கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 15,227 
 
 

“இப் யூ டோண்ட் மைண்ட் .. உங்களிடம் ஒரு பெர்சனல் கேள்வி கேட்கலாமா?”

ருச்சிர அமரசிங்க தயங்கி தயங்கி கேட்க, மதுவந்திகா சற்றே குழம்பினாள். இன்டர்வியூ சக்ஸஸ் ஆகும் என்று நினைத்தாளே. இன்னமும் முடியவில்லையா? இலேசாக கொஞ்சம் பயம் பிடித்துக்கொண்டது. எல்லாமே திருப்தி என்றானே? அத்தனை கேள்விகளுக்கும் ஜாம் ஜாம் என்று பதில் சொன்னாளே? இப்போது என்ன திடீரென்று.

நான்கு வருஷங்கள். பல்லைக்கடித்து, சரவச்சட்டிக்குள் தண்ணி ஊத்தி கால்கள் நனைத்து, விடிய விடிய .. எப்பிடிப்பட்ட படிப்பு அது. ஒவ்வொருமுறையும் நித்திரை தூக்கியடிக்கும்போதும் அம்மாவின் ஞாபகம் வரும். வேண்டாம், அம்மாவை போல வீட்டோடு இருந்து சண் டிவி பார்த்து, அப்பாவின் மோட்டார் சைக்கிள் சத்தம் ஒழுங்கை வாசலில் கேட்டவுடனேயே ஓடிப்போய் கேத்திலை அடுப்பில் வைத்து, அப்பா வந்தவுடன் வீடே தலைகீழ் ஆகிவிடும். “பிள்ளை இந்த துவாயை கொண்டுபோய் அப்பாவிடம் குடு”, “பிள்ளை இந்த சோப்பை எடுத்து …”, “பிள்ளை அப்பாவிட்ட இருந்து தேத்தண்ணி கப்பை வாங்கியோண்டு போய் உள்ள வை”, “அப்பா சாப்பிட்டா பிறகு சாப்பிடலாம்”, “வேலையால வந்த மனுஷனுக்கு அரியண்டம் குடுக்காத”. அப்பப்பா … அப்பா வீட்டில் இருந்தால் அம்மா ஒரு சங்கக்கடை மனேஜர் மாதிரி ஆகிடுவார். ம்கூம். முடியவே முடியாது. வேலை, அதுதான் முக்கியம். மனேஜர் வேலை இல்லாமல் ஒரு சாதாரண ப்ரோகிராமர் என்றாலும் பரவாயில்லை. வேலை கிடைத்து சம்பளம் எடுத்து, திருமணம் முடித்து நீயும் வேலைக்கு போறியா? நானும் போறன். முடிந்து வந்தால் நீயும் டயர்ட்டா? நானும் டயர்ட் தான். நானும் அவனும் ஒரே குசினியில் சமைத்து, அவன் வெங்காயம். நான் பச்சைமிளகாய். உனக்கு வாஷிங் மெஷின். எனக்கு ஹால் மொப்பிங். உனக்கு கந்தசஷ்டி. எனக்கு கௌரி நோன்பு. உனக்கு ஏ ஆர் ரகுமானா? எனக்கு இளையராஜா. கேட்கவேண்டும். எல்லாமே முதல் நாள் கேட்டு பேசி, ஒகே என்றால் சந்தோசம், இல்லையா? ச்சீ போடா போ .. எல்லாவற்றுக்கும் மேலே முதலில் ஒரு நல்ல வேலை, நல்ல சம்பளம் …

“பெர்பெக்ட்லி ஒல்ரைட் …ப்ளீஸ் பீல் ப்ரீ டு ஆஸ்க் ..”

“..”

“..”

“டூ யூ ஹாவ் எ போய் பிரெண்ட்?”

ருச்சிர இப்படி கேட்பான் என மது எதிர்பார்க்கவில்லை. இன்டர்வியூவில் இப்படியெல்லாம் கூட கேட்பார்களா? எனக்கு காதலன் இருப்பதும் இல்லாததும் இவனுக்கென்ன? தகுதியிருந்தால் எடு.. இல்லாவிட்டால் ஒரு சொறி சொல்லி அனுப்பி விடேன். என்னவெல்லாமோ யோசித்தாள். போய் ப்ரெண்ட்… தேவையே இல்லாமல் கோகுலன் நினைவுக்கு வந்தான். மூன்று வருடங்களாய் முன்னாலேயும் பின்னாலேயும் திரிந்தவன். முதல் முறை வெறும் திட்டு, கேட்கவில்லை, இரண்டாம் முறை லைப்ரரி முன்னால் வைத்து கன்னத்தில் பளீர், நான்காம் நாள் மீண்டும் வந்து நின்றான, மூன்று நாள் தாடியுடன். இனிமேலும் வளர்க்ககூடாது என்று, அவன் நண்பனை அழைத்து கெஞ்சி அழுதது, அதற்கு பின் கோகுலன் அவள் பக்கம் கூட திரும்பாமல் விலத்திப்போனது … தினமும் காலை நெற்றியில் கறுப்புப்பொட்டு வைத்துவிட்டு கண்ணாடியில் பார்த்தால் சனியன் மாதிரி பின்னால் வந்து சிரித்து தொலைப்பான். இப்போது வன்கூவரில் .. இரண்டுபிள்ளைகள். மூத்தமகள் பேர்த்டேக்கு முத்தம் கொடுக்கும் குடும்பப்படம் பேஸ்புக் ப்ரோபைலில் போட்டு. கெட்ட ராஸ்கல். இவனுக்கெல்லாம் என்ன மண்ணுக்கு காதல். நாய். மதுவுக்கு ஏனோ அவனை குத்திக்கொள்ளவேண்டும் என்று ..

“மிஸ் மதுவந்திகா ..”

“யெஸ் ….. ஐ டூ … “

“வாட்?”

“யெஸ் .. ஐ டூ ஹாவ் எ போய் பிரண்ட்!”

ருச்சிர இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை போன்று தோன்றியது. மதுவும் தான். ஏதோ ஒரு எண்ணத்தில் சொல்லிவிட்டாள். இல்லாவிட்டால் தான் வேலை கொடுப்பாயா? ஏன் கூடவே ஒருவன் இருந்தால் வேலை செய்யமாட்டேனா? ஹாண்ட்போன் பேசிக்கொண்டிருப்பேனா? முழுநேரமும் சாட் பண்ணுவேனா? சீக்கிரமாகவே புறப்பட்டுவிடுவேனா? லேட் நைட் வேலைகள் கஷ்டமா? நீ எப்படி என்னை எடை போடலாம்? நாளைக்கே திருமணம் செய்துவிட்டால், வேலையில் இருந்து தூக்கிவிடுவாயா? என்ன மாதிரி உலகம் இது?

“சொறி மிஸ் மதுவந்திகா .. யூ ஆர் எ ரியல் ப்ரோடிஜி … பட் இது எங்கள் … கொம்பனி பொலிசி ..”

ருச்சிர சொன்னது எதுவும் மதுவின் காதுகளுக்குள் ஏறவில்லை. சிரித்துக்கொண்டே கைகுலுக்கி விட்டு வெளியேறினாள். உண்மையை சொல்லியிருக்கலாம் தான். ஏதோ தடுத்துவிட்டது. எது இருக்கவேண்டும், இருக்ககூடாது என்பது தீர்மானிக்க நீ யார்? நான் இப்படித்தான். வேலை இல்லையா? ச்சீ போடா … என் படிப்புக்கு ஆயிரம் வேலை. கோபத்தில் கண் எல்லாம் சிவந்து, பெண் அழக்கூடாது. அதுவும் மதுவந்திகா அழமாட்டாள். ஹாண்ட்பாக்கில் இருந்து சன் கிளாஸசை எடுத்து மாட்டினாள். கொழும்பு வெயில் குளிர்ந்தது.

இல்லை என்று சொல்லியிருந்தால் இப்போது கையில் வேலை. எண்பதினாயிரம் ரூபாய், படிப்பு முடிந்து அடுத்த வாரமே, எவன் தருவான்? அப்பா முப்பது வருஷமாய் செய்த அழும்புக்கு கேவலம் ஒரு முப்பதினாயிரம் வாங்கியிருப்பாரா? வீட்டு லோன் போக, கையில் இருபதினாயிரம். அதற்கே ஏவலுக்கு மூன்று பேர் வேண்டும் அவருக்கு. என்ன மாதிரி சமுதாயம் இது? கேடு கெட்ட யாழ்ப்பாணத்து ஆண்களை எல்லாம் போஸ்ட்டில் கட்டிவைத்து மிளகாய் அரைத்து … அவன் எப்படி என்னைப்பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்? உனக்கு, கொடுக்கும் டாஸ்க்குகளை செய்து கொடுத்தால் சரிதானே. அதிலே எனக்கு போய் பிரண்ட் இருந்தால் என்ன, கலியாணம் கட்டி பத்து பிள்ளை இருந்தால் என்ன? ஒருவேளை இருந்திருந்தால் இல்லை என்று சொல்லியிருப்பாளா? அவன் கேட்டது தான் கோபமா? அல்லது உண்மை சுடுகிறதா? யார் மீது கோபம்?

மதுவந்திகாவின் கால்கள் இன்னமுமே நடுங்கிக்கொண்டு இருந்தன. இப்படியே யோசித்தால், கண்ணாடியூடே கண்ணீர் திரண்டுவிடும். நூற்றி ஐம்பத்தைந்தாம் நம்பர் பஸ் யுனிட்டி பிளாசா தரிப்பில் நின்றுகொண்டிருந்தது. நடத்துனர் மூன்று நிமிடங்களாக கத்திக்கொண்டிருந்தான். பஸ் புறப்படும் வழியை காணோம். அடுத்த பஸ்ஸை காணும் வரை டிரைவர் வண்டியை எடுக்கமாட்டான். மதுவந்திகா யன்னல் கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். மெதடிஸ்ட் கல்லூரி முடிந்து மாணவிகள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஐந்தாறு மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் கூடைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். ஏதோ பயிற்சியாக இருக்கவேண்டும். விசிலும் கையுமாக ஒருவர் நீண்ட ட்ரக் சூட்டுடன், மாணவிகள் ஷோர்ட்ஸ், ஜேர்சி எல்லாமே அணிந்து, ஒரு பக்கத்த்தில் இருந்த கூடைக்கு மாத்திரம் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். ஒருத்தி பந்தை தரையில் உதைத்து உதைத்து நகர்ந்துகொண்டிருக்க, மற்றவள் அவளை மறித்து பந்தை பறித்து, பின்னர் அதே கூடைக்குள் போட, இதிலே யார் எந்தப்பக்கம்? மதுவந்திகா குழம்பிப்போனாள். ஒரே கூடைக்குள் போடுவதற்கு இரண்டு அணிகள். அவர்களுக்குள்ளும் ஒரு விதி. அதிலும் வெற்றி, தோல்வி, பவுல், பெனால்டி சூட். பார்க்க பார்க்க சுவாரசியம் கூடி, இரண்டே நிமிடங்களில் யார் யார் எந்த அணி என்று புரிய ஆரம்பித்தது. அணிக்கு மூன்று பேர் என்பதால் அரைவாசி கோர்ட்டில் தான் ஆட்டம். எதிர் தரப்பு பந்தை கைப்பற்றினால், மீண்டும் வளையத்துக்கு வெளியே வந்துவிட்டே ஆரம்பிக்கவேண்டும், மற்றும்படி விதிமுறைகள் எல்லாமே வழமையானவை தான்.. வேலை, ருச்சிர, இன்டர்வியூ, போய்பிரண்ட், நிமிடத்தில் மறந்து, மதுவந்திகா நிமிர்ந்து ஆட்டத்தை கவனிக்க ஆரம்பிக்க, மட்டக்குளிய பஸ் புறப்பட்டது.

“இப்ப என்னத்துக்கு இந்த சனியனை வாங்கிக்கொண்டு வந்தனி?”

வீட்டுக்குள் கூடைப்பந்தும் கையுமாக உள்ளே நுழைந்தவளை அம்மா புதினமாக பார்த்து கேட்டாள். மது ஒன்றுமே பேசவில்லை. என்ன குடும்பம் இது? காலையிலேயே ஒருத்தி இண்டர்வியூவுக்கு போய்விட்டு வருகிறாளே? என்ன ஆனது என்று பெயருக்காகவேனும் ஒரு கேள்வி? கேட்கமாட்டார்கள். சும்மாவே அடம். வேலை மட்டும் கிடைத்தால் வினையே வேண்டாம். பேசவே முடியாது என்று அம்மா நினைத்திருப்பாள். கிடைத்திருக்ககூடாது என்று வஜ்ரா பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்திருந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. இன்றைக்கில்லாவிட்டால் என்ன? நாளைக்கோ நாளை மறுநாளோ, கிடைக்கும். கிடைக்கும் போது இவர்கள் எல்லோரையும் சரியாக கவனிக்கலாம்.

மது நேராக தன் அறைக்குள் நுழைந்தாள். புதிதாக வாங்கிய பந்து அப்படியே வலைப்பைக்குள் இருந்தது. வெளியே எடுத்து புதுப்பந்தின் வாசம் பார்த்தாள். தரையில் மெதுவாக அடிக்க, பம் பம் பம் .. தலைக்கு மேலே எகிறியது. ஆச்சரியத்தில் ஒரு இயல்பான புன்னகை நுழைந்துகொண்டது. இப்போது வேகமாக அடித்துப்பார்த்தாள். அட கையில் பட்டும் படாமலும் பம் பண்ண தொடங்கியது. பம் பம் பம். ஒரு கையை அடிமுதுகுப்பக்கம் மடித்து வைத்துக்கொண்டு மறு கையால் பம் பம் பம். வாவ். இப்போது கூடைக்கு எங்கே போவது? ஆ .. சுவரின் க்ரில் ஓட்டை தான் கூடை. பம் பம் பம் சூட். குறி பார்த்து எறிய பந்து கிரில்லுக்குள் போய் பட்டு திசைமாறியது. இரண்டு புள்ளிகள். மதுவந்திகா அறைக்குள்ளேயே கூடைப்பந்து விளையாட ஆரம்பித்தாள். ஆட்டம் சூடு பிடிக்க பிடிக்க, பந்து தவறி மேசை மேல் விழுந்து மேசை விளக்கு, கொம்பியூட்டர், மவுஸ், காலையில் குடித்த தேனீர் கோப்பை எல்லாவற்றையுமே பதம் பார்த்தது. வீடு வந்ததுக்கு இன்னமும் உடுப்பு மாற்றாமல், ஜீன்ஸ் ப்ளவுஸ் எல்லாமே வேர்த்து ஓடத்தொடங்கியது. விறுவிறுப்பு அதிகமாகி, வேம்படி மகளிர் கல்லூரி எண்பத்து நான்கு புள்ளிகள். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி எண்பத்து இரண்டு. கோர்ட்டை சுற்றி சுண்டிக்குளி மாணவிகள் திரண்டிருக்க, பிரின்சிபல் மிசஸ் துசீதரன் கூட இன்றைக்கென்று மாட்ச் பார்க்க வந்திருக்கிறார். மாணவிகள் கோரஸ் காது கிழிக்கிறது. . “மது”, “மது”, “மது” ..ஒரே ஒரு த்ரீ பொய்ண்டர், போட்டால் வெற்றி, பம் பம் பம்.

“மது, வந்து இன்னும் கை கால் கழுவேல்ல, அந்த கண்டறியாத பந்தை போய் விளையாடிக்கொண்டிருக்கிறாய், வெளிய வா”

அதற்குள் வேர்த்து விறுவிறுத்துவிட்டது. தூரத்தில் துசிதரன் மிஸ் குதூகலத்துடன் கை காட்டியது போல இருந்தது. பந்தை பழையபடி வலைப்பையில் போட்டு கட்டிலுக்கு கீழே தள்ளிவிட்டு மதுவந்திகா டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். ஷவர் ஸ்க்ரீனுக்குள் நுழைந்து ஹீட்டரை ஒன் பண்ண தண்ணீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்தது. மாணவிகள் கோரஸ் காது கிழிக்கிறது. . “மது”, “மது”, “மது”.

“டூ யூ ஹாவ் எ போய் பிரெண்ட்?”

ருச்சிர ஒரு நாய். என்ன தைரியம் இருந்தால் என்னை பார்த்து அப்படி கேட்பான்? வியர்வை இன்னமுமே சுரந்துக்கொண்டிருந்தாற் போல, உடல் முழுக்க கச கச என்றிருந்தது. மதுவந்திகா ஹீட்டரை மக்ஸிமம் ஏற்றிவிட்டு தலையில் குளித்தாள். சுடு தண்ணீர் திவலைகள் வெற்று மார்புகளில் பட்டு சுள் சுள்ளென்று எரிந்தது. திரும்பி நின்று கைகளை மார்புக்கு குறுக்கே அணைத்துக்கொண்டு அப்படியே வழுக்கிக்கொண்டே அசதியுடன் உட்கார்ந்தாள். சுடுநீர் தலையில் கொட்டி, ஆவி பாத்ரூம் முழுதும் பரவ ஆரம்பித்தது.

“டூ யூ ஹாவ் எ போய் பிரெண்ட்?”

மதுவந்திகா திடுப்பென்று எழுந்து துவாயை குறுக்கே கட்டிக்கொண்டு, பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். வந்தவள் நேரே தன் அறைக்குள் போய், வலைப்பைக்குள் இருந்த பந்தை எடுத்து அணைத்துக்கொண்டே மீண்டும் பாத்ரூமில் நுழைவதை அம்மா ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

“இப்ப என்னத்துக்கு அந்த பந்தை பாத்ரூமுக்க கொண்டுபோற? வர வர உண்ட போக்கே சரியில்லை, சொல்லிப்போட்டன்”

மதுவந்திகா ஒன்றுமே பேசாமல் பாத்ரூமை உள்ளே தாழ்பாள் போட்டாள்.

அன்றைக்கு ஆரம்பித்தது தான். போகும் இடமெல்லாம் அந்த பந்தை கொண்டு செல்ல ஆரம்பித்தாள். தம்பி ஒருமுறை கேட்காமல் எடுத்து விளையாடியதுக்கு ஈஸிச்சேர் வார்த்தடியால் முதுகில் ஒரு அடி. அவன் அன்றிலிருந்து அவளோடு பேசாமல் விட்டு இன்றோடு எட்டு வாரங்கள். காலையில் எழுந்து அதற்கு குட் மோர்னிங் சொல்லி, குளிக்கவார்த்து, பவுடர் தடவி, திருநீறு பூசி, சாப்பாடு மேசையிலும் பந்து ஜம்மென்று உட்கார்ந்திருக்கும். அதற்கென்று ஒரு தட்டு இருக்கும். அம்மா சொல்லிப்பார்த்து அலுத்துவிட்டாள். அவள் சாப்பாடு அந்த தட்டிலும் இருக்கவேண்டும். இன்டர்நெட் பார்க்கும்போது மடியில் இருக்கவேண்டும். வெளியே எங்கேனும் போவதென்றால், பந்தின் காற்றை திறந்து மடித்து வலைப்பைக்குள் சுருட்டி தன் ஹாண்ட்பாக்கினுள் அடக்கிக்கொள்வாள். வீடு திரும்பியதும், காற்றடிக்கும் பம்பினால் மீண்டும் பந்துக்கு காற்று. கொஞ்சநேரம் பயிற்சி. குளியலறை.

மாலையானால் ஆட்டம் ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் அறைக்குள்ளேயே நின்றுவிட்ட ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஹாலுக்குள்ளும் நுழைந்து, ஏனைய அறைகளுக்குள்ளும் வியாபித்தது. ஒவ்வொரு அறைகளும் ஒவ்வொரு கோர்ட்டுகள். இந்து மகளீர் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்து என்று ஒவ்வொன்றாக மற்ற பாடசாலைகளும் டூர்னமெண்டில் இணைந்துகொள்ள தொடங்கின. எத்தனை கல்லூரிகள், எத்தனை ஆட்டங்கள் நடந்தாலும் கடைசியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி தான் எப்போதுமே கிண்ணத்தை வெல்லும். ஒரு முறை கோபிகா வந்தபோது தாங்கமாட்டாமல் கேட்டேவிட்டாள்.

“என்னடி எப்ப பார்த்தாலும் இதே பந்தும் கையுமா திரியிறாய்.. என்ன.. அமரிக்காக்காரனுக்கு Pet Rock போல இது Pet Ball ஆ?”

“இது ஒண்டும் வெறும் Pet இல்ல கோபி .. இது தான் எல்லாமே ”

“எல்லாமே எண்டா? அப்பிடி என்னடி எல்லாமே? அட்லீஸ்ட் அதுக்கு ஒரு பெயராவது இருக்கா?”

“எதுக்கு பெயர், எனக்கு தானே.. வா என்றால் வந்திடும், எவ்வளவு வேகமாக அடிச்சாலும் அடிச்ச வேகத்திலேயே திரும்பி வந்து நிற்கும் தெரியுமா? … ச்சோ கியூட் !”

“ஹேய் .. யூ ஒகே? .. இதெல்லாம் டூ மச் ஒப்சஷன் மது .. வேண்டாமே”

கேட்டுக்கொண்டிருந்த அம்மா ஆரம்பித்தார்.

“நல்லா சொல்லுங்க கோபிகா .. இத தான் நானும் நாலு மாசமா சொல்லிக்கொண்டு இருக்கிறன். அந்த சனியன தான் எப்ப பார்த்தாலும் பக்கத்தில வச்சுக்கொண்டு.. சாப்பிடேக்க குளிக்கேக்க படுக்கேக்க .. இந்த பெட்டைக்கு விசர் தான் பிடிச்சிருக்கு”

அம்மா சொல்ல சொல்ல, மதுவந்திகாவுக்கு முகம் கறுத்துவிட்டது. கோபத்தோடு திடீரென்று எழுந்து சடாரென பந்தை எடுத்து தரையில் உதைத்தாள். உதைத்த அதிர்ச்சியில் கோபிகா கையில் இருந்த தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்தது. கோபிகா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“என்ன மது இது .. இப்ப நான்”

“கெட் லொஸ்ட் ஐ சே”

சொல்லிவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் கிடுகிடுவென மது தன் அறைக்குள் நுழைந்து கதவை படாரென்று அடித்து சாத்தினாள். பம் பம் பம். ஆட்டம் ஆரம்பித்தது. வெறித்தனமான ஆட்டம். ரெண்டு, நான்கு, ஆறு, ஒன்பது, பன்னிரண்டு, பதினைந்து… தொண்ணூறு … நூற்றிரெண்டு, தொடர்ச்சியாக த்ரீ பாயிண்ட்டர்கள். ஒரே அணிதான். ஒரே கிரில் கூடை தான். அடுத்தடுத்து புள்ளிகள். பம் பம் பம் சூட். பம் பம் பம் சூட். பம் பம் பம் சூட். மதுவுக்கு வியர்த்து விறுவிறுத்தது. அறை முழுதும் வியர்வை ஈரம். லெக்கிங் முழுதும் நனைந்து கசிந்து, டிஷர்ட் எல்லாமே தெப்பலாகி, எங்கேயும் வியர்வை. புள்ளிகள் ஏறிக்கொண்டே இருந்தது. நூற்றைம்பது, நூற்றிஐம்பத்துமூன்று, பம் பம் பம் சூட். பம் பம் சூட். பம் சூட்.பம் சூட். சூட் … சூட் …. சூட் ….பச்.

பந்து திடீரென பவுன்ஸ் ஆகாமல் நின்றுவிட்டது.

நெஞ்சு மூசுகிறது. பந்தை மீண்டும் நிலத்திலிருந்து எடுத்து உதைத்துப்பார்த்தாள். பம். ம்கூம். பவுன்ஸ் ஆகவில்லை. மீண்டும் எடுத்து கதிரையில் கிடந்த துவாயால் நன்றாக துடைத்துவிட்டு நிலத்தில் அடித்தாள். பம். ம்கூம். பவுன்ஸ் ஆகவில்லை. காற்றை செக் பண்ணினாள். எல்லாம் சரியாக இருக்கிறது. அதே பந்துதான். பவுன்ஸ் ஆகுதில்லை. மதுவந்திக்கா மீண்டும் மீண்டும் இறுக்கமாக குத்திப்பார்த்தாள். ம்கூம்.

“சனியன் … பொறுத்த நேரத்தில உயிரை வாங்குது”

ஆத்திரத்தில் சுவரில் ஒரு மொத்து மொத்தினாள். மொத்தின வேகத்திலேயே சுவரோடு வழுக்கிக்கொண்டு அது கீழே போய் விழுந்தது. பவுன்ஸ் ஆகவில்லை. அறையின் மேல்கூரையில் வேகமாக படுமாறு விளாசிபார்த்தாள். ம்கூம். மதுவந்திகாவுக்கு கோபம் தலைக்கு மேலே ஏறி, சடக்கென்று டூல் பாக்ஸில் இருந்த சுத்தியலை எடுத்து பந்துக்கு மொத்து மொத்தென்று மொத்தினாள். பயனில்லை, மொத்தை வாங்கிவிட்டு பந்து அப்படியே இருந்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் போக, பந்தின் காற்றை திறந்துவிட்டாள். பின் தரையில் போட்டு உழக்கு உழக்கென்று உழக்கி, ம்கூம், என்ன சேட்டை இதுக்கு. திமிர் பிடிச்ச் பந்து. நாய். கண்ணெல்லாம் சிவந்து காது கூட சிவந்து, செய்வதறியாமல் மதுவந்திகா கடைசியில் அமைதியாக தரையில் சக்கப்பணியாக உட்கார்ந்தாள்.

அலட்டிக்கொள்ளாமல் அபரிமிதமான நிதானத்துடன் டூல் பாக்ஸில் இருந்த வாள்பிளேட்டை தேடி எடுத்து, காற்றுப்போன பந்தை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அறுக்கத்தொடங்கினாள். கிர் கிர் கிர் கிர் .. பந்து இரண்டுபாதிகளாக நான்காக எட்டாக பதினாறாக சுக்கல் நூறாகும்மட்டும் அறுத்தாள். இதற்கு மேல் அறுக்கமுடியாது. ஆனாலும் அறுக்க அறுக்க அறுக்க .. கிர் கிர் கிர் கிர் கிர் கிர் கிர் கிர் .. என்று வாள்பிளேட் அவளின் தொடைகளை கீறத்தொடங்க, இரத்தம் சொட்டு சொட்டாய் சிந்தத்தொடங்கியது. கிர் கிர் கிர் .. இரத்தம் சட்டை முழுதும் ஊறி, நிலத்தில் திரண்டு,

“டூ யூ ஹாவ் எ போய் பிரெண்ட்?”

முன்னதுக்கும் வேகமாக கீற தொடங்க இரத்தம் அறைமுழுதும் பாயத்தொடங்கவும் நிறுத்தாமல் தொடர்ந்து அறுக்க, ஒருகட்டத்தில் படீர் என்று வாள்பிளேட் உடைந்தது. திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளை சுற்றி துண்டு துண்டாக சிதிலம் சிதிலமாக இரத்தசகதியில் பந்து சிதறிக்கிடந்தது.. அறை முழுதும் இரத்தம். ஏதோ ஒரு நினைவு வந்தவளாக பர பரவென்று ஒவ்வொரு துண்டுகளாக பொறுக்கி சேர்க்க முயன்று முடியாமல் அத்தனையையும் ஒன்றாக குவித்து .. ஒவ்வொரு துண்டுகளிலும் ஒட்டிக்கிடந்த இரத்தக்கறை துடைக்கமுயன்று முடியாமல் அப்படியே வெறித்துப்பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் .. நீஈஈஈஈண்ட நேரம் பார்த்துக்கொண்டே,

மதுவந்திகா வீறிட்டு கதற ஆரம்பித்தாள்!

கதையின் மூலப்பொறி : 70களில் அமெரிக்காவில் பிரபலமான Pet Rock

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *