கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 12,355 
 
 

பனி அதிகமாக கொட்டிக் கொண்டிருந்த இலையுதிர்கால நாளொன்றின் முன்னிரவில், பாரிஸ் நகரத்தின்Rue De Ponthieu , 08. Champs Elysées பகுதியில் இருக்கும் Beauchamps விடுதியில், எதிர்பாராத விதமாக ஒரு போர்த்துக்கல் நாட்டுக்காரரைச் சந்தித்தான் தேவன். அந்தச் சந்திப்பை இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பழுப்பு வெள்ளையருக்கும் ஒரு ஆசியக் கறுப்பனுக்குமிடையிலான சந்திப்பு. ஒரு அகதிக்கும் ஒரு விருந்தாளிக்குமிடையிலான சந்திப்பு அது. எதிர்பாராத சந்திப்பு.

அவன் வேலையை முடித்து தங்குமிடத்துக்கு புறப்பட ஆயத்தமாகியபோது வரவேற்புப் பகுதியில் யாரோ ஒருவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். முதலில் அவன் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை. ஒரு கணம்தான். மின்னல்போல யாரோ ஒருவர் தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றியது. கூர்ந்து பார்த்தான். ஒரு வெள்ளையர் சிரித்துக் கொண்டிருந்தார். அறிமுகச் சிரிப்பு. சிநேகத் தொனி. அமைதி நிரம்பிய ஆழமான முகம். விரிந்த கண்கள். பருத்த மூக்கு. ஆனால், உயரத்துக்கு ஏற்ற உடலில்லை. மெல்லிய தோற்றம். ஆனால் ஒல்லி அல்ல. யாராக இருக்கும்? வாடிக்கையாளரோ, அல்லது எங்காவது வேலை செய்யும்போது அறிமுகமானவரா என்று ஞாபகத்தில் தேடினான். ம்ஹ_ம். பிடிபடவேயில்லை. எத்தனை இடத்தில் வேலை செய்திருக்கிறான். அந்த இடங்களில் எல்லாம் எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறான். ஒன்றா, இரண்டா நினைவில் வைத்துக் கொள்வதற்கு? எல்லோரையும் அப்படி நினைவில் வைத்திருக்கத்தான் முடியுமா? இதென்ன ஊரா, மணிக் கணக்காகக் கதைத்து மனதில் ஒவ்வொருவரும் கதிரை போட்டு உட்கார்ந்து கொள்வதற்கு?

அந்த வெள்ளையரே அவனுடன் பேச்சைத் தொடங்கினார். “நீங்கள், சிறிலங்காவைச் சேர்ந்தவரல்வா?“

பொதுவாக வெள்ளையர்கள் அறிமுகமில்லாத வெளியாட்களிடம் தேவையில்லாமல் பேசுவது குறைவு. இப்போது அந்த வெள்ளையர் அவனை விசாரித்தபோது அவனுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. அவன், “ஆம்” என்று தோள்களைக் குலுக்கித் தலையை அசைத்தான். அப்படி தான் தோள்களைக் குலுக்கியது செயற்கையானதோ என்று உடனே பட்டது. அது தேவையற்றது என்றும் தோன்றியது. அதைவிடத் தேவையில்லாதது, தான் சிறிலங்கன் என்று சம்மதித்தது. வேண்டுமானால் இலங்கையன் என்னறு சொல்லியிருக்கலாம்.

“நான் போர்த்துக்கல் நாட்டுக்காரன். ஆனால் அண்மையில்தான் சிறிலங்காவில் இருந்து வந்தேன்” என்றார், அவர். அவன் ஆச்சரியத்தால் தடுமாறினான். இலங்கையிலிருந்து இப்போது வரும் ஆட்கள் குறைவு. திருமணத்துக்கென்று யாராவது மணப்பெண்களாக வந்தால் சரி. அப்படி அங்கேயிருந்து வந்தாலும் அவர்களை சந்திப்பது அபூர்வம். எங்காவது கல்யாண வீட்டில் பார்க்கலாம். அல்லது யாருடையவாவது பிறந்த நாட்கொண்டாட்டங்களில் காணலாம். அதுவும் அரிது. அவன் கொண்டாட்டங்களுக்கு அந்த நேரங்களில் போவதில்லை. ‘கார்ட்’ கிடைக்காதவனைச் சாதி குறைஞ்சவனைப் பார்க்கிறமாதிரிப் பார்;ப்பார்கள். அதுவும் இவ்வளவு நாளாக ‘கார்ட்’ எடுக்கமாட்டாமல் இருக்கிறதைக் கேள்விப்பட்டால் ஏதோ ஏலாதவாளி எண்டு நினைத்துக் கொண்டு ஆயிரம் கதைகள், ஆலோசனைகள், விசாரணைகள் எல்லாம் நடக்கும். அதனால், எதற்காக இந்த வம்பெல்லாம் என்று ஒதுங்கிக் கொள்வான். இப்படி ஒதுங்கிக் கொண்டால் ஊரிலிருந்து யார் வந்தார்கள், நாட்டிலிருந்து எப்போது வந்தார்கள் என்றெல்லாம் எப்படித்தெரியும்? அதைவிட, யுத்தம் தொடங்கிய பிறகு ஊரிலிருந்து யாரும் வந்ததாகவும் இல்லை.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது ஊரில் கீரிமலைக்குக் குளிக்கப் போறது மாதிரி, அல்லது கசூரினா பீச்சுக்குப் போகிறதைப்போல சனங்கள் பிரான்ஸிலிருந்து நாட்டுக்குப் போய்வந்தார்கள். ஊரிலிருந்து அம்மா பயித்தம் பணியாரம் தொடக்கம், மிளகாய்த்தூள், அப்பளம், பருத்தித்துறை வடை, நல்லெண்ணைப் போத்தல், புழுக்கொடியல்மா என்று எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள். அவனுக்குத்தான் ஊருக்குப் போகும் பாக்கியம் கிடைக்கவில்லையே. மறுபடியும் யுத்தம் தொடங்கிய பிறகு ஊர்ப்புதினத்தை அறியவே கஸ்ரமாகி விட்டது. என்னதான் நூறு பத்திரிகைகள் நாட்டுப் புதினத்தை எழுதிக் குவித்தாலும் அங்கேயிருந்து வருகிறவர்கள் சொல்லும் கதைகளைப் போல வருமா? இப்போது இந்தா வந்திருக்கிறான் இந்தப் பாவி. கொடுத்து வைத்த பிறவி. சொந்த நாட்டுக்கு அந்த நாட்டுக்காரன் போக முடியாது. ஆனால் யாரோ ஒரு நாட்டுக்காரன் அங்கே போய் வந்திருக்கிறான். இப்போது நினைத்தாலும் போகலாம் வரலாம். யார்கேட்கப்போகிறார்கள். வெள்ளையர்கள் அங்கே போனால் இன்னும் தனி மரியாதை அங்கேயுண்டு.

என்னதான் சொன்னாலும் இந்த நிலைமை இன்னும் மாறவில்லை. தமிழரும் சிங்களவரும் அடிபடுவார்கள். ஆனால் இரண்டு பேரும் வெள்ளையர்களை மதித்து அவர்களுக்கு கீழே பண்பாக அமைதியோடு நடந்து கொள்வார்கள். அப்படி மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருப்பார் இவரும் என்று நினைத்தான் தேவன். எப்படியோ இலங்கையிலிருந்து அண்மையில் வந்தவர்களில் கடைசியாகப் பார்க்கும் ஆள் அல்லவா. அவன் “அப்படியா, மிகச் சந்தோசம். எப்போது அங்கிருந்து வந்தீர்கள்” என்று ஆவலோடு கேட்டான்.

“பத்து நாட்கள். மறுபடியும் இரண்டு மாதங்களில் அங்கே திரும்பிச் செல்கிறேன்” என்றார் அவர். அவனால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஆனால், அவர் சொல்வது உண்மை. நம்பித்தான் ஆகவேண்டும். “மன்னிக்க வேண்டும். உங்களுடன் பேசலாமா? உங்களுக்கு ஏதும் அவசரமில்லையா?” என்று அவர் மிகத் தயவாகக் கேட்டார். அவருடைய பிரெஞ்சு உச்சரிப்பு அவர் பிரெஞ்சுக்காரர் இல்லை என்பதைக் காட்டியது. கண்கள் மிக அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தன. “ஓ.. தாராளமாக. எனக்கு நிறையச் சந்தோசம். அவசரம் ஏதமில்லை” என்றான் அவன். அவன் எதிர்பார்க்காத சந்திப்பு. அதுவும் வலிய வந்திருக்கிறது. நாட்டுப் புதினம், ஊர்ப்புதினங்களை அறியலாம். அதைவிட ஆள், இன்னும் இரண்டு மாதங்களில் திரும்பவும் இலங்கைக்குப் போகப்போவதாகச் சொல்கிறார். இதை விடலாமா? கையில் அல்லவா வந்து குந்தியிருக்கிறது அதிர்ஸ்ரம்.

“ஆட்சேபனை இல்லை என்றால் வாருங்கள், என்னுடைய அறையில் இருந்து பேசலாம்” அவனை அழைத்துக் கொண்டு அவர் மேலே சென்றார்.

02

தேவன், ஆறு ஆண்டுகள் நிரம்பிய பாரிஸ் வாசி. ஆனால் அகதி. இன்னும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று நிம்மதியோடு தங்குவதற்கு ‘கார்ட்’ கிடைக்கவில்லை. அகதிக் ‘கார்ட்’ கிடைத்தாலே பாதிக்கிணற்றைத் தாண்டிய மாதிரி. ஆனால் அதற்கே வழியில்லை. அதற்காக எத்தனையோ ஏற்பாடுகளைச் செய்து கொண்டேயிருக்கிறான். எத்தனை ஆட்களைப் பிடித்திருக்கிறான். எவ்வளவு கெஞ்சுதல்கள். அவர்கள் இன்னும் ஒன்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது அவர்கள் அவனை ஏற்றுக் கொள்ள இன்னும் தயாராகவில்லை. அதற்காக அவன் சும்மா இருந்து விட முடியுமா? சும்மா இருந்தால் ஊரில் பட்ட கடன் தீருமா? ஊரிலிருந்து ஆயிரம் கோரிக்கைகளோடு வரும் தொலைபேசி அழைப்புகள் நின்று விடுமா? அந்த அழைப்புகளில் வரும் காசு என்று குரல்கள் இல்லாமற் போகுமா? அவன் விக்கிரமாதித்தனின் வம்சம். தோற்கவே முடியாது. வேதாளம் தோளில் இருந்தாலென்ன? மடியில் இருந்தாலென்ன? ‘கார்ட்’ கிடைக்கவில்லை என்பதற்காக பிரெஞ்சுக்காரர்ளோடு கோவித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி விடுவதற்காகவா இங்கே வந்தான்?

பாரிஸ_க்கு வருவதற்கிடையில் பட்டபாட்டை விடவும் இப்போது படும் பாடுகள் ஒன்றும் பெரியதில்லை. அதைவிட எத்தனை பேருகக்குத் தண்ணிகாட்டி, எத்தனை தடைகளையெல்லாம் தாண்டி, எத்தைனயோ நாட்டுக்காரரை ஏய்த்து வந்த அவனுக்கு இப்போது மிஞ்சியிருக்கிறது ஒரு ‘கார்ட்’ விவகாரம் மட்டுமே. ஆனால் அது ஆறு ஆண்டுகளாக மிஞ்சியே இருக்கிறது. ஒரு முடிவையும் தராமல் ஏய்த்துக் கொண்டேயிருக்கிறது. அவனுக்குப் பிறகு வந்தவர்கள் ‘கார்ட்’ எடுத்து, பிறகு சிற்றிஸனையும் பெற்று விட்டார்கள். அவனுடைய சனியன் இன்னும் நீங்கவேயில்லை. அம்மாதான் எவ்வளவு அர்ச்சனைகளை ஊரில் செய்து விட்டாள். கிருஸ்ணன் கோவில் அர்ச்சனையை விட சிவன் கோவிலில் செய்கிற அர்ச்சனைதான் சனீஸ்வரனுக்குப் பொருத்தம் என்று யாரோ சொன்னார்கள். அம்மா சிவன் கோவில்களாகவே திரிந்து அதையும் நிறைவேற்றினாள். ம்ஹ_ம், பலனில்லை. அவனுடைய கிரகபலனில், இப்போது ராகு நன்றாக இல்லை என்று யாரோ ஒரு சாத்திரி சொன்னான். சனீஸ்வரன் முடிந்து இப்போது ராகுவுக்காக என்று அம்மா நடந்தாள். சனி, ராகு, கேது, செவ்வாய், வியாழன் என்று யாருடைய காலைப் பிடித்தாலும் காரியம் நிறைவேறவில்லை. எவருடைய உச்சியில் பாலை வார்த்தாலும் எதுவும் ஆகுவதாக இல்லை. அதற்காக சும்மா இருந்து விட முடியுமா? கூரையைப் பியத்துக் கொண்டு எந்தத் தெய்வமும் எதையும் கொடுக்காது என்று அவனுக்கு நன்றநாகத் தெரியும். இப்படி நாயாய் அலைகிறபோதே கருணையைக் காட்டவோ கண்ணைத் திறக்கவோ தயாராக இல்லாத போது அதெல்லாம் நடக்குமா?

பாரிஸில் அவன் எப்படியோ தண்ணி காட்டிக் கொண்டு, ஒரு ரெஸ்ரோரண்டில் கோழி வெட்டினான். பிறகு அங்கே நிற்க முடியாது என்றபோது பதினைந்து நாட் சம்பளத்தையும் விட்டு விட்டு கடையொன்றில் வேலை பார்த்தான். அங்கே சம்பளம் குறைவு. பதிலாக கோழி மணமில்லை. தினமும் செய்கின்ற கொலை பாதகமும் இல்லை. அதைவிடக் கொஞ்சம் மரியாதையாக நடத்தினான் அந்த வெள்ளையன். வெ;ள்ளையன் என்று சொல்வதை அவன் எப்போதும் விரும்புவதில்லை. அது இனவாதச் சொல் என்று அவனுடைய எண்ணம். சிங்களவன், தமிழன் என்று சொல்லி பிறந்த ஊரையும் சொந்த நாட்டையும் விட்டு வந்ததைப்போல இங்கேயும் வெள்ளை, வெள்ளையன் என்றெல்லாம் சொல்லி இனவாதத்தைப் பரப்ப அவன் விரும்பவில்லை. தங்களைக் கண்டு வெள்ளைகள் முகஞ்சுழிக்கிறார்கள் என்று பலர் சொல்லியிருக்pறார்கள். சிலருக்கு இது துக்கம். சிலருக்கு இது கோபம். அவனுக்கோ இது சிரிப்புத் தரும் சங்கதி. அவர்கள் நம்மைப் பார்த்து முகம் சுழிப்பார்கள்தானே. தங்களுடைய இடத்தில் பங்கு போட யார் வந்தாலும் எவனாவது அதை கண்ணை மூடிக் கொண்டு வரவேற்பானா? தன்னுடைய வசதிகளை, வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க யாருக்குச் சம்மதம்? சொந்த நாட்டிலேயே தரவேண்டிய பங்கைத் தராமல் ஓட ஓட விரட்டியடிக்கிறார்கள். இங்கே, யாருடையதோ நாட்டில் என்ன பூச்செண்டா தந்து வரவேற்பார்கள்? எப்படி இதையெல்லாம் நம் ஆட்களுக்குச் சொல்லி விளங்கப்படுத்த முடியும்? வந்தோம். பேசாமல் பார்க்க வேண்டியதைப் பார்த்துக் கொண்டு போகிறதை விட்டுவிட்டு, இப்படி அவர்களோடு சட்டம், நியாயம் குற்றச்சாட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டால் முறைக்காமல் என்ன விருந்தா வைப்பார்கள்? இந்த மண்ணாங்கட்டிக் கதைகளால்தான், தனக்கு இன்னும் ‘கார்ட்’ கிடைக்கவில்லை என்று அவன் நினைத்தான். தன்னைப்போல ஆட்கள் பாதிக்கப்படுகிறதைப் பற்றி யாருக்குக் கவலையிருக்கிறது? இதில் இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், அவன் இப்படி யாரையும் இனம், மதம் என்று விரோதமாகப் பார்க்கிறதேயில்லை. அவனிடம் அந்தப் போதைகளும் இல்லை. ஆனால் அவனுக்குத்தான் எல்லாக் கொடுமைகளும் நடக்கின்றன. அவன்தான் எல்லாவற்றிலும் பாதிக்கப்படுகிறான். ‘வெள்ளையன், வெள்ளை. வெள்ளையள், அவன் இவன் என்று கதைக்கிறவர்கள் எல்லாம் எப்படியோ காரியத்தைப் பார்த்துக் கொண்டு போகிறார்கள். வெற்றி வாய்ப்புகள் எல்லாம் அவர்களை நோக்கியே குவிந்து கொண்டிருக்கின்றன.

கொழும்பில் நின்றபோதும் அவனையே பொலிஸ் கூடுதலான தடவைகள் பிடித்தது. ஒவ்வொரு முறையும் காசு இறைத்துத்தான் வெளியே வந்தான். காசை விட அதிகமாக கண்ணீரை இறைத்தான். ஆனால் காசுக்கிருக்கிற மரியாதையும் மதிப்பும் கண்ணீருக்கு வருமா? யாரும் அவனுடைய கண்ணீரைக் கண்டு கொள்ளவேயில்லை. அவனுடைய கண்ணீர், அவனுடைய குடும்பத்திலும் ஊற்றெடுத்தது. தண்ணீர்ப்பஞ்சமான அந்தக் கோடைகாலத்திலும் கண்ணீருக்கு அங்கே குறைவிருக்கவில்லை. அங்கே அம்மா கண்ணீரோடுதான் சோற்றைச் உண்டாள். அப்படியில்லை என்றால் இன்னும் கொழும்பில் தான் அவன் நின்றிருக்க வேண்டும். அப்படிச் சொல்வதையும் விட அவன் எங்காவது ஒரு சிங்களச் சிறையில் அடைபட்டிருக்க வேண்டும் என்பதே சரி;. எங்காவது சண்டையில் படையினர் கூடுதலாக அடிபட்;டால் அவனும் அடிவாங்கியிருந்திருக்க வேண்டும். எங்காவது குண்டு வெடித்தாலும் அதற்கு அவன் தண்டனையாக எதையாவது வாங்கித்தான் ஆக வேண்டியிருந்திருக்கும். அவன் இதெல்லாவற்றுக்கும் சம்மந்தமேயில்லை என்றாலும் யார் அதையெல்லாம் கேட்கப் போகிறார்கள்?

கொழும்பை விட்டு பிரான்சுக்கு வெளிக்கிட்ட அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் சந்தித்த நிகழ்ச்சிகளை எல்லாம் கணக்கில் வைத்தால் அது பெரும்பாயிரமாகவோ காப்பியமாகவோ இருக்கும். பாங்கொக்கொக்கில் பொலிஸ் இவனையே மோந்து பிடித்ததைப்போல கழுத்தில் பிடித்தது. அந்தப் பயணத்தில் அவனோடு பன்னிரண்டு பேர் இருந்தார்கள். அந்தப் பன்னிரண்டு பேரிலும் அவனுக்குத்தான் சனியன் தலைமாட்டடடில் நின்று கையைத்தட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கைதின் போது அடியைத் தந்ததோடு பாங்கொக் பொலிஸ்காரர் விட்டு விட்டார்கள். நல்ல வேளையாகக் காசெல்லாம் கேட்கவில்லை. அடியென்றால் ஏதோ சாட்டுப் போக்குக்கு அடித்ததைப்போல அல்ல. ஒரு பரம விரோதியை நடத்துவதைப்போலவே அவர்கள் அடித்தார்கள். அது உலகத்தில் இருக்கும் எந்தப் பொலிஸ்காரனும் அடிக்க முடியாத அடி. இவ்வளவுக்கும் அவனை எதற்காகப் பிடித்தார்கள். எதற்காக அடித்தார்கள் என்றே அவனுக்கு இதுவரையில் தெரியாது. அவனோ அவனுடைய பரம்பரையைச் சேர்ந்த எவருமோ எந்த ஒரு பாங்கொக்காரருக்கும் மனதாலும் தவறிழைத்ததாக இல்லை. ஒரு தடவைகூட அவர்களைப் பகிடியோ மரியாதைக்குறைவாகப் பேசியதோ கூடக் கிடையாது.

பிடிக்கும்போது என்னவோ கேட்டார்கள், அல்லது எதையோ சொன்னார்கள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதையெல்லாம் அறியக்கூடியமாதிரி அவன் என்ன உலக ஞானமெல்லாம் தெரிந்த ஆளா. நாலு ஆறு பாஷைதான் தெரியுமா? ஊரில் சாதாரண ஆங்கிலத்தையே படிக்க முடியாமற் திண்டாடியவன் அவன். அவனுக்கு ஆங்கிலத்தைப் படிப்பிப்பதற்காக அவனுடைய ஐயாவிலிருந்து மாசிலாமணி மாஸ்ரர் வரையில் எவ்வளவு பாடுபட்டார்கள். பத்தாம் வகுப்பிற்கிடையில் பதினாறு பேர் அவனுடைய ஆங்கிலத்துக்ககாகவே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ராசையா மாமா கொழும்பில் சிங்களவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு எழுபத்தேழுக் கலவரத்தில் ஊருக்கு வந்தபோது ஆங்கிலத்தோடு சிங்களமும் படிக்க வாய்ச்சிருக்கு என்று ஐயா நினைத்துக்கொண்டு, அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆங்கிலத்தை மண்டைக்குள் ஏற்றுவதற்கே பெரும்பாடாக இருந்தபோது இப்ப, இன்னொரு பாரமாய் சிங்களத்தையும் அதற்குள் தள்ளிவிடலாம் என்று முனைந்தார் ஐயா. ‘தனியே ராசையா மாமாவிடம் படிக்க முடியாது, யாராவது துணைக்கிருந்தாற்தான் சேர்ந்து படிக்கலாம்’ என்று அம்மாவை ஒரு மாதிரி சாதகப் படுத்தி அந்த வகுப்பில் இன்னும் ஐந்து பேராக, யோகன், அப்பன், கணேசலிங்கம், மனோ ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு கும்மாளம் போட்டான். அம்மா இதை அறிந்து ஒரு நாள் பேசியபோது ‘சிங்களம், இங்கிலிஸ் எல்லாம் தெரிஞ்சதால் என்ன, கொழும்பில சிங்களவர்களிடம் அடிவாங்காமலா ராசையா மாமா வந்தார்?’ என்று கேட்டு அம்மாவை மடக்கினான். தன்னுடைய அண்ணனை இப்படி கொஞ்சம் இளக்காரமாகச் சொன்னது அம்மாவுக்கு சற்று மன வருத்தமாக இருந்தாலும் அதை மறுத்துப் பேச அவளால் முடியவில்லை. அம்மாவை மடக்கி விட்டோம் என்ற பெருமையோடு அப்போது தப்பியிருந்தான்.

ஆனால் இதையெல்லாம் கொழும்பில் நின்றபோதே அவன் உணரத்தொடங்கினான். சிங்களம் தெரிந்திருந்தால் அவன் எவ்வளவு விளையாட்டுக் காட்டியிருப்பான். பொலிஸ்காரருக்குச் சுத்தியிருக்கலாம். சிங்களப் பெட்டையளுடள் நட்புக் கொண்டாடியிருக்கலாம். சிலரை மடக்கியிருக்கலாம். ஆகக் குறைஞ்சது அவர்களோட எதையாவது பேசிப் பொழுதைப் போக்கியிருக்கலாம். அவர்களில் பலர் மிக நல்லவார்கள் என்று அவனே பார்த்திருக்கிறான். உண்மையாகவே பழகினால் நன்றாக உதவுவார்கள். அதைக்கூட அவர்களிடம் சொல்வதற்கு பாஷை தெரியாமற்போய்விட்டதே. சிங்களம் தெரிந்த பெடியள் அப்படி அவர்களை மடக்கிக் காரியம் பார்ப்பார்கள். பொலிஸ_க்கும் எதையோ சொல்லித் தப்புவார்கள். அப்போது தான் மட்டும் எதுவும் செய்ய முடியாமல் திணறித் திண்டாடுவதை கண்ணீரோடு உணர்ந்தான். ஆனால் என்ன செய்ய முடியும்? என்ன நாசமோ தெரியாது இந்தக் கண்ணீர் மட்டும் தொண்டையை அடைத்துக் கொண்டு எங்கிருந்தோ வந்து விடும். யாரும் மதிக்காத கண்ணீர். அது உண்மையில் தொண்டைக்குள்ளிருந்தா வருகிறது என்று கூட ஒரு தடவை யோசித்தான். இல்லையென்றால் எப்படி துக்கம் வரும்போது தொண்டை அடைத்து பேச்சே வரமாட்டேன் என்கிறது?

சொந்த நாட்டில் ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் படிக்கமுடியாமல் விட்;டவனுக்கு பாங்கொக் பொலிஸின் பாஷையா தெரியப்போகிறது? ஆனால் எல்லாப் பொலிஸ_க்கும் தெரிந்த உலகப்பொதுப் பாஷை ஒன்றிருக்கிறது அல்லவா. அந்தப் பாஷையினால் அவர்கள் பேசினார்கள். அவன் அதைச் செவிகளுக்குப் பதிலாக தன்னுடலால் வாங்கினான். அடியை வாங்கிக் கொண்டு வந்தபோது ஏஜென்ஸிக்காரன் சொன்னான் “அவங்கள் இந்த அளவில உன்னை விட்டிருக்கிறாங்கள். பாங்கொக் பொலிஸைப் பற்றி உனக்குத் தெரியேல்லை. பிடிச்சால் ஆளை எலும்பும் தோலும் வேறாக்கிப் போடுவாங்கள்” என்று. எதற்காக அவர்கள் அப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதைத் தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?

இப்படி வழிநெடுகப் பிரச்சினைப்பட்டு, ஆயிரந் துன்பப் பட்டு, ஏனடா ஊரை விட்டுக் கிளம்பினோம் என்ற ஞானம் பிறந்தவேளையில் எப்படியோ பாரிஸ் வந்து சேர்ந்தான். அதை விடவா இந்தக் ‘கார்ட்’ பெரிய சமாச்சாரம். ‘பார்க்கலாம், என்ன வாய்க்காமலா போகும்’ என்ற நம்பிக்கையோடு இன்னும் எத்தனையோ வேலைகளுக்குப் போக ஆயத்தமாக இருக்கிறான். சரி, எங்கே விட்டேன், அவன் வேலை செய்த கதையில் அல்லவா.

ஆனாலும் அங்கே- கடையில்- ஆறு மாதம் சுமாராகப் போனது. அப்படியே போனால் பரவாயில்லை என்று இருந்தபோது அந்தக் கடைக்காரன் ஏதோ பிரச்சினையில் சிக்கினான் என்று கடையைப் பூட்டினார்கள். கேட்டபோது பங்குப் பிரச்சினையென்றார்கள். வெள்ளைக்காரர்களும் இந்தமாதிரி சிக்கல்களில் எல்லாம் சம்மந்தப் படுவார்கள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. நம்பினால் என்ன விட்டால் என்ன, அவனுடைய வேலை போய்விட்டது. பிறகு வேறு வேலை. இப்படியே எங்கெல்லாமோ மாறிமாறி இப்போது இங்கே வந்து நிற்கிறான்.

03

போர்த்துக்கல்காரர் பாரிஸ_க்கு ஒரு நண்பரிடம் வந்திருக்கிறார். வந்தவர் அப்படியே அங்கே ஒரு வாரம் தங்கியிருக்கிறார்;. அப்போதே அந்தச் சந்திப்பு நடந்தது. ஆனால், அவர்கள் அப்படி அகதியாகவும் விருந்தாளியாகவும் சந்திக்கவில்லை.

அந்த அறையில் அவன் வேறொரு நிலையில் நுழைந்தான். இதற்கு முன் அங்கே ஒரு பணியாளாகவே நுழைந்திருக்கிறான். பெரிய, விசாலமான அந்த அறையில், அவருக்கு எதிரில், மிக ஆயாசமாக உட்கார்ந்தான். அங்கே அவன் இப்போது விருந்தாளியாகவோ அல்லது விருந்தாளியின் நண்பராகவோ இருந்தான். அது அவனுக்கே வியப்பளித்தது. இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? எதுவோ நடக்கப்போகிறது? நல்லகாலம் ஏதாவது பிறக்கப் போகிறதோ என்று கூட ஒரு எண்ணம் வந்தது.

அவர் சிரித்தார். நட்பான சிரிப்பு. ஈரம் மிகுந்திருந்தது அதில். அனுதாபமா என்றொரு பொறி தட்டியது. ஈழத்தமிழர் என்றால், அதுவும் இலங்கைக்குப் போய், அங்கே நிலைமையைப் பார்த்து வந்தபடியால், தன்னைப் பார்த்ததும் ஏதோ இரக்கம் தோன்றியிருக்கக் கூடுமோ. அப்படியிருக்காது, இவரைப் பார்த்தால் கண்ணியமானவரைப் போல தெரிகிறார். தவிர, அப்படியெல்லாம் இரக்கப்படவேண்டிய தேவை தன்னைப் பொறுத்து என்ன இருக்கு? “ஓகே, ப்ளீஸ், உங்கள் பெயரை அறியலாமா?”

“தேவன்”

அவர் தலையை ஆட்டினார். அவரிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்கவேண்டும் போல மனம் துடித்தது. அவர் இலங்கையில் எங்கே இருந்தார்? அங்கே எதற்காக இருந்தார்? அநேகமாக ஏதாவது ஒரு சர்வதேசத் தொண்டு நிறுவனப்பணியாகத்தான் இருந்திருப்பார். யுத்தம் தொடங்கியபிறகு கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மாதிரி வெள்ளையர்கள் அல்லது வெளிநாட்டுக்காரர்கள் அங்கே தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் எப்படியும் தமிழ்ப்பகுதிகளில்தான் இருந்திருப்பார். தமிழ்ப்பகுதியில் என்றால் வடக்கிலா, கிழக்கிலா? வடக்கிலென்றால் வன்னியிலா? வன்னியில் எங்கே? பரபரக்கும் மனதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு சிரமம் என்பதை அப்போது உணர்ந்தான். அது பல முனைகளில் பல்லாயிரங்குதிரை வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இல்லைத் தாவிக் கொண்டிருந்தது.

“என்னுடைய பெயர், ஜக்காற்ஸ் மன்றோலிற்ஸ். நான் இலங்கையின் வடக்கில் தொண்டு நிறுவனமொன்றில் இரண்டு ஆண்டுகளாக சேவைசெய்கிறேன். துயரம் நிரம்பிய நாட்களோடு அங்கே சனங்கள் அலைகிறார்கள்;. மன்னிக்க வேண்டும். அங்கே வாழ்க்கை இல்லை. அலைச்சல்தான் உண்டு. என் மனசிலும் இந்தத் துக்கமே நிரம்பியிருக்கிறது. கடவுளே..!”

அவர் பெருமூச்சு விட்டார். கண்கள் துக்கத்தில் தாழ்ந்திருந்தன. சற்று முன் அந்த முகத்திலிருந்த மலர்ச்சி எங்கோ பின்னகர்ந்து துயரத்தின் படலம் மெல்லிய நிழலாக அதில் படிந்திருந்தது. தேவன் தலையை ஆமென்பது போல அசைத்தான். ‘தேவையில்லாத யுத்தம். ஆனால் இதை யார் கேட்கப்போகிறார்கள்?’ என்று நினைத்தான் அவன்.

“ஏதாவது சாப்பிடுகிறீர்களா? மன்னிக்க வேண்டும். உங்களை நான் சிரமப்படுத்துகிறேனா?” என்றார் வெள்ளையர். குடிப்பதற்கான பானங்களை முன்னே வைத்தார். சாப்பிடுவதற்கான வறுவல்கள், பொரியல் எல்லாம் பெரிய தட்டில் வைக்கப்பட்டிருந்தன. அவன் விருந்தாளியல்லவா. இந்த ஒரு நாளில், அதுவும் இதே இடத்தில், அவன் எந்தப் பதற்றமுமில்லாமல் இருக்கையில் முதுகைச் சாய்த்து இருப்பதென்றால் சும்மாவா? பானத்தை எடுத்துப் பருகினான். அது அவ்வளவாக அவனுக்கு ஒத்துக் கொள்வதில்லை. என்றாலும் அதில் அவனுக்கு விருப்பம். சமாளிக்கலாம் என்று நினைத்தான். இதைப்போல வாய்ப்பு இனி எப்போது வருமோ. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இதேபோல ஒரு பிரெஞ்சுக்காரனின் எதிர்பாராத நட்புக் கிடைத்தது. அவனோடு சேர்ந்து …. தைக் குடித்திருந்தான். குடிக்கக் குடிக்க மிக நன்றாகவும் உற்சாகமாகவும் இருந்தது. ஆனால் அறைக்குப் போகவே முடியாதவாறு அது அவனைப் படாத பாடெல்லாம் படுத்தியது. வாந்தி எடுத்தே களைத்திருந்தான். ஆனாலும் அந்தப் பிரெஞ்சுக்காரனோடு நட்பு உள்ளவரையும் அவன் அதையே குடித்தான். அப்படியே வாந்தி எடுத்தும் களைத்தான். என்றாலும் அந்தத் தவனம் தீரவில்லை. இப்போது மீண்டும் அதைக் கண்டவுடன் இந்த அது நாக்கில் எழுந்து கூத்தாடுகிறது.

குடித்துக் கொண்டே தேவன் சொன்னான், “இல்லை, இல்லை. உங்களுடைய துக்கந்தான் எனக்கும். ஆனால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அங்கே மட்டுமல்ல, இங்கே வந்தும் அலைகிறோம். ஒன்றேயொன்றுதான், இங்கே உயிருக்குப் பாதுகாப்பிருக்கிறது. அங்கே அதுவும் இல்லை”

“உண்மைதான். உங்களுடைய துயரங்களின் கதையை நான் பதிவு செய்யவும் வெளியுலகில் அதைப்பேசவும் விரும்புகிறேன். என்னுடைய கடமைக்கு இது பொருந்தாது என்றபோதும் இதைச் செய்ய விரும்புகிறேன். விரும்பினால் நீங்களும் இதில் உதவலாம், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்..” என்றார் அவர். அவனால் என்ன சொல்ல முடியும்? அவன் அகதி அந்தஸ்தைப் பெறுவற்காகவே எவ்வளவோ பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் இவர் இப்படிக் கேட்டால் என்ன செய்யமுடியும்? ஆனால் அவர் யாருக்காக உதவ விரும்புகிறார்? எங்களுடைய துயரங்களுக்காக தன்னுடைய சிரமங்களைப் பொருட்படுத்தாமல் உழைக்கவிரும்பும் ஒருவருக்கு எப்படி மறுப்புச் சொல்ல முடியும்? அதுவும் உலகெங்கும் சிதறி அகதியாக துயரக்கிடங்குகளில் உழன்று கொண்டிருக்கும் நமக்கு, யாருமே கவனிக்காமல் கை விடப்பட்டவர்களாக அலைந்து கொண்டிருக்கும் எங்களுக்கு இப்படித் தானாகவே உதவ யார்தான் வருவார்கள்? தன்னால் முடிந்த அளவுக்கு உதவலாம் என்று எண்ணினான். ஆனால், எப்படி?

“முடிந்த அளவுக்கு உதவலாம். எனக்கு இங்கே அகதிக் கார்ட் கூட இன்னும் கிடைக்கவில்லை. ஆறு ஆண்டுகளாக கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்”

“பிரச்சினையே இல்லை. உங்களுடைய இந்தமாதிரிக் கதைகளும் துயரமும் பிரச்சினைகளும்தான் எனக்குத் தேவை. நீங்கள் அதிகம் சிரமப்படத்தேவையில்லை. உங்களுடைய பிரச்சினைகளையும் அனுபவங்களையும் சொல்லுங்கள். ஆனால் உண்மையைப் பேசவேணும். அதுதான் முக்கியம்” அவர் இதைச் சற்று அழுத்திச் சொன்னார். அதிலும் அந்த இறுதி வாக்கியங்களை சற்று அழுத்திச்சொன்ன விதம் அவனுக்கு சற்றுச் சங்கடத்தைத் தந்தது.

எங்களுடைய ஆக்கள் தங்களுடைய காரியத்தைப் பார்க்க வேணும் என்பதற்காக ஏத்தி இறக்கியே எல்லாவற்றையும் சொல்வார்கள். இப்படிச் சொல்லி சொல்லி இப்போது உண்மையான நிலையையே விளங்க வைக்க முடியாத நிலைமைதான் எங்கும் என்றாகிவிட்டது. இதை அவன் அகதிக் கார்ட் எடுக்கப் போகும் இடத்திலிருந்து வேலை செய்யும் இடம்வரையிலும் உணர்ந்திருக்கிறான். பாதிக்கப்பட்ட இனமென்றால் இந்த மாதிரிக் குணமெல்லாம் வந்து விடும் போலிருக்கிறது. ஏறக்குறைய லிபியர்களும், பலஸ்தீனியர்களும் குர்திஸ்களும் இந்தமாதிரித்தான் நடந்து கொள்கிறார்கள்.

“நிச்சயமாக. உங்களுக்கு உண்மையாக நான் உதவுவேன்” அவன் உற்சாகமாகச் சொன்னான். சரக்கு அவனுக்குள் தன்னுடைய வேலையை மெல்லக் காட்ட ஆரம்பித்திருந்தது. அந்த வெள்ளையர் அவனுடன் நட்பாகப் பேசினார்.

அவர் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். “நல்லது. உலகம் எவ்வளவுதான் அறிவு மயப்பட்டாலும் பிரச்சினைகள் பெருகியபடியேதானிருக்கு. பார்த்தீர்களா, நீங்களும் சொந்த நாட்டில் இல்லை. நானும் சொந்த நாட்டில் இல்லை. காரணங்கள் என்னவாகவும் இருக்கலாம். ஆனால், உண்மை அதுதான்”

“நீங்கள் சொல்வது மிகச் சரி. ஆனால் நீங்கள் எங்கே போனாலும் அதிகாரிகளாகவோ மேலாளர்களாகவோதானிருக்கிறீர்கள். நாங்கள் அப்படியல்ல. எங்கள் நாட்டிலும் நாங்கள் உங்களுக்குக் கீழே அடிமைகள்தான். இங்கேயும் நாங்கள் அடிமைகள்தான். அங்கேயும் நாங்கள் அப்படித்தான். நான் பார்த்திருக்கிறேன், உங்களை இன்னும் ஏதோ ரட்சகர்களைப்போலவே எங்களுடைய சனங்கள் பார்க்கிறார்கள். அதிகம் ஏன், அங்கே உங்களுடைய வாகனம் செல்லும்போது எங்களுடைய சனங்கள் தூசியைக் குடிக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏஸியோடு போகிறீர்கள். எங்களுடைய ஒரு கவிஞன் சொன்னதைப்போல ‘முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ‘எங்கள் நிலத்தில் அவர்களுக்காய் உழுதோம் இன்று அவர்கள் நிலத்தில் அவர்களுக்காய் உழுகிறோம்’ என்று. இதுதான் கதை”

அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். புருவங்களை உயர்த்தி வாயைக் கோணி இறுக்கமாக வைத்துக் கொண்டு ஆச்சரியமாக அவனைப் பார்த்தார். அவனுக்குள் எரிமலைகள் குமுறத்தொடங்குவதை அவர் புரிந்திருக்க வேண்டும். “உண்மைதான். சொல்லுங்கள்” அவர் அவனை உற்சாகப்படுத்தினார்.

“இதற்குமேல் என்ன சொல்ல முடியும்?”

“அப்படியென்றால் யாரைக் குற்றம் சொல்கிறீர்கள்? அல்லது யாரில் தவறிருக்கிறது?”

“யாரில் குற்றம் சொல்வது என்பது முக்கியமில்லை. இதுதான் உண்மை. இதையே நீங்கள் அறிய வேணும். நீங்கள் மட்டுமல்ல எல்லோரும் அறிய வேண்டும். இந்த உண்மைக்குப்பின்னாலுள்ள கதை என்ன என்று பாருங்கள். அதற்குள்ளே இருக்கிற நீதியின்மையை, துயரத்தை, அலைச்சலை, கொடுமையை எல்லாம் பாருங்கள். அப்போது யாரெல்லாம் காரணம், என்னவெல்லாம் நடந்திருக்கின்றன என்றெல்லாம் புரியும்”

அவர் திடுக்குற்றார். இதைப்போல ஒரு தடவை அவரோடு கிழக்கில் ஒரு முதியவர் வாதிட்டார். அப்போது அவர் கிழக்கில்- மட்டக்களப்பில் சேவையாற்றினார். அங்கே இருந்த அகதி முகாமொன்றில் மன்றோலிற்ஸ் தன்னுடைய குழுவினரோடு உதவிப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சனங்கள் பொருட்களைப் பெறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தனர்;. சனங்களின் குரல் இரைச்சலாகிக் கனத்திருந்தது. அந்தக் கனதியை எல்லாம் விட்டு தூரத்தில் மரநிழலில் ஒதுங்கியிருந்தார் ஒரு முதியவர். மன்றோலிற்ஸ் தன்னுடைய உதவியாளர் மூலமாக அவரை விசாரித்தார்.

“சொந்த நாட்டிலேயே பிச்சை எடுக்கிற மாதிரி இருக்கு. என்னால இதைத்தாங்கேலாது. அதுவும் வெள்ளைக்காரர்களாலதான் நாங்கள் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறம். இதுக்குப் பிறகு இப்பவும் அவையிட்டையே கையேந்திறதெண்டால்…” என்று முதியவர் சொன்னார்.

இதை அறிந்தபோது, சற்றுக் கோபம் வந்தது மன்றோலிற்ஸ்க்கு. ஆனால், அவர் நிலைமையைப் புரிந்து கொண்டார். கிழவர்; சொல்வதில் உண்மையுண்டு. மன்றோலிற்ஸ் இலங்கைக்கு புறப்பட முன்னர், இலங்கையைப் பற்றிப் படிக்கும்போது அவருக்கு ஆச்சரியமான சங்கதிகள் தெரிந்தன. அதிலும் அவருடைய அப்பா வழி பாட்டன் ஒருவர் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கல் படை அதிகாரியாக இலங்கையில் இருந்திருக்கிறார். பிறகு அதைப்பற்றி தன் குடும்பத்தில் விசாரித்து இன்னும் தகவல்களையும் அறிந்தார்.

இப்போது இந்தக் கிழவர் அந்த நிகழ்ச்சிகளையே நினைவூட்டுகிறார்;. கிழவரின் துயரம் அவருடைய பூர்வீக ஞாபகங்களைக் கிளப்பியுள்ளது என்று தோன்றியது மன்றோலிற்ஸ_க்கு. ஒருவர் அதிகம் துன்பப் படும்போதும் இந்த மாதிரி பூர்வீக விசயங்களை நோக்கி மனம் திரும்புகிறது. அதிகமதிகம் மகிழ்ச்சியிலும் புகழிலும் இருக்கும்போதும் பழைய சுவடுகளையோ காலத்தையோ தேடிப்போகுது. அந்தரங்கமாகவேனும் இது நடக்கிறது.

கிழவரின் வாடிய அந்த முகத்தில் இருந்த உறுதியையும் தெளிவையும் கோபத்தையும் மதிப்பையும் மன்றோலிற்ஸ் அவதானித்தார். கிழவரை நெருங்கி வணக்கம் சொன்னார் மன்றோலிற்ஸ். கிழவர் தலையை அசைத்து பதிலுக்கு அவருக்கு மரியாதை செய்தார். “உங்களைப் புரிந்து கொள்கிறேன்” என்றார் கிழவர். மன்றோலிற்ஸ் ஒரு கணம் தடுமாறிவிட்டார். கிழவர் என்ன சொல்கிறார்? அன்று கிழவருடன் இரண்டு மூன்று நிமிடங்கள் மட்டும் மன்றோலிற்ஸ் பேசியிருப்பார். ஆனால்; கிழவருடன் தொடர்ந்து பேச வேண்டும் என்று விரும்பினார். அதன்பிறகு அவருடன் அவ்வப்பொழுது பேசினார் மன்றோலிற்ஸ். சரளமான ஆங்கிலத்தில் வரலாற்றுக் கதைகளைச் சொன்னார் கிழவர். கிழவரின் துயரக் கதைகள் மன்றோலிற்ஸை உலுக்கியது. அதைவிட அவர் சொன்ன வரலாற்றுக்கதைகள் திடுக்கிடுத்தின.

தலைமுறை தலைமுறையாக இந்த எண்ணங்களும் துயரங்களும் இவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது என்று மன்றோலிற்ஸ்க்குப் பட்டது. தான் இதற்கெல்லாம் நேரடியாகப் பொறுப்பாளி இல்லை என்றாலும் வரலாற்றில் தனக்கும் ஏதோ ஒரு பங்கிருப்பதாக அருக்குத் தோன்றியது. அதற்காகத்தான் இந்தக் காரியங்களையெல்லாம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

ஆனால் அவர் இந்த வேலையைச் செய்வதற்கிடையில் ஏகப்பட்ட எரிமலைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்போது தேவன். இன்னும் இதுமாதிரி எத்தனை எரிமலைகளையும் துயரக்கடல்களையும் கடக்கவேண்டும்? பாவமன்னிப்புக்காக மன்றாடுபவன் எல்லா வேதனைகளையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று நினைத்தார் மன்றோலிற்ஸ். எதுவும் சமனிலையில் இருந்தாற்தான் அதன் இலக்குத் தவறாது. தன்னுடைய வேதனைகளும் இந்த மனிதர்களின் வேதனைகளும் இப்போது ஏதோ ஒரு சமனிலையில் இருப்பதாகப் பட்டது. வௌ;வேறு கோணங்களில் என்றாலும் சந்திக்கும் புள்ளி ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் அவருக்கு உள்ளே ஆறுதலும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனாலும் சில எதிர்;கொள்ளல்களை சந்திக்கவே வேண்டும். அவை எத்தனைதான் கடுமையாக இருந்தாலும்.

அவர் தேவனுடன் விவாதிக்க வேண்டும். அப்படி விவாதித்தால்தான் பல விசயங்கள் வெளிவரும். அவர் அறியக்கூடிய சங்கதிகள் அப்போதுதான் கிடைக்கும். ஆனால் இந்த விவாதத்தை மிக அவதானமாகக் கிளப்ப வேணும். எல்லை மீறினால் அது கோணங்கள் மாறி வேறி திசைகளுக்கு நகர்ந்து சிதைந்து விடும். எனவே நிதானமாக அவனுடன் பேசினார்.

“நீங்கள் வைத்திருக்கும் உண்மையை எப்படி எல்லோருக்கும் கொடுக்கப்போகிறீர்கள்? அப்படி உண்மையை வாங்கக் கூடிய உலகமா இருக்கிறது? ஆகக் குறைந்தது இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளக் கூடத் தயாரா? என்னதான் வெயில் உன்னதமாகவும் அடிப்படையாகவும் இருந்தாலும் நிழலை விரும்பும் மனமா, வெயிலை விரும்பும் மனமா எல்லோருக்கும் உண்டு?”

அவன் ஏளனமாகச் சிரித்தான். எதற்காக இந்த வம்பில் விவாதித்துக் கொண்டிருக்க வேணும்? பேசாமல் வேலை முடிந்தவுடன் தங்குமிடத்துக்குப் போயிருக்கலாம். இதனால் தனக்கு என் பலன் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் வந்தது. சலிப்பும் எரிச்சலும் மேலோங்கி அயர்ச்சியானது உடலும் மனமும். பார்வையைத் திருப்பி சுவர்களைப் பார்த்தான். அழகிய மலைக் காட்சியுடைய ஓவியம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. எண்ணெய் வர்ணத்தில் தீட்டப்பட்டது. யார் வரைந்திருப்பார்கள்? பெயரை அறிய வேண்டும் போலத் தோன்றினாலும் மனம் அதற்குமெல் தூண்டப் பெறவில்லை.

“சரியாகச் சொன்னால் யாருக்கும் உண்மையை அறியும் ஆர்வம் இல்லை என்றே சொல்வேன். உண்மைதான் அதிகம் சங்கடந்தரும் பொருள். அதை எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணமானதல்ல. அதனால்தான் அதை எவரும் விரும்பவேயில்லை. ஆனால் ஆச்சரியம் என்ன வென்றால் பாதிக்கப்பட்ட சனங்கள் எப்பொழும் உண்மையை மட்டுமே கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் விரும்பாத உண்மை”

“அப்படியென்றால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“நானும் உண்மையையே சொல்கிறேன். நீங்கள் சொல்வதைப் போல உண்மை.”

“என்றால், நாங்கள் எதையுமே செய்ய முடியாது என்கீறீர்களா? அப்படியென்றால் நாங்கள் தொடர்ந்தும் இப்படியே அலைந்து கொண்டேயிருக்க வேண்டியதுதானா?” அவனுடைய முகம் கோபத்தில் கொதித்தது. அவர் இப்போது மேலும் ஊற்றிக் குடித்தார். அவனை சற்று அமைதியாக இருக்கும்படி கையால் சைகை காட்டினார். விசயம் இன்னுமிருக்கிறது என்பதைப்போலிருந்தது அவருடைய அந்தச் சைகையின் தொனி.

“ நண்பரே இது மிகச் சவாரஷ்யமான சங்கதி. ஆனால் மிகக் கொடுமையானது”

“அதற்காக”

“என்ன செய்ய முடியும். ஏற்கத்தான் வேண்டும். ஏற்றுத்தான் ஆகவேண்டும். வேறு வழி கிடையாது. ஆனால் ஒன்று, இந்த உண்மைச் சுடரை அணைய விடாமற் காத்துக் கொள்வதில்தானிருக்கிறது வெற்றி. அதை காத்துக் கொள்வது ஒன்றும் சாதாரண காரியமில்லை. அதைப் பாதுகாத்தால் மட்டும் போதாது. அதைக் கொண்டு போக வேண்டிய இடத்துக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்”

“என்ன போதனையா? எனக்குச் சலிப்பூட்டுகிறது. இதையெல்லாம் நாங்கள் செய்யவில்லையா என்ன?” அவன் எரிச்சலோடு கேட்டான். முகத்தில் கடுமை தொனித்துக் கொப்பளித்தது. அவரை ஊன்றிக் கவனித்தான்.

அவர் சிரித்தார். ஆனால், மிக எச்சரிக்கையாக. இந்த மாதிரி நிலைமைகளில், இந்தமாதிரி ஆட்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவர் என்பதை அந்தச் சிரிப்பும் அவருடைய அமைதியும் காட்டியது.

“எங்களால் இதற்கு மேலும் தாங்க முடியாது. ஆனால் தாங்கிக் கொண்டுதானிருக்கிறோம். வெல்வதற்கு தாங்கும் சக்தியும் முக்கியமானது. எல்லோராலேயும் தாங்கமுடியாது, அதுவும் எதையும். நாங்கள் தாங்கிக் கொள்கிறோம் எல்லாவற்றையும் எல்லாவற்றையும்”

“இருக்கலாம். ஆனால் தாங்கும் சக்தி மட்டும் போதாது. அது அடிமையாக்கிவிடும். தாங்கிக் கொண்டிருப்பதால் மட்டும் வயிற்றில் ஏறியிருக்கும் பசி போய்விடுமா? தலையில் சுமத்தப்பட்டிருக்கும் பாறை கரைந்து காற்றாகிவிடுமா? ஏன், உங்களிடம் இருக்கும் சாதி விவகாரங்களைப் பாருங்கள். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சாதியினர் எத்தனை காலமாக எதையெல்லாம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால், என்ன நடந்தது. அவர்கள் மெல்ல அசையத் தொடங்கியபோதே சலனமும் பாய்ச்சலும் நடந்திருக்கிறது. மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதுதான் உண்மை” அவர் நிதானத்தைக் கூட்ட முயன்றார். நள்ளிரவைக் கடந்திருந்தது அந்த அறை. அவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதில் அவனுக்கு ஆச்சரியம். மனதில் எண்ணங்கள் பொங்கி வந்தன. அவன் தலையை அசைத்தான். அவரே சொன்னார்: “நாங்கள் எதையாவது செய்வது முக்கியமல்ல. அதைப் புத்திபூர்வமாகச் செய்ய வேணும். அதுதான் முக்கியம்”

“நாங்கள் என்னதான் செய்யவில்லை? எவ்வளவு போராட்டங்கள்? ஐயா, அம்பது வருசமாகப் போராடுகிறோம். என்னமாதிரியான போராட்டம். எவ்வளவு தியாகங்கள்? இதற்கு மேல் எப்படிப் போராட முடியும். அல்லது எப்படிப் போராட வேண்டும்? சொல்லுங்கள்! நீங்கள்தான் யுத்தம் நடக்கிற எங்கள் மண்ணில் இருந்து எல்லாவற்றையும் பார்த்திருப்பீர்களே. சொல்லுங்கள், இதற்கு மேல் என்ன செய்ய வேணும்? எந்தக் குற்றமும் செய்யாமலே இந்தமாதிரி எதற்காக வதையெல்லாம் பட வேணும்?”

“ஓ கடவுளே!” அவர் ஆழமாகத் தலையை அசைத்தார். எழுந்து சுவரோரமாகச் சென்று எங்கோ வெறித்தார். கண்கள் கூர்மையாகின. அவனை வேதனைப்படுத்துகிறேனோ என்று யோசித்தார். இல்லை. பேச வேண்டியதைப் பேசித்தானாக வேண்டும். திரும்பி “சொல்லுங்கள் தேவன்” என்றார் மீண்டும்.

“நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. போதும். சொல்வதால் எந்தப் பலனுமில்லை. இது புலம்பல். புலம்புவதால் எந்தப் பலனுமில்லை. மன்னிக்க வேணும். நான் புறப்பட விரும்புகிறேன்”

அவர் ஆமென்பது போலவும் வேண்டாம் என்பதைப் போலவும் தலையை அசைத்தார். எதற்கும் உனக்கு சுதந்திரமும் உரிமையும் உண்டென்பதைப்போல அது இருந்தது. அவனருகே வந்து தோள்களில் கை வைத்தார். அது ஒரு புதிய நிலையாகத் தோன்றியது தேவனுக்கு. இந்த மாதிரித் தருணங்கள் அபூர்வமானவை. அதை அவன் முழுமையாக உணர்ந்தான். அவனுடைய நரம்புகளில் ரத்தம் குத்தித்தோடுவது அவனுக்குத் தெரிந்தது.

“மன்னிக்க வேணும். உங்களை அதிகம் சிரமப்படுத்தி விட்டேனா” கேட்டார். “தேவன், ஒரு வகையில் நீங்கள் சொன்னதைப்போல இதுவும் ஒரு வகையில் தாங்குவதுதான். ஆனால் தனியே தாங்குவது மட்டும் இதற்குள் இல்லை. அதற்கு மேல் வேறு விசயங்கள் உண்டு. எல்லாம் கலந்த ஒரு கலவை. பிரச்சினைகள் எப்படியோ அதற்கேற்றமாதிரியான எதிர்வடிவங்கள்”

அவன் ஊன்றிக் கவனித்தான். “அதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் ஒன்றாகச் சிந்திக்கலாம். அப்போது நாம் புதிய பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கலாம்”

“நானும் நீங்களும் எப்போதும் ஒன்றாகச் சிந்திக்க முடியாது. இதோ பாருங்கள். இந்த அறையில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கிறோம் என்பது உண்மையே. இப்போது இருவரும் ஒன்றாக, ஒரு நிலையில் இருப்பது போல இருக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. வெறும் தோற்றம் மட்டுமே. நான் இதே விடுதியில் ஒரு வேலையாள். உங்கள் முன்னிலையில் இந்தக் கணத்தில் விருந்தாளியாகவோ நட்புடனோ சமனாக இருந்தாலும் உண்மையில் அப்படியல்ல. இப்போதும் நீங்கள் விருந்தாளி. பின்னரும் நீங்கள் இதே வசதியோடும் தரத்தோடும்தான். எப்போதும் வசதிகளோடு, எந்தப் பிரச்சினைகளுமில்லாமல் இருக்கலாம். எதற்கும் உத்தரவாதமுள்ள வாழ்க்கை உங்களுடையது. ஆனால், நான் வெளியே போனபின்னர் அப்படியல்ல. உண்மையில் இப்போதும் நான் அகதி. பரதேசி. அலைந்து கொண்டிருப்பவன். நாடற்றவன். எதையும் நிர்ணயிக்க முடியாத வாழ்க்கை என்னுடையது. எப்படி நாங்கள் ஒன்றாகச் சிந்திக்க முடியும்? முடியாது, முடியவே முடியாது” பெரும் உணர்ச்சிச் சுழிப்பில் திணறியது அந்த அறை. வரலாற்றில் அதற்கு முன்னர் அந்த அறையில் இதைப்போல ஒரு நிலை இருந்திருக்குமா? வேண்டுமானால் காதலில், பெருங்கூடலில் எல்லாம் அது திளைத்திருக்கலாம். ஆனால், இதைப்போல இத்தனை கொந்தளிப்பான உணர்ச்சிச் சுழிப்பில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவனுக்கு மூச்சுத் திணறியது. தன் குரலில் வினோத ஒலியும் உற்சாகமும் துளர்த்திருப்பதை உணர்ந்தான். சொற்கள் பெருகிக்கொண்டேயிருந்தன. முடிவற்ற சொற்கள். அவ்வளவும் ஆழ்மனதிலிருந்து ஊற்றெடுத்து வரும் சொல் நதிப் பிரவாகம். அவர் அமைதியாக இருந்தார். அமைதியாகவே எரிந்து கொண்டிருந்தன விளக்குகள். மதுவின் வாடை விளக்கொளியில் கலந்து கொண்டிருப்பதாக தேவனுக்குத் தேன்றியது. அவன் சொன்னான்: “தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். அதாவது எங்களை விட்டுவிடுங்கள். தயவு செய்து”

அவர் இப்போதும் எதுவும் பேசவில்லை. பேச முடியாதென்றல்ல, பேச விரும்பவில்லை. அமைதியாகக் கேட்பதையும் என்ன நடக்கிறது என்பதையும் அறியவே அவர் விரும்புகிறார். உண்மையை அவர் தேடிக் கொண்டிருக்கிறார். அதை இப்போது கண்டடைந்து கொண்டிருக்கிறார்;. இதைத்தான் அவர் எதிர்பார்த்தார். இதையே அவர் கிழக்கில், அகதிமுகாமில் அந்தக் கிழவரிடமும் கண்டார்.

அவன் சட்டென்று அமைதியானான். எல்லாம் தீர்ந்து போனதைப்போல அவனுடைய முகம் வெறிச்சென்றிருந்தது. அவரைக் கூர்ந்து பார்த்தான். பிறகு தலையைக் கவிழ்ந்து கொண்டு சற்று நேரம் இருந்தான்.ள

“உங்களை நான் புரிந்து கொள்கிறேன்” அவர் அவனுடைய கைகளை இறுகப் பற்றினார். அதில் இணையற்ற ஒரு நெருக்கத்தை அவன் கண்டான். ஆனாலும் உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது மனம். அது ரணங்களில் பற்றிய தீயல்லவா. எனவே அணைந்து விடாது. முடிவற்று அது தகித்துக் கொண்டிருக்கும்.

“என்னால் இனிக் காயங்களைத் தாங்க முடியாது. என்றபோதும் காயங்களாகவே எனக்குப் பரிசளிக்கப்படுகின்றன. நான் விரும்பாத காயங்கள். எங்களுக்குத் தேவையற்ற பரிசுகள். பாருங்கள் எங்களில் எவ்வளவு காயங்கள். நீங்கள் குத்திய காயங்கள். நீங்கள், நிச்சயமாக நீங்கள் குத்திய காயங்கள். அப்படி ஒவ்வொருவராக எங்கள் மீது குத்திய காயங்கள். ஏராளம் காயங்கள். முடியவில்லை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றபோதும் குத்திக்கொண்டேயிருக்கிறீர்கள். எப்படி இதைத்தாங்க முடியும்? சொல்லுங்கள், எதற்காக இந்தத் தண்டனைகள்? எதற்காக இந்தப் பழிவாங்குதல்கள்? ஒவ்வொருவரும் குத்திய கத்திகள் இதோ என்னுடலில் குருதியொழுகும்படியே இருக்கின்றன” அவர் அதிர்;ந்தார். இதை எதிர்பார்த்திருந்தாலும் அது இத்தனை கூராக அவரை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தக் குற்றச் சாட்டு அவரால் புறக்கணிக்கக்கூடியதுமில்லை. தான் பங்காளி இல்லை என்றாலும் பங்காளி நிலையிலிருந்து தப்ப முடியாது.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மூதாதைகள் செய்த பழி. அந்தப் பழியே நான்கு நூற்றாண்டுகளாக இந்த மனிதர்களின் பழியாகியுமுள்ளது. அன்று அவர்கள் செய்த பழியெல்லாம் இப்போது உருத்திரண்டு இந்த வடிவங்களில் நின்றாடுகின்றன. இதற்கெல்லாம் சாபவிமோசனம் எப்போது? அது எப்படி நிகழும்? “எங்களின் மீது ஏற்றிய கத்தியை இழுக்காமலே போய்விட்டீர்கள். அப்படியே பிறகு வந்த ஒவ்வொருவரும். பாருங்கள், போர்த்துக்கீசக் கத்தியை, ஒல்லாந்தக் கத்தியை, பிரித்தானியக்கத்தியை, சிங்களக் கத்தியை, இந்தியக் கத்தியை…” அவன் மீண்டும் குமுறினான். “அதுமட்டுமல்ல, சீனக் கத்தி, அமெரிக்கக்கத்தி, இஸ்ரேலியக் கத்தி, பாகிஸ்தானியக் கத்தி, ஈரானியக் கத்தி… சில கத்திகள் நேரடியானவை. சிலவோ மறைமுகமானவை. ஆனால் எல்லாம் எங்கள் மீதே பாய்ச்சப்படுகின்றன. எல்லாக் காயங்சகளும் எங்களுக்குத்தான்”

அவனுடைய குரலில் எந்தத் தளர்வுமில்லை. அது அவனுடைய உறுதியைக் காட்டியது. அதையிட்டு அவர் திகைத்தார். இல்லையென்றால் இந்த மாதிரி நிலைமையில் அவன் அழுதிருக்க வேண்டும். வலிகளைத் தாங்கியே மரத்துவிட்டானா? அல்லது அவனே சொன்னதைப்போல தாங்கும் சக்தியின் ஆற்றலா? இல்லையென்றால் இந்த யுத்தத்தை, ஐந்து நூற்றாண்டுகளான அவலத்தை எல்லாம் எப்படித் தாங்கிக் கொள்ள அவர்களால் முடியும்? என்று அவர் நினைத்தார்.

“நான் உங்களையோ யாரையுமோ குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் நீங்கள் விரும்பிய உண்மை இப்படித்தான் உள்ளது. இதை ஏற்றுக் கொள்ளத்தயாரா? சொல்லுங்கள்! தயவு செய்து மௌனத்தைக் கலையுங்கள். உங்கள் மௌனமே எங்களை அச்சப்படுத்துகிறது. ஏன், உங்களுடைய இந்தக் கனத்த மௌனமே எங்களை இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. கத்திகள் பாய்ச்சப்படும்போது கடைப்பிடிக்கின்ற பாராமுகத்தில் கலந்திருக்கும் மௌனம். வேண்டாம் அது. பேசுங்கள். அதுவே கலகமாகட்டும். முதற்கலகம், அதைச் செய்யுங்கள்”

அந்த நிலையில் அவன் உருக் கொண்டிருந்தான். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருள்ளும் இதேமாதிரி உருவேறியது. உள்ளுக்குள்ளே நிகழ்ந்தது பெருஞ் சந்தம். கண்கள் சிவந்திருந்தன. அது தூக்கக் கலக்கமா இல்லை, எல்லாவற்றின் மீதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சினத்தின் ஊற்றா? அவனுக்கும் அது புரியவில்லை. அவருக்கும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பல புள்ளிகள் ஒன்றிணைந்திருப்பதாக இருவரும் உணர்;ந்தனர். இந்தப் புள்ளிகளை இணைத்தால் ஏதோ வடிவங்கள் வரலாம். இணைக்காது விட்டாலும் விடிவங்கள் அதிலிருக்கும். அவர் ஆமென்று தலையசைத்தார். “உண்மைதான். உண்மையேதான்” சந்நதங்கொண்டொலித்தது அவருடைய குரல். அதில் அன்பையும் இரக்கத்தையும் உண்மையையும் வலிமையையும் தேவன் கண்டான். ஒரு வகையான ஏற்றுக்கொள்ளல், அங்கீகரித்தல் அதிலிருந்தது. உரிமையின் தொனியோடு அது ஒலித்தது.

. அறையில், விளக்குகள் எரிந்து கொண்டேயிருந்தன. அவர்கள் அறைக்குள் நுளைந்தபோதிருந்த அதே நிலையிலேயே எந்தத் தளர்வுமின்றி எரிந்து கொண்டிருந்தன. விடைபெறும்போது அவர் தன்னுடன் தொடர்பு கொள்ளுவதற்கான ‘விஸிற்றிங் கார்ட்’டைக் கொடுத்தார். ‘வன்னியின் நிலைமைகள் எப்படியிருக்கு’ என்று அவன் கேட்க விரும்பினான். ஆனால் அதை மனம் மறுத்தது. ஆனால், அவரின் புருவங்கள் உயர்ந்து சுருங்கின. அவர் சற்று அமைதியாக இருந்தார்.

மெதுவான கதகதப்பான குளிர் அந்த அறையில் நிரம்பியிருந்தது. சுவர்களில் ஒட்டியதைப்போல மெதுவாகச் சுடர்ந்து கொண்டிருந்தது ஒளி. சற்று நேரத்துக்குப் பின்னர் எழுந்து தன்னுடைய பையைத் திறந்து ஒரு டைரியை எடுத்தார். பக்கங்களைப் பிரித்துப் பார்த்தவர், அவனிடம் அதைக் கொடுத்தார். அதில் வன்னியின் கதைகள் எழுதப்பட்டிருந்தன.

அவன் விடைபெற்ற போது அவர் வெளியே வந்து அன்போடு விடை தந்தார். விடுதியை விட்டு அவன் வெளியே போய்க் கொண்டிருப்பதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் அந்தக் காலையொளியில் துலங்கியபடியே நடந்து தூரமாகிக் கொண்டிருந்தான். ஒரு முடிவற்ற புள்ளியாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *