கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 11, 2014
பார்வையிட்டோர்: 14,074 
 
 

குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது.

செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே இரைச்சலும், வியர்வையும் பக்கத்தில் நின்றவன் மூச்சில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த பூண்டு நெடியும் அவனைக் குழப்பமடைய வைத்திருந்தன. போதாக்குறைக்கு நடத்துனர்.

மீசை மழித்த அவர் முகம் கண்டிப்பையும், எந்த ஒழுங்கீனத்தையும் பொறுத்துக் கொள்ளத் தன்னால் முடியாது என்பதையும் காட்டியபடி இருந்தது. மீசைக்காரர்களிடம் தென்படும் அன்னியோன்னியமும் பரிவும் அதில் இல்லை.

காசுகளைச் சரியான எண்ணிக்கையில் தராவிட்டால் இறக்கிவிட நேருமென்றும் போனவாரம் அப்படி இறங்கிய இருவர் அடுத்த நொடியே கால் அம்பாரமாக வீங்கி நிலத்தை விட்டுப் பிரிக்க முடியாமல் நின்ற இடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருப்பதாகவும் அவர் சொல்லியபடி அரசாங்க முத்திரை பதித்த சீட்டுக்களை விநியோகித்தார். காசுகளை அவர் ஒற்றை ரேகையோடிய உள்ளங்கையைக் குவித்து வாங்கியதும், அவை சென்றடைந்த பிரம்மாண்டமான அரசாங்க இலச்சினை பொறித்த தோல்பையும் இன்னும் பயத்தை அதிகரிக்க, அவன் போக வேண்டிய இடத்தை நடத்துனர் விசாரித்தபோது திக்கித் திணறி வார்த்தை வராமல் தவித்தான்.

நடத்துனர் அரசு அலுவலர்களை வேலை நேரத்தில் பணி செய்ய விடாமல் தாமதப்படுத்தும், அர்ப்பண உணர்வும் நாட்டுப் பற்றுமில்லாத பயணிகள் பற்றிய கடுங் கண்டனத்தைத் தாழ்வான குரலில் முணுமுணுத்தபடி கொடுத்த சீட்டு இந்த இடம்வரை என்பதும் அவனுக்குத் தெரியாமல் போனது. வண்டி இங்கே இரண்டு நிமிடம் நின்று கிளம்பிய பிறகு அவனைத் தற்செயலாக நோக்கியவர், அசம்பாவிதம் நடந்த பதற்றமும் நிம்மதியின்மையும் முகத்தில் எழுதியிருக்க, குழலை ஒலித்து வண்டியை நிறுத்தி அவனை அவசர அவசரமாக இறங்க வைத்தார். இறங்கிய வினாடியில் ஏற்பட்டது தான் இந்தத் தலைசுற்றலும் ரத்த அழுத்த அதிகரிப்பும்.

அரங்கை நோட்டமிட்டான். ஒன்றும் இரண்டுமாகப் பார்வையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஏதோ அலுவலக மனமகிழ் மன்றத்தின் உறுப்பினர்கள் என்பது அவர்கள் கடந்து போகும்போது உதிர்க்கும் ஒலித் துணுக்குகளைக் காதில் வாங்கும்போது புரிந்தது. பலரும் பழுப்பேறிய அரைக்கைச் சட்டையும், பச்சை மற்றும் நீல வண்ணக் கால்சராயும் அணிந்தவர்கள். கிட்டத்தட்ட எல்லோர் சட்டைப் பையிலும் மசிப்பேனா வைத்து அது கசிந்து ஏற்பட்ட கருப்பு நிறக் கறை சட்டைப் பையை ஒட்டிக் காணப்பட்டது.

அவன் இந்த இடத்தில் படி ஏறும்போதே குழப்பமாக ஏறினான். அவன் உத்தேசித்துக் கிளம்பியதில்லை இது. வந்த காரியமும் இங்கு நடக்க இருப்பது இல்லை.

நான் ஒரு இரங்கல் கூட்டத்துக்காக வந்திருக்கிறேன். அந்நிய மொழியொன்றில் பிரபல கவிஞர். நகர வாழ்க்கையின் அபத்தங்களைப் பற்றி எழுதியவர். போன வாரம் இறந்து போனார். பத்திரிகையில் இரங்கல் கூட்டம் நடப்பதைப் பற்றிப் படித்துக் கிளம்பினேன்.

வாசலில் ஒரு மர மேஜையும் நாற்காலியும் இட்டு, இலச்சினை பதித்த நிகழ்ச்சிச் சீட்டுக்களைக் கொடுத்துக் கொண்டிருந்தவனிடம் அவன் விளக்க முற்பட்டபோது, அவன் அனுசரணையோடு தலையை அசைத்தான்.

கவிஞர்களும், வறுகடலை மொத்த வியாபாரம் செய்கிறவர்களும், இசைக் கலைஞர்களும் இறந்தபடியே இருக்கிறார்கள். வருடத்தின் எல்லாத் தினங்களிலும், மாதங்களிலும் நடக்கிற காரியம் இது. எங்கள் ஊர்ப் பத்திரிகையில் மரண வார்த்தைகளுக்காகவே தினமும் இரண்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். நீங்கள் இங்கே நடைபெறப் போகிற நாட்டிய நிகழ்ச்சியை ரசித்தபடியே மறைந்த பிறமொழிக் கவிஞருக்கு அஞ்சலி செய்யலாமே ? இங்கே வசூலாகும் பணத்தில் நாற்பத்தைந்து சதவிகிதம் யானைக்கால் நோய்த் தடுப்புத் திட்டங்களுக்குச் செலவிடப் படும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே ?

மீசை வைத்த, நேயம் மிக்க அந்த இளைஞன் சமாதானமாகக் கேட்டபோது தட்டமுடியாமல் பணம் கொடுத்து இலச்சினை பதித்த அனுமதிச் சீட்டு வாங்கினான். அந்த இளைஞர் அரசு ஊழியனாக இருக்கலாம். இவர்கள் எல்லோருமே அரசு ஊழியர்களாக இருக்கலாம். அல்லது எல்லோரும் எல்லா நேரமும் சேர்ந்து பணியெடுக்கிற ஏதோ ஒரு தனியார், குழும அலுவலகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இவர்களில் யாருக்கும் யானைக் கால் நோய் இருக்கும் என்று தோன்றவில்லை. பேருந்தில் நடத்துனர் சுட்டிக் காட்டிய அர்ப்பண உணர்வு மிகுந்தவர்கள் எல்லோரும். இவர்களுக்குப் போகுமிடம் எப்போதும் நினைவில் இருக்கும் என்பதால் நடத்துனரின் நேசமும் நேசமின்மையும் பிரச்சனைக்குரிய விஷயமாக ஒருபோதும் இருக்காது.

நீங்கள் நான்காம் வரிசை மூன்றாம் நாற்காலியில் அமருங்கள். சீட்டில் அது குறித்திருக்காது. நான் தான் உங்களை அங்கே உட்காரச் சொன்னேன் என்று யாராவது கேட்டால் சொல்லுங்கள். யாரும் உங்களை உபத்திரவிக்க மாட்டார்கள்.

முதுகில் நீலமும் மார்பில் பச்சையும், சிவப்பு மை ஒழுகிய கரை சட்டைப் பையை ஒட்டியும் இருந்த அந்த மீசைக்கார இளைஞனை அடையாளம் சொல்வது அவ்வளவு கடினமானதில்லை என்ற நிம்மதியோடு அவன் நாலாம் வரிசை மூன்றாம் நாற்காலிக்கு நடந்தான்.

சுற்றிலும் இருந்தவர்கள் சம்பளம், படிப்பணம், ஓய்வூதியம், வைப்பு நிதி என்று சதா பேசிக் கொண்டிருந்தாலும் இடையிடையே வாளி வந்து விட்டதா, இரும்பு வாளியா இல்லை பிளாஸ்டிக் வாளியா, தாம்புக் கயிறு வாங்க மறக்கவில்லையே என்று கடந்து போகிற யாரையாவது விசாரிப்பது அவர்களைப் பற்றிய ஆசுவாசத்தை அவனுக்கு அளித்தது. இரும்பும் பிளாஸ்டிக்கும் கயிறுமான உலகம்தான் இவர்களுக்கும்.

ஆறு மணிக்கு வரவேண்டிய ஆட்டக்காரி ஆறு பதினைந்தாகியும் வரவில்லை. நேரத்தின் முக்கியத்தை இவர்களுக்கு எப்படி உணர்த்துவது என்றே புரியவில்லை.

பக்கத்து இருக்கையில் இருந்தவர் அவனைப் பார்த்துச் சினேகமாகச் சிரித்தபடி சொன்னார். பேருந்தில் பக்கத்தில் நின்றவர் இவராகவே இருக்கக் கூடும் என்று யோசிக்க வைக்கும் பூண்டு நெடி அவர் பேசும்போதும் வெளிப்பட்டது. உடல் தளர்ச்சியும், ரத்த அழுத்த மிகுதலும் அப்போது இன்னும் அதிகமானபோது மாத்திரைகளைக் கொண்டு வர மறந்ததற்காகத் தன்னையே இன்னொரு முறை சபித்துக் கொண்டான்.

உங்கள் சட்டைப்பை எந்த மசிக் கசிவும் இல்லாமல் இருக்கிறதே. நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லையா, அல்லது புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கிறீர்களா ? அதுவுமில்லையென்றால் விருப்ப ஓய்வு பெற்று நகரில் சீட்டுக் கம்பெனியோ, ஊறுகாய்களும், ஆனையடி அப்பளமும், வத்தல் வடகங்களும் தயாரித்து வீடுகளில் விற்கும் தொழிலைத் தொடங்கியிருக்கிறீர்களா ?

ஆர்வமாக விசாரித்த அவரிடம் தான் தற்காலிகமான ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு இங்கே வந்ததாகவும், இன்னும் மூன்று நாட்களில் அது பூர்த்தியடைந்து ஊர் திரும்ப வேண்டியிருக்குமென்றும் அதற்குள் இன்னொரு வேலை கிட்டினால் நலமாக இருக்கும் என்றும் சொல்ல ஏனோ தயக்கமாக இருந்தது.

நான் கூட்டம் மாறி வந்திருக்கிறேன். ஒரு பிறமொழிக் கவிஞரின் மரணத்துக்கான அனுதாபக் கூட்டத்துக்காகப் புறப்பட்டேன்.

கவிஞர்கள் இன்னும் இருக்கிறார்களா என்ன ? யானைக்கால் நோய்த் தடுப்பு பற்றி சமீபத்தில் ஒரு கவிதையையும் படித்த நினைவு இல்லையே.

அவர் ஆச்சரியத்தோடு கேட்டபோது வாளி வந்து விட்டது என்று நிறையக் குரல்கள் சந்தோஷமாக ஒலித்தன. நீல நிறப் பிளாஸ்டிக் வாளியும் அதன் பிடியில் இறுக்கமாகச் சுற்றிய மஞ்சள் பிளாஸ்டிக் தாம்புக் கயிறுமாக மேடைக்குப் பின்னால் கடந்து போனவன் பார்வையில் பெருமிதம் தெரிந்தது. தான் மட்டும் இல்லாவிட்டால் நிறைய ரோகிகள் வீங்கிய காலை இழுத்துக் கொண்டு பேருந்து வருவதற்காக எல்லா நிறுத்தங்களிலும் காத்திருப்பார்கள் என்று வாளியோடு போனவன் பார்வை சொன்னது.

தனக்குப் பிடித்த கவிதை வரிகளை எழுதிய, மறைந்த பிறமொழிக் கவிஞர் பற்றிப் பக்கத்து இருக்கைக்காரரிடம் சொல்லத் தொடங்கியபோது வாசலிலிருந்து ஒரு இளம்பெண் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள். துணிப்பை ஒன்றைத் தோளில் மாட்டியிருந்த அவள் கையைப் பிடித்தபடி நாலைந்து வயதில் ஒரு சிறுவன்.

பஸ் கிளம்ப நேரமாகி விட்டது. கையில் சரியான சில்லறைக் காசுகள் இல்லாதபடியால் நடத்துனர் இறக்கி விட்டார். அரசு ஊழியரான அவர் அப்புறம் என்னைப் பறக்கச் சொன்னார். நானும் என் மகனும் உடனே இறக்கை முளைத்தது போல் எழுந்து பறந்தோம். கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுத் துறை அலுவலர்களின் வேலைநேரக் கரிசனம் மட்டும் இல்லாதிருந்தால் இங்கே நான் இன்னும் தாமதாமாகவே வந்திருப்பேன்.

அவள் நன்றி கூர்ந்த அரசு ஊழியரை மக்கள் தலைவர் போல் பெரிய கட்டை மீசை வைத்த வயதான, கூர்மையான விழிகள் கொண்ட மனிதராக அவன் கற்பனை செய்தபோது மாத்திரை சாப்பிடாது உறங்கும் இரவுகளில் தரிசுகளிலூடே தான் பறப்பதாகத் தொடர்ந்து வரும் கனவு நினைவு வந்தது.

அரசியல் கட்சிக் கொடிகள் அசையும் கம்பங்களும், கம்பங்களில் வெள்ளைப் புழு அப்பியதுபோல் படர்ந்த குழல் மின் விளக்குகளும், செம்மண் தரிசு முழுக்க மூத்திரம் தேங்கியிருப்பதுமான பழக்கப்பட்ட கனவுச் சூழல் அவன் மனதில் திரும்ப எழுந்தபோது அந்தக் குழல் விளக்குகள் ஒரு வினாடி அணைந்தன. அவை மீண்டும் உயிர் பெற்றபோது அரங்கத்தில் அவள் ஆட ஆரம்பித்திருந்தாள்.

டேப் ரிக்கார்டரில் ஒலித்த சங்கீதம் அங்கங்கே நின்று நின்று வந்தபடி இருந்தது. அவள் ஆட்டம் மந்தகதியில் இருந்தது. இசை நிற்கிறபோதெல்லாம் அவள் ஒரு வினாடி தயங்கி இலக்கில்லாமல் அசைந்தபடி இருந்தபோது அவளுடைய பார்வை அவன் மேல் மட்டும் நிலைத்த மாதிரி இருந்தது.

நீயும் வந்துவிடேன். மேடைக்கு ஒரு எவ்வு எவ்வினால் பறந்து வந்துவிடலாம். அப்புறம் நாம் வெளியே கிளம்பிவிடலாம்.

அவள் அழைத்தாள்.

பறந்து எங்கே போக ?

முதலில் அந்தப் பிறமொழிக் கவிஞரின் மரண அஞ்சலிக் கூட்டத்துக்கு. நானும் அவருடைய படைப்புகளில் ஒன்றிரண்டைப் படித்திருக்கிறேன். அவற்றின் தாளத்துக்கு ஒப்ப ஆடியுமிருக்கிறேன். வாயேன், போகலாம்.

உன் குழந்தை ?

வாசலில் புழுதி மண்ணில் மலைகளையும் கோபுரங்களையும் கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்புறம் கடைசி பெஞ்சில் படுத்துத் தூங்கி விடுவான். போகும்போது கூடக் கூட்டிப் போக வேண்டும். சாப்பாடு வாங்கித் தர வேண்டும்.

என்னிடம் இருப்பிடம் திரும்பிப் போகமட்டும் பணம் வைத்திருக்கிறேன். சரியான சில்லறைக் காசுகளை ஒருதடவைக்கு இரண்டு தடவை எண்ணிப் பார்த்து எடுத்து வைத்தது. போகும்போது பேருந்தில் கடுமையான நடத்துனராக இருந்தால் நான் மண்ணில் பாதம் வீங்கி வீர்த்துப் பதித்தபடி நிற்க வேண்டி நேரும். கம்பங்களும் கொடிகளும் மூத்திர நெடியுமான வெளியில் அப்படித் தேங்கிப் போய் நிற்பது சகிக்கக் கூடியதில்லை.

அதற்காகத் தான் பறக்கச் சொன்னேன். நீ உடனே நித்திரை போ.

அவள் திரும்ப ஆட ஆரம்பித்திருந்தாள்.

குளியல், குளியல். குளிக்கும் காட்சி.

பார்வையாளர்களிலிருந்து சத்தம் உயர்ந்தது.

திரை இறக்கப்பட்டது. இருள் சூழ்ந்த அரங்கத்தில் மேடையிலிருந்து யார்யாரோ வரிசையாக இறங்கிக் கொண்டிருந்ததாக அவனுக்குத் தோன்றியது.

வெண்மை மாறாத சட்டைகளில், சட்டைப் பை இல்லாமல், மேலே கருப்புத் துணித் துணுக்கு ஒன்றைக் கைபோன படிக்குக் கத்தரித்துக் குத்தியிருந்தார்கள் எல்லோரும். பிறமொழிக் கவிஞரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த ஓர் ஊர்வலமாக அவர்கள் வரிசைகளுக்கு நடுவே புகுந்து நடந்தபோது மதப் பிரார்த்தனைபோல், விரித்துப் பிடித்த கவிதைத் தொகுதிகளிலிருந்து இன்னும் மொழிபெயர்க்கப்படாத வார்த்தைகளை மொணமொண என்று உச்சரித்தபடி போனார்கள்.

அந்தப் பழைய புத்தகங்களின் மக்கிய வாடை இறப்பின் மணமாக இருக்குமோ என்று நினைத்தான். அவனுக்கும் போக விருப்பம் தான். ஆனாலும் இந்த நிகழ்ச்சி. யானைக்கால் வியாதித் தடுப்புக்காக அவன் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று நிகழ்ச்சி முடியும் வரை இருப்பது.

மேடையில் ஒற்றை விளக்கு மட்டும் ஒளிவீச எல்லோரும் மேடையிலேயே கவனமாக இருந்தார்கள். அவனும் அங்கே நோக்கினான். வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராப்பறவைகளோடு சேர்ந்து கூவியும் சிரித்தும் கொண்டிருந்தது இடைக்கிடைக்குக் கேட்டது.

மேடையில் நாட்டியக்காரி அட்டைக் கிணற்றிலிருந்து பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் இறைத்தபடி டேப் ரிக்கார்டரில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றபடி மெல்ல அசைந்து கொண்டிருந்தாள். திருமண மண்டபத்துக்குத் தோழிகள் மணமகளை அழைத்து வரும்போது பாடும் பாட்டு அது. பாதிப்பாட்டு முடிவதற்குள் ஒலிநாடா உள்ளே சிக்கிக் கொள்ளக் குரல் வீறிட்ட போது அவள் தரையில் காலை நீட்டி அமர்ந்தாள்.

அவளுடைய உடைகள் நெகிழ்ந்திருந்தன. மறைத்திருந்த உடல் அங்கங்கே வெளியே தெரிய அந்த வாளிக்குள்ளிருந்து குவளையில் நீர் சேந்தி அவள் மேடையில் குளிக்கத் தொடங்கி இருந்தாள். அவள் கால்கள் வீங்கியிருந்ததுபோல் அவனுக்குத் தோன்றியது. இல்லை, குளிகை கழிக்காததால் ஏற்பட்ட தோற்றம் அது. அவள் கால்கள் மெலிந்துதான் இருந்தன. பக்கத்து இருக்கைக்காரரிடம் கேட்டு அதை உறுதிப் படுத்திக் கொண்டான் அவன்.

கடலில் மீன்பிடிக்கப் போகிறவர்கள் கூட்டமாகப் பாடும் பாடல் ஒன்று ஒலிக்க ஆரம்பித்து நடுவில் நிற்க, பனிப் பிரதேசங்களில் காதலர்கள் அலைந்து திரியும் போது பாடும் புத்தம் புதிய பாட்டு அடுத்து ஒலி நாடாவில். அவள் வாளியிலிருந்து தண்ணீரைச் சேந்திக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே நனைத்தபடி இருந்தாள். மகிழ்ச்சியோடு அந்தப் பாடலைப் பாடுவதுபோலவும் பாடியபடியே குளிப்பது போலவும் அபிநயிக்க முற்பட்டிருந்த அவள் முகத்தில் சிரிப்பு உறைந்து போயிருந்தது.

நீங்கள் வேண்டுமென்றால் புறப்படுங்கள். இன்னும் பத்து பதினைந்து நிமிடத்தில் நிகழ்ச்சி முடிந்து விடும்.

பக்கத்து இருக்கைக்காரர் இவனிடம் ஆதரவோடு சொல்லிவிட்டு வாசலை நோக்கிக் கைகாட்டினார். மேடையிலிருந்து கீழே வழிந்த நீரை மிதிக்காமல் அவன் கவனமாக வெளியே நடந்தான்.

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஓடி வந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டான்.

அம்மா குளித்து முடித்து விட்டாளா ?

அவன் கேட்டபோது ஒரு வினாடி தயங்கி நின்று, இன்னும் முடிக்கவில்லை என்றான்.

அவள் முடித்துத் திரும்பும்போது ஈர உடுப்புக்குள் பணம் வைத்திருப்பாள். சூடான சோறு வாங்கித் தருவாள்.

ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வதுபோல் அவனிடம் சொல்லிவிட்டு சிறுவன் பேருந்து போல் ஒலி எழுப்பியபடி இருளில் ஓடினான்.

முன்னால் வந்து நின்ற பேருந்திலிருந்து மீசையில்லாத பஸ் நடத்துனர் தலையை நீட்டி நேரம் தாமதியாமல் ஏறிக் கொள்ளச் சொன்னார்.

கட்டிட ஜன்னல் வழியே உள்ளே நடனக்காரியைப் பார்க்க முயன்றபடி அவன் ஏறிக் கொண்ட பேருந்தில் வேறு பயணிகளே இல்லை.

(தில்லி பெண்ணேஸ்வரனின் ‘வடக்கு வாசல் ‘ பத்திரிகையில் வெளியானது – நவம்பர் 2005)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *