கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 10,747 
 
 

(சுபமங்களா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை- 1995)

லண்டன் 1994.

கணவரின் குறட்டை ஒலி மஞ்சுளாவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. அவள் திரும்பிப் படுத்தாள். கணவரின் குறட்டை ஒலி தொடர்ந்தது தவிர குறையவில்லை.

ஒருதரம் தூக்கம் குழம்பிப்போனால் அவளால் நீண்ட நேரம்வரை தூங்க முடியாது.

கணவர் எவ்வளவு நிம்மதியாக நித்திரை கொள்கிறார்? நித்திரையின் ஆழத்தில் கனவுகளும் வந்து போகலாம். என்ன கனவு காணுவார்? வெளி மனதின் நினைவோட்டங்கள் அடிமனதின் அலைச்சல்கள், உள்ளத்தின் உறுத்தல்கள் எல்லாம் வருமா?

அவர் நிம்மதியாகத் தூங்குகிறார் ஆனால்;,இரவுச் சாப்பாட்டின் பின் மஞ்சுளாவின் கணவர் ஏதோ சாதாரண விசயமாகச் சொல்லிய செய்தி அவளின் இப்போது மனதைக் குடைகிறது.

வீட்டில் பருப்பு முடிந்துவிட்டது என்றால் அவரிடம் சொல்லிவிடுவாள். குழந்தைகளின் பாடசாலைச் செலவுக்கு அவரிடம் கேட்டுத்தான் காசு கொடுப்பாள். பதினைந்து வருடத் திருமணத்தில் அவருக்குத் தெரியாமல் அவரைக் கேட்காமல் ஒரு சதமேனும் செலவளித்திருக்கமாட்டாளே!

அவர் எவ்வளவோ செலவளிக்கிறார். அவள் விளக்கம் கேட்பதில்லை. ஆனால், இன்று அவர் சொன்ன விடயம் செலவில் மட்டும் தங்கியிருக்கவில்லையே.

மஞ்சுளா நித்திரை வராமல் திரும்பிப்படுத்தாள். அடுத்த அறையில் பெரிய மகள் தேவிகா இருமுவது கேட்கிறது. உண்மையாகவே இருமுகிறாளா அல்லது உணர்வில் நெருடும் குழப்பத்தைக் காட்டுகிறாளா? தேவிகாவுக்கு பதின்மூன்று வயதாகிறது. இன்னும் ‘வயதுக்கு’வரவில்லை என்று யோசிக்காமலிருக்க முடியவில்லை. இரண்டாவது பெண் கார்த்திகா பதினொரு வயது. தமக்கையின் உயரத்தைவிட கூட வளர்ந்திருந்தாள். தேவிகா இன்னும் பெரியவளாக வராதது சொந்தக்காரர்களுக்கு ஒரு கதையாகப் போய்விட்டது. சொந்தக்காரர்கள் தேவிகாவை டொக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் காட்டினால் என்ன என்று நேரடியாகக் கேட்டார்கள்.

மஞ்சுளாவின் குடும்பத்தில் நான்கு பெண்கள். ஒருத்தரும் பதின்மூன்று வயதுக்குமுன் ~வயதுக்கு| வரவில்லை. அதுபோற்தான் தன் பெண்களும் என்று இருக்க மஞ்சுளாவால் முடியவில்லை. சொந்தக்காரர்களின் பேச்சு எரிச்சலையுண்டாக்குகிறது.

கணவர் தில்லையம்பலம் நிம்மதியாக நித்திரை கொள்கிறார். லண்டனில் எலக்ட்ரோனிக் எஞ்சினியராக இருக்கிறார். கை நிறையச் சம்பளம். வீட்டைப் பார்க்க மனைவி. கவலையில்லாத சீவியம். தான் நினைத்த மாதிரி நடப்பார். நடக்கவேண்டிய மாதிரி திட்டமும் போட்டுக்கொள்வார்.

மஞ்சுளா எழுந்துகொண்டாள். இரவு இரண்டு மணியிருக்கும். உலகம் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. ஜன்னலால் உலகத்தைப் பார்த்தான். தூரத்தில் தேம்ஸ் நதியின் வெளிச்சங்கள் கோலம் காட்டின. மஞ்சுளாவின் வீடு நகரின் உயரமான இடத்திலமைந்திருக்கிறது. நகரைக் குறுக்கிட்டுக் கிடக்கும் பெரிய ரோட்டுக்களில் இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு சில கார்கள் போய்க்கொண்டிருந்தன.

லண்டனுக்கு வந்த காலத்தில் அவர்கள் தில்லையம்பலத்துக்குத் தெரிந்தவர்களின் வீட்டின் ஒரு அறையிலிருந்தார்கள். ஜன்னாலுக்கு அப்பால் பெரிய ரோட்டில் பெரிய லொறிகளும் வான்களும் நிறைந்து கிடக்கும். ஜன்னலுக்கு அப்பாலுள்ள உலகத்தைப் பார்க்க முடியாது. வாழ்க்கையில் பதினைந்து வருடங்கள் மஞ்சுளா தில்லையம்பலத்துடன் பிரயாணம் செய்துவிட்டாள். இரண்டு வீடுகளிலிருந்துவிட்டு கடைசியாக இந்த வீட்டுக்கு வந்தார்கள்.

வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறியதாக எதுவும் ஞாபகமில்லை. கல்யாணம் செய்த நாட்களில் குழந்தைகள் பிறக்க முதல் ஏதோ ~பார்ட் ரைம்| வேலை செய்தாள்;. அதுதான் அவள் உழைத்த உழைப்பு. அதன் பின்னர் அவள் உழைப்பு கணவருக்கும் குழந்தைகளுக்கும்தான்.

நான் உழைக்கவில்லை என்ற உள்ளுணர்வோ என்னவோ இன்றிரவு அவர் தான் ஒரு பெரிய யாத்திரையைத் தொடங்கப்போவதாகச் சொன்ன போது திருப்பி எதுவும் கேட்காமல் இருந்ததன் காரணமாக இருக்கலாம்.

தில்லையம்பலம் பெரிய பக்திமான் என்றில்லை. ஆனால், இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் கழிப்பதன் காரணம் அவருக்கு சாடையாக வந்திருக்கும் நீரழிவு வியாதி மட்டும் காரணமல்ல. வீட்டிலிருப்பதும் பொழுது போகாமலிருப்பதும் காரணமாக இருக்கலாம்.

பெரிய யாத்திரை!

மூன்று மாத இந்திய யாத்திரை செய்யப்போகிறாராம். புண்ணிய தலங்கள், புராதனமான இடங்களைத் தரிசிக்கப்போகிறாராம்.

“நீ பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வாய்தானே” என்று ஏனோதானோ என்று கேட்டார்.

‘நீ பிள்ளைகளைப் பார்த்துக்கொள்’ என்ற கட்டளைதான். கௌரவமான கேள்வியாக வந்தது என்று மஞ்சுளாவுக்குத் தெரியும்.

“பெரிய மகள் எந்த நேரமும் பெரிய பிள்ளையாகலாம்”, அவள் சொல்ல நினைத்தாள்.

‘அதற்கென்ன சடங்குகளை நான் வந்த பின் வைத்துக்கொள்ளலாம்’ என்று தயங்காமல் சொல்வார் என்று தெரியும். மஞ்சுளாவின் சொந்தக்காரப் பெண் நத்தார் பண்டிகைக்குள் பெரியவளாகிப் போனாலும், விழாவை வைக்க எத்தனையோ மாதங்கள் எடுத்தன. லண்டனில்ற் சமயச் சடங்குகள் சாத்திரங்களுக்குக் கட்டுப்பாடில்லை.

தேவிகா, தாய் மாதிரி தகப்பனிடம் எதையும் கேட்கமாட்டாள்.

“என்ன ஜன்னலடியில் செய்கிறாய்?” தில்லையம்பலத்தின் அதட்டல் கேட்டது.

“நித்திரை வரல்ல” மஞ்சுளா முணுமுணுத்தாள். ~உங்கள் குறட்டடை என்னை எழுப்பிவிட்டது| என்று சொன்னால் அவர் பாய்ந்து விழுவார்.

“ஏன் நித்திரை வரல்ல… கண்ட விசரெல்லாம் யோசிக்காம வந்து படு” தில்லையம்பலம் அதட்டினார். இவளின் மனதில் குமையும் கேள்விகளைப் பற்றி அவருக்கு அக்கறையில்லை.

மஞ்சுளா வந்தாள். இனி நித்திரை வராது. வயிற்றை என்னவோ செய்தது. அவளுக்கு நாற்பது வயதாகப் போகின்றது. கடந்த ஒரு வருடமாக மாதவிடாய் சரியாக வரவில்லை. ~தீட்டு நிற்கப் போகிறது| என சிநேகிதி ஒருத்தி சொன்னாள். தீட்டு நிற்கும்போது என்னென்ன மாற்றம் உடம்பில் நிகழும் என்றும் சொல்லியிருக்கிறாள். வயிறு ஏதோ செய்தது.

“அம்மா” தேவிகா மெல்லமாய்க் கூப்பிட்டாள். மஞ்சுளா மெல்லமாய் எழுந்தாள்.மகளின் அடுத்த அறைக்குச் சென்றாள்.

“வயிற்றை வலிக்குதம்மா” தேவிகா முணுமுணுத்தாள். தாய்குத்தான் வயிற்றுவலி என்றால் மகளுக்குமா?

“கீழே வா” மஞ்சுளா தேவிகாவை அழைத்தாள்.

தாயும் மகளும் கீழே வந்தார்கள்.

பருவமடையப்போகும் மகளின் முகத்தில் பருக்கள்.

“அம்மா இடுப்பெல்லாம் நோகுது”

தேவிகா சங்கடத்துடன் நெளிந்தாள்.

தாயின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு.

எந்த நேரமும் மகள் ~பருவமடையலாம்|.

சொந்தக்காரர் சொல்வது போல டொக்டரிடம் கொண்டுபோகத் தேவையில்லை.

“என்னம்மா அப்பா எங்கேயோ போறதாகச் சொன்னார்?”

தனது வயிற்று நோவுக்கு,உள்ளி அவிக்கும் தாயைக் கேட்டாள் மகள்.

இரவின் அமைதியில் அவள் குரல் கணீரெனக் கேட்டது.

“அப்பா இந்தியாவுக்குக் கோவில் பார்க்கப்போறாராம்”

“நீங்க போகல்லயா?”

“நான் போனால் உன்னையார் பார்க்கிறது?”

“நாங்க பெரியம்மாவோட நிற்கலாம்தானே?”

“அப்பாவுக்கு நீங்கள் யாரோடையும் நிக்கிறது பிடிக்கல”

“நீங்களும் அவரோட போக விரும்பவில்லையா?”

“………………..” தாய் மௌனமானாள்.

தாயின் மௌனமான மறுமொழிகளில் பழக்கப்பட்டவள் மகள்.

“அம்மா எப்போது இந்தியா பேரிறாhம்?”

“இன்னும் இரண்டு மூன்று கிழமையில்…”

இப்போது மகள் மௌனம் சாதித்தாள்.

டொக்டரிடம் போகும்போது தனக்கு அடிக்கடி வரும் வயிற்று நோவைப்பற்றியும் சொல்ல வேண்டும் என நினைத்தாள் மஞ்சுளா.

இரண்டு மூன்று நாட்களாகத் தேவிகா வயிற்றுக்குக் குத்துடன் கஷ்ட்டப்பட்டாள். கடைசியாக டாக்டரிடம் போன் பண்ணி ~அப்போயின்ட்மென்ட்| எடுக்கும் போது, தானும் டொக்டரைப் பார்க்கப் போவதாகச் சொன்னாள். டாக்டரின் காரியதரிசி தாய்கும் மகளுக்கும் நேரம் ஒழுங்குசெய்து கொடுத்தாள்.

“தேவிகாவின் அறிகுறிகள் அவள் எப்போதும் பெரியவளாகலாம் என்றிருக்கிறது” டாக்டர் தாயிடம் சொன்னார்.

“உங்களின் பிரச்சினை என்ன?” டாக்டர் தாயைக் கேட்டார். கடந்த இரண்டு மூன்று கிழமையாக வயிறு சரியில்லை என்று சொன்னாள் மஞ்சுளா. அத்துடன் கடந்த ஒரு வருடமாக மாதவிடாயும் ஒழுங்காக வருவதில்லை என்று சொன்னாள்.

தனது தாய்க்கு முப்பத்தாறு வயதிலேயே தீட்டு நின்றுவிட்டதை மஞ்சுளா சொல்ல மறக்கவில்லை.

டாக்டர் மஞசுளாவின் மெடிக்கல் நோட்ஸில் ஒரு கண்ணோட்டத்தைச் செலுத்தினார். அவளின் நாடித்துடிப்பைப் பார்த்தார். ஸ்டெதஸ்கோப் வைத்து இதயம் எப்படி வேலை செய்கின்றது என்று கேட்டார். கட்டிலில் படுக்க வைத்து மஞ்சுளாவின் வயிற்றைச் சோதித்தார்.

“எதற்கும் சலப்பரீட்சை செய்து பார்ப்பம்” டாக்டர் கைகழுவியபடி சொன்னார்.

“ஏதும் யோhசிக்கும்படியாக இருக்கிறதா டொக்டர்?” மஞ்சுளா மெல்லமாகக் கேட்டாள். மஞ்சுளாவின் சொந்தக்காரப் பெண் ஒருத்திக்கு இப்படித்தான் வயிற்று வலி வந்தது. ஏனோதானோ என்று அக்கறையில்லாமல் விட்டுவிட்டாள். கடைசியாகப் பார்தால் ~கான்ஸர்| என்று கண்டுபிடித்தார்கள்.

“என்ன யோசிக்க இருக்கிறது. தேவிகாவுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ பிறக்கப்போகுது என்று நினைக்கிறன். எதற்கும் சலம் பரிசோதனை செய்து தீர்மானித்துவிடலாமே”

டொக்டர் அவளைப் பார்க்காமல் சொன்னார்.

மஞ்சுளாவின் வாய் வரண்டு இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. கைகள் நடுங்கின. அவள் எதிர்பாராத விடயமது. கார்த்திகாவுக்குப் பதினொரு வயதாகிறது. கார்த்திகா பிறந்து இரண்டு மூன்று வருடங்களின் பின் இன்னுமொரு குழந்தை பிறக்கவேண்டும், ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று மிகவும் பிரார்த்தித்துக்கொண்டாள்.

“என்னத்துக்கு இன்னொரு பிள்ளை. இருக்கிற இரண்டு பெண் குழந்தைகளைக் கரையேற்றுவதே கஷ்டமாக இருக்கப்போகுது” தில்லையம்பலம் திட்டமாகச் சொல்லிவிட்டார்.

மஞ்சுளா எதிர்த்துப்பேசவில்லை.

ஒரு ஆண் குழந்தை கிடைக்காதா என்ற நப்பாசை அப்படியே அழிந்துவிட்டது.

இப்போது பதினொரு வருடங்களுக்குப் பின் இப்படியும் ஒரு சோதனையா?

தில்லையம்பலம் என்ன சொல்வார்? அவர் புண்ணிய தலங்களுக்குப் போவதாகச் சொன்னதுமே கடவுளின் பலன் உடனடியாகக் கிடைத்துவிட்டது போலிருக்கின்றதே. இதுதான் புனிதமான பக்தியின் பிரதிபலனோ?

மஞ்சுளாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தேவிகா இன்றோ நாளையோ பெரிய பெண்ணாகப் போகிறாள். அவளுக்கு ஒரு சின்னத் தம்பியோ தங்கச்சியோ பிறக்கப்போகிறது என்ற செய்தி எப்படியிருக்கும்?

கார்த்திகா நிச்சயம் சந்தோசப்படுவாள். அவளுக்கு எப்போதும் சின்னக்குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். தெரிந்தவர்கள் யாரும் வீட்டுக்கு வந்தால் அவர்களின் சின்னக்குழந்தையை தூக்கிவைத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பாள். அவள் மிகவும் சந்தோசப்படுவாள்.

“என்னம்மா யோசித்துக்கொண்டு வாறியள்?” தேவிகா கேட்டாள். தாய் சிரித்துச் சமாளித்துவிட்டாள். இப்போது ஏன் எதையும் சொல்ல வேண்டும். சலம் பரிசோதித்துப் பார்த்து ~றிஸல்ட்| வரவிட்டுச் சொல்லலாமே”

“மஞ்சுளா அக்கா எப்படியிருக்கிறீர்கள்?” கடைக்குப் போய் வந்துகொண்டிருந்த மஞ்சுளாவின் சினேகிதியின் தங்கை மாலதி சுகம் விசாரித்தாள். மாலதி அளவுக்கு மீறி உடம்பு வைத்திருக்கிறாள். முகத்தில் எப்போதும் ஒரு பரபரப்பு. மாலதிக்கு கல்யாணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. பார்க்காத டொக்டரில்லை. போகாத கோவில்களில்லை.

“நாங்கள் நல்ல சுகம். நீ எப்படியிருக்கிறாய்?”

“என்னக்கா… ஓரே யோசனையும் துக்கமும்தான். கடவுள் ஏன்தான் இப்படி என்னைச் சோதிக்கிறாரோ தெரியவில்லை” மாலதியின் முகத்தில் சோகம்.

நாற்பது வயதில் தன் வயிற்றில் இன்னுமொரு குழந்தை பிறக்கப்போகும் சந்தர்ப்பம் வரலாம் என்பதை மாலதி அறிந்தால் எப்படி எடுத்துக்கொள்வாள்?

ரோட்டுகளில் நிறைய வாகனங்கள். ஏதோ எல்லோரும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் முந்திப்போகும் அவசரம். இப்படி ஓடிப்போய் என்ன செய்யப்போகிறார்கள்?

தேவிகா பாடசாலைக்குப் போகவேண்டும். அவசரமாக நடந்தாள். அவள் மனதில் எத்தனை யோசனையோ? மாலதி மாதிரி தானும் ~மலடி|யாக வாழ்ந்து மனம் குமைவதை கற்பனை செய்வாளா?

மாலதி ஒரு கையில் வைத்திருந்த ~ஷொப்பிங்| சாமான்களை அடுத்த கையில் மாற்றிக்கொண்டாள்.

மாலதி காரில்தான் ஓடித்திரிவாள். இன்று ஏதோ நடந்துவருகிறாள். கையில் ஒரு சுமை. மனத்தில் இன்னொரு சுமை. தூhக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருகிறாள்.

“அக்கா செல்வியின் விஷயம் கேள்விப்பட்டநீங்களே?” மாலதி அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

செல்வி என்பவள் மாலதியின் கணவரின் சொந்தக்காரப் பெண். மிகவும் குடிகையான பெண். கல்யாணமாகி ஒன்றிரண்டு வருடங்கள்தானாகின்றன. ஏதோ பிரச்சினை. மிகவும் துக்கமாக இருக்கிறாள்.

“ஓவர்டோஸ் எடுத்துப்போட்டாளாம்” மாலதி மெல்லக் கிசுகிசுத்துச் சொன்னாள். இவர்களுக்கு முன்னால் நடந்துபோகும் தேவிகாவுக்குக் கேட்காதவாறு சொன்னாள்.

“ஓவர் டோஸா?”

“ஓவர் டோhஸ். ஸிலிப்பிங் பில்ஸ் எடுத்தாளாம்” மாலதி தலையாட்டிக்கொள்கிறாள். இவர்கள் தாண்டிப்போன கடையில் ஓரத்தில் ஒரு ஆங்கிலப் பெண் கைக்குழந்தையுடன் கை நீட்டிப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.

“இஞ்சை பாருங்கோ. செல்வி மாதிரி ஆக்களுக்குக் கொஞ்சம் வாய்கூடிப்போச்சு. புருஷனோட என்ன சண்டை சச்சரவு? குல்யாணம் செய்தபின் கணவர்மாரின்ர சொல்லைக் கேட்டுப்போட்டு வாயைப் பொத்திக்கொண்டு இருக்கிறதுதானே…. நாங்கள் எல்லாம் என்ன பெரிய சந்தோசமாகவா இருக்கிறம்? ஏதோ வாழ்ந்திட்டுப் போறம்?

மாலதி சாமான்களை மற்றக் கையில் மாற்றிக்கொண்டாள்.

இவர்களைத் தாண்டி இரண்டு முரட்டுத்தனமான ஆங்கிலேய வாலிபர்கள் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் ஆசிய மக்களைக் கிண்டல் செய்துகொண்டு போனர்கள்.

“ஏதோ பிழைக்கவந்த நாட்டில் நாங்கள் அவையின்ர இவையின்ர கருத்துக்களையும் நாகரீகங்களையும் பொறுக்கி எடுக்க வேண்டும்? செல்வி போல ஆட்களுக்குப் படிப்பு கூடிப்போய்த்தான் இந்தப் பிரச்சினைகள்”

மாலதி பேசிக்கொண்டே வந்தாள்.

“அம்மா நான் என்ர பிரன்ட்;டோட பாடசாலைக்குப் போறன்” தேவிகா ஒரு பெரிய சந்தியில் திரும்பிவிட்டாள்.

“நீங்க நல்ல மாதிரி பெண்பிள்ளையள் வளர்க்கிறியள். லண்டனில் பிறந்தாலும், இந்தப் பிள்ளையள் உங்கட சொல்லுகளைக் கேட்கினம்” மாலதி பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

மஞ்சுளா திரும்ப வேண்டிய சந்தி வந்ததும் மாலதியிடம் விடைபெற்றுக்கொண்டாள்.

மனத்தில் செல்வியைப் பற்றிய நினைவு வரிந்தது. “ஏன் ஓவர் டோஸ் எடுத்து தற்கொலை செய்ய முடிவு செய்தாள்?” மஞ்சுளா தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். செல்வி ஒரு பிரபல நர்த்தகி. லண்டனில் மத்திய தரத் தமிழர்கள் தங்கள் பணத்தின் மதிப்பைக் காட்டத் தங்கள் குழந்தைகளை பரதநாட்டியம் கற்பிக்கின்றார்கள்.

பரத முனிவரையோ பரத நாட்டியத்தையோ ஆத்மீக ரீதியாகப் புரிந்துகொள்ளாத தமிழ்க் குழந்தைகள் தங்கள் தாய், தகப்பனின் ஆசையைப் பூர்த்தி செய்ய ஆடல் கற்கிறார்கள். அரங்கேற்றம் நடத்துகிறார்கள். செல்வியின் நடனம் இந்த ரகத்தில் இல்லை. நர்த்தகியாகவே பிறந்தவள் போல் அவள் நடையில் ஒரு தாளம். நளினமான பாவங்களில் ஒரு லயம். நவரசம் ததும்ப பாவங்களைக் கையாளும்போது ஒவ்வொரு ரசபாவமும் பார்வையாளனைச் சுண்டியெடுக்கும் ஒரு ஆழம். செல்வியின் நடனங்கள் மஞ்சுளாவைக் கவர்ந்தவை.

எப்போதாவது இருந்துவிட்டு நடனங்களுக்கு அழைப்பு வந்தால், மஞ்சுளா ஏனோதானோ என்று போவாள். செல்வியின் நடன அரங்கேற்றத்துக்கும் அப்படித்தான் போனாள்.

முதல் நடனமே மஞ்சுளாவைத் திகைக்கப்பண்ணியது. நடராஜன் வணக்கத்துடன் அவள் கடவுளுக்குத்; தலைகுனிந்த தோற்றம் மஞ்சுளாவை ஆகர்சித்துவிட்டது. செல்விக்கு அப்போது பதினைந்து வயது. லண்டனில் கடந்த எட்டு வருடங்களாக வாழ்கிறாள். இன்னும் அழகான தமிழில் பேசுகிறாள். எல்லோரையும் போல் மஞ்சுளாவும் செல்வியை வாழ்த்தினாள்.

செல்வியின் கண்கள் நன்றியைச் சொல்ல பவள இதழ்கள் மகிழ்ச்சியை உதிர்த்தன. மஞ்சுளாவுக்குத் தன் குழந்தைகளில் ஒருத்தி என்றாலும், இப்படி ஒரு பரத நர்த்தகியாக வரவேண்டும் என்ற ஆசை அப்போது வந்தது. ஆனால், தேவிகாவுக்கு நடனங்களில் அவ்வளவு அக்கறையில்லை. வீணை பயில்கிறாள். சின்ன மகள் கார்த்திகா பாடசாலையில் “ஜிம்காஸ்ட்டிக்”கில் மிகவும் பிரபலமாக இருக்கிறாள்.

மழை தூறத் தொடங்கிவிட்டது. அவசரமாக வீட்டுக்குப் போனாள். கணவர் வேலைக்குப் போய்விட்டார். குழந்தைகள் பாடசாலைக்குப் போய்விட்டார்கள். வீடு அமைதியாகக் கிடந்தது.

கைகள் வீட்டு வேலையைச் செய்ய மனம் டொக்டர் சொன்ன விடயத்தை அசைபோட்டது. தேவிகா, கார்த்திகாவுக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்கலாம் என்று டொக்டர் சொன்னாரே. உண்மையாக இருந்தால் என்ன நடக்கும்?

தில்லையம்பலம் தன் யாத்திரையை ரத்துச் செய்வாரா? தேவிகா பெரியவளாகப் போகிறாள் என்பதையே பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பிரயாண விடயங்களைப் பார்ப்பவர்தான் இப்படி ஒரு திடீர் மாற்றத்தை எப்படி எடுத்துக்கொள்வார்? தன் யாத்திரையைக் குழப்ப உண்டாகியிருக்கும் சிக்கல் என எடுப்பாரா?

இது என்ன சிக்கல்? குடும்பமாயிருந்தால் குழந்தை வரும்தானே? எனக்கு மட்டும் ஏன் எல்லாப் பொறுப்பும் யோசனையும்? அவருக்கும்தானே பொறுப்பு?

கைகள் சட்டிபானையைத் தேய்த்தன. மனம் தன் மனக்கதவுகளைத் தட்டி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தது. இருபத்தைந்து வயதில் திருமணம் செய்து இதுவரைக்கும் கணவருக்கும் குழந்தைகளுக்குமாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். செல்வி மாதிரி மஞ்சுளா எதிலும் பிரபலமில்லை. கத்தரிக்காய்க் குழம்பும், புட்டும், பொரியலும் வைத்துக்கொடுப்பதில் பூரிப்படைந்தவள்.

தேவிகா வீணையில் பூபாளம் வாசிக்கும் போது மனம் புல்லரிக்கிறது. தேவிகாவின் பிஞ்சு விரல்களில் கான தேவதை கண்ணாமூச்சி விளையாடுவது போலிருந்தது. தேவிகாவின் கண்ணிமைகள் தாழ்ந்து முகம் பதிந்து வீணையில் கவனம் செலுத்துவதைப் பார்த்தால் சாட்சாத் சரஸ்வதிதான் தன் வீட்டுப் படியேறி வந்தது போலிருந்தது.

கார்த்திகாப் பெண் பதினொரு வயதில் மதமதவென்று வளர்ந்து போயிருக்கிறாள். அவள் செய்யும் தேகப் பயிற்சிகளெல்லாம் இதற்குக் காரணமாக இருக்கலாமோ? வாழ்க்கை யாத்திரையில் கணவர், குழந்தைகளென்று சுகமான பிரயாணம்.

டெலிபோன் அடித்தது.

நினைவில் ஆழ்ந்து போயிருந்தவளுக்கு திடீரென வந்த டெலிபோன் திடுக்கிடப்பண்ணியது.

காலை பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. லண்டனுக்கு வெளியிலுள்ள மஞ்சுளாவின் மைத்துனி அகிலாவுக்கு உடம்பு சுகமில்லை. அவள் சிலவேளை போன் பண்ணலாம்.

யோசித்துக்கொண்டு டெலிபோன் எடுத்தாள்.

“மஞ்சுளா”

“என்ன மிஸஸ் கதிரேசனா” மஞ்சுளாh குரலில் மரியாதையை வரவழைத்துக்கொண்டாள். மிஸஸ் கதிரேசன் மஞ்சுளா குடும்பத்தின் நீண்ட நாளைய சிநேகிதி. மஞ்சுளாவை விடக் கொஞ்சம் வயது கூடியவளென்பதால் எப்போதும் மிஸஸ் கதிரேசன் என்றே மஞ்சுளா அழைப்பாள்.

திருமதி கதிரேசன் அதிகம் பேசி அலட்டிக்கொள்ளாத பெண்மணி. மற்றவர்களைப் பற்றி அரட்டையடிப்பதை விரும்பாத பெண்மணி. ஒரு மாதத்துக்கென்றாலும், ஒரு தரம் மஞ்சுளா குடும்பத்தை வந்து பார்ப்பாள்.

திருவாளர் கதிரேசனும் மஞ்சுளாவின் கணவர் தில்லையம்பலமும் ஒரு காலத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள்.

“மஞ்சுளா….” திருமதி கதிரேசனின் குரலில் சோகம். குரல் கரகரத்தது.

“மற்றவர்கள் சொல்லி நீங்கள் கேள்விப்படக்கூடாது….” திருமதி கதிரேசன் அழத் தொடங்கிவிட்டாள்.

“என்ன விடயம்….” மஞ்சுளா பரபரப்புடன் கேட்டாள். கதிரேசன் குடும்பத்தில் ஒரே ஒரு பையன், மிகவும் சாதுவானவன், அதிகம் ஒருத்தருடனும் பழகமாட்டான். தினேஷ் என்று பெயர். எப்போதும் தானும் தன்பாடுமாயிருப்பான். “இவன் மற்றப் பிள்ளைகளைப் போல கலகலப்பாக இருக்கமாட்டானா” திருமதி கதிரேசன் எப்போதாவது இருந்துவிட்டுச் சொல்வாள்.

மகனுக்கு ஏதும் சுகமில்லையா?

“தினேஷ்…”

“தினேஷ_க்கு என்ன?”

“….வீட்டை விட்டுப் போய்விட்டான். ”

“ஆண் பிள்ளைதானே…. இருபத்தி மூன்று வயதாகிறது. போனால் என்ன….. எப்போதாவது போகத்தானே போகிறான். …நீங்கள்தானே அவன் ஏன் மற்றப் பிள்ளையளைப்போல இல்லை என்று சொன்னியள்” மஞ்சுளா ஆறுதல் சொன்னாள்.

“………” திருமதி கதிரேசன் அழுவது கேட்டது.

“அழாதயுங்கோ…|

“அழாம என்ன செய்ய? அவன் போனதால் எனக்கெல்லோ அடியும் உதையும்”

அடியும் உதையுமா? திருமதி கதிரேசனுக்கு இப்போது ஐம்பத்தைந்து வயதுக்கு மேலிருக்கும். அம்மாவுக்கு அடி வாங்கிக் கொடுக்குமளவுக்கு மகன் என்ன செய்தான்?”

“தினேஷ்…..தினேஷ் தன்னுடைய சினேகிதனோhட சீவிக்கிறதுக்காகப் போய்விட்டாhன்”

“……” மஞ்ளாh இப்போது மௌனமானாள். தினேஷ் அவனுடைய ‘சினேகிதனுடன்’; போய்விட்டான் என்று சொன்னபோது திருமதி கதிரேசனின் குரலில் தெரிந்த சோகம் மஞ்சுளாவைத் தவிக்கப்பண்ணியது.

“ஏன் இந்தக் காலத்துப் பிள்ளையள் மற்றவர்கள் இப்படி எல்லாம் நடக்கினம்”

“பிளிஸ் அழவேண்டாம்…. நேரமிருந்தா வீட்ட ஒருக்கா வரப் பார்க்கிறன்”

மஞ்சுளா போனை வைத்தாள்.

டெலிவிஷனைப் போட்டாள். வீட்டு வேகைளை முடித்துவிட்டு மத்தியானச் செய்தி கேட்பது அவள் வழக்கம். அதன்பின் கார்த்திகா வந்து சேரப் பின்னேரம் நான்கு மணியாகும். தேவிகா வீணை ரியுஷன் முடிய வீட்டுக்கு வர ஐந்து மணியாகும்.

டெலிவிஷனில் மனம் ஓடவில்லை. நேற்றுப் பின்னேரமிருந்து அவள் மனம் சரியில்லை. கணவர்தான் மூன்று மாதப் பிரயாணம், தலயாத்திரை செய்வதாகச் சொன்னதைச் சீரணிக்க முடியாமல் நித்திரையில்லாமல் புரண்டாள். காலையில் டொக்டர் அவளின் மாதவிடாய் விடயமாகச் சொன்ன விடயத்தைப் பற்றி யோசிக்கவே இன்னும் சரியாக நேரம் கிடைக்கவில்லை.

மனம் என்னவோ செய்தது.

அன்று பின்னேரம் கணவர் வந்தபோது இவள் மனம் எங்கேயோ இருந்தது. அவருக்குப் பிடித்த மாதிரி ஆட்டுக்கறியும் வைத்து, உருளைக்கிழங்கு பிரட்டலும் வைத்தாள். தேவிகா மரக்கறி சாப்பிடுபவள். அவளுக்கு கத்தரிக்காய் குழம்பும், பப்படமும் செய்தாள். கார்த்திகாவுக்கு பாயாசம் பிடிக்கும். இயந்திரமாக எல்லாவற்றையும் செய்து முடித்தாள்.

தில்லையம்பலம் வேலையால் வந்து கொஞ்ச நேரத்துக்கு யாரிலாவது பாய்ந்து பேசுவார். லண்டன் தெருக்களில் ஊர்ந்து செல்லும் கார்களைப் பற்றித் திட்டித் தீர்த்துக்கொள்வார். வேலையில் தன்னை நடத்தும் விதம் பற்றித் திட்டிவிட்டு இனவாதத்தைப் பற்றி பிரசங்கம் செய்வார். அல்லது ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி, அதாவது உலகத்தில் அதிகரிக்கும் சனத்தொகை பற்றி, அல்லது லண்டனில் அதிகரிக்கும் போதை மருந்தெடுப்பவர்களைப்பற்றி அல்லது தங்களுக்கு சமஉரிமை கேட்கும் பெண்களைப் பற்றித் தாறுமாறாகத் திட்டிக்கொள்வார்.

~பாவம் களைத்துப் போய் வந்திருக்கிறார்| என்று மஞ்சுளா தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள்.

இன்னும் அதேமாதிரித்தான். சிகாக்கோ நகரில் தனது மூன்று வயதுத் தம்பியைச் சுட்டுக்கொலை செய்த ஐந்து வயதுப் பையனைப்பற்றி திட்டிக்கொண்டார். குழந்தைகளை சரியாக வளர்க்கத் தெரியாத தாய்மாரைச் சுட்டுத் தள்ள வேண்டும் என சூடாகப் பேசினார்.

தேவிகா தகப்பன் பிரசங்கம் செய்வதைப் பொருட்படுத்தாமல் மேலே போய்விட்டாள். கொஞ்ச நேரம் வீணைப் பயிற்சி செய்தாள். மஞ்சுளா பின்னேரம் பூசை செய்யும் போது தேவிகாவின் வீணை ஓசை மனதுக்கு நன்றாக இருக்கும்.

கார்த்திகா ~கார்லி மேனோவின்| என்ற பாடகியின் றெக்கோர்ட்டைப் போட்டுக்கொண்டு உடம்பை நெறித்துக்கொண்டிருந்தாள்.

மஞ்சுளா வழக்கம்போற் தன் குசினி வேலையைத் தொடங்கினாள். வீணையொலி கேட்டுக்கொண்டு கைகள் வேலையைக் கவனித்தன. அவரிடம் விடயத்தை இரவுக்குள் சொல்லலாமா?

அன்றிரவு மஞ்சுளா தான் ‘கர்ப்பமாயிருக்கும’; விடயத்தை அவரிடம் சொன்னாள்.

“என்ன சொன்னாய்?” தில்லையம்பலம் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்.

மஞ்சுளாவுக்கும் தில்லையம்பலத்துக்கும் பத்துவருட வித்தியாசம். அவருக்கு முன்தலைமயிர் விழுந்து மொட்டை தெரியத் தொடங்கிவிட்டது.

மஞ்சுளா அவசரமில்லாமல் எழும்பியுட்கார்ந்தாள். இரண்டு கிழமைகளாக அவரிடம் சொல்லாமல் வைத்திருந்த விடயத்தைச் சொன்னதும் அவர் பேயடித்தாற்போல் திடுக்கிட்டார். கட்டிலறையில் மங்கிய வெளிச்சத்தில் மஞ்சுளா அவரையுற்றுப் பார்த்தாள்.

டொக்டரிடம் சலம் பரிசோதித்துப் பார்த்ததும், பரிசோதனையின் பின் மஞ்சுளா தாயாகப்போகிறாள் என்று சொன்னதும் மிக மிக விரைவாக நடந்தது போலிருக்கின்றது. அவளாலேயே அந்த விடயத்தை நம்பமுடியாதிருந்தது. ஒரு வருடம் மாதவிடாய் வராமலிருந்த போது ஒரேயடியாகத் தீட்டு நிற்கப்போகிறது என்றுதானே நினைத்தாள்.

“சில பெண்களுக்கு சில வேளை ஒரு வருடம் மாதவிடாய் வராமலிருந்த பின்னும் மாதவிடாய் வரும் என்று டொக்டர் சொன்னபோது ஊமைபோல கேட்டுக்கொண்டிருந்தாள்.

உடம்பில் ஏதோ வித்தியாசம் போல் தெரிகின்றது என்று யோசிக்காமலிருந்தால் டொக்டரிடம் போயிருக்கமாட்டாளே. கடைசி மகள் கார்த்திகாவுக்கு பதினொரு வயதாகிறது. தனக்கு இன்னொரு பிள்ளையா?

“எத்தனை மாதக் குழந்தையாயிருக்கும் டொக்டர்?” அவள் உயிரற்ற குரலில் டாக்டரிடம் கேட்டாள்.

“சொல்ல முடியாது. ஸ்கான் பண்ணிப் பார்க்க வேண்டும். அப்போயின்ட்மென்ட் ஒன்று ஒழுங்கு செய்கிறன்” டொக்டர் சொல்லி அடுத்த கிழமையே ஸ்கான் நடந்தது.

அதுவரைக்கும் அந்த விடயம் பற்றி மஞ்சுளா தன் கணவரிடம் மூச்சுவிடவில்லை. தனக்கே நம்ப முடியாத நிகழ்ச்சியை டொக்டர் மூலம் நிச்சயப்படுத்திக் கொள்ளும்வரை அவள் துடித்த துடிப்பு அவளுக்குத்தான் தெரியும்.

“என்ன புதினமான கதை கதைக்கிறாய்?” தில்லையம்பலம் மஞ்சுளாவை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டு கேட்டார். அவளால் அந்தப் பார்வையைத் தாங்க முடியவில்லை.

அவருக்குத் தெரியாமல் இவள் ஏதோ ஒரு ‘பிழையைச’; செய்துவிட்டாள் என்பது போலிருந்தது.

அவர் பார்வையைத் தாங்காமல் இருண்ட வெளியுலகத்தைப் பார்த்தாள். லண்டன் தெருக்களின் லைட்டுக்களின் கண்சிமிட்டலோடு போட்டி போட்டுக்கொண்டு பரந்த வானில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டின.

வெளியில் சரியான அமைதி.

தில்லையம்பலத்துக்கு நீண்ட நேரம் ஒன்றும் சொல்லத் தெரியவில்லைப்போலும். தர்மசங்கடத்துடன் பெருமூச்சு விடுவது கேட்டது.

என்ன யோசிக்கிறார்? இது என்ன பிரச்சினை என்றா யோசிக்கிறாய்? மாலதிக்கு குழந்தை இல்லை. ~மலடி| என்ற பெயருடன் துயரப்படுகிறாள். செல்வி ஏதோ பிரச்சினையில் நித்திரைக்குளிசை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடக்கிறாள். மகன் ~ஹோமோ ஸெக்ஸ_லவாக| வளர்ந்துவிட்டதாக மிஸஸ் கதிரேசன் அடிவாங்கித் துயர்படுகிறாள்.

மஞ்சுளாவுக்கு நாற்பது வயதில் குழந்தை வயிற்றில் வந்துவிட்டது பிரச்சினைதானா?

“என்ன செய்யப்போகிறாய்?” அவர் கேட்டார்.

மஞ்சுளா அவரையேறிட்டுப் பார்த்தாள். மங்கிய வெளிச்சத்தில் அவர் அன்னியனாகத் தெரிந்தார். ~பதினைந்து வருடம் இந்த மனிதனுடன் வாழ்ந்துவிட்டேன். ஆனால், யார் இந்த மனிதன் என்று தெரியாதே’அவள் சட்டென்று யோசித்தாள்

“என்ன பைத்தியம் போலப் பார்க்கிறாய்?” தில்லையம்பலம் பாய்ந்து விழுந்தார்.

மஞ்சுளாவை இப்படிக் கடிந்துகொள்ளத் தக்கதாக அவள் என்ன செய்தாள்? இவர் என்ன ~செய்ய| வேண்டும் என எதிர்பார்க்கிறார்?

“நான் யாத்திரைக்கு ஆயத்தம் செய்துபோட்டன்…” அவர் வார்த்தைகளைத் தொடராமல் தர்மசங்கடப்பட்டார்.

கடையில் ஏதும் திருப்தியில்லாத சாமான் வாங்கி இருந்தால் சரியில்லை என்று திருப்பிக்கொடுக்கலாம். ஆனால், கர்ப்பத்தில் வளரும் குழந்தையல்லவா இது? மனித வாழ்க்கையின் தொடர் சங்கிலியல்லவா குடும்பமும், குழந்தைகளும்?

“யாருக்கும் சொன்னாயா?”

“……….சொல்லத் தேவையில்லை. இப்பவே வயிற்றைக் குமட்டிக்கொண்டு வருகின்றது. வாந்தி வரத் தொடங்கியதும் தேவிகா கேட்கத்தான் போகிறாள்”

“பிரைவேட்டாகப் போகத்தான் வேணும்” தில்லையம்பலத்தின் குரலில் ஏதோ ஒரு பிடிவாதம்.

“என்ன பிரைவேட்?” மஞ்சுளா குழம்பினாள்.

“அபோஷன்…அபோஷன் பிரைவேட்டாய்த்தான் செய்ய வேண்டும். கொஞ்சம் காசு போகும்தான். ஆனாலும் கெதியில் செய்யலாம். நான் யாத்திரைக்குப் போக முதல் விஷயத்தை முடிச்சு விடலாம்” தில்லையம்பலம் குரலில் உறுதியான முடிவு தொனித்தது.

மஞ்சுளா சிலையாக நின்றாள்.

செல்வியைப் பார்க்கப் போகவேண்டும் என்று எப்போதோ யோசித்துக்கொண்டிருந்தாள். இன்றுதான் முடிந்தது. செல்வி ஹொஸ்பிட்டலால் வந்திருந்தாள். இருபத்தி எட்டு வயதான பெண். ஏதோ ஐம்பது வயதுப் பெண்போல சோர்ந்துபோய்த் தெரிந்தாள்.

செல்வியின் கணவர் வீட்டில் இல்லை. மாமியார் வெளியில் போவதாகச் சொல்லிவிட்டுப் போனாள்.

“ஹொஸ்பிட்டலிலிருந்ததாகக் கேள்விப்பட்டன்”

மஞ்சுளா ஆரேஞ்சாறை உறிஞ்சிக்கொண்டாள்.

செல்வி மஞ்சுளாவை நிமிர்ந்து பார்க்கவில்லை.

செல்விக்கு மஞ்சுளாவில் ஒரு மரியாதை. தேவிகாவுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கச் சொல்லிக் கூட்டிக்கொண்டு வந்த அன்றே செல்விக்கு மஞ்சுளாவைப் பிடித்துக்கொண்டது. அவர்கள் இருவரும்,ஏதோ ஒருவகையில் சுற்றிவளைத்த சொந்தக்காரர் என்ற முறையில் செல்வியிடம் தேவிகாவை அழைத்துக்கொண்டு போனாள்.ஆனால் தேவிகா வீணையை நாடிவிட்டாள். ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரையில் இரு பெண்களும் சினேகிதமாக இருக்கின்றார்கள்.

மரியாதை கலந்த சினேகிதம். செல்வி ஒரு அசாதாரணமான நர்த்தகி என்பதில் மஞ்சுளாவுக்கு மரியாதை. லண்டனில் உள்ள பெரும்பாலான மத்தியதர மக்கள் போலில்லாமல் மஞ்சுளா பரதக் கலையை கலாரசனையுடன் ரசிக்கிறாள் என்பதில் செல்விக்கு ஒரு மரியாதை.

இப்போது,செல்வியின் கண்களில் சோகம்.

“நான் ஏன் ஓவர் டோஸ் எடுத்தேன் என்று நீங்கள் கேட்கவில்லையே?” செல்வி மஞ்சுளாவைப் பார்க்காமல் கேட்டாள்.

“…………….” செல்வியை நிமிர்ந்து பார்க்க மஞ்சுளாவிளால் முடியவில்லை.

“என்னைப் பார்க்க வருபவர்கள் எல்லாம் இந்தக் கேள்வியை மறைமுகமாககக் கேட்டுவிட்டார்கள். நீங்கள் ஏன் கேட்கக்கூடாது?”

“…………..” மஞ்சுளா தான் குடித்த தோடம்பழச்சாற்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உங்களுக்குத் தேவிகாவைப் பெற்றபோது எத்தனை வயது?” செல்வியின் குரல் கரகரத்தது.

“……….இருபத்தியேழு வயது” மஞ்சுளா குழப்பத்துடன் பதிலளித்தாள்.

“உம்……. எனக்கு இப்போது இருபத்தியொன்பது வயதாகிறது. முப்பத்தைந்து வயது வரை நான் நடனம் செய்து நல்லா உழைக்கலாம் என்று இவர் சொன்னார்”

மஞ்சுளாவுக்கு செல்வி என்ன சொல்கிறாள் என்று விளங்கியது. அதேநேரம் அடிமனதில் ஒரு மூலையில் அதை விளங்கிக்கொள்ளக் கூடாது என்ற தீவிரமும் படர்ந்தது.

‘அவருக்குத் தெரியாமல் மறைத்து வைக்கத்தான் பார்த்தேன். சத்தி எடுக்கத் தொடங்கத்தான் அவருக்குத் தெரிந்தது. உடனே அபோர்ஷனுக்குத் தயார் செய்துவிட்டார். இல்லையென்றால் நடன விழாவுக்கு வாங்கிய ஆயிரம் பவுணையும் திருப்பிக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்” செல்வி விம்மியழுதாள்.

“குடும்பம் குழந்தைகள் எல்லாம் பண்டமாற்றுச் செயல்களா?” செல்வி கேள்வி கேட்டாள்.

மஞ்சுளாவுக்கு இப்படியான சிக்கலான கேள்விகளுக்கு மறுமொழி சொல்லத் தெரியாது.

மீண்டும் மௌனம். ஆண்கள் நினைக்கும், நடக்கும் செயல்முறைகளுக்குச் செல்விபோற் பெண்கள் பலியாகின்றார்களா?

“தில்லையம்பலம் மாமா இந்தியக் கோவில்களுக்குத் தல யாத்திரை போகிறார் என்று கேள்விப்பட்டன்” செல்வி கட்டிலிலிருந்து எழுந்திருக்க முயன்றாள்.

மிகவும் ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தக அலுமாரி படுக்கையறையின் மூலையில் இருந்தது. மஞ்சுளா புத்தகங்களில் பார்வையை ஓட்டினாள்.

“புண்ணிய யாத்திரை…மனதைப் புனிதமாக்கும் ஒரு யாத்திரையா….வாழ்க்கையைத் தூய்மையாக்கும் யாத்திரையா?”

செல்வி என்ன கேள்விகளாகவே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

“நீங்கள் ஏன் மாமாவுடன் போகக்கூடாது”

தேவிகாவும் இதைத்தானே கேட்டாள்.

“குழந்தைகள்….” இதைச் சொல்லும்போது மஞ்சுளாவின் அடிவயிற்றில் ஏதோ ஊர்வது போலிருந்தது”

குழந்தைகள்!

வயிற்றிலிருக்கும் குழந்தையை அழிக்கச்சொன்னாரே தில்லையம்பலம். வயிற்றிருக்கும் ~குழந்தை| தில்லையம்பலத்தின் அகராதியில் குழந்தையில்லையா?

“எனது மாமிக்கு என்னிடம் கோபம்” செல்விதான் பேசிக்கொண்டிருக்கிறாள்.

“குழந்தை பிறந்தால் நடனமாடி வரும் – நடன ரியூஷன் கொடுத்துவரும் வருமானம் போய்விடுமாம்” செல்வி எழுந்துவந்து கதிரையில் உட்கார்ந்தாள். கண்கள் நீரால் நிரம்பிவிட்டன. குழந்தைக்குத் தவிக்கிறாளா?

“மாலதி பாவம் பிடிக்காத விரதமெல்லாம் பிடிக்கிறாள் ஒரு குழந்தை கேட்டு” செல்வி பெருமூச்சுவிட்டாள். ~இவளையும் அபோர்ஷன் செய்யச் சொல்லி இவள் கணவன் சொல்லியிருப்பானோ?|

“இவன் பிறக்காமலிருந்திருக்கலாமே” மிஸஸ் கதிரேஷன் இப்படித்தான் கதறினாள். ஒரே ஒரு மகன் சம்பிரதாயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சாஸ்திர கோத்திரங்களை உதாசீனம் செய்துவிட்டு, ஹோமோ செக்ஸ_வலாகப் போய்விட்டானாம். இப்படி ஒரு பிள்ளையை ஏன் பெற்றாய் என்று மிஸ்டர் கதிரேசன் மிஸஸ் கதிரேசனுக்கு உதைபோடுகிறார். “இந்த வயிற்றிலா அவனைச் சுமந்தாய்” என்று உதைக்கிறாராம். மஞ்சுளாவின் கண்களில் நீர் துளித்தது.

“எனக்கு இப்போது ஒரு குழந்தை வேணும். முப்பத்தைந்து வயது வரைக்கும் பொறுத்திருக்க முடியாது என்றேன். அதுதான் இருவருக்கும் சண்டை….” செல்வி விம்மி விம்மியழுதாள். சொல்ல முடியாத எத்தனையோ விடயங்கள் விம்மலாக வெடித்தன. செல்வியின் விம்மல் இருதயத்தைப் பிளத்தது.

சுயமை இழந்துவிட்ட கலை, சுதந்திரமிழந்துவிட்ட காற்று, திசை தவறிவிட்ட நதி, ஓட்டை விழுந்த பிரணவம், இங்கு ஒரு பெண். இவைதான் வாழ்வா? இதுதான் லண்டனா?

“ஊரோடு இருந்திருக்கலாம்” செல்வி முணுமுணுத்தாள்.

“சிங்கள இராணுவம் ஊரையழித்தது. இந்திய இராணுவம் நகரங்களையழித்தது. இங்கு வந்தால் இந்த குடும்ப அமைப்புக்கள் உணர்வுகளையும் மனச்சாட்சியையும் அணுவணுவாகச் சிதைக்கிறதே” செல்வி முகத்தை மூடிக்கொண்டாள்.

“இதே குடும்ப அமைப்பும், அடிமைத்தனமும் ஊரிலிருக்கிறது. நாங்கள்தான் உணர மறந்துவிட்டோம்” மஞ்சுளாh ஏதோ புதிதாக உணர்ந்துகொண்ட உண்மையைச் சொல்கிறாள்.

“நான்கு மாதக்குழந்தையின் பிஞ்சுக்கரங்கள் என் கற்பப்பையில் ஊன்றி நின்றதை என்றென்று மறப்பேன்” செல்வியின் கதறல் மஞ்சுளாவின் இருதயத்தைப் பிளக்கிறது.

மஞ்சுளாவின் நெஞ்சில் தேள் கொட்டித் தொலைக்கிறது. இப்போது மஞ்சுளாவுக்கு,செல்வி ஏன் ஓவர் டோஸ் எடுத்தாள் என்று புரிந்தது.

“லண்டனில் வாழும்வரை உழைக்கவேண்டும். இந்த இனவாதிகள் எப்போது போகச் சொல்கிறார்களோ தெரியாது, அபார்ஷன் செய்துவிடு என்றார்”செல்வியின் கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிகிறது.

தில்லையம்பலங்கள் எத்தனை உருவத்தில் இருக்கிறார்கள்? புனித யாத்திரைக்குத் தடையாக வந்த குழந்தையை அழிக்கச்சொல்லிவிட்டார்.

“இப்படி ஒரு ஜென்மமாயிருப்பதைவிட இறந்துவிடுவது நல்லது என்று நினைத்தேன்”

கதை சொல்லிய களைப்பில் செல்வி சோர்ந்துவிட்டாள். கண்களில் வெள்ளம், கழுத்தில் ஓடி, போட்டிருந்த ட்ஹெஸிங்கவுணை நனைத்தது. தாய்மையின் துடிப்பு அவள் சொற்களில் தெரிந்தன. முலைப்பால் வழிந்து நனைய வேண்டிய ட்றெஸிங்கவுண் நீர்வழிந்து நனைந்தது.

ஆடுகள் மாடுகள் நன்றாக உழைக்காவிட்டால் எசமானுக்குக் கோபம் வரும். இங்கு மனைவி கணவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாவிட்டால் எத்தனை கொடுமைகளை எதிர்பார்க்கவேண்டியிருக்கின்றது.

ஆடுகளும், மாடுகளும் அபோர்ஷன் செய்வதில்லையே! “தேவிகா எப்படி?” செல்வி கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“இன்றோ நாளையோ பெரிய பிள்ளையாகப்போகிறாள். வயிற்றுக்குத்து நாரி நோh என்று கஷ்டப்படுகிறாள்”

“கல்யாணச் சந்தையில் இன்னுமொரு மாடு” செல்வி வேதனையுடன் சிரித்தாள்.

“கல்யாணங்கள் எங்கள் கலாச்சாரம் செல்வி” மஞ்சுளா மிகவும் கலாச்சாரப் பிரியை.

செல்வி மஞ்சுளாவை ஏற இறங்கப் பார்த்தாள்.

“ஆடு, மாடு காய்கறிகளைப் பண்டமாற்றம் செய்வது போல் பெண்களையும் பண்டமாற்றம் செய்துகொள்வது கலாச்சாரமா?”

மஞ்சுளா ~ஆமாம்| என்று தலையாட்டினாள்.

“இப்படி ஒரு கலாச்சாரத்துக்கு தலைகுனியத்தான் வேணுமா?”

மஞ்சுளா பதில் சொல்லவில்லை. செல்வி குழம்பிப் போயிருக்கிறாள். இந்தக் கலாச்சாரத்தில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பிருக்கிறது, கௌரவமிருக்கிறது, சமய ஆசீர்வாதமிருக்கிறது. இப்படிச் சொல்ல நினைத்தாள். ஏனோ சொல்லவில்லை.

வாழ்க்கையின் பரிணாமத்தை எத்தனை கோலத்திலிருந்து பார்த்தாலும், ஆண்களின் கோட்பாட்டுக்குள் கட்டுப்பாடாவிட்டால் பெண்களின் வாழ்க்கை நரகமாகிவிடும் என்பதைச் செல்வி உணர்கிறாளா?

“நான் நல்ல டான்ஸ்காரி என்று என்னைக் கல்யாணம் செய்தார் என் கணவர் என்றுதான் எதிர்பார்த்தேன்… நான் நல்ல உழைப்பாளி என்றுதான் கல்யாணம் செய்துகொண்டார் என்று உணர்ந்தபோது நெஞ்சை வலிக்கிறது”

“அதிகம் யோசிக்காதையுங்கோ” மஞ்சுளா எழுந்தாள். பின்னேரம் மூன்று மணியாகப் போகிறது. குழந்தைகள் வருவார்கள். அவர் இன்று கோவிலுக்குப் போய்விட்டு நீண்ட நேரம் கழித்துத்தான் வருவார்.

மஞ்சுளா தெருவுக்கு வந்தாள். பஸ்ஸ_க்குக் காத்திராமல் வீட்டுக்கு நடந்துபோக யோசித்தாள். பாடசாலை விடும் நேரமாததால் வீதி நிறையக் குழந்தைகள். எத்தனை விதமான குழந்தைகள்! இந்திய, பாகிஸ்தானிய ஆபிரிக்க, இங்கிலீஸ் குழந்தைகள். இவர்களில் எத்தனை பேர் செல்வி மாதிரி அழகிய – அபரிமிதமான ஆட்டக்கலையில் பிரசித்தம் பெற்றவர்கள்? எத்தனைபோர் செல்வியின் கணவர் மாதிரி ஒருத்தனைச் சந்தித்துக் கஷ்டப்படுவார்கள்?

நடந்தாள். இத்தனை நாளும் யோசிக்காத விடயங்களை யோசித்துக்கொண்டு நடந்தாள்.

மலடி என்று திட்டப்படும் மாலதியை நினைத்து மனம் சோகப்பட்டது.

மகனின் நடவடிக்கையால் அடிவாங்கும் திருமதி கதிரேசனுக்காக மனம் இரக்கப்பட்டது. திருமதி கதிரேசன் எத்தனை பண்பட்ட பெண். ஐம்பது வயதுக்கு மேலாகிறது. வாழ்க்கையில் அமைதியாயிருக்கவேண்டிய வயதில் இப்படி அடியும் உதையும் வாங்க வேண்டியிருக்கிறதே!

ரோட்டில் ஏதோ விபத்து போலும். பொலிஸ்காரர்கள், அம்புலன்ஸ்கள், பெரிய கூட்டம் எல்லாமல் நிறைந்திருந்தது.

மஞ்சுளாவின் மனதிலும் எத்தனையோ யோசனை. மாலதி, செல்வி, மிஸஸ் கதிரேசன் எல்லோரையும் யோசித்தாள். தீவிரமான போராட்டம்.

“என்ன பெரிய யோசனை?” திருமதி கதிரேசன் பஸ்ஸால் இறங்கி வந்துகொண்டிருந்தாள். எத்தனையோ அடியுதையான வாழ்க்கைக்குள்ளும் இன்னும் ~மனிதத்தை| இழந்துவிடாத கௌரவம்.

திருமதி கதிரேசன் மஞ்சுளாவை ஏறிவிட்டுப் பார்த்தாள். “நான் அண்டைக்குப் போன் பண்ணிக் குழப்பினதுக்கு என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ”

திருமதி கதிரேசன் பூமியைப் பார்த்துக்கொண்டு சொன்னாள்.

“எய்தவனிருக்க அம்மை நோகிற கதைதான்” மஞ்சுளா ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லிவைத்தாள்.

“தேவிகா, கார்த்திகாவை கவனமாக வளர்க்கப் பாருங்கோ” திருமதி கதிரேசன் பாசத்துடன் சொன்னாள்.

மஞ்சுளா பதில் பேசவில்லை.

“லண்டனில் பிள்ளையளை வளர்க்கிறது பெரிய கஷ்டம்… இந்தச் சூழ்நிலையில் மனதை அடக்கி வாழ்கிறது பெரிய விடயம். எத்தனையே விதமான கருத்துக்கள். இதிலெல்லாமிருந்து எங்களுக்குத் தேவையானதுகளை மட்டும் எடுத்துக்கொள்கிறது மிக மிகக் கஷ்டம்” கதிரேசன் தன் அனுபவத்தால் பட்ட துன்பங்களின் சாரம் குரலில் படச் சொன்னாள்.

“நேரமிருந்தால் வீட்ட வரப்பாருங்கோ….” மஞ்சுளா விடைபெற்றாள்.

“நேரமிருக்கும். ஆனா, இப்போதைக்கு எங்கேயும் போக மனமில்லை. கொஞ்ச நாளைக்கு அக்காவின்ர மகளோட கனடாவில் போய் நிற்கப்போகிறேன்” திருமதியின் குரல் உடைந்தது. கண்ணீரை மறைக்க முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

பொன்மேடை கட்டி, பூமாலை சோடித்து, புரோகிதர் மந்திரம் சொல்ல இவள் கட்டிக்கொண்ட தாலியின் கனம் கழுத்தை அழுத்துகிறதா? தலையைத் தாழ்த்திக்கொண்டாள். மஞ்சுளாவுக்கு மறைத்த திருமதி கதிரேசனின் கண்ணீPர் பூமித்தாயில் தெறித்து விழுந்தது.

கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன் என்று பூசித்த கணவனின் கையடி தாங்காமல் இந்த முதுமை ஒரு அடைக்கலம் தேடுகிறதா?

“மகன் இப்போது உங்களோடை கதைக்கவில்லையா?” இது ஓரு கேட்கக்கூடிய கேள்வியா எனத் தெரியாமல் கேட்டாள் மஞ்சுளா.

“அவன் என் மகன். ஒன்பது மாதம் சுமந்து, இருபத்திரெண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த மகன். எப்போதாவது இருந்து போன் பண்ணுவான்….. என்ரை அக்காவின் மகளைச் சிங்கள இராணுவம் சுட்டுப்போட்டுது. தங்கச்சியின்ரை மகளை இந்திய இராணுவம் அழித்துவிட்டது. என்ரை மகனை லண்டன் கலாச்சாரம் மாற்றிவிட்டது”

திருமதி கதிரேசன் வேதனையுடன் சிரித்தாள். ‘என்ன செய்யிறது வாழ்க்கை என்கிற யாத்திரையில் என்னெல்லாமோ வரும். யார் எல்லாமோ வருவார்கள். எப்படித்தான் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பது யதார்த்தமானதே”

மஞ்சுளாவுக்கு மிஸஸ் கதிரேசன் யாத்திரை என்று சொன்னதுமே அவளது கணவரைப்பற்றிய ஞாபகம் வந்தது.

“எனக்கென்றாலும் ஒரு கொஞ்சக்காலத்துக்கென்றாலும் தப்பிப் போக ஒரு இடமிருக்கு. இலங்கையிலிருக்கிற தமிழ்ப் பெண்களோடை பார்க்கேக்கை நான் அதிர்ஷ்டசாலி என்றுதான் நினைக்கிறேன்.

அதிர்ஷ்டசாலிகள்!

கணவரின் புனித யாத்திரைக்குப் பிள்ளையை அழித்துவிட்டுக் கௌரவமாக இருக்கும் அதிர்ஷ்டசாலிகள். கணவர்களின் பேராசைக்குக் கலையைக் காசாக்கிக் குழந்தையை அழித்துவிடும் அதிர்ஷ்டசாலிகள்!

“என்ன பேசாமலிருக்கிறீர்கள்?” கதிரேசன் நின்றாள்.

“பேசுவதற்கு என்ன இருக்கிறது?” மஞ்சுளா தர்மசங்கடத்துடன் நகர்ந்தாள்.

மிஸஸ் கதிரேசன் சந்தியிலிறங்கி நடந்துவிட்டாள்.

வீடு வெறுமையாகக்கடந்தது. தேவிகா தன் சினேகிதியின் வீட்டுக்குப் போய்விட்டு வருவாள் என்று இப்போதுதான் நினைவு வந்தது.

கார்த்திகா ஸ்போட்ஸ் கிளப்புக்கு இன்று போயிருப்பாள்.

வீடு வெறுமையாய் மஞ்சுளாவைப் பார்த்து வெறித்தது. குசினிக்குப் போனாள். பின்னேரம் சமைப்பதற்காக எடுத்துவைத்திருந்த கோழி மேசையில் தனியாக உட்காhந்திருந்தது. இந்தக் கோழியை லண்டனுக்கு வெளியில் உள்ள ஒரு விவசாயி கூண்டில் அடைத்து தீனி போட்டு வளர்த்திருக்கிறான். விற்கும் பருவம் வந்ததும் கழுத்தைத் திருகியிருப்பான்.

மஞ்சுளாவின் அடிவயிறு நொந்தது. இப்போது எத்தனை மாதம்? ஒரு வருடமாகத் தீட்டு வரவில்லை. அதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எத்தனை மாதமாயிருக்கும் என்று தெரியாது என்று டொக்டர் யோசித்தார்.

ஆனால், அவளுக்குத் தெரியுமே!

தில்லையம்பலம் அவளைத் தொடுவது மிக அருமை. அவரது தேவைக்கு எப்போதாவது இருந்து ‘ஏதோ’ நடக்கும்.

கடைசியாக அப்படி நடந்தது நான்கு மாதங்களுக்கு மேலிருக்குமா?

அப்படியென்றால் நான்கு மாதக் குழந்தையாயிருக்குமா?

பிள்ளை இனி வேண்டாம் என்று இப்போது துள்ளியடிப்பவர் இருட்டில் வந்து தடவாமல் விட்டிருக்கலாமே! மஞ்சுளாவுக்குக் கோபம் வருகிறது.

முப்பத்தைந்து வயது வரைக்கும் பிள்ளை பெறாமல் இருப்பது பிளைப்புக்கு நல்லது என்கிறார் செல்வியின் கணவர். தாற்பது வயதில் பிள்ளை பெறப்போகிறேன் என்கிறாயே என் புனித யாத்திரை என்னவாகும் என்கிறார் என கணவர்!

மஞ்சுளா குசினிக்குள் நடந்தாள்.

புனித யாத்திரை! உள்ளத் தூய்மையைத் தேடி, உயர் சிந்தனையைத் தேடி புனிய யாத்திரை செய்யப்போகிறாராம் தில்லையம்பலம்.

நான்கு மாதக் குழந்தைக்கு இப்போது சிறு கால், சிறு கைகள் விரித்து உதைக்கிறது. இந்த உயிரின் துடிப்பையடக்கிவிட்டு என்ன உயர் சிந்தனை தேடலாம்?

மஞ்சுளா கோழியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அழகான சின்னக்கோழி இன்னும் கொஞ்ச நேரத்தில் அடுப்பில் வெகப்பட்டு அவர் வயிற்றுக்குள் போகும். அடுத்த கிழமையிலிருந்து தான் மரக்கறி சாப்பிடப்போவதாகத் தில்லையம்பலம் சொன்னார். கோவில் தலங்கள் போக முதல் உடல் சுத்தி, மன சுத்தி செய்துகொள்ள வேண்டுமாம். உடல் சுத்தமும் மன சுத்தமும் ஆத்ம சுத்தத்தைக் கொடுக்குமா?

டெலிபோன் அடித்தது.

தேவிகாதான் பேசினாள். “அம்மா நான் கொஞ்சம் பிந்தி வரலாமா?”

“என்ன விடயம்?”

“என் சினேகிதியின் தமக்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. ஹொஸ்பிட்டலுக்குப் போய்ப் பார்கப்போகிறோம்”

மஞ்சுளா கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லவில்லை. ஏன் எல்லோரும் பிள்ளைகள் பற்றிப் பேசுகிறார்கள்?

“என்ன அம்மா பேசாமலிருக்கிறீர்கள்….அப்பாவும் லேட்டாகத்தானே வருவார்” தேவிகாவின் குரலில் கெஞ்சல்.

“சரி சரி கெதியாக வரப்பார்”

தேவிகாவும் தன் காலிற்தான் நிற்கப்போகிறேன் என்கிறாள். கார்த்திகாவுக்கும் விரைவில் தேவிகா மாதிரித்தான் நேரம் கழித்துவரப்போகிறாள்.

ஹோலுக்கு வந்தாள். மிகவும் துப்பரவாக வைத்திருக்கும் வீடு. அதைத் தவிர என்னுடையது என்று சொல்ல என்ன இருக்கிறது? வாழ்க்கைப் பயணத்தில் மஞ்சுளா என்ன சாதித்துவிட்டாள்?

பதினெட்டு வயதானதும் இந்தப் பெண்கள் இருவரும் யூனிவர்சிட்டி என்று போகின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் தங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்ளப்போகின்றார்கள். மிஸஸ் கார்த்திகேயனின் மகன் மாதிரி ஏதோ ஒரு “புது வழியைக்” கண்டுபிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மஞ்சுளா சோபாவில் அமர்ந்தாள். தனக்கு முன்னிருக்கும் எல்லாப் பொருட்களும் யதார்த்தமற்றவையாகத் தெரிந்தன. இவை வாழ்க்கையுடன் எந்த விதத்திலும் தொடர்பிருப்பவையாகத் தெரியவில்லை.

தில்லையம்பலத்தை முதலில் பார்த்தது ஞாபகம் வருகிறது. நான்கு பெண்களில் மூன்றாவது பெண் மஞ்சுளா. இரணடு தங்கைகளுக்கும் திருமணம் செய்து முடித்த கடனில் தகப்பனுக்கு இருதய நோய் வந்துவிட்டது.

“ஏன்தான் எல்லாரும் பெண்களாகப் பிறந்து தொலைத்துவிட்டீங்களோ” அம்மா மனம் நொந்துகொண்டாள். மஞ்சுளா கொழும்பில் வேலைசெய்து கொண்டிருந்தாள். தில்லையம்பலம் லண்டனிலிருப்பவர்.முப்பத்தைந்து வயதில் முன்தலை வழுக்கை விழத் தனக்கொரு பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தார்.

“லண்டனில் வேலை. சீதனம் ஒன்றும் பெரிதாகக் கேட்கல்ல” அம்மா சந்தோசத்துடன் சொன்னாள். அப்பாவின் துயர் தீர அம்மாவின் நச்சரிப்பிலிருந்து தப்ப மஞ்சுளா யாரைவாயது கல்யாணம் செய்வதாக இருந்தாள்.

நன்றாக வளர்ந்த உயரம் மஞ்சுளாவுக்கு. அடர்ந்த முடி. கொழும்பில் கோல்பேஸ் கடற்கரைக்குச் சினேகிதிகளுடன் போகும் போது இவள் எத்தனையோ பேரின் கவனத்தைக் கவர்ந்தாள்.

தில்லையம்பலம் பெண் பார்க்க வந்தபோது அம்மா மிகவும் சந்தேசப்பட்டாள்.

மஞ்சுளா மற்றவர்களின் சந்தோசத்துக்காக வாழப்பழகிக் கொண்டாள். தில்லையம்பலத்தின் மொட்டைத் தலையை முழுமனதுடன் வணங்கி எழுந்தாள்.

பத்து வயது வித்தியாசம். இவளின் இளமை தில்லையம்பலத்துக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியது. கணவரின் மனவோட்டத்தை அடையாளம் கண்டுகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை.

லண்டன் வாழ்க்கை இயந்திரமயமானது.

தேவிகா வயிற்றில் வரும்வரை ஏதோ பார்ட்ரைம் வேலை செய்தாள். அவர் பின்னேரம் வந்ததும் புட்டும் பொரியலும், இடியப்பமும் சம்பலும், இட்டலியும் சாம்பாரும், தோசையும் சட்னியும் சோறும் கறியும், வடையும் பாயாசமும் நிறைந்திருக்கும். வீடு மிக மிகச் சுத்தமாக இருக்கும். மஞ்சுளா திருமதி தில்லையம்பலமாகி – மஞ்சுளா என்ற சுயமையிழந்ததைத் திருமணத்தின் ~ஸ்ரேட்டஸ்| என்று நினைத்துக்கொண்டாள். அவளுக்கென்று தனிப்பட்ட சினேகிதம் ஒன்றுமில்லை. குக்கரும், சட்டி பானைகளும் அவள் கைபட்டுப் பளபளத்தன. பெண்மையின் சுயமை அவளின் குசினிக்குச் சொந்தமானதை மஞ்சுளாவால் உணர முடியவில்லை.

வாழ்க்கை கஷ்டமாகத் தெரியவில்லை. தேவிகா மிகவும் கஷ்டப்பட்டுப் பிறந்தாள். மஞ்சுளா மூன்று நாட்களாகத் துடித்துவிட்டாள். தில்லையம்பலத்தின் சொந்தக்காரப் பெண்தான் ஒரு கஷ்டமும் இல்லாமல் (?) பிள்ளை பெற்றுக்கொண்டதைப் புழுகிக்கொண்டிருந்தாள்.

இரண்டாவது குழந்தை கார்த்திகா. மிகவும் சுலபமாகப் பிறந்தாள். ஏழு மணிக்கு ஹொஸ்பிட்டலுக்குப் போனவள் ஒன்பது மணிக்கு கார்த்திகாவைப் பெற்றெடுத்தாள். அடுத்தநாள் வீட்டுக்கு வந்தாள். புpறிட்ஜில்; வைத்திருந்த மீனை எடுத்து கறி வைத்தாள். எப்படிச் சுகமாகப் பிறந்தாளோ அப்படியே சூடிகையாக வளர்கிறாள் கார்த்திகா. ஒரு ஆண் குழந்தை இல்லை என்ற துன்பத்தை கார்த்திகா நிவர்த்தி செய்கிறாள். மிக மிகத் துடிப்பானவள்.

மஞ்சுளா வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஏதோ வண்ணாத்திப் பூச்சி ஊர்வது போன்ற உணர்ச்சி. சின்னச்சின்னக் கையால் அம்மாவின் கர்ப்பப்பையின் சுவர்களில் சுரண்டி விளையாடுகிறாளாh? அவளா?

ஆண் குழந்தையாயிருக்குமா? அந்த நினைவு வந்ததுமே மஞ்சுளாவுக்கு இருதயத்தைப் பிழிவது போலிருந்தது. நாளைக்கோ மறுநாளைக்கோ டொக்டரிடம் போக வேண்டும். அபோர்ஷனுக்கு ஆயத்தம் செய்ய வேண்டும்.

மஞ்சுளாவின் கண்களில் நீர் வழிந்தது. அவரின் யாத்திரையைக் குழப்பக்கூடாது. அவருக்கு இரண்டு குழந்தைக்கு மேல் தேவையில்லையாம்.

வீடு இருண்டுவிட்டது. லைட் போடாமல் அழுதுகொண்டிருந்தாள்.

யாத்திரை!

மஞ்சுளாவின் யாத்திரை ஹாலுக்கும் குசினிக்குமாக கடந்த பதினைந்து வருடங்களாக நடக்கிறது. எத்தனை மைல்கள் நடந்திருப்பாள்? எத்தனை சட்டி பானையைத் தேய்த்திருப்பாள்? புனித தலங்களுக்குப் போய் புண்ணியத்தை தில்லையம்பலம் தேடுகிறார். அவருக்குச் செய்யும் பணிக்கு அவளுக்கும் புண்ணியம் கிடைக்கும்தானே?

“என்னம்மா வீடு இருண்டு கிடக்கிறது?” கார்த்திகா வந்து லைட் போட்டாள்.

மகள் பார்க்கக்கூடாது என்பதற்காக அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“அம்மா பசிக்குது”

“கொஞ்சம் பொறு கெதியாய்ச் சமைக்கிறன்” மஞ்சுளா அவசரப்பட்டாள்.

கார்திகா மேலே ஓடிவிட்டாள். ஸ்போட்சுக்குப் போய் வந்ததால் உடனே குளிக்க வேண்டும்.

“தேவிகா எங்கே”

கார்த்திகா மேலிருந்து சத்தம் போட்டாள்.

“யாரோ தன் சினேகிதியின் அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்காம். பார்க்கப் போயிருக்கிறாள்”

கார்த்திகா வழக்கம்போல்,’கார்லிமனோ’ பாட்டை அலறவிடுகிறாள்.

மஞ்சுளா எத்தனை சங்கீதத்தை ரசிக்கிறாள். மஞ்சுளாவின் பிரார்த்தனை, தில்லையம்பலத்தின் அதட்டல்கள் தேவிகாவின் தெய்வீக கானம், கார்த்திகாவின் ~பொப்| பாட்டுக்கள்!!!

மஞ்சுளா இயந்திரம் போல் சமைக்கிறாள். அவர் வந்துவிடுவார். அவசரத்தில் விரலை வெட்டிக்கொண்டாள்.

தேவிகா குதூகலத்துடன் ஓடிவந்தாள்.

“அம்மா மார்க்கிரட்டின் குழந்தை எத்தனை அழகானது தெரியுமா?”

மஞ்சுளா மறுமொழி சொல்லாமல் சமைத்துக்கொண்டிருந்தாள்.

யாத்திரை! மஞ்சுளாவின் வாழ்க்கை யாத்திரை உப்பும், புளியும், கத்தரிக்காயும் சுமக்கும் ஒரு வெறும் யாத்திரை.

“என்னம்மா யோசிக்கிறியள்?”

“யோசனை ஒண்டுமில்லை. கெதியாகச் சமைக்க வேணும்”

மஞ்சுளாவின் வாழ்க்கை மிக மிக ஒழுங்கானது. இன்று செல்வியைப் பார்க்கப்போனதால் கொஞ்சம் குழம்பிவிட்டது.

மிஸஸ் கார்த்திகேசனுடன் பேசிக்கொண்டிருந்ததால் கொஞ்சம் குழம்பிவிட்டது. மனித உணர்வுகளின் மெல்லிய நரம்புகளில் ஒரு நோ. சுகமான பிரயாணத்தில் காலில் முள் தைத்த உணர்வு.

கத்தரிக்காய்க் குழம்பும், இடியப்பமும் பிழிந்த கைகள சட்டென்று உணர்விழந்த தன்மை.

“பியூட்டிபுல் பேபி” தேவிகா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“சரி மேலோ போய் வீணைப் பயிற்சியைப் பார்”

அவர் வந்தார். மிகவும் சிடுசிடுப்பாயிருந்தார்.

“டிக்கட் புக் பண்ணப் போனன் சரிவரவில்லை.”

அவள் விளக்கம் ஒன்றும் கேட்கவில்லை. அவரிடம் விளக்கம் ஏதும் கேட்டு அவளுக்குப் பழக்கமில்லை.

“நாளைக்கு எப்படியும் டிக்கெட் புக்பண்ண வேணும்.”

அவள் அவருக்குச் சாப்பாட்டை எடுத்து மேசையில் வைத்தாள். அவர் இவளின் விளக்கத்தை எதிர்பார்ப்பதுமில்லை.

“ஏன் கறிக்கு உப்பில்லை” அவர் சீறி விழுந்தார்.

அவள் மறுமொழி சொல்லவில்லை.

“என்ன நான் பேசிக்கொண்டிருக்கிறன். நீர் முண்டம் போல் நிற்கிறீர்.”

அவர் சத்தம் போட்டார்.

முண்டம்! பெண்களுக்குக் கிடைக்கும் பட்டங்களில் ஒன்று. அவள் மறுமொழி சொல்லாமல் உப்பு கொண்டுவந்து வைத்தாள்.

மேலே தேவிகா வீணை வாசிக்கத் தொடங்கிவிட்டாள். ஏதோ ஒரு சுரம் அபஸ்வரமாக விழுந்து தொலைத்தது. தகப்பன் சத்தம் போடுவது அவள் கவனத்தைக் குழப்பியிருக்க வேண்டும்.

கார்த்திகா சாப்பிட வந்தாள். தகப்பனின் முகத்தில் தெரிந்த கோபம் அவளை மௌனமாக்கியது. தகப்பன் சாப்பாட்டு மேசையால் எழும்பும் வரை தேவிகா இறங்கிவரவில்லை.

அவர் மேலும் சத்தம் போட இறங்கி வந்தாள். தாயை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏன் அப்பா சத்தம் போட்டார்?”

அம்மாவின் மௌனம் மகளுக்குத் தெரிந்ததுதான்.

“ஏன் இப்படிச் சத்தம் போடுறார்?”

“உனக்கு ஒன்றும் விளங்காது” மஞ்சுளா கடுமையாகச் சொன்னாள்.

நடு இரவு:

வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. மஞ்சுளா எழும்பி உட்கார்ந்தாள். அடிவயிற்றைத் தடவினாள். மெல்லிய ஒரு புடைப்பு வயிற்றில் தெரிந்தது.

“என்ன எழும்பியிருக்கிறீர்?”அவர் அதட்டினார்

இவள் மறுமொழி சொல்லவில்லை.

“டொக்டரைப் போர்ப் பார்க்கச் சொன்னனான். போனீரா?” தில்லையம்பலம் உறுமினார்;.

“ஏன் டொக்டரிடம் போக வேணும்?”

“ஏன் என்ன கேட்கிறீர். அபோர்ஷன் செய்யத்தான்.”

“……….” மஞ்சுளா சூனியத்தை வெறித்துப் பார்ப்பதுபோல் அவரைப் பார்த்தாள்..

“என்ன பேசாமலிருக்கிறீர்?”அவர் குரலில் அனல்

“ஏன் அபோர்ஷன் செய்ய வேண்டும்?”அவள் மெல்லமாகக் கேட்டாள்

“………” இப்போது அவர் மௌனம்.

இவள் இப்படிக் கேட்பாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

“ஏன் என்றால் ……. எத்தனையோ விஷயம் குழம்பும்”

“ஒன்றும் குழம்பாது” அவள் குரலிற் தெளிவு-ஆழம்;.

“நான் யாத்திரை போக வேணும். தேவிகா பெரிய பிள்ளையாகப் போகிறாள். இந்த லட்சணத்தில் ஒரு பிள்ளையும் தேவையா?”

“பிள்ளை தேவையா இல்லையா என்று முடிவுகட்ட எனக்கும் ஒரு உரிமையில்லையா?”

மஞ்சுளாவின் அடிவயிற்றில் ஒரு மெல்லிய உதை. அம்மாவுக்கு உற்சாகம் கொடுக்கும் ஒரு இனிய உந்தலா?

“உரிமையா…..” தில்லையம்பலம் வாய் திறந்து போய் அமர்ந்திருந்தார். அவருக்கு என்ன சொல்வது என்ன பேசுவது என்று தெரியவில்லை.

தேவிகாவுக்கு குழந்தை என்றால் மிக விருப்பம். கார்த்திகாவும் சந்தோசத்தில் உற்சாகத்தில் துள்ளப்போகிறாள்.

தில்லையம்பலம் யாத்திரையில் என்னத்தைக் காணப்போகிறார்?

மஞ்சுளாவின் வாழ்க்கை யாத்திரையின் திருப்பத்தில் அவள் திருப்தி.

(யாவும் கற்பனையே)

(சுபமங்களா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை- 1995)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *