கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 14,689 
 
 

பசிக்கு விலை.. அறிவுக்கு விலை.. அன்புக்கு விலை… ஆசைக்கு விலை… உடைக்கு விலை… உணர்வுக்கு விலை…உண்மைக்கு விலை.. உறவுக்கு விலை… என எல்லாத்துக்கும் விலை கொடுத்து அல்லது விலைக்கு வாங்கி, கடைசியில் நம்மையே நாம் விலையாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறோமா..?? அல்லது அந்த கட்டாயத்திற்குள் நாமே நுழைந்து கொள்கிறோமா…???.. வாழ்வின் விடை தெரியாத வினாக்கள் எண்ணற்றவை.

அம்மா…!! நான் போயிட்டு வரேன்…..” – துளசி.

“ இருடாமா..!! சாப்டுட்டுப் போ…!! “ என்றவாறே, இட்லியை பிட்டு மகளுக்கு ஊட்டினார் காந்திமதி.

எதிர்பாராமல் வந்த இட்லியை விழுங்கி விட்டு, “ என்னம்மா..!! நீ, மணியாச்சு பாரு…“ சிணுங்கியவாறே துளசி, செருப்பை அணிந்து முடிப்பதற்குள், மூன்று இட்லிகளை அவளின் வயிற்றில் நிரப்பிவிட்ட நிறைவில் காந்திமதி, “ வெறும் வயிற்றோடு போனால், படிப்பு எப்படி மண்டையில் ஏறும்….?? “ என்று சிரித்தவாறே கேட்க,

“ எது, எப்படிப் போனாலும் என் வயித்துக்குள்ள எதையாவது அடைச்சிடணும்மா உனக்கு..? “ என்று துளசியும் சிரித்து விட்டு அம்மாவிற்கு கையை ஆட்டிவிட்டுப் பறந்தாள் ஸ்கூட்டியில்.

துளசி, பி.இ இறுதி ஆண்டு. அப்பா மத்திய அரசாங்க ஊழியர். அம்மா குடும்பத்தலைவி. ஒரே பெண் செல்லம் அதிகம். எல்லாம் அவளின் விருப்பம் தான். அதனால் பிடிவாதமும் அதிகம். ஓரளவு வசதியான குடும்பம் தான்.

கல்லூரியில் அவளுக்காகக் காத்திருந்த தோழிகளோடு சேர்ந்த துளசி, “ ஹாய்..!! இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்…??…” என்று வினவ,

” எப்பவும் போல தான். ஆனா, செம போர். ” என்றாள், தோழி ஒருத்தி

“ அப்போ கட்டடிச்சிட்டு, எங்கயாவது வெளியில போகலாமா..??. “ ஆர்வமாகக் கேட்ட துளசியிடம்.

எல்லோரும், சொல்லி வைத்த மாதிரி, கையில் பணம் இல்லையென்று கூற, சிறிது நேரம் யோசித்த துளசி, ” அதுதான் கைவசம் ஆள் இருக்கில்லை ” என்று கூறி மொபைலில் எண்களைத் தட்டிப் பேசிவிட்டு தோழிகளிடம் விபரம் கூறியபின், மதியத்திற்கு மேல் கிளம்பலாம் என முடிவு செய்து வகுப்பறைக்குள் சென்றனர். அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற தோழிகளின் நினைவலைகள் இரு வருடங்கள் பின்னோக்கி சென்றன.

கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் வரை, மத்தியவர்க்க குடும்பத்தின் மன நிலையான ஒழுக்கத்தை, தன் அடையாளமாகக் கொண்டிருந்தாள், துளசி. அவளுடைய அடக்கம், கட்டுப்பெட்டியாக்கி மூலையில் தள்ளப்பட்டது. அவளுடைய நேர்மை, கர்வமாக ஒதுக்கி வைக்கப்பட்டது. அவளுடைய ஒழுக்கம், கையாலாகாத்தனமாகத் தூக்கியெறியப்பட்டது. பலதரப்பட்ட விமர்சனங்கள், நாளாக நாளாக நாம் சரியாகத் தான் நடந்து கொள்கிறோமா, என்ற சந்தேகத்தை அவளுள் விதைக்க அவளே உணராத மாற்றம் அவளுள் ஏற்பட ஆரம்பித்தது. அவளது நடை, உடை, பாவனை எல்லாம் மாறியது. பார்ட்டிக்குப் போவதில் ஆரம்பித்து, பப், டேட்டிங், என்று மாற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போனதில், செலவுகளும் அதிகரித்தது. வீட்டில் கூற முடியாத செலவுகள், அதை சமாளிக்கவும் அவளுக்கு வழி கிடைத்தது. அந்த வழி..?

மேற்கத்திய கலாச்சாரம் துளசியின் வேரில் வெந்நீரை ஊற்ற, அது கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப் போக ஆரம்பித்து. இறுதியில் கருகியச் செடியாக வீழ்ந்து விட்டது. கருகியச் செடி தன்னை, மேற்கத்திய கலாச்சார பேப்பர்களால் அழகாக சுற்றிக் காண்பவரின் காட்சிக்கு விருந்து வைத்துக் கொண்டிருக்கிறது, என்பதை அந்தச் செடி என்றாவது உணருமா…??

***********************************

”ஏய்..!! ஆர்த்தி..! கீர்த்தி..! சீக்கிரம் எழுந்திரிங்க, ஸ்கூலுக்கு மணியாச்சுல ” காலை நேர பரபரப்பில் சமையல் செய்து கொண்டிருந்த ஆராதனா, கத்திக் கொண்டிருந்தாள்.

பத்து பதினைந்து முறை, கிச்சனுக்கும் பெட்ரூமுக்கும் நடையாய் நடந்து ஒருவழியாகப் பிள்ளைகளை எழுப்பி ஸ்கூலுக்கு ரெடி பண்ணியவள், தானும் தயாராகி சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள். இவ்வளவு களேபரத்திலும் ஒரே ஒரு ஜீவன் மட்டும் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. அது ஆராதனாவின் கணவன் ஜீவா. எவ்விதக் கவலையுமின்றி கை கால்களை கோணல் மாணலாகப் பரப்பிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவனை, ஒரு வெற்றுப்பார்வை பார்த்து விட்டு, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் ஆராதனா.

ஆராதனா, தனியார் கம்பெனி ஒன்றில் பெர்சனல் செகரட்டரியாகப் பணிபுரிகிறாள். காதலித்து மணந்த அன்புக் கணவன் ஜீவா. இரு வீட்டாரையும் எதிர்த்துக் கொண்டு, நடந்த திருமணம். புது விளக்குமாறு கூட்டுறதுக்கு நல்லாருக்கும்னு சொல்ற மாதிரி, ஆரம்பத்தில் இனித்த காதல் வாழ்க்கை போகப் போக கசக்க ஆரம்பித்தது. நாளொரு பிரச்சனையும் பொழுதொரு சண்டையுமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், இரு பிள்ளைகளும் பிறந்து விட்டன. அதே நேரத்தில் ஜீவா, வேலையை விட்டு விட்டு பொழுதுக்கும் குடிப்பதும் ஊர் சுற்றுவதுமாக இருக்க, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி என்ன..? என்ற துயரத்திற்கு ஆளான ஆராதனா, வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டாள்.

மனைவியின் வருமானத்தில் வயிற்றைக் கழுவிக் கொண்டு, குடியில் மிதந்து கொண்டு, உல்லாசமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் காதல் கணவன் ஜீவா. அவள் ஒருத்தியின் சம்பாத்தியத்தில் சென்னை மாநகரத்தில் இரு பிள்ளைகளோடு எவ்வாறு காலம் தள்ள முடியும்….?? குடிகாரக் கணவனையும் வைத்துக் கொண்டு…?? ஆனால், அந்த காலத்தையும் அவள் தள்ளினாள். அதற்கு தான் எத்தனைப் பாடுகள் அப்பப்பா..

ஆராதனாவுக்கு, ஏற்கனவே வேலைப் பார்த்த அனுபவம் இருந்தாலும், தன் அநாதரவான நிலை அவளை மருட்டியது. ஆனால், என்ன செய்ய முடியும். இது அவளே எழுதிய கோலம் அல்லவா….?? ஜீவாவைப் பற்றி ஆயிரம் குறைகள் கொண்டிருந்தாலும், அவன் மேல் இன்னும் நம்பிக்கைக் கொண்டிருந்தாள். அது நம்பிக்கை என்பதை விட, என்றாவது கணவன் மாறிவிட மாட்டானா..?? என்று ஆண்டாண்டு காலமாக மனைவிமார்கள் கொண்டிருக்கும் ஒரு நப்பாசை. அதுவும் தகர்ந்தது ஜீவாவின் நடத்தையால்.

மளிகைக் கடையில் பாக்கி. வீட்டு வாடகை பாக்கி. பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் என்று செலவுகள் நெருக்க, அவளின் வருமானம் போதாமல் தவித்தாள். கடைக்காரனும், ஹவுஸ் ஓனரும் பணத்தைக் கொடு, இல்லை உன் படுக்கையில் இடம் கொடு என்று இளிக்க, அறுவெறுப்பில் கூசிப்போனாள் ஆராதனா. இதைக் கணவனிடம் கூறி சண்டையிட, கோபத்தோடு வெளியே போன ஜீவா, ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான். கையில் ஒரு பாட்டிலோடு, ஒரு பிச்சைக்காரனையும் அழைத்து வந்தவன், அவன் தோளில் மாட்டியிருந்த ஜோல்னாப் பையைத் தட்ட, அதனுள்ளிருந்த சில்லறைகள் குலுங்கின. இவனுடன் படுத்து பணம் வாங்கிக்கொள் என்று கூறிவிட்டு, மீதமிருந்த மதுவைக் குடித்தான். உச்சந்தலையில் யாரோ ஆணியறைந்தைப் போல அவள் ஸ்தம்பித்து நின்றாள். ஆனால், அது ஒரு சில வினாடிகளே. ஆத்திரத்தில் வெறி கொண்ட வேங்கையைப் போல் ஜீவாவின் மேல் பாய்ந்தாள். அவனை சரமாரியாக அடித்து வெளியே தள்ளி கதவை சாத்தியவள், அதன் மீதே சாய்ந்து குமுறிக் குமுறி அழுதாள்.

விடியலுக்குத் தான் அவள் மேல் இரக்கம் இல்லை என்றால், அந்த இரவுக்கும் கூட அவள் மேல் இரக்கம் இல்லாமல் நீண்டு கொண்டிருந்தது. அதன் கூடவே அவள் அழுகையும். எவ்வளவு நீண்ட இரவாக இருந்தாலும், விடிந்து தானே ஆக வேண்டும். விடிந்தது. இளங்காலையே தகித்தது சூரியனின் வெப்பத்தால்..

மறுநாள், வாசலில் கிடந்தவனை பிள்ளைகள் காணும் முன், இழுத்துக் கொண்டு போய் அறையில் தள்ளிவிட்டு, வேலை செய்து கொண்டிருந்தாள். திடீரென்று, தன் பின்பக்கம் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, போதை தெளிந்து வந்து நின்ற ஜீவா,

“ ஏய்..!! இங்க பாருடி.!! நேத்து நான் ஒன்னும் போதையில செய்யலை. நான் ஒருத்தனுக்குப் பணம் கொடுக்கணும். அவன் பணத்தைக் கொடு, இல்லைனா பொண்டாட்டியை அனுப்புனு கேட்குறான். நீ எப்படியாவது பணத்தைக் கொடுக்கலைனா அவன் சொன்னது தான் நடக்கும்.” என்று உறுமியபடியே ரூமிற்குள் சென்று அவனுக்குத் தெரிந்த மற்றொரு வேலையான உறக்கத்தைத் தொடர்ந்தான்.

செய்வதறியாது, நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்தவளைக் கரை சேர்க்க, ஒரு கரம் அவளைப் பற்றியது. அந்தக் கரங்கள் வேண்டாம் என மறுத்தவள், உதவி செய்யக் கூடிய வேறு கரங்களைத் தேடினாள். என்ன ஒரு பரிதாபம், அவள் தேடிய கரங்களோ அவளது கைகளைப் பற்ற மறுக்க, இறுதியாக தன்னைத் தேடி வந்த கரங்களையேப் பற்றினாள் தயக்கத்தோடு. அந்தக் கரங்களோ அவளை உடும்புப் பிடியெனப் பற்றிக் கொண்டது. வாழ்வா..??.. சாவா..?? போராட்டத்தில் அவள் கரையேறினாள் தான். ஆனால்..??

அவள் அலுவலகத்தினுள் நுழைவதற்கும், அவளுடைய பாஸ் அழைப்பதற்கும் சரியாக இருக்கவே, அவரது அறைக்குள் சென்றாள். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தவளை, ஆபிஸில் உள்ள அனைவரின் பார்வையும் குத்தியது. ஆனாலும், குத்திய பார்வைகளை அலட்சியப் போர்வையில் பிடுங்கி போட்ட ஆராதனா தன் வேலையைக் கவனிக்கலானாள். நேரத்தை வேலைகள் விழுங்கினாலும், வயிறு அதை உணர்த்தியது. மதிய உணவிற்காக அந்நியமாக விலக்கி வைத்த, பாஸோடு அந்நியோன்யமாகக் காரில் ஏறினாள்.

***************************************

” லொக்..!! லொக்..!! “ இருமல் சத்தம் கேட்ட அறைக்குள் சென்ற பவானி, கிழிந்த நாராய் படுத்திருக்கும் தாயாருக்கு குடிக்க நீரைப் புகட்டி, மெதுவாக படுக்கையில் கிடத்தினாள்.

” குடிக்கக் கூழு கொண்டு வரட்டுமாம்மா…??.. “ என்ற பவானியின் கேள்விக்கு,

” ம்ம்… ” என்ற ஈனஸ்வரத்தில் முனகல் வர, வெளியே சென்ற பவானி, ஒரு டம்ளரில் குடிக்கும் பதத்தில் இருந்த கூழை கொண்டு வந்து மெதுவாகப் புகட்டினாள். பிறகு சாய்ந்த வாக்கில் அமர வைத்துவிட்டு, வேலைக்கு கிளம்ப ஆயத்தமானாள்.

பள்ளிக்குக் கிளம்பிய தம்பி, தங்கையை அழைத்துக் கொண்டு, அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவிடம், சொல்லி விட்டு கிளம்பினாள் பவானி.

பவானி,. தாய் தங்கை, தம்பி என்ற குடும்பத்தின் ஆணிவேர். மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு, அவளது தந்தை ஓடிப்போக….. அவளது தாயார் வள்ளியம்மாள் தான், நாலு வீட்டில் வேலை செய்து அவர்களைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார். ஓயாத உழைப்பு அவரை படுக்கையில் தள்ள, குடும்பத்தின் அச்சாணி, பவானியின் கைகளில் அடைக்கலம் புகுந்தது. அதை சுழலச் செய்யும் கடமையால் வேலை தேட, வெறும் பட்டப்படிப்பால் அது வசப்படாமல் போனது. சோர்வுற்ற நிலையில், அவளுக்கு ஒரு கார்மெண்ட்ஸில் சூபர்வைஸர் வேலைக் கிடைத்தது. அதன் வருமானம் பத்தும் பத்தாமல் இருந்தாலும், வேறு வழியின்றி, அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள். தம்பியும் தங்கையும், அரசாங்க செலவில் படிக்க, வயிற்றின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடிந்தது. அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைய நல்ல மருத்துவ உதவி செய்ய முடியாத தன் நிலையை நொந்து கொள்ளத்தான் அவளால் முடிந்தது.

ஒண்டு குடித்தனம் தான் என்றாலும், வாடகை, சாப்பாடு, போக்குவரத்து இவையெல்லாவற்றையும் விட கூடிக் கொண்டே போகும் அம்மாவின் மருத்துவ செலவு. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பூதாகரமாக அவள் கண்முன்னே வலம் வந்து தினம் தினம் அவளின் நிம்மதியைப் பறித்துக் கொண்டிருந்தன.

திடீரென்று ஒருநாள், அம்மாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராட, அந்த நடு இரவில் பக்கத்து வீட்டுக் கதவுகளைத் தட்டித் தட்டி ஓய்ந்து போனாள் பவானி. அவளின் தட்டலுக்கு எந்த கதவும் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் அவளே, டாக்டரைத் தேடிப் போக, அந்த டாக்டரோ தன் மருத்துவத்துக்கான விலையைச் சொல்ல, அதிர்ந்த பவானி, கெஞ்சிப் பார்த்தாள். கோபத்தில் சீறினாள். கதறித் தீர்த்தாள். காரி உமிழ்ந்தாள். எத்தனை விதங்கள் உண்டோ அத்தனை விதங்களிலும் அவள், மன்றாடினாள். அந்த மிருகம், கொஞ்சம் கூட இளகவில்லை. இறுதியாக, தாயை விட, எதுவும் பெரிதில்லை என்ற முடிவுக்கு வர, அவள் தாயின் உடல்நிலையும் மெல்ல சீரடைந்தது. ஆனால்..??..

கார்மெண்ட்ஸில் நுழைந்தவள், தனது வருகையைப் பதிவு செய்து விட்டுத் தன் வேலையை செய்யலானாள். ஒரு மணி நேரம் கழிந்த பிறகு, வழக்கமாக செல்லும் ரவுண்ட்ஸிற்கு சென்றவளை, அந்த செக்ஷன் இன்சார்ஜாக பணிபுரியும் பெண்மணி, அழைத்தார். அங்கே சென்றவளிடம், “ இன்னைக்கு மத்தியானம் 2 மணிக்கு மீட்டிங் இருக்காம். அதனால முதலாளி மத்தியானம் சாப்பாடு முடிஞ்சு இருக்க சொன்னாரும்மா..” என்று கூற, அவளுக்கு ஆயாசமாக இருந்தது. ஆனாலும், வெளியே சிரித்து, “ சரிக்கா..!! “ என்று கூறி சென்றவளைப் பார்த்த அப்பெண்மணி, பாவம் என்று பரிதாபப்பட்டாலும், அவராலும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை. ஏழைகள் வேறு என்ன செய்து விட முடியும்..??.. பரிதாபப்படுவதைத் தவிர.

மதிய உணவு முடிந்த பின் காத்திருந்த பவானிக்கு, சுமார் 3 மணியளவில் முதலாளியிடமிருந்து அழைப்பு வந்தது. உள்ளே சென்று திரும்பியவள், வெளியே நின்றிருந்த காரில் ஏற, விருட்டென்று புறப்பட்டது கார்.

****************************************

இட்லிப்பானையிலிருந்து குபுகுபுவென்று கிளம்பிய ஆவி, இட்லிகள் வெந்து விட்டதை அறிவிக்க, கண்ணம்மா, அதன் மூடியைத் திறந்தார். நீரைத் தெளித்து இட்லிகளை எடுத்து வைத்து விட்டு, அடுத்த ஈடு ஊற்றி அடுப்பில் ஏற்றினார்.

” என்னக்கா….!! இட்லி இருக்கா….. இல்லை வேகணுமா…?? காலங்கார்த்தாலே இவ்வளவு கூட்டம்….?..” என்று கேட்டவாறே அமர்ந்தாள் கல்யாணி.

” அது எப்படி இல்லாம போகும்….? உனக்கு தான் முன்னாடியே எடுத்து வச்சுட்டேனே…” என்று கொடுத்த கண்ணம்மா,

சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்யாணியிடம், “ அதுசரி இன்னிக்கு என்ன வெள்ளனவே கிளம்பிட்ட….. “ என்று வினவினார்.

கல்யாணி, “ என்ன பண்றதுக்கா, இந்த பொழைப்புக்கு நேரங்காலம் இருக்கா. எவனோ ஒரு வெளிநாட்டு சாவுகிராக்கி இந்த நேரந்தான் கேட்டுச்சாம். அதை நம்ம நாட்டு பொறம்போக்கு கேட்டுப்புட்டு எங்கிட்ட சொல்லிச்சு.” என்று சொல்லியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தவளின் அருகில் கண்ணம்மாவின் ஐந்து வயது பேரன் ஆவலுடன், “ ஐ..!! அக்கா…” என்று கூறியபடியே கல்யாணியின் அருகில் உட்கார்ந்தான். அவனை வாஞ்சையுடன் பார்த்தவள், இட்லியைப் பிட்டு ஊட்டினாள்.

” தாயி, தகப்பன் இல்லாத புள்ளைக்கு, நீதான் தாயி சாமி..” என்ற கண்ணம்மா, சேலைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“ அக்கா…!!.. என்னக்கா இது…?? புள்ளை முன்னாடி போயி..” சங்கடப்பட்டவளிடம்,

“ நீ என்ன சொன்னாலும், உம்பொழைப்பு இப்படி நாசமா போறதுக்கு நானும் இவனும் காரணமாயிட்டோமேனு நினைச்சுப் பாத்தா ராவில தூக்கம் வரலை கண்ணு….” கலங்கினார் கண்ணம்மா.

“ எந்தலையில இதுன்னு எழுதியிருக்கும் போது, நீ என்ன பண்ணுவக்கா…?? இப்ப இல்லைனாலும் எப்பவாவது இதான் நடந்திருக்கும். அட விடுக்கா…“ என்ற கல்யாணி சாப்பிட்டு முடித்தாள்.

“ எனக்குப் பொறுக்கலையே.. “ புலம்பிக் கொண்டிருந்தார் கண்ணம்மா.

அனாதையாக நின்ற கல்யாணியை எடுத்து வளர்த்தவர் தான், கண்ணம்மா. வளர்ந்த நிலையில், அவரின் மகளுக்கு கல்யாணியைப் பிடிக்காமல் போக, பொருளாதாரப் பற்றாக்குறையும் இருந்ததால் கல்யாணி, தனியாக வசிக்கலானாள். சில வீடுகளில் சமையல் வேலை செய்து, அவள் ஒருத்தி வயிற்றுக்குத் தாராளமாகவே சம்பாதித்தவள் மிஞ்சும் பணத்தை கண்ணம்மாவிடம் கொடுத்து விடுவாள்.

எந்தவித பொருளாதார பிரச்சனையும் இல்லை. ஆனால், இரவு என்றாலே அவளுக்கு குலை நடுங்கிப் போகும். பகலில், தன் வீட்டுப் பெண்களிடம் பம்மிப் பதுங்கும் ஆண்சிங்கங்கள், இரவு நேரத்தில், அடுத்த பெண்களிடம் வீரம் காட்டும் பேடிகளாக, அவள் குடிசையைச் சுற்றி வட்டமடித்தனர். ஜன்னலை சுரண்டுவார்கள். குடிசையில் கல்லெறிவார்கள். கதவை இடிப்பார்கள். எதை உடைத்துக் கொண்டு எப்படி வருவார்கள் என்று பயந்து பயந்து ராத்தூக்கத்தைத் தொலைத்தாள். இது எதையும் கண்ணம்மாவிடம் அவள் கூறவில்லை.

நாளாக, நாளாக பயம் அதிகமாகியது. ஒரு நாய் கூட பாதுகாப்புக்காக வளர்த்துப் பார்த்தாள். அதுவும் கூட அவர்களின் கையில் உயிரை விட்டது. ஆற்றுத் தண்ணீர் தானே, எந்த நாய் வேண்டுமானாலும் நக்கிக் குடிக்கலாம் என்ற எண்ணம் தந்த

இறுமாப்பு, அவர்களை எந்த எல்லைக்கும் செல்ல வைத்தது. அவளும் அவர்களுடன் போராடினாள் மன உறுதியோடு.

இதற்கிடையில், கண்ணம்மாவின் மகள் ஒரு பையனை பெற்றுப் போட்டுவிட்டு, சாலை விபத்தில் பலியாக, மருமகனோ வேறு திருமணம் செய்து கொண்டான். பேரனின் பொறுப்பு கண்ணம்மாவின் தலையில் விடிந்தது. வயதான காலத்தில் அது அவருக்கு பெரும் சுமையாக இருக்க, கல்யாணி அதை பகிர்ந்து கொண்டு, அவரின் சுமையைக் குறைத்தாள். ஒருநாள், மரத்தில் ஏறிய கண்ணம்மாவின் பேரன், தலைக்குப்புற விழுந்ததில் மண்டையில் அடிபட்டதில், ஆப்ரேஷன் செய்தாக வேண்டிய கட்டாயம். பணத்திற்கு அலைய, பணம் இருக்கும் இடம் தான் கண்ணுக்குத் தெரியவில்லை.

“ வயித்துக்கே பெரிய பாடா இருக்கு. இதுல இந்த மாதிரி வந்தா என்ன பண்றது..? போவட்டும் விடு தாயி… “ ஆற்றாமையில் கண்ணம்மா புலம்ப,

“ நீ பேசாம இருக்கா. எந்தலையை அடமானம் வச்சாவது, பணத்தை புரட்டிடுறேன் “ என்ற கல்யாணி, புயல் போல பல இடங்களில் சுழன்றாள். ஒன்றும் பலனில்லை. கடைசியில் அவள் சொன்னது தான் பலித்தது. என்ன…?? அடமானம் வைக்க முடியாமல் விற்கத்தான் முடிந்தது அந்தப் பாவப்பட்ட பெண் ஜென்மத்தால்.

ஒரு தடவை விற்றால், அதை மறுபடியும் விற்க முடியாது, என்பது பொது விதி. ஆனால், கல்யாணி விற்றதை, திரும்ப திரும்ப விற்கலாம். அதற்கு இந்த உலகில் போட்டா போட்டிகள் ஏராளம். அதனால், கல்யாணி அதைத் தொடர அவள் நித்ய கல்யாணியானாள்.

“ பாருக்கா…!! நா எவ்வளவு பெரிய ஆளாயிட்டேன். காரெல்லாம் வருது என்னைக் கூப்பிட “ என்றபடியே அங்கு நின்று கொண்டிருந்த காரைக் காட்டினாள்.

” அதுசரி…!! “ என்றபடியே வியாபாரத்தைக் கவனித்த கண்ணம்மாவிடம், கல்யாணி காசை நீட்ட, கண்ணம்மா மறுத்தார். ”சும்மா வச்சுக்க “ இதுக்கு முன்னாடி எதுவுமே பெரிசில்லக்கா..” என்று தன் வயிற்றை தட்டிக் காட்டிவிட்டு கிளம்பினாள்.

“ இன்னாமே..!! கல்லாணி.. காலேல ஜோராக் கிளம்பிக்கினே…” என்பது போன்ற பலதரப்பட்ட குரல்களுக்கு ஒரே பதிலாக, “ என்ன அண்ணாத்தே பண்றது, காலேல சுளுவா ஒரு கிராக்கி மாட்டுச்சு.. அப்படியே அமுக்கிறணும்ல ” என்றவாறே புன்னகைத்தாள்

“ எங்கியோ இருக்கவனெல்லாம் அனுபவிக்கிறானுவ. நாம பக்கத்திலேயே இருக்குறோம். நமக்கு வாச்சது அம்புட்டு தான் ” என்று பல பெருசுகள் சில சிறுசுகளோடு, அந்த இரவு வீரர்களும் பெருமூச்சோடு ஜொள்ளையும் சேர்த்து வழிய விட,

“ ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்..” என்று கணவனை அடக்கத் தெரியாத பெண்களின் பொறாமை வார்த்தைகளில் பழ(ல) மொழிகளாகத் தெறிக்க,

எல்லாவற்றையும் தன் கடைக்கண்களால் ஒதுக்கித் தள்ளிய கல்யாணி, சேலைத் தலைப்பு காற்றில் பரக்க, ஒய்யாரமாக நடை பயின்றாள். அங்கு பிரமாண்டமாய் நின்று கொண்டிருந்த காரை நோக்கி..

********************************************

நந்தினி IPS என்ற பெயர்ப்பலகை தொங்கிய வீட்டிலிருந்து, “ அம்மா..!! ” என்ற அலறல் கேட்டது. உள்ளே தன் அம்மாவிடம், சீக்கிரம் எழுப்பி விடவில்லை என்பதற்காகக் கத்திக் கொண்டிருந்த நந்தினியின் தலையில் ஒரு கொட்டு வைத்த அம்மா, “ அதுக்கு ஏன் இப்படிக் கத்துற…??..” என்று வினவ,

” என்னது..?? கத்துறேனா…?? மணி மூணாச்சு நாலு மணிக்கு ஒரு கேஸ் இருக்கு ” என்றவாறே குளிக்க சென்றவள் திரும்பி, “ ஊரே என்னைப் பார்த்து பயப்படுது. நீ என்னடான்னா என் தலையில கொட்டுற. ம்.. ” என்று சிரித்து விட்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.

“ ஊருக்கே ராஜாவானாலும் தாய்க்குப் புள்ளை தான். தெரிஞ்சுக்கோ…” கூறியபடியே சாப்பாடு எடுத்து வைக்க சென்றார்

இரவுப் பணிக்கு சென்றவள் வேலைப் பளுவால் இன்று மதியம் தான் வர முடிந்தது. சிறிது நேரம் தூங்கி எழுந்தவள், சிவில் உடையில் கிளம்பி சென்றது ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டலுக்கு.

அந்த ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக கடந்த ஒரு வருடமாக புகார் வந்தாலும், தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், தப்பிக் கொண்டிருந்த நிறுவனம். இன்று பக்கா ப்ளான் போட்டு, பிடிப்பதற்காகக் காத்திருந்தாள் நந்தினி தன் குழுவினரோடு.

சரியாக மாலை 5 மணியளவில் எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்த ஹோட்டலுக்குள் புகுந்த காவல் படை, அங்கு தகாத செயலில் ஈடுபட்டிருந்த அனைவரையும் பிடித்திருந்தனர். பிடிபட்டவர்களில் பல பெண்களோடு சில ஆண்கள் மட்டுமே, இருந்தனர். பலர் சாமர்த்தியமாகத் தப்பி விட்டனர் அல்லது தப்புவிக்கப் பட்டனர்.

அந்த ஹோட்டலின் நிர்வாகியை ஸ்டேஷனுக்கு வர சொல்லிவிட்டு, பிடிபட்ட அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த பிறகு பத்திரிக்கைக்குத் தகவல் கொடுத்தாள் நந்தினி. அவர்கள் வந்து சேர்வதற்குள் அந்த கும்பலில் அதிகம் அறிமுகமில்லாத நால்வரைத் தனியாக அழைத்து வைத்துக் கொண்டாள். அவர்கள், துளசி, ஆராதனா, பவானி, கல்யாணி..

பத்திரிக்கையாளர்கள் வந்து விவரங்களை சேகரித்து, போட்டோ பிடித்து முடித்துக் கிளம்பிய பின்னர் ஒரேயொரு பத்திரிக்கையாளர் மட்டும் இருந்தார். அவரைத் தன் அறைக்கு அழைத்து சென்ற நந்தினி, அந்தப் பெண்களிடம் போட்டோ எடுக்காமல் விபரம் மட்டும் சேகரித்து, மாற்றுப் பெயர்களோடு பத்திரிக்கையில் பிரசுரிக்குமாறு கூறிவிட்டு வெளியேறினாள்.

*************************************

மறுநாள் காலை, தினசரிகளின் நான்காம் பக்கத்தில் நேற்று நடந்ததின் விபரங்களும்…. அந்த நால்வரின் பேட்டிகளும் மாற்றுப் பெயர்களோடு பிரசுரிக்கப்பட்டிருந்தன. என்றாலும், அந்தப் பெண்களின் உண்மைப் பெயர்களே, நந்தினியின் நினைவில் உலா வந்தது.

துளசி : நான் கல்லூரி மாணவி தான். என்னுடைய ஆடம்பரத் தேவைகளுக்காக இதில் ஈடுபடுகிறேன். அதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதில் அவளது அறியாமையே புலப்பட்டது………

ஆராதனா : என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் இதை செய்கிறேன். தப்பு தான் என்றாலும், நான் இதைத்தான் செய்தாக வேண்டும். புலி வாலை பிடித்த கதை தான் இது. என் புருஷனே இதற்கு ஆதரவு தெரிவிக்கும் போது, எனக்கு வேறு வழியில்லை என்றவளின் பேச்சில் விரக்தியே ஆட்சி புரிந்தது என்றாலும், ஒரு ஆணின் கையாலாகாத்தனமே அதில் மறைந்திருந்தது.

பவானி : நான் ஒருத்தி மட்டுமாக இருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். என் குடும்பத்தையே கொலை செய்வதற்கு மனமுமில்லை. துணிவுமில்லை. என் குடும்பத்திற்காக நான் வாழ்ந்தாக வேண்டும். அதற்காக, இந்த சமூகம் இதைத் தான் எனக்கு கொடுத்தது. அதில் தெரிந்தது அவளது அவல வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு ஒரு ஆணின் நயவஞ்சகமும்.

கல்யாணி : இன்னா சார் பண்ண சொல்ற.. நான் ஒருத்தி தான் சார். என்னோட பசிக்கு என்னால் சம்பாதிச்சுக்க முடியுந்தான். ஆனா, ஒருத்தியா இருந்தாலும், என்னை ஆதரிச்ச கண்ணம்மாக்காவுக்காக. அவங்க வம்சக் குருத்து வாழணும்னு தான் சார். இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். அதுவும் நானா வரலை. அந்த நிலைக்குத் தள்ளுனது, உம்மாதிரி ஆம்புளைங்க தான் சார். எனக்கு சோறு போட்டவளுக்கு என்னால செய்ய முடிஞ்ச நன்றிக்கடன். அவ்வளவு தான் சார். சும்மா, ஏன் இந்தத் தொழிலுக்கு வந்த வந்தன்னு மைக்க எடுத்துட்டு கேள்விக் கேக்குறீங்களே சார். நாங்க உதவின்னு அலையும் போது யாராவது செய்வீங்களா….?? நல்லா வாழுறதை விட்டுப்புட்டு இந்த மாதிரி மானங்கெட்டுப் போவ எவளாவது ஆசைப்பட்டு வருவாளா சார்…?? எல்லாம் இல்லாத கொறை தான் சார். பேசாமப் போவியா. அவளின் ஆற்றாமையும், கோபமும் கேள்விகளாய் வெடித்தது.

இந்த செய்தியைப் படித்துக் கொண்டிருந்த நந்தினி, மேலும் பார்வையை ஓட்டினாள். அதே பக்கத்தில் இருந்த அடுத்தடுத்த செய்திகளான 90 வயது பாட்டி பலாத்காரம், 4 வயது குழந்தையுடன் வல்லுறவு, இளம்பெண் கற்பழிப்பு, போன்றவை கண்ணில் பட, ஆதங்கத்துடன் பேப்பரை மடித்து வைத்து விட்டு, சிந்தனையில் ஆழ்ந்தாள்.

நம் பசியைப் போக்குவது ஒரே ஒரு கனி. அதற்காக நாம் கடப்பது ஒரு வனம். என்று எப்பவோ எங்கேயோ, படித்தது ஞாபகத்தில் மோதி சிதறியது. அது எத்தனை நிதர்சனமான வார்த்தைகள். ஒரு பக்கம் நம்மை நாடி வருகின்ற வல்லூறுகள். மறு பக்கம் அதே வல்லூறுகளை நாமே நாடிப் போகின்ற நிர்பந்தம். எதனால் இந்த முரண்பாடு….?? ஆண்களின் கயமைத்தனமா.?. அல்லது அவர்களின் கொடூர மனமா..??. பெண்களின் இயலாமையா…..?? அல்லது அவர்களின் அறியாமையா….?? பதில் கூற இயலவில்லை. வாழ்க்கை நமக்கு எப்போதும் புதிர்களை மட்டுமே ஏன் அளிக்கிறது…?? விடையறியாத, விடையில்லாத புதிர்களோடு எப்போதும் போராட்டம் தானா..??.

ஒரு பக்கம் குழந்தை முதல் கிழவி வரை, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு கொடி பிடிக்கிறோம். ஆர்ப்பாட்டம் செய்கிறோம். போராட்டம் நடத்துகிறோம். ஆனால், இன்னொரு பக்கமோ, அதே வாழ்க்கையை நாமே தேடிப் போகின்றோம். இந்த அவல நிலைக்கு என்ன செய்யப் போகிறோம்…? சிந்தனையில் சுழன்று கொண்டிருந்த நந்தினியின் அலைபேசி அழைக்க, கடமையைச் செய்ய புறப்பட்டாள்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அப்படி அரிதான மானிட வாழ்க்கை பெண்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வலியாக இருக்கிறது….??

நம்மைத் துன்பத்திற்குள் தள்ளுவதும், அதற்காக நம்மையே அற்பமாக விலை கேட்பதும்,. அப்படி விலை போகும் பட்சத்தில் உதாசீனப்படுத்துவதும், நாம் வாழும் இந்த சமூகம் தான்.

நம்மை உதாசீனப்படுத்தும் சமூகத்தை நம்மால் ஏன் அலட்சியப்படுத்த முடிவதில்லை….?? நாம் வாழும் இந்த சமூகம் நமக்கானது இல்லையா….?? அப்படி நமக்கானது என்றால், அதில் ஏன் நிம்மதியாக வாழ முடிவதில்லை.??.

எல்லாத் தப்பும் ஆரம்பிப்பது ஆணிடத்தில் தான் என்றாலும் அது, துன்பமாகி முடிவதோ பெண்ணிடத்தில் மட்டுமே. உப்பைத் தின்ற ஆண்கள் இருக்க, தண்ணீரை மட்டும் பெண்கள் குடிக்க வேண்டுமா..??..

பழி சொல்ல பலர் உள்ள இந்த சமுதாயத்தில் வழி சொல்ல மட்டும் சிலர் கூட இல்லாமல் போவதே, அன்றும் இன்றும் என்றென்றும் பெண்களின் சாபமாகிப் போனதேன்..??.

அற்புதமான மானிட வாழ்க்கை, நமக்கு மட்டும் எப்போதும் அற்பமாகிப் போவதேன்..????. பெண்கள் என்பதாலா…???

அப்படி என்றால்

இப்படி என்பர்……

இப்படி என்றால்

அப்படி என்பர்…..

எப்படி என்றாலும்

தப்படி என்பர்……

ஏனடி என்றால்…..

நீ பெண்ணடி என்பர்………….

ஆம், நாம் பெண்கள், வெறும் பெண்கள்… வெற்றுப் பெண்கள்.. ஆண்களுக்கு விலை போன இந்த சமூகத்தின் பார்வையில்…

– குறிப்பு : இந்தக் கதை, லேடிஸ் விங்க்ஸ் மற்றும் ப்ரதிலிபி இணையதளங்களிலும் பிரசுரித்துள்ளேன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *