கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)  
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 14,110 
 
 

பாகம் ஒன்று | பாகம் இரண்டு

பிறகுதான் ராணீ நம் பெண் புலியைப் பார்த்து முன்பே அறிமுகமான பாவமும் அளவற்ற துயரமும் நிறைந்த முகத்துடன் நீயா என்று தாழ்ந்த குரலில் கேட்டாள். அப்போது முழங்கிக்கொண்டிருந்த இசைத் துடிப்பின் அத்தனை ஆரவாரத்திற்கிடையிலும் அந்த வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. என்னால் என் காதுகளை நம்ப முடியவில்லை. ஒரு மனிதனிடம் பேசுவது போல அத்தனை சுவாதீனமாக நம் பெண் என் கண் முன்னே ஒரு மிருகத்திடம் பேசுவதை என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. இளவரசி அந்தக் கேள்வியைக் கேட்டபிறகு சாளரத்தை நோக்கிப் புலி செல்லுவதையே தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மேற்கொண்டு புலி நம் பெண்ணிடம் மனிதனின் மொழியில் பேசக் கூடுமென்றும் எதிர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். ஆனால் அற்புதங்களின் இருப்பு திரேதாயுகத்தோடு தீர்ந்து போய்விட்டபடியால் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடந்து என் இதயத்துடிப்பை நிறுத்தி விடவில்லை . புலி கண்களிலிருந்து மறைந்த பிறகு நம் பெண் தன் கண்களை திருப்தியுடன் மூடிக் கொண்டு மிக அமைதியுடனும் சோர்வுடனும் பூமாலையின் நளினத்தோடு படுக்கையில் சாய்ந்தாள். அப்பையா அவளுக்கு மயக்கத்துக்குரிய சாதாரண சிகிச்சையை அளித்து முடித்த பின் நாங்கள் படுக்கையறையை விட்டு வெளியே வந்தோம் என்று தன் கதையை முடித்தார் ராஜன். இவ்விதமாகவே அந்த இரவின் சம்பவங்கள் மேலும் இருபது வகையான கதைகளாக வேடர்களின் மூலமாகவும் விரிந்து பரவியதால் என் முதிர் முப்பாட்டனார் எழுபத்தைந்தாம் நாள் அரண்மனைக்குத் திரும்பி வந்தபோது தாங்கமுடியாத ஜனக் கூட்டம் அரண்மனை வாயிலை நெருக்கியடித்துக்கொண்டிருந்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன். மூன்று நாட்களுக்கு முன்பே அவர் அரண்மனைக்கு வருகை தரப் போகும் நாளைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அண்டை சமஸ்தான வாசிகள் கட்டுச் சோற்று மூட்டைகளுடன் மாட்டு வண்டிகளில் சாரி சாரியாக வந்து சமஸ்தானத்தின் சாலைகளையும் விடுதிகளையும் தோட்டங்களையும் நிரப்பி விட்டார்களாம். மேலும் ஏழு நாட்களுக்கு முன்பாகவே அயல் தேசங்களிலிருந்து கழைக் கூத்தாடிகளும் வியாபாரிகளும் நடன நாட்டியக் கலை வல்லுனர்களும் வேசிகளும் உள்ளூர் பிச்சைக்காரிகளும் வந்து ராஜதானியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தார்களாம். எங்கும் எந்த நேரத்திலும் சூரியனின் பிரகாசத்தை விஞ்சும் வண்ண விளக்குகள் பிரகாசித்துக்கொண்டேயிருந்ததால் அந்தக் காலங்களில் எந்த கவிஞனும் நிலவைப் பார்த்து கவிதை எழுத முடியாமல் போய் விட்டதென்றும் அதனால் அவ்வளவு அமளிக்கிடையில் கவியரங்கங்கள் மாத்திரமே வெறிச்சோடிப் போயிருந்தன என்றும் என் பாட்டனார் தான் கேள்விப்பட்டதை மிகையின்றி எங்களுக்குச் சொல்லுவார். தன் மகள் குணமடைந்ததைக் கொண்டாடும் விதத்திலும் பிற தேசத்தின் ராஜகுமாரர்களை அரண்மனைக்கு அழைக்கும் விதத்திலும் வந்து குவிந்த ஜனங்களை கௌரவிக்கும் விதத்திலும் ராஜகுடும்பத்தின் சார்பாக பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகளும் தினசரி அன்னதானமும் பிரத்யேக விடுதியுபசாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இத்தனை கேளிக்கைகளிலும் பங்குகொள்ள என் முதிர்முப்பாட்டனாரின் மலையாள தேசத்து மனைவியும் அவர்தம் இரண்டு ஆண் மக்களும் ஒரு பெண்ணும் ஆக நால்வரும் சிறப்பு விருந்தினர்களாக அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (இந்தப் பெண்தான் வருடங்களுக்குப் பிறகு சொந்த தேசத்துக்கு திருப்பியனுப்பட்ட என் முதிர் முப்பாட்டனாரின் மனைவியுடன் கூடவே அனுப்பப்பட்டவள். பிறகு சாகும் வரை அவர் அவர்களிருவரையும் பார்க்கவுமில்லை கேள்விப்படவுமில்லை . ஆண் வாரிசுகள் இருவரும் வம்ச விருத்திக்காகவும் கல்வி கற்றுக் கொள்ளும் பொருட்டாகவும் அவருடனே தங்கி வளர்ந்து வந்தார்கள். ஆனால் அதற்குள் சனியின் நேர் பார்வையில் சிக்கிக் கொண்டுவிட்ட என் முதிர்முப்பாட்டனாரின் வீழ்ச்சி துவங்கி விட அவருடைய வித்தைகள் கற்றுக் கொடுக்கப்படாமல் மறதியால் பாழடைந்து போனதால் அவர்களும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவ்விதமாக ஆக்கப்பட்ட அந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வாரிசுகளாகிய நாங்களும் சூட்சுமங்களை இழந்து வெறுமே மயிரைச் சிரைத்துக்கொண்டிருப்பதென்கிறதாகவே ஆகிப்போன நாவிதத்தைக் காலப்போக்கில் கைவிட்டுவிட்டு கூலிக்குக் கதை சொல்லுபவர்களாக வனத்தினுள் எங்களை மறைத்துக்கொண்டு வாழ விதிக்கப்பட்டு விட்டோம். இத்தனை கோலாகலத்திற்கிடையிலும் அமளிக்கிடையிலும் தன் கணவர் அதே பழைய நடுக்கத்துடன் தன் ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறெதிலும் பங்கேற்கவில்லை என்று அவர் மனைவி சொல்லி ஆச்சர்யப்பட்டுக் கொண்டேயிருந்தாராம். கரை கடந்த அந்தக் கேளிக்கை நாட்களின் உண்மையான கதாநாயகன் தானே எனும் அகம்பாவத்தூசி அவர் உடையின் நுனியிலும் ஒட்டிக்கொள்ளாததை அவர் மிகப் பெருமையாகச் சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டிருக்கிறார். இவ்வாறாக அனைவரும் இரண்டு நாளிரவுகளின் கதையைக் கேட்க வெகு ஆர்வத்துடன் அரண்மனை மைதானத்தில் வந்து குழுமியிருந்த காலத்தில் ராஜனின் பெண்ணும் தனக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தாள். அவளிடம் ராஜனும் ராஜன் மனைவியும் எவ்வளவு துருவிக் கேட்ட போதிலும் அவளால் எதையும் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை . அழகிய ஆண் மக்களின் உருவம் முன்பு தந்து கொண்டிருந்த அருவருப்பு உணர்வை இப்போது தரவில்லை என்பதை மட்டுமே அவளால் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்திருந்தது. எனவே நடந்தவற்றைச் சொல்லும் பொருட்டு என் முதிர்முப்பாட்டனார் தன் அறையிலிருந்து வெளிப்பட்டு மீண்டும் அரண்மனை வளாகத்துக்கு விஜயம் செய்து நாளன்று எல்லாருடனும் சேர்ந்து அதைக் கேட்க வசதியாக ராஜனின் பெண்ணுக்கும் தனி இருக்கை போடப்பட்டிருந்தது. அது என் முதிர்முப்பாட்டனாரின் இருக்கைக்கு நான்கடி தாழ்வான உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் இருந்தது. ராஜனின் மனைவிக்கும் ராஜனுக்கும் அவர் இருக்கைக்குச் சமமான மட்டத்தில் ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரண்மனை வைத்தியர் உட்பட மற்றவர்களுக்கு மூன்றடி தாழ்ந்த பீடங்களில் இருக்கைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. இவ்வகை மரியாதை வெகு அபூர்வமாகவே ராஜ குடும்பத்தவரால் யாருக்கும் கொடுக்கப்படுவது வழக்கம். பொதுஜனங்கள் அரண்மனை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த திண்டுகளிலும் தரையிலும் மரங்களின் மேலும் சிலைகளின் மேலும் அமர்ந்து கொள்ளச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஆனந்த மிகுதியால் உணர்ச்சிவசப்பட்டு சின்னாபின்னப்படுத்தி வைத்து விட்டுப் போன கலைப் பொருள்களையும் அலங்காரச் செடி வகைகளையும் புற்றரையையும் மறுபடி சீர் செய்ய தொண்ணூற்றாறு நாட்களும் இருநூற்று முப்பது ஆட்களும் தேவைப்பட்டதென்பார்கள். இவ்விதமாக துவங்கும் முன்பே அகிலம் முழுவதையும் தன் வசம் ஈர்த்ததென்கிற பெருமையுடைய அந்த இரவின் கதையை என் முதிர்முப்பாட்டனார் இரண்டு பகுதிகளாகப் பிரித்து இரண்டு இரவுகளில் சொல்லிப் போயிருக்கிறாரென்று கதைகள் குறிப்பிடுகின்றன. அவருடைய வித்தையில் அவருக்கிருந்த மேதமை ஓரிரவிலும் அவருடைய சமயோசிதமும் நுண்ணறிவும் இரண்டாம் இரவிலும் அந்தக் கதைகளின் வழியே வெளிப்படுகின்றன என்கின்றன அவை வேறு சில கதைகள் அவர் சொல்லத் துவங்கிய நாழிகையின் மேல் காலம் நகராது நின்று போனதால் துவங்கிய நாழிகையிலேயே கதை முடிந்து போய்விட்டதாகச் சொல்லுகின்றன. அவர் சொல்லத் துவங்கும் போது மேற்கு நோக்கிச் சரிந்து கொண்டிருந்த பூரண சந்திரன் அந்த நிலையிலேயே இரண்டு நாட்களும் உறைந்து தொங்கிக்கொண்டிருந்ததைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன. அவர் சொல்லத் துவங்கிய போது அங்கே நுழைந்து வீசிக்கொண்டிருந்த காற்று மீண்டு வெளியே செல்லாமல் அங்கேயே சிக்கிச் சுழன்று கொண்டிருந்தது. அவர் சொல்லத் துவங்கிய போது அங்கே குழுமியிருந்த ஒவ்வொருவரின் மனத்திலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட வேறு சிந்தனைகள் அவர் கதையை முடிக்கும் வரை நுழைய முடியவேயில்லை. எனவே முதல் நாள் இரவின் முதல் ஜாமத்தின் முதல் வினாடியில் துவங்கப்பட்ட அவர் கதை முடிந்த போது இரவும் முதல் ஜாமத்தின் முதல் வினாடியைத் தாண்டாமல் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். உட்சுவாசத்திற்கும் வெளிச்சுவாசத்திற்கும் இடைப்பட்ட கால அவகாசத்திற்குள் மிகப் பெரிய அசம்பாவிதங்களையும் துர்மரணங்களையும் நிகழ்த்தி முடித்துவிட்ட அந்த மிக நீண்ட அல்லது மிகச் சிறிய கதையை அன்று வர முடியாமல் போன தொலை தூர உறவினர்களுக்கு அன்று வந்திருந்தவர்கள் பின்னாளில் திரும்பச் சொல்லத் துவங்கிய போது முகமனிலேயே இரண்டு இரவுகளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள் என்கின்றன அந்த வேறு சில கதைகள்.

என் முதிர்முப்பாட்டனார் சொல்கிறார்: ராஜ குடும்பத்தின் வாரிசை என் என் வித்தையால் காப்பாற்றினேனென்று அனைவரும் எனக்கு நன்றி கூறவும் பாராட்டவும் என்னைத் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள். உண்மையில் உபயோகப்படுத்தாமல் துருப்பிடித்துப் போகவிருந்த என் ஏட்டுக் கல்வியை ஒரு முறை தீட்டிப்பார்க்க வாய்ப்பளித்து அதற்குப் புதிய பொலிவைத் தந்த அனைவருக்கும் நான்தான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். பிறர் தூக்கத்தினுள் புகுந்து அவர்களுடைய கனவுகளைப் பார்க்கும் அதிசயமான என் கலை ராஜ குடும்பத்தின் வாரிசை அதன் முடிவிலிருந்து காப்பாற்ற உபயோகப்பட்டது என்று எண்ணும் போது நான் கற்ற வித்தையின் முழுப்பலனை அடைந்ததாக நினைத்துப் பெருமைப்படுகின்றேன். என் பேச்சில் பலருக்கு வெறுப்பும் வைத்திய முறையில் சந்தேகமும் இருந்து வந்தபோதிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது என் பிரயோகத்தில் முழு நம்பிக்கை வைத்து எனக்குப் பூரண சுதந்திரம் அளித்து ஒத்துழைத்த ராஜனின் துணைவி யாரையும் இந்தச் சமயத்தில் வாழ்த்தி அவர் ஆக்ஞைப்படி நடந்தவற்றைச் சொல்லத் துவங்குகிறேன். ராஜனின் பெண்ணைப் பீடித்திருந்த வினோதமான நோய் வெறும் துர்கனவுகளின் சேஷ்டைகளால் மாத்திரம் விளைந்தது அல்ல. ஒரு ஆரோக்கியமான மனதையும் தேகத்தையும் கெட்ட கனவுகள் பயமுறுத்த முடியுமே தவிர உருக்குலைத்துவிட முடியாதென்று வைத்திய மாந்திரீக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. யதார்த்தத்தின் லயப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட மனதையோ உடலையோ மட்டுமே துர்சொப்பனங்கள் அவற்றின் பலவீனமான நிலையை பயன்படுத்திக் கொண்டு ஆக்கிரமித்துக் கொள்ள முடியும். ராஜனின் பெண் ஒரே சமயத்தில் கெட்ட கனவொன்றாலும் (அதைக் கெட்ட கனவென்று எப்படி சொல்லுவது.) அந்தக் கனவோடு அதிசயக்கத்தக்க விதத்தில் இயைந்து போன புற யதார்த்த வினோதமொன்றாலும் பீடிக்கப்பட்டு நோயுற்றுப் போனாள். வினோதத்திற்குக் காரணம் அவள் புறத்தே கண்ட அந்த யதார்த்தம் இன்னொரு உயிரின் கனவாக இருந்தது என்பதுதான். இதை நான் கண்டு பிடிக்க நேர்ந்ததும் ஒரு தற்செயலான சம்பவமே. அதற்காகக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால் அதை நான் கண்டுபிடித்திருக்காவிட்டால் கனவுகளுக்குள் ஊடுருவி அதைக் கைப்பற்றும் பூர்ணத்துவத்தை இன்னும் எட்டிவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் என் குறைப்பட்ட கல்வி ஞானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ராஜன் மகளை என்னால் குணப்படுத்தியிருக்க முடியாது. உண்மையில் அவளைப் பீடித்திருந்த நோயை நோய் என்று சொல்லுவதே தவறு. அது எதிர்கால நிகழ்வொன்றின் சூசக வெளிப்பாடு. அந்த சமிக்ஞையின் அர்த்தத்தைக் கண்டு கொள்ள என்னால் முடியவில்லை. அது ராஜ குடும்பத்தின் விதியோடு தொடர்புள்ளதாக இருக்கலாம். அதை வேறு யாரும் கூட கண்டு சொல்ல ஆகாது என்றே மனப்பூர்வமாக நான் நம்புகிறேன். இதைப்பற்றி நான் மேற்கொண்டு வேறேதும் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்லலாம். (இவ்வாறாக என் முதிர்முப்பாட்டனார் தான் கண்டு கொண்ட தவிர்க்க முடியாத தன்னுடைய தலையெழுத்தையும் தன் நாட்டின் விதியையும் மக்களிடமும் ராஜனிடமும் கொண்டிருந்த வாஞ்சையால் சொல்லாமல் விட்டார்).

ராஜன் பெண்ணின் கனவுகளைக் கண்டுணர நான் சென்ற இரவு என்னுள் இருந்த நடுக்கத்தையும் தயக்கத்தையும் என் மனைவியே நன்கறிவாள். யவ்வனப் பெண்ணொருத்தியின் கனவுகளை வைத்தியன் உள்பட யாருமே பார்ப்பதைப் பற்றி நான் படித்த சாஸ்திரங்கள் எதுவுமே குறிப்பிடவில்லை. பெண்களின் கனவுகள் பற்றி அனைத்துக் கலை சாஸ்திரங்களுமே மௌனம் சாதிக்கின்றன என்பதை நான் திடுக்கிடும் விதத்தில் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அறிந்து கொள்ள நேர்ந்தது. அந்த வகையில் வித்தைகள் குறைப்பட்டவையென்று கூறுவதில் எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை. அந்த அனுபவத்தால் இனி எனக்கு விதிக்கப்படவிருக்கும் நற்பலனோ அன்றி கெட்டபலனோ அந்தக் குறையை நிவர்த்திக்கும் பாடமாக அவற்றில் சேர்க்கப்பட வேண்டியதாயிருக்கும். ரகசியமானவை. அவள் கன்னித்தன்மையைப் போலவே அவளுக்கு மட்டும் சொந்தமானவை. நம்பமுடியாத அளவுக்கு அதிசயத் தன்மையும் வண்ணங்களும் சுகந்தமும் கொண்டவை. அவற்றை இரண்டாம் மனிதர் குறிப்பாக ஒரு ஆண் காண அனுமதி கிடையாதென்ற இன்னமும் நான் நம்புகிறேன். என்றாலும் சந்தர்ப்பவசத்தால் ராஜன் பெண்ணின் கனவை நானும் காணும் வாய்ப்பு எனக்கு விதிக்கப்பட்டது. இப்போது அதே போல மற்றொரு சந்தர்ப்பவசத்தால் அதை வெளியே சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்து விட்டது. இந்தப் பெண்ணைப் போன்ற இன்னொரு பெண் இந்த உலகத்தில் எங்கேனும் அதேவித நோயால் துன்புற்றுக்கொண்டிருந்தால் அவளுக்கும் வைத்திய சாஸ்திரத்தில் சில திருத்தங்களுக்கும் இது உபயோகப்படட்டும் என்கிற தூய எண்ணத்துடனேயே இன்று நான் இதை பகிரங்கமாக வெளியே என்னைச் சூழ்ந்துகொள்ள நான் மனப்பூர்வமாகவே அனுமதிக்கிறேன். கடவுள் என்னை மன்னிக்கட்டும்.

உலகத்திலுள்ள அனைத்து யவ்வன ஸ்திரீகளின் கனவுகளைப் போலவே ராஜன் மகளின் கனவும் அவளுடைய ஆண் துணையைப் பற்றியதாகவே இருந்து வந்தது. உலகத்திலுள்ள அனைத்து யவ்வன ஸ்திரீகளைப் போலவே அவளும் அந்தக் கனவை விரும்பிக் கண்டு வந்தாள். அவளுடைய இரவுகளுக்குத் துணையாக அவளே தன் கற்பனையில் சிருஷ்டித்துக் கொண்ட ஆண்மகன் அவளுடன் நெடுங்காலமாகப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான் என்பதைக் கனவில் அவன் அவளுடன் பழகும் போது காட்டிய சுவாதீனத்தையும் சகஜத்தையும் கண்டு நான் அறிந்து கொண்டேன். அவன் அவளுக்குச் சாவைப் போலத் தவிர்க்க முடியாதவனாயிருந்தான். அவனுடைய அவயவங்கள் அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடி அரூபத் தன்மையும் கலைந்து சேரும் நீர்த் தன்மையும் கொண்டிருந்தன. ஆனால் அவன் பேரழகன். அங்க அங்கமாக பொலிவைப் பிரித்துப் பார்க்க முடியாவிட்டாலும் அவனுடைய இருப்பும் கனவின் சுகந்தமுமே அவன் பேரழகன் என்பதைத் தெளிவாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. இந்த உலகத்தில் எங்கும் காணப்படவே முடியாத அற்புதமான ஆண்மக்கள் கன்னிப்பெண்களின் கனவுகளுக்குள் எத்தனை சுவாதீனமாக நடமாடிக் களிக்கிறார்கள். உண்மையில் அவ்வளவு வசீகரமான ஆண்கள் பூதவுடலுடன் வசிக்கத் தகுதியற்றதுதான் இந்த யதார்த்தமும். அந்த அழகன் உருவத்தில் புகைத் தன்மையுடன் காணப்பட்டாலும் அவன் அசைவுகளில் தீர்க்கம் இருந்தது. அவன் ராஜன் பெண்ணின் படுக்கையறையின் வலப்புறச் சாளரத்தின் வழியாக மதுரமான தென்றலின் எடையின்மையோடு உள்ளே நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்தவுடன் படுக்கையறை மட்டுமே நம் ராஜனின் அரண்மனையைப் போலப் பத்து மடங்கு பெரிதான அளவில் பிரம்மாண்டமானதாக விசாலித்து விட்டது. ராஜன் மகளின் சப்பர மஞ்சமோ ஒரு அஸ்வரதம் இரண்டு நாட்கள் ஓடிக் கடக்கும் அளவுக்கு விரிந்து மலர்ந்து கிடந்தது. படுக்கையறையின் விதானத்தின் வழியாக மேகங்களும் நட்சத்திரங்களும் வானத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. அறையின் பொருட்களில் செதுக்கப்பட்டிருந்த வேலைப்பாடுகள் ஒவ்வொன்றுமே தனித்தனிப் பொருட்களால் பரிமாணம் பெற்றன. உள்ளே வளர்க்கப்பட்டிருந்த மலர்கள் விரித்த மணம் கனவைத் தாண்டி வெளியேயும் சுழன்று அடித்தது. ஒவ்வொரு நுண்ணியதுகளும் பன்மடங்காக வளர்ந்து போனதால் அவற்றின் இயற்கையான வண்ணங்கள் சூரியனின் பிரகாசத்தைப் போல வெம்மையும் ஜொலிப்பும் பெற்று அறையை வண்ணங்களாலும் அங்கே சுற்றித் திரிந்த இருவரையும் வியர்வையாலும் குளிப்பாட்டின. இத்தகைய அற்புதமான கனவுலகை சிருஷ்டித்துக் கொண்டும் ராஜனின் பெண் அறையெங்கிலும் சிருங்கார ரசம் ததும்பும் பாடல் வரிகளை முணுமுணுத்த வண்ணம் தன் நண்பனுடன் அந்தர வெளியில் பறந்தபடிக்கும் உல்லாசமாக வளைய வந்து கொண்டிருந்தாள். அவனுடைய புகை வடிவம் இந்தப் பெண்ணுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையாகப் படவில்லை . அவள் அவனை உடலோடும் உதிரத்தோடும் உண்மையான மனிதனை தழுவிக் கொள்வது போலவே தழுவிக்கொண்டாள். அவனை முத்தமிடுவது போலவே உதடுகளிலும் மார்பிலும் நாபியிலும் நாபியின் கீழும் முத்தமிட்டான். அவர்களிருவரும் என் காதுகள் கூசும்படியான கனிந்த அந்தரங்க வார்த்தைகளைத் தங்களுக்குள் பரிமாறிக்களிப்புடன் கொஞ்சிக் கொண்டார்கள். வண்ணங்களும் மணமும் சிரிப்பொலியும் ஒன்றறக் கலந்த ஆடையணிகளின் அலைவும் உலகத்தையே துயிலிலிருந்து எழுப்பி விடும் ஆரவாரத் தன்மையும் அப்பழுக்கற்ற தூய்மையும் கொண்டு இலங்கின. ஆண்டவனே வார்த்தைகளால் அசுத்தப்படுத்தக் கூடாத இந்தப் பரிசுத்தமான காட்சிகளை வெளியே சொல்லும் துர்பாக்கியம் எனக்கு என் வித்தையால் வாய்த்ததே.

ஒருவர் ஓட ஒருவர் துரத்தியும் ஒருவர் ஒளிந்துகொள்ள ஒருவர் கண்டுபிடித்தும் ஒருவர் கண்களைக் கட்டிக்கொள்ள ஒருவர் வேடிக்கை காட்டியும் அவர்கள் நெடுநேரம் விளையாடினார்கள். ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் ஒருவர் மற்றவரை வெற்றி கொண்டதற்கு அடையாளமாக எதிரியை இறுக அணைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு விளையாட்டின் நோக்கமும் அதுவேயாக இருந்தது. மனிதனின் கைகள் படாத பெரிய வனத்தின் விஸ்தாரத்துடன் திகழ்ந்த அந்தக் கனவு மாளிகையில் அவர்கள் விளையாட இரண்டு நபர்கள் நிற்கச் சிரமப்படும் அளவே இடம் கிடைத்தததைப் போல ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டே நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த போது எனக்கு வேடிக்கையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இப்படியே அவர்கள் கனவுலகின் அனாதி காலங்களை விளையாட்டில் கழித்த பிறகு படுக்கைக்கு திரும்பி வந்தார்கள். ராஜனின் பெண் தன் வழக்கமான இடத்தில் தன் வழக்கமான துயில் நிலையில் கழித்த பிறகு படுக்கைக்குத் திரும்பி வந்தார்கள். ராஜனின் பெண் தன் வழக்கமான இடத்தில் தன் வழக்கமான துயில் நிலையில் நிமிர்ந்து படுத்துக் கொண்டாள். அவளுடைய நண்பன் அவள் கட்டிலின் கீழ்புறத்திலிருந்து மெதுவாகச் சுழன்று எழும்பி அவளை கால்களிலிருந்து முத்தமிட்டுக் கவிந்தபடி படிப்படியாக முகத்தை அணுகினாள். ராஜகுமாரியின் கண்கள் அளவு கடந்த அமைதியிலும் ஆனந்தத்திலும் எதிர்பார்ப்பிலும் கசிந்த கண்ணீருடன் மூடியிருந்தன. அப்போதுதான் சபையோரே நெஞ்சைப் பிளக்கும் அந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. தினமும் ராஜனின் பெண்ணை அவள் ஞாபகமின்றியே வாட்டி வதைத்துக் கொண்டிருந்த துயர சம்பவம் நடந்தே விட்டது. அவள் முகத்தை மிக அருகே நெருங்கி வந்த அவளுடைய நண்பன் திடீரென்று அவள் முகத்தில் காறியுமிழ்ந்தான். ஒரு நொடிக்குள் பின் அவனுடைய புகையுருவம் மிக வேகமாகச் சிதிலமடைந்து கலைந்து மறைந்து போனது. அவனுடைய ரத்தமும் சதையுமற்ற பேரழகு முகத்திலிருந்து வெளியே தெறித்த எச்சில் கெட்ட கனவில் துர்மணத்தை அறை முழுக்க விசிறியடித்தபடி கூழொத்த வெண் திரவமாக ராஜன் பெண்ணின் முகத்திலிருந்து வழிந்து கொண்டிருந்தது. அவள் பீதியிலும் அருவருப்பிலும் துயரத்திலும் அலறியபடி உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். அன்று இரவு மட்டுமல்ல. ஒவ்வொரு இரவிலும் அவள் கனவு இந்தவிதமாகவே முடிந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் மறுநாளிரவு சரியாகவே யூகித்தறிந்தேன். அலறியபடி விழித்துக்கொள்ளும் பரிதாபத்திற்குரிய ராஜன் மகளோ விழிப்பின் பலவந்தத்தில் தான் சற்றுமுன் என்ன கனவு கண்டோமென்பதை ஒவ்வொரு நாளிரவும் மறந்து போய்க் கொண்டுமிருந்தாள். இதனால் முதல் நாளிரவு அவள் முகத்தில் துப்பிய அவளுடைய நண்பனும் மறு நாளிரவு வெகு சகஜமாக அவளுடன் விளையாட வருவதும் துவேஷமின்றி அவள் அவனைத் தன்னுடன் விளையாட அனுமதிப்பதும் விளையாட்டின் முடிவில் அவள் முகத்தில் அவன் துப்பிவிட்டுப் போவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்திருக்கிறது. அவள் கனவு முழுவதும் மறந்து கலைந்து போகும்படியான அசாத்தியமான வேகத்துடனும் ஈட்டியின் முனையைப் போல மிகக் கூர்மையாகத் தாக்கும் படியும் ஒவ்வோர் நாளிரவும் அவன் அவள் முகத்தில் துப்பிக் கொண்டே இருந்திருக்கிறான். இந்த அதிர்ச்சி மட்டும் ஒரு கசடாக ஆழ்மனதில் படிந்து போய் அழகிய ஆண்களைக் காணும் போதெல்லாம் ஏற்படும் பயமாகவும் அருவருப்பாகவும் இந்த அழகிய பெண்ணின் மனதை சின்னாபின்னப்படுத்திவிட்டது. ராஜன் மகளுக்குத் தன் வினோத நடத்தையின் காரணம் இதுதானென்பது தெரியவில்லையென்றால் எனக்கோ மறுநாளிரவுவரை அவளுடைய நண்பன் அப்படி நடந்து கொள்வதன் காரணம் தெரியவில்லை. ஆனால் அதைக் கண்டுபிடித்து விட முடியுமென்கிற நம்பிக்கையைத் தூண்டும் விதமாக அன்று இரவே நான் ஒரு ரகசியத்தை ராஜன் பெண்ணின் படுக்கையறையில் கண்டுபிடித்தேன். உறக்கத்திலிருந்து அதிர்ச்சியுடன் விழிப்புக் கண்டவுடனேயே தான் கண்ட கனவை மறந்து போய்க் கொண்டிருந்தாளென்று சொன்னேனல்லவா. எனவே அவளை மறுபடி தூங்கச் செய்ய எனக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை . அவள் வெகு சாதாரணமாகவே சற்று நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுத் தூங்கிப்போனாள். பேச்சில் கூட அவள் கண்ட கனவின் சாயல் படிந்திருக்கவில்லை . எனவே நானும் அந்தக் கனவைப் பற்றி வேப்ப மணத்தோடு கூடிய இரவுக் காற்று அறைக்குள் நுழைந்த போதே நான் அந்த அறையின் சாளரம் திறந்திருப்பதை உணர்ந்தேன். எப்போதுமே அந்தச் சாளரம் திறந்த நிலையில்தான் இருக்குமென்று நான் பின்னர் என் சிஷ்யையிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன். இருந்தும் சாளரம் அப்படித் திறந்திருக்கிறதென்பது கடவுள் எதையோ சூசகமாக அறிவிக்க முயலுகிறாரென்கிற உணர்வை எனக்குத் தந்தது. நான் அன்று ராஜன் பெண்ணின் படுக்கையறையில் போடப்பட்டிருந்த நீண்ட இருக்கைகளில் ஒன்றிலேயே படுத்து இரவைக் கழிக்க முடியுமென்று சொல்லியிருந்தேன். இரவு கலைவதற்கு அப்போது நெடு நேரமிருந்தது. நான் எழுந்து சாளரத்தின் அருகே சென்றேன். சாளரத்தின் மிக அருகே படுக்கையறையை அரண்மனைத் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் வேப்ப மரத்தின் உச்சிக் கிளை தழைத்து நெருங்கியிருக்கிறது. ஈட்டிகளால் அமைக்கப்பட்ட பன்னிரெண்டடி உயரமான வேலியில் நம்பிக்கை வைத்து காவலர்கள் குறைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதியில் அரண்மனைத் தோட்டத்தின் புல் வெளியிலிருந்து புறப்பட்டு இரண்டு காலடிச் சுவடுகள் மரத்தின் மீதேறி உச்சிக் கிளையை அடைந்து சாளரத்தின் வழியே ராஜனின் மகளின் படுக்கையறைக்குள் தாவியிருப்பதைக் கண்டேன். அவை பிறகு அறையின் சுவரோரமாகவே பதுங்கிப் பதுங்கி நடந்து அங்கே நிறுத்தப்பட்டிருந்த பொருட்களை அவை இங்கே இல்லாதனவே போல் ஊடுருவிக் கடந்து ராஜன் பெண்ணின் தோழி படுத்திருக்கும் இணைப்பறைக்குள் நுழைந்து மறைவதையும் கண்டேன். இளவரசியின் கனவு நண்பன் அவள் முகத்தில் காறியுமிழும் காரணத்தை கண்டுபிடித்து விட முடியுமென்கிற நம்பிக்கை என்னுள் உதயமாயிற்று.

இந்த அளவோடு என் முதிர் முப்பாட்டனாரின் முதல் நாளிரவுக் கதை (அல்லது உட்சுவாசத்தின் கதை முடிந்தது. கதை கேட்டுக் கொண்டிருந்த ஜனங்களும் அரச குடும்பத்தவரும் அங்கிருந்து கலைந்து செல்ல மனமின்றி கலைந்து சென்றார்கள். அனுமதிக்கப்பட்டவர்கள் அங்கேயே உட்கார்ந்து பேசி மறுநாள் இரவு வரை தங்கள் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருடைய பேச்சின் மையமும் இளவரசியின் கனவின் மீதும் வேப்பமரத்தின் வழியே அரண்மனைப் படுக்கையறைக்குள் தாவிய மாயக் காலடிச் சுவடுகளின் மீதுமே குவிந்திருந்தது. அவர்கள் அனைவருமே ராஜன் மகள் உறங்கும்போது தானுறங்காமல் அவளுக்குக் காவலிருக்க வேண்டிய அவளின் தோழிதான் அந்தக் காலடிகளுக்குரிய நபரை விருப்பத்துடன் உள்ளே அனுமதித்தாளென்று அவளை வெறுக்கத் தலைப்பட்டார்கள். அவள் உண்ட வீட்டிற்குச் செய்த இரண்டகம் மன்னிக்க முடியாதென்று அனைவருமே ஒத்த குரலில் கூவி ராஜதானியைத் தாண்டிச் செல்லும் பருவக் காற்றின் வழியே தொலைதூரவாசிகளுக்கெல்லாம் இந்த ஒழுக்கக்கேட்டைப் பற்றிச் செய்தி அனுப்பி விட்டார்கள். எனவே தொலைதூரவாசிகளும் ராஜன் பெண்ணின் தோழியைத் தங்கள் மனதார வெறுத்தார்கள். மறுநாளிரவு கதை முடிந்தவுடன் அவளுக்கு ராஜன் என்ன தண்டனை தருவாரென்பது பற்றி நட்சத்திரங்களை விஞ்சும் எண்ணிக்கையில் ஊகங்கள் அவர்களிடையே வெடித்துச் சிதறின. நகரத்திலிருந்து வெகு தொலைவு விலகிய சிறிய கிராமம் ஒன்றிலிருந்து தோழியின் வீடு அன்றிரவே தீக்கிரையாக்கப்பட்டது. அதில் வசித்து வந்த அவளுடைய வயது முதிர்ந்த பெற்றோர்கள் வருந்தி தாங்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதை முழுச் சம்மதத்தோடு ஏற்றார்கள். இது நடந்து பத்தொன்பது நாட்களுக்குப் பிறகே விஷயம் அரண்மனையை எட்டியது. ராஜதானியே அந்த நிகழ்ச்சிக்காக பத்தொன்பது நாட்கள் கழித்துத் துக்கம் அனுஷ்டித்தது. முதல் நாள் கதை முடிந்த அந்த இரவில் அவளை வெறுத்துக் கொன்று போடத் துடித்த அனைவருமே அடுத்த நாளிரவுக் கதை முடிந்ததும் தங்கள் தவறை உணர்ந்தார்கள். அந்தப் பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு தவறுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தங்களைச் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பத்தொன்பது நாட்களுக்குப் பிறகு தன் மனமதிர அந்த அப்பாவிச் சேடிப்பெண் தெரிந்துகொண்டபோது என் முதிர்முப்பாட்டனார் முதல் நாளிரவில் முடிக்கக் கூடாத இடத்தில் கதையை முடித்ததுதான் தன்னை நிர்கதியாக்கியதென்று அவரை மனதாரச் சபித்துவிட்டு ராஜன் பெண்ணின் படுக்கையறைச் சாளரத்திலிருந்து புலி பாய்ந்த அதே வழியாக நந்தவனக் குத்தீட்டி வேலியின் மேல் பாய்ந்து தன் உயிரை இருபதாம் நாள் மாய்த்துக்கொண்டு விட்டாள். இது ஒருபுறமிருக்க முதல் நாளிரவு கதை முடிந்த பிறகு அரண்மனைக்குத் திரும்பி வந்த ராஜன் மனைவியும் ஒரு பெண்ணின் தாப ரசம் ததும்பும் கனவுகளை அவள் பெற்றோர்களின் முன்னிலையில் ஒரு பெரும் ஜனத்திரளே அறிய பகிரங்கமாக வர்ணித்த என் முதிர்முப்பாட்டனாரை வெறுத்து அவரைத் தன் வாயாரச் சபித்துக்கொண்டிருந்தாள். ஆண்களின் உலகில் ஒரு பெண்ணின் மனம் என்பது அவள் தகப்பனாலும் அவளுடைய உடல் என்பது பிற எல்லா ஆண்களாலும் கற்பனையால் சிருஷ்டித்துக்கொள்ளப்படுகிற வஸ்துக்கள் என்னும் வழக்குச் சொல்லை நினைத்து அவள் அன்றிரவு தூங்காமலும் தவித்தாள். தன் பெண்ணின் மூடிய கண்களினுள் பிரவகித்துக் கொண்டிருந்த சிருங்காரக் கனவு அவள் நாசி நுனியில் மலராகவும் உதடுகளின் ஓரங்களில் புன்னகையாகவும் கன்னங்களில் சிவந்த வண்ணமாகவும் முலைக் காம்புகளில் கடினமான முத்தாகவும் பிரதிபலிப்பதையும் அவள் தன் கற்பனையில் கண்டு பீதியடைந்தாள். பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் அந்த உடல் மாற்றங்களை இருபத்தியிரண்டு ஆண்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ராஜனை அவள் தன் வெறுப்பிலிருந்து அவன் தன் பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் ஒதுக்கிவைத்தாள். ராஜனையும் என் முதிர்முப்பாட்டனாரையும் தவிர்த்த பிற இருபது வேடர்களையும் மன்னிப்பதற்கு அவளுக்கு எந்த காரணம் எதுவும் கிடைக்கவில்லையாதலால் படுக்கையறைக்குள் நுழைந்து நட்சத்திரவாஸிகளின் கலவி என்கிற பாடலை இசைத்த அந்த இருபது ஆண்களின் தலைகளை உடனே வாளால் சீவிக் கொய்துவிடும்படி ராஜனுக்குத் தெரிவிக்காமல் ரகசியமாகத் தன் சிப்பாய்களுக்கு ஆணையிட்டாள். அதன்படி அந்த வேடர்கள் அன்றிரவே கொலைக்களத்திற்கு இரண்டாம் பேரறியாமல் வரவழைக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஈடாக வழங்கப்பட்ட பெரும் செல்வத்தினடியிலும் ராஜ விசுவாசத்தின் சுமையிலும் சிக்குண்டு அவர்களுடைய குடும்பத்தினரின் கண்களும் நாவுகளும் நசுங்கிப் போய்விட்டன. இந்தக் கொலைகளுக்குப் பிறகே அரண்மனையில் ராஜன் பெண்ணின் திருமணம் உள்பட பல காரியங்களின் வரிசையும் என் முதிர்முப்பாட்டனாரின் கீர்த்தியும் தலைதெறிக்கும் வேகத்தில் உச்சியை நோக்கிப் பாய்ந்து சென்றன என்று சொல்வார்கள். ஆனால் அப்பழுக்கற்ற ஒரு பெண் அநியாயமாக நிர்கதியாக்கப்பட்டாள் என்கிற விஷயத்தையும் தன் கவலை தீர இசைத்த இருபது வேடர்கள் கொல்லப்பட்ட செய்தியையும் பல நாட்கள் கழித்தே தெரிந்து கொண்ட ராஜன் பிரகாசிக்கும் தன் அதிகாரத்தின் நிழலில் நடந்து போன பிசகுகளுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டு என்றென்றுமே எழுந்திருக்க முடியாத நோயில் வீழ்ந்து படுத்த படுக்கையாகி விட்டான். என் முதிர்முப்பாட்டனாரைப் பொறுத்தவரையில் அந்த இரவிலேயே இருபது வேடர்களுடன் சேர்த்து அவரையும் அவள் கொன்றுவிடத் துடித்ததாக வருடங்கள் கழித்து அவர் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே துரத்தப்பட்ட அன்று எக்காளத்துடன் உரக்கச் சொல்லிச் சிரித்தாளென்கிறது ஒரு கதை. ஆனால் கதையைக் கேட்டு விட்டு வந்த இரவில் அவருடைய ஆளுமையும் ஞானமும் பெருமையும் இவற்றுக்கு மேலாக நன்றியுணர்சிச்யும் அவரைக் கொல்லும் அவாவிலிருந்து ராஜன் மனைவியைப் பிரித்து அப்புறப்படுத்தி வைத்தன. இளம்பெண்ணின் கனவுகளைக் கூச்சமில்லாமல் பார்த்ததோடல்லாமல் அதை வெளியே சொன்னவன் அந்தக் கனவுகளின் நினைவால் தானே சாவான் எனும் மூதுரையை எண்ணி அவள் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான். அந்த மூதுரை துரதிர்ஷ்டவசமாக உண்மையாகவும் இருந்தது. விதி ராஜன் மகளின் இடை நெகிழ்ந்து ஸ்தனங்கள் சரிந்த துயில் நிலையை என் முதிர்முப்பாட்டனாரின் மனக்கண் முன் திரும்பத் திரும்பக் காட்டி அவரை ரகசியமாகப் பல நாட்கள் அலைக்கழித்து வந்தது. பேதங்களைத் துறந்துவிட்ட தன் மனம் சிருங்கார உணர்வுகளால் கறைப்பட்டுக்கொண்டிருந்த பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் வண்ணம் இளமையிலேயே தன்னைச் சாவு அணைத்துக் கொள்வதை அவர் மூன்றாவது பிரயோகத்திற்குப் பிறகு அந்த நாட்களில் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தார். மாறாக தான் ஒரு சாட்சியாக நின்று கண்ட ராஜன் மகலின் கனவும் அவளின் உறக்கமும் அவர் உள்ளத்தில் விதைத்த விஷ விதையோ அழியாமல் ராஜன் மனைவியின் விருப்பப்படியும் அவர் விருப்பத்திற்கு மாறாகவும் வளர்ந்தபடியே தானிருந்தது. ராஜன் மகள் தன் நோய் தீர்ந்து அழகும் ஆரோக்கியமும் கொண்ட அரசகுமாரனுக்கு மணமுடிக்கப்பட்டு புகுந்த வீடு சென்று பல காலங்களுக்குப் பிறகும் மக்கள் அவளைக் கிட்டத்தட்ட மறந்தே போன பிறகும் அவளுடைய கனவைக் கண்டதன் பாதிப்பால் விரக நோயுற்று அலைந்த என் முதிர் முப்பாட்டனார் (மூன்றாவது பிரயோகத்திற்குப் பிறகே தெரிந்து கொண்ட பெண்களின் கனவுகள் புருஷர்களால் பார்க்கப்படக் கூடாதவை என்று அறிவுறுத்தும் சொப்பன சாஸ்திரத்தின் கடைசி அங்கத்தை மறந்து போய் அப்படிப் பார்வையின் கறை படாதவையானதினாலேயே அவை மூப்பைத் தவிர்த்து நித்திய சௌந்தர்யத்தைப் பெற்றிருக்க ஆசிர்வதிக்கப் பட்டவை என்று எடுத்தியம்பும் பகுதியை மட்டும் நினைவில் கொண்டவராய் பழைய நகரத்தின் பெருமைமிகு பெண்மணியாக மதிக்கப் பட்டுக்கொண்டிருந்த தன் மனைவியின் இளமை ததும்பும் கனவிற்குள் அவளறியாமல் புகுந்து பார்க்கும் கீழான மனநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். சாஸ்திரத்தின் விதிகளோ குருவிற்கு அளித்த வாக்குறுதியோ நினைவிற்கு வராத வண்ணம் விதி அவர் ஞானத்தைக் கட்டிப்போட்டுவிட்டது. மனைவியான அந்தப் பேரிளம்பெண்ணின் கனவில் அவர் எதிர்பார்த்த படியே அவளை இறுக்கமும் மதர்ப்பும் நறுமணமும் ததும்பும் தன் குருவின் மகளாக திருமணத்திற்கு முன்பிருந்த பழைய யவ்வன ஸ்திரீயாகக் கண்டு ஞானவான்கள் உதாசீனப்படுத்தும் சிருங்கார உணர்வால் புளகாங்கிதமடைந்தார். அந்தக் கணத்திலேயே விரோதித்துக்கொள்ளப்பட்ட சாஸ்திரங்களின் கோபமும் வஞ்சிக்கப்பட்ட குருவின் சாபமும் அதே கனவில் அவர் கண்முன் வேறு இரண்டு பைசாசக் காட்சிகளையும் உருவாக்கி விட்டது. ஒன்றில் யவ்வனம் ததும்பி நிற்கும் தன் மனைவியின் முன் அவள் புறங்கையால் அலட்சியப்படுத்தி ஒதுக்கும்படி நடுப்பிராயத்தை முழுவதுமாகத் தாண்டியிராத என் முதிர்முப்பாட்டனார் தானொரு நரைகூடி முதிர்ந்த கிழவனாகத் தள்ளாடியபடி நின்றிருக்கக் கண்டு அதிர்ந்து போனார். இரண்டாவதும் குருதியைச் சில்லிட வைத்ததுமான காட்சியில் பல வருடங்களுக்கு முன் நோயாளியின் துர்கனவால் நிலைகுலைந்து போய் தன்னை இவ்வுலகின் கண்களிலிருந்து காணாமல் போக்கிக்கொண்டு விட்டவரென்று நம்பப்பட்ட அவருடைய பால்யகால நண்பர் தன் ஒளிவிடத்திலிருந்து காளைப் பருவம் சற்றும் தளராத உடற்கட்டோடு குருவின் மகளின் முன் தோன்றினார்கள். சுருட்டி இழுக்கும் சாவின் படிக்கட்டுகளில் ஒரு புறம் தள்ளாடியபடி தான் ஏறிக்கொண்டிருக்க அதே படிக்கட்டுகளைப் படுக்கையாக்கி அவர்களிருவரும் பூரண நிர்வாணிகளாய் அதன் மீது சல்லாபித்து விளையாடுவதைச் சாபத்தால் வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட்ட கண்களால் பார்த்த என் முதிர்முப்பாட்டனாரின் நினைவிலிருந்து அவர் கற்ற வித்தை முழுவதும் அந்தக் கணத்திலேயே மறந்து போய்விட்டது. அதற்குப் பிறகு அவரும் அதை வெளியில் எங்கும் தேடி மெனக்கெடவில்லை. அவருக்குள் ஜொலித்துக் கொண்டிருந்த கலையின் பிரகாசம் அணைந்து போனதால் அவர் முகம் எரிந்தவிந்த விறகுக்கட்டையைப் போலக் கருத்துப் பொடிந்து போய்விட்டது. அவர் தனக்குத்தானே மழித்துக் கொள்வதை நிறுத்தி தலையிலும் முகவாயிலும் தாறு மாறாக வளர்ந்த மயிர்க்கற்றைகளில் அடை எனப்படும் துர்முடிச்சுகள் உருவாகிப் பெருக அனுமதித்துவிட்டார். அப்படியொரு வீழ்ச்சியை எதிர்பார்த்திருந்த அவருடைய எதிரிகளும் அவர் பசுவைப் புணர்ந்தவர் என்றும் சாஸ்திர விரோதி என்றும் இருபது அப்பாவிகளின் மரணத்திற்குக் காரணமாயிருந்தவர் என்றும் மனைவியைப் பிறந்த வீட்டிற்குத் திரும்ப விரட்டியடித்தவர் என்றும் அஞ்ஞானப் பீடையால் பீடிக்கப்பட்டு விட்டவர் என்றும் பலமாகப் பிரச்சாரங்கள் செய்து அவரைத் தீராத பழிக்குள் தள்ளி அரண்மனையை விட்டு வெளியேற்றிக் காட்டிற்குள் துரத்தி விட்டார்கள். அவருடைய இரண்டு ஆண் வாரிசுகளை ஆதரவற்றவர்களாக்கி அவருடன் கூடவே துரத்தி விட்டார்கள். மறந்து போன தன் வித்தையை அவர்களுக்குக் கடத்த முடியாமல் என் முதிர்முப்பாட்டனார் அவர்களை அஞ்ஞானிகளாக்கினார். ஒரு காலத்தில் பெண்களுக்கான வேதமாயிருந்த அவருடைய போதனைகளடங்கிய ஓலைச் சுவடிகள் முழுவதையும் தேடி எடுத்துத் தடயமில்லாமல் மடாதிபதிகள் அவற்றை அழித்தொழித்தார்கள். பெண்களை மீண்டும் புஜங்களடியிலும் யோனியிலும் மழித்துக்கொள்ளாத காடாக ரோமம் வளர்க்கச் செய்து துர்மணத்தால் அவர்களை எப்போதும் குற்ற உணர்வுக்குள்ளானவர்களாக ஆக்கித் தங்கள் ஆளுமையின் கீழ் அடிமைப் படுத்திக் கொண்டார்கள் துர்கனவுகளால் அவதிப்பட்டவர்கலை ஈவிரக்கமின்றிக் கண்களைப் பறித்துவிட்டுக் கொன்றார்கள். நாவிதர்களைக் கடைச் சாதியினரென்று பிரகடனப்படுத்தி மயானபூமியின் அருகே எப்போதும் பிணங்கள் வேகும் நாற்றத்தைச் சுவாசித்துக்கொண்டிருக்குமாறு நகரத்தின் மையப்பகுதியிலிருந்து பிரித்துக் குடியமர்த்தினார்கள். மகளின் பொருட்டாக இருபது அப்பாவிகளைத் தன் மனைவி கொன்ற பாவத்தை வலிந்து தான் ஏற்றுக் கொண்டு வெகுகாலத்திற்கு முன்பே நோய்ப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட போதிலும் மனந் தளராது தன் பெண்ணின் உதவியுடன் உத்தமமான முறையில் ராஜ்ஜிய பரிபாலனம் செய்து வந்த ராஜன் என் முதிர்முப்பாட்டனாரின் செய்கையையும் அதன் விளைவுகளையும் கேள்விப்பட்டு நடப்பவற்றைத் தடுக்கும் வகை தெரியாமல் மரணப் படுக்கைக்குத் தன்னுடலை மாற்றிக் கொண்டு நாட்களை எண்ணவாரம்பித்து விட்டு நாட்டின் நிர்வாக இயந்திரத்தை நிறுத்தி விட்டான். மகளை மணந்து அந்நகரத்தின் ராஜவாரிசாக வந்த ராஜனின் மருமகனோ ஏழ்மை உருவாக்கும் மூர்க்கர்களைக் கரை சேர்ப்பதை விடக் கடினம் தறிகெட்டலையும் அறிவாளிகளைத் திருத்திச் சீர்செய்வதென்று கூறி ராஜன் மகள் எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் மெதுமெதுவாக பழைய நகரத்தைக் கைவிட்டுவிட்டான். வருடங்கள் உருண்டபோது காட்டையழித்து நிர்மாணிக்கப்பட்ட பழைய நகரத்தின் சுவர்களுக்குள் அதுகாறும் தங்களை மறைத்தபடி காத்திருந்த விருட்சங்களும் விலங்குகளும் வெளிப்பட்டு மனிதர்களை வேட்டையாடத் துவங்கின. விரைவிலேயே பிரபஞ்சத்தின் சுழற்சி விதிக்கேற்ப மரங்களுக்குள் சுவர்கள் மறைந்து கொள்ள இந்தப் புதிய நகரம் அப்போது அழித்த அடர்ந்த வனம் அங்கே தன்னை ஸ்தாபித்துக் கொண்டது. பத்தினர்களாக நிர்கதியாக மயான பூமியில் அலைந்து திரிந்த என் முப்பாட்டன்கள் நகரம் காடாகிய போது விலங்குகளோடு விலங்குகளாகத் திரியும் வேடர்களாக மாறித் தங்களைச் சாவிலிருந்து காத்துக்கொண்டனர். வாரிசுகளையும் விலங்குகளாக காட்டிலேயே வளர்த்தெடுத்தனர்.

இரண்டாம் நாளிரவுக் கதை (அல்லது வெளிச்சுவாசத்தின் கதை என் முதிர்பாட்டனார் சொல்கிறார்:

தலைமுறைகளுக்கு முன் ஒரு வனமிருகத்தின் கனவை இந்த ராஜவம்சம் நிர்மூலமாக்காமலிருந்தால் ஒருவேளை நான் இந்தக் கதையைச் சொல்வதற்கான சந்தர்ப்பம் கூடாமலே போயிருக்கலாம். ராஜன் மகளின் படுக்கையறையென்பது ஒரு கிழட்டுப் புலியின் பிறப்பிடமாக அதன் கனவில் பத்து தலைமுறைக் காலம் நீண்டுகொண்டிருந்த ஒன்றென்பதே இதன் காரணம். ராஜன் மகளுடைய படுக்கையறை மட்டுமல்ல. இந்த நகரமும் நான் இதைச் சொல்லிக்கொண்டிருப்பதும் நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பதும் மிருகங்களின் கனவிலேயே நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். இந்தப் பிரபஞ்ச யதார்த்தம் முழுவதுமே மிருகங்களின் கனவுதானென்பதை ஏற்கனவே என் குருகுலவாசம் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. சொல்லப் போனால் அதுவே நான் கற்றுக் கொண்ட வித்தையின் சாரமாகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதன் தேடிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச மர்மத்தின் சாரமாக இருப்பதுவும் இதே. மிருகங்கள் இப்பிரபஞ்சத்தைக் கனவில் தங்களின் பிறப்பிடமாகக் காண்கின்றன. கருப்பையிலிருந்து வெளியே வந்து விழுந்ததுமே இந்த உலகம் ஒரு கருப்பையாக மாறி அவற்றைச் சூழ்ந்து கொண்டு விடுகிறது. பிறகு அது அவற்றின் நிரந்தர வீடாகவும் மாறி விடுகிறது. மனிதனைப் போலவே பட்சியினங்களும் கரையான்களும் கூட தங்கள் உறைவிடத்தைத் தாங்களே கட்டிக்கொள்ள பிரியப்படும். இப்பூவுலகில் மிருகங்கள் மட்டுமே தமக்கென்று ஒரு உறைவிடத்தைக் கட்டிக் கொள்ள விழைவதில்லை. ஏனெனில் உண்பதும் உண்ணப்படுவதும் பருகுவதும் பருகப்படுவதும் உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் சுவாசிக்கும் நாசியும் பொருள்களைக் கவியும் சீதோஷ்ணமும் தட்பவெப்பங்களைத் தங்கள் மேல் அனுமதிக்கும் பொருள்களும் அமிழ்வதும் வெளிப்படுவதும் அமிழ்தலுக்கும் வெளிப்படுதலுக்குமிடையில் சொற்ப கணம் இல்லாதிருப்பதும் ஆகிய ஒவ்வொன்றுமே அவை காணும் கனவுகளில் அவை உறையும் இடமாகவே தெரிகின்றன. உணவினுள் தன் முகத்தை அமிழ்த்தும் மிருகத்தின் முன் உணவு அதைத் தன்னுள் வாஞ்சையோடு பொதித்து கொள்ளும் இடமாகவே இருக்கிறது. இதைப் போன்றே காற்று அதைத் தன் அகண்ட பரப்பினுள் அடக்கிக் கொள்கிறது. காட்சிகளின் வெளியில் விலங்கு நுழைந்து உள்ளே உறைகிறது. கலவியின் போது ஆண்விலங்கு தன் லிங்கத்தைத் தானாகப் பாவித்துப் பெண் விலங்கின் புழையை இடமாக்கி அதனுள் நுழைத்து தஞ்சமடைகிறது. அதே சமயம் பெண்விலங்கும் தன்னுடலை ஆண் மிருகத்தின் கால்களுக்கிடையில் நுழைத்து தன்னைத் தஞ்சமளிக்கிறது.

நுழைவதும் வெளியேறுவதும் மற்றும் உருவாவதும் மறைவதுமான காட்சிகளைத் தவிர யதார்த்த உலகின் மேல்கீழ் மற்றும் பக்கவாட்டு இயக்கங்கள் விலங்குகளின் கனவுகளில் தட்டுப்படுவதில்லை. மேலும் தன் பார்வையால் இப்பிரபஞ்சத்தைத் தன் பிறப்புக்கு முந்தைய ஞாபகங்களோடும் இனைத்துவிடும் ஒரு மிருகம் கருப்பையின் நிணக்கசடோடும் வாசனையோடும் உதிர்ந்து முதலில் விழுந்த இடத்தைத் தன் சாவிற்குப் பிறகும் மறந்து போவதில்லை. விலங்குகளின் இந்த கனவுலகம்தான் சாஸ்திரங்களில் தேவர்களின் உலகமாக விவரிக்கப்படுகிறது. ஏன் அங்கே கடவுளர்கள் இமைப்பதில்லை . ஏன் தேவர்களுக்கு பசியும் தாகமும் கிடையாது. ஏன் அங்கு போய்ச் சேர்ந்த பிதுர்க்கள் உறங்குவதில்லை. ஏனெனில் இருக்கிறோம் என்பதை ஸ்தூலமாகக் காட்டும் யதார்த்தத்திலிருந்து விலகி அரூப உலகை நோக்கிப் போய் விட்ட தேவர்களுக்கு அவர்கள் இருப்பின் மீது அவர்களுக்கே சந்தேகம் வந்து விடாதிருக்கும் பொருட்டாக பரந்தாமனால் சிருஷ்டிக்கப்பட்ட தேவருலகம் என்னும் இடமே அவர்களின் உணவாகவும் நீராகவும் உறக்கமாகவும் பார்வையாகவும் காலமாகவும் சுவாசமாகவும் ஆகி விடுகிறது. உலகின் எந்த மூலையிலும் பயிலப்படும் எந்த வித்தையின் சாரமாகவும் இருக்கும் இந்த ரகசியத்தை அனுபவித்துத் தெரிந்து கொள்ள நான் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் வலியும் வினோதமும் நிறைந்தவை. ராஜன் மகளின் படுக்கையறையில் பத்து தலைமுறைக் காலம் தேங்கிக் கிடந்த அந்தக் கிழட்டுப்புலியின் சோகத்தை இந்தப் பிரபஞ்ச விதியைப் புரிந்து கொண்டவர்களால் தான் அது ஒரு அற்புதமோ அன்றி ஒரு மர்மமோ அல்ல மாறாக யதார்த்தம்தான் என்றும் நம்ப முடியுமாதலால் ராஜன் மகளின் கனவின் கதையை மேலே தொடரும் முன் மிருகங்களின் கனவுகளைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. என் குருகுல வாசத்தின் சவால் நிறைந்த ஒரு பகுதிக் கதையை உங்களுக்குச் சொல்லவும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்தக் கதை நான் பிறர் தூக்கத்தினுள் ஊடுருவி அவர்கள் கனவுகளைப் பார்க்கும் வித்தையில் பாண்டித்யம் பெற்றவனென்று என் குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட கதை. உங்களுடன் சேர்ந்து இந்தக் கதையை கேட்டுக் கொண்டிருக்கும் இந்த மங்கையை வெற்றியின் பரிசாக நான் மணம் புரிந்து கொண்ட கதை. என்னைப் பண்டிதனாக்கிய என் பெருமைமிகு ஆசானின் அளவிட முடியாத பெருமைகளைப் பற்றிச் சொல்லும் கதையும் கூட.

கேளுங்கள். அறியப்படாத பொருள்கள் கனவுகளின் உலகில் பார்க்கப் படுகின்றன என்பது விதி. மனிதன் பிரபஞ்சத்தைப் பார்க்கப் பிரியப்படுவதில்லை. மாறாக அதை அறியவே பிரியப்படுகிறான். அறிதல் யதார்த்தத்தை உண்டு பண்ணுகிறது. அறிவதன் பொருட்டே மனிதன் சப்த தாதுக்களை ஒழுங்குபடுத்தி பாஷையை உண்டாக்கினான். மிருகங்களோ பாஷையை அறியாதவை. எனவே அவை தங்களைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை அறியப் பிரயாசைப்படுவதுமில்லை. பிரயாசையற்ற இடத்தில் பார்வை பூரணமாக விளங்குகிறது. பார்த்தல் அறிதல் என்னும் இரண்டு அப்பியாசங்களால் முறையே இவ்வுலகைக் கனவுலகென்றும் யதார்த்த உலகென்றும் மனிதன் பிரித்துக் கொள்வதைப் போல மிருகங்கள் பிரித்துக்கொள்வதில்லை. பார்த்தல் என்பது கனவின் லட்சணமாதலால் மனிதன் அறிய முனையும் யதார்த்தம் என்பது மிருகங்கள் காணும் கனவாக இருக்கிறது. பிறரது கனவுகளுக்குள் ஊடுருவும் வித்தையில் தன் எல்லையைப் பரீட்சித்துக்கொள்ள விரும்பும் யாரும் இதனாலேயே மிருகங்களின் கனவுகளுக்குள் புகுந்து அவற்றின் பார்வை வழியே பிரபஞ்ச யதார்தத்தைக் கண்டு வர வேண்டுமென்கிற விதியை கனவறியும் சாஸ்திரம் வற்புறுத்தும். அது மிகவும் கடினமான பரீட்சையாகவும் இருக்கும். இந்தப் பரீட்சைக்குள் பிரவேசிக்க விரும்புபவன் மூன்று நிலைகளில் அதைக் கடந்து வரவேண்டியிருக்கும். முதல் நிலையில் அவன் மிருகங்கள் தங்கள் கனவுகளில் என்ன காண்கின்றன என்பதை அறிந்து வர வேண்டும். இரண்டாம் நிலையில் அந்தக் கனவுகளில் தோன்றும் காட்சிகளின் அசைவுகளின் இயல்பை அவன் அவதானிப்பான். மூன்றாவதும் இறுதியானதும் மிகக் கடினமானதுமான நிலையென்பது மிருகங்கள் தங்கள் கனவுகளில் இந்தப் பிரபஞ்சத்தை என்னவாகப் பார்க்கின்றன என்பதை அறிந்து தேர்வது. சோதனைக்காக என்வசம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பசுமாட்டின் கனவுகளுக்குள் புகுந்து அதை அறியும் பரீட்சையில் என் குருவின் ஆக்ஞைப்படி நான் பிரவேசித்தபோது பாஷையாலான யதார்த்தத்தை அந்த விலங்கு மீண்டும் எப்படி பாஷையற்ற தூய பொருளாக மாற்றித் தன் கனவில் காண்கிறது எனும் அறிதலின் ஆரம்பக் கட்டத்தைத் தாண்டவே எனக்கு நூற்றெண்பது நாட்கள் பிடித்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பொருளின் மீது சுமத்தப் பட்டிருக்கும் வார்த்தைகள் கழன்று கொள்ளும் தருணங்களில் அப்பொருளிலிருந்து முன்பு பிரிக்கப்பட்டு ஞாபகமாக மாற்றப் பட்டிருக்கும். ஒளியும் மணமும் மீண்டும் அப்பொருளை வந்து சேர்ந்து கொள்கின்றன. பசுமாட்டின் கனவுகளூடே அந்தக் கனவுகளின் சுழலுக்குள்ளும் அடர்த்திக்குள்ளும் சிக்கிக் கொண்டு மூச்சடைத்து இறந்து போய் விடாமல் ஒரு குளிர் பருவம் முழுவதும் மிகக் கடினமான பிரயாணத்தை மேற்கொண்ட பிறகு அந்தக் கனவுகள் தூயதென்று உணரும்படியான ஆனால் குழப்பமான நிறங்களையும் கலவையான மணங்களையும் கொண்டிருப்பதாக என் குருவிடம் வந்து கூறிய போது நான் பரீட்சையின் முதல் நிலையை வெற்றிகரமாகக் கடந்து வந்து விட்டதாகக் கூறி அவர் வைத்திய சாலைக் கட்டிடத்தின் நான்காம் அடுக்கிலிருந்து முன்பு குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்ட முதல் சீடனின் நினைவில் துயரக் கண்ணீர் பெருக்கியபடி என்னை அணைத்துக் கொண்டார். பிறகு அவர் தன் பெண்ணை நோக்கித் திரும்பி இனி அவள் என் முன் வரும் வேளைகளில் தன் ஸ்தனங்களைத் துணியால் மறைத்துக்கொள்ள வேண்டுமெனவும் ஆணையிட்டார். இறுதிப் பரீட்சையின் முதல் கட்டத்தை நான் பூர்த்தி செய்தபோது பௌர்ணமி நிலவு தன் முழு ஆகிருதியுடன் கிழக்குத் திசையில் வெளிப்பட ஏழு நாட்கள் மீதமிருந்தன. எனக்கு இரண்டு நாட்கள் ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்த ஐந்து நாட்கள் முழு உபவாச விரதமொன்றை என் குருவின் ஆக்ஞைப்படி நான் மேற்கொண்டேன். பிறகு என் பரீட்சையில் இரண்டாம் நிலையில் தேர்ச்சியுறும் பொருட்டாக பௌர்ணமியன்று மீண்டும் பசுமாட்டின் கனவுகளுக்குள் என்னைப் புகுத்திக் கொண்டேன்.

உலகம் வார்த்தைகளற்ற ஒரு பிரம்மாண்டமான ஓயாத கனவாகவே பரம்பொருளால் ஆதியில் படைக்கப்பட்டது. யதார்த்த உலகின் அடியில் இன்று மறைக்கப்பட்டு விட்ட கடவுளின் இந்தக் கனவுலகை மனிதன் இறந்த பின்னே சென்றடைகிறான். மனிதனுக்குக் கீழ்ப்பட்ட அறிவைக் கொண்டிருக்க ஆசீர்வதிக்கப்பட்ட விலங்குகளோ அதிகப்படியான அறிவின் சுமையால் கூனடைந்து போகாது உயிர் வாழும் போதே கடவுளின் உலகைக் கண்டு அனுபவிக்கின்றன. அந்த உலகம் மிகவும் ஆச்சர்யகரமான சாயைகளைக் கொண்டது. கனவுலகின் காலக்கிரமும் இடக்கிரமும் யதார்த்த உலகின் காலக்கிரமத்திலிருந்து இடக்கிரமத்திலிருந்தும் மிகவும் வித்தியாசப் பட்டிருக்கின்றன. ஏனெனின் அங்கே பொருள்கள் யதார்த்த உலகில் மனிதன் வார்த்தைகளால் அர்த்தங்களை உருவாக்குகின்றான். அர்த்தங்கள் காரணங்களை உருவாக்குகின்றன. காரணங்கள் ஸ்தூலப் பொருள்களை உண்டாக்குகின்றன. விளைவுகள் மீண்டும் காரணங்களை உருவாக்கும் அர்த்தங்களை உருவாக்கும் வார்த்தைகளைப் பிறப்பிக்கின்றன. ஒரு பொருள் இவ்வாறாக இன்னொரு பொருளோடு அதன் பக்கவாட்டிலும் மேலுங்கீழும் காரணத்தாலும் விளைவாலும் சங்கிலி போல இணைக்கப்பட்டிருப்பதால் இவ்வுலகக் காட்சிகள் கிடைக்கோட்டிலும் மற்றும் மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டிருப்பதாக மனிதர்களாகிய நம் பார்வைக்குப் படுகிறது. பிரபஞ்சத்தைக் கனவாகக் கண்டுகொண்டிருக்கும் மிருகங்களின் பார்வையிலோ இவ்வுலகம் வலமிருந்து இடமாகவோ இடமிருந்து வலமாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ கீழிருந்து மேலாகவோ நகர்வதாக இருப்பதில்லை. மனித முகத்தைப் போலத் தட்டையாகவன்றி முன்னோக்கிக் குவிந்து கீழ்நோக்கி இறங்கும் கூம்பு வடிவினதாக மிருகங்களின் முகத்தை வடிவமைத்த கடவுளின் கருணையும் முன்போசனையும் இதைச் சொல்லும் போது என் நினைவிற்கு வந்து கண்களில் நீர் கசியச் செய்கிறது. ஏனெனில் ஒரு காட்சியை ஒரே சமயத்தில் இரு கண்களாலும் ஒரு சேரப் பார்க்க வாய்ப்பாக தட்டையான முகவமைப்பைக் கொண்ட மனிதனுக்கு அறிதலைக் குழப்பும் இருவேறு காட்சிகளை ஒரே சமயத்தில் பார்த்தாக வேண்டிய சிரமம் கிடையாது. ஏனெனில் ஒரு சமயத்தில் ஒரு காட்சியென்பதே அறிதலின் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் முகத்தின் இருபுறமும் சரிந்த விழிகளால் தனித்தனியாக இருவேறு காட்சிகளை ஒரே சமயத்தில் பார்க்கும் மிருகங்களால் அவற்றை இணைத்துப் புரிந்துகொள்வதென்பது முடியாததாக இருக்கிறது. இதனால் அவற்றால் பாஷையை உருவாக்க முடிவதுமில்லை. ஏனெனில் ஒரு சமயத்தில் பல காட்சிகள் என்பதே வார்த்தைகளற்ற பார்த்தலின் அடிப்படையாக இருக்கிறது. முகத்தின் வலப்புறம் தோன்றிய ஒரு காட்சி சோதனைக்காக என் வசம் ஒப்படைக்கப்பட்ட பசுமாட்டின் இடது புறத்திற்கு நகர்ந்த போது வலப்புறம் அந்தக் காட்சி விட்டுச் சென்ற வெளியில் இன்னொரு காட்சி தோன்றியதையும் அதே சமயத்தில் முகத்தின் இடப்புறம் ஏற்கனவே பசு பார்த்துக்கொண்டிருந்த காட்சியின் மேல் வலப்பக்கத்தில் மறைந்த காட்சி வந்து அமர்ந்து கொண்டதையும் நான் என் பரீட்சையின் இரண்டாம் நிலையில் கண்டு கொண்டேன். குழப்பமான நிறங்களாகவும் வாசனைகளாகவும் உருவாகும் மிருகங்களின் கனவுகளில் காட்சிகள் யதார்த்த உலகில் போலன்றி உள்ளிருந்து மேலெழும்பித் தோன்றுவதும் வெளியிலிருந்து உள்ளே பதுங்கி மறைவதுமாகவே அசைகின்றன என்பதையும் அதன் காரணங்களை நான் இப்போது உங்களுக்குச் சொன்ன விதமாகப் புரிந்துகொண்டதையும் அறுபது நாட்கள் கடும் பிரயாசைக்குப் பிறகு பசுவின் கனவிலிருந்து வெளியேறி குருகுலத்தை அடைந்த அன்று என் ஆசானிடம் சொன்ன போது நான் என் தேர்வின் இரண்டாம் நிலையையும் வெற்றிகரமாகக் கடந்து வந்துவிட்டதாகக் காசியின் அடர்ந்த வனங்களை நோக்கி ஓடிப் போய்விட்ட தன் இரண்டாம் சீடனின் நினைவு கண்களில் கண்ணீரைப் பெருக்க அவர் கூறினார். ஆடைகளால் மறைக்கப்படாத அங்கங்களை ஆபரணங்களால் மறைத்த பின்பே இனி என் முன்னே தோன்ற வேண்டுமென அப்போதே தன் மகளுக்கு அன்புக் கட்டளையிட்டார்.

முடிவானதும் மிகக் கடினமானதுமான பரீட்சையின் மூன்றாம் நிலைக்கு என்னைத் தயார் செய்து கொள்வதற்காக பிறகு அவர் எனக்கு மேலும் பத்து தினங்கள் ஓய்வளித்தார். என் குருகுல வாசத்தில் அதுவரை அனுபவித்தே அறியாத பலவகை பதார்த்தங்களை நான் அந்தக் காலகட்டத்தில் உண்டு மகிழ்ந்தேன். நறுமணமிக்க மூலிகைகளைக் கலந்து தயாரிக்கப்பட்ட பானகங்களை தொடர்ந்து எனக்கு அளிக்க என் குரு ஏற்பாடு செய்திருந்தார். அவை என் உடலை குளிர்ந்ததாகவும் நாட்கணக்காகத் தொடர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து போகுமளவிற்கு அலுப்புள்ளதாகவும் உறங்கும்போது உடைகள் அலங்கோலமாகக் கலைந்து விலகிக் கிடக்கும்படி மண் தரையில் புரண்டு கொண்டிராத வண்ணம் அதை மரக்கட்டை போல உணர்வற்றதாகவும் ஆக்கின. இவற்றையெல்லாம் அன்று என் குருவின் மகளாக இருந்த இதோ இங்கே என் அருகே அமர்ந்திருக்கும் என் மனைவியின் கையால் என் பெற்றுக்கொண்டதானது கிளர்ச்சியூட்டும் கனவுகள் என்னுள்ளிருந்து விழித்தெழும் வண்ணம் என்னை இன்னும் நீண்ட விச்ராந்தியான உறக்கத்தில் ஆழ்த்தி வைத்திருந்தது. பரீட்சையின் இரண்டாம் நிலையில் நான் பிசகின்றி வெற்றி பெற்றதன் நிமித்தமாகவே இத்தகைய உபசாரங்கள் எனக்களிக்கப்படுவதாக அப்போது நான் எண்ணி இறுமாந்திருந்தேன். ஆனால் அவை யாவும் பலியாட்டின் மீது போர்த்தப் படும் புதிய வஸ்திரங்களையும் வாசனைத் திரவியங்களையும் பூமாலைகளையும் போல தந்திரத்தின் மணத்தைத் தம்முள் புதைத்துக் கொண்டிருந்தன என்பதைப் பின்னால்தான் தெரிந்து கொண்டேன். அதற்கு கட்டியங்கூறும் வகையில் பரீட்சையின் மூன்றாம் நிலைக்கு நான் தயாரான அன்று என் குரு எனக்குச் சொன்ன அறிவுரைகளையும் பரீட்சையின் வழிமுறைகளையும் கேட்ட என் உதிரம் அச்சத்தால் உறைந்து போய்விட்டது. பெரும் பீதி என்னை ஆட்கொண்டது. பரீட்சையின் முதல் இரண்டு நிலைகளையும் போல இந்த மூன்றாம் நிலை பரீட்சைக்கு உட்படுத்தப்படும் மிருகத்தின் வயிற்றில் அதன் இரை ஜீரணமாகிக் கொண்டிருக்கும் மந்தமான உறக்க நிலையில் பிரயோகித்தறிவது அல்ல என்று என் குரு என்னிடம் சொன்னார். மேலும் என் பிரியத்திற்குரிய மாணவனே மிருகங்கள் தங்கள் கனவில் என்ன காண்கின்றன என்பதையும் காட்சிகள் அந்தக் கனவில் எப்படிப் பிறந்து மறைகின்றன என்பதையும் கசடறக் கண்டு கொண்ட நீ இப்போது அக்கனவுகளின் அர்த்தத்தை மனிதனின் மொழியில் அறிந்துகொள்ள இருக்கிறாய். வார்த்தைகளற்ற மிருகங்களின் கனவுலகை வார்த்தைகளாக மாற்றி அவற்றை சாஸ்திரங்களாக்கி நம் முன்னோர் நமக்குத் தந்ததைப் போல இனி வரும் சந்ததிகளுக்கு நீ தர வேண்டிய பொறுப்பு இப்போது உன் தலை மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள். மிருகங்கள் நாம் காண்பது போல உறக்கத்தில் மட்டுமே கனவுகளை உருவாக்கிக் கொள்வதில்லை. அவை தம் அன்றாட வாழ்வின் பிரத்யேக கணங்கள் ஒவ்வொன்றிலும் சிறுசிறு தற்காலிக உறக்கங்களை அவ்வப்போது மேற்கொண்டு அந்தந்தக் கணங்களுக்குரிய உலகை கனவாகக் கண்டு மகிழும் வல்லமை படைத்தவை. எனவே ஐந்தறிவு மிருகத்தின் கனவுகளை அறியும் விதமாக இனி நீயும் உனது ஆறாவது அறிவை அவ்வப்போது இழக்கக் கடவாய். அவ்வுயிர் புழங்கும் இடங்களினூடும் பார்க்கும் காட்சிகளினூடும் செல்லும் பிரதேசங்களினூடும் உண்ணும் உணவினூடும் தரிக்கும் கலவியினூடும் நீயும் கலந்து போகக் கடவாய். கணத்திற்குக் கணம் கனவுகளை உருவாக்கி அவற்றை இப்பிரபஞ்சமாக உலாவ விடும் மிருகங்களின் பார்வையில் இப்பிரபஞ்சம் என்னவாக இருக்கிறது என்பதை அப்போது நீ தெரிந்துகொள்வாய். தேர்வின் முதல் நிலையில் நீ கண்ட குழப்பமான நிறங்களை வார்த்தைகளாகவும் வாசனாதிகளை உச்சாடனங்களாகவும் மாற்றிக்கொண்டுவிட்டதாகத் திருப்தியடையும் நாளில் நீ என்னை மீண்டும் வந்து சந்திப்பாய்.

என் ஆசான் நான் இரண்டு நிலைகளில் பரீட்சைக்கு உட்படுத்திய அந்தப் பசுவையே பிறகு அதன் சொந்தக்காரரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி அதன் மூக்கணாங்கயிற்றையும் கொம்புப் பூண்களையும் முகப்பட்டையையும் மேல் வஸ்திரத்தையும் எடுத்து விட்டு நெற்றித் திலகத்தையும் உடல் மேல் இடப்பட்டிருந்த அலங்கார வண்ணக் கோலங்களையும் அழித்துவிட்டு அதைப் பூரண நிர்வாணியாக்கி எனக்கு முன்னே நடந்து செல்லும்படி அனுப்பி வைத்தார். பிறகு என்னையும் என் உடைகளனைத்தையும் களைந்து விட்டுப் புறப்படும்படி அவர் கட்டளையிட்டபோது நான் திடுக்கிட்டு கௌபீனத்தை மட்டுமாவது தரித்துக்கொள்ள என்னை அனுமதிக்கும்படி அவரை மன்றாடினேன். முதலில் பிடிவாதமாக அதை மறுத்து விட்ட அந்தத் திரிகால ஞானி பிறகு வேதனையுடன் சில வார்த்தைகளை முனகிக் கொண்டே கெளபீனத்துடன் செல்ல என்ன அனுமதித்தார். அன்று முதல் நான் பசுவின் பின்னால் அதன் நிழலைப் போல் அலையத் துவங்கினேன். ஒரு கிழமையல்ல ஒரு பருவமல்ல சபையோரே கோடையின் இரண்டு முழுச் சுழற்சிகள் என்னைத் தன்னிச்சையாக வனாந்திரங்களுக்குள்ளும் நகர்புறங்களுக்குள் நீர்நிலைகளின் ஆழங்களினூடாகவும் வயல் வரப்புகளினூடாகவும் விசேஷ காலங்களில் தங்களது இல்லங்களுக்குள் அதை அனுமதித்து வெல்லமும் அரிசியும் தேங்காய்க் கீற்றுகளும் தின்னக் கொடுத்துத் தங்களது சுபிட்சத்தைப் பெருக்கிக் கொண்ட மனிதர்களின் தந்திரங்களினூடாகவும் அலைக்கழித்த அந்த வெண்பசுவின் பின்னே நான் அதைத் தவிர வேறு யாதொரு பந்தமும் அற்றவனாகச் சுற்றித் திரிந்தேன். அது தன் உணவை அசை போடும் போது அதன் கனவுகளுக்குள் புகுந்து பருவச் சுழற்றிகள் வெட்டிக்கொள்ளும் காலத்தே தெறிக்கும் சீதளப் பொறிகளின் உக்கிரத்திலிருந்து என்னைக் காத்துக் கொண்டேன். அந்தக் காலம் முழுவதும் நான் உண்ணவும் உறங்கவும் இல்லை. என்னுடைய ஓய்வுக் காலங்கள் என நான் மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டிருந்த பரீட்சைக்கு முந்தின காலகட்டத்தில் என் குருவின் மகளும் இன்று என் மனைவியுமான இந்தப் பெண் எனக்களித்த நறுமணம் கமழும் மூலிகைப் பானங்களால் என்னைக் கவிந்துகொண்டிருந்த தூக்கமும் பசியும் பரீட்சைக் காலத்தில் என் இமைகளையும் வயிற்றையும் காவு கொள்ளவே அப்போது எனக்கு மருந்தாகப் புகட்டப்பட்டவை என்பதை நான் தெரிந்து கொண்டேன். நான் பின்தொடர்ந்து கொண்டிருந்த பசுவோ என்னைப் பற்றின பிரக்ஞையே இல்லாததாக ஒரு போதும் என்னைத் திரும்பிப் பார்க்காது தனக்கு விருப்பப்பட்ட இடங்களில் இருந்தும் படுத்தும் விழுந்தும் புரண்டும் ஓய்வெடுத்துக்கொண்டது. கண்களைத் திறந்தபடி உறங்கியது. மறைப்புகள் ஏதுமற்ற தன் தூய நிர்வாணம் முழுவதும் அமிழும்படி நீர்நிலைகளில் மூழ்கி எழுந்தும் மண்ணால் தன்னை மூடிக்கொண்டும் பிறகு அதை உதிர்த்து வெளிப்படுத்திக்கொண்டும் புளகாங்கிதமடைந்தது. குளிர்பருவத்தில் வெளிச் சுவாசத்தைத் தன்னுடல் மேல் செலுத்தித் தகிப்பைத் தக்கவைத்துக்கொண்டது. கோடைப்பருவத்தில் உட்சுவாசம் இறங்கும் வழியை நாக்கால் தடவி ஈரப்படுத்திக் காற்றைக் குளிரச் செய்து தன்னுள் செலுத்திக் கொண்டு மிகுதி வெப்பத்தை உடலைச் சிலிர்த்து வெளியே சிதறடித்தது. மனிதப் பிறவியால் சாதிக்கவியலாத பசுவின் இவ்விதமான செய்கைகள் என் அறிவைக் கேலி செய்து என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டேயிருந்ததால் விரைவில் பரீட்சையை முடித்துக்கொண்டு இருப்பிடம் திரும்பும் ஏக்கம் என்னை அரிக்கத் துவங்கி விட்டது (மேலும் குருமகளின் நினைவு நானறியாமல் என்னுள் இடந்திரும்பும் அவாவைக் கொழுந்து விட்டெரியச் செய்துகொண்டிருந்ததென்பதை திருமணத்திற்குப் பிறகே அறிந்துகொண்டேன்). எனவே பசுவின் செயல்களுக்கு அவசர அவசரமாக வார்த்தையுருக் கொடுத்துப் பரீட்சையை வலுக்கட்டாயமாக அதன் முடிவிற்குக் கொண்டு வரும் மதிகெட்ட செய்கையைச் செய்யவும் நான் துணிந்தேன். நிர்வாணமாகத் திரியும் பசுவின் கண்முன் கனவாகத் தெரியும் வெல்லமும் அரிசியும் தேங்காயும் புல்லும் வைக்கோலும் மட்டுமல்லாது காற்றும் சீதோஷ்ணமும் காட்சிகளுமேகூட உணவாகவே தெரிகின்றன என்று நான் எண்ணத் தலைப்பட்டேன். அது தன் முன் எதிர்படும் எந்தப் பொருளையும் முகர்ந்து பார்த்தும் நக்கிப் பார்த்துமே அடையாளங் கண்டுகொள்வதாகவே பரீட்சைக் காலத்தின் முதல் வசந்தத்தின் போது எனக்குத் தோன்றியது. நான் என் முன்னே சென்ற பசுவைப் பிடித்து அதன் நாசித் துவாரங்களில் கயிற்றைச் செலுத்தி இறுக்கி அதன் முடிச்சை பிடித்தபடி திமிருடன் அதன் முன்பாக நடந்து சென்று என் குருவை அடைந்தேன். பெரும் தவறைச் செய்கிறேன் என்பதை எனக்குக் காட்டாது அப்போது வயதும் என் கண்களைக் கட்டிவிட்டது. மிருகங்கள் இந்த உலகைத் தங்கள் உணவாகக் காண்பதாகவும் எந்தப் பொருளையும் அவற்றின் கனவுகள் ருசியாகவே காட்டுவதாகவும் அவரிடம் இறுமாப்புடன் அறிவித்தேன். அப்படி அறிவித்த கணத்தில் என் குருவின் கண்கள் இருண்டு குழியில் விழுந்து அவர் உடலும் தன்னிலை தவறி அவர் என்னை வரவேற்ற முன்முற்றத்தின் கோலமிட்ட தரையிலேயே மூர்ச்சையுற்று விழுந்தபோதுதான் அவசரப்பட்டுவிட்டேன் என்பதை நான் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்த்தது. என் தோல்வி என் ஆசானை மரணத்தில் கொண்டு சேர்த்துவிடும் அளவு விஷமுள்ளது என்பதை அறிந்த மாத்திரத்தில் நான் என்னையே வெறுக்கத் துவங்கினேன். குருவின் மகளும் பின்னாளில் எனக்கு மனைவியுமாய் ஆன இந்தப் பெண் தன் தகப்பனைத் தேடி வாசலுக்கு வருவதற்கு முன் நான் பசுவின் மூக்கைப் பிணைந்திருந்த கயிற்றையும் கெளபீனத்தையும் கழற்றி நான் வந்து போனதன் அடையாளமாக நிலத்தில் வீசியெறிந்துவிட்டு பதிலுக்கு என் குருவின் மூர்ச்சை தெளிவதற்குள் நான் வெற்றியுடன் திரும்பி விடும் பிரதிக்ஞையை என்னுடன் எடுத்துக்கொண்டு சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து வெளியேறினேன்.

பருவ காலங்களின் ஒரு சுழற்சிக்குள்ளாகவே பூர்த்தியாகியிருந்திருக்க வேண்டிய கல்வி என் மதியீனத்தாலும் அகம்பாவத்தாலும் அவசரத்தாலும் மேலும் ஒரு சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டு அல்லலுறும்படியாகி விட்டது. மேலும் இப்போது நான் என்னை மனிதனென்று உறுதிப் படுத்தும் வண்ணம் என் லிங்கத்தைத் தொங்கவிடாது மறைத்துத் தொடைகளுடன் பிணைத்திருந்த ஒட்டுத் துணியையும் துணியிருக்கும் தைரியத்தில் பிற மனிதர்களோடு நான் பகிர்ந்து கொள்ள வைத்திருந்த சொற்ப வார்த்தைகளையும் இழந்துவிட்டேன். என்னை வழி நடத்திச் சென்ற மிருகத்தோடு நானும் கூடவே வார்த்தைகளும் பேதங்களுமற்ற உலகினுள் இவ்வாறு முற்றாகப் பிரவேசித்தேன். அதே சமயத்தில் அவ்வுலகிற்கு வெளியே இருந்து அதை அறியும் வார்த்தைகளையும் மனிதனென்கிற பிரக்ஞையுடன் நான் சிருஷ்டித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. உண்மையான பரீட்சை இப்போதுதான் துவங்குகிறது என்பதை என் முழு நிர்வாணம் எனக்கு உணரக் காட்டியது. முன்பு கௌபீனத்தை அவிழ்க்க மறுத்தபோது என் ஆசான் முணுமுணுத்த வார்த்தைகளையும் அப்போது என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. மிருகங்களின் கனவுகளில் பிரபஞ்சம் குழப்பமான நிறங்களிலும் மணங்களிலும் காணக் கிடைக்கிறது என்பதை நான் என் முதல் பரீட்சையில் அறிந்தேனென்று சொன்னேனல்லவா. இப்போது அவை குறிப்பிட்ட தருணங்களில் சில குறிப்பிட்ட நிறங்களும் வாசனையும் கொள்வதை என்னால் கண்டு கொள்ள முடிந்தது. பசு தன் உணவை மெல்லும் போது அதன் கனவுகள் சிவந்ததும் இருண்டதுமான நிறத்தைக் கொள்வதை நானும் ஒரு விலங்காக என் கனவில் காணுமளவிற்கு சின்னாட்களில் முன்னேறினேன். கண்கள் முழுகும் வரையில் முகத்தை நீரில் அமிழ்த்தி அது நீரருந்தும் போதும் காற்றிற்கு எதிராக முகத்தை நிமிர்த்தி சுவாசத்தை அது சுத்தம் செய்து கொள்ளும் போதும் மழையாலும் மட்கிய பொருள்களாலும் சிறு பூச்சியினங்களாலும் புரட்டப்பட்ட சேற்றில் தன்னுடலை வீழ்த்திக்கொள்ளும் போதும் உண்ணிகளை கொத்திப் பிடுங்கச் சிறு பறவைகளுக்குத் தன் உடலைக் கொடுக்கும் போதும் பசுவின் கண்களில் இவ்வுலகம் சிவந்து இருண்ட நிறங் கொள்வதாகவே இருந்தது. இதோடு கூட என் வியப்பு அதிகரிக்கும்பைட்யாக அந்தக் கனவுகளிலிருந்து ஆசுவாசங் கொள்ளச் செய்யும் கதகதப்பான சீதோஷ்ணம் ஒன்று வெளிக் கிளம்பிக் கொண்டிருப்பதையும் நான் அனுபவித்தேன். அந்தச் சீதோஷ்ணம் இவ்வுலகின் எந்த மூலையிலும் கேட்கக் கிடைக்காத கனத்த அமைதியை என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. மேலும் அது எனக்கு ஏற்கனவே பரிச்சயப்பட்ட ஒன்றாகவும் சாபத்தால் என் நினைவிலிருந்து பிறகு அகன்று மறைந்து போனதாகவும் தோன்றி என்னை வதைத்தது. மிருகங்கள் இப்பிரபஞ்சத்தை என்னவாகத் தங்கள் கனவில் கண்டுகொண்டிருக்கின்றனவோ அதை நான் வார்த்தைகளாக அறிந்துகொண்டேதான் இருக்கிறேனென்பது விலங்கோடு விலங்காய் மாறிப் போயிருந்த எனக்குத் தெரிந்தது. பாஷைக்குள் பிடிபடும் வண்ணம் அந்தக் கனவை அறியத் தரும் ஒரு உபகரணத்தை நான் எப்படியும் கண்டுபிடித்துவிடுவேன் என்று நம்பினேன். அந்தச் சந்தர்ப்பமும் விரைவிலேயே வாய்க்கத்தான் செய்தது. ஆனால் நடந்தது என்னவென்றால் அந்த உபகரணம் தான் தன் கருவியாக என்னைத் தன் வழியில் கண்டுபிடித்தது. என்னைக் கண்டுபிடித்த அந்த உபகரணம் பத்தினிப் பெண்ணின் விழிகளையொக்கும் கருத்த நிறமுள்ள ஒரு காளைமாடு. ஊரென்றோ நகரமென்றோ அடையாளம் புலப்படாத ஒரு பிரதேசத்தின் வழியே நானும் என் முன்னே வழக்கம் போலப் பசுவும் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென எங்களிருவருக்கும் நடுவே பருத்த உருவமும் திரண்டு மதர்த்த இரட்டைத் திமில்களும் உயர்ந்து வானைக் கிழித்துக்கொண்டிருந்த கொம்புகளும் பரந்த தொடைகளும் சிவந்த கண்களும் உமிழ்நீர் பெருகி வடிந்து கொண்டிருந்த வாயுமாக அந்தக் காளை தோன்றியது. நான் என்னை நிதானித்துக்கொள்வதற்குள் பசுவை என் பார்வையிலிருந்து மறைந்து நின்ற அந்தப் பிரம்மாண்டமான ஆண் மிருகம் விரைத்து நீண்டிருந்த தன் பிறப்புறுப்பால் என்னைத் தொட்டுத் தாக்கி அப்பால் தள்ளி விட்டது. பிறகு இடியொன்று மரத்தின் மீது வீழ்வது போல அது பசுவின் மேல் தன் முன்கால்களை ஏற்றி வீழ்த்தி அதைத் தனது உடலுக்குள்ளாக இழுத்தது. கண்மூடித் திறப்பதற்குள் இவையாவும் நடந்து முடிந்துவிட்டன. பசுவின் உடல் சுருங்கித் தன்னிச்சையாகக் காளையின் கால்களின் நடுவே பதுங்கிக் கொள்வதையும் அதன் கனவுகள் வெகுவேகமாக செந்நிற இருளைத் தீட்டுவதையும் நான் விழுந்த நிலையிலேயே கண்டேன். அதன் பின்புறத்தின் மீது ஏறி நின்று கொண்டிருந்த காலையின் கண்களிலிருந்தும் அதே செவ்விருட்டு நிறக் கனவு பீறிட்டு வெளியில் சிதறிக்கொண்டிருந்தது. இப்போதும் அந்தக் கனவுக்குள்ளிருந்து எனக்குப் பழக்கப்பட்டு மறந்து போன தட்பவெப்பம் என்மேல் கவிந்தது. குருவை மூர்ச்சையடையச் செய்த என் வயதின் மமதையை வென்று அப்போது பொறுமையாய் நிகழ்பவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பவனாய் மட்டுமே நான் விழுந்து கிடந்தேன். இதன் பயனாக என்னைப் பசுவிடமிருந்து பிரிக்கும் வண்ணம் நடுவே புகுந்ததென்று எண்ணியதால் ஒரு கணம் என் கோபத்திற்கு இலக்கான காளை உண்மையில் வெற்றியுடன் என்னைப் பிணைக்கும் கண்ணியாகவே அப்படி நிற்கக் கடவுளால் அனுப்பப்பட்டது என்பதை நான் சற்று நேரத்தில் கண்ணீருடன் தெரிந்து கொண்டேன். விலகி நெருங்குவதாக அல்லாமல் அமிழ்ந்து வெளிப்படும் இயல்பினதான மிருகங்களின் கனவுலகமே உண்மையான பிரபஞ்சமென்று பறை சாற்றும்படியாக அவ்வுலகிற்குரிய செங்குத்தான அசைவை லயப்பிசகின்றி பசுவின் பின்புறத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்த காளை நெடுநேரம் கழித்து மீண்டும் தன் பளுவைத் தரையதிரும் வண்ணம் கீழே இறக்கிய பின்பு செந்நிறம் நீர்த்துப் பழைய ஸ்திதியை அடைந்திருந்த தன் கண்களைத் திருப்பி என்னைக் கனிவுடன் பார்த்தது. அப்போது என் பயணக்காலம் முழுவதிலும் என்னைத் திரும்பியே பார்த்திராத அந்த வெண்ணிறப் பசுவும் முதன் முறையாக அன்பின் நீர் ததும்பும் விழிகளோடு என்னைப் பார்த்தது. அது தன் இடத்திலேயே அசையாது பின்னும் நின்றிருக்க காளை என்னருகே வந்து படுத்துக் கிடந்த என் மேல் தன் கதகதப்பான சுவாசத்தைப் பாய்ச்சியும் உடல் முழுவதையும் தன் நாக்கால் சுழற்றி நக்கியும் என்னோடு வார்த்தைகளற்ற உலகைச் சேர்ந்த பிரகிருதியின் பாவ பாஷையில் பேசியது. பிறகு அது தோன்றியதைப் போலவே உட்சுருங்கிக் காற்று வெளியில் மறைந்து போனது. அதன் பேச்சை அறிவு புரிந்துகொள்ளும் முன்பே உடல் புரிந்து கொண்டதன் அடையாளமாக என் லிங்கம் என்னிலிருந்து புறப்பட்டு என் யத்தனமின்றியே பசுவை நோக்கி நீண்டது. அந்த அளவில் நான் மிகப் பெரும் உவகையுடன் கதறியழுதபடி எழுந்து எனக்குத் தன் பின்புறத்தை மலத்திவாறே காத்துக் கொண்டிருந்த பசுவை நோக்கிப் பாய்ந்தேன். அதன் முதுகின் மேல் என் கைகளை ஊன்றி எழும்பிக் காளையின் மதநீர் வடிந்து கொண்டிருந்த புழையினுள் என் லிங்கத்தை நுழைத்தேன். அது என் ஆகிருதியிடமிருந்து விடுபட்டதான தன்னிச்சையுடன் என் மொத்த உயரத்தையும் விடக் கூடுதல் நீளங்கொண்டதாக பசுவின் உடலினுள் அதன் தசையையும் திசுக்களையும் நிணத்தையும் குருதியையும் மென்நரம்புகளையும் தீண்டி வழுக்கியபடி வளர்ந்தது. மிருகங்கள் தங்கள் உடலின் ஒவ்வொரு மயிக்கண்களாலும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தின் உண்மையான தோற்றத்தை இறுதியில் பசுவின் உடலினுள் என் லிங்கத்தின் கண்களால் இவ்வாறாக நான் தரிசித்தேன். விலங்குகளின் கனவுகள் முழுவதிலும் நிறைந்து கனவாகவே ஆகியிருக்கும் இருண்டு சிவந்த நிறமும் சீதோஷ்ணமும் கிறக்கமூட்டும் மணமும் நீரினுள் ஆழ்ந்ததைப் போன்ற நிசப்தமும் உண்மையில் பெண் விலங்கின் கருவறையே என்னுள் உண்மை தாங்கவொணாத பரவசத்திற்கிடையில் அப்போது என் நெற்றிப்பொட்டில் வெடித்தது. பசுவின் கனவுகளூடு பயணப்பட்ட வழியில் நானும் அவ்வப்பொழுது நான் ஜனித்த இடத்தைத் தான் இப்பிரபஞ்சமாக கண்டிருக்கிறேனென்னும் தெளிவும் என் அறிவு வெடித்த வெளியில் சிதறியது.

மனிதன் வார்த்தைகளால் தன்னிடமிருந்து பிரித்துத் தனியானதாக உருவாக்கிக்கொண்ட உலகத்தில் உலோக அரண்மனைகளையும் ஓலைக் குடிசைகளையும் ஓட்டுவீடுகளையும் தோற்கூடாரங்களையும் எழுப்பித் தலைமுறைகளின் ஞாபகத்திலிருந்து தொலைந்துபோன தன் பிறப்பிடத்தைப் போலி செய்து திருப்திப்பட்டுக்கொண்டிருக்க விலங்குகள் பிரபஞ்சம் முழுவதையும் தங்களின் பிறப்பிடமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை நான் பசுவினுள் துடித்துக்கொண்டிருந்த என் ஞானக்கண்ணால் கண்டேன். இப்படி ஒரேசமயத்தில் திடீரென நான் பெற்ற ஞானோயத்தால் மகிழ்ச்சியும் அதே சமயத்தில் திடீரென நான் பெற்ற ஞானோதயத்தால் மகிழ்ச்சியும் அதே சமயத்தில் மனிதர்களின் மடைமையை எண்ணி அளவிலாத் துக்கமும் மேலிட்டவனாக பெண் மிருகத்தின் கருவறையிலிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள மனமின்றி நெடுநேரம் அதனுள் என்னை லிங்கமாக மாற்றிக்கொண்டவனாய் தோய்ந்து கிடந்தேன். அப்போது நாங்கள் எங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு வந்த வழியே திரும்பும் காலம் கனிந்தது. இம்முறை பசு தன் மகத்துவத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு சாதாரண விலங்காக எனக்குப் பின்னே என்னை வாத்ஸல்யத்துடன் தன் நாவால் நக்கியபடி பின் தொடர்ந்து வந்து என்னைப் பெருமைப்படுத்தியது.

குருகுலத்தின் வாசலில் நான் காலடி எடுத்து வைத்த கணத்திலேயே தன் நீண்ட மூர்ச்சை தெளிந்து எழுந்த என் ஆசான் வாசலுக்கு ஓடோடியும் வந்து என்னை வரவேற்றார். என் உடல் முழுவதிலும் படிந்திருந்த சகதியையும் என் மீதிருந்து புறப்பட்டு திசைகளை நனைத்துக்கொண்டிருந்த நிணத்தின் வாசனையையும் தளராது விரைத்த நிலையிலேயே இருந்த லிங்கத்தையும் எனக்குப் பின்னே பசு நின்று கொண்டிருந்ததையும் பார்த்த கணத்திலேயே நான் பரீட்சையில் வென்றுவிட்டேனென்று உரக்க அறிவித்த அந்த ஞானி என்னைத் தன்னுடலுடன் ஆரத் தழுவிக்கொண்டார். என்னை உள்ளே வரும்படி அழைத்தார். அவருடைய மகளும் சற்று நேரத்தில் எனக்கு மனைவியாகப் போகிறவளுமான இங்கே என்னருகே அமர்ந்திருக்கும் இந்தப் பெண் உள்ளேயிருப்பதையும் நான் அம்மணமாக இருப்பதையும் எண்ணிப் பார்த்து நான் உள்ளே நுழையத் தயங்கிய போது யாசகனைத் தவிர வேறு யாருக்கும் வாசலில் நிற்க வைத்து வஸ்திரமளிப்பதென்பது அப்படி அளித்தவரை நரகத்தில் கொண்டு சேர்க்கும் பாவ காரியமாகப் போகும் என்னும் சாஸ்திர விதியை எனக்கு ஞாபகப்படுத்திய க்ரூ சொன்னார். மேலும் வளர்ந்த மனிதனைத் தவிர வேறெந்த உயிரின் நிர்வாணமும் ஒரு பெண்ணை வெட்கமடையச் செய்வதில்லை. அவிழ்த்த உன் ஆடைகளைத் திரும்பத் தொடும் கணம் வரை நீயும் மனிதனில்லை. குருவின் இந்த மொழிகளால் நான் தைரியமுற்றவனாக உள்ளே நுழைந்து குருவின் பெண்ணிடம் லஜ்ஜைப் படாமல் வஸ்திரங்கள் வாங்கிக்கொண்டு குளித்து முடித்து ஆகாரமுண்டு களைப்பு நீங்கியவனாக என் குருவின் முன் தாழ்ந்த ஆசனத்தில் உட்காரப் போகும் போது அவர் என்னைத் தடுத்து நிறுத்தித் தனக்குச் சமமாக இடப்பட்டிருந்த ஆசனத்தில் என்னை அமரச் செய்து கையில் தாம்பூலத்தையும் தேங்காயையும் பொதிந்து அதன்மீது நீரை வார்த்து தன் பெண்ணை எனக்கு வெற்றியின் பரிசாக அளிப்பதாக அறிவித்தார். பிறகு தன் காது குளிர என் பிரயாண அனுபவங்களைச் சொல்லும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். என்னைத் தன் மாப்பிள்ளையாக அவர் அறிவித்த கணத்திலேயே தன்னை என் முன் காட்டிக்கொள்வதைத் தவிர்த்து விட்ட வெட்கத்தால் சிவந்து தகித்துக்கொண்டிருந்த முகத்தையுடைய இந்தப் பெண்ணும் கதவுகளுக்குப் பின்னிருந்தபடியே என் பிரயாண அனுபவங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள். பசுவின் பின்னே புறப்பட்ட முதல் தினத்திலிருந்து பசு பின் தொடரத் திரும்பி வந்த கடைசி தினம் வரையில் எனக்கேற்பட்ட விசித்திர அனுபவங்களை விலாவரியமாகச் சொல்லி என் குருவின் காதுகளையும் மனதையும் குளிர்வித்தேன் என்று தனது பால்யகால நினைவுகளையும் சாதனைகளையும் இவ்விதமாகத் தன் கதை மூலம் நினைவு கூர்ந்த என் முதிர்முப்பாட்டனார் தொடர்ந்து பேசுகிறார்; கனவு என்கிற அதிசயமான உலகிற்கு சர்வசாதாரணமாகச் சென்று வர ஆசீர்வதிக்கப்பட்ட விலங்குகளில் மனிதனைத் தவிர பிற யாவுமே பிரபஞ்சத்தைத் தங்களுடைய இருப்பிடமாகவே (அதாவது பிறப்பிடமாகவே) காண்கின்றன என்பதைத் தெரிந்து கொண்ட எனக்கு சில வேளைகளில் சுயநலமும் மமதையும் மிக்க மனிதப் பிறவிகளால் இந்த இருப்பிடங்கள் மிருகங்களிடமிருந்து பலவந்தமாகப் பறித்துக்கொள்ளப்பட்டு அவை விரட்டியடிக்கப்படும் போது பொதுவாக என்ன நடக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை. அதற்குள் என் குருகுலவாசம் முடிந்து என் மனைவியுடன் இந்த நகரம் நோக்கி வந்துவிட்டேன். எந்தக் கல்வியும் குறைபாடுள்ளதாக முடிந்து போக இப்படி பூர்த்தி செய்யப்படாமல் கவனத்திலிருந்து விடுபட்டுப் போகும் கேள்விகளே காரணமாக அமைந்துவிடுகின்றன. என் மனதில் ஒருபோதும் நான் கேட்டுக்கொண்டிராத இந்தக் கேள்விக்கான பதிலை அதை அப்படி இத்தனைக் காலமும் பொருட்படுத்தாதிருந்துவிட்டதை நினைத்து நான் வெட்கத்தில் புழுங்கிச் சாகும் வணம் ராஜன் மகளின் படுக்கையறையிலிருந்து பெற்றேனென்பதுதான் நான் சொல்லிக்கொண்டு வரும் இந்தக் கதை. அந்த வகையில் கனவுகளின் மீதான என் இரண்டாம் பிரயோகத்தில் என்னையுமறியாமல் மீந்து போன தேடலின் தொடர்ச்சியாகவும் இந்தக் கதை அமைகிறது. அப்படியானால் என் பரீட்சையில் நான் கடந்து செல்ல வேண்டிய நிலை இன்னொன்றும் இருக்கிறது. எனில் அது என் குருவையும் நான் கடந்து செல்ல என்னை நிர்பந்திப்பது அல்லவா, கவனக்குறைவால் நாம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்ட பாடங்களையும் எழுதத் தவறிவிட்ட பரீட்சைகளையும் காலம் தான் எப்படி எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத நபர்கள் மூலமாக நமக்கு அறியக் கொடுத்து விடுகிறது .

நம் ராஜன் ஆண்வாரிசு ஒன்றை வேண்டித் தன் வாழ்நாள் முழுவதையும் யாகங்களிலும் தான தர்மங்களிலும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் விரும்பியது அவருக்குக் கிடைக்க ஆண்டவன் அருள் பாலிக்கட்டும். அதே சமயத்தில் அவர் தன் பெண்ணை இருபத்திரண்டு ஆண்களுக்குச் சமமான மனோதிடமும் உடல் வலிமையுள்ளவனாகவும் வளர்த்து வந்திருக்கிறார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் ராஜனின் பெண்ணும் ஆய கலைகள் அனைத்தையும் கசடறக் கற்றுணர்ந்திருக்கிறாள். அவளை என் மாணவி என்று சொல்லிக்கொள்வதில் உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். ஸ்பரிசத்தாலன்றிப் பார்வையால் எதிரியின் புலன்களைச் செயலிழக்கச் செய்யும் அற்புதமான கலையை என்னை அறியச் செய்தவள் அவள்தான். அதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமோ தயக்கமோ கிடையாது. அவள் பார்வை மனிதர்களின் மூர்க்கத்தையும் புழுபூச்சிகளின் இயக்கங்களையும் தாவரங்களின் சுவாசத்தையும் கூட கட்டுப்படுத்தும் பேரழகும் ஒளியும் கொண்டது. உயிரற்ற ஜடப் பொருட்களின் நிலையைக் கூட கட்டுப்படுத்தும் கலை அவள் கூடப் பிறந்த அதிசயமாக இருக்கிறது. அவள் என்னிடம்

வர்மக்கலையை பயின்றுகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் தன் பார்வையின் மகத்துவச் சொடுக்கால் கடிகையின் மணற் பொழிவைத் தடுத்து நிறுத்தி விட்டாள். அன்று என் நித்ய கடமைகளும் உணவு வேளையும் படிக்கும் ஏடுகளின் அளவும் உறக்க அளவும் தலைகீழாக மாறிப் போய்விட்டன. இந்த நகரத்திலும் பிற தேசங்களெதிலும் அவளுடைய பிரகாசத்திற்கு நிகராக ஜொலிக்கும் ஆண்மகன் எங்குமே கிடையாதென்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். இத்தகைய அபூர்வப் பெண்ணுக்குள்ளும் கூட அவளையுமறியாமல் வாட்டிக்கொண்டிருந்த ஏக்கம் ஒன்று இருந்து வந்தது. இத்தனை திறமைகள் வாய்க்கப் பெற்றவளாக தான் இருந்தும் நிகரில்லையென்று அனைவராலும் போற்றிப் புகழப்படுகிறவளாக தான் இருந்தும் கூட தகப்பன் தன் சுக்கிலத்தின் இன்னொரு துளிக்கு இவள் ஈடானவள் அல்ல என்கிற எண்ணத்தினாலன்றோ ஆண் வாரிசு வேண்டி தொடர்ந்து யாகங்கள் செய்துவருகிறாரென்கிற எண்ணம் அந்தப் பெண்ணின் மனதை அவளையுமறியாமலேயே வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. இருபத்திரண்டு ராஜன்களுக்குரிய கல்வியைத் தன் யவ்வனப் பருவத்துக்குள் கரைத்துக்குடித்திருந்த அவளுக்கோ தன் மனதை அரித்துக்கொண்டிருந்த குறை இன்னதென்று தெளிவாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. பெண்ணால் சாதிக்க முடியாத ஏதோ ஒன்று ஆண் பிறப்பிடம் விஞ்சி நிற்கிறதென்பதாக ஒரு பிரமை அவளை முழுவதும் ஆட் கொண்டுவிட்டது. இந்தப் பிரமை இரவுகளில் தூக்கத்தினுள் தூக்கமின்மையாகவும் பகல்களில் வித்தைகளினுள் மயக்கமாகவும் மாறி அவளை அலைக்கழித்து வந்தது. கிட்டத்தட்ட இதே சமயத்தில்தான் யவ்வனமும் ராஜன் மகளின் கன்னியுணர்வுகளை உண்மையில் துயரம் மிக்கதும் கிலிகொள்ளச் செய்வதுமான ஒரு காட்சியை முன்னிறுத்தி மலர்த்திவிட்டது. இதில் வியப்படைய ஏதுமில்லை. ஒரு கன்னிப் பெண்ணின் இணை தேடும் உணர்வுகள் எப்போது எங்கே யாரால் அல்லது எதால் தட்டி எழுப்பப்படும் என்பதை யாராலும் சொல்ல முடியாதென்கிறது காம சாஸ்திரம் ஒரு பூவின் விகசிப்பு அல்லது தென்றலின் வருடல் அல்லது இரவின் தனிமை அல்லது யாழின் இசையொலி அல்லது ஒரு சக பெண்ணின் ஸ்பரிசம் போதும் இவைகளல்லது ஒரு சிறு பறவையின் மரணம் நோயால் பொலிவிழந்த உடல் கண்ணீர் குமுறும் கண்கள் என்று இவைகூட ஒரு புஷ்பவதியின் இணை தேடும் வேட்கை அவளுக்குள் கிளந்தெழக் காரணமாய் அமைந்து விடக்கூடும். யவ்வனம் என்பது ஒரு பருவமாக மட்டுமன்றி அந்தக் காலத்தில் அவளுடைய பார்வையாகவும் அமைந்துவிடுகிறது. அது அவளைத் தீண்டும் எதையும் ஆண் தன்மை உடையதாக மாற்றிக் காட்டி அவலை மகிழ்விக்கிறது. மேலும் கனவுகளுக்குச் சற்றும் குறையாத வினோதத் தன்மையையும் புதிர்க் குணத்தையும் யதார்த்தத்தில் ஏற்றி விளையாடிக்கொண்டே இருக்கிறது. இதனால் யவ்வன ஸ்தீரிகளுக்கு கண்ணெதிரே நிகழக் கண்ட உண்மை சிலசமயம் கனவின் மிச்சமாகவும் கனவின் வினோதம் பல சமயங்களில் கண்ணெதிரே நடந்த உண்மை போலவும் எண்ணிக்குழம்பும் மயக்கம் உண்டாகிறது. ராஜனின் பெண் விஷயத்திலும் ஒரு நம்பற்கரிய நிஜம் கனவுக்கு ஒப்பான புகைப் பரிமாணத்துடன் நிகழ்ந்து அவளைக் குழப்பி விட்டுவிட்டது. இது மாதிரியான நிஜம் லட்சத்தில் ஒரு பெண்ணின் கண்முன் லட்சத்தில் ஒரு தடவைதான் தோன்ற முடியும். ஆக தகப்பனின் யாகங்களால் விளைந்த வியாகூலமும் யவ்வனப் பருவத்தின் இணை தேடும் விருப்பமும் பல மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு கண்ட காட்சியால் ஒன்றோடொன்று கலந்து குழம்பிப் போய்விட்டன என்பதுதான் ராஜன் மகளைப் பற்றிக் கொண்ட வினோதமான நோய். அந்தக் காட்சியை அவள் பார்த்தது தூக்கமும் விழிப்புமற்ற மயக்க நிலையில் ஒரே ஒரு நாள் இரவில் தான், ஆனால் அது நடந்து கொண்டிருந்ததோ ராஜ குடும்பத்தின் பல தலைமுறைக் காலமாக. அதன் பன்னிரெண்டாம் தலைமுறையில் அது சர்வசாதாரண காட்சியாக இருந்தது. பதின்மூன்றாம் தலைமுறையின் துவக்கத்தில் அது அரிதான காட்சியாகி அத்தலைமுறையின் முடிவுக்குள் எங்கும் காணவே முடியாத காட்சியாகி மறைந்து போனது. அதற்குப் பிறகு அது இந்நகரத்தின் ஞாபகத்திலிருந்து வழக்கொழிந்து போன பண்டைய கதையாக மாறிவிட்டது. அதன் வாசனையோதலைமுறைகளைக் கடந்து வந்துகொண்டிருந்தது. ராஜ குடும்பத்தின் கோத்திரக் கண்ணியைப் போலவும் அதன் குருதியோட்டத்தைப் போலவும் அந்த வாசனை ஒவ்வொரு காலகட்டத்தினூடாகவும் ரகசியமாகக் கடத்தப்பட்டுக்கொண்டே வந்தது. ராஜதானியின் அத்தனை தெருக்களிலும் யார் கண்களுக்கும் புலப்படாத புகை வடிவமாக அந்தக் கதை – புலியும் முயலும் ஒரே நீர்ச்சுனையில் அருகருகே நீர் அருந்தி மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்து வந்த அந்தப் பண்டைய கதை – நகரத்தின் புழுதியோடு புழுதியாகச் சுழன்று சுவர்களெங்கும் படர்ந்து ஊடுருவி நிற்கிறது. அது வேறெங்கும் போகவும் முடியாது. என்பதுதான் உண்மை . பதின்மூன்றாம் தலைமுறைக்கு முன்பு வரை பிரசித்தி பெற்றதாயிருந்த பிற தலைமுறைகளின் ரகசியமாம் அந்த அபூர்வக் காட்சியைத்தான் பல மாதங்களுக்கு முன் ஓரிரவில் இளவரசி தன் தூக்கக் கலக்கத்தில் கண்டாள். ஆம். அவள் கண்டது கானகத்தின் விரைக்கும் குளிரில் மரத்துப் போன ஞாபகங்களின் தோலுக்கு இதம் தேடி திறந்திருந்த சாளரத்தின் வழியே தினமும் உள்ளே குதித்து பதின்மூன்றாம் தலைமுறையில் படுக்கையறையாக மாற்றப்பட்ட தன் பழைய கடம்ப விருட்சத்தின் உச்சிக்கிளையில் மாய உருவமாகத் தன்னை மறைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த ஒரு காட்டு மிருகத்தின் ஆத்மாவை தன் கானக் வாழ்வின் நினைவுகளை உட்கொண்டே உயிர்த்துக்கொண்டிருந்த அது ஒரு கிழட்டு வரிப்புலி. பத்து தலைமுறைக் காலமாக அங்கே துயின்ற எவருடைய கண்களையும் உறுத்தாமல் யாருடைய கனவுகளுக்கும் காரணமாகாமல் அவர்களின் இணைப்பறைக் கட்டிலுக்கடியில் பூர்வ வாசனையுடன் தன் இரவுகளைக் கழித்துக்கொண்டிருந்தது. அந்த கதைப்புலி. மதுரமான தென்றலின் வடிவத்தில் அதை முதன் முதலில் பார்த்தவள் ராஜனின் பெண் தான். அது முக்தியுறும் காலம் அப்போதுதான் கனிந்தது என்பதும் ராஜன் மகளின் கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது என்பதும் தான் அதற்குக் காரணம். பார்வையால் ஜடப் பொருள்களைக் கூட வசியம் செய்யும் அற்புதப்பெண் அவள். இரவுகளின் நிழலாகவும் பகல்களில் புழுதியாகவும் இந்நகரத்தின் தெருக்களில் திரிந்து பதின்மூன்றாம் தலைமுறை நினைவுகளின் எச்சமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்த கதைப் புலியின் புகை வடிவம் அவள் கண்களுக்குப் புலப்படும்படித் தன் ரகசியத்தை இழந்து போனதென்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்தப் புலி இனித் திரும்பி அந்தப் படுக்கையறைக்கு வரப் போவதுமில்லை. அமைதியுறாமல் அலைந்து கொண்டிருந்த அதன் ஆயுள் ராஜனின் பெண்ணின் பார்வையில் உறைந்து உடைந்து விட்டது. தலைமுறைக் காலங்களாக அது பெறக் காத்திருந்த முக்தி அதற்கு இந்நேரம் கிட்டியிருக்கும். அரண்மனைப் படுக்கையறையிலிருந்து விரட்டப்பட்ட மூன்றாம் நாள் பின்னிரவின் உறைய வைக்கும் குளிருக்கு தலைமுறைக் காலங்களாகப் பழக்கப் பட்டிராத அந்தக் கதைப்புலியின் ஆத்ம நாளங்கள் சுருங்கி இறுகி அதன் ஞாபகத் துடிப்பைக் கவ்விப் பிடித்து இயங்க விடாமல் நிறுத்தியிருக்கும். ஆனால் சபையோரே கிழட்டுவரிப்புலி ஒன்றல்ல. இன்னும் ஓராயிரம் காட்டு விலங்குகள் இந்த ராஜ்ஜியமெங்கும் சாமான்யர்களின் சுவாசத்தில் கதைகளாக மனிதர்களோடு மனிதர்களாகப் புழங்கிய பொன்னான நாட்களின் வாசத்தை விட்டகல முடியாமல் புகை வடிவமும் பாகு போல் இனித்த மனதும் கொண்டவைகளாகச் சுற்றியலைந்து கொண்டிருக்கின்றன. இந்நகரத்தைத் தங்கள் கனவுகளில் உருவாக்கிச் சுழற்றிக்கொண்டிருக்கின்றன. இன்று இதை இங்கே செவிமடுத்துக்கொண்டிருப்போரையும் அவர்களின் மூதாதையர்களையும் இனி பிறக்கப் போகும் வாரிசுகளையும் தங்களின் பளிங்கு விழிகளால் ஆர்வத்துடனும் வாஞ்சையுடனும் ஏக்கத்துடனும் உற்றுப் பார்த்தபடி படுக்கையறைச் சுவர்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தூல உருவமாகக் கண்டு அவற்றுக்கு முக்தியளிக்கும் பார்வையொளி கொண்ட பெண் மகவுகள் இந்த ராஜ்ஜியம் எங்கிலும் பிறந்து செழிக்கட்டும் என்று ராஜன் முன்னிலையிலேயே நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

சாளரத்திலிருந்து தென்றலாக உள்ளே குதித்த கிழட்டுப்புலியின் ஆவியுரு அதுவரையில் மொட்டாக இருந்த ராஜன் பெண்ணின் இணை தேடும் உணர்வுகளை மலர்த்தி விட்டது. ஆணுக்கென்று தனி அம்சமொன்று இருக்கக்கூடுமென்று தன்னையுமறியாமல் நம்பிப் பழக்கப்பட்டுவிட்ட அவள் அது என்ன என்பதையும் அன்று தான் கண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டாள். காதலில் கனவு காண்பதற்கான சாமர்த்தியமும் தைரியமும் ஒரு ஆணுக்கன்றி பெண்ணுக்குக் கைகூடுவதல்ல என்ற விழிப்பும் துயிற்பும் கலந்த மயக்கத்தில் அவள் மனது பிதற்றவாரம்பித்துவிட்டது. நிலவின் மங்கிய ஒளியோடும் தென்றலின் மணத்தோடும் இறகின் எடையின்மையோடும் புகையொத்த உருவமாகக் கிழட்டுப்புலி சாளரத்தின் வழியே உள்ளே குதித்த காட்சி ஆண்மையின் குத்தீட்டிப் பாய்ச்சலாக அவள் மனதில் பாய்ந்து பதிந்ததென்று கனவுகளின் ஊற்றுக்கண்ணை ஆய்ந்தறியும் பாடப்பகுதி எனக்குப் போதித்தது. அந்த வினாடியில்தான் அவள் யவ்வனத்தின் பார்வை திறந்துகொண்டது. அந்த அளவில் காட்சிகளின் கனவுத்தன்மையும் கனவின் ஸ்தூல கணங்களும் அவளோடு விளையாடத் துவங்கிவிட்டன. அவள் தான் கற்பனை செய்து கொண்ட ஆண்மை தன்னைக் கிளர்த்தும் முகமாகத் தன் கண்களை மூடிக்கொண்டு அந்நிலையிலேயே கனவுகளின் வினோத உலகிற்குள் ஆழ்ந்து போனாள். அப்போது அவள் தன் தகப்பனின் ஆண்மகவுக்கான யாகங்கள் வெற்றி பெற வேண்டுமென்று தன் மனதார வாழ்த்தினான். தான் விழித்திருக்கிறோமா உறங்குகிறோமா என்பதிலேயே நிச்சயமற்றவளாக இவ்வாறு ராஜனின் பெண் மலர்த்தப்பட்ட பெண்மையின் துடிப்போடு அதைச் சாந்தி செய்யும் ஆண்மையின் பாரம் தன் மீது கவிந்து கொள்ளப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆனால் உள்ளே நுழைந்த கிழட்டுப்புலி ராஜன் பெண்ணின் படுக்கையை நோக்கிச் செல்வதற்கு பதிலாக சபையோரே இணைப்பறையை நோக்கிச் சென்று வாயில் திரையை விலக்கியபடி உள்ளே போய் மறைந்து விட்டது. படுக்கையறையை விடச் சிறியதும் அடைசல்களுடையதும் சாளரங்களற்றதும் அதனாலேயே படுக்கையறையை விட அதிகக் கதகதப்பு உடையதுமான இணைப்பறைக்குள் புகுந்து தோழிப் பெண்ணின் கட்டிலுக்கடியில் தன்னைக் குறுக்கிக்கொண்டு நித்திரை செய்யும் வழக்கம் உடையது அந்த மாயப்புலி. அன்றும் அதுவே நடந்தது. தன் இணைக்காகக் கண்களை மூடியபடியே சயனித்திருந்த ராஜனின் பெண்ணும் சற்று நேரத்தில் அந்த அமைதியுடனேயே உறங்கிப் போய்விட்டாள். ராஜனின் பெண் அரைகுறைத் தூக்கத்தில் கண்ட காட்சி ஒரு வரவேற்பறைக் காட்சியின் சாதாரணத்துவத்துடன் அவள் மூளையின் ஞாபகப் பொறியிலிருந்து நழுவி கனவுகளுக்குள் இறங்கிவிட்டது. அதேசமயம் திருப்திப்படுத்தப்படாத விரகம் முழுவதுமாக விழித்துக்கொண்டுவிட்டது. முற்றிலும் விழிப்பு நிலையில் அமைதியுறாத புலியின் ஆன்மாவை அவள் கண்டிருப்பாளேயானால் மீண்டும் கண்களைத் திறந்து அதைத் தேடியிருப்பாள். முற்றிலும் விழிப்பு நிலையிலிருக்கும் ஒரு மனித உயிரின் பார்வையில் படாமல் பரம்பரைகளைத் தாண்டிய அந்தப் புலியே கூட ஒருவேளை தொடர்ந்து தன் இருப்பைக் கதைகளில் மட்டுமே உறுதி செய்தபடி இன்றும் அதே அறையில் பிறரறியா வண்ணம் துன்புறும் ஆன்மாவாகத் தன்னை நீடித்துக்கொண்டிருக்கும். ராஜன் பெண்ணின் வினோதக் கனவுக்குக் காரணமான அந்நிகழ்ச்சியும் அவள் பிரக்ஞையின் மேல் மட்டத்திலேயே உடைந்து சிதறியிருக்கும். இன்று இந்தக் கதைக்கும் என் கீர்த்திக்கும் சந்தர்ப்பமே கிடைத்திருக்காது. அல்லது குறைந்தபட்சம் மறுநாள் காலையில் சாளரத்தின் கீழே தரையில் ஊர்ந்து செல்லும் இரண்டு காலடிச் சுவடுகளை அவள் பார்த்திருக்காவிட்டாலாவது எல்லா யவ்வன ஸ்தீரிகளின் கனவுகளையும் போல அவள் கனவும் தன்னைச் சல்லாபிக்கும் ஆண் இணைக்குக் காத்திருக்கும் வேட்கையுடனாவது முடிந்திருக்கும். ஆனால் முக்தி வேண்டி தலைமுறைக் காலங்களாக அலைந்து கொண்டிருந்த வனவிலங்கின் ஆன்மாவை அமைதிப்படுத்தும்படி விதி அவளுக்குக் கட்டளையிட்டிருந்ததால் மறுநாள் காலையில் படுக்கையறையின் உள் பக்கத்தில் சாளரத்தின் கீழே தரையில் மனிதப் பார்வை பட்ட கணத்திலிருந்தே தன் எடையையும் நிழலையும் திரும்பப் பெறத் துவங்கி விட்ட புலியின் ஒரு ஜதைக்காலடிச் சுவடுகளை ராஜன் மகள் பார்த்தாள்.

ஒரு பெண்ணின் கனவுகளுக்குள் எந்த உருக்கொண்டும் நுழைந்து சுகிக்கும் தகுதி மிருகங்களில் புலிக்குத்தான் உண்டு என்கிறது மாந்திரீகம். வேறெந்த விலங்கும் தான் மனிதப்பிறவியல்ல என்பதைத் தன் சுவாச அலைவிலேயே காட்டிக் கொண்டு விடும். புலி அப்படிப்பட்டதல்ல. அது மனிதனைப் போலவே கம்பீரமானது. மனிதனைப் போலவே கச்சிதமான அசைவும் உயர்ந்த எண்ணங்களும் போர்க்குணமும் இசையை ரசிக்கும் பெண் மனதும் கொண்டு இலங்குவது. போர்க்களத்தில் வீரர்களின் லட்சியமாகவும் படுக்கையறையில் புஷ்பவதிகளின் கனவாகவும் விளங்குவது புலி. அது தன் முன்னங்கால் சுவடுகள் தரையில் பதிய அனுமதிப்பது இல்லை . விதி வசத்தால் நாலு கால்களில் நடக்கும் உயிராக அது படைக்கப்பட்டுவிட்டபோதிலுங்கூட தன் முன்னங்கால்களை ஒரு ஆயுதமாக மட்டுமே பிறர் கண்களுக்குக் காட்டிக்கொள்ளும் வேட்கையுடையது புலி. இதை வெறும் வேட்டைக்காரர்களும் பாமரர்களும் அறிய மாட்டார்கள். விலங்குகளின் அவய லட்சண சாஸ்திரங்களைக் கற்றறிந்தவன் புலிகளின் குணாம்சத்தை நன்கறிவான் புலி தன் முன்னங்கால்கள் நிலத்தில் பதிந்த தடத்தை அதன் மீது ஊர்ந்து செல்லும் தன் நிழலில் எடையால் அழுத்தி அழித்துவிடும். அதன் நிழல் படராத பின்கால்களின் இரண்டு தடங்கள் மட்டுமேதான் எப்போதும் பிறர் கண்களுக்குக் காணக் கிடைக்கும். அப்படிக் காணக் கிடைத்த ஒரு ஜதைக் காலடிச் சுவடுகளால் தான் ராஜனின் பெண் வெகுவாக ஈர்க்கப்பட்டாள். ஆம் ஈர்க்கத்தான் பட்டாள். அவள் அவற்றைக் கண்டு குழம்பிப்போகவில்லை. அதிர்ச்சியடையவில்லை. நழுவிக் கனவுகளுக்குள் இறங்கிவிட்ட முந்தைய இரவின் காட்சியை அந்தச் சுவடுகள் அவள் நினைவுக்கு மறுபடி கொண்டு வரவுமில்லை . அது மனிதக் காலடிச்சுவடுகள் இல்லையென்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் முன்னெப்போதும் வனவிலங்குகளை அவள் நேரில் கண்டவளில்லையாதலால் வட்ட வடிவமான கால் தடங்களை இன்னதென்று அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை . அவை சுவற்றின் ஓரமாகப் பயணப்பட்ட விதம் மட்டுமே அந்தப் பேதைப் பெண்ணை வியப்பிலாழ்த்தி அவள் கவனத்தைச் சுண்டி இழுக்கப் போதுமானதாயிருந்தது. அந்தக் காலடிச் சுவடுகள் எந்தக் காரணத்துக்காகவும் அறைச் சுவற்றின் அண்மையை விட்டு அப்பால் நகர்ந்து செல்லவில்லையென்பதே அவள் வியப்புக்குக் காரணம். அதன் வழியில் சுவரோரமாகக் குறுக்கே நின்ற ஆளுயர அலங்காரப் பூக்குவளையின் உட்பக்கத் தரையில் அந்தச் சுவடுகள் பதிந்திருந்தன. ராஜன் மகள் தினமும் பார்த்துச் சிங்காரித்துக்கொள்ளும் பளிங்கு ஆடியின் வட்டப் பரப்பின் நடுவில் சுவாசக் காற்றின் ஈரம் உலராத ஆவி அதன் இரண்டு பக்கங்களிலும் படிந்திருந்தது. பெரிய சிமிழ்களுக்குள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரவு விளக்கின் மேல் நுனி இணைப்பறையிருந்த திசை நோக்கியே குவித்து அழுத்தப்பட்டிருந்தது. எந்தப் பொருளையும் ஒரு தடையென்று மதிக்காது அவற்றை ஊடுருவிக் கிடக்கும் அதிசயிக்கத்தக்க சுவடுகளைப் பதிக்கும் பாதங்கள் யாருக்குச் சொந்தமானதாயிருக்க முடியும். காற்றையும் ஒளியையும் தவிர வேறு யாருக்கு இப்படித் தன் அறையினுள் உலாவிச் செல்லும் தைரியமும் லாவகமும் கைவர முடியும். தென்றலோ அல்லது நிலவோதான் தன் அறையினுள் அன்று இரவு அப்படி நடந்து போயிருக்க வேண்டுமென்று ராஜனின் பெண் நினைத்துக்கொண்டுவிட்டாள். அந்த அளவில் அவளுடைய பருவம் நிஜத்தில் அவள் கண்ட காலடிச் சுவடுகளுக்கேற்ப பிரகிருதியின் அம்சங்களைக் குழைத்து ஒரு பேரழகனின் உருவத்தை வரைந்து அவனை அவள் கனவுகளில் நடமாடவும் அனுமதித்துவிட்டது. அவன் தன்னைக் கூடாமல் விலகிப் போனதற்கான ஒரு காரணத்தையும் அவள் ஆழ்மனம் கற்பித்துக்கொண்டுவிட்டது. அவள் துயரத்தின் பளுவும் தாபத்தின் வெம்மையும் பீறிடும் சில பாடல் வரிகளை இயற்றியிருக்கிறாள். அந்தப் பாடல் வரிகள் கால் சுவடுகளைப் பார்த்த கணத்திலேயே ராஜன் மகளின் மனதில் எழுந்திருக்க வேண்டும். வினோதச் சுவடுகளைப் பார்த்த மாத்திரத்தில் பயந்துபோய் அலறி மற்றவர்களையும் கலவரப்படுத்தாமல் அவற்றை ஆராயப் புகுந்தது அவளுடைய பிறவி விவேகத்தின் சிறப்பைக் காட்டுகிறதென்றால் அவற்றால் ஈர்க்கப்பட்டு அவள் உடனே இயற்றிய பாடல் வரிகளோ வித்தைகளில் அவளுக்கிருந்த பாண்டித்யத்தைக் காட்டுகிறது. தான் இயற்றிய வரிகளின் சந்த நயத்திலும் கற்பனை வளத்திலும் தானே ஈர்க்கப்பட்ட ராஜனின் பெண் பிறகு எப்போதுமே அவற்றை முணுமுணுத்துக்கொண்டிருக்கத் தலைப்பட்டாள். இதை நான் எப்படி அறிந்தேனென்றால் என்னிடம் வித்தை கற்றுக்கொள்ள வந்த நாட்களிலும் கூட அந்தப் பாடல் வரிகள் அவள் பிரயாசையின்றியே அவள் வாயிலிருந்து பெருகி வழிந்து கொண்டிருந்ததை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அது அவளை பீடித்திருந்த வினோத நோயின் வெளிப்பாடே என்பதை அப்போது நானும் அறிந்தேனில்லை. தான் இயற்றிய பாடல் வரிகளைத் தன் குரலாலேயே பாடித் தன் செவிகளாலேயே நுகர்ந்து அவற்றையே உண்மையென நினைக்கும் பிரமை வயப்பட்டு அவை தன் கனவுகள் வரை புரையோடும்படி விட்டு விட்டதானது அனுபவத்தாலன்றி வெறும் ஏட்டுப்படிப்பால் பக்குவப்படுத்த முடியாத அவளுடைய பதின்பருவத்தின் பலவீனத்தால் விளைந்தது. தானே நிர்மாணித்த கனவுலகில் தன் நண்பனோடு கூடி விளையாடிக் களித்துக்கொண்டிருந்த நேரங்களிலும் இந்தப் பாடலின் வரிகள் பின்னணியாக அவள் நாபியிலிருந்து ஒலித்தபடியே இருப்பதை நான் முதல் நாளிரவு கேட்டேன். தூங்கும் வேளைகளில் ராஜனின் பெண் முணுமுணுத்த பாடல் வரிகளை விளையாடிக் கொண்டிருந்த கனவுப்பெண் தன் செவிகளால் நுகர்ந்தவாறே இருக்கும்படியானது. திரும்பத் திரும்ப பாடப்பட்ட இந்த வரிகள்தான் பெண்மையின் இயல்பான தவிப்பைச் சிறிது சிறிதாக ஒரு வினோதமான நோயாக மாற்றி விட்டன.

தென்றலின் நீண்ட கனவொன்றில்

என் முகம் சிற்றசைவு.

திங்களின் நெடிய ஆயுளில்

என் பெண்மை ஒற்றைப் பெருமூச்சு

காற்றின் உறக்கமாய் நானில்லை

யென்பதெதனால்

ஒளியின் சுவாசமாய்

நானில்லையென்பது

மெதனால்.

அதனால்

இந்த இரவென்னை

மிகப் பெரிதும் வருத்துகிறது

மேலும் அதனால்

அகாலத்தை தன் ஆபரணமாய்ப்

பூண்ட என் நண்பன்

எனை விட்டு அகன்று செல்கிறான்.

ரோகியிடம் மலர்களுடன்

நோயையும் விட்டுச் செல்லும்

இரக்கமற்ற உறவினன் போல.

விளையாட்டுகளின் உச்சக்கட்டத்தில் தன் நண்பனைப் படுக்கையில் அனுமதிக்கும் முகமாகக் கனவுப்பெண் கண்களை மூடிக்கொண்டு தன் வழக்கமான துயில் நிலையில் உறங்கும் நிஜப் பெண்ணின் மேல் சாய்ந்து கொள்ளும் போதெல்லாம் உறங்கும் பெண் நான் ரோகியல்ல நான் ரோகியல்ல என்று பயத்துடனும் ஜுர வேகத்துடன் தாறுமாறாக பிதற்றத் துவங்குவதை இதோ என் கண்முன்னே நான் மறுபடி பார்க்கிறேன். காற்றின் லகுவும் சுகந்தமும் நிலவொளியின் தேஜஸும் நிறைந்த தன் பேரழகு நண்பன் தன்னைக் கூடும் விருப்பமின்றி விலகிச் செல்லப் போகிறானென்னும் பயம் அவள் முகத்தைக் கோரமாகக் குத்திக் கிழிக்கிறது. பாடலின் கடைசி வரிகள் உறங்கும் பெண்ணின் வாயிலிருந்து கழிவுப் பொருள்களின் துர்நாற்றத்துடனும் நிறத்துடனும் பெருகி வெளியே பீய்ச்சியடிப்பதையும் நான் இப்போது மறுபடி பார்க்கிறேன். என்னாலேயே அந்த அருவருப்பான காட்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் கனவுப் பெண்ணோ வெளியே உறங்கிக்கொண்டிருக்கும் நிஜப்பெண்ணின் அவஸ்தையை உணராதவளாக தன் மேனியெங்கும் பெருகி வழியும் பாடல் வரிகளின் விகாரத்தை அறியாதவளாக அதே நிர்மலமான முகத்துடன் அமைதியாக அவன் கூடுவதை எதிர்பார்த்துச் சாய்ந்திருக்கிறாள். மிகப் பரிதாபகரமானதும் பயங்கரமானதுமான காட்சி அது. அதிசயமான காட்சியுங்கூட. பருண்மையான கால் தடங்களை கனவுகளுக்குள் ஊடுருவும் வரிவடிவமாக்கிக் கொண்டும் கனவுலக நண்பனை எண்ணிக் கனவுக்கு வெளியேயான பருண்மை உடலை வருத்திக்கொண்டும் இந்தச் சிறுபெண்பட்ட பாட்டைச் சொல்லும் போது என் நா தழுதழுக்கிறது. உண்மைதான். அவள் அப்போது அடைந்த விகார ரூபத்தை என்னாலேயே கண்டு தாங்கிக் கொள்ள முடியவில்லைதான். என்றால் மெல்லியதமும் புகையுருவமும் கொண்ட அந்தப் பேரழகனால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். அவன் அவள் பாடலில் துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் அவள் அலறி விழிக்கும் படியாக முகத்தில் துப்பிவிட்டு உடனே மறைந்து போய்விட்டான். இது ஒரு நாளல்ல. பல தினங்களாக நடந்து கொண்டே இருந்திருக்கிறது. தன் நண்பன் விலகிப் போய் விடுவானெனும் பயத்தாலேயே அவனைப் பறிகொடுத்தும் தீவிர பயத்தால் பாதிக்கப்பட்டும் ராஜனின் பெண் தன்னைத் தன் நினைவின்றியே ஒரு வினோத நோய்க்கு ஒப்புக் கொடுத்து விட்டாள். கனவின் இந்த வகை பாதிப்பால் யதார்த்த உலகில் ஒரு அழகிய ஆண்மகனைக் கூடும் அருகதை தனக்கில்லையென்று அவள் மனது நம்ப ஆரம்பித்து விட்டது. எந்த அழகிய ஆணும் முகத்தில் காறியுமிழக் கூடிய அளவுக்கு அவள் முகம் ரோகத்தால் விகாரப்பட்டதென்று நாங்கள் மூன்றாம் நாளிரவு நட்சத்திரவாஸிகளின் கலவியை இசைத்து ஞாபகங்களின் காட்டுப் புதருக்குள் தலைமுறைக்காலமாக மறைந்து கொண்டிருந்த மிருகத்தை ஸ்தூல உருவத்துடன் வெளிப்படுத்தி அவள் கண்களுக்குப் புலியாகவே காட்டிக் கொடுக்கும் வரை கனவுகள் அவள் ஒப்புதல் இன்றியே அவளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தன. அழகிய ஆண் உருவங்களோவெனில் முகத்தில் வழியும் உமிழ்நீரை நினைவுறுத்தி வயிற்றிலிருந்து பொங்கி எழும் ஓங்கரிப்பை உண்டு பண்ணி அவளை அச்சுறுத்திக்கொண்டிருந்தன என்று தன் கதையை முடித்த என் முதிர்முப்பாட்டனாரின் துயரம் தோய்ந்த முணுமுணுப்பை பலகாத தூரம் பரந்திருந்த ஜனசமுத்திரத்தின் கடைசி மனிதனுங்கூட தெளிவாகக் கேட்டானென்கிறது கதை : இருபத்திரண்டு ஆண்களை ஈடு செய்யும் வலிமையும் பேரழகும் தைரியமும் கவ்வி ஞானமும் கொண்ட ஒரு யவ்வனப் பெண் தானொரு குரூபியையோ ரோகியையோ சேர்வதற்கே தகுதியானவள் என்று நம்பும் வினோத நோய் பீடித்தலைந்த பரிதாபத்தைப் பிரபஞ்சத்தைக் கருவறையாகத் தங்கள் கனவில் கண்டு அதனுள் தங்களைப் பாதுகாப்பாகச் சுருட்டிக்கொண்டிருக்க விரும்பும் விலங்குகளின் அமைதியுறாத ஆவிகள் வெட்டப்பட்ட விருட்சங்களின் இறந்து போன காற்றைச் சுமந்தபடி அலைந்து திரியும் தெருக்களையுடைய இந்த நகரத்தைத் தவிர வேறெது உருவாகியிருக்க முடியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *