கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 17,169 
 
 

காலையில் அருண் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். மோகனா எதோ அவனை பற்றி முணு முணுத்கொண்டிருந்தாள். தினமும் நடப்பது தான். இதை பார்த்துக்கொண்டிருந்த மாமியார் கோமளதிற்கு சற்றே கோபம் வந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.

ரெண்டுபேர்க்கு நடுவில நீ ஏன் வர? அருண் கோபிப்பான்.

அருண் – மோகனாவிற்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. சற்று பொறுத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருவரும் முடிவு செய்து, ஒரு வருடத்திற்கு பிறகு மோகனா கருதரித்தாள். அதனாலோ என்னவோ அருண் மிகவும் ஆவலாக இருந்தான். மோகனாவின் சிறு அலட்சியத்தினால் கருச்சிதைவு ஏற்ப்பட்டது. மோகனாவை காப்பாற்றவே மருத்துவர்கள் போராட வேண்டியிருந்தது.

அதிலிருந்து அருண், மோகனாவிடம் அதிகம் பேசுவதில்லை. மேலும் குடிக்க ஆரம்பித்திருந்தான். வேலை அதிகமாய் இருந்தாலும் வீட்டிற்கு தாமதமாய் வருவான். இல்லையென்றாலும் குடித்துவிட்டு தாமதமாய் தான் வருவான். விடுமுறை தினங்களிலும் குடித்தான்.

மோகனா ஒருமுறை பேசி பார்த்தால்,
“என்னய இப்படியே விட்ரு, கொஞ்சநாள்ல சரியாயிடும்” என்றான் அருண் , மோகனாவின் முகத்தை பார்க்காமலே.

இப்படியே ஓரண்டாகி விட்டது. விட்டிற்கு வருவான், சாப்பிடுவான், பின் உறக்கம் – காலை துயில் எழல், பின் அலுவலகம். அருண் இயந்திர கதியாகிவிட்டான்.

நாங்க பேசி பாக்கட்டுமா? – மோகனாவின் பெற்றோர்.

மோகனா கைக்குப்பி கூறினாள் “அந்த மாதிரி உதவி வேணுன்னா நானே சொல்றேன். என்றாள்.

இருவருக்குள்ளும் இருந்த அன்பு, பாசம் விட்டுபோகவில்லை. மேலும் அவர்கள் இருவரும் திருமணதிற்கு முன்னமே சில ஒப்பந்தங்கள் செய்திருந்தார்கள். முக்கியமானது. இருவருக்கிடையே மூன்றாம் நபர் நுழைய அனுமதிக்க கூடாது. அது பெற்றோறாய் இருந்தாலும்.

மோகனாவை மிகவும் எரிச்சலடைய வைத்தது பக்கத்துக்கு வீட்டு கீதாக்காவின் மகன் அசோக். கீதாக்காவிற்கு கோமளாவைவிட சற்று குறைந்த வயது. வந்த நாளே சொல்லிவிட்டாள் தன்னை அக்கா என்று தான் அழைக்க வேண்டும் என்று. அவளுடைய மகன் அசோக்கிற்கு வயது பதினாரு பதினேழு இருக்கும். திருமணமாகி வந்த புதிதில் நன்றாகத்தான் இருந்தான். அருணுடைய மாற்றம் பற்றி அறிந்தவுடன் அவனுடைய பார்வை மாறியது. இப்போதெல்லாம் வயது வித்தியாசதால் மரியாதை வருவதில்லை. ஆண் பெண் இருவருக்குமே இது பொருந்தும். ஊடகங்களின் தாக்கம் அதன் விளைவுகளை அறியாமலேயே.

அசோக் அவவப்போது தேவையில்லாமல் வந்து வழிந்தான். அவன் அம்மா இல்லாதபோது அதையே சாக்காக வைத்துக்கொண்டு வருவான்.

“என்னக்கா வந்தா ஒண்ணுமே கவனிக்க மாட்டேன்றீங்க”. என்பான். பதிலுக்கு என்னது என்பது போல் பார்த்தால்,
“டீ கூட குடுக்க மாட்டிங்களா” என்பான்.

இவனை துரததவும் முடியாது. சிறுவயதில் இருந்தே அருண் வீட்டில் ஓடியாடி வளர்ந்தவன். வேறு வழியில்லாமல் காபி கலந்து தருவாள்.

குடித்துவிட்டு சூப்பர் என்பான்.

ஒருநாள் மாமியார் கோமளவல்லி அருணிடம் “டேய் மார்கழி மாசம் வருது நீ ஐயப்பனுக்கு மால போடு”.

ஏன்மா? திடீர்னு.

ம்ம். கொஞ்சநாள் இந்த விட்ல உன்னோட சாராய வாசம் போய் சாம்ராணி வாசம் வரட்டுன்னுதான். மோகனாவும் தன பங்குக்கு மாமியாரை ஆதரித்தாள்.

அருணுக்கும் தான் மாற வேண்டும் என்று தோன்றியது. ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று புரியவில்லை. குழந்தை கருவிலேயே இறந்ததால் வந்த கோபமா? ஏன் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா? இருவருக்கும் என்ன வயதாகிவிட்டதா? இல்லையே. பின் ஏன்? தெரியவில்லை. அம்மா கூறியதை அலுவலக நண்பர்களிடம் சொன்னபோது அவர்களும் அதை ஆமோதித்தனர்.

பாபுசாமி, அய்யப்ப பக்த நண்பர் அருணை ஒரு குருசாமியிடம் அழைத்து சென்றார்.

“நல்ல யோகம் சாமி உங்குளுக்கு. இந்த தடவ தான் நாங்க மகரஜோதி பார்த்துட்டு வரணும்-னு முடிவு பண்ணி வர்ற சனிகிழமை மால போட்றோம். அன்னைக்கே நீங்களும் வந்துருங்கசாமி”. என்றார். பாபுசாமியை பார்த்து, “கன்னி சாமிக்கு விரதத்த பத்தி சொல்லிகுடுங்க சாமி”.

வீட்டிற்கு வரும் போது பாபுசாமி சொல்ல ஆரம்பித்தார்,

விரதத பத்தி சொல்லனும்னா, தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் பச்சதண்ணில குளிக்கணும்,

கண்டிப்பா காலைல கோயிலுக்கு போகணும், அய்யப்பன் கோவில் பக்கத்துல இருந்தா போ. இல்லேன்னா எந்த கோவிலுக்கு வேணா போலாம். காலைல குளிச்சவுடனே 108 அய்யப்ப மந்திரத்த சொல்லணும்.

பக்கவாட்டில் வந்து கொண்டிருந்த அருணை திரும்பி பார்த்து, “உடம்புல பச்சை தண்ணி பட்டவுடனே குளிர் தாங்காம நீயே தானா அத சொல்ல ஆரம்பிச்சுடுவ”, என்று அவனை பார்த்து நகைச்சுவையாக சொன்னவர், அந்த மந்தரத்தோட புக் ஒன்னு வாங்கிக்க.

மதியம் மட்டும் தான் சாப்பாடு, காலைல டிபன், ராத்திரில பழம், வசதி இருந்தா பால் குடிக்கலாம். அசைவம் கண்டிப்பா கூடாது. சில சாமிங்க சிகரெட்டு, பீடி, தண்ணீ எல்லாம் சைவம் தானேனு சொல்லி, அதையும் அனுபவிக்கிறாங்க. பல பேர் அய்யப்ப மால போடறதே கெட்ட பழக்கங்கள விடணும்னு தான். உன்ன மாதிரி.

குளிருக்கு கையை கட்டி கொண்டிருந்த அருண் தலையை கவிழ்த்துக்கொண்டு ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

அதையும் சில சாமிமாருங்க கெடுத்திட்றாங்க, என்றவர் சற்று இடைவெளி விட்டு நினைவு வந்தவராக,

அப்புறம் சுத்தம் ரொம்ப முக்கியம். வீட்ட பொம்பளைங்க சுத்தமா வெச்சுப்பாங்க. மனச நாம்தான் சுத்தமா வெச்சிக்கணும். பொண்டாட்டி கூட ஒரே அறைல படுத்தாலும் தரைல தான் படுக்கணும். கட்டில்ல படுக்க கூடாது. பெண்களுக்கு பிரச்சனையான அந்த மூனு நாள்ல தனியா தான் படுக்கணும் – தீட்டான பொம்பளைங்கள பாக்க கூடாது. என்றவர் திரும்பி இவனை பார்த்து, கருப்பு கலர் வேட்டி, துண்டு மத்தது எல்லாம் கடைல கேட்டாவே செட்டா தந்துருவான். அருண் தலையாட்டினான்.

இன்னைக்கு புதன்கிழமை இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. விரதத்த நாளைக்கே ஆரம்பிச்சிடு. சற்று முகத்தருகே வந்து இனி எல்லாரையும் சாமினுதான் கூப்பிடனும், அது ஒரு வயசு குழந்தையா இருந்தாகூட, சரியா சாமி என்றார்

அருண் சற்றே தலையை பின்னோக்கி இழுத்து சரி.. சாமி.. என கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்.

இப்போது வீடே மாறிவிட்டது. வீட்டில் காலையிலேயே சுப்ரபாதம் ஒலிக்க ஆரம்பித்தது அதை தொடர்ந்து அய்யப்பனின் பக்தி பாடல்கள். கீதாக்கா வீடும் கூட.

அருண் மாலை போடுவது பற்றி கீதாக்கா கேட்டபோது கூட இருந்த அசோக்குக்கு அளப்பரிய ஆனந்தம். மோகனா இப்போது ஒரு காரியம் செய்தாள்.

இவனையும் மாலபோட சொல்லுங்க. இப்பல்லாம் சரியா படிக்கறது இல்லைன்னு சொன்னிங்க இல்ல, அருணுக்கும் கூட ஒரு ஆள் கெடைச்சா போல இருக்கும் என்றாள்.

அதை ஆமோதித்த கீதாக்கா ஆமா! ஆமா! நீயும் சபரிமல போய் வாடா அப்போதான் உன்னோட கெட்ட சகவாசமெல்லாம் போகும் என்று தீர்க்கமாய் கூறிவிட்டாள்.

மாலை போட பக்கத்தில் இருந்த ஒரு சிவன் கோவிலுக்கு வரச்சொன்னார் குருசாமி.

அது ஒரு பழமையான சிவன் கோவில். சற்று சிதிலமடைந்திருதது. மாலை போடும் நிகழ்ச்சிக்கு கூட சொந்த பந்தங்களை சிலர் அழைத்திருந்தனர். சாமிகள் ஐம்பது பேர் இருப்பார்கள். சொந்தபந்தங்கள்தான் அதிகம். கோவிலின் பெரிய மண்டபத்தில் பூஜைக்கான பொருட்களை பரப்பிக்கொண்டிருந்தனர் சாமிமார்கள். குருசாமி நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.

அருண் வீட்டில் இருந்து மாலாவை மட்டும் அழைத்திருந்தனர். மாலா அருணிற்கு ஒருவகையில் முறைதான். ஆனால் அவனைவிட வயதில் பெரியவள். திருமணமாகி இரு குழந்தைகள் பெற்றவள். அருணை வாடா போடா என்று தான் அழைப்பாள். அவளுடைய பேச்சுக்கு அருண் மதிப்பு தருவான் – மோகனாவுக்கும் மாலா தூரத்து சொந்தம். மோகனா அருண் வீடு வந்ததும் மாலா அவளுடைய நெருக்கமாகிவிட்டாள்.. மோகனாவின் பிரச்சனைகள் அவளுக்கு தொரியும். தைரியமாக பேசுபவள். தர்க்கவாதி. பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீகம் அவளுடையது.

மாலா அருணிடம் கேட்டாள். சரக்கடிக்ரத நிறுத்த சபரிமல போறாரா அய்யா?. அருண் பதில் சொல்லவில்லை. குருசாமி அருகே போய்விட்டான்..

இப்போது மாலாவும் மோகனாவும் தனியாக இருந்தனர்.

எந்த நேரத்ல எத செய்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல என மாலா அலுத்துக்கொண்டாள்.

மோகனா ஏன்? இதுல என்ன தப்பு? என்றாள்

இந்தியால அதுவும் தமிழ்நாட்டுல இதுமாதிரி climate ஒரு ரெண்டு மூணு மாசந்தான் இருக்கும். அத அனுபவிக்கிறத விட்டுட்டு விரதம் இருகாங்க பாரு.

என்ன சொல்லறக்கா நீ?

இந்த மாசத்துல சாயங்காலத்ல ரோட்ல காதலர்கள் வண்டில போறத பாத்திருக்கியா?

பாத்திருக்கேன்.

வண்டில பின்னால உட்கார்ந்திருக்ற பொண்ணு பையன கட்ட்ட்ட்ட்ட்டி புடிச்சிட்டு போறத பாத்திருக்கியா? சற்று தாழ்ந்த குரலில் மாலா மீண்டும் கேட்டாள்.

மோகனாவும் தாழ்ந்த குரலில் ஆமா என,

ஏன் தெரியுமா?

மோகனா உதட்டை பிதுக்க

ஆமா ஒண்ணுமே தெரியாது உனக்கு நடிக்காத, அப்போதான் குளிர் அடங்கும். ம்.. குளிரும்போது கட்டிபிடிச்சிகிட்டா ஒருத்தர் உடம்புல இருக்குற சூடு அடுத்தவங்களுக்கு பரவும்போது என்ன இதமா இருக்கும் தெரியுமா. சொர்க்கம். மே மாசத்துல நாம இத நெனச்சி கூட பாக்கமுடியாது. அதனால தான் வெள்ளகரங்கல்லாம் காதலர்களா இருந்தாலும் கல்யாணமானவங்ளா இருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் பாத்தவுடனே கட்டிபுடிச்சி உதட்டுல முத்தம் குடுதுக்றாங்கனு நெனைக்றேன். அந்த ஊரு குளிர் அப்படி.

மோகனா அவள் கூறியதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

இத அனுபவிக்ரத விட்டுட்டு இவனுங்களும் காயரனுங்க பொண்டாட்டியையும் காயவுட்றானுங்க. அங்க பார் சாமிங்கள்ல முக்காவாசி பேருக்கு முப்பது வயசு மேல இருக்காது. இவங்கள்லாம் எதுல சேத்தினே தெரியல.

இத எல்லாம் இங்கயா பேசுறது என்றாள் மோகனா பொய் கோபத்துடன்.

வேறெங்க பேசுறது பள்ளிகூடதிலேயா?

அப்போது அசோக்சாமி வந்து தலை குனிந்தபடி அருணண்ணா மாலை போடபோறாரு. அத்தை (கோமலவள்ளி) கூபிட்றாங்க, என்றான்.

இருவரும் சிரித்துக்கொண்டே, சரிங்க சாமி. இதோ வந்துட்டே இருக்கோம் சாமி. என்றனர் போலி மரியாதையுடன்.

அசோக் ஓடிவிட்டான்.

இருவரும் பூஜை மண்டபத்தை நோக்கி நடந்தனர்.

மோகனா இப்போது சந்தோசமாய் இருந்தாள். அருண் மோகனாவிடம் சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தான். வேலை முடிந்தவுடன் நேரே வீட்டிற்க்கு வந்துவிடுவான். மோகி (அருண் மோகனாவை மோகி என செல்லமாய் அழைப்பான்) தரும் டீ-யை குடித்தபின் குளிக்க செல்வான். பின் பக்தியுடன் கருப்பு வேட்டி கட்டிக்கொண்டு, கருப்பு துண்டை தோளில் போட்டு கொண்டு சட்டை போடாமல் கோவிலுக்கு சென்று வருவான்.

மோகனாவும் பக்தியுடனே அனைத்து வேலைகளையும் செய்தாள். அருண் சாமியுடன் பூஜையில் கலந்துகொண்டாள். சில நாள் மாலை வேளைகளில் அவனுடன் கோவிலுக்கு செல்வதுண்டு. அசோக்சாமி காலையில் மட்டும் அருண்சாமியுடன் கோவிலுக்கு செல்வான்.

கோமளவள்ளிக்கு தனது மகன்-மருமகள் இருவரும் என்ன பேசிகொள்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இருவரும் சகஜமாகிவிட்டர்கள் என்பது மட்டும் புரிந்தது. ஐயப்பா எல்லாம் உன் செயல். உன் சன்னதிக்கு என் பிள்ளை வந்தவுடன் என் ஆசையை நிறைவேற்று என்னோட பேர பிள்ளையை நான் சீக்கிரம் பாக்கணும் என மனதிற்குள் வேண்டிகொண்டாள்.

மோகனாவும் அவ்வபோது ஐயப்பனை வேண்டிகொண்டாள் ஆம். தன்னை மன்னிக்கும்படி வேண்டிகொண்டாள். பின்னே இப்போது அருணை பார்க்கும்போதெல்லாம் கெட்ட கெட்ட எண்ணங்கள் வருகின்றன. அவளும் ஒருவருடமாக விரதம் இருக்கிறாள் இல்லையா? அதன் தாக்கம்.

அருணுக்கும் இது புரிய ஆரம்பித்தது. விரதம், விரதம் கடுமையான விரததத்தை கடைபிடித்தான். எப்போதுமே ஐயப்பா ஐயப்பா தான்.. கனவை மட்டும் அவனால் கட்டுபடுத்த முடியவில்லை. சிலநாள் மூன்று மணிக்கே எழுந்து பச்சை தண்ணீரில் குளித்தான்

“ஒரு நாள் கோவிலுக்கு போனபோது என்ன சாமி நல்ல இருக்கீங்களா” என குரல் கேட்டது திரும்பி பார்த்தால் மாலா வந்துகொண்டிருந்தாள்.

சாமி தரிசனம் செய்தபின் அருண் பெண்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு கோவிலை சுற்ற ஆரம்பித்தான். மாலாவும் மோகனாவும் சிவன்கோவிலின் குளத்தருகே அமர்ந்தனர்.

மாலாதான் முதலில் பேசினாள் என்னடி ஒண்ணுமே பேசாம இருக்கே? எதாவது தப்பு….

எப்போவுமே உனக்கு இதே நெனப்புதான்.

நான் சாதாரணமாதான் கேட்டேன், அதுக்கு ஏண்டி கோச்சிக்ற?. என்றாள்

மோகனா சிறிது மௌனத்திற்கு பின், கோவம் உம்மேல இல்லக்கா, எம்மேல என்று மாலாவை பார்த்தாள்.
மாலா தெரியும் என்பது போல் தலையாட்டி, மேல சொல்லு என்றாள்.

இந்த மனசு என்ன பண்ணலும் அடங்கவே மாட்டேங்குது.

மனசு எப்படி அடங்கும் அதுக்கு தேவையானது கெடைக்கிற வரைக்கும் அடங்காது. விரதம்னா சும்மா இல்ல. விரகதத தனிச்சாதான் விரதத்த கடைபிடிக்க முடியும்.

மோகனா கோபமுடன் எங்கவந்து என்ன்ன பேசற?

மாலா கேட்டாள், இது என்ன கோவில்டீ? என்றாள்

சிவன் கோவில்

சிவலிங்கம்னா என்ன?

மோகனா மௌனமாக இருந்தால்.

சொல்லுடின்னா

சிவபார்வதி….. என இழுத்தாள்

சிவபார்வதி சங்கமம் அதாவது ஆண் பெண் புணர்ச்சி. அதோட வடிவம் தான் சிவலிங்கம். கோவில சுத்தி பாத்தா அத பத்தின சிற்பங்கள் தான் வடிச்சு வச்சு இருக்காங்க. இங்க தான் இத பேசணும். இதனுடைய இன்னொரு பொருள் காமத்தை வென்றால் தான் அடுத்த நிலைக்கு போகமுடியும். அதாவது நீங்க ரெண்டுபேரும் இப்போ இருக்கற விரதம். இதை தவம்னு சொல்வாங்க.

மோகனா தலை குனிந்தபடி கேட்டுகொண்டிருந்தாள்.

இதோ பார் மத்தவங்க இருக்குற விரதத்துக்கும் நீங்க இருக்குற விரதத்துக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. மத்தவங்க மால போடறதுக்கு முன்னால உங்கள மாதிரி மனசால உடம்பால பிரிஞ்சி இல்ல அதுவும் ஒரு வருசதுக்கும் மேல. நீங்க ரெண்டு பெரும் சன்யாசி இல்ல. அதுவும் இந்த வயசுல சன்யாசம் கேட்டாகூட குடுக்க மாட்டாங்க. முதல்ல உங்க தாம்பத்ய கடமைய முடிச்சிட்டு வாங்கனு சொல்வாங்க.

ஆனா அக்கா, அருண் மால போட்டிருகாரு.

ஏன் போட்டான்? உம்மேல இருந்த கோவத்துல உன்ன தொடாம இத்தன நாள் இருந்தவன், அத்தை மால போட சொன்னவுடனே ஒத்துக்கிட்டான். ஏன்னா அவனுக்கும் தான் மாறணும்னு எண்ணம் இருக்கு. அதுக்கு எதாவது காரணம் வேணும். அவன் ஒரு மாசதிலேயோ ரெண்டு மாசத்திலேயோ மனசு மாறியிருந்தா இந்நேரம் நீ உண்டாயிருப்பே. அத அவன் செய்ல. குடிக்க ஆரம்பிச்சான் வீட்டுக்கு வர்றதே லேட்டு. உங்க ரெண்டு பேருக்கும் நெருக்கம் வர்றதுக்கான சூழலே இல்லாம போச்சு. இப்போ மால போட்டவுடனே அந்த சுழல் அமைஞ்சிருக்கு.
இப்போ எப்படிக்கா? தெய்வக்குத்தம் ஆய்டாதா?

நீ ஏன் அப்படி நெனக்கறே. கடவுளே உங்களுக்கு ஒரு வழிய ஏற்படுத்தி தந்திருக்கார்னு நெனைசிக்கோ. அவனுக்கு இருபத்து எட்டு வயசாகுது. அருண் தெய்வ பக்தி இல்லாதவன் கிடையாது. இததன வருசமா இல்லாம இப்போ மட்டும் ஏன் கடவுள் அவன மால போட வெச்சார்? உங்களுக்கு ஒரு சந்தர்பத்த ஏற்படுத்தி தரணும்னு இருக்கலாம்மில்லையா? இப்போ நீங்க ரெண்டு பேரும் ராசியாய்டிங்க. நீ பட்ற் அவஸ்தை அவனுக்கு இருக்காதா?

ஆமா சில நாள்ல காலைல மூணு மணிக்கெல்லாம் எழுந்து பச்சை தண்ணில குளிக்கிறார் – மோகனா சொன்னாள்.

இருக்கும் உன்ன மாதிரியே தான் அவனும் மால போட்டுடோமேனு பயந்துட்டு இருப்பான்.

இன்னும் ஒரு முப்பது நாப்பது நாள்ல என்னாகபோகுது.

யாருடி இவ. சபலத்தோட சபரிமலைக்கு போனா மட்டும் தெய்வ குத்தம் ஆவாதா? அதுவும் இல்லாம மலைக்கு போயிட்டு திரும்பும் போதே வீட்டுக்கு கூட வராம சாராயக்கடைக்கு சில சாமிங்க போறதுண்டு அவங்க கூட அவனும் போனான்னு வச்சிக்கோ

மோகனா அதிர்ச்சியாகி பார்த்தாள்

அப்புறம் பழைய குருடி கதவ திறடி கத தான்.

மறுபடியும் அருண் சாராய கடைக்கு போகமாட்டர்னு என்ன நிச்சயம்?

அது உன் திறமடி. இது கூடவா சொல்லிதரணும்

இப்போ என்னை என்ன பண்ண சொல்ற?

ஆங்….. புள்ள பெத்துக்க சொல்றேன். இதோ பார். கடவுள் மனுஷனுக்கு வழிய தான் காட்டுவார். மனுசன் அத பயன்படுத்தி தன் தேவைய நிறைவேத்திக்கனும். இல்லேனா கடவுளே கூட அவன முட்டாள்னு தான் நெனப்பார். புரிஞ்சிக்கோ. ஆமா நீ படிப்புல எப்பிடி?

பாஸ்ட் ரேங்க் -மோகனா

அது தான் வாழ்க்கைல மக்கா இருக்கே. உலகத்த படிங்கடி. இது மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையாது. இப்போ என்ன இந்த வருஷம் இல்லனா அடுத்த வருஷம் மலைக்கு போறான் அவ்ளோதானே? ஆனா அப்போ ரெண்டு பெரும் இவ்ளோ தடுமாற மாட்டீங்க. மறுபடியும் சொல்றேன் விரகத்த முடிச்சாதான் விரதத்த தொடங்க முடியும் புரிஞ்ச்க்கோ என்றாள்

மோகனா ஒன்றும் சொல்லாமல் மாலாவையே பார்த்துகொண்டிருந்தாள். பின் கேட்டாள், அருண் மாலைய ஏன் கழட்டினார்னு மத்தவங்க கேட்டா என்ன சொல்றது?

எல்லாத்தையும் என்னையே கேளு. இப்போ எனக்கு எதுவும் தோணல. எதுனா தோணினா சொல்றேன். சரி. குளிர ஆரம்பிச்சுடிச்சி, எழுந்துரு விட்டுக்கு போலாம் என மாலா அழைக்க தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த அருணுடன் சேர்ந்து கிளம்பினர்.

மோகனாவும், அருணும் வீட்டில் நுழைநதவுடன். கோமலவள்ளி புலம்ப ஆரம்பித்தாள். “எங்க அண்ணனுக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்காம். என்ன வண்டி எத்தி விட்றா நான் போய்க்கிறேன்”. என்றாள்

அருண் மணியை பார்த்தான். பின், இரும்மா இப்போ வேணாம். காலைல ஏத்தி விடறேன், என்றான் அருண்

இதை கேட்ட மோகனாவுக்கு “கடவுள் மனுஷனுக்கு வழிய தான் காட்டுவார். மனுசன் அத பயன்படுத்தி தன் தேவைய நிறைவேதிக்கனும்”, மாலா சொன்னது இப்போது மீண்டும் அவள் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.

பொழுது புலர்ந்து சிறிது நேரம் கடந்திருந்தது.

இன்னைக்கு கொஞ்சம் அதிகமா தூங்கிட்டோமா வண்டிய பிடிக்க போகணுமே, என்று நினைத்துகொண்டே கோமலவள்ளி படுக்கையில் இருந்து பர பர என எழுந்தாள். ஹரிவராசனம் பாடல் சன்னமாக பக்கத்துக்கு வீட்டில் இருந்து கேட்டது. காபி குடித்தபடி கோப்பையுடன் வந்த அருணை பார்த்து அதிர்ச்சியாகி “என்னடா இது கோலம்” என்று கோபத்துடன் கேட்டாள்.

அருண் தலைகுனிந்தபடியே, இல்லம்மா மாமா நமக்கு எவ்ளவோ செஞ்சிருக்கார், அப்பா போனப்புறம் அவர்தான் என்ன படிக்கவச்சர்ர். அவரு இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கும்போது நான் வந்து பார்கலைனா எப்படிமா என்றான். பின்னால் மோகனா நின்று கொண்டிருந்தாள்.

அதுக்கு ஏன்டா மாலைய கழட்னே?.

போற எடத்தில சுத்தபத்தமெல்லாம் பாக்க முடியுமா? அதுவும் இல்லாம மாமாவுக்கு எதுனா அயிட்டா. அதனால தான். நீ சீக்கிரம் கிளம்பு. நானும் மோகியும் கூட வறோம் என்றான்.

பின்னால் நின்றிருந்த மோகனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பெருமுச்சுவிட்ட கோமலவள்ளி, ம்ம்ம்., நல்லா இருந்தா சரி என கூறி கிளம்ப ஆயத்தமானாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *