கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 17,747 
 
 

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம……

ஒரே சீராகக் கோவிலிலிருந்து குரல் வந்தது. சீதா மெல்லக் கண் விழித்தாள். நிமிர்ந்து, இருந்த ஒரே ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரே இருட்டு தான். மணியைப் பார்க்கத் தேவையே இல்லை. கோவிலிலிருந்து குரல் வந்து விட்டதென்றால் மணி சரியாக ஐந்து, தனுர் மாசம் என்பதால் இவ்வளவு அதிகாலையிலேயே கோவில் நடையைத் திறந்து விடுவார்கள். குளிருக்கு கைகளையும் கால்களையும் ஒடுக்கிக் கொண்டு படுத்திருந்ததில், உடம்பெல்லாம் வலி, தலயணை இல்லாமல் படுத்ததில் மண்டை வேறு வலித்தது.

உடம்பு முழுவதையும் சுற்றிப் போர்த்தியிருந்த ‘ஷால்வை’யை வி‘க்கிக் கால்களை நீட்டினாள். ‘சிலீ’ரென்றது, கால்கள் பாயைவிட்டு நீண்டு தரையில் பட்டதும், கைகளை நீட்டினாலும் இதே கதி தான். ம்…. என்ன செய்ய? எழுந்து தானே ஆக வேண்டும்.அருகிலிருந்த விஸ்வநாதனை மெல்லத் தொட்டாள். ‘சில்லென்ற அவளுடைய கைபட்டதும் குளிருக்கு ஒடுக்கிக் கொண்டு படுத்திருந்த அவனும் முகத்தைச் சுளித்துச் சற்றுக் கோபத்துடன் கண்களை விரித்தான்.

‘வாங்கோ….. ஆத்துக்குப் போய் குளிக்க வேண்டாமா?”‘மணி அதுக்குள்ளே அஞ்சு ஆயிடுத்தா என்ன” என்றான் குரலில் நம்பிக்கை யில்லாமல்.வேறெதற்காகவாவது இப்படி அதகாலையில் அவனை எழுப்பியிருந்தால் நிச்சயம் கோபப்பட்டிருப்பான். ஆனால்….. இப்போ…. கோவில் என்றவுடன் எரிச்சல் வந்தாலும், பயம் அந்த எரிச்சலை அழுத்தி விடுகிறது.வேறு வழியின்றி ‘வெடுக்’கென்று எழுந்து நின்று பாயையும் போர்த்தியிருந்த ‘ஷால்’வையையும் மடித்து வைத்து விட்டு பல் தேய்க்கப் போனாள் சீதா. பாத்ரூமில் கால் வைத்தால் குளிர் மண்டைவரை பாய்ந்தது. தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்ததும் தூக்கம் கலைந்தாலும் குளிரின் பாதிப்பென்னவோ போகவில்லை. இதென்ன பெரிய குளிர் ஆற்றில் குளிக்கும் போதுதானே இருக்கிறது.

‘யக்கா…. பிஸி நீரு பேக்கா” (வெந்நீர் வேண்டுமா?) என்று ஒரு சின்னக் குழந்தையின் தூக்கம் கலையாத குரல். மூடியிருந்த அறையின் வாசலிலிருந்து கேட்டது. மல்லத்தின் குரல்தான். தினமும் காலை மல்லம் எப்படித்தான் எழுந்திருக்கிறாளோ? எழுந்திருப்பதோடு இல்லை. இந்தக் கொட்டும் பனியில் தேவஸ்தான அறை ஒவ்வொன்றின் வாயிலிலும் நின்று கோர்ட்டவாலி போல், தூக்கக் கலக்கம் தெளியாமலேயே ‘சுவாமி, பிஸி நீரு பேக்கா” என்று மூன்று முறை கேட்டு, உடனே அடுத்த அறைக்குச் சென்று விடுவாள்.

