ரயிலென்னும் பெருவிருட்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 11,586 
 
 

அவனுக்கு வீடு செங்கல்பட்டுப் பக்கம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பக்கத்து மில்லில் கூலி வேலை. கூடப் பிறந்தவர்கள் இல்லை. அவனுக்கு முன் ஒரு பையன் பிறந்து ஆறு நாளில் ஏதோ பெயர் தெரியாத காய்ச்சல் வந்து இறந்ததாக ஒரு சொந்தக்கார அக்கா சொல்லியிருக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் தண்டவாள பாதைக்கு அருகில் அவர்களுக்கு சொந்தமாகச் சிறிய வீடு இருந்தது. அவனுக்கு ஆறு வயது ஆகும் வரை தான் அங்கு இருந்தார்கள். அப்போதெல்லாம் அவன் ஆயா வாசலிலேயே உட்கார்ந்திருப்பாள். அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போன பிறகு அவனை மேய்க்கிற வேலை ஆயாவுக்கு. அரை டவுசர் பாதி புட்டத்தில் நழுவி நிற்க ஒரு கையில் அதைப் பிடித்தபடி மறுகையால், அரை மணிக்கொரு முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் செல்லும் மின்சார ரயிலுக்கு ட்ராஃபிக் போலீஸ் வேலை பார்ப்பது அவன் வழக்கம். “அந்தப் பரங்கிப் பசங்க வுட்டுட்டுப் போன பேய்ப்பக்கம் போவாதடா. ஆள அடிச்சி தின்னுரும்”, என்று ஆயா அவனை அதட்டுவாள். அவளுக்குப் பேருந்தோ, ரயிலோ எதுவும் பிடிக்காது. ஆனால் விசித்திரங்கள் நிறைந்த தொலை தூர மாய நகரத்துக்குத் தன்னை எடுத்துச் செல்லும் விந்தை வாகனமாகவே அவன் ரயிலைப் பார்த்தான். ராட்சதக் கம்பளிப்பூச்சியைப் போல கடந்து சென்று தூரத்தில் புள்ளியாக மறையும் அந்த வாகனம் அவனைப் பெரிதும் ஈர்த்தது.

தேரடி வீதியைப் போல ரயிலடி வீதியில் இருந்த அந்த வீட்டை விற்ற பணத்தில், அவன் அப்பா துபாய் சென்றார். அங்கு போன பின் இரண்டு வருடங்களாக அவர் அனுப்பிய பணத்தில் கொஞ்சம் வசதியான வேறு வாடகை வீட்டுக்கு மாறினார்கள். புதிதாகக் குடியேறிய வீடு தண்டவாளப்பாதைக்கு அருகில் இல்லை. ரயிலின் தடதட தாலாட்டில் தூங்கிப் பழக்கப்பட்ட அவனுக்கு, சத்தமில்லாமல் தூங்குவது சிக்கலாகத் தோன்றியது. சப்தம் தான் அத்தனை நாளாக அவனுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தந்துவந்தது. இரவின் அமைதி அவனுக்கு அந்நியமாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்தது. அவன் இரைச்சலுக்கு ஏங்கினான். புது வீட்டில் ரயில் சப்தமின்றித் தூங்க அவனுக்குப் பல நாட்கள் பிடித்தது.

பதின்வயதுகளின் அவன் வீட்டில் இரண்டு வார்த்தைக்கு மேல் சேர்ந்தாற்போல பேசுவது கிடையாது. துபாயில் இருக்கும் அப்பாவிடம் கூட அடிக்கடி பேசுவதில்லை. ஒரு கேள்வி அதிகமாகக் கேட்டால் கூட சாப்பாடு தட்டு பறக்கும். அந்த அளவுக்கு தான் குடும்பத்துடன் அவனுக்குப் பிடிப்பு இருந்தது. படிப்பில் ஆர்வம் மங்கிப்போனது. கேள்வி கேட்கவும் ஆளில்லை. பொதுத் தேர்வில் முட்டி மோதி தேறிய கையோடு, பள்ளி நண்பர்கள் சிலருடன் சேர்ந்து டிப்ளமோ மெக்கானிக்கல் படிக்க முடிவு செய்தான். பாலிடெக்னிக்கிற்குப் போகும் போதிலிருந்து தான் தினமும் ரயிலில் செல்ல ஆரம்பித்தான். இரண்டு மணி நேரம் மின்சார ரயிலில் பயணம். பல நாள் பீச் பாஸ்ட் சில நாள் திருமால்பூர் எக்ஸ்பிரஸ், பாண்டிசேரி பாசஞ்சர் என்று எந்த ரயிலிலும் செல்வான். பெயரைத் தவிர எல்லா ரயிலும் அவனுக்கு ஒன்று தான் . ஒரே ஊரில் பக்கத்துப் பக்கத்துத் தெருவில் வசித்திருந்தாலும் சந்தித்திருக்காதவர்கள், ஏதோ ஊருக்கு ரயிலில் செல்லும் போது நண்பர்களாகிவிடுவதைப் போல அவனுக்கும் பள்ளித்தோழர்கள் தவிர இன்னும் அதிகமாக நண்பர்கள் சேர்ந்தார்கள். அப்படியாக தவமுருகன் என்று ஒரு சீனியருடன் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கும் செங்கல்பட்டு தான். அவன் படித்த பாலிடெக்னிக்கில் மூன்றாவது வருடம் கம்ப்யூட்டர் படித்துக்கொண்டிருந்தார்.

தவமுருகனுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. ரயிலில் செல்லும் போது தவமுருகன் அவனுடனே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பான். அவனுக்கு அடிக்கடி அறிவுரைகளும் சொல்வான். நன்றாக படிக்கச் சொல்லி சில சமயம் திட்டவும் செய்வான். ஆனால் அவன் தவமுருகனின் மேல் எப்போதும் கோபித்துக் கொள்வது கிடையாது. பாலிடெக்னிக்கில் அவன் முதல் வருடம் முடிக்கையில் தவமுருகன் படிப்பு முடித்து சென்னையில் வேலை தேடிச் சென்றுகொண்டிருந்தான். முன்னைப் போல தவமுருகன் அவனிடம் இணக்கமாகப் பேசவில்லை. பார்த்தால் எப்பவும் போல சிரித்துப் பேசினான். ஆனால் தனியாக நிற்கும் போது தவமுருகனின் கண்களில் கலக்கம் நிழலாடுவதை அவன் கவனித்திருந்தான். இறுதியாண்டு போன பின் தவமுருகனை அவன் பார்க்கவில்லை. வடநாட்டில் எங்கோ வேலை கிடைத்துச் சென்றதாகக் கேள்விப்பட்டான். ஆனால் அவனிடம் கூட சொல்லாமல் போனது ஒரு சூட்சுமமாகவே இருந்தது. அவன் ஆயா இரண்டு மாதங்களாக முடியாமல் படுக்கையில் கிடந்தாள். பாலிடெக்னிக்கில் கடைசி செமஸ்டர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு இரவில் அவன் ஆயாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து போனாள். ஒன்றிரண்டு வயதான கிழவிகள் வந்து பாட்டுப் பாடி அழுதார்கள். வேறு யாரும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அப்பா வரவில்லை. துபாயிலேயே மொட்டை போட்டு சடங்குகள் செய்து விட்டதாக ட்ரங்க் காலில் தெரிவித்தார். யாரும் அவரை சந்தேகிக்கவோ கேள்வி கேட்கவோ இல்லை. எப்போதும் கேள்வி மட்டுமே கேட்கும் சங்கர் மாமா கூட அமைதியாகத் தான் இருந்தார். அவன் அப்பா மாதா மாதம் பணம் அனுப்பத் தவறவில்லை. தேவைகள் நிறைவேறும் வரை சந்தேகங்களும் கேள்விகளும் மண்புதைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றன, மண்ணுளிப் பாம்பைப் போல.

செமஸ்டர் முடிந்து இரண்டு மாதங்கள் நண்பர்களுடன் வந்தவாசி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் என்று ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தான். தேர்வு முடிவுகள் வெளியானது. கூட்டாளிகள் பலரும் பார்த்துவிட்டார்கள். மதிப்பெண்களைப் பார்த்த நண்பர்களில் சிலர் சிரித்த முகத்தோடும் சிலர் விரக்தியாகவும் திரும்பினர். அவனுக்கு முடிவுகளைப் பார்க்கவே மனதில்லை. எல்லோரும் போனபிறகு கடைசி ஆளாய் போய் பார்த்தான். தனது தேர்வு மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, உபயோகமற்று இருந்த பால் பாயிண்ட் பேனாவால் ஏழு என்ற நம்பரை அவன் அமர்ந்திருந்த பெட்டியின் உள் பக்கத்தில் பழுப்பு நிற பெயிண்ட் கிழிய எழுதி வைத்தான். அது அவனுடைய பரிபாஷை. நாட்குறிப்பு எழுதுவதைப் போல; சப்பாத்திக் கள்ளித் தட்டையில் எழுதுவதைப் போல. பாலிடெக்னிக்கில் ஏழு அரியர். வீட்டுக்குச் சொல்லவில்லை. ரயிலிடம் சொல்லிவிட்டான். ஒரு ரயில் பெட்டியின் உட்பக்கங்கள், அறுந்து தொங்கும் பலவித சுயசரிதைக் குறிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது போன்ற கிறுக்கல்களைத் தவிர எழுதவந்து ஏதோ காரணத்தால் எழுதாமல் போன குறிப்புகள் இன்னும் அதிகம் என்று நினைத்துக்கொண்டான். அந்தக் குறிப்புகள் ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும் அனாதையாக அலைந்து கொண்டிருப்பது அவனுக்குப் புலப்பட்டது. பிசுபிசுப்பாக கயிறைப்போன்ற ஒன்று அவனைச் சுற்றுவதை உணர்ந்தான். அவனுக்கு மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயம் மெலிதாகப் படர்ந்தது.

அம்மாவிடமும் மாமாவிடமும் எல்லாத் தேர்விலும் தேறிவிட்டதாக சொல்லிவைத்தான். ஒன்றரை மாதம் வீட்டிலேயே உட்கார்ந்து கிடந்தான். மாமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் திட்ட ஆரம்பித்தார். நாலைந்து நிறுவனங்களின் பெயரும் முகவரியும் சொல்லி வேலை கேட்டுப் போகச் சொன்னார். படிக்கும் போது பழக்கப்பட்ட ரயில், வேலை தேடிச் செல்லும் போது வேறு முகம் காட்டியது. நண்பர்களுடன் கூச்சல் போட்டுக் கொண்டு, மகேந்திரா சிட்டியில் வேலை செய்யும் வடநாட்டு பெண்களையும் வட நாட்டு வேஷம் போட்ட தமிழ்நாட்டுப் பெண்களையும் சாடை காட்டி கேலி செய்து, ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஓடும் போதே இறங்கி, கம்பார்ட்மென்ட் விட்டு கம்பார்ட்மென்டாக ஏறி கும்மாளமடித்துப் பயணம் செய்த ரயில் போலவே இல்லை இப்போது. முண்டியடிக்கும் கூட்டத்திலும் வெறுமையான உணர்வு. பாலிடெக்னிக்கில் உடன் படித்த நண்பர்கள் சிலருக்கு பெரிய வேலைகள் கிடைத்தது. எப்போதாவது ரயிலில் அவர்களைப் பார்க்கும் போது கூட்டத்தில் ஒளிந்து கொள்வான். அப்படியே பார்த்துவிட்டாலும் அவசர வேலை இருப்பதாகச் சொல்லி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வேறு ரயிலில் சென்றுவிடுவான். ஒவ்வொரு தடவையும் வேலை தேடிப் போய் ஏமாற்றத்துடன் வெறுத்துத் திரும்பி வருகையில் உலகமென்னும் பெரிய சிறையில் ரயில் ஒரு ஓடும் சிறையாக அவனுக்குத் தோன்றியது. சில நேரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்தச் சிறையில் இருந்து தப்பிக் குதித்துவிட நினைக்கும் அளவுக்கு அவனுக்கு மன உந்துதல் அதிகரித்து வந்தது.

ஒரு நாள் பாண்டிசேரி பாசஞ்சரில் சென்று கொண்டிருந்தான். கிண்டியில் ஒரு நிறுவனத்தில் அன்று நேர்முகத் தேர்வு. அந்தக் கம்பார்ட்மென்ட்டின் கழிப்பறை பக்கம் ஏகத்துக்கும் கூட்டம். ஒரு பிச்சைக்காரனுக்கும் இவனையொத்த வயதுடைய வாலிபன் ஒருவனுக்கும் தகறார் போல. அவனும் பக்கத்தில் போய்ப் பார்த்தான். வாலிபன் தன் பணத்தைப் பிச்சைக்காரன் திருடிவிட்டான் என்று சொல்லி முட்டி வரையே கால்கள் இருந்த அந்த மனிதனை செருப்புக்காலோடு முகத்தில் எத்தினான். அந்த முட பிச்சைக்காரன் அவல ஓலமிட்டான். சரியான களேபரம் ஆகிவிட்டிருந்தது. சிலர் வந்து பார்த்துவிட்டு “ஹ்ம்ம் திருட்டுக்கேசா ?”, என்று சலித்தபடி போனார்கள். அவர்கள் எதை எதிர்பார்த்து வந்தார்கள் என்று அவனுக்கு விளங்கவில்லை. ஆளாளுக்கு விசாரித்து விட்டு விதவிதமாகக் கதை சொல்லிப்போனார்கள். அவர்கள் சொன்ன கதை எதுவும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருந்தது. நாலு பேர் சேர்ந்து அந்த வாலிபன் குடித்துவிட்டு வந்து பிச்சைக்காரனின் காசை பிடுங்கியதால் தான் பிரச்சினை என்று முடிவு செய்தார்கள். அடுத்து வந்த ரயில் நிலையத்தில் பிச்சைக்காரனையும், அந்த வாலிபனையும் போலீஸ் விசாரித்து இருவரிடம் இருந்த பணத்தையும் பிடுங்கி அனுப்பினார்கள். முடிவில் பிச்சைக்காரனும் வாலிபனும் ஒன்றாகப் புலம்பியபடி சென்றார்கள். அந்தக் காட்சி அவன் உள்ளத்தில் கரும்புகையாக உள்சென்று படிந்தது. அன்றைய நேர்முகத்தேர்வில் அவன் தேர்வாகவில்லை. அவன் சென்றிருந்த இடம் ஒரு தொழிற்பேட்டை, அதனால் அந்த நிறுவனத்தைச் சுற்றியிருந்த மற்ற தொழிற்சாலைகளைக்கும் சென்று வேலை தேடினான். அன்று வெயில் அதிகமாக அடிப்பது போல அவனுக்குத் தோன்றியது. வேலை கேட்டுப் போன ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லி அந்த தேதியில் வந்து பார்க்கச் சொன்னார்கள்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் விடாமல் தொழிற்பேட்டைகளைத் தேடிப் போனான். பூந்தமல்லி சாலையில் ஒரு சிறு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. ஓரளவுக்கு சம்பளம். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக வேலைக்கு ஏற்றவாறு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டான். வேலை அவனை புதிய மனிதனாக மாற்றியது. டப்பர்வேர் கூடையில் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் சகிதம் காலையிலேயே வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுவான். அவனுக்கு தோழர்கள் நிறைய கிடைத்தார்கள், சிறுசுகளும் பெருசுகளுமாக. தினமும் ஒரே வண்டியில் செல்வது, நண்பர்கள் எல்லோருக்கும் எப்போதும் ஒரே பெட்டியில் இடம் போட்டு வைப்பது, சீசனுக்கு சீசன் சீட்டு விளையாடுவது, வாய் ஓயாமல் பேசிக் கொண்டே செல்வது எல்லாம் அவனுக்கு வழக்கமானது. ரயில் தோழர் இருவருடன் கூட்டாகத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ சேர்ந்தான். துபாயிலிருந்து அவனுடைய அப்பா திரும்பியிருந்தார். வேலைக்குச் செல்லும் நிலையில் அவர் இல்லை. துபாயிலிருந்து கொண்டு வந்த பணத்தில் ஒரு பகுதியை வட்டிக்கு விட்டார். மீதியை உட்கார்ந்து தின்றார். வெகு சீக்கிரத்திலேயே குடும்பத்திற்குப் பயனற்று பருப்பு சாதத்திலும், இரவுப் படுக்கையிலும் பங்கு கேட்கும் மூன்றாவது ஆளாகவே அவர் நிலைபெற்றார். மண்ணில் புதைந்திருந்த கேள்விகள் எல்லாம் சமயம் பார்த்து உறவுகளில் வாயிலாக உறுத்தலுடன் வெளிவந்தன. அவனுக்கு அவர் மேல் பாசம் வராத போதும் சில வேளைகளில் இரக்கம் ஏற்படும். ஆனால் அவனும் அவரை கவனிப்பதில் ஈடுபாடு காட்டவில்லை. வேலை மட்டுமே அவனுக்கு முக்கியமாகிப் போனது. இரவில் வேலை முடிந்து திரும்ப வரும் பயணத்தின் பசிக்கு வாழைப்பழம், சப்போட்டா, சுண்டல், சமோசா என்று ஏதாவது அவனுக்குக் கிடைத்தது. மூன்று எம்.ஜி.ஆர் பாடல்களை மட்டுமே நம்பி பிழைப்பை நடத்தும் ரயில் பாடகர்களின் மருகவைக்கும் குரலை தினமும் கேட்டான். கூட்டமில்லாத பின்னிரவுப் பொழுதுகளில் அவன் பயணப்பட நேரும் போது அந்தப் பாடகர்கள் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொள்வதைப் பார்த்திருக்கிறான். டாஸ்மாக் கடைகளில் இருந்து மிச்சமாகிப் போன கட்டிங் மது பானங்களும் அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த வேளைகளில் மட்டும் புதிய சினிமாக்களில் வரும் டப்பாங்குத்துப் பாடல்களை தங்களுக்குள் பாடிக் கொள்கிறார்கள். பகல்பொழுதில் அவர்களின் கண்களில் தெரியும் சோகத்தின் சுவடுகளை இரவுகளில் அவனால் கண்டறிய முடியவில்லை. ரயில் அவனுக்கு வாழ்க்கையின் பல்லாயிரம் பரிணாமங்களை இதழ் இதழாகப் பிரித்துக் காட்டியது.

இரண்டு வருடங்களாக பூந்தமல்லி சாலையில் இருந்த அதே சிறிய தொழிற்சாலையில் வேலை பார்த்தான். வேலையில் சற்றுச் சிரமம் கூடியதோடல்லாமல், சில சிக்கல்களும் உருவானது. முதலாளி பையனுக்கும் அவனுக்கும் முட்டிக்கொண்டது. ரயில் நண்பர்களிடம் வேறு வேலைக்குச் சொல்லி வைத்திருந்தான். வேலை, வீடு, ரயில் என்ற இயந்திர கதியினாலான வாழ்க்கையில் அவனுக்கு சலிப்பு தட்டத் தொடங்கியது. அன்று திங்கட்கிழமை. வாரயிறுதிச் சோம்பல் இன்னும் மீதமிருக்க காலை ஏழு இருபதுக்கு செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலைப் பிடித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தான். காட்டாங்குளத்தூர் நிறுத்தம் நெருங்கியிருந்தது. அலைபேசி அடித்தது. அழைப்பை எடுக்கும் முன்னே அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்குமோ என்று தான் முதலில் மனதில் பட்டது. ஆட்டோ ஓட்டும் செல்லத்துரை பேசினான். தவமுருகன் அண்ணன் ரயிலில் அடிபட்டதாகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் சொன்னான். இதை அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. பதட்டத்தில் உடன் வேலை செய்பவரிடம் கூட சொல்லாமல் பொத்தேரி நிறுத்தத்தில் இறங்கினான். மூச்சின் வேகம் அதிகரித்தது. என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அடுத்த ரயில் பிடித்து, செங்கல்பட்டு நிறுத்தத்தில் இறங்கி செல்லத்துரைக்குப் போன் போட்டான். இருவரும் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்கள். தவமுருகன் மயக்கத்தில் இருந்தார். உயிர் இருந்தது. கால்கள் இரண்டையும் முழம் வரை வெட்டி எடுத்திருந்தார்கள். எலும்புகள் நொறுங்கிவிட்டதால் ஒட்டமுடியவில்லை என்று மருத்துவர் சொன்னதாக தவமுருகன் அண்ணனின் தம்பி சுதாகர் சொன்னான். மேலும், முந்தய இரவு தவமுருகன் அவருடைய அம்மாவுடன் பெரிய கூச்சலிட்டு சண்டை போட்டுவிட்டுப் போன பிறகு காலையில் ரயிலில் அடிபட்ட செய்தி தான் வந்ததாகச் சொன்னான். வேலை வெட்டி இல்லாமல் ஆறுமாதமாக தவமுருகன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார். அவருக்கு மயக்கம் தெளியும் வரை அவன் அங்கு இருக்கவில்லை. கையில் இருந்த பணத்தை சுதாகரிடம் குடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டான். அன்றைக்கு நேரம் சென்று வேலைக்குப் போனான். நாள் முழுதும் ரயிலும் அதனடியில் தவமுருகனின் கால்கள் இழுத்துப் போவதுமான காட்சிகள் அவனுக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. வேலை முடிந்து, இரவு சாலையோரக் கடையில் முட்டை தோசை சாப்பிட்டுவிட்டு ரயில் ஏறினான். வானத்தில் ஆயிரம் மின்மினிகள் மறைந்தும் இருந்தும் அவன் மனதின் இறுக்கத்தை பதிவு செய்து கொண்டிருந்தன. கவலைகள் திருடிக்கொண்டது போக இருந்த மிச்சத் தூக்கத்தை ரயில் தன் கடைசிப் பெட்டிக்கு பின்னால் சேர்த்துக் கொண்டது. அவன் அமர்ந்திருந்தது வெண்டார் கம்பார்ட்மென்ட். யாருமே இல்லை. தனியனாகக் கால்களை நீட்டியமர்ந்து சென்று கொண்டிருந்தான். தொண்டைக் குழி சுருங்கிப் போனது. மனம் கனத்து வந்தது. அடர்ந்து விரிந்த ஆலமரம் பறவைகளுக்கு எப்படியோ அப்படித்தான் அவனுக்கு ரயில். நிலமெங்கும் பற்றிப் படர்ந்திருக்கும் தன் வேர்களின் மீது ஊர்ந்து செல்லும் ரயிலென்னும் பெருவிருட்சத்தில் அவன் மனம் இளைப்பாறுதலைத் தேடியது.

எழும்பூர் நிறுத்தத்தில் செங்கல்பட்டை நோக்கிச் சென்ற அவனது மின்சார ரயில் நின்றது. அப்போது காலையில் தவமுருகன் அண்ணனின் கால்களைக் குதறித் தின்ற முத்துநகர் எக்ஸ்பிரசை நோக்கி அவன் கண்கள் போனது. அந்த ரயில் அப்பாவியாக முழித்துக் கொண்டு நின்றது. உள்ளிருந்தபடியே அவனையறியாமல் எட்டி அந்த ரயிலின் சக்கரங்களைப் பார்த்தான். ரத்தச் சுவடுகளோ கிழிந்த தோலோ அதில் தென்படவில்லை. ரணத்தின் தடங்களையெல்லாம் தண்டவாளங்களில் உதறிக் கொண்டு வந்திருக்கும் போல. உணர முடியாத காரணங்களுடன் அந்த ரயில் அவனைக் கட்டி இழுத்தது. அது அவனைக் கையசைத்து கூப்பிடுவதைப் போல அவனுக்குத் தோன்றியது. ரயில் நிலையத்தில் பிராயாணப்படாமல் நிற்கும் எந்த ரயிலும் மௌனித்திருப்பதில்லை.அதற்கு அவனிடம் சொல்ல நிறைய விசயங்கள் இருந்தன. அவனுடைய மின்சார ரயில் எழும்பூரை விட்டு கிளம்பியது. இணைக்கோடுகளாக உடனோடிவந்த தண்டவாளங்களை சன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். முத்துநகர் எக்ஸ்பிரஸ் அதில் தாவியோடி வருவதைப் போன்ற தோற்ற மயக்கங்கள் அவன் கண்முன் மிதந்தன. அந்த ரயில் அவனை ஆரோகணிக்க அழைத்தது. மந்திரத்துக்கு கட்டுண்டதைப் போல அவன் கால்கள் அந்தப் பெட்டியின் படிகளை நோக்கி நடந்தன. நிலையற்றுத் தடுமாறும் மனதுடன் படிகளின் ஓரத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். இரவுப் பயணத்தின் குளிர்ந்த காற்று ஒரு திசையில் இருந்து மறுதிசைக்கு மேகங்களை ரகசியமாகக் கடத்திக் கொண்டிருந்தது.

– செப்டம்பர் 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *