கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 6,934 
 
 

மதுரை சந்திப்பிலிருந்து அந்த பகல் பொழுது பாசஞ்சர் வண்டி மதியம் இரண்டு மணிக்குப் புறப்படும். இப்போது மணி 12.50 தான். இன்னும் முழுசாக 70 நிமிடங்கள் இருந்தது. 5 வது பிளாட் பாரத்தில் தூங்கி வழிந்த படி நின்று கொண்டிருந்தது. அறிவிப்பாளரின் இயந்திரத்தனமான “பயணிகளின் பணிவான கவனத்திற்கு………… மூன்றாவது நடைமேடையிலிருந்து இன்னும் சிறிது நேரத்தில் புறப்படும்” என்று அறிவித்து கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் கடந்து விட்டது. அந்த வண்டி இன்னும் புறப்பட்ட பாடில்லை. என்னுடைய வண்டிக்கும் இதே கதி தான் என்று நினைக்கும் போதே எரிச்சலாக வந்தது. நான் அமர்ந்திருந்த எஸ் 4 பெட்டியில் அதிகம் கூட்டம் இல்லை. மொத்தம் எண்ணினால் 15, 20 நபர்கள் தேறுவது கடினம். நான் பொதுவாகவே பகல் நேர ரயில் பயணங்களில் தனியான ஒற்றை இருக்கையையே விரும்புவேன். அதில் நிறைய சௌகரியங்கள். சன்னல் வழியே வேடிக்கை பார்க்கலாம். விருப்பப்பட்டால் சக பயணிகளுடன் பேசலாம். இல்லாவிட்டால் அவர்கள் நடவடிக்கைகளை, உரையாடல்களை கவனிக்காத மாதிரி காட்டியபடி கவனித்தால் நிறைய சுவாரசியமான விஷயங்களை உள் வாங்க முடியும்.

அப்புறம் அதை அசை போடும் போது அடுத்த கதைக்கு கருப்பொருளை எப்படியும் தேற்றிவிடலாம். பொது வெளியில் முகம் காட்டாத, தெரியாத எழுத்தாளனுக்கு கிடைக்கும் இந்த வசதி பிரபலங்களுக்கு வாய்ப்பதில்லை. ஜீன்ஸ், வெள்ளை ஜிப்பா, ஜோல்னா பை, முரட்டு தாடி, மீசை, சதா சிந்திக்கும் முகபாவம் என்று எழுத்தாளனுக்கு ஒரு அடையாளத்தை பத்திரிக்கைகள் தந்து தவறாக அடையாளப்படுத்தி எழுத்தாளர்களுக்கு நிம்மதியை தந்து பல நேரங்களில் நமது பயணங்களை இனிதாக்கி விடுகின்றன. பல எழுத்தாளர்கள் சூடம் ஏற்றி சத்தியம் பண்ணினாலும் இந்த அடையாளங்கள் இல்லாதவரை பொது ஜனம் எழுத்தாளராகவே ஏற்றுக் கொள்வதில்லை. “ இப்படி வழியை அடைச்சிக்கிட்டு நின்னா எப்படி ஏற முடியும், ஒன்னு எறுங்க இல்லை தள்ளி நில்லுங்க”, என்று அதிகாரமாக ஒரு குரல் ஒலித்தது. பெட்டியின் வாசலில் ஒரு எழுபத்தைந்து வயதுத் தோற்றமுள்ள முதியவரை கைத்தாங்கலாக அணைத்தபடி ஏற்றி விட்டுத் தானும் ஏறிக்கொண்டிருந்தார் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது மனிதர். சப்தம் போட்ட மனிதர், ஆளை விழுங்கும் பெரிய பெட்டிகள் இரண்டை பிளாட்பாரத்தில் வைத்துக் கொண்டு நின்றிருந்தார். அவருக்கும் சுமாராக அறுபது , அறுபத்தைந்து வயதிருக்கும். அவரது உடை, போட்டிருந்த நறுமண திரவியம் பேச்சு எல்லாம் பெரிய அரசாங்கப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. விலையுயர்ந்த பேண்ட், டீ சர்ட், காலில் நைக் ஷூ, கையில் ஆப்பிள் ஐ – பாட் என்று மார்டன் சர்வாலங்கார பூஷிதராக இருந்தார். சப்தம் கேட்டதும், அந்த எழுபத்தைந்து வயது முதியவரை என் பகுதியில் காலியாக இருந்த மூன்று பேர் இருக்கையில் அமர வைத்து விட்டு அந்த ஐம்பது வயது மனிதரும் அமர்ந்தார்.

வண்டிக்கு வெளியே, அதிகாரத் தொனி மனிதர் இன்னும் வண்டியில் ஏறாமல் அந்த மெகா சைஸ் பெட்டிகளை சுமந்து வந்த போர்ட்டருடன் வாதம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் பிரச்சனை பலத்த வாக்கு வாதத்திற்குப் பின்னர் ஒரு வழியாக போர்ட்டர் நாலு மரியாதையான வசவு வார்த்தைகளை உதிர்த்த பின்னர், போலீசுக்கு புகார் கொடுப்பேன் என்ற இவரது மிரட்டலுடன் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. பெட்டியைக் கூட கம்பார்ட்மெண்டில் ஏற்றாமல் போர்ட்டர் கிளம்பி விட்டதால், முகம் சிவக்க பெட்டிகளை வண்டியில் ஏற்ற படு சிரமப்பட்டார். வழியை விட்டு தள்ளி நிற்க சொல்லப்பட்ட ஐம்பது வயது மனிதர் புன்சிரிப்புடன் அவர் பெட்டிகளை மேலிருந்து வாங்கி வண்டிக்குள் ஏற்றினார்.

வண்டியில் ஏறிய மனிதர், பெட்டியை ஏற்ற சிரமப்பட்ட போது உதவி செய்தவருக்கு ஒரு மரியாதைக்குக் கூட நன்றி சொல்லவில்லை. அந்த மெகா பெட்டியோ இருக்கைக்குக் கீழே செல்ல மறுத்து அடம் செய்தது. இரண்டு பெட்டிகளையும் நிற்க வைத்து விட்டதால் மனிதர்கள் காலை கீழே வைக்க வழியே இல்லாமல் போனது. அந்த முதியவரையும், கூட வவந்திருந்த அந்த ஐம்பது வயது மனிதரையும் பார்த்து, “கேன் யூ சிட் இன் தி நெக்ஸ்ட் பே”? என்றார். இப்போது என் உள் மனம் சொல்லியது இவர்களுக்கு பெயர் தந்து விடலாம் என்று. சரி முதியவர், கூட வந்தவர், அதிகாரப் பெரியவர் என்று பெயர் தந்து விட்டேன். கூட வந்தவர், முதியவரை என் இருக்கைக்கு எதிரில் இருந்த மற்றொரு ஒற்றை இருக்கையில் உட்கார வைத்தார். தான் என் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த மூவர் இருக்கையில் வழிபாதையை ஒட்டி அமர்ந்தார். அதிகாரப் பெரியவர் என்னை, முதியவரை மற்றும் கூட வந்தவரை நோட்டம் விட்டார்.

அவரது பார்வை எங்களை அளப்பது போல இருப்பதை என்னால் அனுமானிக்க முடிந்தது. ஆக எங்கள் மூவரில் அவரது தகுதிக்கு உரையாட யாருமே இல்லை, அதிலும் குறிப்பாக முதியவரும், கூட வந்தவரும் சத்தியமாக இல்லை. என்னை வேறு வழியே இல்லாவிட்டால் டைம் பாஸுக்கு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அவர் அளவீடு அவரின் கண்களிலேயே தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவர் பெட்டியை சிரமப்பட்டுத் திறந்து தன் டேப்லெட்டை எடுத்துக் கொண்டு விரல் தேய்க்க ஆயத்தமானார். மணி இன்னும் இரண்டாகவில்லை. செல்போனில் மின்னேற்ற பிளக் பாயிண்ட் தேடினார். என்ன காரணமோ மின்னேறவில்லை. என்னைப் பார்த்து சிரித்தும் சிரிக்காமலும் ஒரு மோனோலிசா பாவத்தில், “ பிளடி ரயில்வே. திஸ் மஸ்ட் பி பிரைவேட்டைஸ்ட்” என்றவர், மறக்காமல் முதியவரிடமும், கூட வந்தவரிடமும் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டார். பதிலுக்கு முதியவர் உங்களுக்குத் தமிழ் தெரிந்திருப்பதால் அதில் என்னால் இயல்பாக உரையாட முடியும் என்றார். ஆனால் அதிகாரப் பெரியவர் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு, “ இப்போதெல்லாம் முன்னைப் போல பெரிய மனிதர்கள் ரயிலில் பயணிப்பதில்லை. கண்டவர்களுடன் எல்லாம் பயணிக்க வேண்டியுள்ளது, அதிலும் குறிப்பாக கிராமத்தான்கள் தொல்லை தாங்க முடியவில்லை. என்று ஆங்கிலத்தில் குறைபட்டுக் கொண்டார்.

நான் அதை ஆமோதிக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு கண்களில் பளிச்சிட்டது. இரயில் சரியாகக் கிளம்பி விட்டது. நான் எதுவும் பேசவில்லை. அவராகவே ஆரம்பித்தார். கையில் ராபின் குக் புத்தகத்தை எடுத்து விரித்தவர், எவன் சார் தமிழில் இப்படியெல்லாம் எழுதறான் என்றார். நான் ஆமோதிக்கக் காத்திருந்தார். எனக்கோ பயங்கரக் கடுப்பு. இருந்தாலும் மறைத்துக் கொண்டு சார் நீங்க தமிழ் எழுத்தாளர்களில் யாரைப் படித்திருக்கிறீங்க? என்றதும், நான் அந்த கருமத்தை எல்லாம் விரலால் கூடத் தொடுவது கிடையாது. எல்லாம் காப்பி. ஒரிஜினாலிட்டி இல்லாதவை என்று தீர்ப்புக் கொடுத்தார்.

“சரி சார் எங்கே போகிறீர்கள்” என்று இலக்கியம் பேசுவதை நாகரீகமாக மடை மாற்றினேன். என்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது என்றுபட்டது.

முதியவர் மற்றும் கூட வந்தவரை பார்த்துவிட்டு தன் பிரதாபத்தைத் தமிழில் அளக்க ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் பிரதாபத்தை சொல்வதால் முதியவரையும், கூடவந்தவரையும் பிரமிக்க வைக்க முடியாதல்லவா. தமிழ் நாடு அரசில் மின் வாரியத்தில் கணக்கு அலுவலர் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி காலமாகி விட்டார். சொந்த ஊர் திருச்சிப் பக்கம் வாலாடி. ஒரே மகன் திருமணம் ஆகி விட்டது. தற்போது அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசியர் பணியில். சம்பந்தி கர்நாடக அரசில் செயலாளர் அந்தஸ்தில் ஐஏஎஸ் அலுவலர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அமெரிக்காவில் பிள்ளையுடன் இருந்துவிட்டு காலையில் மதுரைக்கு விமானத்தில் வந்தவர், அங்கிருந்து வாலாடிக்கு ரயிலில் வருகிறார். மகன், மருமகள் மற்றும் பேரன் எல்லாம் சம்பந்தி வீட்டிற்கு பெங்களூரூ வேறு விமானத்தில் வந்து விட்டனர். அங்கிருந்து மறுபடி வேறு விமானத்தில் திருச்சிக்கு வந்து, இவர் திருச்சிக்கு வந்ததும் ரயில் நிலையத்தில் வந்து சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. ஒரு வாரம் இருந்து வாலாடியில் உள்ள பூர்வீக வீடு நில புலன்களை விற்று விட்டு அவருக்கு சென்னையில் உள்ள ‘’பானாபானி” ஓய்வு பெற்றோர் இல்லத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர் பிள்ளை அங்கே உதவிப் பேராசிரியர் ஆகத்தான் ஐந்து வருடங்களுக்கு முன் சேர்ந்தானாம். அவனுடைய துறைத்தலைவரும் இந்தியர்தானாம். ஏதோ தன் சொந்த காரணங்களுக்காக அமெரிக்க பல்கலைக்கழக வேலையை ராஜிநாமாச் செய்து விட்டு பாரதியார் பல்கலைக்கழத்தில் சேர வந்து விட்டாராம். அதனால் போகும் போது இவரது பிள்ளையை தன் இடத்திற்கு பரிந்துரை செய்து விட்டுச் சென்று விட்டாராம். பல்கலைக்கழகத்திலும் செனட்டில் அதை ஏற்றுக் கொண்டு அதிகார மனிதரின் பிள்ளையை துறைத்தலைவர் ஆக நியமித்து விட்டார்களாம். ஆகவே தன் பிள்ளையால் அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாது. மேலும் திருச்சி வரை எடுத்துப்பிடித்து வருவதும் கடினம். சென்னை என்றால் சௌகரியம் என்பதால் ‘பானாபானி’யில் இருக்க ஏற்பாடு ஆகியது எல்லாம் சொன்னார். ரயில் திண்டுக்கல் தாண்டியிருந்தது. தமிழில் இதையெல்லாம் சொல்லும் போதே முதியவரையும், கூடவந்தவரையும் ஓரக்கண்ணால் பார்க்கத்தவறவில்லை. அப்படியே என்னிடம் “ நீங்க என்ன வேலை செய்கிறீர்கள்” என்று ஆரம்பித்தார். பள்ளிக்கூட வாத்தியார் என்றதும், குஷியாகி, “அப்படியா, படிக்கும் போது சரியாகப் படிக்கலயா? கோவிச்சிக்காதீங்க போக்கத்தவன் போலீஸ், வாக்கத்தவன் வாத்தி என்பார்கள்” என்று சொல்லிவிட்டு ஹஹஹா என்று பெரிய ஹாஸியம் சொன்னது போலச் சொல்லிச் சிரித்தார்.

அப்படியே சட்டென ஆங்கிலத்திற்கு மாறி, தாழ்ந்த குரலில் நீங்க பரவாயில்லை. சக பயணிகள் மாதிரி கைநாட்டுகள் இல்லை என்று சொன்னார். முதியவரிடமோ அல்லது கூட வந்தவரிடமும் எந்த எதிர் வினையும் இல்லை. எனக்கு அவர் சொல்வது பற்றி எல்லாம் கவலையே இல்லை. அவரது அங்கீகாரமும் என் அப்போதைய தேவை இல்லை. மேலும் அதிகபட்சம் இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரப் பயணத்தில் யாரிடமும் மல்லுக்கட்ட அவசியமும் இல்லை. என் கவனம் எல்லாம் அவர் பேச்சில், செயல்பாடுகளில் கதை தேடுவதிலேயே இருந்ததை அவர் அறியவில்லை.

வண்டி திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்த போது கை பேசியில் அவருக்கு அழைப்பு வந்தது. அவர் பேசியதிலிருந்து திருச்சி சந்திப்பில் காத்திருக்கும் மகன் பேசுவதை அறிந்து கொள்ள முடிந்தது. அவர் கோச் எண்ணை என்னிடம் கேட்டார். நான் அதைச் சொன்னதும் எஸ் 4 , எஸ்4 என்று போனில் தகவல் சொன்னார்.

அந்தக் கால சினிமா கதைகளில் எப்படி படம் முடியும் முன் வில்லனைக் கைது செய்ய மட்டும் போலீஸ் வருமோ அது மாதிரி பயணச் சீட்டு பரி சோதகர் வந்தார். ஒவ்வொருவரின் பயணச் சீட்டையும் வாங்கிச் சரிபார்த்தவரிடம் ரயில்களில் தகுதி குறைந்த ஆட்களுடன் பயணிக்க வேண்டியதாகி விட்டது என்று ஆதங்கப் பட்டவரை புழுவை போல் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் நகர்ந்தார். இன்னும் ஐந்து நிமிடங்களில் திருச்சி வந்து விடும். முதியவரிடம் நீங்கள் இந்த வயதான காலத்தில் ஏன் பயணம் செய்ய வேண்டும் என்று பரிகசிக்க அவர் என்னைத் தன்னுடன் வைத்துக்கொள்ளும் பொருட்டு மகன் அவரை கிராமத்திலிருந்து திருச்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். வண்டி பிளாட்பாரத்திற்குள் நுழைந்து மெல்ல நகர்ந்து நின்றது.

முதியவரும், கூடவந்தவரும் இறங்க தயாராகவும், அதிகார மனிதரின் மகன் குடும்பத்துடன் வாலாடிக்குப் போக வண்டியில் ஏறவும் சரியாக இருந்தது. உள்ளே ஏறிய அதிகார மனிதரின் மகன் கூட வந்தவரைப் பார்த்து, “ ஹலோ புரொபசர், வாட் அ சர்ப்பிரைஸ்.உங்களை சந்திப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்றதும் அதிகார மனிதர் சிவாஜி தொனியில்

“ யோகேஷ், என்னப்பா சொல்கிறாய்” என்றார்.

“ அப்பா மீட் மிஸ்டர் தியாகராஜன். நான் சொன்னேனே அந்த பேராசிரியர் இவர்தான். என்னை துறைத்தலைவர் பதவிக்கு புரபோஸ் செய்தவர்” என்றவர்,“ ஏன் புரொபசர் அந்த அமெரிக்க பல்கலைக்கழக வேலையை விட்டீர்கள், உங்கள் சொந்த விவகாரத்தில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம்” என்றவரிடம், கூட வந்தவர் “ இவர் என் தந்தை. அம்மா இறந்த பின் தனியாக அவரை விட மனதில்லை. ஆகவே என்னோடு வைத்துக் கொள்ளவே இந்தியா வந்தேன். நேரம் கிடைத்தால் பாரதியார் பல்கலைக் கழகத்தில் சந்திப்போம். வருகிறேன்” என்று சொல்லி விடை பெற்றார்.

அதிகார மனிதரின் மகனுடன் வந்த டை கட்டிய மனிதரிடம் தன் தந்தையை காட்டி, “மிஸ்டர். கிரிதரன், இவரை உங்கள் பொறுப்பில் அடுத்த வாரம் சென்னையில் ஒப்படைக்கிறேன். என்னால் அதிகம் விடுப்பு எடுத்து அடிக்கடி வர முடியாது. என்ன ஆனாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத போது தகவல் தந்தால் போதும். அடுத்த வாரம் சென்னையில் சந்திப்போம்” என்று அழுத்தமாகச் சொல்லவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.

அதிகார மனிதரின் உண்மையான பயணம் வாலாடிக்குப் பின் தான் ஆரம்பிக்கப் போகிறது என்பதை நினைத்தேன். இறைவன் கணக்குகள் பல சமயம் சரியாகவே இருப்பதாகத் தோன்றியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *