இரவு முழுவதும் கண் விழித்திருந்ததில் பகலில் தூங்க வேண்டும் போல் இருந்தது பிரியாவிற்கு!
பிரியா ஆந்திராவைச்சேர்ந்தவள். கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களால் கடத்தி வரப்பட்டு மும்பையில் உள்ள முக்கியப்பகுதியில் முத்திரை பதிக்கப்பட்டவள்.
ஏற்கனவே ஒரு முறை விற்கப்பட்டு நரகச்சிறையில் இருந்தவளை அங்கு வந்த கடத்தல் கும்பலைச்சேர்ந்தவன் மறுவாழ்வு தருவதாக அழைத்து வந்து மறுபடியும் விற்று விட்டான்!
இடம் மாறியது,மனிதர்கள் மாறினர். ஆனால் தன் நிலை மட்டும் மாறாதது கண்டு மனம் வெதும்பினாள்.
உடல் வலியை விட உள்ளம் அதிகமாகவே வலிக்கும். உடனிருப்போரிடம் கூட தன் நிலையை உரைத்திட முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள்!
கவிஞன் அவள் நிலை கண்டிருந்தால் அவள் சிந்திய கண்ணீரால் தான் கடலே உருவானது என்பான்!
அந்த ஊர் பெரிய மனிதர்களுக்கு அன்றாடம் தேன்நிலவைக்காட்டும் அவள் வாழ்வு மட்டும்
தேய்பிறையானது.
எஜமானி இட்ட கட்டளையை எந்தவித எதிர்ப்புமின்றி நிறைவேற்றி வந்தாள் இருபதே வயதான இளம்பெண் பிரியா. ஆனால் மனதளவில் தூண்டிலில் சிக்கிய மீனாக துடித்துக்கொண்டிருந்தாள்.
எப்படியாவது,திருட்டு ரயிலேறியாவது ஊருக்கு போய்விடலாம் என எண்ணுவாள். அங்கே தனக்கென தாய்,தந்தை இல்லாததால் ‘ஓடுகாலி’என உறவினர்கள் ஒதுக்குவார்கள். ஊரில் உள்ளவர்களோ ஓநாய்களாக மாறி தன்னை இரையாக்கிக்கொள்ளப்பார்ப்பார்கள்.
தன்னுடைய இழிநிலையை எண்ணி,எண்ணி உருகியவளாய் உணவு கூட இல்லாமல் உறங்கிப்போவாள்.
பாதி தூக்கத்தில் எழுப்பி பாயை விரிக்கச்சொல்லுவார்கள் பணப்பேய் பிடித்த பாவிகள். ‘அந்த மூன்று நாட்கள்’கூட விட்டு வைக்காமல் விடுமுறையின்றி அவளை விலை பேசுவார்கள்!
‘உடல் நலமில்லை’ என ஒத்துழைக்க மறுத்தால் அவர்கள் ஓங்கி அடிப்பதில் உடல் வீங்கிப்போகும்.
தந்தை வயது உள்ளவர் முதல் தம்பி வயது உள்ளவன் வரை அவளுக்கு வாடிக்கையாளர்கள்.
தவறு செய்வோரை தண்டிக்கும் கடமையுணர்வுள்ள காவல் துறை அதிகாரிகள் முதல், நாட்டு மக்களை நல்வழியில் அழைத்துச்செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகள் வரை அவளைத்தங்களுடைய இச்சைக்கு இரையாக்கிக்கொண்டவர்களுடைய பட்டியலில் அடங்குவர்.
மறத்துப்போன உடலும் உள்ளமும் எதையும் மறுத்துப்போராடும் சக்தியின்றி சரணடைந்தன.
இந்த நிலையில் அவள் வயதொத்த ஒரு வாலிபன் அவளுக்கு புதிய வாடிக்கையாளனாக அறிமுகமானான்.
உள்ளே வந்து கதவைச்சாத்தியவன் தன் உடல் மேல் துணியைப்போர்த்தியதைக்கண்டு திகைப்படைந்தாள்.
ஆசையாய் அணைக்க வந்தவன், தன் அன்புப்பார்வையால் அவள் இதயத்தை நனைத்தான். உடல் தொட வந்தவன் உள்ளம் தொட்டான்!
“என் பெயர் ராகவன். தமிழ் நாட்டிலிருந்து வந்து தனியாக அறை எடுத்து தங்கி வேலை பார்க்கிறேன். உன்னைப்பார்க்கிறதுக்கு எனக்கு பரிதாபமா இருக்கு. கல்லூரிக்குப்போய் படிக்க வேண்டிய வயசுல காலிப்பயல்களோட காம இச்சைக்கு பலியாயிட்டிருக்கறே. எனக்கு சுத்தி வளைச்சுப்பேசத்தெரியல. இது வரைக்கும் ‘அந்த அனுபவம்’ எனக்கு இல்லே. ஏதோ ஒரு தூண்டுதலில் இங்கே வந்துட்டேன். உன்னை இந்த இடத்திலிருந்து காப்பாத்திடனம்னு எனக்குள்ளே ஏதோ ஒன்னு சொல்லுது. நீ என்னைக்கணவனா ஏத்துக்கத்தயார்னா ,நானும் உன்னை என் மனைவியா ஏத்துக்கத்தயார்.” என்று சொன்னவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
இது வரை தன்னைச்சந்தித்தவர்கள் மோகத்தில் மட்டுமே பங்கெடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் சோகத்தில் பங்கெடுத்துக்கொள்ளவும் ஒருவன் இருக்கிறான் என்பதை எண்ணிய போது அவளுக்குள் நம்பிக்கை மலர் ஒன்று மலர்ந்ததை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
‘அவன் ஏதோ தன்னைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் தன் அழகைப்பார்த்து பிதற்றுகிறானோ?’ என்கிற சந்தேகமும் அவளுள் எழாமல் இல்லை.
“இதோ பாருங்க ராகவன் நான் நீங்க நினைக்கிற மாதிரி கங்கை நீர் இல்லை. சாக்கடை! இந்த சாக்கடையை உங்களோட இணைத்து நினைத்தற்கு நன்றி. ஆனால் என்னால் உங்க கூட குடும்பம் நடத்த நான் தமிழ் பேசறேங்கற ஒரே தகுதி மட்டும் போதாது. என் மனசாட்சியே உங்களைப்போன்ற உத்தமர் கூட என்னை வாழ விடாமல் கொன்னுடும்.” என்று சொன்னவள் அவன் மடியில் ஒரு குழந்தையைப்போல் முகம் புதைத்து அழுதாள்.
ராகவன் அன்றாடம் பிரியாவிடம் வருவதும் அவளுக்கு ஆறுதலாக அன்பாய் சில வார்த்தைகள் பேசிச்செல்வதும் தொடர்கதையானது.
பிரியாவும் அவனிடம் தன்னை அறியாமலேயே தன் மனதை பறி கொடுத்து விட்டதை,அவன் வராத நாட்களில் மனம் அவன் வரவுக்காக ஏங்கியதை வைத்துப்புரிந்து கொண்டாள்.
அவளுக்கு அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு நிறைய தடைகள் போடப்பட்டிருந்தன. தப்பித்துப்போன பலர் மீண்டும் பிடித்து வரப்பட்டு கடுமையான தண்டனை பெற்றதை கண்ணெதிரிலேயே பார்த்ததால் தப்பிச்செல்லும் எண்ணத்தையே கைவிட்டாள்.
அடிக்கடி வரும் டாக்டர் அன்றும் வந்து பிரியாவை பரிசோதித்து விட்டு ஒரு செய்தியை சொன்ன போது,அதைக்கேட்ட அதிர்ச்சியால் மயக்கம் அடைந்தாள்.
விழித்துப்பார்த்த போது வேண்டாத பொருளாய் வீதியில் கிடந்தாள். காண்பவர் கண்களுக்கு கறிவேப்பிலையாய் தெரிந்தாள்.
அப்போது அங்கே வந்த ராகவன் விபரம் கேட்காமலேயே தான் வசிக்கும் வீட்டிற்கு பிரியாவை அழைத்துச்சென்றான்.
அவள் அவன் முகத்தைப்பார்க்கக்கூட தகுதியற்றவளாய் தலை குனிந்தவாறு இருந்தாள். தன்னை மறந்து விடுமாறு அவன் கால்களைப்பிடித்துக்கெஞ்சினாள்.
தனக்கு ‘எய்ட்ஸ்’என்கிற கொடிய நோய் வந்திருப்பதாக எடுத்துச்சொல்லியும், அவன் அவளை மணப்பதில் உறுதியாக இருந்தான்.
‘தான் இன்னும் சிறிது காலம் மட்டுமே உயிர் வாழ்வேன் என்பதை உறுதியாகத்தெரிந்த பின்னும் பிடிவாதமாய் இருக்கும் இவன் தெய்வமோ?’என்று எண்ணினாள்!
ஒரு சுபதினத்தில் படங்களை மட்டுமே சாட்சியாக வைத்து பிரியாவுக்கு ராகவன் தாலி கட்டினான்.
அப்போது அவர்களை நோக்கி அந்த டாக்டர் வந்து கொண்டிருந்ததை பிரியா பார்த்தாள்.
“என்ன பிரியா…அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமா இருக்கா…? இவர் தான் நம்மை ஒன்று சேர்த்த தெய்வம்” என்று டாக்டரைக்குறிப்பிட்டுக்கூறிய ராகவனை புதிராகப்பார்த்தாள் பிரியா.
“உனக்கு எய்ட்ஸ் இருப்பதாக பொய் சொன்னேன்! உன் எஜமானி கிட்டிருந்து உன்னை விடுவிக்க எனக்கு வேறு வழி தெரியலை”
“…”
“ராகவன் வந்து என் கால்களைப்பிடிச்சு உன்னை மீட்டுத்தரும்படி கெஞ்சிய போது நானே கண்கலங்கிட்டேன்”
“…”
“உன்னோட உடலை மட்டும் பார்க்காமல் உள்ளத்தைப்பார்த்த ராகவனை எனக்கு பிடிச்சுப்போச்சு”என்று கூறி அவர்களை வாழ்த்திய டாக்டர் காலில் விழுவதற்க்கு பதிலாக, ராகவன் காலில் விழுந்து ஆனந்தக்கண்ணீர் மலர் தூவி வணங்கினாள் பிரியா!
(6.3.1998ல் மாலை முரசு நாளிதழில் பரிசு கதை பகுதியில் வெளியான எனது சிறுகதை)