இந்த ‘பஞ்சமுகி தர்ஷ’ னில் கிட்டத்தட்ட அறுபது ரூம்கள் இருக்கும். யாராவது கதவைத் திறந்து ‘பேக்கு’ (வேண்டும்) என்றால் உடனே வராண்டா கைப்பிடியைப் பிடித்து எக்கிக் குனிந்து கீழே எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருக்கும் தன் தாயாரிடம் கன்னடத்தில் தண்ணீர் சுட வைக்கும்படி சொல்வாள் மல்லம். இன்றைக்கு அவள் குரல் கேட்டவுடன் சீதாவிற்கு லேசான நைப்பாசை. ‘இன்று ஒரு நாள் வெந்நீரால் தலைக்கு ஊற்றிக் கொண்டால் என்ன?” மறுநிமிடமே அந்த க்ஷண நேர சபலத்தை மாற்றிக் கொண்டாள். அப்புறம் சென்ற ஐந்து நாட்கள் கஷ்டப் பட்டதெல்லாம் வீண்தானே? துங்கப்பத்ரையில் குள்ள குளிர விடியல் காலை நீராடி ஈரத்துணியுடன் ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தைப் பிரதக்ஷணம் செய்வதாகத் தானே பிரார்த்தனை. அதை மாற்ற முடியுமா?

அதற்குள் விசுவநாதனும் எழுந்து பல் தேய்த்து விட இருவரும் ஒரு காய்ந்த துவாலையையும், டார்ச் லைட்டையும் எடுத்துக் கொண்டு நதிக்குப் புறப்பட்டனர். ஆற்றை நோக்கி அந்தக் கரடு முரடான பாறையில் ஏறி இறங்கும் போது அடி வயிற்றை சுருட்டிச் சுருட்டிக் குளிர்ந்தது. உடம்பு வேறு அசாத்தியமாக வலித்தது. வலிக்குக் காரணம் குளிர் மட்டுமல்ல. நேற்று செய்த அங்கப் பிரதக்ஷணணிம் கூட. கால்கள் வேறு பாறையின் மேல் நடக்கத் தெரியாமல் இடறிக் கொண்டன. நதி ரொம்பத் தூரம் இருப்பது போலத் தோன்றியது. ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமி துங்கா நதிக்கரையில் பிருந்தாவனஸ்தரானார் என்று சரித்திரம் சொல்கிறது. ஆனால் அவருடைய பிருந்தாவனத்திற்கும் நதிக்கும் இடையே மைல் கல் எட்டு இருக்கும் போலிருக்கிறது.

நதியை நெருங்க நெருங்க பயம் அடி வயிற்றைக் கவ்வியது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருவதுதான் என்றாலும் ஒவ்வொரு நாளும் போவது ஓர் யுகம் போலத்தான் இருக்கிறது. நதியின் அருகில் வந்ததும் சற்றும் யோசிக்காமல் சடாரென்று முங்கினாள் சீதா. உடம்பே விரைத்தது. விரைக்கட்டும். ஏதோ ஒரு முடிவு கிடைத்தால் சரி.

அந்தப் பெரிய பிரகாரத்தில் இவர்கள் இரண்டு பேரையும் தவிர இன்னும் நான்கைந்து பேர் இருந்தனர். வேடிக்கை என்னவென்றால் இருந்தவர்கள் அனைவரும் இளம் தம்பதிகள் தான். என்ன தான் முயற்சி செய்தாலும் கால்கள் பிரதக்ஷணம் செய்கின்றன. உடல் நடுங்குகிறது குளிரில். கண்கள் சுற்றி நோட்டம் விடுகின்றன. மனம் சிந்தனையில் அலை பாய்கிறது. இவ்வளவு அதிகாலையில் இந்தக் குளிரில் ஈரத்துணியுடன் பிரதக்ஷணம், வயதில் இளையவர்கள் செய்ய வேண்டுமானால் நிச்சயம் இது ‘சேவை’யாகத்தான் இருக்க வேண்டும். அதாவது கோரிக்கை நிறைவேற்ற வேண்டி விரதம் இருப்பது. எல்லோருக்கும் என்னைப் போல் குழந்தை இல்லாததுதான் பிரச்சினையா? பின், வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள். பார்த்தால் வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். எதற்காக இப்படி உடம்பைத் தண்டித்துக் கொள்ள வேண்டும். சும்மா…. பக்தி என்பதெல்லாம் கதை….

கால்கள் நோக அடி பிரதக்ஷணம், பிரதக்ஷண நமஸ்காரம் எல்லாம் செய்து விட்டு ஏழுமணி வாக்கில் அறைக்கு வந்து, புடவை மாற்றிக் கொண்டு மறுபடியும் கோவிலுக்குச் செல்லுகையில் மாஞ்சால அம்மன் சன்னதி வாசலில் மல்லம் நின்று கொண்டிருந்தாள், ஏதோ, குப்பையைப் பொறுக்கிக் கொண்டு.

மாஞ்சால அம்மனைத் தரிசிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த போது (தினமும் தரிசித்துக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்ற தன் நினைப்பின் முட்டாள் தனத்தை எண்ணித் தானே வெட்கினாள் சீதா.) மல்லம் குப்பையிலிருந்து கவனத்தை நகர்த்திச் சுற்று முற்றும் பார்த்தாள். சீதா மந்த்ராலயம் வருவது இது நான்காவது முறை என்றாலும் மல்லத்தைப் பார்ப்பது இதுவே முதன் முறை. மல்லத்திற்கே மூன்று வயதிற்குள்தான் இருக்கும். சென்ற ஆண்டு மிகவும் குழந்தையாக இருந்திருப்பாள். எப்படி பார்த்திருக்க முடியும்.

அதற்குள் வரிசை நகர சீதா மாஞ்சால அம்மன் அருகில் போய் விட்டாள். தன் அடி வயிற்றில் கையை வைத்தபடி அம்பாளைப் பார்த்தாள். சொல்லி என்ன இருக்கிறது. அதுதான் நான்கு வருடங்களாகத் தொடர்ந்து வந்த அம்மனிடம் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறாள். ‘ஜருகண்டி’ என்ற பூசாரியின் குரல் கேட்டு பேசாமல் நகர்ந்தாள் சீதா.

ராகவேந்திர ஸ்வாமி பிரகாரத்தில் இப்பொழுது நல்ல கூட்டம் சேர்ந்து விட்டது. ஓர் ஓரமாகப் போய் உட்கார்ந்த சீதா (விசுவநாதன் அறையிலேயே அமர்ந்து விட்டான்) மெல்லக் கண்களைச் சுழல விட்டாள். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மொழி பேதமின்றி பல மாநிலத்தவர், காலையில் வந்திறங்கி, வசதியான லாட்ஜில் ‘ரூம்’ பிடித்து வெந்நீரில் குளித்துப் பட்டுப்புடவை அணிந்து, பூச்சூடி, வயிறு நிரம்ப ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு, கையில் அர்ச்சனைத் தட்டுடன் வரும் இளம் தம்பதியர் ஏராளம். பசி வயிற்றைக் கிள்ள உட்கார்ந்திருக்கும் சீதா அவர்களைப் பார்த்தாள்.

காலை தம்முடன் சுற்றியவர்களைத் தவிர மற்ற அனைவருமே கையில் குழந்தையுடன்தான் இருந்தார்கள். இதோ அருகில் ஒரு தம்பதி, பார்க்க லட்சணமாக கையில் கிட்டத்தட்ட பத்து மாதம் ஆகியிருக்கும் பெண் குழந்தைக்கு. குளிருக்கு அடக்கமாய்த் தலையில் ‘உல்லன்’ குல்லாயும், காலில் செருப்புமாக வாய் பூரா தன்னுடைய நான்கு விரல்களையும் போட்டுக் கொண்டு எச்சில் வழிய சீதாவைப் பார்த்துச் சிரித்தது. காலை உதைத்தது. அதன் தாய், கன்னடக்காரர் போலும், குழந்தையைப் பெருமையுடன் பார்த்து ‘அந்த ஆண்டியிடம் போகிறாயா?” என்று கன்னடத்தில் கேட்டுவிட்டு இவளை நோக்கி ‘அரவமா” (நீங்கள் தமிழரா?) என்றாள். சிதா தலையை ஆட்டினாள். ‘கேட்டடால் குழந்தையைக் கொடுக்கவா போகிறாள்?” வந்து அமர்ந்ததிலிருந்து மாறி மாறிக் கணவனும் மனைவியும் குழந்தையைக் கொஞ்சுவதற்கா இங்கு வந்தார்கள்.

இந்தப் பக்கம் காலே பாவாமல் ஒரு குழந்தை ஓடியது. பின்னாலேயே அதன் தாய் தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டு ஓடினாள்.

ம். இவர்களுக்கு என்ன பிரச்சினை…… இவர்கள் எதற்கு மந்தராலயத்திற்கு செலவு செய்து கொண்டு வர வேண்டும். ஒரு வேளை குழந்தையைக் கொடுத்ததற்கு நன்றி சொல்ல வந்திருக்கிறார்களோ?

என்னதான் தியானம் செய்ய மனம் நினைத்தாலும் பசி வயிற்றைக் கிள்ளியது. இரவு எட்டு மணிக்கு இரண்டு வாழைப்பழமும், ஒரு ‘கப்’ பாலும் சாப்பிட்டது. காலை எழுந்து இரண்டு மணி நேர பிரதக்ஷணம் செய்ததில் கால்கள் இரண்டும் கெஞ்சின. உள்ளே இருந்த ராகவேந்திரரிடம் மானசீகமாகக் கேட்டாள். ‘‘இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் என்னை இப்படி சோதிக்கப் போகிறாய்”.

கையில் கோவில் சாப்பாட்டுக்கான டிக்கெட். எப்போது சாப்பாடு போடப் போகிறார்கள் என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சீதாவிற்கு தன் மீது கழிவிரக்கம் ஏற்பட்டது.

மதியம் வெய்யிலுக்காக ரூம் வராண்டாவில் நின்ற போது மல்லம் கீழே நின்று கொண்டிருந்தாள். சிகப்பு நிறத்தில் பெரிய பெரிய பூக்கள் போட்ட முக்கால் பாடி பாவாடை மேலே பித்தான்கள் சரி வர போடப் படாததால் பாவாடை மேலும் கீழுமாகத் தொங்கியது அதேத் துணியில் சட்டை, அதிலிருந்து அழுக்கை வழித்தெடுத்தால் ஒரு கிண்ணம் தேறும். தலையில் அடர்த்தியான முடி, பிறந்த நாளிலிருந்து அந்த முடி எண்ணெய் என்கிற திரவத்தைப் பார்த்தேயிருக்காது போல் வறண்டிருந்தது. அதை ஒரு ரப்பர் பேண்டிற்குள் அடக்கியிருந்தாள்.

வறுமை தெரியாத குண்டு முகம். கன்னம் இரண்டும் பிடித்து அமுக்க வசதியாக கொழு கொழு வென்று இருந்தது. சோற்றுக்கே இல்லாதபோது உடம்பு மட்டும் இக்குழந்தைக்கு எப்படி குண்டாகியிருக்கிறது. வாயிடுக்கில் புண், போதுமான சத்துணவு இல்லாததால் ஏற்பட்டிருந்தது. யாரைப் பார்த்தாலும் உடனே சிரிக்கும் சிநேகமான முகம். மல்‘ம் தானே பேசிக் கொண்டிருந்தாள். என்னவோ விளையாட்டு. திடீரென்று எழுந்து நடனம் ஆட ஆரம்பித்து விட்டாள். இடுப்பை வளைத்து, ஒடித்து முன்னாலும் பின்னாலும் சாய்ந்த அவள் ஆடியபோது அவள் மட்டும் சுத்தமாக இருந்தால் சீதா ஓடிப் போய் அக்குழந்தையை ஆரத் தழுவி உச்சி முகர்ந்திருப்பாள்.

‘மல்லம்…. அரி…. மல்லம்” என்று கூவினாள், ஒரு பெண்மணி. மல்லம் அவளருகில் துள்ளி ஓட அப்பெண்மணி ஏதோ சொல்ல மல்லம் அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்.

இம்முறை மந்த்ராலயம் வந்த அன்றே தேவஸ்தான ஆபீஸ் அருகிலேயே மல்லத்தைப் பார்த்து விட்டாள் சீதா. விசுவநாதன் உள்ள அறை எடுப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது வெளியே படிக்கட்டில் அமர்ந்திருந்த சீதாவின் அருகில் வந்து நின்ற அந்தக் குட்டியிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருந்தது. அந்தக் குட்டி தன்னிச்சையாக சீதாவைப் பார்த்துப் புன்னகைத்தது ‘நு பேரு ஏமி” என்றாள் சீதா, தனக்குத் தெரிந்த தெலுங்கில் ‘மல்லம்… காது…. மல்லம்மா” என்று தயங்காமல் பதில் சொல்லி விட்டு சிட்டாகப் பறந்து விட்டது அந்தக் குட்டி.

ஒரு பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்த சீதாவைப் பரிதாபமாகப் பார்த்தான் விசுவநாதன். யார் யாரைப் பார்த்துப் பச்சாதப்படுவது? அவனும் தானே சேர்ந்து கஷ்டப் படுகிறான், ஒரே ஒரு குழந்தைக்காக. சீதாவின் முகம் வாடி யிருப்பதிலேயே இந்த ஐந்து நாட்களுக்குள் அவள் சோர்ந்து விட்டாள் என்பதைக் காட்டியது. ஆயிற்று நான்கு மணிக்குக் கோவில் நடை திறந்து விடுவார்கள். மறுபடியும் துங்கபத்ராவில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்ற வேண்டும். காலையாவது சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை. இரவு வெறும் பால் பழம்தான். தொடர்ந்து ஐந்து நாட்களாக உடம்பையும் வருத்திக் கொண்டு அதற்கேற்ற உணவும் இல்லாததால் இந்தப் பனியும் சேர்ந்து சீதா வாடிப் போய் இருந்தாள். பாவம்…. அம்மாவால் வந்த வினைதான் இது.

‘ஏண்டா விசுவநாதா…. இன்று கோவிலில் ஒரு மாமியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவாத்து மாட்டுப் பொண்ணுக்குக் கல்யாணமாகி ஐந்து வருஷம் குழந்தையில்லாமல் இருந்ததாம். மந்தராலயத்தில் ஜீவ சமாதி அடைந்திருக்கும் ராகவேந்திர ஸ்வாமிகள் கோவிலுக்குப் போய் ஒன்பது நாட்கள் விரதம் இருந்தாளாம், மார்கழி மாதத்தில். நான்கு முறை செய்வதற்குள் அழகாக சாக்ஷாத் கிருஷ்ண பரமாத்மாவே பிறந்து விட்டானாம். நீயும் சீதாவும் கூட பேசாம அங்கே போய் ஒன்பது நாள் விரதம் இருங்கோ” என்று யோசனை சொல்வது போல் கட்டளையிட்ட அம்மாவின் பேச்சைக் கேட்டது தப்போ என்று வருந்தினான் விசுவநாதன், மனைவியின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்து.

இதோடு நான்கு வருடம் ஆகிவிட்டது. அடுத்த வருடத்திற்குள்ளாவது குழந்தை ஜனித்து விட்டால் மீண்டும் குழந்தையோடு மற்றவர்களைப் போல் சுகமாக வந்து போகலாம். உடம்பைத் தண்டித்துக் கொள்ள வேண்டாம். கல்பக விருக்ஷம் காமதேனு என்றெல்லாம் பக்தர்களால் வர்ணிக்கப்படும் ராகவேந்திர சுவாமி இவர்கள் விஷயத்தில் எப்பொழுது கண் திறக்கப் போகிறார். இந்த வருடத்தின் விரதத்தில் இன்னும் நான்கு நாட்களைத் தள்ளியாக வேண்டும். ராகவேந்தரா…. சீதாவிற்குத் தெம்பையாவது கொடு.

‘ஹெஜ்ஜே நமஸ்காரத்திற்கு’ உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்ததில் ஆடு சதைகள் வலுவிழந்து விட்டன. இடுப்பைத் தெரித்தது. இந்தப் பனியிலும் சீதாவிற்கு வியர்த்துக் கொட்டியது. பிரகாரத்தில் பாதிதான் ஆகியிருக்கிறது. இன்றும்பாதி இருக்கிறது….. அதாவது இன்னும் ஒரு நூறு நமஸ்காரங்களாவது செய்ய வேண்டியிருக்கும். ராகவேந்திரா…. என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்கிறாய்….

திடீரென்று ஒரு குழந்தையின் குரல் வீரிட்டிக் கத்தியது. துணுக்குற்று சீதா திரும்பிப் பார்த்தாள். கோவில் வாசலில் இருந்த கருங்கற்கள் படிகளில் மல்லம்… குப்புற விழுந்து கிடந்தாள். பற்கள் குத்தியதால் உதட்டிலிருந்து ரத்தம் கொட்டியது. கை, கால்களிலெல்லாம் சிராய்ப்பு. பட்டுப் புடவை அணிந்து பொம்மை போல் அழகழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த தத்தம் மழைலைச் செல்வங்களைக் கையில் ஏந்திக் கொண்டிருந்த பெண்டிர், விழுந்து எழுந்திருக்க இயலாமல் கத்திக் கொண்டிருக்கும் மல்லத்தைப் பார்த்து ‘ச்சு… ச்சு’ என்று தங்கள் பரிதாபத்தைத் தெரிவித்துக் கொண்டனர். சீதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. பிரார்த்தனையின் மிக முக்கிய அம்சமான இந்தப் பிரதக்ஷண நமஸ்காரத்தைப் பாதியில் விட்டு போவதா….. அப்படிப் போனால் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டுமே….. ராகவேந்திரா என்னை என்ன செய்யச் சொல்கிறாய்…. இதற்கிடையில் தாறுமாறாக விழுந்து கிடந்த மல்லம் அழுகையின் உச்சத்திற்கே போய் மூச்சே நின்று விடும் நிலையை எட்டியிருந்தாள்.

சீதா ஒரு முடிவுக்கு வந்தவளாக தூக்கிச் செருகியிருந்த புடவையைக் கீழே இறக்கினாள். அங்கிருந்து நகர்ந்து மல்லத்தை நோக்கி நடந்தாள். பிரதக்ஷணத்தைப் பாதியில் விட்டுச் செல்லும் பாவ காரியத்தைச் செய்யும் பெண்ணை பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்த மற்ற பெண்கள் ஏளனமாகப் பார்த்தனர். மல்லத்தின் அருகில் வந்த சீதா தயங்காமல் தூக்கி நிறுத்தினாள். மூக்கில் சளியும் ரத்தமும் சேர்ந்து வந்தது. வாயில் ரத்தமும் எச்சிலும் சேர்ந்து ஒழுகியது. கை, காலெல்லாம் பயங்கர சிராய்ப்பு. குழந்தைப் பொறுக்க இயலாமல் சத்தமே இல்லாமல் கதறிக் கொண்டிருந்தது. ஈரமாக இருந்த தன் புடவைத் தலைப்பை எடுத்து அந்தக் குழந்தையின் முகத்தை அழுந்தத் துடைத்தாள் சீதா.

அங்கிருந்த அனைவரும் இப்பொழுது அவளை அருவருப்புடன் பார்த்தனர். பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த விசுவநாதனிடம் ‘வாங்கோ ஹோட்டலில் போய் ஏதாவது இந்தக் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்துட்டு அப்படியே அங்கேயிருக்கிற டாக்டர்கிட்ட ஒரு டேட்டன்ஸ் ஊசி போடச் சொல்ாம். செப்டிக் ஆகாம இருக்கும்.” பிரமை பிடித்தாற் போல் விஸ்வநாதன் சீதாவைப் பின் தொடர்ந்தான்.

பிறந்த இந்த இரண்டரை வருடங்களில் முதன் முறையாக வயிறு நிறைய உண்ட தெளிவு மல்லத்தின் முகத்தில். உதட்டில் காயம் பட்ட இடத்தில் பஞ்சுடன் சீதாவின் கையைப் பிடித்தபடி ராகவேந்திர ஸ்வாமியின் பிருந்தாவனத்தின் அருகில் நின்று கொண்டிருந்தாள் மல்லம். பிருந்தாவனத்தைச் சுற்றி நீலப்பட்டு. பிருந்தாவனத்தின் மேல் பூஹாரங்கள். வெள்ளியில் ராகவேந்திர ஸ்வாமியின் உருவம். பிருந்தாவனத்தின் மேல் முகப்பில் ஒரு கிருஷ்ண விக்ரஹம். அங்கேயுள்ள ஒரு சின்ன இடத்தில் மல்லத்தை மடியில் வைத்து கொண்டு அமர்ந்தாள் சீதா. வருபவர்களுக்கு ஆரத்தி காட்டித் தட்டில் எவ்வளவு காசு போடுகிறார்கள் என்று பிருந்தாவனத்துக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும் திரண்ட மேனியுடையவன், குப்பை பொறுக்கும் மல்லம் சன்னதிக்கு அருகில் வந்ததைப் பார்த்துப் பொறுமினாள். ஒன்றும் பேச முடியவில்லை. தட்டில் ஐநூறு ரூபாய் நோட்டல்லவா விழுந்திருக்கிறது.

‘ஷாம்பு’ செய்யப்பட்டு அழகாக பேபி பாப் வெட்டப்பட்ட கூந்தல், ‘ப்ளீச்’ செய்யப்பட்ட முகம், அதிநவீனமாக ஃபிரில் வைத்த ப்ராக்குடன் சேரில் பேந்தப் பேந்த விழித்தபடி அமர்ந்திருந்தாள் மல்லம். அவளை எல்லோரும் வினோதமாகப் பார்ப்பது புரியாமல் அவளும் மற்றவர்களையும் குறிப்பாக அவர்கள் பேசும் மொழியையும் விந்தையாகப் பார்த்தாள். ‘நான் எங்கேடி போய் அடித்துக் கொள்வேன். மந்தராலயம் போய் ராகவேந்திர ஸ்வாமிக்கு நான்கு வருஷம் சேவை செய். புத்திர பாக்கியம் கிட்டும்னு சொன்னா, என் பைத்தியக்கார மாட்டுப் பொண்ணு ஒரு பிச்சைக்கார குட்டியைக் கூட்டிண்டு வந்து ராகவேந்திர ஸ்வாமி பிள்ளை கொடுத்தார்னு சொல்றாளே. அவளுக்குப் புத்தி பேதலிச்சுடுத்துன்னு நினைக்கிறேன். என் மகன் வேற அவளுக்குத் தாளம் போடறான். இங்கே கூட்டிண்டு வந்து அது என்னவோ ‘மஞ்சளா தேவின்னு ஓர் அதிசயப் பேசு வேற அந்தக் குட்டிக்கு வச்சு…. என்னுடைய சொத்தில் ஒரு பைசா தர மாட்டேன். நான் ஊருக்குப் போறேன். ராகவேந்திர ஸ்வாமிக்கு ஒழுங்கா பக்தியா விரதம் இருந்தா….. கண்டிப்பாக கண் திறந்திருப்பார். இவ பாதியிலேயே ஏதோ குட்டியைத் தூக்கிண்டு வந்துட்டு சாமி பேர்ல பழியைப் போடறாளே……” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் மாமியார்.

சமையலறையில் மஞ்சளாவிற்குச் சோறு பிசைந்து கொண்டிருந்த சீதா அங்கிருந்த ராகவேந்திர ஸ்வாமியின் சாந்தமான முகத்தைப் பக்தியோடு பார்த்து தீர்க்கமாகப் புன்னகைத்தாள். அவளுக்குத் தெரியுமே ‘பக்தர்களுக்குக் கொடுப்பதில் அவர் காமதேனுதான்” என்பது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *