”பாலா! டேய்! வேண்டாம்டா. உனக்கு இவ்வளவு கோவம் ஆகாதுடா.”————– பாலா என்கிற பாலசுப்ரமணியன் கோபத்தில் மேலும் கீழும் மூச்சு வாங்க விட்டத்தை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்கப்பா கோபத்தை அப்படியே கொண்டாந்திருக்கே. அவருக்குக் கூட இப்படித்தான் நுனி மூக்கு சிவந்து போயி வெடைச்சிக்கும். உதட்டை கடிச்சி துப்பாத குறை. வறுக் வறுக்னு முன் பல்லால சுரண்டிக்கிட்டே இருப்பாரு..”—- சொல்லிவிட்டு பகபக வென்று சிரித்தார். அங்கிருந்த இறுக்கமான சூழல் சற்று நெகிழ்ந்தது. அவர்…? கோபாலன் கான்ஸ்டேபிள், அப்பாவின் நெருக்கமான நண்பர், கூட படித்தவர்.
“நல்லா சொல்லுங்கண்ணா! இவனுக்கு எதுக்குத்தான் ஆத்திரப் பட்றதுன்னே இல்லை. வேலை விஷயமாய் ஆபீஸ்ல போய் பார்த்துட்டு வர்றேன்னு போனான். என்ன நடந்துச்சோ, இப்படி வந்து நிக்கிறான்.”—–சொல்லிவிட்டு பாலா வின் அம்மா காபி போட்றேன்னு எழுந்து போனாள்.
“ ஒருத்தருக்குக் கூட இங்க சின்சியாரிட்டி இல்ல அங்கிள். அப்பா செத்து, கருணை அடிப்படையில வேலைக்கு அப்ளை பண்ணி எத்தனை வருஷமாச்சி?. நான் எம்.எஸ்ஸி. படிச்சிருக்கேன். கருணை அடிப்படையில காவல் துறையிலேயே கிளார்க் வேலை தர்றோம்னு சொன்னாங்க. சொன்னதோட சரி மூணு வருஷமாச்சி இன்னும் வழி தெரியலை. ஆபீஸ் ஆபீஸா போய் அலைஞ்சிக்கிட்டிருக்கேன். ஆனா ஆரம்பிச்ச இடத்திலேயே நிக்கிற மாதிரி ஆயாசமா இருக்கு அங்கிள். சரி இந்த இழவே வேண்டாம் நம்ம படிப்புக்கு நாமளே வேலை தேடிக் கொள்ளலாம்னு சப் இன்ஸ்பெக்டர் போஸ்ட்டுக்கு பரீட்சை எழுதினேன். அதெல்லாம் எனக்குக் கிடைக்காதுன்னு தெரியும். மூணு மாசமாச்சி ஒரு கதியும் தெரியல. ஹும்! அதுக்கெல்லாம் நிறைய பணம் வேணும் அங்கிள்.. இன்னைக்கு ஹெட் ஆபீஸ்ல போய் கேட்கிறேன். இன்னும் உன் ஃபைலை பார்க்கல அடுத்த மாசம் வா! ன்னு கூலா சொல்றான்.
இதுக்கு நானு ஒவ்வொரு தடவையும் வேலூர்ல இருந்து சென்னைக்கு வரணும். அப்புறம் சாப்பாட்டுசெலவு இருக்கு. வருவாய்க்கு வழி இல்லாத என்னை மாதிரிஆளுங்களோட கஷ்டத்தைப் பத்தி அவங்களுக்கு என்ன போச்சி?..செத்துப் போயிட்டவங்க கோடிகோடியா சேர்த்து வெச்சிட்டு போயிருக்கிறதா நெனைப்பு அவங்களுக்கு. முப்பத்தி நாலு வருஷ சர்வீஸ். ஒரு நேர்மையான இன்ஸ்பெக்டர்னு பேர் வாங்கினவர். மத்தவங்கள்லாம் ஐய்யயோ! வேணாம்னு தயங்கினப்போ, நான் பொறுப்பேத்துக்கிறேன்னு ரவுடி காகாசி குப்பன் கோஷ்டியை மடக்கப் போயி, உயிரை விட்டார். நடுரோட்ல இருந்து அவர் பாடியை துண்டு துண்டாய் பொறுக்கிக் கொண்டு வந்தோம்.”—–சொல்லும்போதே அழ ஆரம்பித்து விட்டான். அவன் அம்மா சமயல் அறையிலிருந்து கேவுகிற சத்தம் கேட்கிறது. கோபால் அவனை தட்டிக் கொடுத்தார்.
“அவர் தியாகம் யாருக்குப் புரியும்?. மீட்டிங்ல சொல்லி மெடல் குடுத்தா வயிறு ரொம்பிடுமா?. நடுத்தெருவுல நிக்கிற எங்க கதி?. தன் முப்பது வருஷ சர்வீஸ்ல சொந்தமா ஒரு வீடுகூட கிடையாது. என்ன சம்பாரிச்சாரோ என்ன எழவோ?.”
“டேய்…டேய்!.. இதுக்கு மேல அவரைப் பத்தி ஒரு வார்த்தை பேசாதே. என் சர்வீஸ்ல இப்படி ஒரு உத்தமனை நான் பார்த்ததில்லை. அவர் கூட ஒண்ணா படிச்சது, அவர் கீழே கான்ஸ்டேபிளாக வேலை பார்த்தது, இதையெல்லாம் பெருமையா நினைக்கிறேன். அவர் வாழ்ந்ததுக்கு மட்டுமில்லேடா, அவர் சாவுக்கும் ஒரு அர்த்தமிருக்கு தெரிஞ்சிக்கோ. என்னா தெரியும் அவரைப் பத்தி?. “ஆமாமா. நீங்கதான் மெச்சிக்கணும்.”
”இப்ப என்னா உனுக்கு?. எப்படியும் இன்னைக்கு இல்லைன்னாலும் நாளைக்கு உனக்கு வேலை நிச்சயம். அப்புறம்?. குடும்பச் செலவுக்குத்தான் ஜி.பி.எஃப். பணம் ஆறு லட்சம் வந்துச்சி, நிவாரணமா ரெண்டு லட்சம் குடுத்தாங்க இல்லே?. அத வெச்சி கொஞ்ச காலம் சமாளிப்பா ”
”உம்..உம்..அம்மாவையே கேளுங்க. அப்பா போயி மூணரை வருஷமாவுது, இன்னும் பென்ஷனும் கிடைக்கல ஃபைல் இப்ப .ஏஜி`ஸ் ஆபீஸ்ல நிக்கிது, பெண்டிங். ரெண்டு தங்கச்சிங்க. மொத்தம் நாலுபேரு சாப்பிடணும், எங்க படிப்பு செலவு இருக்கு. பேங்க்ல போட்ட பணம் கொஞ்சங் கொஞ்சமா கரைஞ்சி, இன்னும் ஒரு லட்சம்தான் இருக்கு. வேலைகேட்டு அலையறேன். எத்தனை அலுவலகங்கள், எத்தனை நடைமுறைகள்?. அப்பப்பா… அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொழைக்கிறதுக்கென்றே இந்த அலுவலக நடைமுறைகளை உண்டாக்கியிருப்பாங்கன்னு தோணுது அங்கிள்.”
மறுநாள் பாலா காலையிலேயே டிபன் சாப்பிட்டுவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினான். மதிய சாப்பாட்டுக்கு அம்மா நாலு இட்லி மிளகாய் பொடி வெச்சி கட்டி கொடுத்து அனுப்பியிருந்தாள். ஹெட் ஆபீஸுக்கு போனபோது, ஆபீஸில் ஒன்றிரண்டு பேர் அசுவாரஸ்யமாய் எழுதிக் கொண்டும், படு சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டுமிருக்க, கொஞ்சம் பேர் சினிமா செய்திகளில் இருந்தார்கள். மிச்ச ஆபீஸ் கும்பல் முழுக்க வெளியே மரத்தடியிலும், டீக்கடையிலும் இறைந்தபடி புகை விட்டுக் கொண்டிருந்தது. முக்கால் மணி நேரம் காத்துக் கிடந்தான். அப்புறமாய் ஒரு குரூப் டீக்கடையிலேயே இருக்க, இன்னொரு குரூப் சீட்டுக்கு வந்தது. யார் கேள்வி கேட்கமுடியும்?.ஆளுங்கட்சிக்கு நெருக்கமோ, சாதிக் கட்சிக்கு நெருக்கமோ?, இல்லை அரசு அலுவலர் சங்க பொறுப்பாளரோ?.யார் கண்டா?. செக்ஷன் ஹெட் வந்து சீட்டில் உட்கார்ந்தார்.
“சார்!.”—- நிமிர்ந்தார். “கருணை அடிப்படையில வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கேன் சார். பேரு எஸ். பாலசுப்ரமணியன்.எம்.எஸ்.ஸி.”
“உம்…உம்..நீ அந்த இன்ஸ்பெக்டர் சுந்தரம் டெத் கேஸ்தான?.” “இல்லை மர்டர் கேஸ். டியூட்டியில கொலை செய்யப்பட்டார்.” “எதுவோ ஒண்ணு. கம்பாஷினேட் கிரவுண்ட்ஸுக்கு டெத், மர்டர் எல்லாம் ஒண்ணுதான். மர்டர்னா எஃப்.ஐ.ஆர். காபி வேணும். உன் ஃபைலு இப்ப செக்ரட்டரியேட்ல இருக்கு. முடிவெடுக்க வேண்டியது அவங்க.” “ மூணு வருஷமா இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்களே, எப்பத்தான் எனக்கு வேலை கிடைக்கும்?.”—அவன் குரலில் சூடு தெறிக்க ஆரம்பித்தது. “அதை அவங்கதானே சொல்லணும்.”—– பாலா முடியாமல் கை முஷ்டியை குத்திக் கொண்டான்.
“சார்! மூணு வருஷமா நடக்கிறேன். ஃபைலை ஒவ்வொரு ஆபீஸாக தள்ளிக்கிட்டு வந்து இங்க சேர்த்தேன். இப்ப செக்ரட்டரியேட்ன்றீங்க. எங்கப்பா செத்து மூணரை வருஷமாவுது. அவர் பண்ணிய நேர்மையான சர்வீஸுக்குக் கூட எங்கியும் மதிப்பில்லை.போகட்டும், அரசு உத்திரவு எண் —-480யின்படி அரசாங்க ஊழியர் செத்து நூற்றியிருபது நாட்களுக்குள்ள கருணை அடிப்படையில வேலை கொடுக்கணும்னு ஜீ.ஓ. சொல்லுது அதை நான் படிச்சிருக்கேன். ஆனால் வேலை கொடுக்கல. அப்ப எதுக்கு இந்த சட்டம் வெட்டியா?. இங்க சாமி வரம் கொடுத்தாலும், பூசாரிங்க கொடுக்கிறதில்லை.ச்சீ! ”—- கடுப்பில் கொட்டி தீர்த்து விட்டான். செக்ஷன் ஹெட் அவனை ஊன்றி பார்த்தார். இவனை பாம்புன்னு நினைச்சி பயப்பட்றதா?, பழுதையின்னு மிதிக்கிறதா?.
“தம்பீ! இப்படி உட்காரு. ஒரு நிமிஷத்தில எதையெதையோ தொட்டுட்டியே. நீ சொன்ன சட்டம் இப்ப நடைமுறையில இல்லை. அதிருக்கட்டும் சட்டம் சட்டம்னு சொல்றியே ஊழல் செய்றது கூடத்தான் சட்ட விரோதம். ஒருத்தர் தப்பாம எல்லா அரசியல்வாதிங்களும் ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடின்னு ஊழல் பண்ணல?. என்னா பண்ணிட்டோம்?. எங்கியாவது அரசியல்வாதி ஜெயில்லதண்டனை அனுபவிச்சிருக்கானா?, சொல்லு, சொல்லு. ப்ராஸ்டிடியூஷன் கூட்த்தான் தடை செய்யப்பட்டிருக்கு, நடக்கல?. ஜனநாயக நாட்டில சட்டம் பேசாதப்பா. நடக்கிறது கூட நடக்காது. இத்தனை குறைபாடுங்க இருந்தாலும் ஜனநாயகம்தான் பெஸ்ட்டு. பாரேன் உன்னால இங்க வந்து இப்படியெல்லாம் கூட பேச முடியுதே.”
“என்ன பாலிடிக்ஸ் கிளாஸ் எடுக்கப் போறீங்களா?.”
“சரி…சரி…போய் வா. இன்னா கோவம் தம்பிக்கு?.”
“கோவமா?, கொதிச்சிப் போயிருக்கேன் சார். ரெளத்திரம் பழகுன்னுதான் எங்கப்பா சொல்லிக் கொடுத்திருக்கிறார் எனக்கு. இங்க எதுவும் பிரயோஜனமில்லை. எதிரின்னு யாரு கிட்ட சண்டை போட்றது?.யார் எதிரி?. சொல்லப் போனா இந்த சமூக அமைப்பையும், அரசாங்க நடைமுறை சிக்கல்களையுந்தான் சொல்லணும். இங்கே நேர்மையான அதிகாரிகளையெல்லாம் ரெண்டாங்கெட்டான், பொழைக்கத் தெரியாத மனுஷன்னு சொல்றோம். உத்தியோகத்தில் இருக்கும் திருடர்களைத்தான் கெட்டிக்காரர்னு சொல்லிக்கிறோம். நம்முடைய சமூக மனப்பான்மை அந்த கதியில சீரழிஞ்சி கிடக்குது. த்தூ!.”—- அவர் சற்று சிந்தனையோடு அவனைப் பார்த்தார். படித்த வாலிபன், வேலைவெட்டி இல்லாதவன். புத்தி விபரீதமாகத்தான் வேலை செய்யும்.லேசாக சிரித்தார்.
“தம்பீ! செகரட்டரியேட்ல போயி இப்படி பேசாத. பணிவு, அடக்கம் தேவை. முன் கோபத்தை அடக்கு.”—– ஏன் எல்லோரும் என் மீது இதையே திணிக்கிறார்கள்?. அப்படியென்ன முன்கோபம் என்னிடம்?. ஒரு தார்மீக ஆத்திரம் இந்த சமூக நெறியின் மீது. அப்பா கற்றுத் தந்த ரெளத்திரம் இவங்க யார் கிட்டேயும் இல்லையே, ஏன்?. ஹும்! எல்லோரும் அப்பாவாக முடியாது. இப்போது ஒவ்வொரு கட்டங்களிலும் அவனால் அப்பாவின் இழப்பை உணர முடிகிறது. அ.ப்.ப்பா…அப்.ப்.பா.. கண்கள் கசிவதை நிறுத்த முடியவில்லை.
அவரவர்கள் வஞ்சனைகளை மறைக்க போகுமிடங்களில் எல்லாம் அவனுக்கு வண்டி வண்டியாய் உபதேசங்கள். வேலை கொடுக்க வேண்டுமென்பது சட்டம். ஆனால் அதை நிர்வகிப்பவர்களால் மறுக்கப் படுகிறது,அல்லது தாமதப் படுத்தப் படுகிறது. ஊழலுக்கு அடிப்படை இதுதான். யோசிக்க யோசிக்க ஆத்திரம் ஆத்திரமாய், ஜிவுஜிவு என்று கண்கள் சிவந்துப் போக,வீட்டிற்குள் நுழையும் போது உச்சத்தில் கோபம், இந்த சமூகத்தின் மீது, குள்ளநரி மனிதர்கள் மீது,தன் இயலாமையின் மீது……உள்ளே தாழ்வாரத்தில் வழியிலிருந்த பித்தளை சொம்பு பலியானது. எட்டி ஒரு உதை விட்டான். கண கணவென்று உருண்டோட, அம்மா ஓடி வந்தாள்.
“பாலா…பாலா!….என்னாச்சுப்பா?.— எதுவும் பதில் சொல்லாமல் நகர்ந்து உள்ளே போய் உட்கார்ந்த போது அவன் காது மடலில் உஷ்ணத்தை உணர்ந்தான். “பாலா!.”—–நிமிர்ந்தான். கோபால் அங்கிள். “த்சு…த்சு..என்னாச்சுப்பா?. ஏன் அழறே?. சொல்றா.”—-அவனை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தார். பாலா கண்ணை துடைத்துக் கொண்டான். “இப்படித்தாண்ணா தாம் தூம்னு குதிக்கிறது.அப்புறம் அழறது.”
“இங்க எந்தவேலயுமே நடக்கல. எனக்கு பயமா இருக்கு அங்கிள். எப்படி ரெண்டு தங்கச்சிங்களை கட்டிக் கொடுத்து கரை சேர்க்கப் போறேன்?. பேங்க்ல இருக்கிற பணம் என்னா சிக்கனமா செலவு பண்ணாலும் ஒரு வருஷத்துக்கே காணாது. அதுவரைக்கும் வேலை வரலேன்னா, அப்புறம் எல்லாரும் நடுத்தெருவுலதான். அப்பா பென்ஷனும் இப்போதைக்கு வ்ர்றாப்பல தெரியல.”
“ஆமாப்பா. ஏஜி`ஸ் ஆபீஸ்ல போயி விசாரிச்சிட்டேன். எட்டு வருஷங்களுக்கு முன்ன காஞ்சிபுரத்தில அப்பா இருந்தப்ப, ஒரு ரவுடி லாக்கப்ல செத்துப் போனதற்காக உங்கப்பா ஒரு மாசம் சஸ்பென்ஷனில் இருந்திருக்காரு. அப்புறம் அதில இவர் தப்பு எதுவுமில்லைன்னு ப்ரூவ் ஆகி டியூட்டியில ஜாயின் பண்ணாரு.. ஆனால் அதுபத்தின குறிப்பு எஸ்.ஆர்.ல சரியா பதியலையாம். அந்த ஃபைல் கிடைக்காம டிலே ஆகுது.” “அது கிடைக்கப் போறதுமில்லை, எங்களுக்கு பென்ஷன் வரப் போறதுமில்லை.”— பாலா தலை குனிந்துக் கொண்டான்.
“அதுக்காகவா இப்ப அழுதே நீ?. த்சு..த்சு.. அவ்வளவு கோழையா நீ?. டெரர் இன்ஸ்பெக்டர் சுந்தரத்தின் பிள்ளையா நீ?. உங்கப்பா எனக்கு சொன்னதையே நான் உனக்கு சொல்றேன். “இந்த சமூகம் இவ்வளவு கெட்டுப் போயி கிடக்குதே. எல்லா மட்டங்களிலும், எல்லா துறைகளிலும் ஊழல்..ஊழல்னு தலை விரிச்சி ஆடுதேன்னு புலம்பறதை விட்டுட்டு, இப்படி யோசி, இதுதான் ஜனநாயகம். எம்மக்கள் இப்படித்தான். இவர்களை திருத்த என்னாலான எல்லா வழிகளையும் கையாள்வேன். என்னால் முடியும்”- அப்படீன்னு சொல்லிக்க. பிரச்சினைகளை சவாலாய் ஏத்துக்கோ. அப்புறம் பாரு அதை ஜெயிக்கணும்னு நமக்குள்ளே ஒரு வெறி வரும்.”—- பாலா சுரத்தில்லாமல் சிரித்தான்.
“உங்கப்பா எவ்வளவு நேர்மை தெரியுமா?. அவர் டீல் பண்ற கேஸ் என்றால் மேலதிகாரிகள் கூட அதை தொட்றதுக்கு பயப்படுவாங்க. எப்பவும் சுருசுருன்னு கோபம், நெருப்பு மாதிரி. அவருக்கு எவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்கும்?. நேர்மையா இருக்கிறதே பிரச்சினைதானே?. எங்க டிபார்ட்மெண்ட் மேலதிகாரிகள்ல யாருக்கும் இவரை பிடிக்காது. ஒரு நாளாவது உன்னாட்டம் அழுதிருப்பாரா?.”—-பாலா முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டு எழுந்து சென்றார். அவன் அப்பாவை நினைத்துப் பார்த்தான். அம்மா எப்பவாவது சமயமறிந்து அவரைக் காய்வாள்.
“எப்ப பாரு அப்படி யாரு கூட மல்லுக்கு நின்னு, அப்படி பரசுராமர் கோவம் உங்களுக்கு?.”
“உனுக்கு என்னா தெரியும்?. என்னைச் சுத்தி நிறைய திருடனுங்க . எங்க?,எங்க டிபார்ட்மெண்ட்ல, அரசியல்ல. என்ன செய்ய முடியும்?. சட்டத்தை வெச்சியே திருட்றானுங்க. நாங்கள்லாம் கையாலாகாத அலிங்க. நிழல்களோடு யுத்தம் செய்கிறோம், நிஜத்துக்கு சல்யூட் பண்றோம். என்னால காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியலம்மா. அம்பதும் நூறும் திருட்ற வயித்துக்கு இல்லாதவன்களைத்தான் புடிச்சி அடிச்சி நொறுக்க முடியுது.. ஒவ்வொருத்தனையும் சுட்டுப் பொசுக்கிடலாம்னு ஆத்திரமா வருது.”—- அம்மா அவர் தலையைக் கோதிவிட்டு, பிடரியை லேசாக அழுத்திவிட்டு மஸாஜ் பண்ணுவாள். மென்மையாய் சிரித்து சூழலை மாற்றுவார். அவர் அப்படியே அமைதியாகி விடுவார்.பலதடவை அவன் பார்த்திருக்கிறான்.
ஒரு வாரம் கழித்து ஒருநாள் மேலிடத்திலிருந்து ஒரு இடைத்தரகர் பாலாவைப் பார்க்க வந்தார்.
” தம்பீ! உன்னுடைய கம்பாஷினேட் கிரவுண்ட்ஸ் போஸ்ட்டிங் ஃபைல் இப்ப ரெடியா ஆபீஸர் டேபிள்ல இருக்கு. நீ ஏற்கனவே சப் இன்ஸ்பெக்டர் செலக்ஷனுக்கானTNUSRB யின் ரிட்டன் டெஸ்ட்களை கிளியர் பண்ணியிருக்கே இல்லே?. ” ஆமாம் சார்.” “அதில நீ 80 க்கு 72 மார்க் எடுத்திருக்கே தெரியுமா?..”
”சரி சார்! தெரியாது சார். உடல் தகுதியில லாங் ஜம்ப், ஹை ஜம்ப், நானூறு மீட்டர் ஓட்டம், ரோப் கிளெய்மிங்னு நாலு ஐட்டத்தில டபுள் ஸ்டார் வாங்கியிருக்கேன் சார்.” “ஓகே..ஓகே..அதனாலதான் நிர்வாகம் கம்பாஷினேட் கிரவுண்ட்ஸ் போஸ்டிங்ல கிளார்க் போஸ்டிங்குக்கு பதில், உனக்கு தகுதி இருக்கிறதால சப் இன்ஸ்பெக்டர் டிரெயினிங்குக்கு செலெக்ட் பண்ணலாமான்னு யோசிக்குது.”—–பாலா சந்தோஷத்துடன் மண்டையை மண்டையை ஆட்டினான். குபீரென்று மனசெல்லாம் பரபரன்னு சந்தோஷ அலை. அப்பாவைப் போல இன்ஸ்பெக்டர் என்பது ஒரு காலத்திய கனவு அவனுக்கு.
“இந்த போஸ்ட்டுக்கு இன்றைக்கு மூணு லட்சம் கொடுக்கணும். நீ கருணை அடிப்படைன்றதால ஒண்ணு குடுத்துடு, அடுத்த வாரக் கடைசியில ஆர்டர் வந்துடும்.” “இல்லேன்னா?.” “அது எனக்குத் தெரியாது. உன்னை மாதிரி கேஸ் இருபது பெண்டிங் இருக்குது. இந்த வருஷம் போடப் போறது எட்டு மட்டுந்தான். இது இல்லாம மெடிகல் ஃபிட் ஆகணும். எல்லாத்தையும் யோசனை பண்ணி நடந்துக்கோ.” —– பாலாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் உஷ்ணம் ஏற, நல்ல வேளை அதற்குள் வந்தவர் ஒரு போன் நெம்பரை கொடுத்துவிட்டு போய்விட்டார். அம்மா ஓடி வந்து அவனிடம் தயவாய் பேச ஆரம்பித்தார்.
”கண்ணே! நேர்மை நியாயம்னு பேசிக்கிட்டு வீணா போயிடாதேப்பா. நாம நம்மவரைக்கும் நேர்மையா வாழ்ந்துட்டுப் போவலாம். அத்த மத்தவங்க கிட்ட எதிர்பார்க்கறது நடக்காது வீண். பணம் போனால் பரவாயில்லை. இருக்கிற நகைகளை வித்து வேலையை வாங்கிவிடலாம். இனியாவது நமக்கு விடியட்டும்.”
“என்னம்மா இப்படி சொல்றே?.அப்பா இருந்தால் இதுக்கு ஒத்துக்குவாராம்மா? சொல்லு.” “அவர்தான் இல்லையே. எதுக்கு இருந்தான்னு யோசிக்கிற?.’ “என்னால முடியவே முடியாதும்மா. நீ என்ன சொன்னாலும் சரி.” ஆனால்அப்புறம் நடந்ததென்னவோ ஊழல் என்கிற இந்திய ஜனநாயகத்திற்கான சிறப்பான தன்மையின்படியும், சராசரி இந்திய குடிமகனின் இயல்பு படியும், ஊழலுக்கெதிராகக் கூச்சல் போட்டுவிட்டு உடனே அடங்கிப் போய், அப்படி இப்படி புரட்டி, நகைகளை விற்று அந்த இடைத்தரகர் மூலமாக கேட்ட தொகையைக் கொடுத்து வேலை வாங்கியாயிற்று. எல்லோருமாய் கூடி சந்தோஷமாய் டிரெய்னிங்கிற்கு வழியனுப்பி வைத்தார்கள். கான்ஸ்டேபிள் கோபாலும் வந்திருந்தார்.
டிரெயினிங் முடிந்து தேர்வில் சிறப்பாக தேறி ஐ.ஜி. ஆபீஸ்லியே முதல் போஸ்டிங். டியூட்டியில் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. எல்லா வேதனைகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்தாயிற்று. அப்பாவை இங்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. அப்பாவின் மிடுக்கும், சுறுசுறுப்பும் அப்படியே அவனிடம் ஒட்டிக் கொண்டிருப்பதாக பல சீனியர்கள் சொன்னபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அவன் மதியம் சப்பிட்டுவிட்டு ஃபைல் பார்த்துக் கொண்டிருந்த போது கோபால் வந்தார்.
“வாங்க அங்கிள்!.”—–கண்கள் மின்ன அவனிடம் கை குடுத்தார். எழுந்து கேண்டீனுக்கு அழைத்துச் சென்றான். ஒரு விள்ளல் பாதாம் அல்வாவை வாயில் போட்டுக் கொண்டு
“பாலா! உனக்கு இவ்வளவு சீக்கிரம் விஷயம் செட்டில் ஆனதில் ரொம்ப சந்தோஷம். அதைவிட நீ சப் இன்ஸ்பெக்டர் போஸ்ட்டுக்கு செலக்ட் ஆனது டபுள் சந்தோஷம். நடந்தது கனவு மாதிரி இருக்கு. .”—அவன் கையைப் பற்றி குலுக்கினார். பாலா நிறைவாய் சிரித்தான்.
“இன்ஸ்பெக்டர் சுந்தரத்துடைய பிள்ளைன்னு பேர் எடுக்கணும். உன் நேர்மைக்கு இங்க நிறைய வேலை இருக்கும். உங்கப்பா மாதிரி டெரர் பாலான்னு பேர் எடுக்கணும்.”——- பாலா நக்கலாய் சிரித்தான். முணுக்கென்று கோபம் வர, கழுத்து நரம்புகள் தெறித்தன. மூக்கு சிவந்து போய் சீறினான்.
“எதை வெச்சி எங்கிட்ட நேர்மையை எதிர் பார்க்கறீங்க?. ரெண்டு வருஷத்தில நிறைய கத்துக்கிட்டேன். நாடு பூரா கொள்ளையடிப்பானுங்க. நாங்க மட்டும் நேர்மை பேசி சாவணும் இல்லே?. போய்ப் பாருங்க, வண்டி வண்டியா சுருட்றானுங்க, எல்லா இடங்களிலும், எல்லா மட்டங்களிலும், லஞ்சம், வேலையில் சுணக்கம். அவனுங்களை என்னா பண்ண முடியுது?. ஒவ்வொருத்தனையும் சுட்டுத்தள்ளணும்னு வெறி வருது, முடியுமா?. போதும். நாங்க மட்டும் ஏமாளியா நேர்மை பேசி சாக முடியாது. எங்கப்பா வாழ்க்கையே எனக்கு படிப்பினை. அவரை மாதிரி நிர்கதியா நடுத்தெருவில என் பிள்ளைங்களை விட்டுட்டு போவ நான் தயாரில்லை. எனக்கு நேர்மையும் வேண்டாம் குடும்ப பொறுப்புகள்ல இருந்து நான் விலகவும் வேண்டாம். லீவ் இட் அங்கிள். நேர்மைக்கு இங்க சோறு போட கூட வக்கில்லை. நேர்மை எனக்கு வேலை குடுக்கல, லஞ்சம் தான் குடுத்திருக்கு. வேண்டாம் நாடு எவ்வழி, நானும் அவ்வழி. பொறுக்கிப் பசங்க வாழற ஊர்ல நானும் பொறுக்கிதான்.”
“பாலா…பாலா அவன் வாங்கறான்னு நீயும் வாங்கினால் அப்புறம் அவனை குற்றம் சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு?.” “போதும்..நோ மோர் அட்வைஸ் ப்ளீஸ். வண்டி வண்டியாய் கேட்டாச்சு.” கோபால் சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார். சர்வர் எப்போதோ கொண்டு வந்து வைத்த காபி ஆறிக்கிடக்கிறது. இருவரும் எழுந்து வெளியே வந்தார்கள்.கான்ஸ்டேபிள் கோபால் உணர்ச்சி மிகுதியில் இருந்தார்.
”பாலா! இப்ப என் மனசு நெறைஞ்சிருக்குப்பா. என்னா கோபம்டா உனக்கு?. யார் மேலே?. எனக்குத் தெரியும்டா. அலைந்த அலைச்சல், இழந்த பணம், இவற்றால் ஏற்பட்ட ஒரு உணர்ச்சியில் வந்த கோவம்தான் இது. இப்ப நீ பேசின ஒவ்வொரு சொல்லும், அந்த காலத்தில உங்கப்பன் ஊழலுக்கெதிராக ஆவேசமாய் பேசிய அதே வார்த்தைகள்தான். ஒரு அட்சரம்கூட மாறல. ஊழல் பண்றவனை எல்லாம் பொறுக்கின்னு சொல்ற உன்னால ஊழல் செய்ய முடியுமா என்ன?.நெவர். ஊழலுக்கெதிராக என்னா ஆவேசம்?. பாலா! இன்னைக்கு உனக்குள்ளே இருக்கிற என் நண்பனை, இன்ஸ்பெக்டர் சுந்தரத்தை, அவனுடைய மூர்க்கமான சமூகக் கோபத்தை அப்படியே அச்சாய் உன் முகத்தில் பார்த்துட்டேன்டா. அவன் எங்கியும் போயிடல. எனக்கு ரொம்ப சந்தோஷம்பா. கீப் இட் அப்.”—— சொல்லும்போதே அவருடைய குரல் கம்மிப் போய் பிசிரடிக்க, கண்கள் ஓரத்தில் நீர் கசிவு.அவனை தட்டிக் கொடுத்து விட்டு வெளியேறினார். இவன் முதன்முறையாக தன்னை ஒருமுறை சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்தான்.
நன்றி—போடிமாலன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்ற கதை