபூதியும், பீதாம்பரமும் அணிந்து சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். அடிநாபியிலிருந்து எழும் கம்பீரமான சங்கீதக் குரலில் அவர் மந்திரங்களை உச்சரித்து அர்ச்சனை செய்யும்போது பாடசாலை முழுதுமே தெய்விகக் களை வீசும்.

நான் போய் அவருடைய பூஜைக்கு ஒத்தாசையாப் பணிவிடைகள் செய்யணும். இந்தக் கோயில் நந்தவனத்திலிருந்து மலர்களும், காசித் தும்பையும், வில்வமும் எடுத்துண்டு போகணும். சந்தனம் அரைச்சுத் தரணும். தூபதீப ஆராதனைக்கு வேண்டிய அத்தனையும் எடுத்து வைக்கணும். நொண்டி கிட்டா தீபாவளிக்கு ஊருக்குப் போனவன் இன்னும் திரும்பவில்லை. அவன் இருந்தா பாதி வேலைகளை அவனே கவனிச்சுக்குவான்.

துவாதசி ஆனதால் பாகீரதி இதற்குள் ஸ்நானத்தை முடித்து, கூந்தலை ஈரத் துணியோடு சேர்த்துச் சுருட்டி முடித்துக் கொண்டு சமைக்கத் தொடங்கியிருப்பாள். சமையலாகி பாட சாலைப் பிள்ளைகள் பந்தி முடிய எப்படியும் உச்சிப் பொழுதாகிவிடும். அவளுக்கு உதவியாக உக்கிராணத்தில் காய் நறுக்கித் தரணும். தண்ணீர் சேந்தி வைக்கணும். தோட்டத்து லேருந்து வாழை இலை வெட்டி வந்து ஏடு சீவி வைக்கணும். இத்தனையும் நான்தான் செய்தாகணும்.

பாவம், பாகீரதி – கனபாடிகளின் மகளாய்ப் பிறந்து வாழ்க்கையில் என்ன சுகத்தைக் கண்டாள்? சின்ன வயசிலேயே தாலி கட்டிக் கொண்டவள், அந்த மாங்கல்யத்தையும் தாலி கட்டிய பத்து நாளைக்குள்ளாகவே இழந்துவிட்டாள். அப்புறம் ஒரு வருஷத்துக்குள் அவள் அம்மாவும் – மாடு முட்டின தோஷம் – போய் விட்டாள். பாடசாலைப் பிள்ளைகளுக்குச் சமைத்துப் போடும் பொறுப்பு அம்மாவுக்குப் பிறகு இப்போது இவள் தலையில்தான்!

கனபாடிகளோ அளவுக்கு மீறிய ஆசாரம். பிராமணப் பிள்ளைகள் யார் வந்தாலும் பாடசாலையில் சேர்த்துக்கொண்டு வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கார். அவாளுக் கெல்லாம் வடித்துக் கொட்டத்தான் பாகீரதி பிறந்தாளா? அது அவ தலைவிதியா?”

***

“நாராயணா. நாராயணா!” என்று இரண்டு முறை உச்சரித்து, இன்னொருபடி கீழே இறங்கி, இடது கையால் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடும் வெள்ளத்தில் தன் உடல் முழுமையும் அமிழ்த்தியபோது – வெள்ளத்தின் அசுர வேகம் மூர்த்தியைத் தன்பால் இழுத்துக்கொண்டது. மூச்சுத் திணறித் திக்குமுக்காடி ‘ஐயோ’ என்று அலறினான். இன்னொரு முழுக்கு. அந்த வேகத்தில் தலைதூக்க முயன்று, முடியாமற் போய் ஒரு வாய் தண்ணீரும் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் – சட்டென்று இரண்டு கைகள், – அவன் குடுமியைப் பிடித்துத் தூக்கி இழுத்துக் கரை சேர்த்தன. வளைக்கரங்கள்! அவன் ஒன்றும் புரியாமல் மலர மலர விழித்தான். சற்றுமுன் பார்த்த அந்த அரை நிர்வாணப் பெண்தான்! அவள் அவசரமாக அவன் கைகளைப் பிடித்து இழுத்து மல்லாக்கப் படுக்க வைத்து வயிற்றின்மீது தன் காலால் ஒரு மிதிமிதித்தாள். வயிற்றுக்குள் போன தண்ணீர் அவன் வாய் வழியாகப் பீச்சி அடித்தது. அப்புறம்தான் மூர்த்திக்கு மூச்சு சீராக வரத் தொடங்கியது.

மூர்த்தி அவளை நன்றியோடு பார்த்துக்கொண்டே “நீ யார்?” என்று கேட்டான்.

“கழைக் கூத்தாடி மகள். பூர்விகம் மகாராஷ்டிரம்.”

“நன்னாத் தமிழ் பேசறயே!”

“இரண்டு தலைமுறையாகத் தமிழ் நாட்டிலேதான் இருக்கேன்.

ஊர் ஊராய்ப் போய் தெருவில் டமாரம் தட்டி வித்தை செய்து கம்பிமேல் நடந்து, கஜகர்ணம் போட்டு – வயித்துப் பிழைப்பு.’

“இப்ப எந்த ஊர்ல…?”

“இதே ஊர்லதான். தேரடித்தெரு சரபோஜி சத்திரத்து வாசல்ல…”

“சரபோஜி சத்திரமா! அந்தத் தெருவில்தானே எங்க வேத பாடசாலையும் இருக்கு. எனக்குத் தெரியாமப் போச்சே! தினமும் வித்தை செய்வீங்களா?”

“ஆமாம்…”

அவளையே ஆச்சரியத்தோடு வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

வடித்தெடுத்த சிலையாய், அழகு பிம்பமாய், ஜல தேவதையாய்க் காட்சி அளித்த அந்தப் பெண்ணுக்குத் தன்னுடைய அரை நிர்வாண நிலை அப்போதுதான் நினைவுக்கு வர, கூச்சத்துடன் தன் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உலர்த்தியிருந்த ஆடையை நோக்கி விரைந்தாள்.

மூர்த்தி எழுந்து நின்று அவளை நன்றியோடு பார்த்தான். “உன்னை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். பேர் என்ன சொன்னே?”

“மஞ்சு.”

“நாளைக்கும் இங்க வருவியா?”

‘மாட்டேன்’ என்பதுபோல் தலையாட்டினாள்.

“இன்னைக்கு மட்டும் எதுக்கு வந்தே?”

“இன்னைக்கு மூணு நாள்! தீட்டு. குளிச்சுட்டுப் போக லாம்னு வந்தேன்”.

தீட்டு என்றால் அவனுக்குத் தெரியும். பாகீரதி மாதத்துக் கொருமுறை கொல்லைப்புறத்தில் போய் மாட்டுக்கொட்டிலில் உட்கார்ந்துகொண்டு ‘மூர்த்தி! எனக்கு லீவுடா, இந்த மூணு நாளும் நீதான் சமையல் வேலையைக் கவனிச்சுக்கணும்’ என்பாளே, அந்தத் தீட்டுதானே!

“அதான் பொழுது விடியறதுக்குள்ளயே வந்துட்டியா?”

அவள் நாணத்தோடு குனிந்தாள்.

“என்னுடைய நல்ல காலம். இப்ப நீ இங்கே வந்தாய். இல்லைன்னா என்னை வெள்ளம் கொண்டு போயிருக்கும். மத்தியானம் பாடசாலைப் பக்கம் வா. பாயசத்தோடு உனக்குச் சாப்பாடு போடச் சொல்கிறேன். இன்னைக்கு வெள்ளிக்கிழமை. அம்பாளுக்கு பாயசம் நைவேத்தியம் பண்ற வழக்கம்!”

“வேணாம். உழைக்காமல் சாப்பிடறது எங்க வழக்கமில்லை”.

“நீ என்னைக் காப்பாத்தினயே அதுக்கு நன்றிக் கடனாத் தான்…”

“ஒரு உயிரைக் காப்பாத்தறது கடமை இல்லையா?”

“அப்படின்னா உன்னை மறுபடியும் பார்க்கவே முடியாதா?”

“நாளைக்கு பஜார்ல அப்பாவும் நானும் வித்தை செய்வோம். அங்கே வந்தா என்னையும் பார்க்கலாம்; வித்தையும் பார்க்கலாம்! அப்பாவுக்கு வயசாயிட்டுது. நான் போய்த்தான் அடுப்பு மூட்டி பொங்கிப் போடணும். வரட்டுமா?” புறப்பட்டு விட்டாள்.

மூர்த்தி பாடசாலைக்குத் திரும்பிப் போய் மீண்டும் குளித்தான். ‘என்ன, மூர்த்தி, ஏன் மறுபடியும் குளிக்கிறே?’ என்று கேட்டாள் பாகீரதி. அவளுக்கு ஏதோ பொருத்தமில்லாமல் பதில் கூறிவிட்டு வேட்டி உலர்த்த தோட்டப் பக்கம் போனான். மனசே சரியில்லை அவனுக்கு. ‘அந்தப் பெண் எந்தக் குலமோ? என்ன ஜாதியோ? என்னைத் தொட்டுத் தூக்கிக் கரையில் சேர்த்தாள். தீட்டு குளித்தவள். நான் பிராமணன். ஆபத்துக்கு தோஷமில்லை என்று சொல்வார்கள்’ என்று தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு விபூதியைக் குழைத்து மார்பிலும் கழுத்திலும் பூசிக்கொண்டான். அப்போது தன்னுடைய கழுத்து வெறுச்சிட்டிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டான்.

“ஐயோ, என் கழுத்திலிருந்த சங்கிலி எங்கே?”

அத்தியாயம் 2

பாடசாலைப் பிள்ளைகள் ஆசார சீலர்களாய், எதிர் எதிராக அமர்ந்து ‘ஆவர்த்தம்’ சொல்லிக் கொண்டிருந்தார்கள். பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணி வாசனையும் சமையலறையிலிருந்து வந்த ரசம் கொதிக்கும் வாசனையும் சங்கமமாகிப் பாடசாலைப் பிள்ளைகளின் மூக்கைத் துளைத்து பசியைக் கிளப்பிவிட்டது

“அனுஷ்டானம் முடிப்பதற்குள் சமையலாயிடும். சீக்கிரமே இலை போட்டுருவா. துவாதசியாச்சே! நொண்டி கிட்டா இருந்தா இத்தனை நேரம் வாழை ஏடுகள் சீவி, கூடம் பெருக்கி வைத்திருப்பான். மூர்த்தியானா இன்னும் தோட்டப்பக்கமே போகலை. அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே! கேட்டாலும் சொல்ல மறுக்கிறான்.”

குண்டு பட்டாபி மனதை ஆவர்த்தத்தில் ஈடுபடுத்தாமல் சாப்பாட்டில் செலுத்தியிருந்தான்.

“மூர்த்தி! மணி எட்டாகப் போறதுடா! தோட்டப்பக்கம் போய் அந்தச் சருகிட்டுச் சுருங்கிப் போன வாழைமரத்தை வெட்டிண்டு வந்துடு, தண்டும், பட்டையும் உதவும்” என்றாள் பாகீரதி.

“ஆவர்த்தம் அனுஷ்டானமெல்லாம் எனக்கில்லையா?” என்றான் மூர்த்தி.

“நொண்டி கிட்டா நாளைக்கு வரதா கடிதாசி போடடிருக்கான். நாளையிலேர்ந்து அவன் எல்லா வேலையும் கவனிச்சுப்பான். அப்பாவும் காஞ்சீபுரம் போறாளாம். யாகம் பண்ண பிராம்மணோத்தமர்களையெல்லாம் சதஸ்கூட்டி சால்வை போர்த்தி சன்மானம் தரப் போறாளாம் பெரியவா.”

கனபாடிகள் காஞ்சீபுரம் புறப்படுவதற்குள் அவரிடம் காலம்பற சமாசாரத்தைச் சொல்லி விடலாமா? என்று யோசித்தான் மூர்த்தி,

‘வேண்டாம்; சொல்ல வேண்டாம். அதான் அர்க்கியம் விட்டு சூரிய பகவானிடம் வேண்டிக் கொண்டாச்சே! மனத்தாலும், வாக்காலும். கைகளாலும், வயிற்றாலும், ஆண் குறியாலும் எந்தப் பாவத்தைச் செய்தேனோ, இன்னும் என்னிடத்தில் வேறு என்ன பாவம் உண்டோ அவ்வளவையும் நீக்கியருள வேண்டும் என்று சூரியவடிவான பரஞ்சோதியில் ஹோமம் செய்தாச்சே’ என்று உள் மனம் வாதாடியது.

மூர்த்தி – அந்த மூத்த வாழைமரத்தை அடியோடு வெட்டி வந்து துண்டு போடத் தொடங்கினான். அலைபாயும் எண்ணங் களைக் கட்டுப்படுத்த முடியாமல் மனதை ஒரு நிலைப்படுத்த இயலாத நிலையில் குழம்பிக்கொண்டிருந்த அவனுக்குள் ‘அந்தச் சங்கிலி எங்கே போயிருக்கும்? எப்படிப் போயிருக்கும்?’ என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் எழுந்து வாட்டிக் கொண்டிருந்தது.

‘வெள்ளத்தில் போயிருக்குமோ? அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் – மஞ்சு எடுத்துப் போயிருப்பாளோ? ஊஹூம்! அவள் எடுத்திருக்கமாட்டாள். அப்படிப்பட்ட பெண் அல்ல அவள்! ‘உயிரைக் காப்பாற்றுவது ஒரு கடமை இல்லையா?’ என்று கேட்டவளாச்சே! சாப்பிடக் கூப்பிட்டபோது ‘வேண்டாம். உழைக்காமல் சாப்பிடுவது எங்க வழக்கமில்லை’ என்று மறுத்தவளாச்சே! அவள் எடுத்திருக்க மாட்டாள். வெள்ளம்தான் கொண்டு போயிருக்கணும்.’-மஞ்சு ஜல தேவதைபோல் நனைந்த ஆடையில் யெளவனத்தின் பூரிப்பில் ஒருகணம் அவன் கண்முன் மின்னலாய்த் தோன்றி மறைந்தாள்.

‘மூர்த்தி! இது உன் அம்மாவின் சங்கிலிடா. மூணு பவுன். இதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிரு. அம்மா இந்தச் சங்கிலி ரூபமாக உன்னை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பாள்’ அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வர மூர்த்தி கண்களில் நீர் தளும்ப ‘அம்மா!’ என்று புலம்பி விட்டான்.

இதற்குள் பாகீரதி சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு, ‘ஆச்சாடா மூர்த்தி? இலை போடலாமா? அப்பா காஞ்சீபுரம் புறப்படப் போறதாச் சொன்னார். பிரயாணத்துக்கு உச்சி வேளை ரொம்ப நல்லதாம்!” என்று துரிதப்படுத்தினாள்.

மூர்த்தி வாழைப்பட்டைகளைச் சீவிக் கொண்டிருந்த போது கூர்மையான கத்தி அவன் கை விரல்களைப் பதம் பார்த்துவிட, குப்பென்று ரத்தம் பெருக “பாகீ..” என்று அலறிவிட்டான். பாகீரதி ஓடி வந்து ரத்தப் பெருக்கில் நனைந்திருந்த அவன் விரல்களை ஈரத் துணியால் துடைத்து சுண்ணாம்பு வைத்துக் கட்டினாள்.

“உனக்கு என்னமோ ஆயிருக்கு. உன் புத்தியெல்லாம் எங்கேயோ லயிச்சிருக்கு. என்னதான் நடந்தது? மறைக்காமச் சொல்லுடா! எதுக்கு ரெண்டு தரம் ஸ்நானம் பண்ணினே?” என்று கேட்டாள்.

மூர்த்தி மௌனமாயிருந்தான்.

“பதில் சொல்லுடா? ஏன் பேச மாட்டேங்கறே?” அவன் கழுத்தில் துண்டு போர்த்தியிருந்தான்.

“பிரம்மசாரி மேல்துண்டு போடக் கூடாது. இடுப் வேட்டியோடுதான் இருக்கணும்னு சாஸ்திரம் சொல்லுவயே, இன்னைக்கு நீயே போட்டுண்டிருக்கயே!” என்று அவன் கழுத்தைச் சுற்றிப் போர்த்தியிருந்த துண்டை இழுத்து அகற்றியவள், “என்னடா உன் கழுத்து வெறிச்சோடிக் கிடக்கு? சங்கிலி எங்கே?” என்று கேட்டுக்கொண்டே அவன் கழுத்தைத் தடவிப் பார்த்தாள். வாழைத் தண்டு போன்ற வாளிப்பான அவன் கழுத்தை தடவியபடியே, “எத்தனை அழகுடா உன் கழுத்து வாழைத் தண்டு மாதிரி!” என்று ரசித்தாள்.

அவனுக்குக் கூச்சமாக இருந்தது.

‘இதுநாள் வரை என்னைத் தொட்டுப் பேசாத இந்த பாகீரதிக்கு இன்று மட்டும் இத்தனை துணிச்சலும் சுவாதீனமும் எப்படி வந்தது?’ என்று யோசித்தான்.

“சொல்லுடா! சங்கிலி எங்கே, சொல்லு, குளிக்கும்போது ஆற்றிலே போயிட்டுதா?”

“ஆமாம்; நானே வெள்ளத்தில் மூழ்கிப் போனேன். நல்லவேளை1 கழைக்கூத்தாடிப் பெண் ஒருத்தி என்னைத் தூக்கிக் கரை சேர்த்தாள். அவள் இல்லையென்றால் இன்று நான் செத்துப் போயிருப்பேன். இரண்டு வாய் தண்ணீர்கூடக் குடித்து விட்டேன்…”

“கழைக் கூத்தாடிப் பெண்ணா! அந்த நேரத்தில் அவள் எதுக்கு அங்கே வந்தாள்? சங்கிலியை அவள்தான் எடுத்துப் போயிருப்பாள்.”

“அப்படியெல்லாம் பழி போடாதே! அவள் ரொம்ப நல்ல பெண். உத்தமமானவள்…”

“தெருத் தெருவா கூத்தாடி பிச்சை எடுக்கிற பெண் மீது உனக்கேன் இத்தனை கரிசனம்! அவளுக்கு ஏன் இத்தனை பரிந்து பேசறே? நானும் பார்க்கிறேன்; ஆற்றிலிருந்து வந்தது முதல் நீ சரியாவே இல்லே. ஏதோ பித்துப் பிடிச்ச மாதிரி இருக்கே! அவள் ஏதாவது சொக்குப் பொடி போட்டு விட்டாளா, என்ன?”

“சீ, சீ!” என்றான் மூர்த்தி.

“எத்தனை வயசிருக்கும்டா அவளுக்கு?”

“பதினாறு பதினேழுக்குள்ளதான். உன் வயசுதான் இருக்கும். உன்னைப் போலவே ரொம்ப அழகா இருக்கா!”

“சரிதான்; அவள் உன்னை மயக்கிட்டா போலிருக்கு? அப்பா கிட்டே சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கட்டுமா?”

“அவர் ஊருக்குப் போற சமயத்திலே எதையாவது சொல்லி அவர் நிம்மதியைக் கெடுத்துடாதே! வேணாம்!”

பூஜை முடித்து, ஆகாரம் முடித்து கனபாடிகள் மடிசஞ்சி யுடன் காஞ்சீபுரம் புறப்படத் தயாரானபோது ஆற்றங்கரை பிள்ளையார் கோயில் அர்ச்சகர் ‘மூர்த்தி இருக்கானா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

“புறப்படும்போதே எதிரில் ஒத்தை பிராம்மணனா? மூர்த்திக்கு என்ன கொண்டு வந்திருக்கே?” என்று கேட்டுக் கொண்டே பரிகாரமாகச் சற்று திண்ணையில் உட்கார்ந்தார் கனபாடிகள்.

“சங்கிலி..”

“சங்கிலியா!…”

“ஆமாம்; இந்தச் சங்கிலி ஆற்றங்கரை படித்துறையில் கிடந்தது. இது மூர்த்தி கழுத்தில் இருந்த சங்கிலிதான் என்று எனக்குத் தெரியும். அவனைக் கூப்பிடுங்கோ!” என்றார் அர்ச்சகர்.

இதற்குள் மூர்த்தியே வாசலுக்கு வந்து, “அது உங்க கையிலே கிடைச்சுட்டுதா! நல்லவேளை!” என்று வாங்கிக் கொண்டான்.

கனபாடிகள் எதுவும் சொல்லவில்லை. “உள்ளே போய் சுவாமிக்கு முன்னால் வைத்து நமஸ்காரம் பண்ணுடா. உன் தாயார் போட்டுக் கொண்டிருந்த சங்கிலி என்று உன் அப்பா சொல்லியிருக்கார். நல்ல சொத்து. நான் வரட்டுமா! பாகீரதியைக் கூப்பிடு” என்றார்.

பாகீரதி வந்து நின்றாள், “பாடசாலையைப் பார்த்துக்கோம்மா. நாலே நாளில் திரும்பி வந்துடறேன். உனக்குத் துணையா முனியம்மாவை ராத்திரிலே வந்து படுத்துக்கச் சொல்லு. அநேகமா இன்னைக்கு நொண்டி கிட்டா வந்தாலும் வந்துடுவான். ஜாக்கிரதை, ஜாக்கிரதை!” என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.

***

பாயசத்தோடு கூடிய பலமான சாப்பாடு ஆனதால், பாடசாலைப் பிள்ளைகள் உண்ட மயக்கத்தில் மூலைக்கு ஒருவராய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். வாசலில் கல்சட்டி வியாபாரி கட்டைக் குரலில் கூவிக் கொண்டிருந்தான். தோட்டப் பக்கம் கிணற்றடியில் வேலைக்காரி முனியம்மா துணியை அறைந்து துவைக்கும் ஓசை!

“மூர்த்தி! வறயாடா, பல்லாங்குழி ஒரு ஆட்டம் போடலாம். பின்கட்டுப் பக்கம் வா. அங்கே முற்றத்தில் அரிசி வடாம் உலர்த்தியிருக்கேன். காக்கா வராமல் பார்த்துக்கலாம்” என்று கூப்பிட்டாள் பாகீரதி.

“தூக்கம் வரலையா உனக்கு? பாவம், ஓயாம வேலை செய்யறயே!”

“பரவாயில்லடா; பல்லாங்குழி ஆடி ரொம்ப நாளாச்சு. அப்பாகூட இல்லை. வா, வந்து உட்கார்!” என்றாள் பாகீரதி என்றைக்குமில்லாத உற்சாகம் தெரிந்தது அவள் குரலில் கனபாடிகளின் கண்டிப்பான கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்ற உற்சரகம்!

சோப்பினால் முகம் கழுவி, தலைவாரி கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள். வெறிச்சோடியிருந்த அவள் நெற்றியில் மூர்த்தி மானசீகமாய் ஒரு குங்குமப் பொட்டு வைத்து அழகு பார்த்தான்!

வளையல் குலுங்க பாகீரதி தாயங்களை உருட்டினாள்.

‘நீ அடாவடி ஆட்டம் ஆடறே! இந்த அலவான் எனக்குத் தான்” என்றான் மூர்த்தி. “இல்லை எனக்குத்தான்” என்று பல்லாங்குழியை பாகீரதி வேகமாகத் தன் பக்கம் இழுத்தாள். காய்கள் கலைந்து சிதறின. “நீ அடாவடி பண்றே?” என்று எழுந்திருக்கப் போன மூர்த்தியின் கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்ட பாகீரதி, “உட்காருடா; ஏன் ஓடறே?” என்றாள்.

அந்த மென்மையான பிடியில், ஸ்பரிசத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. ‘அப்படியும் இருக்குமோ?’ என்ற அதிர்ச்சியில், பிரமிப்புடன் அவளையே கண்கொட்டாமல் பார்த்து நின்றான் மூர்த்தி.

– தொடரும்…

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வேத வித்து

  1. எத்தனை முறை படித்தாலும் லுக்காத வார்த்தை ஜாலங்கள்.
    தைலதாரையாய் செல்லும் நடை.
    கோகுலுவின் உயிரோட்டமான சித்திரங்கள்.
    மீண்டும் ஒருமுறை படிக்க வாய்ப்பளித்த சிறுகதைகள் டாட்காமுக்கு நன்றி.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *