கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 12,320 
 
 

சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம்.

சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள் வீட்டுப் பெட்டைநாய் டெய்ஸி; தன் குட்டிகளுடன் வாழைமரத் தோட்டத்தில் நிழல் தேடியது.போனகிழமை,குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி,பல நிறங்கள் படைத்த தனது பத்துக் குஞ்சுகளுக்குக் கடமையுணர்வுடன் இரை தேடிக் கொண்டிருந்தது.

இரவுகளில் யார் வீட்டுப் பரணிகளிலோ மீன் பொரியல் தேடித்திரிந்த களைப்பில்,எங்கள் வீட்டுக் கடுவன் பூனை குளிரான சிமேந்து விறாந்தையின் தரையில் சுருண்டு படுத்திருந்தது.

வீட்டு மாமரத்தில் குயில்கூவிக் கொண்டிருந்தது.குயில் கூவக் கூவ என்தம்பிகளும் சேர்ந்து குயில் மாதிரிக் கூவி, அரிசி புடைத்துக் கொண்டிருந்த எங்கள் ஆச்சியின் எரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

அப்பா குளித்துக்கொண்டிருந்தார்.அம்மா காலைச்சாப்பாட்டுக்காகப் புட்டவித்துக் கொண்டிருந்தாள்.என் பெரிய அண்ணா முன் ஹாலில் ஏதோ படித்துக் கொண்டிருந்தான்.அவன் எப்போதும் எதையோ படித்துக் கொண்டிருப்பான்.எனது இரண்டு தங்கைகளும் கொய்யா மர நிழலில்,பூமியிற் கோடிட்டு மாங்கொட்டை விளையாடிக்கொண்டிருந்தார்கள்.உலகம் தெரியாத வயது அவர்களுக்கு ,பத்தும் எட்டும். தாத்தா பூசையறையில் கடவுளைப் பிரார்த்திக்கொண்டிருந்தார். பற்கள்; விழுந்த அவர் வாயால்,

‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே,

அன்பினில் விளைந்த ஆரமுதே,

பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலை புலையனே யெனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த

என் செல்வமே சிவபெருமானே

இம்மையே உனைச்சிக்கனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே’

என்ற வார்த்தைகள் உருக்கமுடன் வெளிவந்து கொண்டிருந்தன.

பக்கத்து வீட்டுப் பார்வதி மாமியின் வீட்டிலிருந்து பக்திப் பரவரசமான ‘சுப்பிரபாதம்; எங்கள் வீட்டு மல்லிகைச் செடிகளைத்தாண்டி வந்த தென்றலுடன் சேர்ந்து வந்து என் காதுகளைத் தடவின.

எங்கள் வீட்டின் கம்பிவேலிகளின் இடுக்குகளால்,தூரத்தில் தில்லையாறு,பாம்பாக நெளிந்து வளைந்து தவழ்ந்து கொண்டிருந்தது. சூரியனின் தங்கக் கிரணங்கள் தண்ணீரிற் பட்டுத் தக தகத்துக் கொண்டிருந்தன.

தில்லையாறு சித்திரை மாதச் சூட்டில் வற்றிப்போய் இளம்பெண்ணைப்போல மெல்லமாகத் தவழ்கிறது. அந்த அழகுடன் காலையிளம் சூரியன் தன் பட்டுமேனியால் சாகசம் செய்வது போன்ற அந்தக் காட்சி சொற்களில் அடங்காது. நான் காலைச் சாப்பாட்டுக்குத் தேங்காய்ச் சம்பலை(சட்னி) அம்மியில் அரைத்துக்கொண்டிருக்கின்றேன்.

எத்தனை அழகான காலையிள நேரமது?

அன்றுதான் எங்கள் வீட்டிலிருந்த,எங்கள் அக்கம்பக்கத்திலிருந்த பல தமிழர்களின் வாழ்க்கை தலை கீழாக மாறியது.

என்மனம் காலையின் மோனத்தில் லயித்தபோது தூரத்தே கேட்ட நாய்களின் ஓலம் எனது கற்பனையைக் கலைத்தது.

பயங்கரமாகக் குலைத்துத் தங்களின் எதிர்ப்பை நாய்கள் காட்டுக்கின்றன.

என் அடிவயிற்றில் புளிபிசைந்த உணர்வு.

ஓரு காலத்தில்,ஊர் எல்லையில் நாய்கள் இரவில் ஊளையிட்டால் ஏதோ ஒரு அசம்பாவிதம் ஊரில் நடக்கும் என்பது ஊராரின் நம்பிக்கை.

இன்று ஊர் எல்லையில் நாய்கள் ஓலமிட்டால், இராணுவத்தினர் கிராமத்துக்குள் ‘ரவுண்ட் அப்– சுற்றி வளைப்பு செய்ய வருகிறார்கள் என்று அர்த்தம்.

அம்மா அடுப்படிச் சமயலை அப்படியே விட்டு விட்டு வெளியே ஓடிவந்தாள்.

குளித்துக் கொண்டிருந்த அப்பா தனது உடம்பிற் போட்ட சோப்பகை; கழுவாமற் தெருவைப் பார்த்தடி நின்றார்.

‘செல்வமே சிவபெருமானே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்’ என்று உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்த தாத்தா தவித்த முகத்துடன் விறாந்தையிற் தரிசனம் தந்தார்.

தூரத்தில் இராணுவ வண்டிகளின் உறுமல்கள் கேட்டன. யமதூதர்கள் பாசக்கயிறுகளுடன் வருவதுபோல் பாசமற்ற கண்களுடன் பயங்கரத் துப்பாக்கிகளுடன் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்,இராணுவ வண்டிகளிலும் கால் நடையாகவும் ஊரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

மிளகாயைச் சம்பலுடன் சேர்த்தரைத்த எரிவுடன் என் ஆத்மாவும் சிலிர்த்துக்கொண்டது. எங்கள் வீட்டார் ஒவ்வொருத்தரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம். எல்லோர் விழிகளிலும் அளவு கடந்த பயம் பிரதிபலித்தது.

முன் அறையில் படித்துக் கொண்டிருந்த அண்ணைவைப்பார்த்து,’ எனது செல்வமெ எங்கோயாவது ஓடிப்போகப்பார் அப்பா’ என்று அம்மா கெஞ்சினாள்.

பக்கத்து வளவுகளுக்குள்ளால் பல வாலிபர்கள் பாய்ந்தோடிக்கொண்டிருந்தார்கள்.மனித வேட்டை தொடங்கி விட்டது. இராணுவம் என்ற யமதூதர்கள் மிருகங்களைத் துரத்தும் வேடடைக்காரர்போல் காடுகலைக்கிறார்கள்.

போன தடவை ‘சுற்றி வளைப்பு நடந்தபோது,சிங்கள இராணுவத்தினர்,வேலிகளை எல்லாம் வெட்டிப் பெரிய மரங்களையும் சாய்த்து விட்டார்கள். அவர்கள் தமிழ்ப் போராளிகள் வேலிக்குப் பின்னாலும் மரங்களுக்குப் பின்னாலுமிம் மறைந்திருந்து தங்களைத் தாக்குவதைத் தடுக்க அப்படிச் செய்தார்களாம்.

அது மட்டு மல்ல , தமிழர்களில் வீடுகளுக்குள் சர்வசாதாரணமாக அவர்கள் நடந்து திரிவதற்கு இந்த வேலிகள் தடை செய்வதை அவர்கள் விரும்பவில்லை.

சாதியால்,சம்பிரதாயத்தால்,தனிப்பட்ட பெருமை சிறுமைகளால், தங்களைத் தாங்களே பிரித்துக்கொண்டிருந்த ,தலைக்கனம் பிடித்த தமிழ்ச்சமுதாயத்தை எதிரியின் துப்பாக்கிச் சூடுகள் நிலைகுலையப் பண்ணி விட்டது.

தமிழ் இளைஞர்கள் ஓட,முதியோர் பதுங்க.தாயக்குலம் தவிக்க,ஆச்சிகள் அலற,இளம் பெண்கள் மறைய,நாய்களும் கோழிகளும் இந்த அமர்க்களத்தில் கூக்குரலிட்டன்.

பக்கத்து வீட்டுப் பார்வதி மாமியின் சுப்பிரபாதம் சுருதி தவறி அலறியது.

இராணுவம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஒழுங்கைகளில் புழுதி பறந்தது. ஓடிப்போனவர்களிற் குண்டுகள் பதித்தன.அவர்கள் சட்டென்று வெட்டுப் பட்ட மரங்களாயப் பூமியிற் சாய்ந்தனர்.அவர்களைப் பெற்ற, பெறாத ஒட்டு மொத்த தமிழ்த் தாய்க்குலத்தின் அலறலில் பூமித்தாய்அதிர்ந்தாள்.

ஊரில் நாலாபக்கமும் இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்தது.அம்மாவின் முகத்தில் வியர்வை,கண்களில் நீராறு. அப்பாவின் முகம் பேதலித்துக் கிடந்தது.தங்கைகளின் கண்களில் காலனும் அவனின் பாசக்கயிறும் பிரதி பலித்தன.

அண்ணா ஒரு இடமும் ஓடமுடியாது!;

வீட்டைச் சுற்றி எதிரிகள் முற்றுகை போட்டு விட்டார்கள். தம்பிகள் இருவரும் கிணற்றின் பின் பக்கம் செவ்வரத்தைப் பூமாத்தினடியில் பதுங்கிக் கொண்டார்கள்.தங்கைகள், தனது செடடைக்குள் தனது குஞ்சுகளை மறைத்துக் கொண்ட கோழியின் கூண்டுக்குள் ஒளிந்து கொண்டார்கள்.

ஆச்சி என்னைப் பார்த்து,தலையிலும் வாயிலும் அடித்துக் கொண்டாள்.

நான் இன்னும் ‘பெரிய பிள்ளையாகவில்லை’-கிராமத்து மொழியிற் சொல்வதானால் நான் இன்னும் ‘பக்குவப்படவில்லை’! பெரிய பிள்ளையாகா விட்டாலும் அதை இங்கு வரும் இராணுவ மிருகங்கள் பொருட்படுத்தப்போவதில்லை. பாய்ந்;து வரும் இராணுவப் பருந்துகளின் விருந்துண்ணலுக்கு என்னுடையதும் என்னுடைய அண்ணாவின் உடம்பும் உயிரும் இரையாகும் என்ற தவிப்பு அவள் அழுகையிற் தெரிந்தது.

நான் கண்களை இறுக மூடிக்கொண்டென்.இப்போது நடபப்வைகள் ஒரு பயங்கரக்கனவாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தேன்.

கற்பனைகள் நடக்குமா?

கனவுகள் நனவுகளாகுமா?

ஆச்சி என்னைத் தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் நெல் மூட்டைகளுக்குப் பின்னாற் தள்ளினாள். வருபர்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற முடியாத என்னைக் கடவுள் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு.

இராணுவம் எங்கள் ஒழுங்கையில் அதிர்ந்தது.

எங்கள் வீட்டு வாசல்கள் இராணுவத்தினரின் பெரிய காலணிகளின் மேடையாக மாறியது. அரசியல் என்ற பெயரில் அதிகார உடையணிந்த மனிதர்களின் ஊழித்தாண்டவம் அரங்கேற்றப் பட்டது.இராணுவத்தின் பிடியிலகப்பட்ட தமிழ் இளைஞர்கள் ரோட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இராணுவ வண்டிகளில் ஆடுகள் மாடுகள் மாதிரி ஏற்றப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.

சூடுபட்ட தமிழ் இளைஞர்கள் குற்றுயிராக இழுத்து வரப்பட்டார்கள்.அவர்களின் குருதி எங்கள் ஒழுங்கைகளிற் கோலம் போட்டன.

குமரி முதல் இமயம் வரை கொடியேற்றிய தமிழன் என்று பெருமை பாடும் பரம்பரையா இது?

நான் நெல் மூட்டைகளின் மறைவிலிருந்துகொண்டு ஜன்னல் வழியாக உலகத்தை அளந்தேன்.

ஏன் இந்த பூமி பிழந்து இந்தக் கொடுமைகளை விழுங்கக் கூடாது? இந்தக் கொடுமைகளை அனுபவிக்க இலங்கைத் தமிழன் என்ன பாவம் செய்தான்?

தான் பொழிந்த தமிழிழை,தான் தவழ்ந்த நிலத்தைத் தன்னிடம் வைத்திருக்கப் போகிறேன் என்று தமிழன் கேட்ட கோரிக்கை;கா இந்தத் தண்டனை?

அம்மா தன் முந்தானையைப் பிடித்து இராணுவ அதிகாரியிடம் தன் மகனுக்கு மடிப்பிச்சை கேட்டாள்.

இராணுவம் என் தமயனைப் பிடித்து ஒரு மிருகத்தைத் தாக்குவதுபோல் அடித்துக் கொண்டிருந்தது.

அண்ணாவைத் தாங்கிய தனது கருப்பையே வெளிவரும்போல் அடிவயிறு குலுங்க என் தாய் கதறினாள்.

அண்ணாவைக் காப்பாற்ற வந்த எனது தகப்பனின் தலையில் இராணுவத்தின் தாக்குதலால் இரத்தம் பீறிட்டது.

தங்கைகள் அலறினார்கள்.

ஆச்சி, எனது தமையனை வதைக்கும் இராணுவத்தினருக்கு இடையில் ஓடி வர ஒரு இராணுவ உத்தியோகத்தன் அவளை ஒரு பூச்சியென உதைத்தார்ன்;.

எனது தமயனின் மரண ஓலம் எனது இருதயத்தைப் பிழந்தது.

என்னுடைய உடன் பிறப்பின் உடல் ஒழுங்கையால் வந்தவனின் சொந்தமாகிவிட்டது.

அண்ணாவை அடித்தார்கள்,உதைத்தார்கள்.அவனது நெஞ்சைத் ‘தமிழ்ப் பயங்கரவாதி’ என்று சொல்லிக்கொண்டு அவர்களின் துப்பாக்கி முனையாற் குத்திப் பிழந்தார்கள்.

என்னைத் தன் மடியில் வைத்து ஆனர் ஆவன்னா சொல்லித்தந்த அவன் குரலின் கதறல்கள் என்னைச் செவிடாக்கின.

‘அம்மா,அம்மா’ என்ற தமிழைத் தவிர அவன் வாயால் வேறு எந்தக் கதறலும் வரவில்லை. ஓரு சில நிமிடங்களில் அவன் குரல் கதறலாகக் கேட்காமல் வேதனை படிந்த முனகலாகக் கேட்டது.

தாத்தா,ஒரு கொஞ்ச நேரத்துக்கு முன் தன் பிரார்த்தனையிற் சிக்கெனப் படித்த சிவன் இப்போது என்ன சீமைக்கா போய்விட்டான்?

இராணுவ எமதூதர்கள்,எனது அண்ணாவைக் குற்றுயிராகத் தெருவில் இழுத்துக்கொண்டு போனதைப் பார்த்த எனது தாய் அந்த அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விட்டாள்.

அப்பாவின் முகம் குருதிவடிந்து கோரமாகத் தெரிந்தது. அவர் அண்ணா இழுபட்ட குருதியில் புரண்டு கதறினார்.

எங்கள் வீட்டுக்குள் தாராளமாக நடமாடிய ஒரு இராணுவத்தினன் என்னை நெல் மூட்டை மறைவிலிருந்து இழுத்து வந்தான்.

ஆச்சி அவனிடமிருந்து என்னை இறுகப்பிடித்தாள். அவள் கண்களில் அக்கினி.அவள் முன்னால் இருக்கும் உலகம் அழிந்து போகாதா? தளர்ந்துபோன அவளின் முதிர்ச்சியிலும் இந்த இரும்புப் பிடியா?

எனது தாத்தா,ஓரு கொஞ்ச நேரத்துக்கு முன் புனிதமான சிவபெருமானைச் சிக்கெனப் பிடித்தவர் இப்போது சிங்கள இராணுவ வெறியனின் புழதி படிந்த கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு,’என்ர பேத்தியைத் தயவு செய்து விடய்யா’ என்று கெஞ்சினார்.

தமிழ்ப் பெண்மை இனவெறியில் பேரம் பேசப்பட்டது.

இராணுவக்காரன்; என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

எனது பதினான்கு வயது மொட்டழகு அவனின் பெட்டைக் கண்களில் புகுந்து விளையாடியதோ? அவன் பார்வையால் எனது உடம்பைத்தாண்டி எங்கேயோ போகிறான்.

நான் அழவில்லை. எனது உணர்ச்சிகள் மரத்து விட்டன.

இப்படிச் ‘சுற்றி வளைப்புகளில், இதுவரை எத்தனையோ தமிழ்ப் பெண்கள் இவர்களின் காமவெறிக்குப் பலியாகி இருக்கிறார்கள்.

எங்கள் தமிழ்ப் பெண்களின் வயது பத்தோ எட்டோ என்பது அவர்களுக்குப் பிரச்சினையில்லை. இவர்களின் இரைக்குப் பலியானாற்சரி.

இவர்கள் மிருகங்கள்.இவர்களின் பசி நரமாமிசம்.தமிழர்கள் பலியாடுகள்!

ஓருத்தன் எனது நீண்ட தலைமயிரைத் தடவினான்.ஆச்சி அவன் முகத்தில் காறித் துப்பினாள்.

தாத்தா தன்தலையை என்னைப் பிடித்திருந்தவனின் காலணியில்; முட்டிக் கதறினார்.

குருதியால் நனைந்த தகப்பன்,குற்றுயிராய் இழுபடும் தமயன்,உணர்வற்ற தாய், ஓலமிடும் ஆச்சி,உருக்கமாயக் கெஞ்சும் தாத்தா!

தமிழ்ப் பெண்மை எங்கே பாதுகாப்புத் தேடும்?.

எனது தாத்தா சிக்கெனப் பிடித்த சிவன் என் பெண்மையைக் காப்பாற்ற ஊழித்தாண்டவம் ஆடமாட்டாரா?

காப்பியங்களில்,திரவுபதிக்குக் கண்ணன்,சீதைக்கு அனுமான் உதவி செய்ய வந்தார்கள்.

இன்று இந்த நிலையில் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு யார் வந்து உதவி செய்வார்?

நான் உதடுகளைக்கடித்து,கண்களை மூடி உலகத்துக் கடவுள்களை உதவிக்கு வரச் சொல்லிப் பிரார்த்தனை செய்தேன்.

இராணுவ வெறியனின் பிடி இறுகியது.

நான் கண்களைத் திறந்தேன். தூரத்தில் இன்னொருத்தன் மேலதிகாரியாகவிருக்கலாம்.அவன் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான் அவனை நேரே பார்த்தேன் ஏதோ ஒரு பலமா அல்லது எனது கண்களில் ஒரு கடைசிக் கெஞ்சலா?

அவன் என்னை மேலும் கீழும் பார்த்து எதையோ அளவிட்டான். அவனுக்கு என்னைப்போல் ஒரு தங்கையிருக்கலாம் அல்லது ஒரு மருமகளிருக்கலாம்.

‘அதர்மம் செய்யும் ஆண்களை அழிக்கும் அன்னை காளியே,நீ ஏன் இலங்கையை விட்டு ஓடிவிட்டாய். ஓடிவா, ஓடிவந்து எங்களைப்பார்’ நான் பைத்தியம் மாதிரி நினைத்துக் கொண்டேன்

இவர்களை அழிக்க அவதார புருஷ கண்ணனே இன்னொரு அவதாரம் எடுக்க மாட்டாயா?

கலிகாலத்தின் அழிவு இலங்கைத் தமிழனின் தலையிலா சுமக்கப் பட்டிருக்கிறது?

தூரத்தில் நின்றவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.

அவனின் சைகையில் என்னைப் பிடித்திருந்தவனின் பிடி தளர்ந்தது.

நாட்டின் பாதுகாப்புப் படைகள் ‘ரவுண்ட் அப்’ என்ற பெயரில், எங்கள் ஊரைத் துவம்சம் செய்தவர்கள் நகரத் தொடங்கி விட்டார்கள்.

அன்று ,எங்கள் ஊரிலும் அடுத்த ஊர்களிலும் இருநுர்றுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டார்கள்.எண்ணிக்கையற்ற தமிழர்கள் அவர்களின் வீடுகளில் வைத்து தாக்கப் பட்டார்கள்.

வானத்தில் பருந்துகளும், கழுகுகளும் சுதந்திரமாகப் பறக்கும்போது,தரையிற் தமிழன் குருவியென சுட்டு வீழ்த்தப் பட்டான்.

பச்சிளம் சேலை கட்டிய இளம்பெண் போன்ற பாய்ச்சல் நிலங்கள் தமிழனின் குருதி பட்ட பொட்டுகளை அடையாளம் காட்டின.

தமிழ்த்தாய்களின் கதறல்கள் தென்றலை வெட்கப் படுத்தின.

எங்கள் ஊருக்கும்,தூரத்திலுள்ள வங்காள விரிகுடாக் கடலுக்குமிடையில் தில்லையாறு தவழ்கிறது. தில்லையாற்றின் மணல் மேட்டைத்தாண்டினால்,வங்காள விரிகுடாவின் வயிற்றில்,உலகின் நாலா பக்கங்களிலுமிருநது பல கப்பலகள் எப்போதும் போய்க் கொண்டிருக்கும்.

ஆற்றையும் கடலையும் பிரிக்கக் கடவுளால் கட்டப்பட்ட அந்த மணல மேட்டில் நாங்கள் பலதடவைகளில் நண்டு படித்து விளையாடியிருக்கிறோம்.

ஓடிவரும் கடலைத் தொட்டோடி எங்கள் சிறுபாதங்கள்pன் அடையாளங்களைப் பதிப்போம்.

அந்த மணல்மேடு இன்ற தமிழனின் பிணமேடையானது.

அந்த மேட்டில்,அன்று பல ஊர்களிலும் இராணுவத்தால் குற்றுயிரும் குறையுருமாக்கப் பட்ட தமிழர்களின் உடல்கள்,என் தமயன் உட்பட எண்ணிக்கையற்ற வித்தில் குவிக்கப்பட்டன.

‘தமிழர்கள் கணக்கப்போடுவதில் கெட்டிக்காரர்களாம’ ஒரு இராணுவத்தினன் ஏளனமாகச் சொன்னானாம்;.

மரணப்பிடியிலிருந்த ஒரு சிலரை இழுத்து வந்து, ‘டேய் பறத்தமிழர்,ஆறடி நீளத்திலும் மூன்றடி அகலத்திலம் குழிகள் தோண்டுங்கள்’என்றானாம்.

எங்கள் இளைஞர்கள்,தங்கள் மரணக்குழிகளைத் தாங்களே தோண்டினார்கள்.

அன்று,எங்கள் தமிழ் இளைஞர்கள் நாற்பது போர் உயிருடன் புதைக்கப் பட்டார்கள்.

மேற்கு வானம்; செங்குருதி நிறத்தைப் பரப்பிய அந்த மாலை நேரத்தில் பல உயிர்கள்,கார் டயர்களால் குவிக்கப்;பட்டு எரிக்கப் பட்டன. அந்தக் கரும்புகை மேலேழுந்து வானை மறைத்தது.உலகத்தின் மனிதன் செய்யும் கேவலத்தைச்சூரியன் பார்க்காமல் அடிவானில் ஓடியொளித்தான்.

அன்று மட்டும் எங்கள் தமிழ்ப் பகுதிகளில் நூற்றி இருபத்தைந்து,தமிழ்ப்; பெண்கள் விதவையானார்கள்.

ஆற கடந்த மணல் மேட்டில்,தங்கள் குழந்தைகளின் உயிர் எரிந்து கரும்புகையாகப் படர்வதைத்; தாங்காத தமிழத் தாய்க்குலம் கதறியழுது சாபம் போட்டது.

அன்று கைது செய்யப் பட்ட எனது தகப்பனும்,வயதுபோன தாத்தாவும் இராணுவத்தால் சித்திரைவதை செய்யப்பட்டுப் பல நாட்களின்பின் விடுதலையாகி வந்தார்கள்.

அன்றைய ‘ரவுண்ட் அப்’க்குப் பின் பல கொடுமைகள் எங்கள் பகுதிகளில் நடந்து விட்டன.பத்து வருடங்களில் பல நூறு தமிழ்ப் பெண்கள் விதவைகளாக்கப் பட்டார்கள்.

பாலியற் கொடுமைகளுக்காளாகிப் பலியெடுக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் பலர்.

‘ரவுண்ட் அப்’புக்கள் இப்போது பலவிதம்.

இப்போது,தமிழர்களின் பகுதிகளில் சுற்றி வளைப்புக்குச் சிங்கள் இராணுவம் மட்டும் வருவதில்லை.

‘ஸ்பெசல் ராஸ்க் போர்ஸ்’ என்ற பெயரில் இராணு அதிரடிப்படை வந்து சொல்ல முடியாத கொடுமைகளைத் தமிழருக்குச் செயயும்.

அத்துடன்,தமிழ் விடுதலைப் போராளிகள் ஒருத்தருடன் ஒருத்தர்; மோதிக் கொண்டு’தங்கள் எதிரிகளைத்’ தேடி வந்து எங்களைப்படாத பாடு படுத்துவார்கள்.

இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற இந்திய அமைதிப் படை வந்தது. அவர்கள்,சிங்கள இராணுவம் வருடக் கணக்காகச் செய்யாத கொடுமைகளை ஒரு சில மாதங்களில் தமிழ்ப் பகுதிகளிற் நடத்தி முடித்தார்கள் அவர்களாற் கசக்கப் பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண்கள் ஆயிரக் கணக்கானவர்கள்.

இடியை வென்ற பூகம்பப் படையது.

1996- இப்போதெல்லாம் எங்கள் ஊரில் நேற்றைய சொந்தங்கள்,இன்றைய சொந்தங்களாக இல்லை.தங்கள் பகைகளைத் தங்களுக்கத் தெரிந்த தமிழ்க்குழுக்களிடம் சொல்லி பழி தீர்த்துக் கொள்கிறார்கள்.இரக்கமற்ற கொலைகளை இந்தக் குழுக்கள் செய்யும்போது,இவர்கள் எனது தமிழினத்தைச் சேர்ந்தவர்களா என்ற ஐயம் எனக்கு வருகிறது.

தனிப்பட்ட கோபதாபங்கள்; ஏ.கே 47 என்ற ஆயுதத்தால் தீpர்த்து வைக்கப் படுகிறது.

எங்களைப்போன்ற இளம் தலைமுறையினர், தமிழர்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமற் தவிக்கிறோம்.

எனது தமயன் இறந்தபின் எனது தாய் ஒரு நேரச் சாப்பாட்டைக்கூடச் சரியாகச் சாப்பிடாமல் ஏங்கித் தவித்து அண்மையில் இறந்து விட்டாள்.

என் பாட்டி என்னைக் கட்டிக்கொண்டழுவாள்.’உன்னைக் கரையேற்ற,உனக்கு நல்லது செய்து வைக்க, ஒரு அண்ணன் இல்லையே’ என்று தவிப்பதைக் கேட்க எனக்கு வேதனையாகவிருக்கிறது.

எங்கள் ஊரில் சகோதரங்களையிழந்த, கணவர்களையிழந்த, மகன்களையிழந்த பெண்கள் ஏராளம்,ஏராளம்.

தமிழரின் பிரச்சினையைக்காட்டித் தப்பச் சென்று வெளிநாட்டில் வாழும் பாக்கியம் எங்கள் பகுதித் தமிழருக்கு வருவது அருமையான விடயம்.

‘ஓரு பக்கம் கடல்,மறுபக்கம் தமிழன்,எப்படி நான் நிமிர்ந்து படுக்க முடியும்’? என்று கேட்டானாம் சிங்கள் வெறிபிடித்த மன்னான துட்டகைமுனு.

எங்களுக்கு ஒரு பக்கம் கடல்,பல பக்கம் எதிரிகள். தப்பியோட முடியாத சமுதாயம் எங்களுடையது. இவர்கள் எங்கே செல்வார் உயிர்பிழைக்க?

‘எதிரியால் இறப்பதை விட,எனது மொழிக்கும்,இனத்துக்கும்,எனது மண்ணுக்கும் போராடி என்ற சத்தியத்துடன் பல இளம் ஆண்களும்,பெண்களும்,தமிழர்களின் விடுதலைக் குழுக்களிற் சேர்ந்து,இராணுவத்தால் மட்டுமல்லாது,தமிழ்க்குழுக்களுக்கும் நடக்கும் உட் பிரச்சினைகளால் விட்டிற்பூச்சிகளாக இறந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் அழிந்ததுபோதும்.இனி அழிவதற்கு எங்கள் ஆட்களே கிடைக்க மாட்டார்கள். எங்களுக்கு அமைதி தேவை.

நான் அடிக்கடி எனது தமயனை எதிரிகள் எரித்த மணல்மேட்டை வெறித்துப் பார்ப்பேன்.எங்கள் போன்றோர் இறந்து விட்ட காலத்தில் நடந்த துயர்களிற் படித்த பாடங்களால் அமைதி தேவையென்று பிரார்த்திக்கிறோம்.

‘மனிதம் என்ற பதத்தின் தார்மீகத்தை மறக்காத உலகை நான் வேண்டிப் பெருமூச்சு விடுகிறேன்.

யாருக்குப் பரியும் எங்கள் போன்றோரின் வேதனைகள்?

(உண்மையான சம்பவங்களின் கோவை இந்தக் கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *