விண்கல்லும் வித்தக பெருமாளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 66,031 
 
 

2103 ஜனவரி 10

காலை ஆறு மணிக்கெல்லாம் அவர் தயாராகிவிட்டார்.

வழமையாக அணியும் காலின் கால்பங்கை மறைக்கும் பாதணி, அதற்கு மேல் மறைக்க றப்பர் காற்சட்டை, மேலே றப்பர் கோர்ட் என்று எல்லாம் இருளின் நிறத்தில் இருந்தது.

அவரின் பெயர் மட்டும்தான் வித்தக பெருமாள்..

சரியாக 150 வருடங்களுக்கு முன்னர் வித்தக பெருமாளுக்கு ஒற்றைப் பிள்ளையாய் பிறந்த செம்பக பெருமாளின் வழியில் வந்த சுத்த தமிழர்.

இந்த பெருமாள்கள் அந்த காலத்தில் மிகப்பெரிய ஆரூடர்களாக இருந்தார்கள்.

கலப்படத் தமிழில் ‘வில்லேஜ் விஞ்ஞானிகள்’ எனலாம்.

அதாவது ‘கிராமத்து சயன்டிஸ்ட்டுகள்…’

வித்தக பெருமாளும், செம்பகப்பெருமாளும் எழுதி வைத்த தமிழ் மரபு இலக்கியங்களை, தவறுதலாக வாசித்து விட்டு, தற்போது தமிழ் பித்து கொண்டு திரிபவர்.

இதன் காரணமாகவே, 22ம் நூற்றாண்டின் இனிய தமிழ் பெயரான ஸ்ரீவன் என்ற தன் இயற்பெயரை, வித்தக பெருமாள் என்றே மாற்றிக் கொண்டார்.

நாம் அவரை வித்தகர் என்றே அழைப்போம்..

இத்தனை வருடங்களில் தமிழ் மொழிக்கு ஏற்பட்டுவிட்ட மாற்றத்தை சற்றும் சகித்துக் கொள்ளாமல், பண்டைத் தமிழை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சிவந்த முகம், தாடி மீசை, 45 வயதிருக்கும். இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

நிறைய கற்றவர், சற்று மந்த கதியில் இயங்குபவர்.

தமிழ் மேல் இருக்கும் பற்றின் அளவுக்கு, வேகமாக தமிழ் வாசிக்க தெரியாது.

உலகின் மரியாதைக்குரிய ஒரு மனிதர்.

வீட்டில் இருந்து வெளியில் மேன்மாடத்துக்கு வரும் போது அவரது ஆளில்லா மகிழுந்து வீட்டுக் கூரையில் இருந்து அப்போதுதான் அந்தர தரைக்கு இறங்கியது.

1000 மாடிகளைக் கொண்ட தொடர்மனையின் 600 மாடியில் அவரது வீடு…

மகிழுந்துக்கு அருகில் அவர் நடந்து செல்லவும் அதன் கதவு திறந்துக் கொள்ளவும் நேரம் சரியாக இருக்கும் படிக்கு அதில் சென்சார்கள் வேயப்பட்டிருந்தன.

நொடிப்பொழுதில் மணிக்கு 300 மைல் வேகத்தை அடைந்து பறக்கும், சில வருடங்கள் பழமையானது அந்த வண்டி.

இப்போது வந்துள்ள புதிய வகை வண்டிகள் மணிக்கு 500 மைல்கள் பறப்பன..

இங்கு எல்லா வாகனங்களும் பறப்பனதான், ஊர்ந்து செல்வதற்கு பாதை அமைக்கும் அளவுக்கு நிலம் இல்லை.

எல்லா நிலமும் கடலால் மூடப்பட்டு, ஏதோ கொஞ்சத்தை இருக்கும் சனத்துக்காக மிச்சம் வைத்திருக்கிறது.

அதுவும் அடுத்த தலைமுறை வரையில் தாங்கும் என்ற நம்பிக்கை வித்தகருக்கு இல்லை.

அதனால் தான் ஸ்ரீவன் என்ற வித்தக தமிழன் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

அவர் வண்டிக்குள் ஏறிய உடனேயே நாள்தோறும் அவர் கேட்கும் செய்திகள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மீள ஒலிபரப்பாகின.

அன்றைய முக்கிய செய்தியாக பிரபல ஹொலிவுட் நடிகை சமீலா கலவை மொழி திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடையில் தோன்றி நடத்தமை பரபரப்பை ஏற்படுத்திய செய்தி இருந்தது.

உடையே இல்லாமல் வரும் இந்த கால திரைப்படத்தில் இப்படி ஒரு நடிகையா என்று எல்லோரும் மூக்கின் மீது கையுறைகளை வைத்துக் கொண்டு பேசியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

அதுபோக சில செய்திகளுக்கு பிறகு முக்கியமே இல்லாத ஒரு செய்தியாக, குழாய் போன்ற மர்மமான விண்பொருள் ஒன்று இன்று உலகில் விழ விருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மனிதன் கடந்த 150 வருடங்களாக விண்ணில் சேர்த்து வைத்துள்ள குப்பைகள் ஒவ்வொன்றாக பூமியில் விழுந்துக் கொண்டிருப்பதால், அந்த செய்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.

அப்படியே விழுந்தாலும் அது எங்கோ ஒரு கடல் பரப்பில் விழும், அல்லது விழுவதற்கு முன்னதாககே சாம்பலாகிப் போகும்.

இது வாடிக்கைதானே…

வித்தகர் கூட, ஒருவேளை மீதமிருக்கின்ற தரைப் பகுதியில் விழுந்துவிட்டால் என்ன செய்வது? என்று ஒரு நொடி யோசித்தாலும், அடுத்தடுத்த செய்திகளுக்கு போய்விட்டார்.

நேரம் காலை 6.30

வித்தகரின் வீட்டில் இருந்து 100 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இன்னுமொரு நிலப்பகுதிக்கு வண்டியில் பறந்தே வந்து சேர்ந்தார்.

அது 150 வருடங்களுக்கு முன்னர் செம்பக பெருமாளின் ஆய்வு கூடம் இருந்த பகுதி..

அந்த காலத்தில் அது பிரதான நிலத்துடன் இணைந்திருந்தாலும், இப்போது கடல்சூழ்ந்து தீவாக மாறி இருக்கிறது.

அங்கு அவரின் பல இலக்கியப் புதையல்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

அங்கு ஏற்கனவே இன்னும் சில தமிழ் ஆர்வளர்கள் கூடி இருந்தார்கள்.

பேச்சுவார்த்தைகள் ஒன்றும் இல்லை.

வண்டியை அந்தரத்தில் நிற்கவிட்டு, லேசர் ஒளிக்கற்றைகள் கொண்டு அமைக்கப்பட்ட படிக்கட்டுகளின் ஊடாக கீழே இறங்கி நிலப்பகுதியைச் சேர்ந்தார்.

அங்கிருந்து தோண்டப்பட்டுள்ள 100 அடி சுரங்கத்துக்குள் சென்று இன்றைய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

150 வருடங்களுக்கு முன்னர் வரையில் பாதுகாக்கப்பட்டு வந்த இலக்கியங்கள் எவையும் மிச்சமிருக்கும் என்ற நம்பிக்கையில், நிலம் நீண்டநாட்களாக தோண்டப்படுகிறது.

மேலோட்ட தோண்டலில், ஸ்ரீவன் என்ற பெயர் வித்தகர் ஆகும் வரையில் தமிழ் கிடைத்திருகின்றது

நிலத்தடி நீரும் முற்றாக வற்றிவிட்டதால், வரண்டுபோன தரையாகவே இருந்தது.

ஆனால் தோண்டும் ஒவ்வொரு அடியும் ஏதோ நூறாண்டுகள் பின்னால் சென்று கொண்டிருப்பதாக அவர்களுக்குள் ஒரு நினைப்பு..

ஊடகங்கள் நடிகை சமீலாவின் நீச்சல் உடை செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், இங்குள்ள மனிதர்கள் பேசிக் கொண்டிருப்பது என்வோ அந்த விண்பொருள் குறித்த செய்திதான்..

‘காலையில் செய்தியில் கூறினார்கள். ஏதோ மர்மப்பொருளாமே? என்னவாக இருக்கும்’

சுத்த தமிழில்தான் பேச வேண்டும் என்பது வித்தகரின் உத்தரவு…

அவர்தான் இந்த இலக்கிய சுரங்கத்தின் தலைவர்.

‘எதோ ஒரு விண்ணோடத்தின் பாகமாகத்தான் இருக்கும்’

அவர்களுக்கு இடையே நடந்த சம்பாஷனையின் பக்கம் செவியை சாய்த்த வித்தகர்,

‘ஒருவேளை அது நிலத்தில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?’

அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.

‘அதுபற்றி பிரச்சினை இல்லை. விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே சொல்லிவிடுவார்கள். நாம் நம் கட்டிடங்களுக்குள் வழமைப் போலவே மறைந்துக் கொள்ள வேண்டியதுதான். நமது கட்டிடங்களில்தான் லேசர் தடை இருக்கிறதே. சந்திரனே விழுந்தால்கூட லேசரை முறிக்க முடியாது என்றுதானே சொல்கிறார்கள்.’

அவர்களில் ஒருவர் விளக்கினார்.

வித்தகர் சிரித்தார்.

‘கட்டிடங்களை மாத்திரம் காப்பாற்றினால் போதுமா? மீதமிருக்கின்ற நிலம், அந்த நிலத்தில் இருக்கின்ற ஏழைகளின் உயிர்கள், விலங்குகள், இயற்கை, எல்லாவற்றுக்கும் மேலே இங்கே புதைந்துக் கிடக்கும் தமிழ் சுவை இலக்கியங்கள்…?’

வித்தகர் கேட்டார்…

எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.

அவரும் பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை.

100 அடி பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது தோண்டும் வாகனத்துக்குள் ஏறி, தோண்டப்பட்டிருந்த குகையின் சுவரை ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார்.

ஏனைய பக்கங்களில் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறிய வாகனங்களில் லேசர் கற்றைகளை பாய்ச்சி மண்ணை வெட்டி எடுத்து வெளியில் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

வித்தகரின் லேசர் ஸ்கேனரில் திடீரென ஒரு பொருள் அகப்பட்டது.

அது வழங்கிய சமிஞ்கை எல்லோரையும் அவர் இருக்கும் திசைக்கே அழைத்து வந்தது.

வித்தகரின் வாகனத்தில் இருந்த கணினித் திரையில் சில நொடிகளின் பதிவேற்றலின் பின்னர் மண் சுவரில் மறைந்திருந்த செதுக்கப்பட்ட கல் ஒன்று தெளிவாக தெரிந்தது.

அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அது அவ்வளவு தெளிவாக இருக்கவில்லை.

அலுங்காமல் அந்த கல்லைத் தோண்டி எடுக்கும் படி உத்தரவிட்டார்.

வண்டியை விட்டு இறங்கி, அந்த கல் தோண்டி எடுக்கப்படும் வரையில் அவர் காத்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் லேசர் இயந்திரங்கள் செதுக்கப்பட்டக் கல்லை கச்சித்தமாக பெயர்ந்து கொண்டுத் தந்தன.

மேலே ஒட்டப்பட்டிருந்த மண்ணையும் ஸ்கேன் செய்யும் கருவைக் கொண்டு சுத்தம் செய்து, எழுதப்பட்டிருந்த சொற்கள் தெளிவாக தெரிந்தன…

தமிழ் மொழியில் வெண்பாவின் ஒரு பகுதி..

மண்ணன்று மற்ற மனி தன்செய்க் குழலாய்
விண்னின்று வீழும், வீழுமுன் மாழும் – கண்ணுற்ற
ஈரொரு நாளாகி இச்சக மேவு மொருகல்…….

செதுக்கப்பட்ட கல் பாதியாக உடைந்திருந்தது.

வெண்பாவின் கடைசி வரி உடைந்த பாகத்தில் இருக்க வேண்டும்…

எனினும் முதல் மூன்று வரிகளில் பொருள் படுவதாக இருந்தது..

எழுதப்பட்டிருந்தவற்றின் பொருளை மெதுவாக வாசித்து புரிந்துக் கொண்ட வித்தகர்,

‘புரிகிறதா இதன் பொருள்’

அருகில் நின்றவர்களை கேட்டார்..

‘மண்ணால் அல்லாமல், மனிதனால் செய்யப்பட்ட குழாய் போன்ற ஒரு பொருள் பூமியில் விழும். விழுவதற்கு முன்னர் அழிந்து போகும். பின்னர் ஓரிரு நாட்களில் இன்னுமொரு கல் விழும்’

ஒருவர் சொன்னார்..

கல்லை ஸ்கேன் செய்த விபரங்களின் படி அது 1300 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்று காட்டியது.

வித்தகரும், மற்றவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

‘தமிழனே தமிழன்.. 1300 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விடயத்தையும் முன்கூட்டியே ஆரூடம் சொல்லி இருக்கிறானே..’

வித்தகனார் திருமொழிந்தார்.

‘சொல்லி என்ன பயன். இப்போது இவ்வாறான பொருட்கள் விழுவதும் வாடிக்கைதானே..?’

அவநம்பிக்கையாக பேசினார் மற்றொருவர்.

‘இருந்தாலும் இன்று காலை கேட்ட செய்தியும், இன்றே இந்த கல்வெட்டு கிடத்தமையும் எனக்கு எதனையோ உணர்த்துவதாக உணர்கிறேன்’

வித்தகர் சில நொடிகள் சுவாமிகளாகவே மாறினார்.

தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்சுவற்றில் இருந்து ஒரு பல்லி, வித்தகரின்; தோளில் வீழ்ந்தது.

‘ஆஹா… அருமையான விடயம். உண்மையில் இதில் கடவுள் ஏதோ ஒரு தகவலை சொல்லி இருக்கிறார்.’

வித்தகரை விட வயதில் சற்று பெரியவர் ஒருவர் சொன்னார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம் தமக்கு கிடைத்ததாக கருதிக்கொண்டார் வித்தகர்.

கல்வெட்டை எடுத்து லேசர் ஏற்றியில் வைத்து மேலே கொண்டு செல்ல விட்டுவிட்டு, மீதக் கல்லையும் தேடச் சொல்லி உத்தரவிட்டார்.

அதற்குள்,

தமது காதில் செறுகி இருந்த அலைபேசியில் நாசாவில் உள்ள தமது மாணவர் ஜிராஜிக்கு தொடர்பை ஏற்படுத்தினார்.

கல்லைப் பற்றி கூறினார்.

வித்தகர் போலவே தமிழ் மணத்தை அனுபவிக்கும் மற்றுமொரு விஞ்ஞானி அவர்.

கல்லையும் வித்தகரையும் நாசாவுக்கு கூட்டிச் செல்லும் விண்ணோடம் சில மணித்தியாலங்களில் அந்த சுரங்கத்தை நோக்கி வந்தது.

அந்தரத்தில் தொங்கிய படியே லேசர் படிக்கட்டுகளை இறக்க, வித்தகர் கல்லுடன் ஏறிக் கொள்ள, படிகட்டுகள் தானாய் சுழன்று விண்ணோடத்தை அடையச் செய்தது.

இரவு 9 மணி

நாசாவின் பிரதான மையத்தில் அதன் தலைவருக்கு அருகில் அடுத்த தலைவருக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக 30 வயதான ஜிராஜ் நின்றுக் கொண்டிருந்தார்.

தமது ஆசான் வித்தக பெருமாளைப் போலவே தாடி மீசை, தலைமயிரை வளர்த்து விட்டிருந்தார். கண்ணாடி அணிந்திருந்தார்.

ஆனால் கோர்ட் சூட் என்று மேற்கத்தேய நாகரிகத்தின் உடையை மட்டும் மாற்றிக் கொள்ளாதவராய் இருந்தார்.

வித்தகர் தலைமையகத்துக்கு நுழைவதற்காக நடந்து வர, கல்வெட்டை ஏந்திய லேசர் கை ஒன்று கூடவே வந்தது.

அவர் உள்ளே நுழைந்த போது, ஜிராஜ் அவரை மரியாதையுடன் வரவேற்று, தமது தலைவருக்கு அறிமுகப்படுத்தி வைத்து கல்வெட்டையும் காண்பித்தார்.

கல்வெட்டுக்கு மேலே காட்டப்பட்ட மெய்நிகர் நீல ஒளி ஒன்று, அதில் எழுதி இருந்த தமிழை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துக் காட்டியது.

நாசாவின் தலைவர் அதற்கு ஆச்சரியப்பட்டவராக தெரியவில்லை.

ஜிராஜ் உடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

‘இந்த குழாய் வடிவப் பொருளொன்று ஏற்கனவே 2015ம் ஆண்டு சிறிலங்கா எனும் ஒரு இடத்தில் விழுந்திருக்கிறது. அத்துடன் இதில் இந்த திகதியில்தான் விழும் என்றெல்லாம் எதுவும் கூறப்படவில்லை. எனவே இதனை பெரிதுப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.’

அவரின் கூற்று அப்படி இருந்தது.

வித்தகர் குறுக்கிட்டார்..

‘இந்த குழாய் வடிவப் பொருள் பற்றி நான் ஆச்சரியப்படவில்லை. எல்லாம் நீங்களும் உங்கள் முன்னோரும் அனுப்பியவைதானே. அதனை தொடர்ந்து இன்னொரு கல் விழும் என்றிருக்கிறது பாருங்கள். அதைப்பற்றிதான் யோசிக்கிறேன். அது எதுவும் ஆபத்தை ஏற்படுத்துமா?’

நாசாவின் தலைவர் சற்று யோசித்தார்.

இதற்கிடையில் இன்று விழுவதாய் இருந்த குழாய் வடிவ பொருளும் பூமியில் விழும் நேரம் வந்தது.

அதன் காட்சிகள் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டன.

மணிக்கு 40 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் அந்த விண்பொருள் பூமியின் வளிவெளியில் பிரவேசித்து தீப்பற்றி சாம்பலானது. அதன் சிறிய சில பகுதிகள் மாத்திரம் கடலில் விழுந்தன.

நொடிப்பொழுதில் இது நடந்துவிட்டது.

‘இதனை அடுத்து வரும் என்று நீங்கள் கருதும் விண் கல்லுக்கும்;, இதுதான் கதி’

சிரித்தபடியே சொன்னார் நாசாவின் தலைவர்.

‘இதனை விட பல மடங்கு பெரியதாக இருந்தால்?’

சந்தேகத்துடன் கேட்டார் வித்தகர்… .

திடீரென நாசாவின் திரைவில் விண்வெளியில் உள்ள பிரதான ஆய்வு மையத்தின் தொடர்பு இணைக்கப்பட்டது.

‘எச்சரிக்கை…

சல்ஃபூரிக் மற்றும் பொஸ்பூரிக் தின்மநிலை அமிலங்களால் ஆன மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதி வேகமாக வந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் அது பூமியில் வந்து மோதும். அதன் வேகம் மணிக்கு 3 லட்சம் கிலோமீற்றர்கள். ‘

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாசாவின் தலைவர் கல்வெட்டுக்கு அருகில் சென்று அதனை தடவிக் கொடுத்தார்.

‘இதன் மீதத்தையும் உடனடியாக தேடச் சொல்லுங்கள்’

‘தேடச் சொல்லிவிட்டுதான் வந்தேன். விரைவில் கிடைத்துவிடும். இப்போது இதற்கு என்ன செய்ய போகிறோம்’

நாசாவின் தலைவர் சற்றே சிரித்துக் கொண்டு, தமது கைப்பேசியில் எதனையோ செய்து, அதனை பிரமாண்டமான திரையுடன் இணைத்து ஒரு காணொளியை காண்பித்தார்.

அதில் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

பூமியை மிகவும் அருகில் நெருங்கி வரும் பேதே அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. அது வளைவாக பயணிக்க ஆரம்பித்தது.

பின்னர் அந்த கல் பூமிக்கும் நிலவுக்கு இடையில் சற்று தொலைவில் பறந்து மறைந்து போனது.

வித்தகர் அதனை பார்ந்து வியந்தாலும், விளங்காதவராய் நாசாவின் தலைவரை பார்த்துக் கொண்டிருந்தார்.

‘வரப்போகும் அந்த கல்லுக்கும் அதுதான் நடக்கும்’

நாசாவின் தலைவர் சொன்னார்.

‘சற்று விளக்கமாக கூறுங்கள்’

‘பூமியை பாதுகாப்பதற்கான எமது வியூகங்கள் நீண்டகாலத்துக்கு முன்னரே செய்து முடிக்கப்பட்டு விட்டன. நீங்கள் பார்த்தது எமது லேசர் ஒளிக்கற்றைகளால் விண்கல் ஒன்று கட்டுப்படுத்தப்படும் காட்சி. லேசர் ஒளிக் கற்றைகளை உறுதியான தின்ம நிலைக்கு மாற்றி இருக்கிறோம். இது கணிப்பிட முடியாத மடங்கில் நீளமாகவும், பருமனாகவும் விரிவடைந்து விண்ணில் செயற்பட்டு பூமியை பாதுகாத்திருக்கிறது. எத்தனை பெரிய விண்கல் வந்து விழுந்தாலும், அது பூமியை நெருங்காதபடிக்கு இந்த லேசர் ஒளிக்கற்றைகள் திசை திருப்பிவிடும். யாரும் அஞ்சத் தேவையில்லை.’

மிகவும் ஆச்சரிப்பட்டுப்போனார் வித்தகர்.

‘இந்த திட்டம் ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை’ (வித்தகர்)

‘இதனை இரகசியமாக வைத்திருப்பது மேலிடத்து உத்தரவு’

‘இதனை பயன்படுத்தவும் மேலிடத்து உத்தரவை பெற வேண்டுமா?’

‘நிச்சயமாக. ஆனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அது ஒருபக்கம் நடக்கும். நாளை மறுதினம் வரும் விண்கல் திசை திருப்பப்படுவதை நீங்கள் இங்கிருந்தே பார்வையிடலாம். இந்த கல்வெட்டை பிரதி எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் பரம்பரையின் புகழ் உயரும்’

வித்தகருக்கு நிம்மதியாகவும், பெருமையாகவும் இருந்தது.

மூன்றாவது நாள், அந்த விண்கல் உலகை நெருங்கி இருந்தது.

விண்வெளி முழுக்களும் நிரம்பி இருந்த கமராக்களின் துணையுடன் அந்த விண்கல்லின் ஓட்டக் காட்சி திரையில் தெரிந்தது.

அந்த விண்கல் வெற்றிகரமாக திசைத்திருப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை எல்லோர் மனதிலும் இருந்தது.

விண்கல்லை எதிர்கொல்வதற்கு தின்ம லேசர் ஒளிக்கற்றைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

விண்கல்லும் வந்துவிட்டது.

ஒளிக்கற்றைகள் லாவகமாக ஒரு வளையத்தை ஏற்படுத்தி இருந்தன.. அந்த வளையத்தோடு விண்கல்லும் வளைந்து அதன் பாதை திசைத் திருப்பப்படுவதை நாசாவின் தலைமையகத்தில் இருந்த விஞ்ஞானிகள் ஆச்சரியமின்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களில் அந்த கல் பூமியில் இருந்து வெகு தூரத்தில் பாதையை மாற்றிக் கொண்டு பயணித்தது.

சில நிமிடங்கள் பூமி வெளிச்சமாகவும், வெப்பம் நிறைந்ததாகவும் இருந்தது.

கல் பூமியை தாக்கவில்லை என்பதை விட, தங்களின் பாதுகாப்பு வியூகம் வெற்றி அளித்த மகிழ்ச்சி அனைவருக்கும்.

ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டும், கையடித்துக் கொண்டும் குதித்துக் கொண்டும் ஆரவாரித்தனர்.

ஒருவர் மட்டும் கதிரையில் அமர்ந்துக் கொண்டிருந்தார்.

தன் கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

வித்தகர் எதற்காக அப்படி சோகமாக அமர்ந்திருக்கிறார் என்பதை அறிய நாசாவின் தலைவர் அருகில் சென்றார்.

வித்தகர் தன் கைப்பேசிக்கு வந்திருந்த ஒளிபடத்தை பிரமாண்டத் திரைக்கு மாற்றினார்.

மீதக் கல்வெட்டும் கிடைத்து, வெண்பாவின் முழு வடிவமும் கிடைத்திருந்தது..

எல்லோரும் வாசித்தார்கள்…

மண்ணன்று மற்ற மனி தன்செய்த குழலாய்
விண்னின்று வீழும், வீழுமுன் மாழும் – கண்ணுற்ற
ஈரொரு நாளாகி இச்சக மேவு மொருகல்
நீரறுத்து நிலம் தரு மே.

கீழே மொழிப்பெயர்ப்பும் இருந்தது.

‘மண்ணால் அல்லாமல், மனிதனால் செய்யப்பட்ட குழாய் போன்ற ஒரு பொருள் பூமியில் விழுவதற்கு முன்னர் அழிந்து போகும். பின்னர் ஓரிரு நாட்களில் இன்னுமொரு கல் விழுந்து, நீரை அழித்து நிலத்தை உருவாக்கும்.’

ஜிராஜ் தமது கையில் இருந்த அறிக்கையை எடுத்து வாசித்தார்.

அந்த விண்கல் சல்பூரிக் மற்றும் பொஸ்பூரிக் அமிலத்தினால் ஆனது.

‘இந்த அமிலம் கடலில் விழுந்தால், கடல் நீர் வற்றி போய், மீண்டும் நிலம் கிடைத்திருக்கும்’

ஜிராஜ் சொன்னார்…

வித்தகப் பெருமாள் வெளியே போய்க் கொண்டிருந்தார்…

அவர் தலை குனிந்தபடி இருந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *