கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 16,113 
 
 

வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன்.

இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய் சண்டையிட்டாய்.காலையில் ஒன்றுமே நடக்காதது போல குளித்து,எனக்குப் பிடிக்காத ப்ரௌன் வண்ண சுடிதார் அணிந்து போலாமா என்றாய்.

வசு ஆஸ்பிட்டல என்பது வேப்பமரங்கள்,காகங்கள், நீலநிற அறைகள்,நர்ஸ்கள்,வார்ட் பாய்கள்,அழுகைகள்,ஸ்பிரிட் வாசனைகள் என்று எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியானவையே. சென்னை,வேலூர்,பெங்களூர் என எல்லா மருத்துவ மனைகளும் என்னை இம்சிக்கின்றன.

டாக்டர் ரீனா வந்து மிஸ்டர் ஸர்வணன என்று உடைந்த தமிழில் அழைக்கிறாள்.கண்ணாடி அறையின் ஊடே உன்னைப் பார்க்கிறேன்.வெள்ளைத் துணிகளிடையே உன் சோர்ந்த முகம் தெரிகிறது.

வசு காலம் வாழ்வு பற்றிய எந்த பிரக்ஞையுமின்றி உன் காலடியில் அமர்ந்திருக்கிறேன.தாதி வந்து ரத்த அழுத்தம் பார்த்து ட்ரிப்ஸை சரி செய்கிறாள்.

உன் கால்களைப் பற்றிக்கொள்கிறேன்.நீளமான உருண்ட விரல்கள்.மெட்டியின் தடங்கள் பதிந்த நான் நேசிக்கும் உன் பாதங்கள்….

கண்மணி உனக்கு மெட்டி அணிய அத்தனை விருப்பம்.திருமணத்திற்கு முன்பே என்னை வாங்கித்தரச் சொல்லி அணிந்து பார்த்தாய்.எத்தனையோ இரவுகள் உன் கால்விரல்களுக்கு சொடக்கு எடுத்திருக்கிறேன், கால்களை அழுத்தி விட்டிருக்கிறேன்.உன் பாதங்களை நான் முத்தமிட்டால் உவகை கொள்வாய்.நேற்றிரவு அதே பாதங்களால் என்னை எட்டி உதைத்தாய்.,

மருந்தின் மயக்கத்தில் திரும்புகிறாய்.வலியினால் புருவத்தை சுழிக்கிறாய்.வசும்மா அன்பு கொண்ட உயிர் நோயுற்று அந்த வலிகளை அருகிலிருந்து காண்பதை போன்ற வதை உலகில் எதுவும் இல்லை.என் கண்மணி நான் கையாலாகாதவனாய இந்த புற்று நோய்க்கு உன்னை பலி தந்து நிற்கிறேன்.

உன்னை வசந்தி என நான் அழைத்தால் உனக்கு பிடிக்காது.ரொம்ப பழைய பேராகத் தெரியுது என்பாய்.

வசு நீ வாழ்வை நேசித்தவள்.எனக்குள் காதலை ஊற்றியவள்.இன்று ஏன் எனக்கு சாவு,ஏன் இந்த உயிர் கொல்லும் வலிகள் என்கிறாய்.என்னிடம் பதில் இல்லை.

கீமோவினால் முடி இழந்த உன் தலையை,வலியில் சுருக்கிய புருவத்தை,கருமை படர்ந்த கன்னங்களை,வறண்ட உதடுகளை,மேலுதட்டின் மயிர்களை,எறி இறங்கும் கழுத்தை,வலது புற மார்பை,இடது புற வெறுமையை,மெலிந்த கைகளை பார்க்கிறேன்.உன் உடலே சுருங்கிவிட்டது போலிருக்கிறாய்.

வசு உன்னை நான் முதன்முதலில் பார்த்த போது மஞ்சள் நிற சுடிதார் அணிந்து உன் ஆபீசில் அமர்ந்திருந்தாய்.ஜெனி தான் அறிமுகம் செய்தாள்.உன் உருவம் என்னைக் கவரவில்லை.ஜெனியின் முன் நீ சாதாரணமாய் தோன்றினாய்.

மறுநாள் நான் உன் அலுவலகம்வந்த போது அடர்நீல நிற டாப்சும் ஜீன்ஸுமாய் என்னைப்பார்த்த ஹாய் என்று கண்கள் மலர சிரித்தாய்.அப்படி உயிர்ப்புடன் சிரிக்க உன்னால் மட்டும் தான் முடியும் வசு.

என்ன சரவணன் ஜெனியைப் பார்க்கவா என்றாய்.ஒரு சின்னப் பூனைக்குட்டியின் கொஞ்சல் போல உன் குரல் ரம்யமாய் ஒலித்தது.நான் புன்னகைத்தேன்.

உனக்கு சிறிது கூட சுருளாத நேரான கூந்தல்,அகன்ற மருண்ட விழிகள்,உருண்ட மூக்கு,சிவந்த கன்னம்,அழுத்தமான ஈர உதடுகள்,பொன்னிற சருமம்,செல்லமாக சிறுமி மாதிரி இருந்தாய்.நான்.உன்னை கவனிக்க ஆரம்பித்தேன.

முன் நெற்றயில் விழுந்த கூந்தலை சரிசெய்தவாறு நீ என்னைக் கடந்து சென்ற அந்த அசைவு,கன்றுக்குட்டி போன்ற துள்ளல் ,உன் நடை எனை இழுத்தது.வசு அக்கணமே நீ என்னுள் புக ஆரம்பித்தாய்.

நான் அடிக்கடி உன் அலுவலகம் வரத் தொடங்கினேன்.கொஞ்சம் கொஞ்சமாய் நீ எனக்குப் பேரழகியானாய்.நேசிக்கும் பெண்ணின் ஒவ்வொரு அசைவுமே அழகு தான் வசு.

உன்னைப் பார்ப்பதற்கு முன் எனக்கும் சில ஈர்ப்புகள் இருந்தன.ஜெனியின் உடல் என்னைக் கலைத்திருக்கிறது.என் ஆபீசில் சந்தியா என்றொருத்தி மிக அழகாக உடுத்துவாள்.பேச்சு வேலை எல்லாமே மிக நேர்த்தியாய் இருக்கும்.அவளுக்கும் என் மீது ஒரு ஸாப்ட் கார்னர் உண்டு.

ஆனால் வசு உன்னருகில் நான் காதலின் தூய்மையை உணர்ந்தேன்.உன் விழிகளின் வசீகரத்தில் விழுந்து உன்னில் மூழ்கிட எண்ணினேன்.நான் உன்னிடம் காதலைச் சொன்ன நாளில் அதை எதிர்பார்த்திருந்தவள் போல வெட்கத்துடன் சம்மதித்தாய்.

வசு நாம் இருவரும் முதன்முதலில் சேர்ந்து பார்த்த கண்டுகொண்டேன் படம் நினைவிருக்கிறதா. ஐஸ்வர்யா ராயை விட நீ நான் எனக்கு உலக அழகி என்றேன்.பளபளக்கும் விழிகளில் நாணத்துடன் என் மீது சாய்ந்து கொண்டாய்.என்னை ஆண் என முழுமையாய் உணர வைத்தவை நீ என் மார்பினில் சாய்ந்த கணங்கள் தானடீ.

நான் கூறிய எல்லாவற்றையும் நம்பினாய்.அவை பொய்யாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் கூட உனக்குத் தோன்றவில்லை.அத்தனை தூய மனம் கொண்டவள் நீ.

சரண் சரண் என்று என்னையே சுற்றி வந்தாய்.உன் உலகமே நானாகிப் போனேன்.

கட்டம் போட்ட ஷர்ட் போடாதடா என்றாய்.பிரஞ்ச் பியர்ட் வச்சுகோயேன் என்றாய்.சரண் நீ ரொம்ப மேன்லி கொஞ்சம் சிரியேன் பயம்மா இருக்கு என்றாய்.காதலியின் கண்களே ஆணின் உலகம்.நீ கூறிய எல்லாவற்றையும் கேட்டேன்.

உன்மீதான நேசத்தை தவிர உலகில் வேறு எதுவுமே இல்லை என என்னை அலைய வைத்த நாட்கள் அவை.உன் பேச்சும் ,சிரிப்புகளும்,உன் நடையும்,என் கோபங்களை எதிர் கொள்கையிலும் மருண்டு சுடரும் உன் விழிகளும் என்னை உன்மத்தம் கொள்ள வைத்தன.அணு அணுவாய் என்னை ஆக்ரமித்தாய்.என் உதிரத்தில்,என் நரம்புகளில்,என் சுவாசத்தில் கலந்தாய்.உன் உதடுகளில் உதிரும் ச்சீய்,அய்யே போன்ற வார்த்தைகள் கூட என்னைக் கொன்றதடீ.

பெண்ணுக்குத்தன் உடல் தீராத பொக்கிஷம்.அதனால் தான் மூடி மூடி வைக்க எண்ணுகிறாள்.ஆனால் தான் நேசிக்கும் ஆண் மட்டும் அதை ஆராதிக்க எண்ணுகிறாள்.

நானும் உன் எல்லா உணர்வுகளையும் அறிந்திருந்தேன்.

உன் பொன்னிற சருமம் காற்றில் அலையும் உன் குழல் கற்றைகள்,எனைக்கண்டவுடன் காதலால் மலரும் உன் விழிகள்,எனை ஈர்க்கும் உன் புருவங்கள்,உன் நாசிகள்,உன் ஈர இதழ்கள்,உன் புன்னகை,கன்னத்தில் சிவந்த பரு,புறங்கழுத்தின் மரு,துடிக்கும் உன கழுத்து,சிப்பி போன்ற நகங்கள்,உன் கை விரல்களில் சிவந்த மருதாணி ,வசு சரண் என எல்லா இடங்களிலும் நீ நம் பெயரைக் கிறுக்குவது உன் மழலை என எல்லாவற்றையும் நேசித்தேன்.

சிகரெட்டை விட்டு விடு என்றாய்.

நீ பெரிய ஆத்தா மாறி எனக்கு அட்வைஸ் பண்ணாதடீ என்றேன்.

உண்மையில் என்னை மதலையாக்கினாய்.எந்த வயதிலும் தாயாக மாறிவிடப் பெண்ணால் முடியும்.உன் காதலினால் என்னைத்தாலாட்டினாய்.என் சிகரெட்டுடன் என்னை ஏற்றுக்கொண்டாய்.

என் வாழ்வின் தீராத பக்கங்களை உன் அன்பெனும் தூய்மையால் நிரப்பினாய்.உன் ஈர இதழ்களை அசைத்து ச்சரண் என்று என்னை காதலுடன் அழைக்க உன்னால் மட்டுமே முடியும்.

காமத்திற்கே அலங்காரங்களும் அரிதாரங்களும் தேவை.காதல் பூச்சுகளற்றது.உண்மை மட்டுமே போதும்.வசு நீ விசும்பின் துளி போன்ற தூய்மையானவள்.

நான் உன்னுள் உறைந்திட விரும்பினேன்.

நம் திருமணத்தை எளிமையாக நடத்த நான் விரும்பிய போது எவ்வித தயக்கமுமின்றி சம்மதித்தாய்.

நம் திருமணத்தின் போது என் அம்மா உனக்கு அளித்த பட்டும் உன் நகைகளும் உன்னை யாரோ அன்னியப் பெண்ணாகவே எனக்குக் காண்பித்தன.வசு நான் மனமாற அக்கோலத்தை வெறுத்தேன்.நானறிந்த என் வசு அலங்காரங்களற்றவள்.என் மனதை அறிந்து கொண்ட நீ அன்று மாலையே எனக்குப் பிடித்த என் வசுவாக மாறிவிட்டாய்.

செல்லம்மா நம் திருமண வாழ்வு அன்பெனும் பெருவெளியில் பொங்கிப் பிரவகிக்கும் வெள்ளமாய் தொடங்கியது.முழுமையாய் என்னை நிறைத்தாய்.உன் சமையலும்,விளையாட்டுகளும்,சின்னச் சின்ன அக்கறைகளும் பெண் எத்தனை இனிய துணை என என்னை அறிய வைத்தன.

ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்தாய்.சரண் யூரோப் டூர் போகனுண்டா என்றாய்,ஒரே ஒரு பெண் குழந்தை பெத்துக்கலாம் என்றாய்,கடைசி நாட்கள்ல எங்கனா ஹில் ரிசார்ட்ல செட்டில் ஆகணும் என்றாய்,என்னை தாஜ்மஹாலுக்கு கூட்டிட்டுப் போறியா என்றாய்.

நம் திருமணத்திற்குப் பின் ஆறு மாதங்கள் கழித்து நெஞ்சில் இடதுபுறம் வலிக்குது என்றாய் .ஒண்ணும் இருக்காதுடீ என்றேன.உன் இடது மார்பில் லேசான தடிப்புகள்.டாக்டரிடம் செல்கையில் ஏதாவது அலர்ஜியாக இருக்கும் என்று இருவரும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டோம்.

முதலில்எதுவும் இருக்காது என்ற டாக்டர் எதுக்கும் டெஸ்ட் பண்ணிடலாம் என்றார்.

டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கையில் நடுங்கும் விரல்களுடன் என்னை பிடித்ததுக் கொண்டாய்.உன்னைத் தோளோடு அனைத்துக் கொண்டு நாம் காதலிக்க ஆரம்பித்த காலங்கள் பற்றி பேசினேன்.

ஸ்டேஜ் ஒண்ணுதான்.கட்டியை எடுத்தா சரியாயிடும் என்றார்கள்.நீயும் முதலில் தைரியமாக எதிர்கொண்டாய்.கண்கலங்கிய என்னைத் தேற்றினாய்.

ஆனால் அதன்பின்னர் தான் எல்லாமே தொடங்கியது. மெலிக்னண்ட, ட்யூமர், சர்ஜரி, ஆன்காலஜிஸ்ட்.., என, என் வாழ்வை என் வசுவை கொஞ்சம் கொஞ்சமாய் உருக்கியது.உன் இடது மாரபகத்தை நீக்கியபோது நீ உடைந்தாய், உன் வேதனை என்னைக் குலைத்தது.

நான் உன்மீது கொண்ட மாறாக் காதலைப் போலவே அந்த கார்சினோமா செல்களும் உன் மார்பில்,உன் வயிற்றில், உன் கருவறையில்,உன் உள் உறுப்புகளில் பரவத்தொடங்கின.

சரண் நான் உன்னை விட்டு போக மாட்டேண்டா.என்னை காப்பாத்து என்று கதறினாய்.என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை கண்மணி.

அதன் பின் நீ ஆவேசமடைந்தாய்.சிகிச்சைகள் உன்னை வதைத்தன.என்னிடம் சண்டையிட்டாய்.நான் தான் அசிங்கமாயிட்டேனே உனக்கு பிடிக்காது என்று அழுதாய்.என்னிடம் பேச மறுத்தாய்.வலி தாள இயலா கணங்களில் வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டு என் மடியினில் கதறினாய்.என்னால் அதை தாங்கவே முடியவில்லை கண்மணி.உன் நெற்றியில் முத்தமிடுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியாமல் நிலைகுலைந்தேன்.

நேற்றிரவு என்னை ஏண்டா ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போற என்று என் மார்பினில் எட்டி உதைத்தாய்.வலி தாங்க முடியவில்லை என்னைக் கொன்னுடு என்று கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி விசிறி அடித்தாய்.நான் என்ன செய்யட்டும் கண்ணம்மா.

இரவு மருத்துவமனையில் வலியில் கண்விழித்த நீ சரண் சரண் என்று என்மார்பில் சாய்ந்து கொண்டாய்.உன்னால் அழக்கூட முடியவில்லை.உன் முதுகைத் தட்டிக்கொண்டே இருந்தேன்.அரை மணிக்குப்பின் என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு என்மார்பிலேயே இறந்துவிட்டாய்…..

பி.கு: இவை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய என் டைரிக்குறிப்புகள். வசு உன் நினைவுகளுடனே காலத்தைக் கடந்திருக்கிறேன்.எந்த தேவதை உன்னை என் வாழ்வில் கொண்டு தந்தது.எந்த பூதம் வந்து தூக்கிச்சென்றது.

உன்னை மறக்க முயலச் சொலுகிறார்கள்.அது எப்படியடி முடியும் நீ தான் என்னுள் கலந்து விட்டாயே.என் மரணத்தால் மட்டுமே அது இயலும்.

நீ ஆறு மாதம் அனுபவித்த வேதனைகளை நான் வாழ்நாளெல்லாம் அனுபவிக்க விட்டு சென்றுவிட்டாய்.

நீ காண விரும்பிய தாஜ்மகாலும் தேம்ஸ் நதியும் இனி உலகில் இருந்தென்ன?

உன்னை வதைத்த புற்று நோயின் நண்பனான சிகரெட்டை மட்டும் விட்டுவிட்டு உன் நினைவுகளுடனே அலைந்து கொண்டிருக்கிறேன்…

Print Friendly, PDF & Email

2 thoughts on “விசும்பின் துளி

  1. நான் வாசித்து புல்லரித்த சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் எழுத்துக்களின் வலிமை அபூர்வமாக ஆச்சரியமளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *