கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)  
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 38,110 
 
 

சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள்.

சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுடன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து ஆடும் கருஞ்சுவாலைக் கூட்டம்போல தூரத்தில் ஊசிமலை அவளுக்குத் தென்பட்டது.

வயோதிகத்தின் நியதிகளைத் தட்டாமல் ஏற்றிருந்த சாலம்மாளின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது. முந்தானையைச் சுருட்டித் தலைச்சும்மாடாகவும், முக்காடாகவும் மாற்றிக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே பேசியபடியும் போய்க்கொண்டிருந்தாள் அவள். இரண்டு மூன்று குடங்கள் சுமந்து வந்ததற்குள் களைத்து ஒரு மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டாள்.

வெப்பக் காற்று மாந்தளிர்களில் பட்டு தணிந்து வீசியது. கருகும் தளிர்களின் வாசம்போல மாம்பூக்களின் வாசம் மெல்லக் காற்றிலே பரவி அடங்கியது. அவளைப் போலவே பக்கத்துத் துண்டுகளிலும் சிலர் மாஞ்செடிகள் வைத்திருந்தனர். சிலர் அப்படியே தரிசாகவிட்டு வைத்திருந்தனர்.

ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். அப்போது சாலம்மாளுக்கு நல்ல புத்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த ஊரிலும், சுத்துப்பட்டிலும் இருக்கிற வானம்பார்த்த பூமி கொண்ட ஏழை விவசாயிகள் சிலருக்கு இயேசுகாரர்கள் இலவசமாகவே மாங்கன்றுகளைத் தருவதாகக் கேள்விப்பட்டாள். உடனே முந்திக்கொண்டாள் சாலம்மாள். அவளுக்கிருந்த கையளவு நிலத்துக்கு அவர்கள் கொடுத்த சில செடிகளே போதுமானதாக இருந்தன. கிடைத்த மாஞ்செடிகள் எல்லாமுமே மெங்களூரா, நீலம் வகைகளாகவே இருந்துவிட்டதால் சாலம்மாளின் மனசு கேட்கவில்லை. மேல் ஆலத்தூர் அரசாங்கப் பண்ணை வரை போய் காதர், பீத்தர், பங்கனப்பள்ளி, மல்கோவா என்று வகைக்கொன்றாகவும், சிலவற்றை வாங்கி வந்து வைத்தாள். செடிகளின் ஒட்டு பிரிந்துவிடாமல் தொட்டிகளை கவனமாக உடைத்து, பச்சைப்பிள்ளைகளை கையாள்வது போல நட்டு, குளம் குட்டை என்று விடாமல் அலைந்து நீர் ஊற்றினாள் சாலம்மாள். புதிய இடத்தில் பொருந்தாமல் இருப்பவர்களைப் போல இருந்த செடிகள் பச்சை பிடித்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது. மரஞ்செடிகள் என்றாலே சாலம்மாவுக்கு உயிர்தான். கையில் கிடைப்பதையெல்லாம் கொண்டு வந்து வைத்து அவள் வீட்டை நந்தவனமாக்கியிருந்தாள். கொத்திக் கொண்டும், நீர்வார்த்துக்கொண்டும், சருகுகளை அள்ளிக்கொண்டும் இருப்பது தான் அவள் வேலை. பூத்துக் குலுங்கும் அவள் தோட்டத்துப் பூக்கள் ஊர்ப்பெண்டுகளின் தலைகளிலெல்லாம் சிரிக்கும். அவள் தோட்டத்துக் காய் கனிகளுக்கே தனி ருசிதான் என்று சொல்வார்கள்.

“மரம், மரமின்னு பைத்தியமா கீறாளே! காட்டுலேர்ந்து எறங்கிவந்துட்டாளா!”

“புள்ளைங்க, திக்குதெச இல்லாததுக்கு எதுமேலியாவது ஆச இருக்க வேண்டியதுதான். ஆனாலும் இப்பிடியா?”

“நம்ம வேலூர் பக்கமா யாரோ ஒருத்தரு வீட்டு மரங்களுக்கு பத்திரிக்க அடிச்சி கல்யாணம் செஞ்சிவெச்சாராமே. அப்பிடி இவுளும் செய்வாளோ எனுமோ?” ஊரார் பேசிக்கொள்வதும் உண்டு.

சாலம்மாளின் மரப்பிரியத்தை எவராலும் புலங்காண முடிந்ததில்லை. ஊரிலிருக்கும் அத்தனை மரங்களும் அவளுக்குத் தாய்மடிதான். தினமும் ஒன்றின் நிழலிலாவது செத்த நேரம் ஒக்காந்து மனக்குறைகளைத்தானே புலம்பியபடி இருப்பது வாடிக்கையாயிருந்தது சாலம்மாளுக்கு.

காற்றும் மழையுமாக இயற்கை ஒருமுறை சாடிவிட்டுப் போய்விட்ட போது வானத்தைப் பார்த்து நெட்டி முறிப்பதும், மழையைச் சபிப்பதுமாக இருந்தாள் சாலம்மாள். கொய்யாவின் இளங்கிளையையும், முருங்கையையும் பேய்க்காற்று பதம் பார்த்துவிட்டுச் சென்றிருந்தது. முறிந்த கிளைகளைச் சேர்த்து செம்மண் துணி சுற்றிவிட்டாள் சாலம்மாள். சிரித்துவிட்டுப் போனவர்களையெல்லாம் சட்டை செய்யவில்லை அவள். இப்படித்தான் போன மாதம் கிராம அபிவிருத்தித் திட்டம் ஒன்று அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தது. ஊர் முச்சையருகே கிளை விரித்திருந்த அரசமரத்தையும், ஊர் எல்லையிலிருக்கும் நாகமரத்தையும் படிப்பகம் கட்டவும், நீரேற்று அறை, தொலைக்காட்சிப் பெட்டி அறை கட்டவும் வெட்டிவிடுவது என்று தீர்மானமாகிவிட்டது. சாலம்மாளுக்கு இது தெரியவந்ததும் ஆங்காரியாகிவிட்டாள். மரத்தின்மீது முதல் வெட்டு விழுந்தபோது தலைவிரி கோலமாய் குறுக்கே மறித்து விழுந்தாள் சாலம்மாள். ஓடிவந்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது.

“டேய் நாங்க அக்கா தங்கச்சிங்க தங்கியிருக்கண்டா இதுல..எங்களெ ஓட்டப்பாக்குறவன் எவன்டா?”

“தாயே பொறுக்கணும். நீ யாரு?”

“நாகலம்மா, பூவுலம்மா, எல்லம்மாடா எங்க இருப்பிடன்டா இது. நாங்க எடுத்து அடி வெக்கிறது எல்ல நாகமரம்டா. நாங்க இருக்கிற மரங்களெ வெட்டி எங்கள ஓட்டப்பாத்தா ஊரையே துவம்சம் பண்ணிடுவம்டா”

கத்திகளும், வாள்களும் கீழே விழுந்துவிட்டன. மரங்களை வெட்டுவதில்லை என்று பதில் பெற்றவுடன் மலையேறிவிட்டது சாமி. மரங்களைக் காப்பாற்றின அன்றெல்லாம் சாலம்மாள் அரசமரத்தடியிலேயேதான் கிடந்தாள். சாலம்மாள் தனிக்கட்டை. பிள்ளையில்லாததால் புருஷன் துரத்திவிட வாழாமல் வந்து ஊரோடு தங்கிவிட்டவள். நாதி என்றிருந்த ஒரே அண்ணனும் வேலை, வாழ்க்கை என்று ஊரைவிட்டுப் போய்விட்டான். கிராமத்து வீடும் கொஞ்சம் மேட்டுநிலமும் அவள் பாடு என்றாகிவிட்டது. யாரும் கண்டுகொள்ளாத அந்த மேட்டு நிலத்தில் வலு இருக்கும்வரை விழுந்து எழுவது என்று அல்லாடி வந்தாள். சும்மாடைப் பிரித்து முகம் துடைத்துக்கொண்டாள் சாலம்மாள். நேற்றுதான் நட்ட மாதிரி இருக்கிறது. அதற்குள் வளர்ந்துவிட்டன. பூவெடுத்திருக்கும் கவைகளை உடைத்துவிட வேண்டும். காப்புக்கு விட இன்னும் கொஞ்சம் போகட்டும் என நினைத்துக்கொண்டாள். கானலின் ஊடாக சுழன்ற அவள் பார்வை கிழக்காக இருந்த வெற்றிடத்தில் நிலைகுத்தித் தவித்தது. அங்கிருந்த கானலும், வெம்மையும் அப்படியே பெயர்ந்து அவள் மனதுக்குள் வந்து இறங்கியது. பழசை நினைத்துக்கொள்ள கண்கள் மடைதிறந்துகொண்டன.

கேட்க நாதியில்லை என்பதால் ஊரிலே சாலம்மாள் என்றாளே இளக்காரந்தான். நடுத்தெரு இடைச்சி ரங்கமணிக்கும், அவள் மச்சினன்மார்களுக்கும் ரொம்பவுமே கிண்டல்தான். ஒருநாள் விறகு பொறுக்கிக்கொண்டு தன் நிலத்தின் வழியே வந்த ரங்கமணி மாவிலைகளைப் பிய்த்து கசக்குவதைப் பார்த்துவிட்டாள் சாலம்மாள். வேர் கிளம்பிவிடுமே என்று பதைபதைத்து திட்டித் தீர்த்துவிட்டாள் ரங்கமணியை. கன்றுகளை வைத்து கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. மறுநாள் சாலம்மாள் நிலத்துக்குப் போனபோது பாதி மாஞ்செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பதை பார்த்தாள். தன் கழுத்தை யாரோ அறுத்திவிட்டது போல வலித்தது வலித்தது அவளுக்கு. “ அய்யோ எம் புள்ளிங்களே! என் செல்லங்க போச்சே” வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, வீழ்ந்திருக்கும் செடிகளை ஓடிஓடி எடுத்து அழுதாள் சாலம்மாள். சாலம்மாளின் பக்கத்து நிலம் ரங்கமணியுடையது. இவளின் நிலம்மீது ஒரு கண் ரங்கமணிக்கு இருந்தே வந்தது. “சின்னதுக்குத்தான் சின்னங் கொலையறதுன்ற மாதிரி ஆயிடுச்சே. அய்யோ எங் கொறையே. வேர் கெளம்பிடுமே, ஏண்டி இப்படி செய்யறன்னதுக்கேவா இப்படி பன்னிர்றது? ஒஞ் சாதித்திமிர எஞ் செடிங்க மேலியா காட்டறது?” ஊர்ப் பஞ்சாயத்துக்குப் பிராது கொடுத்துவிட்டு அன்று முழுவதும் இழவு வீட்டுக்காரி மாதிரி இருந்தாள் சாலம்மாள். “மரங்களுக்குப் போய் இப்படி மாரடிக்கிறாளே” என்று சொல்லிக் கொண்டனர் ஊரார். பொழுது அமர கூடிய பஞ்சாயத்தில் வெட்டியது யார் எனத் தெரியாமல் பேச முடியாது என்று தீர்ப்பு வந்தது. இவரிவர்கள்தான் வெட்டியிருப்பார்கள். தாட்டிமமான, அரக்கி அரக்கி நடந்திருக்கும் காலாடித் தடங்கள் ரங்கமணியினுடையதுதான் என்று சாலம்மாள் சொன்னதை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.

அவுக்கென்றாகிவிட்டது சாலம்மாளுக்கு, மனசு ஆறாமல் மறுநாள் காலம்பரமே மாஞ்செடிகள் தந்த இயேசுக்கார அய்யா வீட்டுக்குப் போய் ஒப்பாரி வைத்தாள் சாலம்மாள்.

”நீ இப்படி அழவேண்டியதே இல்ல, வேற செடிகளுக்கு ஏற்பாடு பண்ணுவேன்” என்றதும் வேகமாய்த் தலையசைத்தாள் சாலம்மாள்.

வெட்டினவங்களுக்கு நீ தண்டென வாங்கித் தரணும் சாமீ, பாதி புள்ளைங்க களுத்த அறுத்துப்புட்டாங்களே”

“சரி நீ போயி போலீசுல சொல்லு. நான் பின்னாடியே வரேன்”

இயேசுக்கார அய்யா சொன்னதும் காவல் நிலையம் போய்விட்டாள் சாலம்மாள்.

“மரம் வெட்டின கேசெல்லாம் இங்க எடுத்துக்கறதில்ல பாட்டி” என்ற பதிலெல்லாம் அவளை அசரச் செய்யவில்லை. பகலுக்கும் காவல் நிலைய வாசலிலேயே மூக்குச் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.

“சரி உன்னெ அடிச்சுப்புட்டு, மரத்தெ வெட்டிப்புட்டாங்கன்னு ஒரு மனு எழுதினு வா”

மனுகொடுத்தபிறகு காவல் நிலையத்துக்கும், இயேசுக்கார அய்யா வீட்டுக்கும் என நடந்தபடியே இருந்தாள். வழக்கு பதிவாகி முதல் சம்மன் வந்தபோதுதான் அவளுக்கு மனது ஆறியது. “என்னாதான் காலங்கெட்டுக் கெடந்தாலும் நியாயஞ் செத்துப் போகுமா? இருங்கடி இருங்க. துன்னத் துடிக்க எஞ்செடிகளெ வெட்டந்துக்கு இன்னிக்கு இருக்குது உங்குளுக்கு”

சம்மன் வந்த நாளெல்லாம் கோர்ட்டு வாசலில் தவம் கிடந்தாள். ஆனால் அவள் நினைத்தபடியெல்லாம் எதுவுமே நடக்காமல் அவளுக்கு ஏமாற்றமாய்ப் போனது.

ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே, “தப்பு தப்புத்தான்னு சொல்லிப்புட இந்த மனுசங்களுக்கு இத்தினி தயக்கமா?” என புலம்பிக் கொண்டே அண்ணன் மகன் தம்பிதுரை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள் சாலம்மாள்.

அவள் அண்ணன் போனபிறகு அவளுக்கென்று இருந்த ஒரே ஆதரவு தம்பிதுரைதான், அவன் தூரத்தில் இருந்தாலும் மாதத்துக்கு ஒருகால் பஸ் பிடித்துப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவாள் அவள். அவனின் எல்லா பிள்ளைகளையும் மார்மேல்போட்டு சாலம்மாள் தான் வளர்த்துவிட்டாள். அதிலும் சின்னவள் சிவப்பி என்றால் சாலம்மாளுக்கு கொள்ளை ஆசை. தம்பிதுரை அரசாங்க வழக்கறிஞரைப் போய்ப் பார்க்கச் சொன்னான். மறுநாளே விசாரித்துக் கொண்டு வழக்கறிஞரிடம் போய்ச் சேர்ந்தவள், ஒப்பாரியும், முறையிடலுமாக நெளியவைத்ததுவிட்டாள் அவரை.

“ஏம்பாட்டி, தேக்கு மரத்தெ வெட்டிட்டாப்பில ஏன் அழற? மரந்தானெ பாக்கலாம் வுடு”

“அய்யா அதுங்க மரம் இல்லய்யா, என் வயித்துல பொறந்த பொறப்புங்க மாதிரி, அந்தக் கொலகாரப் பாவிகளுக்கு நீதான் தீர்ப்புச் சொல்லணும்”

வாய்தாவுக்கு வாய்தா சாலம்மாளின் ஒப்பாரி அதிகமாகிக் கொண்டே போனது. இனிமேல் அலுவலகம் பக்கம் வந்தால் கேசை தோற்கடித்துவிடுவேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் வழக்கறிஞர்.

பிராது கொடுத்து மறுநாளே ரங்கமணியின் கூட்டாளிகளுக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று நினைத்தவளுக்கு இன்னும் எதுவுமே நடக்காதது அதிர்ச்சியாய் இருந்தது. நடையாய் நடந்து யார் யாரையோ பார்த்துவிட்டாள். எத்தனையோ வாய்தாக்களுக்கும் போய்விட்டாள். வேறு செடிகளுக்காக இயேசுக்கார அய்யாவை பலமுறை சென்று பார்த்ததிலும் ஒன்றும் நடக்கவில்லை. சாலம்மாள் ஓய்ந்துவிட்டாள்.

செங்கம்புதரிலிருந்து காடை ஒன்று ‘புர்’ என பறந்து போனதும்தான் சாலம்மாளுக்கு நினைவு திரும்பியது. வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. காற்றில் சலசலக்கும் மாஞ்செடிகளைப் பார்த்தபோது அவளுக்கு ஆயாசமெல்லாம் மறைந்துபோனது. மிச்சமிருக்கும் மரங்களைப் பராமரிப்பதும், தண்ணீர் விடுவதும், நெட்டி முறிப்பதும், அவைகளுடன் பேசுவதுமாக இத்தனை நாட்களை கழித்துவிட்டாள். வயல் வரப்புகளிலும், தண்ணீர் தொரவுகளிலும் ரங்கமணியைப் பார்த்துக்கொள்ளும்படி நேர்ந்துவிடும்போதெல்லாம் அவளின் ஏளனச் சிரிப்பில் சருகுகள் மிதிபடுவதுபோல் ஆகிவிடும் சாலம்மாளுக்கு. அதைத் தவிர்க்கவும் இந்த மோட்டாங்காடே கதியென்றும் ஆகிவிட்டது அவளுக்கு. அடுத்த வருடம் மகசூலுக்கு விடும்படி மரங்கள் ஆகிவிட்டிருப்பது சாலம்மாளுக்கு சந்தோஷத்தைத் தந்தது. நாளைக்குத்தான் கடைசி வாய்தா. தீர்ப்பு வந்துவிடும் என்று வக்கீல் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்து மேலும் சந்தோஷம் தந்தது. முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு குடத்தைத் தூக்கியபடி, வீட்டுக்குப் போகும் சரிவில் இறங்கினாள் சாலம்மாள்.

கோர்ட்டு வாசலில் பூவெடுத்துக் குலுங்கும் மாமரத்தின் கிழே சாலம்மாள் உட்கார்ந்திருந்தாள். வெய்யில், குட்டிகளைக் கவ்வும் பூனையென பாரித்திருந்தது. சாலம்மாளின் தேகக் கூட்டினுள் இருந்த இதயம் சிறு பிராயத்துப் பிள்ளையென ஓடியாடிக்கொண்டிருந்தது. மாமரத்தின் குதியாட்டத்தைக் கண்டதும் அடிவயிற்றில் நீர்கழித்துப் புரள்வது போல அவளுள் பொருமல் எழுந்தது. அந்த மரத்தை அவள் கைகள் வாஞ்சையுடன் தடவி நெகிழ்ந்தன. கண்களில் நீர் ஊற்றெடுத்து சொட்டிவிடத் திரண்டு தயங்கியது.

கோர்ட்டுக் கட்டிடம், மனிதர்களின் புழக்கத்துடன் களை கட்டியிருந்தது. வக்கீல்களும், காவலர்களும், மக்களும் ஓடியாடிக் கொண்டிருந்தனர். ரங்கமணியும் அவள் மச்சினன்மார்களும் தூரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததை சாலம்மாள் பார்த்தாள். அவர்கள் பேசிச் சிரிப்பது தன்னைப் பற்றித்தான் என நினைத்துக்கொண்டாள் சாலம்மாள். கோபம் அவளின் வறண்ட திரேகத்துள் பரவியது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தன்னுடைய நடுவயது முதல் இந்த நாள் வரையிலாக கோர்ட்டு வாசலிலேயே தவம் கிடந்துவிட்டது போல் எண்ணி மலைத்துக் கொண்டாள். சாலம்மாளுக்கு என்று வானத்திலிருந்து கூப்பிடும் குரல் போல டவாலியின் அழைப்பு அப்போது கேட்டது. உள்ளே ஓடினாள் சாலம்மாள். நீதிபதி பேசினார். “மரங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வெட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவை புதிதாக நடப்பட்டிருந்த மாஞ்செடிகள் என்பதனால் வேர் பிடிக்காமலும் செத்திருக்கலாம்”.

அதைக் கேட்டதும் சாலம்மாளிடம் பேச்சில்லை. அவளின் குரல்வளை உள்ளிழுத்து கேவலின் அவல ஒலி கேட்டது.

“அதுங்க செடிங்க இல்லய்யா. எம்புள்ளைங்க. இந்த கொட்டி* நம்பியிருந்தது அதுங்களைத்தான்யா”

பைத்தியமாய் பிதற்றியபடி கோர்ட்டு வாசல் மாமரத்தின் அடியிலேயே இருந்தாள். அவமானமும், கோபமும், துக்கமுமாக இருந்தது அவளுக்கு. அந்தச் செடிகளுக்காக எத்தனை நடை, எத்தனை படியேறல், எத்தனை முறையிடல்… வயிறு பற்றிக் கொண்டது.

ஒருபாவமும் அறியாத பாலகனுங்க. என்ன பண்ணுச்சிங்க அதுங்களெ வெட்ட? அதுங்களுக்கு வாயிருந்தா என்னா பேசியிருக்குங்க. வீட்டுக்கு வந்தும் கூட சோறு பொங்காமல் நடுராத்திரி வரை ஒப்பாரி வைத்து சன்னமாகப் பாடி அழுதுகொண்டிருந்தாள்.

காலையில் எழுந்த கையோடு அடுக்களைப் பானைகளைத் தூர எடுத்து வைத்துவிட்டு பிரிமனைகளை நகர்த்தினாள். அடியில் புதைந்திருக்கும் உண்டியல்களைத் தோண்டி எடுத்தாள். ஐந்து உண்டியல்களும் நிரம்பியும் நிரம்பாமலும் இருந்தது. எல்லாவற்றையும் போட்டு உடைத்து காசுகளைச் சேர்த்தால் சாலம்மாள். மூட்டையாக முந்தானையில் முடிந்துகொண்டபோது பாரத்தினால் அவள் உடலே கீழ்நோக்கி குஞ்சியது. நேராய் பக்கத்து ஊர்ப் பண்ணைக்கு விறுவிறுவென்று நடந்தாள். மாங்கன்றுகளுக்கு சொல்லிவிட்டு தன் நிலத்திற்குத் திரும்பினாள்.

வெய்யில் சுள்ளென்று உறைப்பதற்குள் பத்துப் பதினைந்து குழிகளை தோண்டிவிட்டாள் அவள். மண் ஆவியடித்து வாசம் கிளம்பியது. திடீரென சாலம்மாளுக்கு பேத்தி சிவப்பியின் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு வருசமும் கோடை விடுமுறையில் சிவப்பி சாலம்மாவுடன் வந்து இருந்து போவாள். கூலி நாழி என்று வருசமெல்லாம் சேர்த்த பணத்தில் சிவப்பி போகும்போது, துணிமணி என்று ஆனதை செய்து அனுப்புவாள் சாலம்மாள். இந்த வருசம் உண்டியல்களை உடைத்து மாஞ்செடிகளுக்கு சொல்லிவிட்டது சாலம்மாளுக்கு மனம் பாரமாய் இருந்தது.

“ராசாத்தி புள்ளெ வந்து ஏமாறுமே”

ஆற்றாமையோடு தோப்பைப் பார்த்தாள் சாலம்மாள். சிலுசிலுவென்று காற்றுக்கு துளிர்கள் ஆடிக்கொண்டிருந்தன.

“போட்டும், இந்த ஒரு வருசம். பொறகால எம்புள்ளிங்க நீங்களே பாத்துகுக மாட்டீங்களா ராசாத்தியெ”

மாமரங்கள் காற்றுக்கு மேலும் குலுங்கின. அவள் பேச்சை கேட்டபடியே குழிந்து கொண்டிருந்தது மண்.

* கொட்டி – மலடி

நன்றி – பண்புடன் குழுமம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *