“”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்.
சாலினி அதிர்ச்சி அடைந்தாள். “நடக்கவா… எவ்வளவு தொலைவிற்கு…?’
ஆறு கி.மீ. இறங்கினால், மார்ஹி என்றொரு ஊர் வரும். அங்கு வேன்கள் இருக்கும். அதில் உங்கள் லாட்ஜ்க்கு செல்லலாம்..
சாலினிக்கு விச்சுவின் மீது கோபம் கோபமாய் வந்தது. அவன்தான் மணாலி சுற்றுலாவை குளிர்காலத்தில் செல்ல பிடிவாதம் பிடித்தான். குளிர்காலத்தில்தான்
உச்சகட்ட குளிரை அனுபவிக்கலாமாம். மேலும் பனிப் பொழிவு வாய்ப்பும் உண்டு என்று ஆலாய்ப் பறந்தான். வச்சுவும், அப்பாவும் விச்சுவுக்கு சப்போர்ட் பண்ண சாலினி பாடல்லவா இப்போது திண்டாட்டமாகி விட்டது. அவளுக்கு நம்மூர் இருபது டிகிரி குளிரே ஒத்து வராது. காலை மணாலியில் இறங்கும் போதே அக்கூ வெதர் மைனஸ் இரண்டு என்றது. இப்போது, இந்த லே சாலை மலை மீது பதினைந்து கி.மீ. வந்துள்ளார்கள். இங்கு நிச்சயம் மைனஸ் பத்து இருக்கும்.
அவர்கள் சுற்றுலாவின் பிரதான அம்சமே குலாபாவின் பனிப்பரப்பு ஆட்டம், பனிச்சறுக்கு விளையாட்டு, ரோப் கார் பயணம், முடிந்தால் சார்பிங்… இவ்விடத்திற்குரிய பிரத்யேக குளிர் தடுப்பு உடைகள், சறுக்கு காலணி, கைடு என்று மொத்த பேக்கேஜாகப் பேசியிருந்தார்கள். என்னதான் நான்கைந்து தடுப்பு உடை போட்டிருந்தாலும், குளிர் அதனையும் ஊடுருவி, முதுகுத் தண்டைப் பிடித்து, சாலினியின் மூளையை உறைய வைத்தது. முகத்தை மறைக்க தடுப்பு எதுவும் கிடையாதா… அது மட்டும் என்ன பாவம் செய்தது?
விச்சுவோ அவன் அம்மாவிற்கு நேரெதிர். குளிர் அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.
சாலினிக்கு விச்சுவின் மீது ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், குலாபா அவள் எண்ணத்தை மாற்றி விட்டது.
ஆம்… குலாபா… ரோடங் கணவாய் பனிப் பரப்பு இங்கிருந்தே ஆரம்பித்து விட்டது. முதன்முதலில் பனியின் மீது காலடி வைத்ததும் அவளுக்குள் எழுந்த சிலிர்ப்பு… ஆஹா எங்கெங்கு காணினும் வெண்மையடா… என்று உரக்க கத்திக் கொண்டு வயசை மீறி குதியாட்டம் போட ஆசை விழைந்தது. பார்க்கப் பார்க்க திகட்டாத காட்சி… நீண்ட நேரம் அதன் அழகில் மயங்கி இருந்தாள். அவ்விடம் முழுவதும் தேனிலவு தம்பதிகளே அதிகம் இருந்தனர். இவர்களைப் போல குடும்பத்தோடு வந்தவர்கள் வெகு சிலரே. அதிலும் தமிழ் கேட்பதே அபூர்வம்.
குழந்தைகள் என்ன செய்கின்றனர்? விச்சு, வச்சுவை தேடினாள். இருவரும் சறுக்கு காலணி மாட்டிக் கொண்டு ஸ்கீ கற்றுக் கொள்ள தயாராயினர். கைடு கரண் சொல்லிக் கொடுத்தார்.
“”முட்டியை மடக்கி, உடலை நன்றாக முன்னால் கொண்டு வந்து, ஸ்டிக்கை மாற்றி மாற்றி சப்போர்ட்டாக வைத்துக் கொண்டே சறுக்குங்கள்”
குழந்தைகள் உற்சாகமாக சறுக்கினர். “ஹூடிபாபா… ஹூடிபாபா..’ என்று கரண் உற்சாகப்படுத்தியது வேடிக்கையாக இருந்தது. “”காலை அகட்டி வைக்காதே.. விழுந்து விடுவாய்”, சொல்லி முடிப்பதற்குள் விச்சு வழுக்கி விழுந்தான். அதற்காக சிறிதும் கவலைப்படாமல் மீண்டும் எழுந்தான். சறுக்கினான். ஆர்ப்பரித்தான். அம்மாவிற்கு காலணி மாட்டி விட வந்தான். “ஆளை விடு சாமி’ என்று சாலினி காத தூரம் ஓடிவிட்டாள்.
அப்போது, சிறுசிறு துளியாக, வெண்மழை விழ ஆரம்பித்தது.
“”அம்மா… ஸ்நோ ஃபால்…”
அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த பனிமழை வந்தேவிட்டது. அனைவரும் உற்சாகமாகி விட்டனர். பஞ்சு பஞ்சாகக் காற்றில் அது மிதந்து வரும் அழகே தனி. மழைத் தூறலில் நனைவதையே விரும்பும் சாலினி, பனித்தூறலை வேண்டாமென்றா சொல்வாள்? சில வினாடிகளில் உடை முழுவதும் வெண்மழை படர்ந்து, அவள் உடையை வெண்மையாக்கியது. ஓர் உதறு உதறியதும், அவையனைத்தும் தெறித்து மறைந்தும் விட்டன. மீண்டும் வெண் உடை, உதறுதல், மறைதல் சாலினிக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்து விட்டது
“”இப்ப தெரியுதாம்மா.. ஏன் நான் அடம் பிடித்தேன் என்று?” – விச்சு கேட்க, “”சரிடா.. உன் மீது எனக்கு கோபம் கிடையாது” என்றாள்.
அவன்மீது வந்த கோபமெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று சாலினிக்கு தோன்றியது. எதற்காகக் கோபப்பட வேண்டும்? இந்தியா, பலதரப்பட்ட மக்கள், பரப்புகள், வளங்கள் மிகுந்த நாடு என்று வேற்றுமையில் ஒற்றுமை என புத்தகத்தில் படித்திருந்தாலும், நேரில் அனுபவிக்கும் உணர்வே அலாதிதானே?
சிறிது சிறிதாகப் பனிப் பொழிவு அதிகரிக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே விழுந்து கொண்டிருந்த வெண்மழை இப்போது தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது. ஆப்பிள் மரங்கள் அனைத்தும் வெண்ணிற குல்லா மாட்டிக் கொண்டன. சாலையில் நின்று கொண்டிருந்த டாக்ஸிகளின் கூரை மீது பனி, வீடு கட்ட ஆரம்பித்தது. குலாபாவின் சூழலும் மாற ஆரம்பித்தது. ஒவ்வொரு குழுவாக அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர். ஏன்? ஏன்? சாலினிக்கு புரியவில்லை. வெண்மழையை ரசித்து மகிழ வேண்டிய நேரத்தில், ஏன் இவ்வளவு அவசர அவசரமாகக் கிளம்புகிறார்கள்?
அவள் கணவர் கூறினார். பனிப் பொழிவு அதிகமாகி விட்டதாம். ஏற்கெனவே நாம் வந்த மலைப் பாதை மீது பனி படர ஆரம்பித்து விட்டது. விரைவில், அது மூன்றடி, நான்கடி உயரத்திற்கு மூடிவிடுமாம். அதன்மீது வாகனத்தை ஓட்டுவது கடினமாம். கைடு நம்மையும் சீக்கிரம் வரச் சொல்கிறார்.
குலாபாவை விட்டுப் பிரிய மனமில்லாமல், கடைசி நபராக அங்கிருந்து சென்றார்கள்.
இறங்கும்போதுதான் சாலினி கவனித்தாள். அவர்கள் ஏறி வந்த பாதை, இடது பக்க மலை, வலது பக்கச் சரிவு அனைத்துமே பனியால் மூடியிருந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் ஏற்படுத்திய தடத்திலேயே, பின் வாகனங்கள் சென்றன.
சில பழக்கமில்லாத வாகனங்கள், டிரைவர்களால், ஆங்காங்கே போக்குவரத்து தடைகள் ஏற்பட ஆரம்பித்தன. அவர்களின் சக்கரங்கள், நம்மூர் சேற்றில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் சக்கரங்கள் போல, பனிப் புதைவிற்குள் சுழன்று கொண்டே நகர மறுத்தன. இரண்டு கி.மீ. கூட இறங்கியிருக்க மாட்டார்கள். டிராபிக் ஜாமில் அவர்களின் டாக்ஸியைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.
டாக்ஸியில் இருந்து இறங்கிய விச்சு, வச்சுவுக்கு பனி உருண்டை செய்ய சொல்லிக் கொடுத்தான். சாலினியின் டென்சன் அதிகரித்தது. இந்த நேரத்தில் விச்சுவால் எப்படி விளையாட முடிகிறது?
பனிப் பொழிவோ சிறிது கூட நிற்காமல், பாதையை மேலும் மேலும் மூடிக் கொண்டேயிருந்தது. வாகனத் தடங்களும் மூடப்பட்டு விட்டன. பெரிய டயர் உள்ள ஜீப் போன்ற வாகனங்களால் மட்டுமே இனி பாதை ஏற்படுத்த முடியும். இல்லையேல், பனி அகற்றும் வாகனம் வரவேண்டும். போக்குவரத்து இப்போதைக்கு சரியாகாது.
மணாலி போலீசாரின் கூற்றைக் கேட்டு வேறு வழியில்லாமல் மார்ஹிக்கு நடக்க ஆரம்பித்தனர்.
சாலினிக்கு தங்களின் நிலைமை “பளிச்’சென்று புரிந்தது. ஆறு கி.மீ. நடை.. இறக்கமான சரிவு பாதைதான் என்றாலும் பனியில் வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். மேலும், சுற்றுலா பயணிகள் அதிகம் என்பதால் மார்ஹியில் வேன்கள் கிடைப்பது என்ன நிச்சயம்? வெண்மழையின் அழகை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த அவளுக்கு, அதன் மற்றொரு முகமான பிரச்சனைகள் எரிச்சலை உண்டு பண்ணியது. விச்சுவின் மீது வந்திருந்த கோபமும் அதிகரித்தது. இந்தக் கொடுமையான குளிரில் வரவைத்து கஷ்டப்படுத்தி விட்டானே…
கைடு துணைக்கு வருவது சற்று தெம்பாக இருந்தது. “”வேகமாக நடக்காதீர்கள்.. முன்னங்காலை நன்றாக அழுத்தி, பிறகு குதிகாலையும் அமுக்கி நிதானமாக ஒரே சீரான வேகத்தில் நடங்கள்” என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். வழக்கம்போல விச்சு அவர் பேச்சைக் கேட்காமல், அவன் ஷூவையே ஸ்கீயாக்கி, சறுக்கிக் கொண்டே வந்தான். கணவர் வச்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க, சாலினி தனியாக நடந்தாள்.
அப்போதுதான் ஆபத்பாந்தவன் போல வந்தன சில ஏடிவி வண்டிகள். இவை பனியின் மீது ஓட்டுவதற்கென்றே உரிய வண்டிகள். மணாலி லாட்ஜ்க்கே விட்டு விடுவதாய் கூவிக் கொண்டே வந்தனர். ஆர்வத்தோடு பலர் விசாரிக்க, வாடகையை கேட்டு, மலைத்து சிலர் நடையைக் கட்டினர். சாலினி கணவர் ஒரு நபரிடம் பேரம் பேசி அழைத்து வந்துவிட்டார்.
அது ஒரு மூன்று சக்கர ஏடிவி மோட்டார் சைக்கிள் போன்றே உருவத்தில், அதே நீளத்தில் இருந்தது. டயர்கள் அகலமாக, கனமாக இருந்தன. பின் சக்கரங்கள் ஆட்டோவின் பாதி அகலத்தில் இருக்க, அதன் மேலே அரை வட்டமாய், முக்கால் அடி அகலத்தில் மக்காடு இருந்தது. இதில் அவர்கள் நால்வர் எப்படி உட்கார்வது? கைடு வேறு இருக்கிறார்.
ஏடிவி டிரைவர் நானக், முதலில் பெட்ரோல் டாங்க்கை ஒட்டி அமர, அவர் பின்னால் விச்சுவும், வச்சுவும் அமர்ந்தனர். சீட் முடிந்தது. சாலினியும், கணவரும் மக்காடு மீது உட்கார்ந்து, பின்புற கம்பியை பிடித்துக் கொண்டனர். “நான் அம்பேல்’ என்று சாலினி பயந்து கொண்டே இருந்தாள். கரண் முன்சக்கர மக்காடு மீது உட்கார்ந்து கொண்டார்.
“”நம்மது அமெரிக்கா இறக்குமதி வண்டி… பத்து பேர் கூட இதில் உட்கார்ந்து போகலாம்…”, என்று நானக் தன் வண்டி புகழ் பாடிக் கொண்டே ஏடிவியை கிளப்பினார்.
விச்சு, ஏடிவி மீதிருந்த ஒரு வாசகத்தை சாலினிக்கு காண்பித்தான்.
“இது இரு நபர்கள் மட்டுமே செல்லக் கூடிய வண்டி. அதிகம் ஏற்றினால் ஆபத்து ஏற்படும்’ என்ற மணாலி போலீசாரின் எச்சரிக்கை ஸ்டிக்கர் அதில் ஒட்டியிருந்தது
“ஐயய்யோ… ரூமிற்கு போனதும் உனக்கு இருக்குதுடா விச்சு’
என்னவொரு பயணம்… எதிர்காற்று, பனிப் பொழிவு, அபரீத குளிர், இவற்றால் விரைத்து விட்டாள் சாலினி. கடலில் படகு மிதந்து செல்வது போல, இந்த பனியில் ஏடிவி மிதந்து சென்றது. வெண்மழை சாலினி முகத்தில் அடித்தது. முகத்தை மூடிய பனியை, அடிக்கடி துடைக்க வேண்டியதிருந்தது. உதடுகள் குளிரில் கனத்தன. இமைகளின் மீது விழுந்த பனிப் பஞ்சினால் அவளின் கண்களைத் திறக்க முடியவில்லை. இரண்டு கையுறைகள் கூட அவளுக்குப் போதவில்லை. ஆனால் நானக்கோ கையுறையே இல்லாமல் அநாயசமாக ஓட்டினார். பயணிகள் பயந்து விடக் கூடாது என்பதற்காக பாதை நடுவிலேயே பயணித்தார். ஆனாலும் சாலினி பயத்தில் கத்திக் கொண்டே வந்தாள். விச்சு உற்சாகத்தில் கத்தினான். கரண் ஹூடிபாபாவை விடவில்லை.
வழி முழுவதும், போர்க்கள பூமியாகக் காட்சியளித்தது. பனிப் புறாக்களும், வேறு சில பறவைகளும், மரக்கிளைகளுக்கிடையேயும், மலைகளின் இடுக்குகளுக்கிடையேயும் கட்டியிருந்த தத்தமது கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. மாடுகள், குதிரைகள், எல்லாம் பெரிது பெரிதாய், புஸý புஸýவென்று முடியோடு, மறைவிடம் தேடியலைந்தன. ஆங்காங்கே சிக்கியிருந்த கார்களை விடுவிக்க, சிலர் முயன்று கொண்டிருந்தனர். காருக்குள்ளே எப்போதும் வைத்திருக்கும் கருவிகளை உபயோகித்து, சக்கரங்களுக்குக் கீழே பள்ளம் தோண்டி, சக டிரைவர்கள் பின்னால் தள்ளி உதவ, காரை விடுவிக்கப் போராடினர்.
அதேசமயம், உள்ளூர்வாசிகளில் சிலரோ பனி உருண்டை செய்து, நண்பர்கள் மீதும், காதலிகள் மீதும் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். குடை பிடித்து வருபவர்களைப் பார்த்தபோது, பனிக்கு கூட குடை பிடிப்பார்களோ என்றிருந்தது. நடந்து வரும் தேனிலவு ஜோடிகளோ, தங்கள் அலுப்பைப் பொருட்படுத்தாமல், பனியில் உற்சாக குளியல் மேற்கொண்டனர். முழு உருவமும், கூந்தலும் பனியால் மூடியிருப்பது, அவர்களை காதல் தேவதைகளாய் உருமாற்றின. மொத்தத்தில் இந்த பனிப் பொழிவு, இம்சையையும், உற்சாகத்தையும் ஒருங்கே கொண்டு வந்துள்ளது.
அரைமணி நேர ஏடிவி பயணத்திற்கு பிறகு, மார்ஹியை தாண்டி வந்த ராணுவ கேம்ப் கிராமத்தில் ஒரு வேன் அருகில் நிறுத்தினார் நானக்.
“”இங்கிருந்து வேன் ஏற்பாடு செய்கிறேன். அதில் லாட்ஜுக்கு போய் விடுங்கள்”
டிரைவர் அங்கு தகராறு பண்ணக் கூடாது.
“”என்னுடைய தம்பி சார்..” என்று கூறிவிட்டு தம்பியிடம் வாடகை பேரம் பேசிக் கொண்டிருந்தார் நானக்
அப்போது…. விச்சு கத்தினான்.
“”ஏய்ய்ய்….. அங்கே பாருங்கள்…”
அந்த பனிப் பாதையில் ஒரு சுற்றுலா டாக்ஸி, டிரைவர் கட்டுப்பாட்டை மீறி பாதையில் வழுக்கிக் கொண்டு, வலதுபுறமாய் பள்ளத்தை நோக்கி சறுக்கிக் கொண்டிருந்தது. அதன் டிரைவர் டாக்ஸியை தன் கட்டுக்குள் கொண்டு வர பிரம்மபிரயத்தனம் செய்தார். பிரேக் போட்டாலும், ஸ்டியரிங்கை திருப்பினாலும், அதன் சறுக்கல் மட்டும் நிற்கவில்லை.
காருக்குள்ளே இருந்த தேனிலவு ஜோடி.. கத்தினார்கள்…
“”வாங்க… காப்பாத்துவோம்”
விச்சு கத்திக் கொண்டே அந்த டாக்ஸியின் வலது பக்கம் சென்று தன் முழு சக்தியோடு டாக்ஸியை பாதைக்குள் தள்ள முயன்றான். விச்சு எட்டாவது படிக்கும் சின்னப் பையன். உன் எதிர்ப்பு எல்லாம் எனக்கு ஜுஜுபி என்பது போல அந்த டாக்ஸி அவனையும் சேர்த்து தள்ளிக் கொண்டு பாதை ஓரத்திற்கு வந்தது. விச்சுவின் கத்தலையும், ஓட்டத்தையும் கண்ட அப்பா, நானக், கரண் மூவரும் கண நேரத்தில் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு, அவர்களும் டாக்ஸிக்கு முட்டுக் கொடுக்க, அதன் வேகம் மட்டுப்பட்டது.
என்றாலும், முழுவதுமாக நிற்கவில்லை. உடனே விச்சு, வலப்புற பானட் அருகே சென்று, சரியாக முன் சக்கரத்திற்கு மேலே கையை வைத்து தள்ளினான். இப்போது அதன் சறுக்கும் திசை இடம் மாறியது. டாக்ஸி, இடதுபுறமாய், மலைப் பக்கம் சென்று, பாதையில் இருந்து இறங்கி, பனிக்குள் சக்கரங்கள் புதைந்து, ஒருவழியாய் நின்றது.
பெரிய ஆபத்தில் இருந்து அந்த மூவரும் தப்பினர்.
காரிலிருந்து இறங்கிய பின்னரும், அவர்களின் கை,கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் புவனேஸ்வரை சேர்ந்த ஜோடி. “தன்யவாத், தன்யவாத்’ என்று உணர்ச்சியுடன் கூற, நானக் அவர்களிடம், “”தம்பிக்கு மட்டும் நன்றி கூறுங்கள். அவன் தான் உண்மையான ஹீரோ” என்று கூறினார். விச்சு, பாராட்டு மழையில் நனைந்தான்
வேனில் ஏறி ரூமிற்கு வந்தும், விச்சுவுக்கு கிடைத்த தன்யவாத்தும், பாராட்டுகளும் சாலினி காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. குளிர் காலத்தில் போய் சுற்றுலா வந்தோமே என்று குழப்பத்தில் இருந்த சாலினிக்கு, இந்த ஜோடி தப்பிக்க உதவும் கருவியாகத் தான் வந்தோமோ என்ற எண்ணம் வந்தது. விச்சுவை கட்டி முத்தமிட வேண்டும்.
விச்சு எங்கே?
அதோ பார், என்று அவள் கணவர் ஜன்னல் வழியே காண்பிக்க, அங்கு விச்சு ரோட்டில் புதிதாய் பிறந்திருந்த மூன்றடி பனிப் படுக்கையில் படுத்துக் கொண்டு கையை நீச்சலடிப்பது போல அசைத்துக் கொண்டு, தேவதை ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தான். தங்கை வச்சுவுக்கும் அவன் சேட்டையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இம்முறை சாலினிக்கு விச்சுவின் மீது கோபம் வரவில்லை.
– ஸ்ரீதேவி (அக்டோபர் 2013)
தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை