கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 12,561 
 
 

லண்டன் ப்ரோக்ராம் முடித்து விட்டு இப்போது தான் சென்னையைத் தொட்டு இருந்தான் சந்தீப்.
ஏர்போர்டில் லக்கேஜ் வருவதற்கு காத்திருந்த போது தன்னைச் சுற்றி நின்றவர்கள் பார்வை தன்னை ஒரு முறைக்கு இரு முறை தடவிச் செல்வதை கவனிக்க முடிந்தது. இரண்டு பேர் அவன் கிட்டே வந்து ‘நீங்க ‘பயங்கர தமாஷ்’ ப்ரோக்ராம் பண்ற சந்தீப் தானே? எங்களுக்கு உங்க ப்ரோக்ராம் ரொம்ப பிடிக்கும் ” என்ற போது பெருமிதம் தாங்க வில்லை அவனுக்கு.

6 மாதம் முன்பு வரை சென்னைத் தெருக்களில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தவன் தான் அவன்.

மேஜிக் டிவி நடத்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில் யதேச்சையாக பங்குபெறும் வாய்ப்புக் கிடைத்தது. அவனுடைய ஆபீசில் நடந்த ஷூட்டிங் அவனை ஸ்பாட் லைட்டில் கொண்டு நிறுத்தியது. அவனுடைய பேச்சுத் திறன், அழகு ரெண்டும் அந்த ஷோ டைரக்டரை ரொம்ப கவர்ந்ததில் அடுத்த மாதமே அவனுக்கு ஒரு ஷோ நடத்த வாய்ப்பு .

அவன் மனைவி கவிதாவிற்கு இதில் இஷ்டம் இல்லை.

‘எதுக்கு இதெல்லாம். இப்போ வர வருமானமே நம்ம ரெண்டு பேருக்கும் தாராளம். இது மாதிரி எல்லாம் போனா குடும்பத்தை கவனிக்க முடியாது . வேண்டாம்’ மறுத்துப் பார்த்தாள் .

காதல் திருமணம். இன்னும் ரெண்டு பேர் குடும்பமும் தள்ளியேத் தான் நிற்கிறது. ஜாதி விட்டு ஜாதி திருமணம் அவர்களின் மனதிற்கு ஒப்பவில்லை . வாழ்க்கையில் எதாவது செய்து முன்னேறி ரெண்டு குடும்பங்களிடமும் ஒரு பெயர் வாங்க வேண்டும் என்ற துடிப்பும் அவனுக்கு இருந்தது

‘இது காசு சம்பந்தப்பட்டது இல்லை கவி. கலை சம்பந்தப்பட்டது. இது மூலம் நாம் யாருன்னு இந்த உலகமே தெரிஞ்சிக்க போகுது. பல இடங்கள் சுத்திப் பார்க்கலாம். ராஜா வாழ்வு வரப் போகுதுடி.’ சந்தோஷம் தாங்கவில்லை அவனுக்கு.

சமீப காலங்களில் இந்த மாதிரி ரியாலிட்டி ஷோவில் பங்கு பெரும் எல்லோரும் டிவியில் இருந்து சினிமா உலகத்தில் கால் பதித்து வெற்றிகரமாக இருப்பது தான் அவனது இந்த சந்தோஷத்துக்கு காரணம். இப்போது தான், ஒரு சாதாரண மனிதன் கூட கொஞ்சம் திறமை இருந்தால் புகழ் அடைய சான்ஸ் இருக்கு. நான் கேட்கவில்லை .அதுவே வலிய வரும் போது யாராவது உதைத்துத் தள்ளுவார்களா ?? இப்படீல்லாம் பேசிப் பேசி கவிதாவை சமாளித்து விட்டான் .

அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை ரொம்ப சலேன்ஜிங் . எதாவது ஒரு புது விஷயம். வேற யாரும் இது மாதிரி செய்து இருக்கக் கூடாது. அதற்கு தேவையான எல்லா உதவியும் சானல் செய்யும்.

ஒரு ரியாலிட்டி ஷோ. சென்னையை சுற்றி உள்ளப் புறநகர் பகுதிகளில் உள்ள பேங்க் வாசலில் ஒரு ஆட்டோவுடன் இந்த ஷோ ஆட்கள் நிற்பார்கள். பேங்க்கிற்குள் சென்று அங்கு பணம் எடுப்பவர்களை நோட்டம் விட்டு யாரவது ஒருவரை குறி வைத்து ஏமாற்ற வேண்டும். அவர் ஏமாந்து பயந்து நிற்கும் சமயத்தில் கமெராவுடன் அவர் அருகே சென்று இது ஒரு விளையாட்டு என்று அவருக்கு தெரியப்படுத்தி அவருக்கு ஒரு பரிசளித்து விடை பெறுவது.

இதில் உள்ளே சென்று ஏமாறும் பேர்வழியை தேர்ந்தெடுப்பது, பின்னணியில் பேசுவது, கடைசியில் அவரிடம் அவர் ஏமாந்ததைச் சொல்லி அவருக்குப் பரிசு குடுத்து காமெராவுக்கு போஸ் குடுத்து சிரிப்பது இது தான் சந்தீப்பின் வேலை.

முதல் ரெண்டு வாரங்களில் ஷோ trp டாப்பில் வந்தது.

அதற்கு பிறகு அவனுக்கு ஏறு முகம் தான். அந்த சானலின் எல்லா ஷோக்களிலும் அவனது முகம். மற்ற சானெல்களில் அவனது இண்டெர்வியூ . வெளிநாடுகளில் ஸ்டேஜ் ஷோ என்று விரிவடையத் தொடங்கினான்.

இதோ இப்போது லண்டனில் ஸ்டார் நைட் ப்ரோக்ராம் முடிந்து இப்போது தான் வருகிறான். கவிதா தான் எப்போதும் அவனை அழைத்துச் செல்ல ஏர் போர்ட் வருவாள்.

லகேஜுடன் வெளிய வந்தவன் கவிதாவைத் தேடினான். அவளைக் காணும். போன் எடுத்து அவள் நம்பருக்கு கால் பண்ணினான் . ஸ்விட்சுடு ஆப் . என்ன பொறுப்பே இல்லாம .ச்சே!! கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்தான் அவள் வரவில்லை. அங்கிருந்து ப்ரிவைட் டாக்ஸி அழைத்து வீட்டுக்கு போய் பார்த்தால் வீடு பூட்டி இருந்தது.

என்ன இது? கவிதா இது போல் செய்யக் கூடிய ஆள் கிடையாது. எதாவது ஆக்சிடெண்ட் ஆகி இருக்குமா?? மீண்டும் அவளுக்கு போன் செய்ய முயற்ச்சிக்கும்போது ஒரு போன் கால். எதோ நம்பர். அவசரமாக எடுத்தான்.

‘ஹலோ . ‘ ஒரு ஆண் குரல்.

‘என்னப்பா ரியாலிட்டி ஷோ மன்னா !! என்ன பொண்டாட்டிய காணுமா? இப்போ உனக்கு ஒரு ஷோ நான் காமிக்க போறேன். இதையும் டிவி ல போட்டுக் காட்டுவியா??’

‘யார் ?? யார் நீங்க?? என்ன வேணும் கவிதா எங்க??’ வியர்த்து வழிந்தது அவனுக்கு.

‘ஏனப்பா எல்லா கேள்விக்கும் இப்போவே பதில் சொல்லணுமா ?? ஒரே ஒரு பதில் மட்டும் தான் இப்போ சொல்வேன். உன் பொண்டாட்டி இப்போ என் கூட. ஓகே வா?? உன் வீட்டு வாசல்ல ஒரு கோலமாவு டப்பா இருக்கு பாரு அதுக்குள்ள கை விட்டீனா உன் வீட்டு சாவி கிடைக்கும். கதவ தொறந்து உள்ளர போய் வெயிட் பண்ணு. இன்னும் 10 நிமிஷத்ல கூப்டறேன்.’ சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் வைத்து விட்டான் போனை.

ஒன்றும் ஓடவில்லை. டப்பாக்குள் இருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறந்து உள்ளே போனான்.
வீட்டில் போட்டது போட்டபடிக் கிடந்தது. சமையல்அறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே பாத்திரங்கள் தேய்க்கப் படாமல் கிடந்தன.

தலையை பிடித்துக் கொண்டு அப்படியே ஒரு சேரில் உக்கார்ந்தான். போன் அடித்தது.

‘ ஏனப்பா உள்ளப் போய் சௌகரியமா உக்காந்தியா?? போலீசுக்கு போலாமான்னு நீ யோசிக்க மாட்டேன்னு நினைக்கிறன். எவ்ளோ சினிமா பார்த்திருப்பே. அதே தான் உன் பொண்டாட்டியை நான் என்ன வேணா பண்ண முடியும் . நீ சொன்ன பேச்சுக் கேட்டு நல்ல பையனா இருந்தேனா உனக்கும் நல்லது உன் பொண்டாட்டிக்கும் நல்லது. சும்மா சொல்லக் கூடாது. உன் பொண்டாட்டி அநியாயத்துக்கு அழகா இருக்காப்பா!!’

‘ப்ளீஸ் ..உனக்கு என்ன வேணும்?? பணம் எவ்ளோ எங்க வந்து குடுக்கணும்னு சொல்லு தரேன். கவிதாவை விட்டுடு.’ ரொம்ப பலவீனமாக கேட்டது அவன் குரல்.

‘ஒரு கோடி கிடைக்குமா??’ சிரித்தான் அவன்.

‘ஒரு கோடியா ?? நானே இப்போத் தான் சம்பாதிக்க ஆரம்பிச்சு இருக்கேன் ப்ளீஸ் நான் உனக்கு ஒரு 4 லட்சம் தரேன் அவள எங்க வெச்சு இருக்க??’ கொஞ்சம் விட்டால் அழத் தயாராக இருந்தான் அவன்.

‘வெயிட் பண்ணுப்பா உன் பொண்டாட்டி அவ்ளோத்தான் பெறுவாளா??’ எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் குடு.’ வைத்து விட்டான்.

என்ன செய்வது இப்போது. போலீசிடம் போலாமா?? இது தான் நம்ம அடைந்த புகழுக்கு கிடைத்த தண்டனையா. கவிதாவிற்கு இதில் இஷ்டம் இல்லை. இப்போ அவ தான் பலிகடா ஆகி விட்டாள் . என்ன செய்வான் அவளை. அவன் வார்த்தைகள் சந்தீபை வதைத்தன.பணம் குடுத்தாலும் அவளை ஒண்ணும் செய்யாமல் அனுப்பி வைப்பான் என்பதில் என்ன நிச்சயம்??வாழ்க்கையே போய் விட்டது. எவ்வளவு கேட்பான். தனது சக்திக்கு மேல் கேட்டால் யாரிடம் சென்று கேட்க முடியும்?? மனசுக்குள் ஓடிய எண்ணங்களை நிறுத்த முடியவில்லை. பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்.

தன்னையும் அறியாமல் ஹாலின் குறுக்கும் நெடுக்கும் வேகமாக நடந்து கொண்டு இருந்தவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது. ச்சே!! என்னை நம்பி வந்தவள். இந்த கதி பண்ணி விட்டேனே.

போன் அடித்தது. ‘யப்பா!! சந்தீபா !! ரெடியா இரு ஒரு ஹண்ட்பாக்ல பணத்தப் போட்டு வாசலுக்கு வா. அங்க ஒரு 10 நிமிஷத்ல ஒரு கால் டாக்ஸி வந்து நிக்கும் அந்த வண்டிக்குள்ள பின் ஜன்னல் வழியா பணத்த போடு. எட்டிப் பாக்க ட்ரை பண்ணாத. பணத்தப் போட்டுட்டு திரும்பி பாக்காம போய் கேட் பக்கத்ல நில்லு அடுத்த 2வது நிமிஷம் ஒரு ஆட்டோவுல உன் பொண்டாட்டி வந்து நிப்பா. ஏடாகூடம ஏதாவது பண்ணின.. நீயும் காலி உன் பொண்டாட்டியும் காலி.’

அவசர அவசரமாக லண்டனில் இருந்து கொண்டு வந்த பாகை காலி செய்தான் . ஊருக்கு போவதற்கு முன் ரெண்டு மூணு ஷோ பண்ண வாங்கிய அட்வான்ஸ் பணம் இருந்தது . எண்ணிப் பார்க்க நேரம் இல்லை. எடுத்து அடைத்தான்.

வாசலுக்கு ஓடி வந்தான். தெருவை கடந்து அந்த பக்கம் ஒரு டாக்ஸி நின்றது. ஓடிப்போய் அதன் பின் சீட்டில் பணப்பையைப் போட்டான் . கேட் அருகே வந்து நின்றுக் கொண்டு அந்த டாக்ஸியேப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

2 நிமிஷம் 5 நிமிஷம் …..திடீரென்று அந்த டாக்ஸி வேகம் எடுத்தது. சொன்ன மாதிரி ஆட்டோ ஒன்றும் வரவில்லை. வேகமாக ஓடும் டாக்ஸி பின்னால் பைத்தியக்காரன் போலக் கத்திக் கொண்டே ஓடினான்..

கண்ணில் இருந்து மறையும் டாக்ஸியை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு நின்றவனின் போன் அடித்தது.

‘என்னங்க .. ஊரில் இருந்து வந்துடீங்களா .?? ஏன் நீங்க ஆஸ்பத்ரிக்கு வரல??’

கவிதாவின் குரல்.

‘ என்ன ஆஸ்பத்திரி.. என்ன விஷயம்??’ தடுமாறிப் போனான்.

‘என்னங்க .. நேத்து நீங்க ப்ரோக்ராம்ல இருக்கும் போது நான் போன் பண்ணினேன். எனக்கு திடீர்னு வயத்து வலி ஜாஸ்தியாகி இங்க ராஜு நர்சிங் ஹோமேல அட்மிட் ஆகி இருக்கேன் .இன்னிக்கி எனக்கு அப்பெண்டிக்ஸ் ரிமூவ் பண்ணி ஆபரேஷன். உங்க ப்ரெண்ட் ராம்ஜி தான் போன் எடுத்துப் பேசினாரு. எனக்கு ஆபரேஷன் . உங்கள நேர ஆஸ்பத்ரிக்கு வர சொன்னேனே அவரு சொல்லலியா ??’

அவனுக்கு தலை சுற்றியது.

‘உன் போன் ஆப் ஆகி இருந்துதே?? ‘

‘உங்க சானெல் ஆளுங்கத் தான் என்னை அட்மிட் செஞ்சு உதவி செஞ்சாங்க.நீங்க சொல்லித் தான் வந்தாங்கன்னு நினைச்சேன். போன் , வீட்டு சாவிக் கூட பாலா சர் கிட்ட குடுத்தேன்.அவர் இப்போத் தான் கிளம்பி போனாரு. நீங்க எப்போ வருவீங்க.??

யாருமே துணைக்குக் கூட இல்லை சீக்கிரம் வாங்க’. பாவமாக ஒலித்தது அவள் குரல்.

‘வரேன்’ சுருக்கமாகச் சொல்லி விட்டு ராம்ஜிக்கு போன் போட்டான்.

‘என்ன மச்சான் பயந்துட்டியா . சும்மா ஒரு கேம் பா. நாளிக்கு நம்ம சானல்ல உன் ப்ரோக்ராம் தான் ஹை லைட் . ரியாலிட்டி ஷோ மன்னனுக்கு ரியாலிட்டி செக் அப்படின்னு . உன் வீட்ல நாலு கேமரா நேத்தே பிக்ஸ் பண்ணிட்டோம் . உன் ரியாக்க்ஷன் எல்லாம் நல்ல பதிவாகி இருக்கு.கேட் தாண்டி நீ டாக்ஸி பின்னாடி ஓடும் போது நம்ம லேடி ஸ்டாப் எல்லாம் கண் கலங்கிட்டாங்கன்னா பாரேன். ப்ரோமொஸ் (promos)ரெடி இன்னும் 10 நிமிஷத்துல டிவி ல வரும் பாரு. உன் பணம் பத்திரமா டிவி ஸ்டேஷன்ல இருக்கு நாளைக்கு கலெக்ட் பண்ணிக்கோ.இந்த ஷோ வெச்சுத் தான்பா நான் பெரிய ஆள் ஆகணும்.எவ்ளோ நாள் தான் உன் சைடுல நிக்கறது?? கவிதாக்கிட்ட சாரி சொன்னேன்னு சொல்லு. நாளைக்கு ஒரு பெரிய கிப்ட் உங்க ரெண்டு பேருக்கும் எங்க சார்புல காத்திருக்கு’

அடுத்த நாள் ப்ரோக்ராம் trp யில் முதல் இடம்.

ஹாஸ்பிடல் பார்மசியில் மருந்து வாங்க நின்றிருந்தான் சந்தீப்.

‘எல்லாம் ட்ராமாபா !! இந்த டிவி ஷோ பண்றவங்க காசுக்காக என்ன வேணா பண்ணுவாங்க.. பொண்டாட்டியை கடத்தி வெச்ச மாதிரி நடிப்பு. இந்த சந்தீப் சினிமாவுல ஒரு ரவுண்டு வருவாரு பார். நாமத் தான் கேனைங்க. எது போட்டாலும் வாயை புளந்துக்கிட்டு இருக்கிற வேலையை விட்டுட்டு பார்க்கிறோம் பாரு.’

யாரோ பேசிக் கொண்டே கடந்து போனார்கள்.

சந்தீப்புக்கு சிரிப்பு வரவில்லை.

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *